‘போப்போய்’ லாக்மன்: பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச போட்டியாளர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) மற்றும் அதன் தத்துவார்த்த தலைவரான ஜோஸே மரியா சிஸன் ஆகியோரின் ஸ்ராலினிச அவதூறுகளுக்கு எதிராக ஜோசப் ஸ்காலிஸின் புலமைத்துவத்தை பாதுகாக்கும் அதன் பிரச்சாரத்தின் போது, பிலிப்பைன்ஸில் உலக சோசலிச வலைத் தளம் பல சிறந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் தொடர்புகளை பெற்றுக்கொண்டுள்ளது. இதன்போது 1990களின் முற்பகுதியில் இவ் அமைப்பிலிருந்து பிரிந்து, கிராமப்புறங்களில் “நீடித்த மக்கள் போராட்டம்” என்ற முன்னோக்கை எதிர்க்கும் ஒரு புதிய கட்சியை நிறுவிய பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான ‘போப்போய்’ என்றறியப்பட்ட ஃபிலிமோன் லாக்மனின் (Filemon Lagman), அரசியல் வேலைத்திட்டம் தொடர்பான கேள்விகள் மீண்டும் மீண்டும் முன்வந்தன.

லாக்மனால் 1994 இல் எழுதப்பட்ட மூன்று எதிர்-ஆய்வறிக்கைகளின் தொகுப்பில், பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் அரை நிலப்பிரபுத்துவ தன்மை கொண்டது, கட்சி "நீடித்த மக்கள் யுத்தத்தின்" ஒரு மூலோபாயத்தை பின்பற்ற வேண்டும் என்ற அதன் கூற்றுகளையும் மற்றும் கட்சியின் வேலைத்திட்டத்தில் சோசலிசப் புரட்சி குறித்த உறுதியான குறிப்புகளை வெளிப்படையாக சேர்க்கத் தவறியதற்காகவும் சிஸனையும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) இன் வேலைத்திட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தின் "சுயாதீனமான கட்சியின்" நகர்ப்புற இயக்கத்திற்கு லாக்மன் அழைப்பு விடுத்தார்.

‘போப்போய்’ என்றறியப்பட்ட ஃபிலிமோன் லாக்மன்

இந்த விமர்சனங்களின் அடிப்படையில், லாக்மன் ஒரு பிரிந்த தொழிற்சங்க கூட்டமைப்பான புக்லூரன் என் மங்ககவாங் பிலிப்பினோ (Bukluran ng Manggagawang Pilipino - BMP) அல்லது பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களின் இயக்கம் மற்றும் ஒரு அரசியல் கட்சியான சன்லகாஸ் (Sanlakas) ஆகியவற்றை 1990 களின் நடுப்பகுதியில் உருவாக்கினார். லாக்மன் 2001 இல் ஒருபோதும் விளக்கப்படாத சூழ்நிலையில் நான்கு துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நேரத்தில் BMP பல போட்டி அமைப்புகளாக பிரிந்தது. ஆனால் இந்த அரசியல் பிரிவுகளில் எதுவும் பிளவுக்கான காரணத்தை பகிரங்கமாக இதுவரை வழங்கவில்லை.

லாக்மனின் முன்னோக்கு மற்றும் அவர் வழிநடத்திய அரசியல் அமைப்புகள், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு புரட்சிகர, தொழிலாள வர்க்க மாற்றாக அமைந்தனவா?

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி 1968 ஆம் ஆண்டில் ஸ்ராலினிசத்தின் சீன வகையறாவான மாவோயிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இது பிலிப்பைன்ஸ் போன்ற தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளில், புரட்சியின் பணிகள் இன்னும் சோசலிசத் தன்மையுடையதாக இருக்கவில்லை, ஆனால் தேசிய மற்றும் ஜனநாயகம் தன்மையுடையதாக மட்டுமே இருக்கும் என்று வாதிட்டது. இந்த முதல் புரட்சிகர கட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி, ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும் என்று அவர்கள் கூறினர். எனவே தமது கட்சியின் ஒரு முக்கிய பணி, இந்த முற்போக்கான பகுதியைக் கண்டுபிடித்து கூட்டினை உருவாக்கிக் கொள்வதாகும். மேலும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புறங்களில் ஆயுதப் போராட்டத்தின் மூலோபாயத்தை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்த முயன்று, தேசிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் தேசிய முதலாளித்துவம் என்று அழைக்கப்படுவதுடன் ஒரு கூட்டினை அமைக்க முனைந்தது.

