Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

சீனப் புரட்சி

8-1. சீனாவில், யுத்தத்துக்குப் பிந்திய உடனடி காலகட்டத்தில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்த அரசியல் சிக்கல்கள் மிக அப்பட்டமானவையாக இருந்தன. 1925-27 புரட்சி தோல்வியடைந்தவுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புற உட்பகுதிகளுக்குள் பின்வாங்கியதோடு மேலும் மேலும் விவசாயிகளை தனது அடித்தளமாகக் கொண்டது. மூன்றாம் அகிலம் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடனுமான தனது தொடர்புகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்தும் பேணி வந்த அதேவேளை, அது விவசாயிகள் பக்கம் திரும்பியமையானது கட்சியின் வர்க்க அச்சை தொழிலாள வர்க்கத்தில் இருந்து விலகச் செய்தது. இரண்டு கட்டத் தத்துவம் மற்றும் தேசிய முதலாளித்துவத்துடனான வர்க்க ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிசக் கருத்தியலானது, விவசாய ஜனரஞ்சகவாதம் மற்றும் கெரில்லா யுத்த தந்திரோபாயங்கள் மற்றும் மூலோபாயத்தாலும் ஊக்குவிக்கப்பட்டது. கட்சியினுள் எப்பொழுதும் வலதுபக்கத்துக்கே சென்றுகொண்டிருந்த மாவோ சேதுங், 1935ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைப் பெற்றதோடு கட்சியின் நோக்குநிலையை விவசாயிகள் பக்கம் நகர்த்தினார். 1927ன் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சீன இடது எதிர்ப்பு இயக்கத்தின் மீது ஸ்ராலினிஸ்டுகளின் உதவியுடன் கோமின்டாங்கால் பரந்தளவு ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது நகர்ப்புற மையங்களில் எஞ்சியிருந்ததோடு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் நோக்குநிலைப்படுத்தி இருந்தது.

8-2. 1932ல் சீன ஆதரவாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய தொலைபார்வை கொண்ட கடிதமொன்றில், மாவோ சேதுங்கின் விவசாய இராணுவத்திடமிருந்து தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி எச்சரித்தார். விவசாயிகளின் வர்க்க நிலைநோக்கின் அடிப்படை வேறுபாட்டை விளக்கிய ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: விவசாயிகள் இயக்கமானது பிரமாண்டமான நில உரிமையாளர்கள், இராணுவவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் அதிக வட்டிக்காரர்களுக்கு எதிரானதாக செலுத்தப்படுகின்ற வரை அது ஒரு வல்லமை மிக்க புரட்சிகரக் காரணியாக இருக்கின்றது. ஆனால், விவசாயிகள் இயக்கத்தினுள்ளேயே மிகவும் சக்திவாய்ந்த சொத்துரிமை மற்றும் பிற்போக்கு நிலைப்பாடுகள் இருப்பதோடு, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தொழிலாளர்களுக்கு விரோதமானதாக ஆகி அந்தப் பகைமையை தனது கைகளில் கிடைத்துள்ள ஆயுதங்கள் மூலம் அதை வெளிப்படுத்தக் கூடும். விவசாயிகளின் இரட்டைப் பண்பை மறப்பவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல. முன்னேறிய தொழிலாளர்களுக்கு ‘கம்யூனிச’ முத்திரைகள் மற்றும் பதாகைகளில் இருந்து உண்மையான சமூக நிகழ்வுப்போக்கை பிரித்தறிவதற்கு கற்பிக்கப்பட வேண்டும்.”[15]

8-3. ட்ரொட்ஸ்கி மேலும் விளக்கியதாவது: “உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்பது, பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் அமைப்பாகும். ஆனால், சீனத் தொழிலாள வர்க்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு ஒடுக்குமுறை மற்றும் ஒழுங்கற்ற நிலைமையில் வைக்கப்பட்டிருந்ததோடு அண்மையிலேயே அது தனது மறுமலர்ச்சிக்கான அறிகுறியை புலப்படுத்தியது என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நகர்ப்புற தொழிலாளர்களின் மலர்ச்சியில் உறுதியாகத் தங்கியிருக்கின்றபோது, அது தொழிலாளர்கள் ஊடாக விவசாயிகளின் யுத்தமொன்றுக்கு தலைமை வகிக்க முயற்சிப்பது ஒரு விடயம். உண்மையான கம்யூனிஸ்டுகளாக அல்லது பெயரை மட்டுமே கொண்டுள்ளவர்களாக இருக்கும், சில ஆயிரம் அல்லது பத்தாயிரக்கணக்கான புரட்சியாளர்கள், பாட்டாளிகளிடமிருந்து எந்தவொரு அக்கறைமிக்க ஆதரவையும் பெறாமல் விவசாயிகளின் யுத்தமொன்றில் தலைமையேற்பது என்பது முற்றிலும் மற்றொரு விடயமாகும். இதுதான் சீனாவின் உண்மையான நிலைமையாகும். இது தொழிலாளர்களுக்கும் மற்றும் ஆயுதபாணிகளான விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளின் ஆபத்துக்களை அதிதீவிர மட்டத்துக்கு கூர்மைப்படுத்த செயற்படுகின்றது. [16]

