இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
முள்ளிவாய்க்காலில் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட நினைவுத்தூபி வெள்ளிக்கிழமை இரவு இராணுவத்தால் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குனராஜாவினால், பல்கலைக்கழக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானம் இருப்பதாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து, இராணுவம் இந்த நினைவுத்தூபியை அழித்துள்ளது.
நினைவுத்தூபியை அகற்ற மறுத்தமைக்காக முன்னாள் துணைவேந்தர் ஆர். விக்னேஸ்வரன் அகற்றப்பட்டு, கடந்தாண்டு ஆகஸ்டில் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவினால் நியாமிக்கப்பட்டுள்ள தற்போதைய துணைவேந்தர், இராஜபக்ஷ அரசாங்கத்தின் முகவர் ஆவார்.
நினைவுத்தூபி இடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்த யாழ்ப்பாணம் கோப்பாய் முகாமில் உள்ள, இராணுவத்தின் 512 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, நினைவுத்தூபியை பார்வையிட்டதாகவும், துணைவேந்தர் இராணுவம் மற்றும் பொலிசாருடன் சேர்ந்து இந்த இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் நினைவுத்தூபியை கட்டுவதைத் தடுக்க முயன்றனர், ஆனால் மாணவர்களின் கடுமையான எதிர்ப்பால் பின்வாங்கினர்.
தமிழர்களுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவுக்கு வந்த 2009 மே மாதம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எதிராக வன்னியில் முன்னெடுக்கப்பட்ட இரத்தக்களரி இராணுவத் தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில், 2019 மே மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தனது தந்தையை பலிகொடுத்த ஒரு பல்கலைக்கழக மாணவரால் இந்த நினைவுத் தூபி கட்டப்பட்டது.
நினைவுத்தூபி இடிக்கப்படுவதை அறிந்த மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் பல்கலைக்கழக பிரதேசத்தில் குவிந்தனர். ஆனால் பல்கலைக்கழக அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் எவரையும் வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழக வாயில் அருகே அமர்ந்து சத்தியாகிரகத்தை தொடங்கினர்.
ஆயுதமேந்திய ஏராளமான அதிரடிப் படையினரும் இராணுவ சிப்பாய்களும் பல்கலைக்கழக வளாகத்திலும் அதைச் சுற்றியும் நிறுத்தப்பட்டுள்ளனர். சத்தியாகிரகத்தில் பங்குகொள்ள வந்த யாழ்ப்பாண மேயர் விஸ்வலிங்கம் மனிவண்ணனை வெளியேற்றுவதற்கு யாழ்ப்பாண பொலிசார் முயன்றனர். பொலிசும் இராணுவமும் சூழ கூடியிருந்த மாணவர்களையும் மக்களையும் அசிங்கமான வார்த்தைகளில் திட்டி விரட்ட முயன்றதாக, ஊடக செய்திகள் கூறின.
அண்மையில் மேயராக ஆன இராஜபக்ஷ அரசாங்கத்தின் முகவரான மனிவண்ணன், தனது மக்களுக்கு போலி அனுதாபத்தைக் காட்ட அங்கு சென்றுள்ளார்.
துணைவேந்தர், எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவர்கள் "தாங்களாக போகாவிட்டால் கையாளுவோம்" என ஒரு அச்சுறுத்தும் கருத்தை வெளியிட்டுள்ளார். "இது ஒரு சட்டவிரோத கட்டுமானம். இது எப்படியாவது அகற்றப்பட வேண்டும். சின்ன சின்ன நெருடல் இருக்கின்றது. அதை நாங்கள் கையாளுவோம், அவர்கள் அப்படி (உள்ளே) வருவது சட்டவிரோதமானது. அவர்கள் வெளியேறாவிட்டால் கையாளுவோம்," என அவர் அறிவித்துள்ளார்.
பொலிசார் ஏற்கனவே இரண்டு மாணவர்களை கைது செய்துள்ளதுடன், நினைவுத்தூபியை இடிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்கள் மீதான கொடூரமான பொலிஸ் பாய்ச்சல், மாணவர்கள் மீது அரச ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதற்கான முன் எச்சரிக்கை ஆகும்.
இராணுவத்தை அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஆத்திரமூட்டல், இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இடையே அதிகரித்து வரும் கோபத்திற்கும் எதிர்ப்பிற்கும் மத்தியில், தொழிலாள வர்க்கத்தை இனரீதியாக பிளவுபடுத்தும் நோக்கத்துடன், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பிளவுகளைத் தூண்டிவிடும் நடவடிக்கை ஆகும்.
அரசாங்கத்தின் இந்த ஆத்திரமூட்டும் செயல் தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கும் கடுமையான எச்சரிக்கையாவதோடு, தொழிலாள வர்க்கமும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரும் இதை கண்டனம் செய்ய வேண்டும்.
இதற்கிடையில், சிங்கள இராணுவம் மற்றும் பொலிசாரால் இந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக கூறி இனப் பதட்டங்களுக்கு எண்ணெய் வார்ப்பதற்கு தமிழ்நெட் இணையம் முயற்சித்துள்ளது. இந்த பேரழிவை கண்டிக்கத் தவறிய தெற்கில் உள்ள அமைப்புகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் "குறித்துக்கொள்ள வேண்டும்" என்றும் அது குறிப்பிட்டது. தமிழ்நெட் இணையத்தின் பிற்போக்கு முயற்சி, இராணுவத்தின் நடவடிக்கைகளை சிங்கள மக்களின் செயற்பாடுகளாக முத்திரை குத்துவதே ஆகும். இராணுவமோ அல்லது பொலிசோ, அது சிங்களவர்களாக இருந்தாலும் சரி தமிழர்களாக இருந்தாலும் சரி, அவை முதலாளித்துவ அரசின் கருவிகளாகும்.
போரின் இறுதி வாரங்களில், சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். புலி சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் காணி, வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரங்கள் உட்பட பல அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இராணுவம் ஆக்கிரமிப்பை தொடர்வதோடு அவர்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்கி வருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கு தமிழ் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் கிடையாது. இந்திய முதலாளித்துவமும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளும் சீனாவுக்கு எதிராக மேற்கொள்ளும் போர் தயாரிப்புகளை ஆதரிக்கும் அதே வேளை, கொழும்பில் உள்ள சிங்கள முதலாளித்துவத்துடன் உடன்பாட்டில் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார சலுகைகளை தக்கவைத்துக்கொள்வதில் மட்டுமே அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இந்த இனவாத ஆத்திரமூட்டலை தொழிலாள வர்க்கம் கடுமையாக எதிர்ப்பதோடு இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் சோசலிச ஐக்கியத்தை கட்டியெழுப்புவதன் மூலம், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