லாக்மன் ஒரு செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் ஒரு நீதிபதியின் மகன், அவரது சகோதரர் இப்போது பலதடவை காங்கிரஸ் அங்கத்தவராவார். போப்போய் லாக்மன் 1971 இல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் (UP) ஒரு ஊடகத்துறை மாணவராக இருந்தார். மேலும் ஒரு முழு சமூக அடுக்கைப் போலவே, அவரது காலத்தின் அமைதியின்மையால் தீவிரமயமாக்கப்பட்டார். அப்போது ஜனாதிபதி பேர்டினாண்ட் மார்க்கோஸ் (Ferdinand Marcos) நாட்டின் மீது இராணுவச் சட்டத்தை விதித்தபோது ஒரு வருட காலம் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தலைமறைவாக சென்றார்.

1970களின் முற்பகுதியில் மார்க்கோஸுக்கு எதிரான ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு பிரிவினருடன் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கூட்டணியை உருவாக்கியது. 1972 இல் ஜனாதிபதி இராணுவ சர்வாதிகாரத்தை விதித்தபோது, மார்க்கோஸின் எதிரிகள் உட்பட பெரும்பான்மையான முதலாளித்துவ வர்க்கம் சமூக அமைதியின்மைக்கு எதிராக அவர்களின் இலாப நலன்களைப் பாதுகாத்த சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொண்டது. 1970 களின் பிற்பகுதியில், நிலைமைகள் போதுமான அளவு உறுதிப்படுத்தப்பட்டதாக அவர்கள் உணர்ந்தபோது, முதலாளித்துவ எதிர்ப்பு மீண்டும் தன்னை ஒழுங்கமைக்கத் தொடங்கியது.

லாக்மன் அப்போது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிலா-ரிஸால் பிராந்தியக் குழுவின் (MRRC) செயலாளராக இருந்தார். 1978 இடைக்கால பிலிப்பைன்ஸ் பாராளுமன்ற (Batasang Pambansa) தேர்தலில் மார்க்கோஸுக்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்புடன் ஒரு பொதுவான கூட்டில் பங்கேற்க கட்சியின் நகர்ப்புற பிரிவுகளை அவர் வழிநடத்தியதால், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை லாக்மனை MRRC யின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது. சிறையில் சிஸன் இருந்த நிலையில், ரோடோல்ஃபோ சலாஸ் (Rodolfo Salas) கட்சியை வழிநடத்தி, தேர்தலை புறக்கணித்து கிராமப்புறங்களில் ஆயுதப் போராட்டத்தில் பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டும் என்று வாதிட்டார். மணிலா குழுவின் செயல்பாடு, ஆயுதப் போராட்டத்திற்கு நிதி திரட்டுவது மற்றும் தொழிலாளர்களை கிராமப்புறங்களுக்கு திசைதிருப்பவது என்று சலாஸும் மற்றும் பெரும்பான்மையானவர்களும் வாதிட்டனர்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் பெரும்பான்மையினரை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனம் என்ற நிலைப்பாட்டில் இருந்து லாக்மன் எதிர்க்கவில்லை. ஆனால் தேர்தல் அரசியலுக்காக ஆளும் உயரடுக்கின் ஒரு பகுதியினருடன் வெளிப்படையான கூட்டணிக்கான நேரம் வந்துவிட்டது என்ற கருத்திலிருந்தே எதிர்த்தார். முதலாளித்துவ வர்க்கம் மார்க்கோஸுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குகிறது என்பதையும், ஆளும் வர்க்க எதிர்த்தரப்பினரோடு ஒரு கூட்டணி இப்போது சாத்தியமானது என்பதையும் அவர் சரியாக உணர்ந்திருந்தார்.

எவ்வாறாயினும், தேர்தல் புறக்கணிப்பு முன்னோக்கு மத்திய குழுவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இந்த கொள்கை, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி 1986 ல் முன்கூட்டி அழைப்புவிடப்பட்ட தேர்தலை புறக்கணிக்க வழிவகுத்தது. அந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் சக்தி இயக்கம் (People Power movement) மார்க்கோஸை வெளியேற்றியதால் அவர்கள் விரைவாக தமது மூலோபாயம் பற்றி வருந்தினர். புறக்கணிப்பு முடிவின் காரணமாக கட்சி மார்க்கோஸை அகற்றுவதில் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில் பதவிக்குவரும் அக்கினோ நிர்வாகத்தின் அரசியலில் இருந்து பெருந்தன்மையுடன் விலக்கப்பட்டிருந்தது.

லாக்மன் கட்சிக்குள்ளேயே புனருத்தானம் செய்யப்பட்டவராக நிரூபிக்கப்பட்டு, MRRC தலைவராக மீண்டும் இருத்தப்பட்டார்.