8-4. மாஸ்கோவின் கட்டளைகளைப் பின்பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1937ல் சீனா மீது படையெடுத்த ஜப்பானிய இராணுவங்களுக்கு எதிராக, சியாங் கேய் ஷேக்கின் ஆட்சியுடன் ஒரு மக்கள் முன்னணி கூட்டை அமைத்துக்கொண்டது. ஒரு ஒடுக்கப்பட்ட நாடான சீனா, ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் செய்யும் யுத்தம், ஒரு முற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என வலியுறுத்திய ட்ரொட்ஸ்கி, தனது நிலைப்பாட்டை “சமூக தேசபக்தி” மற்றும் “சியாங் கேய் சேக்கிடம் சரணடைதல்” என வகைப்படுத்திய உட்குழு போக்குகளை எதிர்த்தார். எவ்வாறெனினும், தொழிலாள வர்க்கம் யுத்தத்துக்கு ஆதரவளிப்பதில் அதனது அரசியல் சுயாதீனத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மாறாக, கோமின்டாங்குடனான ஒரு கூட்டணியை ஸ்தாபித்துக்கொண்டதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜனங்களின் நலன்களை முதலாளித்துவத்துக்கு அடிபணியச் செய்தது – அது தனது சொந்த நிலச் சீர்திருத்த வேலைத் திட்டத்தை கைவிட்டதோடு கோமின்டாங் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று தொழிலாளர்களின் நலன்களை வெளிப்படையாகக் கைவிட்டது. ஜப்பானிய தோல்விக்குப் பின்னர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களுடன் ஒத்துழைக்கும் ஸ்ராலினின் கொள்கையின் வழியில், கோமின்டாங் உடனான அதன் யுத்தகால கூட்டணியை தொடர்ந்தும் பேணுவதற்கு முயற்சித்தது.

8-5. சியாங் கேய் சேக், அமெரிக்காவின் உதவியுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான யுத்தத்துக்கு தயாரானதற்கு தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், பனிப் போர் எழுந்து கொண்டிருந்த 1947 அக்டோபர் வரை கோமின்டாங் ஆட்சியை தூக்கி வீசுவதற்கு மாவோ இறுதி அழைப்பு விடுக்கவில்லை. மஞ்சூரியாவில் கோமின்டாங் எதிர்த்தாக்குதலில் இராணுவ ரீதியில் நிர்மூலமாக்கப்படும் நிலைமையை எதிர்கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் மத்தியிலான பரந்தளவு கொந்தளிப்பை சுரண்டிக்கொள்ளும் நோக்கில் தனது நிலச்சீர்திருத்தக் கொள்கையை புதுப்பித்தது. சியாங் கேய் ஷேக்கின் தோல்வியில், மாவோவின் மூலோபாய மேதமை என்று சொல்லப்படுவதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க எந்தவொரு அரசியல் அடித்தளமும் இல்லாத, நிதிய நெருக்கடியால் முற்றுகைக்குள்ளாகியிருந்த, தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் பிரமாண்டமான புரட்சிகர எழுச்சிகளுக்கு முகங்கொடுத்திருந்த, முற்றிலும் ஊழலால் நிறைந்த மற்றும் ஒடுக்குமுறையான கோமின்டாங்கின் உள்ளார்ந்த பலவீனம் தான், அதிகமான பங்களிப்பு செய்தது. சோவியத் இராணுவம் வழங்கிய கைப்பற்றப்பட்ட ஜப்பான் ஆயுதங்களின் உதவியுடன் மஞ்சூரியாவில் கோமின்டாங் படைகளை தோற்கடித்த மாவோவின் இராணுவங்கள், தெற்கைக் கைப்பற்றும் போது பெரும் எதிர்த்தாக்குதல்களை சந்திக்கவே இல்லை. 1949 அக்டோபரில் சீன மக்கள் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது.

