முன்னோக்கு

பைடெனின் பதவியேற்பு உரை: யதார்த்தத்தை மூடிமறைக்க அற்பமான வெற்று கருத்துக்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி ஜோசப் பைடெனின் நேற்றைய பதவியேற்பு உரை எல்லாவற்றுக்கும் மேலாக அதன் அற்பத்தனத்திற்காக முக்கியத்துவம் பெறுகிறது. ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் முன்பில்லாத ஓர் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பைடென் வழங்கிய கருத்துக்களில் தேய்ந்து போன, ஒழுங்கற்ற ஒன்றுக்கொன்று முரணான, வெற்று கருத்துக்கள் நிரம்பி இருந்தன.

பைடென் ஒரு சோசலிச உரையை வழங்குவாரென நிச்சயமாக ஒருவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய நாட்டின் "முப்படைகளது தலைமைத் தளபதி" பதவியை ஏற்றிருக்கும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி. இருப்பினும், அமெரிக்க அரசியல் பாரம்பரியத்தில், பதவியேற்கும் ஜனாதிபதியின் பதவியேற்பு தின உரை அரசியல் சூழ்நிலை மற்றும் வரவிருக்கும் நிர்வாகத்தின் கொள்கையை மீதான ஏதோவொரு வித வடிவத்தைப் பேசுவதற்கான ஒரு தருணமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

Joe Biden is sworn in as the 46th president of the United States by Chief Justice John Roberts as Jill Biden holds the Bible during the 59th Presidential Inauguration at the U.S. Capitol in Washington, Wednesday, Jan. 20, 2021, as their children Ashley and Hunter watch.(AP Photo/Andrew Harnik, Pool)

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, இந்த சம்பிரதாயத்தின் உள்ளடக்கம் அதிகரித்தளவில் வெறுமையாக்கப்பட்டுள்ளது. பைடென் இந்த போக்கை நேற்று ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றார் — அல்லது, இன்னும் சொல்லப் போனால், குறைந்த மட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.

காலவரிசைப்படி ஒருசில பந்திகளைக் கவனிப்போம்:

இன்று நாம் ஒரு வேட்பாளரின் வெற்றியை அல்ல, மாறாக ஒரு விளைவை, ஜனநாயகத்தின் ஒரு விளைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மக்கள், மக்களின் விருப்பம், செவிமடுக்கப்பட்டுள்ளது, மக்களின் விருப்பம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது என்பதை மீண்டும் நாம் தெரிந்து கொண்டோம். ஜனநாயகம் சிக்கலானது தான். ஆனால் இந்த மணித்துளியில், என் நண்பர்களே: ஜனநாயகம் மேலோங்கி உள்ளது! ஆகவே இப்போது, இந்த வெறுமையான இடத்தில், ஒரு சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டிடத்தின் அடித்தளத்தையே அசைக்க முயன்ற இந்த இடத்தில், நாம், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிக காலமாக நாம் மேற்கொண்டு வரும் அமைதியான அதிகார பரிமாற்றத்தை நடத்துவதற்காக, இறைவனின் பாதத்தில், பிரிக்க முடியாதவாறு, ஒரு தேசமாக ஒன்றுகூடியுள்ளோம்.

இங்கே, பைடென், சாத்தியமானளவுக்கு மிகவும் சுற்றி வளைத்து, அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தூக்கியெறியப்படுவதற்கு நெருக்கத்தில் வந்திருந்தது என்பதை ஒப்புக் கொண்டார். தேர்தல் முடிவுகளை மறுத்தளித்து அரசியலமைப்பைத் தூக்கியெறிய ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ட்ரம்பின் பெயரை, பைடென் அவரது ஒட்டுமொத்த உரையில் ஒரேயொரு முறை கூட குறிப்பிடவில்லை. பைடெனின் தேர்வுக் குழு வெற்றிக்குச் சான்றளிப்பதை முடக்கும் நோக்கில், அந்த ஜனாதிபதி தூண்டிவிட்ட, பாசிசவாதிகளின் ஒரு கும்பல், அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை நொறுக்குவதில் அது உச்சத்தை அடைந்திருந்தது.

இந்த கிளர்ச்சிக்கு யார் பொறுப்பு, அதன் நோக்கங்கள் என்ன, என்ன படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும்? இந்த கேள்விகளுக்குப் பைடென் பதிலளிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்த கேள்விகளையே கூட அவர் முன்வைக்கவில்லை.