1986 முதல் 1991 வரையிலான காலம் கட்சியினுள் ஒரு எழுச்சியை ஏற்படுத்திய காலமாக இருந்தது. உலகளாவிய ஸ்ராலினிசத்தின் நெருக்கடியை அது வெளிப்படுத்தியது. இது உற்பத்தியின் பூகோளமயமாக்கலை எதிர்கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கும், சீனாவில் முதலாளித்துவ மறுசீரமைப்புக்கும் வழிவகுத்தது. 1986 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சிஸன், அரசியல் நாடுகடந்தநிலையில், கட்சி மீதான தனது கட்டுப்பாட்டை நெதர்லாந்திலிருந்து மீட்டெடுக்க முயன்றார். அவர் கோர்பச்சேவுடன் உறவுகளை ஏற்படுத்த முயன்று, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கூறப்பட்ட "நவீன திருத்தல்வாதம்" பற்றிய மாவோயிச விமர்சனங்கள் அனைத்தையும் அவர் கைவிட்டார். சோவியத் ஒன்றியத்தை கோர்பச்சேவ் கலைத்துக்கொண்டிருக்கும் போது கோர்பச்சேவின் கொள்கைகளையும் அவர் பாராட்டினார். இதற்கிடையில், பிலிப்பைன்ஸில் உள்ள கட்சி, சீன தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மீது தியானன்மென் சதுக்கத்தின் மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியைப் பாராட்டும் அறிக்கையை வெளியிட்டது.

கட்சியைப் பற்றிக்கொண்ட நோக்குநிலையின்மை கடுமையான விவாதங்களுக்கு வழிவகுத்தது. அடுத்த தசாப்தங்களில் அக்கினோவுக்கு கட்சியின் ஆதரவின் விளைவாக, கட்சியின் அடுக்குகள் தங்களை அக்கினோ நிர்வாகத்துடன் நெருக்கமாக இணைத்துக் கொள்வது ஒரு முன்மாதிரியாக ஆகியது. அவை பின்னர் 1987 இல், அக்கினோ விவசாய எதிர்ப்பாளர்களின் படுகொலையை மேற்பார்வையிட்ட பின்னர் கட்சி அக்கினோவை பிற்போக்குவாதி என்று தயக்கத்துடன் கண்டனம் செய்தபோது கட்சியிலிருந்து விலகிவிட்டன.

ஸ்தாபக அரசியலில் நேரடியாக பங்கேற்க ஒரு வழிமுறையாக கிராமப்புறங்களில் ஆயுதப் போராட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நகர்ப்புற இயக்கத்திற்கு மாறுவதை ஆதரிக்கும் கட்சியின் முன்னணி குரலாக லாக்மன் வெளிப்பட்டார். கட்சி 1991 இல் வெடித்தபோது ஒரு பிரிவு பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. இந்தப் பிரிவு மீண்டும் பதவியிலிருத்தப்பட்ட ஜோமா சிஸனின் தலைமையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அவர் "ட்ரொட்ஸ்கிசவாதி" என இந்த ஸ்ராலினிச தலைவரை (கோர்பச்சேவை) அண்மையில் தான் புகழ்ந்ததை புதைத்துவிட்டு தனது எதிரிகளை "கோர்பச்சேவ்வாதிகள்" என்று கண்டித்தார்.

லாக்மன் 1991இல் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து பக்லூரன் என் மங்ககவாங் பிலிப்பினோ (BMP) மற்றும் அரசியல் கட்சியான சன்லகாஸ் ஆகியவற்றை நிறுவினார். நகர்ப்புற தொழிலாள வர்க்கத்துடனான லாக்மனின் அரசியல் உறவுகள் மற்றும் சிஸனினதும் அவரது அமைப்பினதும் நீடித்த மக்கள் போராட்டத்திற்கு அவர் வெளிப்படுத்திய எதிர்ப்பின் விளைவாக, அவரது முன்னோக்கு நீண்டகாலமாக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிசத்திற்கு எதிராக ஒரு மரபுவழி அல்லது உண்மையான மார்க்சிச கருத்தாக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. லாக்மன் துல்லியமாக எதற்காக வாதிட்டார்?

ஸ்ராலினிசத்தின் ஒரு மாறுபட்ட வடிவம்

லாக்மனின் மிக முக்கியமான எழுத்துக்கள் அவரது 1994 எதிர்-ஆய்வறிக்கைகள் ஆகும். இது சிஸனின் அரசியல் தளத்தையும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும் விமர்சிக்கும் மூன்று ஆவணங்களின் தொகுப்பாகும். இந்த ஆவணங்களில், லாக்மன் தன்னை ஒரு "லெனினிஸ்ட்" என்று காட்டிக் கொண்டு, மேலும் லெனினின் எழுத்துக்களிலிருந்து பெறப்பட்ட பத்திகளை, அவற்றின் வரலாற்றுச் சூழல் அல்லது லெனினின் சிந்தனையின் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிடாமல், சிஸனை மறுப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தினார்.