8-6. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் புதிய ஆட்சியை, தாய்வானுக்கு தப்பிச் செல்லாத முதலாளித்துவ தட்டுக்களும் உள்ளடங்கிய “நான்கு வர்க்கங்களின் கூட்டை” அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்ததுடன், ஆரம்பத்தில் அது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழிற்துறை தேசியமயமாக்கலின் அளவை மட்டுப்படுத்தியது. எவ்வாறெனினும் புரட்சிகர இயக்கத்தின் மற்றும் பலர் ரஷ்யப் புரட்சியின் பாரம்பரியத்துடன் தவறாக அடையாளம் கண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான வெகுஜன எதிர்பார்ப்புகளின் அத்தகைய நீடித்த தாக்கத்தினால் ஸ்ராலினிஸ்டுகளை அவர்கள் எண்ணியதை விட அதிகமாய் முன்செல்லத் தள்ளப்பட்டனர். கொரிய யுத்தத்தின் விளைவாக, ஏகாதிபத்தியத் தலையீட்டின் ஆபத்தை எதிர்கொண்ட ஆட்சி, யுத்தத்துக்காக மக்களை அணிதிரட்டிய நிலையில், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கத் தள்ளப்பட்டது. கிராமப்புறப் பிரதேசங்களில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திடம் இருந்து நிலங்களைப் பறிமுதல் செய்வது பூர்த்தி செய்யப்பட்டது. 1951-52ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் “மூவிரோத” மற்றும் “ஐவிரோத” (Three anti and five anti) பிரச்சாரத்தின் பாகமாக, கட்சி மற்றும் அரசு மீதான தொழிற்துறையாளர்களதும் வணிகர்களதும் “மோசடி அழுத்தங்களுக்கு” எதிராக அவர்களை இலக்கு வைத்தது. 1953ல் முதலாவது ஐந்தாண்டு திட்டம் வரையப்பட்டதோடு அதையடுத்து அநேகமாக எஞ்சியிருந்த தனியார் வர்த்தகங்களும் தேசியமயமாக்கப்பட்டன. ஆயினும், அரசாங்கம் எதிர்கொண்டிருந்த சிக்கலான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் எவற்றையும், “தனிநாட்டில் சோசலிசம்” என்ற பிற்போக்கு ஸ்ராலினிச தத்துவத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாமல் போனது. ஒரு நடைமுறைவாத தேசியவாதக் கொள்கையில் இருந்து இன்னொன்றுக்கு என மாறி மாறித் தத்தளித்ததன் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1950களின் கடைப் பகுதியில் ‘முன்நோக்கிய பெருந்தாவல்’ (Great Leap Forward) வேலைத்திட்டத்தால் ஏற்பட்ட அழிவுகரமான பஞ்சம் உட்பட ஒரு தொடர்ச்சியான அழிவுகளை உருவாக்கியது.

8-7. அதிகாரத்துவ சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, ஒவ்வொரு சமயத்திலும் வெகுஜன புரட்சிகர இயக்கத்துக்கு, குறிப்பாக தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தடையாகவே செயற்பட்டு வந்தது. 1949ல் மாவோவின் துருப்புக்கள் மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்குள் நுழைந்த நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் எந்தவொரு நடவடிக்கைக்கும் கடும் கட்டுப்பாடுகளைத் திணித்தது. தொழிலாளர்கள், துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை அல்லது கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் வேலை நிறுத்தங்கள் பலாத்காரமாக நசுக்கப்பட்டன. தொழிலாளர்களை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இயல்பான விரோதம், அதன் உச்சகட்ட வெளிப்பாட்டை சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீதான ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் கண்டது, அது 1949ல் தொடங்கி 1952 வரையிலான பாரிய கைதுகள் வரை தொடர்ந்தது.

8-8 அனைத்துலக அரங்கில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் ஒன்றியத்துடனான தனது கூட்டைத் தொடர்ந்ததோடு 1950களில் பொருளாதாரத்தை விரிவாக்குவதற்காக, குறிப்பாக கனரக தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்காக, சோவியத் நிபுணர்களிலும் உதவியிலும் பெருமளவில் தங்கியிருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறையின் பொருளாதார மேலாண்மை, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவ திட்டமிடலுடன் நெருக்கமாக ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1962ல் சீன-சோவியத் பிளவு, இரு ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் தேசிய நலன்கள் போட்டியிடுவதை பிரதிபலித்தது. 1962ல் சீன-இந்திய எல்லை யுத்தத்தில் சோவியத் ஒன்றியம் இந்தியாவை ஆதரித்தது. குருஷ்சேவ், 1956ல் தனது இரகசிய உரையில் ஸ்ராலினின் குற்றங்களை அம்பலப்படுத்தியதை விமர்சித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிசத்தின் அடிப்படைக் கருத்துக்களில் இருந்து வேறுபடாததோடு அதன் காட்டிக்கொடுப்புக்கள் அனைத்தையும் தொடர்ந்தும் நியாயப்படுத்தியது. இரண்டு-கட்ட தத்துவத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்ததும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் முதலாளித்துவத்துடன் அது கூட்டணி வைத்திருந்ததும், 1965-66ன் இரத்தகளரி மிக்க இந்தோனேஷிய சதிக் கவிழ்ப்பு உட்பட, ஆசியாவில் வெகுஜனங்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியது.


[15]

[Leon Trotsky on China (சீனாவைப் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி), மொனாட், பக்கம் 528]

[16]

[Leon Trotsky on China, மொனாட், பக்கம் 525]