பொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சில், கொலோம்ப் (Colombes) நகராட்சி மன்றத்தின் பசுமைக் கட்சி மேயர் பாட்ரிக் சைமோவிட்ச் (Patrick Chaimovitch), விச்சி ஒத்துழைப்பு ஆட்சிக்கும் பிரெஞ்சு பொலிஸூக்கும் இடைப்பட்ட வரலாற்று தொடர்புகள் பற்றி விமர்சித்ததற்காக அவர் மீது பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் (Gerald Darmanin) வழக்கு தொடுத்துள்ளார். தீவிர வலதுசாரி பொலிஸ் தொழிற்சங்கங்களின் உதவியுடன் எடுக்கப்பட்ட இந்த அவதூறு முடிவு, வரலாற்று உண்மை மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை ஜனநாயகக் கொள்கைகளை மிதிக்கிறது. இது பொலிஸ் மற்றும் பிரான்சில் பாசிசம் பற்றி வரலாற்று ரீதியாக அறியப்பட்ட எந்தவொரு விமர்சனத்தையும் அநேகமாக சட்டவிரோதமாக்குகிறது.

ஜூலை 19, 1942 இல் பாரிஸ் Vel d’Hiv இல் தொடங்கப்பட்ட 13,000 யூதர்கள் விச்சி பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற வருடாந்திர நிகழ்ச்சியில், ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி மற்றும் புலம்பெயர்வு எதிர்ப்பு அரசியலை சைமோவிட்ச் கண்டித்தார். மேலும் அவர் இவ்வாறு கூறினார்: “தமது மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு, Vel d’Hiv, மற்றும் பிற இடங்களிலும் யூதர்களை சுற்றிவளைத்தவர்களான பிரெஞ்சு பொலிசாரும் மற்றும் ஆயுதப் பிரிவு பொலிஸ் (gendarmes) படையினரும், இன்று அதே ஆர்வத்துடன், புலம்பெயர்ந்தோர், ஆவணமற்ற தொழிலாளர்கள், மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், விரும்பியபடி உயிர்வாழ முயற்சிப்பவர்கள் ஆகியோரை வேட்டையாடுபவர்களின் மூதாதையர்களாவர்.”

ஜேர்மனி மற்றும் போலந்தில் உள்ள மரண முகாம்களுக்கு பிரான்சிலிருந்து 75,000 க்கும் மேற்பட்ட யூதர்கள் பெருமளவில் நாடுகடத்தப்படுவதை தொடங்கிவைத்த இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பற்றி பேசுகையில், சைமோவிட்ச் அதன் சமகால முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்: “78 ஆண்டுகளுக்கு முன்பு Vel d’Hiv சுற்றிவளைப்புக்கு அனுமதித்ததான அந்த உந்து சக்திகள், பிரான்சிலும் அதற்கு அப்பாலும் உள்ள நமது சமகால சமூகங்களில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.”

இந்த பாரிஸ் பகுதி நகராட்சியின் மேயரும், ஆவணமற்ற அகதிகளுக்கு உதவி செய்வதை குற்றப்படுத்தும் பிரான்சின் 2005 சட்டத்தை விமர்சித்தார்: “தேசிய அரசின் வேண்டுகோளின் பேரில், கொலோம்ப், எதிர்வரும் நாட்களில் அவர்களில் 60 பேரை ஏற்றுக்கொள்ளும். அதாவது, நகரிலிருந்து எங்களுக்கு வரும் சமிக்ஞைகளுக்கு உடன்பட்டு எங்களது நகராட்சி அவர்களுக்கு தேவையான அனைத்து சாத்தியமுள்ள உதவிகளையும் மேற்கொள்ளும். என்றாலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தாமல், பாராளுமன்றம் சமீபத்தில் ஒற்றுமை என்ற வார்த்தையை ஒரு குற்றமாக மாற்றியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”

தீவிர வலதுசாரி பொலிஸ் தொழிற்சங்கங்களும் மக்ரோன் அரசாங்கமும், விச்சி பொலிஸூடன் தற்போதைய ஆட்சியின் பொலிஸ் படைகளை சாதாரணமாக ஒப்பீடு செய்தார் என்று கூறி சைமோவிட்ச்சை கடுமையாக தாக்கின. ஞாயிறன்று, உள்துறை அமைச்சர் டார்மனின் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டார்: “பொலிஸ் மற்றும் குடியரசின் ஆயுதப் பிரிவு (gendarmes) பொலிஸ் பற்றி இத்தகைய அவதூறான மற்றும் சகிக்க முடியாத கருத்துக்கள் உருவாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், பாதுகாப்பு படையினரை விச்சி பொலிசாருடன் ஒப்பீடு செய்ததற்காக கொலோம்ப் மேயர் மீது நான் வழக்குத் தொடுப்பேன்.”