1960 களில் சிஸன் தனது சொந்த ஸ்ராலினிச போட்டியாளர்களை அணுகிய அதே வழியில், லாக்மன் சிஸனையும் அவரது அரசியலையும் ஸ்ராலினிசத்தின் பிரதிநிதிகளாக இல்லாமல் இயக்கத்தின் பெரும் தவறான வழிகாட்டிகளாக அணுகினார். அவரது அனைத்து விமர்சனங்களுக்கு மத்தியிலும், லாக்மன் ஸ்ராலினிசத்தின் முக்கிய கொள்கைகளை சிஸனுடன் பகிர்ந்து கொண்டார். இந்த திட்டத்தை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பதில்தான் அவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

பெருநகர மணிலாவின் தொழிலாள வர்க்கத்துடன் அவரை நேரடியாக தொடர்பு கொள்ளும் அரசியல் பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருந்த லாக்மன், இந்த வர்க்கத்தின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு மூலோபாயத்தை விரிவுபடுத்தவும், ஸ்ராலினிச முதலாம் கட்டத்திற்குப் பின்னால் அணிதிரட்டவும், தேசிய முதலாளித்துவத்துடனான அதன் தேவையான கூட்டணியை விரிவுபடுத்தவும் முயன்றார்.

அவரது விமர்சனங்கள், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை அதன் ஸ்ராலினிசத்தின் மாவோயிச ஒரு மாறுபாட்ட வடிவத்திலிருந்து திருப்புவதற்கான ஒரு முயற்சியாகும் என்பதை லாக்மனே மறுத்திருந்தால் கூட: நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்ட ஒரு கட்சி மற்றும் சோசலிசத்தைப் பற்றி வெளிப்படையான குறிப்புகளைக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்துடன் இருந்தாலும் இரண்டு கட்டப் புரட்சி மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒரு கூட்டணி என்பது சோவியத் ஸ்ராலினிச முன்னோக்கை நோக்கி திரும்புவதாகும்.

லெனினின் 1899 ஆம் ஆண்டின் படைப்பான ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்பதை காட்டி, லாக்மன் பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் அரை நிலப்பிரபுத்துவமானது என்ற சிஸனின் வாதத்தைத் தாக்கினார். பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் எவ்வளவு உருத்திரிந்திருந்தாலும் ஒரு முதலாளித்துவ பொருளாதாரமாகும். இந்தக் காரணத்தினாலேயே, நீடித்த மக்கள் போராட்டத்தின் மூலோபாயமும், கிராமப்புறத்தினையும் விவசாயிகளையும் நோக்கிய அதன் திசையமைவு அடிப்படையில் தவறானது என்று அவர் வாதிட்டார்.

தனது மூன்று ஆவணங்களில் ஒன்றான மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான முன்னோக்கு: வர்க்க நிலைப்பாடு எதிர் மக்கள் நிலைப்பாடு (PPDR: Class Line vs.Mass Line), என்பதில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முன்னோக்கை வெளிப்படுத்தாததற்காக சிஸனின் வேலைத்திட்டத்தை விமர்சித்தார். புரட்சியின் இரண்டாம் கட்டமாகக் கூறப்படும் சோசலிசத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இந்த வழியில் மட்டுமே தேசிய ஜனநாயக போராட்டம் என்று அழைக்கப்படுவதற்கு தொழிலாளர்களை வெல்ல முடியும் என்றார்.

"மக்கள் புரட்சியில் சேருவது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் சொந்தப் புரட்சியான சோசலிசப் புரட்சியில் ஒரு தலைமை பங்கை வகிப்பது பற்றியும் கூட அவர் பேசாதபோது, தொழிலாள வர்க்கத்தை சிஸன் எவ்வாறு கிளர்ந்தெழச்செய்ய விரும்புகிறார். அவர் பேசுவது எல்லாம் மக்கள் புரட்சியை!" பற்றியே என்று அவர் எழுதினார்.

இவ்வாறாகவே, சிஸன் ஒருபோதும் முதலாளித்துவத்தின் தீமைகளை கண்டிக்கவில்லை, ஆனால் நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை மட்டுமே கண்டித்தார் என்று லாக்மன் விமர்சித்தார். கட்சி முதலாளித்துவ சுரண்டலைக் கண்டிக்கவில்லை என்றால், அது தொழிலாளர்களின் ஆதரவைப் பெறாது என்று அவர் கூறினார்.