பைடென் அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியை சிதைக்கப்பட்ட "வன்முறை" நடவடிக்கையாக மாற்றினார். பைடெனைப் பொறுத்த வரையில், அது நாடாளுமன்ற கட்டிடத்தை "வன்முறை" தாக்கியது. ஆனால் நாடாளுமன்ற கட்டிடத்தை "வன்முறை" தாக்கவில்லை, அந்த நபர்கள் தாக்கினார், அவர்களுக்கு மற்றவர்களின் ஆதரவும் அரசியல் பின்புலமும் இருந்தது.

சொல்லப்போனால், ட்ரம்பின் கீழ் செனட் சபையின் பெரும்பான்மை அணி தலைவர் செனட்டர் மிட்ச் மெக்கொன்னல் மற்றும் குடியரசுக் கட்சியின் ஏனைய உயர்மட்ட தலைவர்கள் உள்ளடங்கலாக அந்த பதவியேற்பு விழாவில் "ஒன்றுகூடி வந்திருந்தவர்களில்" பலர், தேர்தல் முடிவு சந்தேகத்திற்குரியதாக இருந்தது, மோசடி செய்யப்பட்டிருந்தது என்றும் கூட, பொய்யை ஊக்குவித்து அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அரசியல் நியாயப்பாடு வழங்கினர். பைடெனின் "சக குடியரசுக் கட்சி நண்பர்கள்" ஆன இவர்கள், அவரின் மரியாதைக்குரிய விருந்தினர்களில் உள்ளடங்கி இருந்தனர்.

நம் தேசத்தின் வரலாற்றில் ஒரு சிலர் தான் இப்போது நாம் சந்தித்திருக்கும் இந்த காலத்தை விட மிகவும் சவாலான அல்லது சிக்கலான காலகட்டத்தைக் கண்டுள்ளனர். ஒரு நூற்றாண்டில் ஒருமுறை வரும் வைரஸ் மவுனமாக நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கிறது. அது இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா எத்தனை உயிர்களை இழந்ததோ ஏறக்குறைய அந்தளவுக்கு ஒரே ஆண்டில் பல உயிர்களைப் பறித்துள்ளது. மில்லியன் கணக்கான வேலைகள் பறி போயிள்ளன, நூறாயிரக் கணக்கான வணிகங்கள் மூடப்பட்டுவிட்டன…

இதேபோல, பைடென், இந்த பெருந்தொற்றை, ஒட்டுமொத்தமாக நாட்டை மவுனமாக சூறையாடிக் கொண்டிருக்கும் ஒரு வைரஸ் என்ற வகையில் சித்தரிக்கிறார். ஆனால் அமெரிக்கா அதன் பரவலைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்ற இந்தளவுக்குப் பேரழிவுகரமாக திராணியற்று இருப்பது எப்படி? இந்த நோயைக் கட்டுப்படுத்துவதைத் தடுத்த கொள்கைகள் எவை, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பானவர்கள் யார்? இத்தகைய கேள்விகளுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக, பைடென், அவசரகதியில் முன்னேற்பாடின்றி சுருக்கமாக மவுனம் அனுசரித்ததைத் தவிர வேறெதையும் குறிப்பிடவில்லை.

இந்த பேரிடருக்குப் பொறுப்பாகும் பரந்த சமூக சக்திகளை அவர் குறிப்பிடவில்லை என்பதைக் கூட விட்டுவிடுவோம், ஆனால் முந்தைய நிர்வாகம் பொறுப்பாகிறது என்று கூட பைடென் அறிவுறுத்தவில்லை. இந்நோய் பரவல் மீது எந்தவொரு கட்டுப்பாட்டையும் ஏற்கக் கூடாது என்பதே தேர்தல் முடிவை மாற்றுவதற்காக அணித்திரட்டப்பட்ட பாசிசவாதிகளின் பிரதான கோரிக்கையாக இருந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை. நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கன்னைகளால் ஊக்குவிக்கப்பட்டு நிதி வழங்கப் பெற்ற இதே சக்திகள் தான், வரம்புக்குட்பட்ட சமூக அடைப்பு நடவடிக்கைகளைத் திணித்ததற்காக மிச்சிகன் மற்றும் பிற மாநிலங்களின் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களைக் கடத்தி கொலை செய்ய முயன்றன என்ற உண்மையையும் அவர் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை.

