பாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மத்திய பாரிஸில் ஒரு இசை தயாரிப்பாளரை கொடூரமாக பொலிஸ் தாக்கியதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு வீடியோவானது பிரான்சிலும் சர்வதேச அளவிலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

ஒரு அமைதியான அகதிகள் முகாமுக்கு எதிராக குடியரசு சதுக்கத்தில் பொலிஸ் வெறியாட்டத்திற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், இந்த வீடியோ வெளியீடு வருகிறது, மேலும் பொலிஸ்காரர்களின் நடவடிக்கைகளை படமாக்குவதை குற்றவாளியாக்குவதற்கு மக்ரோன் அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவரின் முதல் பெயரான மிஷேல் மூலம் மட்டுமே ஊடகத்தில் அடையாளம் அடையாளம் காணப்பட்ட அவர், கடந்த சனிக்கிழமையன்று மாலை, 7:30 மணிக்கு பின்னர் நகரின் 17 வது மாவட்டத்திலுள்ள தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு திரும்பி கொண்டிருந்தார். அருகில் இருந்த போலீஸ்காரர்கள் குழு ஒன்று இருப்பதை பார்த்த அவர் கட்டிடத்திற்குள் நுழைந்தார். அவர் ஒரு முகக்கவசத்தை அணிந்திருக்கவில்லை, இது கொரோனா வைரஸ் பொது முடக்கத்தின் கீழுள்ள கட்டுப்பாடுகளினால் தேவைப்படுகிறது. மிஷேலுக்கு தெரியாமலும், எந்த எச்சரிக்கையும் கொடுக்காமலும், காவல்துறையினர் ஸ்டுடியோவுக்குள் நுழைந்து பின்னால் இருந்து அவரை அணுகினர்.

மிஷேல் தனது ஸ்டுடியோவுக்கு வெளியே தெருவில் ஒரு போலீஸ் குழுவினர் தாக்கியதைக் காட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் எடுத்த வீடியோ

"எதையும் கேட்பதற்கு முன்பு என்னைத் தள்ளிய, அல்லது என்னை இழுத்த ஒரு கையை உணர்ந்தேன், பின்னர் அவர்கள் என்னை வெளியேறச் சொன்னார்கள். நான் என் இடத்தில் இருக்கிறேன் என்று சொன்னேன்… அது மிக வேகமாக நடந்தது, அவர்கள் உண்மையான போலீசாரா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.” காவல்துறை குழுவில் ஒருவர் பொதுமக்கள் உடையில் இருந்தார். நிகழ்வுகள் ஸ்டுடியோவின் சிசிடிவி கேமராவில் படம் பிடிக்கப்பட்டன. காவல்துறையினர் மிஷேலுடன் அறைக்குள் நுழைந்து, பின்னால் கதவை மூடி, பல நிமிடங்கள் அவரை அடித்தனர். அவர் ஒரு டஜன் முறை உதைக்கப்பட்டார், இருபது முறை குத்தப்பட்டார், மேலும் 15 முறை ஒரு போலீஸ் தடியினால் முக்கியமாக முகம் மற்றும் மண்டை ஓட்டில் தாக்கப்பட்டார்.

"நான் தரையில் விழுந்தால் நான் மீண்டும் எழுந்திருக்கப் போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன்" என்று ஊடகங்களுக்கு பகிரங்கமாக சொல்ல முன்வந்த மிஷேல் பின்னர் கூறினார். வீடியோவின் எந்த கட்டத்திலும் அவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. கறுப்பராக இருக்கும் மிஷேல், போலீசார் அவரை பலமுறை இனரீதியான அவதூறுகளால் துஷ்பிரயோகம் செய்து, அவரை "அழுக்கு நீக்ரோ" என்று அழைத்தனர். கீழ் மாடியிலுள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இருந்த இளம் வயது இசைக் கலைஞர்கள் குழு வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழைந்தபோதுதான், காவல்துறையினர் வெளியே தப்பிச் சென்றதோடு தாக்குதல் நிறுத்தப்பட்டது.

"அவர்கள் 16 வயதுடைய சிறுவர்கள்," என்று மிஷேல் கூறினார். "என்ன நடந்தது என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள், எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னேன். நான் இரத்தத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்தேன்." இதையடுத்து போலீஸ்காரர்கள் அறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். "இது என்னுடைய கடைசி நாள் என்று நான் எனக்குள் கூறிக்கொண்டேன்" என்றார்.

