Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

அமெரிக்காவும் முதலாளித்துவம் மீண்டும் ஸ்திரமாதலும்

98. அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தை ஒருங்கிணைப்பதற்கும், சிதைந்திருந்த உலகப் பொருளாதார அமைப்பு முறையை அது ஸ்திரப்படுத்த தொடங்குவதற்கும் ஸ்ராலினிச காட்டிகொடுப்புகள் அமெரிக்காவிற்கு தேவையான மூச்சுவிடும் அவகாசத்தை அதற்கு தோற்றுவித்தன. பின்வரும் இரண்டு விடயங்களின் அடிப்படையில், யுத்தத்திற்கு பிந்தைய பாரிய நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு காலம் உருவாக்கப்பட்டது. (1) யுத்தத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பொருளாதாரங்கள் பிரமாண்டமான முறையில் அழிந்துபட்டது, மற்றும் (2) உற்பத்தி செயல்முறைகளில் முன்னேற்றங்களின் அடிப்படையில் அமெரிக்க தொழில்துறையின் பொருளாதார வலிமை. நிலையான சர்வதேச செலாவணி விகிதங்கள் மற்றும் டாலர்-தங்கம் மாற்றுதல்களுடன் கூடிய, அமெரிக்க டாலர் சர்வதேச இருப்பு நாணயமாக பங்கு வகிக்கும் ஒரு நிதிய மற்றும் நாணய ஆட்சிமுறை (பிரெட்டன் வூட்ஸ் முறை) மூலம் அமெரிக்க முதலாளித்துவம் "உலகத்தை மாற்றியமைக்க" விரும்பியது; பிற முதலாளித்துவ சக்திகளின் ஆதரவுடன், சர்வதேச பொருளாதார விவகாரங்களை நெறிப்படுத்த அமெரிக்கா சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவற்றை அது தோற்றுவித்தது. 1947ல் தொடக்கப்பட்ட மார்ஷல் திட்டத்துடன், அமெரிக்க முதலாளித்துவம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பொருளாதார மீட்பை ஊக்குவிக்க முற்பட்டது; இது அமெரிக்க பொருளாதார விரிவாக்கத்திற்கு தேவையான அஸ்திவாரமாக இருந்தது. முதலாளித்துவ அமைப்பு முறையின் மீதிருந்த அமெரிக்க மேலாதிக்கத்தின் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் யுத்தத்தை தொடர்ந்து விரைவாக விரிவடைந்தது.

99. இந்த சர்வதேச பொருளாதார மறுஸ்திரப்பாடு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தேசிய சீர்திருத்த கொள்கைகளுக்கு பொருளாயாத அஸ்திவாரமாக ஆயிற்று. அமெரிக்காவில் அமெரிக்க முதலாளித்துவம் ஒரு கீன்சிய தேவை ஊக்குவிப்பு கொள்கையை பின்பற்றியது. அது தொழில்துறை உழைக்கும் வர்க்கத்திற்கு முக்கிய பொருளாதார சலுகைகளை அளித்தும், சமூக புரட்சியை தவிர்க்க வடிவமைக்கப்பட்ட புதிய காலத்திற்கான உடன்படிக்கையின் சீர்திருத்த கொள்கைகளை தொடர்ந்தும் போருக்குப் பிந்தைய வேலைநிறுத்த அலைகளை எதிர்கொண்டது. அதே நேரத்தில் வலதுசாரி AFL மற்றும் CIO தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் உதவியுடன், அது தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவற்றின் அமெரிக்க நிறுவனங்களை இரக்கமற்ற முறையில் அழிந்தொழித்தது. ஐரோப்பாவில், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர்ந்த ஒத்துழைப்புடன், இதேபோன்ற தேசிய அடிப்படையிலான சமூக சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர்-நிர்வாக ஒத்துழைப்பு செயல்படுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் அடிக்கடி சமநிலையை பேணிக்கொண்டதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளின், தேசிய முதலாளித்துவ ஆட்சிகள் ஓரளவு சுதந்திரத்தைப் பெற முடிந்தது; இறக்குமதி பதிலீட்டு தொழில்மயம் என்றறியப்பட்ட கொள்கையின்படி, பல முன்னாள் காலனித்துவ நாடுகள் உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சிக்கான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட கொள்கை மற்றும் விவசாய சீர்திருத்தங்களை பின்பற்ற முடிந்தது. சோவியத் ஒன்றியத்தில், தேசிய பொருளாதார வேலைத்திட்டங்களின் அடிப்படையில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் தொழிற்துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டது; இருந்தபோதினும், அதிகாரத்துவத்தினால் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது.

100. சர்வதேச உறவுகளை நெறிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளை உருவாக்கி, சர்வதேச உறவுகளில் முக்கிய முதலாளித்துவ நாடுகளிடையே நேரடியாக புதிய பூசல் எதுவும் வெடிக்காமல் தடுக்க அமெரிக்கா விரும்பியது. யுத்தத்தின் முடிவு அதனுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான "பனிப்போர்" மோதலின் தொடக்கத்தை கொண்டு வந்தது. அமெரிக்க முதலாளித்துவம் அதனுடைய அணுசக்தி ஏகபோக உரிமையை வரவேற்று பெருமிதம் அடைந்திருந்த பூரிப்பு சோவியத் ஒன்றியம் அணுகுண்டு தயாரித்தவுடன் உடனடியாக சிதைந்து போயிற்று. சோவியத் ஒன்றியத்தை "கட்டுப்படுத்த வேண்டும்" என்று வாதிட்ட பிரிவிற்கும், இராணுவ முறையில் அது "சுருட்டி அனுப்பப்பட" வேண்டும் என்று வாதிட்ட பிரிவிற்கும் இடையே அரசியல் மேற்தட்டில் கசப்பான போராட்டம் ஏற்பட்டது. பிந்தைய பிரிவின் தர்க்கம் ஒரு முழு அணுவாயுதப் போருக்கு இட்டு செல்லும் வகையில் அச்சுறுத்தியது. 1950இல் கொரிய போரின்போது, கொரிய தீபகற்பத்திற்கு சீனா அதன் துருப்புகளை முன்னெடுத்து செல்வதை தடுக்க அதன்மீது அணுகுண்டு வீச தம்மை அனுமதிக்கப்பட வேண்டும் என்று தளபதி டொக்லஸ் மெக் ஆர்தர் கோரியபோது, முதலாளித்துவ பிரிவிற்குள் பூசல் முற்றியது. ட்ரூமன், மெக் ஆர்தரை பதவியில் இருந்து விலக்கினார். "கட்டுப்படுத்த வேண்டும்" என்ற பிரிவின் கருத்து வெற்றி பெற்றது. தன்னுடைய பங்கிற்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற மூலோபாய இலக்கை, "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாட்டின் தர்க்கரீதியான தொடர்ச்சியாக இருந்த "சமாதான சகஜீவியம்" என்ற கொள்கையில் வெளியிட்டது; அணு ஆயுத போட்டியிலும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் செல்வாக்கை பெறுவதற்கான போட்டியிலும் ''இருபெரும் சக்திகள்'' ஈடுபட்டிருந்த இந்த பதற்றமான தற்காலிக போர்நிறுத்தம், உடைந்து ஒரு முழு அளவிலான மோதலாக வெடிப்பதற்கான அச்சுறுத்தல் அடிக்கடி வெளிப்பட்டது.