லாக்மனை தாக்கி: "அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தால் மக்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்தி, சுரண்டப்படுகின்ற நிலைமைகளின் கீழ் சோசலிசமே உடனடி குறிக்கோள் என்று வலியுறுத்துவது நேர்மையற்றது, வாய்வீச்சு மற்றும் கற்பனாவாதமானது" என சிஸன் எழுதினார்.

மிகவும் வெளிப்படையான பதிலில், லாக்மன் உரக்கச்சத்தமிட்டார்: "ஆனால் யார் வலியுறுத்துகிறார்கள்?" நிச்சயமாக லாக்மன் இல்லை. சிஸனைப் போலவே, அவர் புரட்சியின் பணிகள் இன்னும் சோசலிசமாக இல்லை என்று தொழிலாளர்களிடம் கூறினார். ஆனால் முதலாளித்துவத்தை கண்டனம் செய்வதன் மூலமும், எதிர்கால இலக்காக சோசலிசத்தின் வாக்குறுதியை அவர்கள் முன் தொங்கவிடுவதன் மூலமும் அவர்களின் ஆதரவைப் பெற முயன்றார்.

புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியினருடன் கூட்டணி அவசியம் என்று லாக்மனும் சிஸனுடன் ஒப்புக் கொண்டார். “உண்மை, ஜனநாயகப் புரட்சியின் தன்மை என்னவென்றால், அது ‘முழு மக்களின்’ போராட்டமாகும்” என அவர் எழுதினார்.

தனது இரண்டாவது ஆவணமான, “பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் [Philippine Society and Revolution – PSR]: நீடித்த மக்கள் போராட்டத்திற்கான அரை நிலப்பிரபுத்துவ சான்றாக,” என்பதில் லாக்மன் பின்வருமாறு வற்புறுத்தினார்: "பிலிப்பைன்ஸ் சமூகத்தின் சமூக-பொருளாதார பரிணாம வளர்ச்சியில் முதலாளித்துவ அடிப்படை பொருளாதார நிகழ்ச்சிப்போக்கை இன்னும் வலுவாக வலியுறுத்திய பின்னர், ஒரு மக்களின் ஜனநாயகப் புரட்சியின் தேவை இனிமேல் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, ஒரு சோசலிசப் புரட்சி உடனடி வரலாற்று பணியாக முன்மொழியப்பட்டதா? அந்த மாதிரி எதுவும் இல்லை”.

1994 ஆம் ஆண்டின் எதிர்-ஆய்வறிக்கையில், “PPW [நீடித்த மக்கள் போராட்டம் - Protracted People’s War]: தவறான வகையின் ஒரு புதிய வகை புரட்சி” என்ற தனது இறுதி ஆவணத்தில், லாக்மன், ஸ்ராலினிச இரண்டு கட்ட தத்துவத்தை நிலைநிறுத்த மிகவும் உறுதியாக இருந்தார். இந்த இரண்டு கட்டங்களை இணைத்ததாகக் கூறி சிஸனை தாக்கினார். சிஸனும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏமாற்றப்படக்கூடியதாக இருந்தன. அவர்கள் தேசிய ஜனநாயகத்தின் பதாகையின் கீழ் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் சோசலிச கட்டத்தை உடனடியாக செயல்படுத்த இரகசியமாக இதைப் பயன்படுத்த நினைத்தார்கள். ஒரு சோசலிசப் புரட்சி சாத்தியப்படுவதற்கு முன்னர் முதலாளித்துவ வளர்ச்சியின் நீடித்த காலம் அவசியம் என்று லாக்மன் கூறினார்.

லெனினினை பற்றி லாக்மனால் காட்டப்பட்ட மேற்கோள்களில் பெரும்பாலானவை லெனினின் அரசியல் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 1899 இல் அவரது எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. லாக்மன் மற்றும் சிஸன் பகிர்ந்து கொண்ட முன்னோக்கான இரண்டு கட்ட தத்துவம் மற்றும் தேசிய முதலாளித்துவத்திற்கு ஒரு முற்போக்கான பங்கு வழங்கப்படும் இந்த வேலைத்திட்டம் பிளெக்ஹானோவ் மற்றும் மென்ஷிவிக்குகளினதாகும். ரஷ்யாவில் 1905 இல் ஒடுக்கப்பட்ட புரட்சியைப் பற்றிய தனது ஆய்வில், லெனின் பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரத்தின் முன்னோக்கை முன்வைத்தார். இந்த கட்டத்தில் லெனின் ஒரு முதல் கட்டம் அவசியம் என்று வாதிட்டாலும், முதலாளித்துவ வர்க்கம் எந்தவொரு முற்போக்கான பாத்திரத்தையும் வகிக்க முடியும் என்ற கருத்தை அவர் வெளிப்படையாக நிராகரித்தார். அது ஒரு எதிர் புரட்சிகர வர்க்கமாக மாறும் என்றார்.

