பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி எலிசே அரண்மனை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் அறிகுறிகளை உணரத் தொடங்கிய உடனேயே, புதன்கிழமை மாலை அவர் பரிசோதிக்கப்பட்டதாக மக்ரோனின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டால் தெரிவித்தார். அவர் ஏழு நாட்களுக்கு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது அறிகுறிகள் தற்போது இலேசானதாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஐரோப்பாவிலுள்ள பல நாட்டுத் தலைவர்கள் நேற்று பிரெஞ்சு அதிகாரிகளால் தங்கள் தொடர்பு கொள்ளப்பட்டதாக அறிவித்தனர், மேலும் அவர்கள் தொற்றுள்ளவரை தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்பட்டது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் திங்களன்று முகக்கவசம் இல்லாமல் மக்ரோனுடன் உணவருந்தினார். போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா புதன்கிழமை மாலை மக்ரோனைச் சந்தித்ததால், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டு க்ரூ கடந்த ஐரோப்பிய உச்சி மாநாட்டில் மக்ரோனுடன் சந்தித்த பின்னர் ஒரு தொற்றுள்ளவரை தொடர்பு கொண்டவராக இருக்கிறார், மற்றும் ஐரோப்பிய சபையின் தலைவர் சார்ல்ஸ் மிஷேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கோவிட் -19 வைரஸ் பரிசோதனையில் தொற்றுக்குள்ளானதாக ஜனாதிபதி எலிசே அரண்மனை வியாழக்கிழமை அறிவித்தது. (Image Credit: AP Photo/Francois Mori)

பிரெஞ்சு அரசாங்கத்தில், பிரதம மந்திரி காஸ்டெக்ஸ் வியாழனன்று தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு இருந்த போதிலும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார், மேலும் ஏழு நாட்களில் மீண்டும் அவர் பரிசோதிக்கப்படுவார். எலிசே அரண்மனையின் செயலாளர் அலெக்சிஸ் கோஹ்லர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். திங்களன்று ஜோன்-லூக் மெலோன்சோன், சோசலிஸ்ட் கட்சியின் வலேரி ரபோல்ட் மற்றும் ஒலிவியே ப்ரெக்ட் உட்பட அனைத்து செனட் குழுக்களின் தலைவர்களுடனும் மக்ரோன் ஒரு வேலைரீதியான மதிய விருந்தில் கலந்து கொண்டிருந்தார். அவர்கள் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட தொற்றுத் தொடர்புகள் இல்லை என்றாலும், அவர்கள் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

ஐரோப்பிய அரசின் மற்றய தலைவர்களிடமிருந்து ஒற்றுமைக்கான அறிக்கைகள் வெளிவந்திருந்தன, அவைகள் கண்டம் முழுவதும் வைரஸ் பரவுகையில் கூட வரையறுக்கப்பட்ட பொது முடக்க நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் அதே கொள்கையை பின்பற்றுகின்றன. போரிஸ் ஜோன்சன் மற்றும் ஊர்சுலா வொன் டெர் லெயென் இருவரும் ஆதரவு அறிக்கைகளை ட்டுவீட் செய்தனர். எவ்வாறாயினும், மக்களிடையே, "செல்வந்தர்களின் ஜனாதிபதி" மீது மக்கள் அனுதாபத்தின் ஒரு சிறிய அறிகுறியும் கிடையாது, ஆனால் அரசாங்கம் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" என்ற கொள்கையை பின்பற்றுகிறது, வைரஸ் மக்கள்தொகை முழுவதும் பரவ அனுமதிக்கிறது.

அரசு தலைவர்கள் மிகவும் கடுமையான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்ற நிலையில், மக்ரோன் தொற்றுக்குள்ளாகிருப்பது, வைரஸ் எவ்வளவு தொற்றும் தன்மையும் மற்றும் அவர் பின்பற்றும் கொள்கைகளின் குற்றத்தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மக்ரோன் பரிசோதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அக்டோபர் இறுதியில் இருந்து மிக மட்டுப்படுத்தப்பட்ட தேசிய பொது முடக்கத்தினை பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக முடித்துக் கொண்டது. இது, தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை, அதற்கு முன்னர் அது அறிவித்த 5,000 என்ற உத்தியோகபூர்வ இலக்கின் கீழ் ஒருபோதும் குறையவில்லை என்ற உண்மையையும் மீறி இருந்தது.