மரின் லூ பென்னின் நவ-பாசிச கட்சிக்கு நெருக்கமான அலியான்ஸ் பொலிஸ் தொழிற்சங்கம் (Alliance-Police union), “மேயர் சைமோவிட்ச், இத்தகைய கொடூரமான கருத்துக்களை வெளிப்படுத்திய உங்களைப் பார்த்து நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று சைமோவிட்சை கண்டித்தது. தொழிற்சங்கம் மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அதிகாரியின் அவதூறான மற்றும் கண்ணியமற்ற கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு பரிசீலித்து வரும் உள்துறை அமைச்சரின் நிலைப்பாட்டைக் கண்டு தான் திருப்தி அடைவதாக தெரிவித்தது”.

சினேர்ஜி-அதிகாரிகளின் (Synergy-Officers) தொழிற்சங்கம், “இந்த நகரசபை தலைவரின் கருத்துக்களை கேட்டு நாங்கள் மிகுந்த வெறுப்படைகிறோம். அவர்களின் சீரழிவை நியாயப்படுத்த, இந்த மக்கள் அனைவரையும் குழப்பி, ஒப்பிட முடியாததை ஒப்பிடுகிறார்கள். வெட்கக்கேடானது, Vel d’Hiv இன் நினைவை இது அவமதிக்கிறது” என்று ட்விட்டரில் தெரிவித்தது.

இறுதியாக, திங்களன்று இரவு, டார்மனின் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டார்: “தேசிய காவல்துறையையும் மற்றும் தேசிய ஆயுதப் பிரிவு காவல்துறையையும் பகிரங்கமாக அவமதித்ததற்காக கொலோம்ப் மேயருக்கு எதிராக நான் இன்று நாந்தேரில் (Nanterre) உள்ள அரசு வழக்கறிஞரிடம் வழக்கு பதிவு செய்துள்ளேன்.”

சைமோவிட்ச்சுக்கு எதிரான இந்த பிற்போக்குத்தனமான பிரச்சாரம் ஆத்திரமூட்டல்களையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டது. அதாவது, தற்காலத்திய பொலிஸ் படைகள் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்சை ஆட்சி செய்த நாஜி-ஒத்துழைப்பு ஆட்சியின் பொலிஸ் படைகளை முற்றிலும் ஒத்திருப்பதாக மேயர் கூறவில்லை. மாறாக, இன்று சர்வாதிகாரத்தின் வளர்ந்து வரும் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, விச்சி ஆட்சியின் துணை இராணுவப் பிரிவுகளுக்கும் போருக்குப் பிந்தைய பல சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் இடையிலான நிரூபிக்கப்பட்ட வரலாற்று தொடர்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார்.