லியோன் ட்ரொட்ஸ்கி முதலாளித்துவ வர்க்கம் எந்த முற்போக்கான பாத்திரத்தையும் வகிக்க முடியாது என்று லெனினுடன் ஒப்புக் கொண்டார். எவ்வாறாயினும், அதே நேரத்தில் விரிவாகக் கூறப்பட்ட தனது நிரந்தரப் புரட்சி முன்னோக்கில், புரட்சியின் தேசிய மற்றும் ஜனநாயக கடைமைகளை செய்வதில் தொழிலாள வர்க்கம் சோசலிச நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்படும் என்று வாதிட்டார். புரட்சியை முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களாக பிரிக்க முடியாது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதே கட்சியின் பணியாகும் எனக்குறிப்பிட்டார்.

லெனின் 1917 இல் ரஷ்யாவுக்கு திரும்பி தனது ஏப்ரல் ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு எந்தவொரு ஆதரவையும் நிராகரித்ததோடு, அனைத்து அதிகாரங்களையும் சோவியத்துக்களுக்கு மாற்றுமாறு அழைப்பு விடுத்தார். இது விவசாயிகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் குறிக்கிறது. ஜனநாயக சர்வாதிகாரத்திற்கான முந்தைய முன்னோக்கை லெனின் கைவிட்டார். ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கு அக்டோபர் புரட்சியின் வழிகாட்டும் கொள்கையாக மாறியது. இடைக்கால அரசாங்கத்திற்கு "விமர்சனரீதியான ஆதரவை" வழங்கிய ஸ்ராலின் மற்றும் காமனேவ் ஆகியோரை லெனின் கடுமையாக எதிர்த்தார்.

"தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான கட்சி" பற்றிய அனைத்து லாக்மனின் பேச்சுக்கும் மத்தியில், அவருடைய முன்னோக்கு லெனினினது அல்ல, மென்ஷிவிக்குகளின் முன்னோக்காகும். முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியினருடனான ஒரு கூட்டணிக்கான அவரது வெளிப்படையான அழைப்பு, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் அரசியலுக்கு அடிபணியச் செய்வதையும் அதன் அரசியல் சுயாதினத்திற்கான எந்தவொரு போராட்டத்தையும் நிராகரிப்பதையும் குறிக்கிறது. சிஸன், தனது ஆதரவு தொழிலாளர்களை ஒரு நீடித்த மக்கள் போராட்டத்தை காட்டி பாதுகாக்க முயல்கையில், லாக்மன் முதலாளித்துவத்தின் மீதான சுருக்கமான கண்டனங்கள் மற்றும் சில அரசியல் எதிர்காலத்தில் சோசலிசம் பற்றிய வானத்தில் மிதக்கும் வாக்குறுதிகள் மூலம் அவ்வாறு செய்ய முயன்றார். இருவரும் ஸ்ராலினிசவாதிகள்; அவர்களின் வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாய ரீதியானதாகவே இருந்தன.

அரசியல் பாரம்பரியம்

லாக்மனின் தலைமையில் நிறுவப்பட்ட அரசியல் கட்சியான சன்லகாஸ் (Sanlakas) தேர்தல் அரசியலில் தன்னை ஈடுபடுத்தி, 1996 இல் பிரதிநிதிகள் சபையில் ஒரு இடத்தைப் பெற்றது. சன்லகாஸ் காங்கிரஸ் பிரதிநிதியான ரெனாட்டோ மாக்டூபோ (Renato Magtubo) ஆற்றிய உரைகள் லாக்மனின் கட்சியின் வர்க்க தன்மையை வெளிப்படுத்துகின்றன. நவம்பர் 8, 1999 அன்று, மாக்டூபோ ஒரு முன்னுரிமைமிக்க உரையை நிகழ்த்தினார். அவர் கூடியிருந்த சட்டமன்றத்தில் பின்வருமாறு கூறினார்:

உங்கள் நேர்மை மற்றும் நியாயமான உணர்வுக்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்: ஒரு சாதாரண தொழிலாளியின் உழைப்புக்கு ஒரு நியாயமான ஊதியம் அல்லது நியாயமான விலை நம் நாடு தாங்க முடியாத ஒரு ஆடம்பரம் அல்ல என கருதுகின்றேன். நான் கேட்பது என்னவென்றால், சராசரி தொழிலாளிக்கு அவரது உழைப்பு சக்திக்கான மதிப்பைக் கொடுத்து, அனைத்து தொழிலாளர்களுக்கும் விலை உயர்வால் அரிக்கப்படும் அவர்களின் ஊதியத்தின் இழந்த மதிப்பை மீட்டுக் கொள்ள வேண்டும்… எனது முந்தைய முன்னுரிமைமிக்க உரைகளில் உங்களில் பலரின் உணர்ச்சிகளை நான் ஆத்திரமூட்டியுள்ளேன் என்பதை நான் அறிவேன். எனது தாழ்மையான மன்னிப்பை கோருகிறேன். ஆனால் நான் பிரார்த்தனை செய்கிறேன், வாதிடுகின்றேன்.… [ஒரு] பொருளாதாரத்தின் சிக்கலுக்கு நடுவில், ஒரு எளிய உண்மை வெளிப்படுகிறது: மகிழ்ச்சியான தொழிலாளி ஒரு கடின உழைப்பாளி. பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமூக நீதிக்கும் இதுவே முக்கியம். எங்கள் தொழிலாளர்களுக்கு ஒரு இனிய நத்தார் வாழ்த்துக்களை கொடுப்போம், அவர்கள் வரும் மில்லினியத்தில் நம் நாட்டிற்காக கடுமையாக உழைப்பார்கள். Mabuhay ang Uring Manggagawa! [தொழிலாள வர்க்கம் நீடூழி வாழ்க!] திரு சபாநாயகருக்கு நன்றி.

சன்லகாஸும் BMP யும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அதே வர்க்க ஒத்துழைப்பு அரசியலில் துல்லியமாக ஈடுபட்டனர். 2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோசப் எஸ்ட்ராடாவை (Joseph Estrada) நீக்கக் கோரி அதன் தீவிரமான வார்த்தையாடல்களுக்காக சன்லகாஸ் தேசிய முக்கியத்துவம் பெற்றது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் பல்வேறு முன்னணி அமைப்புகளுடன் சேர்ந்து, எஸ்ட்ராடாவுக்குப் பதிலாக துணை ஜனாதிபதி குளோரியா மாகப்பகல் அரோயோவுடன் (Gloria Macapagal Arroyo) இராணுவ தலைமை நடத்திய அரசியலமைப்பு சதித்திட்டத்திற்கு சன்லகாஸ் உதவிசெய்தது. அரோயோவுடனான உறவுகள் கசந்தபோது, லாக்மனின் BMP யிலிருந்து பிரிந்த பல்வேறு குழுக்களுடன் சான்லகாஸ் அனைவரும் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தில் பங்கேற்றனர். 2010 ஆம் ஆண்டில், சான்லகாஸ் அதன் எஸ்ட்ராடா எதிர்ப்பு வார்த்தையாடல்கள் அனைத்தையும் புதைத்துவிட்டு எஸ்ட்ராடாவின் ஜனாதிபதி பதவிக்கு உதவ ஓடியது. சான்லகாஸின் முன்னணி உறுப்பினர் எஸ்ட்ராடாவின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.

லாக்மனின் அரசியல் அமைப்பு பல போட்டி அரசியல் போக்குகளாகப் பிரிந்திருந்தாலும், அனைத்து பிரிவுகளும் அவரது ஸ்ராலினிச தேசியவாதம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியினருடன் நோக்குநிலை கொள்ளும் திட்டத்தை பகிர்ந்து கொண்டன. அனைவரும் லாக்மனின் நோக்குநிலையான: தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ சுரண்டல் மற்றும் சோசலிசத்தின் தேவை ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை தங்கள் முதலாளித்துவ ஒடுக்குமுறையாளர்களுடன் மீண்டும் பிணைப்பதற்கான வழிமுறையை பகிர்ந்துகொண்டனர்.

இதுதான் ஸ்ராலினிசத்தின் வேலைத்திட்டமும் அதன் அரசியல் நச்சுத்தனமும்.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் 1917 இல் ரஷ்யாவில் இருந்ததைப் போலவே பிலிப்பைன்ஸில் இன்றும் பொருத்தமாக உள்ளது. இது அங்கு தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அடித்தளமாக இருந்து, விவசாயிகளையும் நகர்ப்புற ஏழைகளையும் வழிநடத்தியது. ஸ்ராலினிசத்தின் தேசியவாத வர்க்க ஒத்துழைப்பை எதிர்க்கும் வகையில், நிரந்தரப் புரட்சி தொழிலாள வர்க்கத்தின் உண்மையான சுயாதீனத்திற்கும் அனைத்து வகையான தேசியவாதத்தையும் நிராகரிப்பதற்கும் வாதிடுகிறது.