மார்ச் முதல் மே மாதம் வரை முதல் பொது முடக்கம் போலல்லாமல், இந்தப் பொது முடக்கம் பள்ளிகள் அல்லது அத்தியாவசியமற்ற பணிகள் ஒருபோதும் மூடப்படவில்லை. இதன் விளைவாக, COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கைகள் மிகவும் மெதுவான விகிதத்தில் குறைந்தன; இலட்சக்கணக்கான மக்கள் நனவாக தொற்றுக்கு அனுமதிக்கப்பட்டனர். உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தேவையினால் அரசாங்கத்தின் கொள்கை உந்தப்படவில்லை, மாறாக அத்தியாவசியமற்ற உற்பத்தி மற்றும் இலாபப் பிரித்தெடுத்தல் தொடர்ந்து நீடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும். பல ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பகுதியளவு பொது முடக்கம் என்பது, மருத்துவமனைகள் முற்றிலும் நோயாளிகளினால் நிரம்பி வழிவதால், ஆளும் வர்க்கம் பீதியடைந்திருக்கும் ஒரு சமூக வெடிப்பைத் தடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கூட இப்போது நீக்கப்பட்டன, வைரஸின் பரவலின் மந்தநிலை தலைகீழாகத் தொடங்கி மீண்டும் துரிதப்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில், ஏழு நாள் சுழற்சி சராசரி குறைந்தது, முதல் பொது முடக்க நேரத்தை விட மிக மெதுவான வேகத்தில், டிசம்பர் 5 திகதியன்று குறைந்தபட்சம் 10,396 க்கு மேல் குறைந்தது, மாத தொடக்கத்தில் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர். வைரஸ் பரவல் வேகம் குறைந்து வந்தது, மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இது பின்னர் 12,121 ஆக அதிகரித்துள்ளது, புதிய நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கைகள் இந்த வாரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது. செவ்வாயன்று 2,850 பேர்கள் தீவிர சிகிச்சையிலும், மேலும் 289 பேர்கள் இறந்துமுள்ளனர். புதனன்று, 24 மணி நேரத்தில் 17,000 க்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மில்லியன் கணக்கான குடும்பங்கள் விடுமுறைக்காக தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தொற்றுநோயை மேலும் துரிதப்படுத்தச் செய்யும். செவ்வாயன்று, பிரதமர் காஸ்டெக்ஸ் "முடிந்தவரை" பெற்றோர்கள் இந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அனுமதிக்கமாட்டார்கள் என்று அறிவித்தார். இருப்பினும், பள்ளிகளைத் திறந்து வைப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கை, பெற்றோரை விட குழந்தைகள் குறைந்த தொற்று கொண்டவர்கள் என்ற தவறான கூற்றுக்களால் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சமீபத்திய “முன்மொழிவு” இன்னும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு செயல்படுத்த முடியாததாக இருக்கும்.

ஜனவரி 4 ஆம் திகதி விடுமுறை காலத்திற்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறப்பதில் தனது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், மீண்டும் திறப்பதை ஒத்திவைக்க மாட்டேன் என்றும் மக்ரோன் அறிவித்துள்ளார். பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பது பெற்றோர்கள் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வதையும், குழந்தைகள் மத்தியில் வைரஸ் பரவ அனுமதிப்பதன் மூலம் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது இன்னும் பெரிய பேரழிவைத் தயாரிக்கிறது. செவ்வாயன்று, தேசிய விஞ்ஞான சபையின் தலைவர் ஜோன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி, Le Parisien க்கு ஒரு நேர்காணலை வழங்கினார், அதில் அவர் “நாங்கள் ஒரு பீடபூமியை அடைந்துவிட்டோம், புதிய தொற்றுக்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 15 ஆயிரம் நோயாளிகளினால் தேக்கமடைந்துள்ளன. இந்த வைரஸ் காலநிலையுடன் பிணைக்கப்பட்டிருப்பதால், குளிர்ச்சியானது அதன் ‘மறுசுழற்சிக்கு’ சாதகமாக இருக்கிறது. நடவடிக்கைகளின் தளர்வு மக்கள்தொகையில் அதிக நகர்வுகளை அனுமதித்திருப்பதுடன், பிரெஞ்சு மக்கள் விதிகளை நன்கு மதித்திருந்தாலும் கூட, தொற்று ஏற்படுகிறது”.