இத்தகைய சவால்களைக் கடந்து செல்ல, அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பாதுகாத்து ஆன்மாவை மீட்டமைக்க, வார்த்தைகளை விட கூடுதலானது அவசியப்படுகிறது. அது ஒற்றுமை, ஒரு ஜனநாயகத்தில் எல்லா விசயங்களிலும் மிகவும் எட்ட முடியாமல் இருக்கும் ஒன்று அவசியப்படுகிறது, ஒற்றுமை. மற்றொரு ஜனவரியில், 1863 இன் புத்தாண்டு தினத்தில், ஆப்ரகாம் லிங்கன் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அவர் காகிதத்தில் பேனாவை வைத்த போது, அவர் கூறியதை, நான் மேற்கோளிடுகிறேன், “வரலாற்றில் எப்போதாவது என் பெயர் அவமதிப்புக்கு உள்ளானால், அது இந்த சட்டத்திற்காக தான் இருக்கும், என் ஒட்டுமொத்த ஆன்மாவும் இதில் உள்ளது, என்றார்.”

இப்போது நாம் பைடெனினது ஒட்டுமொத்த உரையின் வெற்றுத்தனமான கருத்துக்களின் மத்திய பகுதியை, “ஒற்றுமை", எட்டியுள்ளோம். யார் ஒன்றுபட்டு வருகிறார்? என்ன அடிப்படையில் மற்றும் என்ன கொள்கையின் அடிப்படையில்? இந்த பெருந்தொற்று உட்பட "இத்தகைய சவால்களைக் கடந்து செல்ல,” கடந்த ஆண்டு நெடுகிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு கொள்கையிலிருந்து தர்க்கரீதியில் ஒரு வித்தியாசமான கொள்கை நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. இதற்கு "ஒற்றுமை" இல்லை, மோதல் வேண்டியிருக்கிறது. இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பானவர்கள் எதிர்க்கப்பட வேண்டும் மற்றும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

லிங்கன் மீதான குறிப்பைப் பொறுத்த வரையில், அது முட்டாள்தனம். லிங்கன், ஆயுத பலம் மூலமாக நடந்த தெற்கு அடிமையாட்சி முறையின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கான காலத்தால் அழியா போராட்டத்தின் பாகமாக, அந்த சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அடிமை முறையை ஒழிப்பது ஒற்றுமை மூலமாக எட்டப்படவில்லை, மாறாக ஓர் இரத்தக்களரியான உள்நாட்டு போர் மூலமாக அடையப்பட்டது.

இன்று, இந்த ஜனவரி நாளில், என் ஒட்டுமொத்த ஆன்மாவும், அமெரிக்கா ஒருங்கிணைத்துக் கொண்டு வருவதில், நம் மக்களை ஒன்றுபடுத்துவதில், நம் தேசத்தை ஒன்றுபடுத்துவதில் உள்ளது. இந்த காரணத்திற்காக என்னுடன் இணையுமாறு நான் ஒவ்வொரு அமெரிக்கரையும் கேட்டுக் கொள்கிறேன். கோபம், சீற்றம், வெறுப்பு, தீவிரவாதம், சட்டஒழுங்கு சீர்கேடு, வன்முறை, நோய், வேலையின்மை மற்றும் நம்பிக்கையின்மை என நாம் முகங்கொடுக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதில் ஒன்றிணைவோம்.

நாடாளுமன்ற கட்டிடத்தை அடித்து நொறுக்கிய "வன்முறை" விவகாரத்தில், பைடென் இங்கே எல்லா பிரச்சினைகளையும் சமூக உள்ளடக்கத்தைக் கைவிட்ட கருத்துக்களாக குறைக்கிறார். ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று குழப்பப்படுகிறது — "வெறுப்பு,” இது அகநிலையான உணர்வு, இது ஒரு சமூக-பொருளாதார நிலைமையான "வேலையின்மை" உடன், ஒரு குறிப்பிட்ட உயிரியியல் இயல்நிகழ்வான "நோய்,” உடனும் குழப்பப்படுகிறது. இந்த "எதிரிகள்" எதுவும் எந்தவொரு தனிநபருடனோ அல்லது சமூக-பொருளாதார நிறுவனங்கள் மற்றும் நலன்களுடனோ இணைந்தவை இல்லை. “தீவிரவாதம்" எங்கிருந்து வருகிறது? மக்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? வேலையின்மைக்கு யார், எது பொறுப்பு?