தெருவின் மேலிருந்து அண்டை வீட்டாரால் எடுக்கப்பட்ட இரண்டாவது வீடியோ, மிஷேல் வெளியேறும்போது கட்டிடத்தின் நுழைவாயிலைச் சுற்றி குறைந்தது ஏழு பொலிஸாரைக் கொண்ட குழு ஒன்று காணப்படுகிறது. அவர்களில் இருவர் அவர் மீது துப்பாக்கிகள் என்று தோன்றுவதை சுட்டிக்காட்டுகின்றன. அவர் தெருவுக்கு வெளியே வரும்போது, போலீசார் அவரைச் சூழ்ந்துகொண்டு எல்லா பக்கங்களிலிருந்தும் அடித்தார்கள். கண்ணீர்ப் புகையிலிருந்து மறைந்திருந்த இளைஞரைக் கண்டுபிடிக்க இரண்டு அதிகாரிகள் உள்ளே சென்றனர். "அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்," என்று ஒருவர் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். “அப்போது எனக்கு கேட்டது, ‘கேமரா! கேமரா!’ இது [அயலவர்கள்] படப்பிடிப்பு செய்துகொண்டிருந்தனர். நான் அதைக் கேட்ட தருணத்திலிருந்து, அவர்கள் எங்களைத் தாக்குவதை நிறுத்தினார்கள்.”

பின்னர் உள்ளூர் போலீஸ் அலுவலகத்திற்கு மிஷேல் கொண்டுசெல்லப்பட்டார், அங்கு அதிகாரிகள் —சிசிடிவி காட்சிகளை படம்பிடித்தது குறித்து தெரியாமல்— அவருக்கு எதிராக கலகக் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தனர், அவர் அவர்களை அவரது ஸ்டூடியோவிற்கு "இழுத்து" தாக்கியதாகவும், அவர்களது ஆயுதங்களை அவர் எடுக்க முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். 48 மணி நேரம் அவர் காவலில் வைக்கப்பட்டார். வீடியோ பொலிசாருக்கு காண்பிக்கப்பட்டபோது மட்டுமே குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன.

இசை தயாரிப்பாளர் தனது முதல் பெயரான மிஷேல் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்டார், பாரிஸில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் படம் எடுக்கப்பட்டுள்ளது. (Image credit: screen capture)

"இந்த வீடியோ இல்லாமல் இருந்திருந்தால், நான் இன்று சிறையில் இருப்பேன்" என்று மிஷேல் கூறினார். "நான் சிறையில் இருப்பேன், என் அன்புக்குரியவர்கள், என் நண்பர்கள், காவல்துறையினர் தங்கள் அறிக்கையில் கூறியது போல், நான் அவர்களின் ஆயுதத்தை எடுக்க விரும்பினேன், நான் அவர்களைத் தாக்கினேன் என்று நினைத்திருப்பார்கள்." அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துவதுபோல், போலீஸ் வன்முறையின் சமீபத்திய சம்பவம் குறித்து குறிப்பிடத்தக்க வகையில் தனித்தன்மை வாய்ந்த எதுவும் இல்லை. இது படமாக்கப்படாவிட்டால், அவருடைய குற்றச்சாட்டுக்கள் காவல்துறையினரால் மறுக்கப்பட்டு, மிஷேல் பொலிஸ் வன்முறைக்குப் பாதிக்கப்பட்ட எண்ணுக்கணக்கற்ற பிறரைப் போல இருந்திருப்பார்.

மக்ரோன் அரசாங்கம், மக்களிடையே எதிர்ப்பு வெடிப்பை கண்டு அஞ்சியது, அந்த வீடியோக்களைப் பார்த்த போது ஜனாதிபதி "அதிர்ச்சியடைந்ததாக" வெள்ளியன்று ஒரு சிடுமூஞ்சித்தனமான அறிக்கையை வெளியிட்டது. உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனனிடம் இருந்து அறிக்கை ஒன்றை அவர் கோரியதாக கூறப்படுகிறது. மூன்று போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மற்றும் டார்மனன் அவர்களை பதவி நீக்கம் செய்ய "அழுத்தம்" கொடுத்தார் என்று கூறியுள்ளார். அதிகாரிகள் அனைவரும் தவறு செய்ததற்குத் தீர்ப்புக்களை வழங்குகின்ற மற்றொரு உள்ளக போலிஸ் விசாரணையும் திங்களன்று குடியரசுத் சதுக்கத்தில் போலீஸ் தாக்குதலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்று அறிக்கைகளின் பின்னணியில், 2018 இல் பாசிச சர்வாதிகாரி பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று பாராட்டிய மக்ரோன், ஒரு எதோச்சதிகார பொலிஸ் அரசை விரைவாக கட்டியெழுப்பி வருகிறார், மேலும் மக்களுக்கு எதிரான அவர்களின் வன்முறைகளுக்கு பொலிஸ் தண்டனை வழங்குவதைத் தடுப்பதற்கு அவர் நகர்ந்து வருகிறார். மிஷேல் மீதான தாக்குதல் திங்களன்று தேசிய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் "விரிவான பாதுகாப்பு" சட்டத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, வீடியோ எடுப்பதன் விளைவாக போலீசார், உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ பாதிக்கப்படலாம் என்ற அகநிலை அளவுகோல்களின் அடிப்படையில் இது பொது இடங்களில் போலீஸை படம்பிடிப்பதை குற்றமாக்குகிறது.

ஜனவரி மாதம் செனட்டில் சட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட 24 வது பிரிவை "மீண்டும் எழுத" ஒரு சிறப்பு ஆணையத்தை நியமித்துள்ளதாக அறிவிப்புடன் அரசாங்கம் இப்போது சட்டத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ள முயற்சிக்கிறது. சட்டத்திற்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம் போலீஸால் தடைசெய்யப்பட்டது, ஆனால் இந்த தடையை நிர்வாக நீதிமன்றம் நேற்று இரவு இரத்து செய்து, போராட்டத்தை தொடர அனுமதி வழங்கியது.

