Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சீனப் புரட்சி

104. சீனாவில் தேசிய இயக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடித் தலைமையின் கீழ் விவசாயிகள் எழுச்சி என்ற வடிவத்தைப் பெற்றது. 1927ல் அடைந்த அதன் பேரழிவுகரமான தோல்விக்கு பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புறங்களுக்கு பின்வாங்கி, விவசாய பகுதிகளின் ஆதரவுடன் "செம்படைகளை" கட்டமைத்தது. எவ்வாறிருப்பினும், நடைமுறை மற்றும் செயல்முறைவாத அடிப்படையில் மறுநோக்குநிலைப்படுத்தலை நியாயப்படுத்த, கம்யூனிஸ்ட் கட்சி அதன் நகர்ப்புற மற்றும் தொழிலாள வர்க்க அடித்தளங்களைக் கைவிட்டது, அதன் அரசியல் மற்றும் சமூகத்தன்மையில் ஆழ்ந்த மாறுதலுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து ஒரு மார்க்சிச சொல்லாட்சியை பயன்படுத்தினாலும், சீன ஸ்ராலினிஸ்ட்டுக்களின் முக்கிய தளமாக விவசாயிகள்தான் இருந்தனர் என்ற உண்மையை அது மாற்றிவிடவில்லை. முக்கியமாக, 1927 தோல்விக்கு முன்னர் CCP இன் வலது சாரி பிரிவின் அரசியலில் இருந்த மாவோ சேதுங், கட்சியின் மூலோபாய நோக்குநிலையை மற்றும் சமூகத்தளத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

105. 1927ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும், கம்யூனிச அகிலத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்ட பின்னர், சீனாவில் ஏற்பட்ட மாற்றங்களை ட்ரொட்ஸ்கி உன்னிப்பாக கவனித்து வந்தார். சீனாவில் இடது எதிர்ப்பு ஆதரவாளர்களுக்கு, 1932 இல் எழுதிய கடிதம் ஒன்றில் அவர், CCP இன் அரசியல் மற்றும் சமூக பரிணாமத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்தார். அதன் இறுதி ஆய்வில், ஒரு விவசாய இயக்கத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தால், அதன் கொள்கைகள், இந்த சமூக அடித்தளத்தின் நலன்களையும் மற்றும் எதிர்கால நோக்கத்தையும் பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டார். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வருவதற்கான சாத்தியக்கூற்றை ட்ரொட்ஸ்கி கணித்தார். "விவசாயிகள் இயக்கம் இதுவரை நிலக்கிழார்கள், இராணுவவாதிகள், பண்ணையார்கள் மற்றும் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு எதிராக இயக்கப்பட்டதால், அதுவொரு மகத்தான புரட்சிகர காரணியாக உள்ளது. ஆனால் விவசாயிகள் இயக்கத்திலேயே மிக சக்திவாய்ந்த சொத்துரிமை மற்றும் பிற்போக்குத்தன போக்குகள் உள்ளன; இவை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், ஏற்கனவே உள்ள ஆயுதமேந்திய போக்கை தொடர்ந்து நிலைநிறுத்தக்கூடும். விவசாயிகளின் இந்த இரட்டை வேடத்தை எவர் மறக்கிறாரோ அவர் ஒரு மார்க்சிசவாதி ஆகமாட்டார். 'கம்யூனிஸ்ட்' அடையாளங்கள் மற்றும் பதாகைகளை உண்மையான சமூக செயல்முறை நிகழ்வு போக்குகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கு முன்னேறிய தொழிலாளர்கள் கற்பிக்கப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டார்.[63]

106. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு வீழ்ந்ததுடன், CCP ஒரு தாக்குதலை தொடங்கியது; அது இறுதியில், 1949 அக்டோபரில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வழிவகுத்தது. இந்த வெற்றி ஜப்பானிய பேரரசின் இராணுவ சரிவினால் தோற்றுவிக்கப்பட்ட அசாதாரண சாதக சூழ்நிலையினால் விளைந்தது என்பதல்லாமல், மாவோவின் வெற்றி ஒன்றும் அவருடைய "மேதைத்தனம்" நிறைந்த மூலோபாயத்தினால் (அப்படி ஒன்று இருந்ததாக 1949க்கு முன்போ, பின்போ தெரியவில்லை) அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும், ஜப்பானிய பொரிவிற்குப் பின்னரும் கூட, சியாங் கேய்-ஷேக் மற்றும் கோமின்டாங்குடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஏதேனும் அரசியல் உடன்பாட்டை காண வேண்டும் என்று CCP பலமுறை விரும்பியது. மாவோவின் உறுதியான நிலைப்பாடு என்பதைவிட சியாங்கின் வளைந்து கொடுக்காததன்மை அரசியல் சமரசத்திற்கு இடமின்றித் தடுத்துவிட்டது. பெரும் தயக்கத்திற்கு பின்னர், CCP சியாங்கை அகற்றுவது ஒரு அரசியல் தேவை என்ற முடிவிற்கு வந்தது.

107. நிலக்கிழார் வர்க்கத்தின் உடைமைகளை பறிப்பது உட்பட, மாவோவின் ஆட்சி முதலாளித்துவ தேசிய நடவடிக்கைகளை செயல்படுத்தியது; ஆனால் இது தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் விரோதமாகவே இருந்தது. 1927 தோல்விக்கு பின்னர், நகர்ப்புற தொழிலாள வர்க்க பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த சீன ட்ரொட்ஸ்கிசவாதிகளை அது மிருகத்தனமாக அடக்கியது. மிகுந்த தடுமாற்றத்திற்கு பின்னர், அந்த ஆட்சி சீனத் தொழில்துறையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தொழில்துறை தேசியமயமாக்கல் மற்றும் சோசலிச வாய்பிதற்றல்களுடன், எதிர்ப்பை, குறிப்பாக இடதுகளிடமிருந்து வரும் எதிர்ப்பை இரக்கமின்றி அடக்கும் உள் ஆட்சியையும் ஒருங்கிணைத்து ஸ்ராலினிச வழியில், CCP ஓர் அதிகாரத்துவ போலீஸ் அரசை நிறுவியது.

"மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல்" என்றழைக்கப்பட்ட கொள்கை உட்பட CCP இன் தேசிய கொள்கைகள், கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களின் உயிர்களை பலி கொண்ட பஞ்சம் உட்பட பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தின. சர்வதேச அரங்கில், இந்தோனேஷியா (1965-66 இல் இங்கு ஒரு மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்தோனேஷிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்) மற்றும் வியட்நாம் (இங்கு 1954ல் ஸ்ராலினிசவாதிகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் பிரிவினைக்காக பேரம் பேசி, அமெரிக்கா குறுக்கிடுவதற்கு அரங்கமைத்தனர்) உட்பட ஆசியா முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்திய, பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவத்துடன் கூட்டணி என்ற ஸ்ராலினிச கோட்பாட்டை மாவோயிசம் பின்பற்றியது.


[63]

Leon Trotsky on China, p. 586