உறுதிசெய்யப்பட்ட வரலாற்று உண்மைகள், சைமோவிட்சின் கூற்றுக்களை சரியென நிரூபிக்கின்றன. பொது புலனாய்வு (Renseignements généraux - RG) முகமையுடன் இணைக்கப்பட்ட விச்சி காவல்துறையின் சிறப்பு படைப்பிரிவுகள் பெரும்பாலும் கம்யூனிச எதிர்ப்பையும் யூதர்களையும் அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. போருக்குப் பின்னர், இந்த படைப்பிரிவின் பெரும்பாலான உறுப்பினர்கள் காவல்துறை அல்லது RG உள்நாட்டு புலனாய்வு அமைப்பில் மீண்டும் இணைந்தனர். எவ்வாறாயினும், யூத-விரோத மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சித்திரவதையாளரான பெர்னாண்ட் டாவிட் (Fernand David) உட்பட அவர்களது பத்து தலைவர்கள் விடுதலையின் (Liberation) போது அரச துரோகத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விச்சி ஆட்சியின் Mobile Reserve Groups (Groupes mobiles de réserve - GMR) க்கும், பிரான்சில் ஆயுதக் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு நாஜி SS பிரிவுகளுக்கு உதவி செய்த 20,000 பேர் கொண்ட துணை இராணுவப் பிரிவுகளுக்கும், போருக்குப் பின்னர், குடியரசின் பாதுகாப்பு நிறுவனங்கள் (Compagnies républicaines de sécurité - CRS) என்று மறுமுத்திரை குத்தப்பட்டது. அதன் பின்னர், CRS க்கு தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கும் பணி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது விச்சிவாத (Vichyite) பூர்வாங்கம், 1947-1948 பிரெஞ்சு சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை கொடூரமாக அடக்கிய போது “CRS-SS” என்ற பிரபலமான கோஷத்தை தூண்டியது, அது இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

1940 இல் நாஜி படையெடுப்புக்குப் பின்னர், Vél d'Hiv சுற்றிவளைப்பு உட்பட பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அமைத்த ஒத்துழைப்புவாத ஆட்சியின் வரலாறு, நன்கறியப்பட்டதாகும். உண்மையில், ஜூலை 16-17, 1942 இல், பிரெஞ்சு அதிகாரிகளும் பொலிஸூம் மற்றும் ஜாக் டோரியோ (Jacques Doriot) இன் பிரெஞ்சு மக்கள் கட்சியின் (Parti populaire français – PPF) அங்கத்தவர்களும் தான், 13,000 யூத ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கைது செய்து, குளிர்காலத்தில் சைக்கிள் ஓட்டும் மைதானமான Vélodrome d'Hiver (Vél d'Hiv) இல் அல்லது பிரான்ஸ் எங்கிலும் இருந்த முகாம்களின் வலையமைப்பில் அடைத்து வைத்தனர். இறுதியில் அவர்கள் போலாந்தின் படுகொலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அந்த நாடுகடத்தலின் போது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட 75,000 க்கும் அதிகமான யூதர்களில், வெறும் 3,000 பேர் மட்டுமே உயிருடன் திரும்பினர்.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (New Anti-capitalist Party - NPA) 1968 ஆம் ஆண்டைச் சேர்ந்த முன்னாள் மாணவர் தலைவரான அலன் கிறிவின் (Alain Krivine) போன்ற பணக்கார மற்றும் மனநிறைவான குட்டி முதலாளித்துவவாதிகள் காவல்துறையை முன்னாள் பாசிசவாதிகளுக்கும் “உண்மையான ஜனநாயகவாதிகளுக்கும்” இடையில் பிரிப்பதில் மும்முரமாக உள்ளனர். 2009 இல் NPA க்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பின்னர், கிறிவின், மொறிஸ் பப்போனை (Maurice Papon) விமர்சித்த அதேவேளை, மே 1968 பொது வேலைநிறுத்தத்தின் போது பாரிசில் ஒரு “நல்ல இளைஞன்” (good guy) மற்றும் “இடதுசாரி ஜனநாயகவாதி” என்று பெயர் பெற்ற, பொலிஸ் அடக்குமுறைக்கு தலைமை தாங்கிய மொறிஸ் கிரிமோவை (Maurice Grimaud) பாராட்டினார். இந்த மிகவும் பயமுறுத்தப்படும் பிரிவில் உள்ள, ஊர்க்காவல் படையினர், வங்கியாளர்கள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் காவல்துறையினருக்கு சலாம் போடுகின்றன, மேலும் விச்சி பற்றிய வரலாறு தீவிரமாக நினைவுபடுத்தப்படும்போதெல்லாம் தமது சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

உண்மையில், 20 ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்த அதே நிலைமைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன என்று சைமோவிட்ச் எச்சரிப்பது சரியானதே. கோவிட்-19 நோய்தொற்று மற்றும் 1930 களில் இருந்து நிலவும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், மற்றும் சீனாவுக்கு எதிராக அதிகரித்து வரும் அமெரிக்க போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமான நிதியப் பிரபுத்துவம் தீவிர வலதுசாரி அரசியலை நியாயப்படுத்துவதோடு பொலிஸ் அரசு ஆட்சிகளை கட்டமைத்து வருகிறது.