சமீபத்திய போலீஸ் வன்முறைகளும் அரசாங்கத்தின் சட்டமும் சோசலிஸ்ட் கட்சி, ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியவையால் விமர்சிக்கப்பட்டன. பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கீழ் சுமத்தப்பட்ட இரண்டு ஆண்டு கால அவசரகால நிலையை ஆதரித்து, பிரான்சில் ஒரு பொலிஸ் அரசை உருவாக்க இக்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்தன.

ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிய மக்ரோனின் வெளிப்படையான திருப்பம், தொழிலாள வர்க்க எதிர்ப்பை வெடிப்பதற்கு தூண்டிவிடும் என்பதே அவர்களின் அச்சமாகும். இந்த அச்சங்களை, Le Monde ஆனது நேற்று ஒரு தலையங்கத்தில் வெளியிட்டது, "போலீஸ்: ஒரு கடுமையான கட்டளை நெருக்கடி," எச்சரிக்கை: "பழைமைவாத வாக்காளர்களுக்கு முறையிட குடியரசின் ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெரால்ட் டார்மனன், நாட்டை ஒரு பயங்கரமான ஆபத்தான சுழல் சூழலுக்குள் இழுத்துவரும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது, இது பொது முடக்கத்தால் இறுக்கப்பட்டுள்ள பல பதட்டங்களால் மேலும் தீவிரமாக்கும்."

இந்த தலையங்கம் போலீஸ் வன்முறையை "தலைமைப்" பிரச்சினையாக அபத்தமாக முன்மொழிகிறது, மேலும் அதன் முன்மொழிவு, "உண்மையிலேயே சுயாதீனமான கட்டுப்பாட்டு அமைப்பை" கொண்டு உள்ளக போலீஸ் கட்டுப்பாட்டு அமைப்பை மாற்றுவதற்கான ஒரு அழைப்பாக உள்ளது.

உண்மையில், மக்ரோனின் போலீஸ் அரசுக்கு உந்துதல் என்பது உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களால் எதோச்சதிகார ஆட்சி முறைகளை நோக்கிய ஒரு பகுதியாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட சமூக சமத்துவமின்மையின் மிகப் பெரிய வளர்ச்சியினாலும், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை மிருகத்தனமாக அடக்குவதற்கு ஆளும் வர்க்கத்தின் தயாரிப்புகளாலும் இது இயக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மக்ரோனின் காவல்துறையினர் ஆயிரக்கணக்கான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களையும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் அடித்து தாக்குதல் நடத்தியதுடன், டஜன் கணக்கானவர்களை இரப்பர் தோட்டாக்களால் அவர்களது கண்களை நோக்கிச் சுட்டுக் குருடாக்கியும், மற்றும் வெடிகுண்டுகளால் கைகளையும் இழக்கவைத்துள்ளனர்.

இந்த அடக்குமுறை முழு தொழிலாள வர்க்கத்தின் மீதும் திருப்பி விடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. பொலிஸ் வன்முறை என்பது அடிப்படையில் ஒரு வர்க்க விளைபொருளே அன்றி, இன அடக்குமுறை அல்ல என்பதை நிரூபிக்கிறது.

மிஷேல் மீதான சமீபத்திய தாக்குதல் குறைந்த பட்சம் பகுதியாக இனவெறியால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது, இது ஆளும் வர்க்கத்தால் பொலிஸ் படைகளில் வேண்டுமென்றே வளர்க்கப்படுகிறது, அங்கு நவ-பாசிச வலதுசாரிகளுக்கு வலுவான ஆதரவு உள்ளது. பாசிச பொலிஸை வளர்ப்பது இந்த சக்திகள் முழு உழைக்கும் மக்களுக்கும் எதிரான மிருகத்தனமான வன்முறைகளை நடத்த திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், அனைத்து இனத் தொழிலாளர்களுக்கும் எதிராக எண்ணற்ற இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜனவரி 3ந் திகதியன்று, ஒரு போக்குவரத்து நிறுத்தத்தின் போது ஒரு வெள்ளையரான டெலிவரி ஓட்டுநரான Cédric Chouviat ஐ போலீசார் கொன்றனர், அவர் "நான் மூச்சுத்திணறுகிறேன்" என்று கூச்சலிட்டார் — இந்த ஆண்டு முன்னதாக அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்படுவதற்கு முன்னர் ஜோர்ஜ் ஃபிளோய்ட் பயன்படுத்திய அதே சொற்றொடர்தான் இது. ஜூன் மாதம், அரபு பின்னணியுடைய ஒரு வெள்ளையரான சுகாதார ஊழியர் ஃபரீடா, சுகாதார நிதியை மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாரால் வன்முறைத் தாக்குதலுக்குட்பட்டது படப்பிடிப்பு செய்யப்பட்டது.

Loading