தேசிய மற்றும் ஜனநாயக பணிகள், எல்லாவற்றிற்கும் மேலாக விவசாய பிரச்சினைக்கு தீர்வுகாண, பிலிப்பைன்ஸ் போன்ற தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியின் நாடுகளில் முதலாளித்துவ சொத்து உறவுகள் மீது தாக்குதல் தேவைப்படுகிறது. ட்ரொட்ஸ்கி வாதிட்டதுபோலவே, இந்த ஜனநாயகப் பணிகளை தீர்ப்பதற்கு முதலாளித்துவ வர்க்கம் இலாயக்கற்றது என்பதை அது கடந்த ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் நிரூபித்துள்ளது. அது நில உரிமையாளர்களிடமிருந்து பிரிந்த ஒரு தனி வர்க்கம் அல்ல. ஆனால் அதிலிருந்து தோன்றி அதனுடன் பிணைக்கப்பட்டுள்ளது; அதன் நலன்கள் ஏகாதிபத்திய ஏகபோக மூலதனத்திற்கு விரோதமானவை அல்ல, ஆனால் நிதி, உலகச் சந்தை மற்றும் உற்பத்தி விநியோக சங்கிலிகளால் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இராணுவ வலிமை மற்றும் சர்வாதிகார ஆட்சியுடன், பிலிப்பைன்ஸில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு தீவிரமான புரட்சிகர எழுச்சியையும் ஒடுக்குவார்கள். கடந்த நூறு ஆண்டுகளின் வரலாறு இதை சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளிகள், தேசிய முதலாளித்துவம் என்று அழைக்கப்படுபவை அல்ல, மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கமும் மற்றும் பிலிப்பைன்ஸ் விவசாயிகளுமாகும். பெரும்பான்மையான விவசாயிகள் ஆழ்ந்த வறிய நிலையில் உள்ளனர், ஆனால் சொத்து உரிமையை விரிவாக்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க முயல்கின்றனர். அவர்களால் ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை வரையறுக்க முடியாது. ஆனால் முதலாளித்துவத்தை அகற்றுவதன் மூலம் அவர்களின் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாள வர்க்கத்தின் தலைமையைப் பின்பற்றுவார்கள் அல்லது முதலாளித்துவ வர்க்கம் அவர்களின் சொத்து உரிமைகளைப் பாதுகாத்து விரிவுபடுத்தும் என்ற வீண் நம்பிக்கையில் அதனுடன் இணைந்திருப்பார்கள். தொழிலாள வர்க்கம் விவசாயிகளை வென்றெடுப்பது, முதலாளித்துவ நலன்களுடன் கூட்டாக கிராமப்புறங்களில் ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அல்ல, மாறாக சோசலிசத்திற்கான போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் மற்றும் கொள்ளையர்களால் கிராமப்புறங்களில் அடக்குமுறை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதால் ஆகும்.

பிலிப்பைன்ஸில் ஒரு சோசலிசப் புரட்சியின் வெற்றி, மற்றைய எந்த நாட்டையும் போலவே, ஏனைய நாடுகளிலும் புரட்சியின் விரிவாக்கத்தைப் பொறுத்தது. "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற ஸ்ராலினிச முன்னோக்கு ஒரு பிற்போக்குத்தனமான கற்பனாவாதமாகும். ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சியில் பிரபலமாக எழுதியது போல், “சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, அது சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, உலக அரங்கில் பூர்த்தியடைகிறது.” பிலிப்பைன்ஸில் ஒரு புரட்சிகர இயக்கத்தை உருவாக்க, தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளை நோக்கி திரும்ப வேண்டும். இது ஸ்ராலினிச வாய்வீச்சுகளின் எப்போதும் உள்ள சர்வதேச ஒற்றுமையைப் பற்றிய வெற்று வார்த்தைஜாலம் அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் சர்வதேச முன்னோக்கு என்பது, பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் பணிகளை வகுப்பதற்கான அடிப்படைக் கொள்கையாகும்.

ஒரு சர்வதேசிய, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க முடியும். இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் (ICFI) முன்னோக்காகும். உண்மையான அரசியல் மாற்றீட்டை தேடும் அனைவரும் இந்த வேலைத்திட்டத்தைப் படித்து, உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்புகொண்டு, பிலிப்பைன்ஸில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஒரு பகுதியை உருவாக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க முன்வரவேண்டும்.

Loading