ஒவ்வொன்றும் அரூவமான சக்திகளது இயக்கமாக, மாய அரங்கில் நடப்பதைப் போல கூறப்படுகிறது. ஏனென்றால் யாருமே பொறுப்பில்லை, ஏனென்றால் "எதிரிகள்" விசயத்தில் எந்த சமூக உள்ளடக்கமும் இல்லை, அவர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஒவ்வொருவரையும் ஒன்றுபடுத்த முடியுமென கூறப்படுகிறது. பிரச்சினைகள் உள்ளடக்கம் இல்லாமல் வெறும் கருத்துக்களாக இருப்பதால், அந்த தீர்வுக்குக் கொள்கையில் எந்த மாற்றமும் தேவைப்படவில்லை. மொத்தத்தில் தேவைப்படுவதெல்லாம் "ஒற்றுமை" தான்.

வரலாறு, நம்பிக்கை, மற்றும் பகுத்தறிவு வழி காட்டுகிறது, ஒற்றுமைக்கான வழி. நாம் ஒருவரையொருவர் எதிரிகளாக அல்ல, மாறாக அண்டை அயலாராக பார்க்க முடியும். நாம் ஒருவரையொருவர் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் நடத்த முடியும். கூச்சல்களை நிறுத்தி விட்டு, சூட்டைக் குறைத்து, இணைந்த சக்திகளாக நம்மால் இணைய முடியும்.

“ஒற்றுமைக்கான வழியை" காண்பதற்கான அவர் முனைவில், பைடென் ஒன்றோடொன்று முரண்பட்ட உலகின் இரண்டு அணுகுமுறைகளை, நம்பிக்கை மற்றும் பகுத்தறிவு இரண்டையும், ஒற்றுமை ஆக்கி விடுகிறார். முந்தையது கேள்விக்கிடமின்றி வறட்டுத் தத்துவத்தை ஏற்றுக் கொள்வதை அடிப்படையாக கொண்டது, பிந்தையது விஞ்ஞானபூர்வ விசாரணை ஆகும். எது எப்படியிருந்தாலும், “வரலாறையும்" சேர்த்து, அவற்றின் உதவியுடன், ஒவ்வொருவரும், பில்லியனரும் ஏழையும், வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்களும் வேலைவாய்ப்பற்றவர்களும் சமாதானமாக ஒத்திசைவாக வாழ்வார்கள்.

பரவி வரும் தொற்றுநோய்க்கு மத்தியிலும் தொடர்ந்து வேலை செய்து வரும் 1,400 Hunts Point பண்டகசாலை தொழிலாளர்கள், அவர்களின் கூலிகளில் ஒரு மணி நேரத்திற்கு 1 டாலர் உயர்த்துவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ள ஒரு நிறுவனத்திற்கு எதிராக நின்று, இப்போது நியூ யோர்க் நகரில் ஒரு வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த விசயம் எப்படி பைடெனின் "ஒற்றுமைக்கான வழி" ஆக ஆகும்?

அந்த உரையின் இந்த பத்தியிலிருந்தும் ஏனைய பத்திகளிலிருந்தும் என்ன தெரிய வருகிறதென்றால் பைடெனின் கருத்துக்கள் அமெரிக்க மக்களுக்குக் கூறப்படவில்லை. அவர் இந்த விழாவில் அவருடன் இருந்த, குறிப்பாக, குடியரசுக் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். செனட் சபையில் ஐம்பதாண்டு கால அனுபவம் கொண்ட அவர் இந்த பிரபஞ்சத்தில் தான் வாழ்கிறார். ஆளும் வர்க்கம் பல தொடர்ச்சியான பேரழிவுகரமான பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதால், அனைத்திற்கும் மேலாக, அடிமட்டத்திலிருந்து சமூக கோபம் மற்றும் எதிர்ப்பை எதிர்கொண்டிருப்பதால், அவர் விரும்பும் "ஒற்றுமை" என்பது, ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் மற்றும் அரசின் ஒற்றுமையாகும்.