விச்சி ஆட்சிக்கு மேற்பூச்சு பூசியது சைமோவிட்ச் அல்ல, மாறாக, 2018 இலையுதிர்காலத்தில் “மஞ்சள் சீருடையாளர்களுக்கு” எதிராக CRS ஐ ஏவிவிடுவதற்கு சற்று முன்னதாக, மக்ரோன், பெத்தானை ஒரு “சிறந்த சிப்பாய்” எனக் கூறி, தீவிர வலதுசாரிகளிடம் முறையிட்டார். மீதமுள்ளவை உத்தியோகபூர்வ பதிவில் உள்ள விடையங்களாகும். விச்சிக்குப் பின்னர் பிரான்சின் பிரதான பகுதியில் உருவெடுத்த மிகப்பெரிய பொலிஸ் அடக்குமுறை அலை, 10,000 க்கும் மேற்பட்ட கைதுகளுக்கும், 4,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைவதற்கும், டசின் கணக்கானவர்கள் கண்களை இழப்பதற்கும், மற்றும் கண்ணீர்புகை குப்பியால் தாக்கப்பட்டதால் ஒரு வயதான பெண்மணி இறப்பதற்கும் வழிவகுத்தது. அதன் பின்னர், ஸினெப் ரெடுவானை (Zineb Redouane) கண்ணீர்புகை குப்பி கொண்டு தாக்க பொலிஸ் படைப்பிரிவுக்கு கட்டளையிட்ட CRS அதிகாரி புரூனோ ஃபெலிக்ஸூக்கு (Bruno Felix) மக்ரோன் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

சைமோவிச் செய்த நினைவூட்டல் பிரெஞ்சு நிலைமைக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச சூழ்நிலைக்கும் பொருத்தமானது. லிபியா மற்றும் சிரியாவில் போர்களை நேட்டோ ஆரம்பித்ததிலிருந்து ஒரு தசாப்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கான பயங்கரமான தடுப்பு முகாம்களின் வலையமைப்பை உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பாசிச பாரம்பரியத்தை எங்கும் நியாயப்படுத்துகிறது. ஜேர்மனியில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கம், ஹிட்லர் “தீயவர் அல்ல” என்று அறிவித்த வலதுசாரி தீவிரவாத பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை (Jorg Baberowski) பாதுகாக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதல் தெளிவாகத் தெரிகிறது. ஜோர்ஜ் புளோய்ட்டின் பொலிஸ் படுகொலை மற்றும் தொற்றுநோய் உத்தியோகபூர்வமாக தவறாக நிர்வகிக்கப்பட்டதன் விளைவாக தூண்டப்பட்ட சமூக கோபம் முழு நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவிலும் முன்நிகழ்ந்திராத வகையில் எதிர்ப்பு அலைகளைத் தூண்டியது. இதற்கு, அமெரிக்க மக்களுக்கு எதிராக கூட்டாட்சி படைகளை அனுப்பக் கோரியும், எதிர்ப்பாளர்களை கடத்துவதற்கும், தாக்குவதற்கும் துணை இராணுவப் படைகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் ட்ரம்ப் பதிலிறுத்தார்.

இந்த நிலைமைகளில்தான், பொலிஸ் சர்வாதிகாரத்திற்கும் பாசிசத்திற்கும் வரலாற்று ரீதியாக அறியப்பட்ட இடதுசாரி எதிர்ப்பின் வெளிப்பாட்டை, பிரெஞ்சு அரசு தற்போது சட்டவிரோதமாக்க முயற்சித்து வருகிறது.