அவர் மேலும் கூறியதாவது: “தற்போதைய மீளுருவாக்கம் ஜனவரி நடுப்பகுதி வரை அல்லது அதற்குப் பின்னரும் உயிர்வாழ முடியுமா? பதில் ஆம், மாதிரி மாறவில்லை, குளிர்காலம் முழுவதும் வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. தடுப்பூசிகளின் வருகை 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் [நான்கு மாதங்கள்] தாக்கத்தை ஏற்படுத்தாது, இரண்டாவதாக மிகக் குறைவு. ஆண்டின் தொடக்கமானது 2020 ஆம் ஆண்டிலிருந்து வேறுபட்டதாக இருக்காது.”

ஓய்வூதியம் பெறுபவர்களின் இல்லங்களில் தடுப்பூசி பிரச்சாரம் "ஜனவரி நடுப்பகுதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படாது, இது ஏப்ரல் இறுதி வரை, ஒருவேளை மே மாதத்தில், 22 மில்லியனுக்கும் அதிகமான ஆபத்துள்ள பிரெஞ்சு மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அளிப்பதற்கு" என்று டெல்ஃப்ரைஸி மேலும் கூறினார்.

ஆயினும்கூட, "ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு தொற்றுநோய் அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் வகுப்புகளுக்கு திரும்புவது எதிர்பார்த்த திகதியில் தொடர வேண்டும்." ஊடகங்கள் ஏற்கனவே "மூன்றாவது அலை" பற்றி விவாதித்து வருகின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றக்கூடிய ஒரு தடுப்பு மருந்து உள்ளது, ஆனால் குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு விநியோகிக்கப்படாது. ஆயினும்கூட மக்ரோன் அரசாங்கம் தொழிலாளர்களும் மாணவர்களும் அத்தியாவசியமற்ற உற்பத்திக்குத் திரும்பவேண்டும் என்றும், பள்ளிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோருகின்றது, இது COVID-19 இன் எண்ணற்ற புதிய நோய்த் தொற்றுக்களுக்கு இட்டுச் செல்லும்.

எந்தவொரு தடுப்பூசியும் பயனுள்ள விளைவுடையதாக ஏற்படுவதற்கு முன்பு, குளிர்காலத்தின் குளிர்ந்த பகுதி முழுவதும் பெருந்தொற்று நோயை தொடர்ந்து முடுக்கிவிடுவதில் அதன் கொள்கை முன்வைக்கப்படுகிறது. இந்த மரணக் கொள்கை பிரெஞ்சு பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்படுகிறது, மேலும் எந்தவொரு வகையிலும் அதன் இலாபங்களைத் தடுக்கும் வகையில் எதுவும் செய்யப்படக்கூடாது என்பதையும் உறுதிசெய்கிறது.

டிசம்பர் 16 திகதியன்று சோசலிச சமத்துவக் கட்சியினால் (SEP) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், தொழிலாள வர்க்கம் நெருக்கடியில் தலையிட்டு, பெருந்தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க பின்வரும் அத்தியாவசிய கோரிக்கைகளை முன்வைத்தது: 1) "அத்தியாவசியமற்ற அனைத்து உற்பத்திகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்"; 2) "அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நேரடியான கற்றலுக்காக மூடப்பட வேண்டும்"; 3) "தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பமுடியும் வரை ஒரு வருமானமாக அவர்களுக்கு முழுமையாக நஷ்டஈடு கொடுக்கப்படுவது மட்டுமே ஒரு மூடல் திறனுள்ளதாக இருக்கும்."

இந்த முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு, ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டமானது அனைத்து முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராக, சோசலிசத்திற்காக தேவைப்படுகிறது.

Loading