இறுதியாக, பைடென் பின்வருமாறு அவர் கருத்துக்களை நிறைவு செய்கிறார்:

என் சக அமெரிக்கர்களே, கடவுளின் முன்னால் உங்கள் அனைவரின் முன்னால் புனிதமான பதவிப்பிரமாணத்துடன், இந்நாளை நான் எங்கே தொடங்கினேனோ அங்கேயே முடிக்கிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். நான் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன். நான் நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன். நான் அமெரிக்காவைப் பாதுகாப்பேன். அனைவருக்கும், உங்கள் அனைவருக்கும் என் சேவையை வழங்குவேன், அதிகாரத்திலிருந்து அல்ல வாய்ப்புகளில் இருந்து, தனிப்பட்ட காயங்களில் இருந்து அல்ல மாறாக பொதுமக்கள் நன்மைக்காக உங்கள் சேவையில் என்னால் ஆன அனைத்தும் செய்வேன். மேலும் நாம் ஒருங்கிணைந்து, பயத்தின் அல்ல நம்பிக்கையின் ஒரு அமெரிக்க அத்தியாயத்தை எழுதுவோம். வேற்றுமையினது அல்ல, ஒற்றுமையினது. இருளினது அல்ல, ஒளியினது. கண்ணியம் மற்றும் மரியாதையின், அன்பு மற்றும் அரவணைப்பின், பெருந்தன்மையின் மற்றும் நல்லெண்ணத்தின் ஓர் அத்தியாயம்.

இந்த உரையின் முடிவுரை பைடெனின் வெற்று கருத்துக்கள் மொத்தத்தையும் இறுதியாக பிரமாண்டமாக ஒருங்கிணைத்து கொண்டு வருகிறது, இவை மனிச்சிய மத போராட்டத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. “நம்பிக்கை,” “ஒளி,” அனைத்திற்கும் மேலாக, “ஒற்றுமை,” மூலமாக, தீமையைக் கொன்று நன்மை மற்றும் அன்பை வெற்றிக் கொள்வதாக இருக்கும்.

பைடென் கருத்துக்களில் உள்ள வறுமை வெறுமனே ஒரு புத்திஜீவித தோல்வி அல்ல. கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் குறித்த எந்தவொரு குறிப்பும் சந்தைகளில் விற்றுத்தள்ளலைத் தூண்டும் என்பது அவருக்கு வெகு நன்றாகவே தெரியும். அதைப் போலவே, சந்தைகள் அவர் உரையின் போது அதிகரித்தன. அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் மூளைகளில், அந்த உரை மிகப்பெரியளவில் வெற்றிகரமாக இருந்தது என்று முடிவு செய்வதில் அது தான் பிரதான காரணியாகும். அது தொடங்கிய போதிருந்ததை விட அது நிறைவடைந்த போது அவர்கள் சற்றே பணக்காரர்களாக ஆகிவிட்டார்.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவில் பாசிசவாதத்தின் மேலெழுச்சிக்குப் பின்னால் உள்ள அரசியல் மற்றும் சமூக சக்திகள் மற்றும் பேரழிவுகரமான இந்த பெருந்தொற்று பரவலை உண்டாக்கிய இருகட்சிகளினது ஒருமனதான கொள்கைகள் உள்ளடங்கலாக —யதார்த்தத்தின் மீதான எந்தவொரு தீவிர ஆய்வும், ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கமைப்பையே அச்சுறுத்தும் ஒரு சமூக மற்றும் அரசியல் வெடிப்பின் ஆபத்தைக் கொண்டுள்ளது என்பது ஆளும் வர்க்கத்தின், குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் அரசியல் பிரதிநிதிகளுக்குத் மிகத் துல்லியமாக தெரியும்.

இறுதியாக, “ஒற்றுமைக்கான" பைடெனின் முறையீடு, பாரியளவில் சமூக பிளவை மூடிமறைப்பதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாகும். இந்த பிளவு குடியரசுக் கட்சியினரிடம் இருந்து ஜனநாயகக் கட்சியினரைப் பிரித்து விடவில்லை, அவர்களுக்குள் என்ன தான் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர்கள் இரு தரப்பினருமே ஒரே செல்வந்த தட்டுக்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அது ஒருபுறம் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கும், மறுபுறம் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலுள்ள சீர் செய்ய முடியாத பிளவாகும். இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துவிடுமோ என்ற பயம் தான் பைடெனின் வெற்றுக் கருத்துக்களை முன்நகர்த்துகிறது.

Loading