Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

கொரிய யுத்தம்

109. சீனப் புரட்சியை அடுத்து, யுத்தத்திற்கு பிந்தைய காலனித்துவ எதிர்ப்பு கொந்தளிப்புக்கள் அவற்றின் மிக சீற்றத்துடன் கூடிய வெடிப்புணர்வை, 1950 இல், தென்கொரியாவின் அமெரிக்க ஆதரவுபெற்ற சர்வாதிகாரி சிங்மேன் ரீ இன் இராணுவத்தை ஸ்ராலினிச தலைமையின் கீழ் வடகொரிய துருப்புகள் விரைவாக வெற்றி கொண்ட கொரிய யுத்தத்தில் வெளிப்படுத்தின. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் போர்வையின் கீழ், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளை அமெரிக்க இராணுவத்தின் மூலம் கைப்பற்றினார். அமெரிக்கப் படைகள் சீன எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, சீன துருப்புக்கள் யுத்தத்தில் ஈடுபட்டு அமெரிக்கர்களை திருப்பி அனுப்பியது; இறுதியில் யுத்தத்திற்கு முந்தைய பிரிவினையை ஒட்டிய நிலைப்பாட்டில் போர் நிலைப்படுத்தப்பட்டது. கனன் தலைமையிலான அமெரிக்க SWP, கொரிய மக்கள் மாஸ்கோவின் கைப்பாவைகள் தான் என்ற வாதத்தை நிராகரித்து, காலனித்துவ புரட்சியை ஒட்டி போராட்டத்தை நிலைநாட்டியது. அமெரிக்க அரசாங்கத்திற்கு எழுதிய பகிரங்க கடிதம் ஒன்றில், கனன் பின்வருமாறு அறிவித்தார்: "கொரியாவில் அமெரிக்கக் குறுக்கீடு ஒரு மிருகத்தனமான ஏகாதிபத்திய படையெடுப்பாகும்; இந்தோ-சீனா மீது பிரான்ஸ் தொடுத்த யுத்தத்திற்கும் அல்லது இந்தோனேஷியா மீது போர்ச்சுகல்லின் தாக்குதலும் இதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கொரிய மக்களை சுதந்திரமடைய செய்வதற்காக அல்லாமல், அவர்களை வெற்றி கொண்டு அடிமைபடுத்துவதற்காக, அமெரிக்க இளைஞர்கள் 10,000 மைல்களுக்கு அப்பால் கொலை செய்ய அல்லது கொலை செய்யப்படுவதற்கு அனுப்பப்படுகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. இது அரக்கத்தனமானது. கொரியப் போராட்டம் ஆசியா முழுவதிலுமுள்ள நூறாயிரக்கணக்கான மில்லியன் காலனி நாட்டு மக்கள் மேலை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தும் மகத்தான எழுச்சியின் ஒரு பகுதி ஆகும். இதுதான் சரியான உண்மை, உண்மையான பிரச்சினை. காலனித்துவ நாட்டு அடிமைகள் இனியும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை."[65]

110. சோவியத் ஒன்றியம் ஒன்றில் "அதிகாரத்துவ கூட்டுமுறை" அல்லது "அரச முதலாளித்துவ" என்ற வர்க்க சமுதாயத்தின் ஒரு புதிய வடிவமாக ஆகியிருந்தது என்ற தத்துவங்களின் பிற்போக்குத்தன உட்குறிப்புக்களை கொரிய மோதல் தெளிவாக நிரூபித்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான்காம் அகிலத்திலிருந்து உடைத்துக் கொண்டு, "அதிகாரத்துவ கூட்டுமுறை" என்ற கோட்பாட்டை இயற்றிய தத்துவவியலாளர் மக்ஸ் சட்மன், தாம் சுயாதீனமான "மூன்றாம் முகாம்" நிலையை கொள்ள இருப்பாக உறுதி கூறியிருந்தார். ஆனால் 1950இல் அமெரிக்க ஏகாதிபத்திய முகாமிற்கு அவர் வெளிப்படையாக சென்றார். தொழிலாளர் கட்சி என்று அப்பொழுது அழைக்கப்பட்ட சட்மனின் அமைப்பால் தயாரிக்கப்பட்ட துண்டறிக்கைகள், அமெரிக்க படையெடுப்பாளர்களிடம் சரணடைவதற்கு "சோசலிச" வாதங்களை முன்வைத்து, சீனா மற்றும் வடகொரிய வீரர்களுக்கு விமானத்தில் இருந்து வீசப்பட்டன. "அரச முதலாளித்துவம்" எனும் கருத்திற்கு முக்கிய ஆதரவாளராக விளங்கிய ரொனி கிளிஃப், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும், பின்னர் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு கனனின் சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பை கடைப்பிடித்திருந்த நான்காம் அகிலத்தின் பிரிட்டிஷ் பகுதியில் இருந்தும் விலகிக் கொண்டார். கிளிஃப் நடுநிலையை கடைபிடிப்பதற்கு பதிலாக, அமெரிக்காவிற்கு இணையான "ரஷ்ய ஏகாதிபத்தியம்" என்று அவர் குறிப்பட்டதை கண்டனம் செய்து வந்தார். இவருடைய அமெரிக்க ஆதரவாளர்கள் வியட்நாம் யுத்தத்தின் போது, வியட்நாம் தேசிய விடுதலை முன்னணியின் வெற்றியையும், அமெரிக்க படைகளின் தோல்வியையும் எதிர்த்து இதேபோன்றதொரு நிலையை கடைபிடித்தார்கள்.


[65]

James P. Cannon, Notebook of an Agitator (New York: Pioneer Publishers, 1958), p. 186.