வரலாற்று உண்மையை சமரசமின்றி பாதுகாப்பதும், பொலிஸ் அரசு சர்வாதிகாரத்தை எதிர்ப்பதும் இன்று முக்கியமானதாகும். சோசலிஸ்ட் கட்சி போன்ற பொலிஸ் எந்திரத்தின் கட்சிகளுடன் ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்ட சைமோவிச் தற்போதைக்கு பிற்போக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு பின்வாங்குகிறார் என்பது தெளிவாகிறது. தனக்கு எதிராக வழக்குத் தொடுப்பது பற்றி டர்மனின் அறிவிப்பதற்கு சற்று முன்னர், சைமோவிட்ச் பொலிஸை பாராட்டும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “என்னைப் பொறுத்தவரை ஒரு ஜனநாயக அரசின் காவல்துறையினருக்கும், ஆயுதப் பிரிவு காவல் படைகளுக்கும், மற்றும் பெத்தான் ஆட்சியின் காவல்துறைக்கும் ஆயுதப் பிரிவு காவல் படைகளுக்கும் இடையே நிச்சயமாக எந்த ஒப்பீடும் இல்லை. எனது வார்த்தைகள் குழப்பத்திற்கு வழிவகுத்திருக்கக்கூடும் என்று நான் வருந்துகிறேன் … மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பெரும் ஜனநாயக பொறுப்பைக் கொண்டுள்ள காவல்துறை மற்றும் ஆயுதப் பிரிவு காவல் படைகளுக்கு எனது ஆதரவை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்றவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், ஒரு “ஜனநாயகவாத” முதலாளித்துவ அரசை, பாசிச அரசிலிருந்து பிரிக்கும் காற்றுப்புக வழியில்லாத அளவிலான தடை எதுவும் இல்லை. குறிப்பாக, பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் (French National Assembly) தான், ஜூலை 10, 1940 அன்று, பெத்தானுக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்க வாக்களித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of the Fourth International-ICFI) பிரெஞ்சு பிரிவான, சோசலிச சமத்துவக் கட்சி (PES), மக்ரோனுக்கும் லூ பென்னுக்கும் இடையிலான 2017 ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றை தீவிரமாக புறக்கணிக்குமாறு தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டது.

லூ பென்னை காட்டிலும் மக்ரோன் கூடுதல் ஜனநாயகத்தன்மை கொண்டவர் என்ற வாதங்களை அது நிராகரித்தது. வெற்றியாளர், மக்ரோன் அல்லது லூ பென் யாராக இருந்தாலும், சர்வாதிகாரக் கொள்கைக்கு எதிரான ஒரு சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுக்க தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதற்கான போராட்டம் குறித்த தீர்க்கமான கேள்வி தவிர்க்க முடியாமல் தேர்தலுக்குப் பின்னர் எழுப்பப்படும் என்று PES எச்சரித்தது. மக்ரோனின் பரிணாமம், தேர்தல் நாளன்று இரவில் லூ பென் மற்றும் அவரது வாக்காளர்களுக்கு அவர் “குடியரசுக் கட்சி வணக்கம்” செலுத்தி தொடங்கியமை, PES இன் மதிப்பீட்டை நிரூபித்தது.

இந்த காரணங்களுக்காக, சைமோவிட்ச்சை தாக்குவதன் மூலம், பொலிஸ் அரசை பாதுகாப்பதற்கும், மேலும் பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களைப் பற்றிய அனைத்து குறிப்புக்களையும் சிந்தனைக் குற்றமாகக் கருதுவதற்கு வகைசெய்யும் பிற்போக்குத்தனமான அரசியல் சூழலை உருவாக்குவதற்குமான, மக்ரோன் மற்றும் டார்மனின் முயற்சிகளை எதிர்க்க PES அழைப்பு விடுக்கிறது.

மேலதிக வாசிப்புகளுக்கு

கவன்னியாக் இல் இருந்து வில்லியே வரை: பிரான்சில் வர்க்க போராட்டமும் வரலாற்றுப் படிப்பினைகளும் [PDF]

[20 décembre 2019]

பிரெஞ்சு ஆயுதப்படை "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களைச் சுடுவதற்கான அதிகாரத்தைப் பெறுகிறது

[23 mars 2019]

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை புகழ்கிறார் [PDF]

[10 novembre 2018]

நாஜி-காலகட்ட யூதர்களின் நாடுகடத்தலில் பிரான்சின் பொறுப்பை மெலோன்சோன் மறுக்கிறார்

[31 july 2017]

மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணி! [PDF]

[27 avril 2017]

பேராசிரியர் சோன் மக்மீக்கன் லெனின் விரோத மதிப்பிழந்து போன அவதூறுகளை புதுப்பிக்கிறார் (பகுதி - 1) [PDF]

[30 june 2017]

Loading