பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி ஸக்கர்பேர்க் நிறுவனம் தனது செய்தி ஊட்டத்தை "அரசியலற்றதாக செய்யும்" என்று கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை முதலீட்டாளர்களுடன் நான்காவது காலாண்டு நிதி வருவாய் அழைப்பில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க், சமூக ஊடக தளம் ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களின் பேஸ்புக் செய்தி ஊட்டத்தை நிரந்தரமாக அரசியலற்றதாக செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராகி வருவதாகக் கூறினார்.

மார்க் ஸக்கர்பேர்க்,F8 2018 மாநாட்டில் தனது அறிக்கையை வழங்குகின்றார் [ஆதாரம்: Wikimedia Commons]

ஸக்கர்பேர்க், பேஸ்புக் உயர் நிர்வாக அதிகாரி ஷெரில் சாண்ட்பேர்க் மற்றும் உயர் நிதித்துறை அதிகாரி டேவ் வெஹ்னர் ஆகியோரும் இந்த ஆய்வின் போது விவாதித்தனர். அதில் நிறுவனம் ஆய்வாளர்களின் கணிப்புகளை மீறி கடந்த ஆண்டை விட அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வருவாயை 33 சதவிகிதம் அதிகரித்து 28.1 பில்லியன் டாலர்களை எடுத்தது. இந்த அழைப்பின் எழுத்துப்படிவங்களை The Motley Fool இணையத்தில் வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கில் தினசரி 2.6 பில்லியன் செயலில் உள்ள பயனர்களும் 200 மில்லியன் வணிக பயனர்களும் உள்ளனர் என்று அறிவித்த பின்னர், அவர் அதிலுள்ள “சமூகங்களை” (communities) மதிப்பாய்வு செய்தார். பேஸ்புக் பயனர்களுக்கு "அவர்களுக்கு அர்த்தமுள்ள சமூகங்களைக் கண்டுபிடித்து பங்கேற்க" உதவியது என்றும் 600 மில்லியன் மக்கள் "இப்போது பேஸ்புக்கில் ஒரு குழுவில் உறுப்பினர்களாக உள்ளதுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதனை அர்த்தமுள்ளதாக கருதுகின்றனர்" என்றும் அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் "வன்முறை அல்லது வெறுப்பூட்டும் பேச்சு போன்ற விஷயங்களுக்கு எதிரான எங்கள் விதிகளை மீறும்" ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழுக்களை நிறுவனம் அகற்றிவிட்டதாக ஸக்கர்பேர்க் தெரிவித்தார். "எங்கள் கொள்கைகளை மீறாவிட்டாலும் கூட அவற்றில் சேர மக்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்பாததால்" குழுக்களையும் பேஸ்புக் மூடிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். எடுத்துக்காட்டாக, "தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவில் குடியுரிமை மற்றும் அரசியல் குழுக்களை பரிந்துரைப்பதை நாங்கள் நிறுத்திவிட்டோம்” என்றார்.

பேஸ்புக் "சூடான விவாதங்களை தணிக்கவும், பிளவுபடுத்தும் உரையாடலையும் சமூகங்களையும் ஊக்கமிழக்க செய்யவும் சிறிது காலமாக செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார். பின்னர் ஸக்கர்பேர்க் முதலீட்டாளர்களுடன் தனது புள்ளியின் முக்கிய அம்சத்தை அடைந்தார். “இப்போது, இதே வழியில், செய்தி ஊட்டத்திலும் (News Feed) அரசியல் உள்ளடக்கத்தின் அளவைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளையும் நாங்கள் தற்போது பரிசீலித்து வருகிறோம். இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் நாங்கள் இன்னும் செயல்படுகிறோம்” என்றார்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளாக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மற்றும் சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) "சூடான விவாதங்களை தணிக்கவும்" மற்றும் "அரசியல் உள்ளடக்கத்தின் அளவைக் குறைப்பதற்கான" பேஸ்புக்கின் முயற்சிகள் அதன் தளத்தில் சோசலிச மற்றும் இடதுசாரி கருத்துக்களுக்கு எதிரான பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்பதை விளங்கிக்கொள்கின்றன.

ஜனவரி 23 அன்று, பேஸ்புக் இடதுசாரி மற்றும் சோசலிச பக்கங்கள், குழுக்கள் மற்றும் பயனர்களை குறிவைத்து, எந்த விளக்கமும் இல்லாமல் அவர்களின் கணக்குகளை நீக்கியதாக WSWS அறிவித்துள்ளது. கணக்குகள் நிறுத்தப்பட்டவர்களில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (பிரித்தானியா) ஆதரவுடன் அமைக்கப்பட்ட இலண்டன் பஸ் சாரதிகளின் சாமானிய தொழிலாளர்களின் குழுவின் பக்கம் ஆகியவை அடங்கும்.

ஜனவரி 25 ம் தேதி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் (U of M) பிரிவின் பக்கம் பேஸ்புக்கால் நிறுத்தப்பட்டதாக WSWS தெரிவித்துள்ளது. அதன் நிர்வாகிகளின் பயனர் கணக்குகளுடன், அவற்றில் தேசிய செயலரான ஜெனெவீவ் லீ உம், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அமெரிக்க நிர்வாக ஆசிரியர் நைல்ஸ் நீமுத் உம் அடங்குவர். இவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைமையின் உறுப்பினர்களும் கூட.

தேர்தல்களுக்கு முன்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பணிகள் பற்றிய மறுஆய்வு, பேஸ்புக் அதன் உளவுத்துறை அரச ஆலோசகர்களுடன் சேர்ந்து அமைப்பை ஏன் குறிவைக்கும் என்பதற்கான தடயங்களைக் காட்டுகின்றது. முதலாவதாக, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர் ஆசிரியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில் இவ்வமைப்பு தீவிரமாக ஈடுபட்டது. வேலைநிறுத்தத்தின் போது பட்டதாரி மாணவர்-தொழிலாளர்களை தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்துடன் ஒன்றிணைக்க சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பு போராடியது.

நவம்பர் நடுப்பகுதியில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்குள், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு "ட்ரம்பின் தேர்தல் சதி மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல்" என்ற தலைப்பில் ஒரு இணையவழி கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இது "எங்கள் சமூக தரநிலைகளுக்கு எதிரானது" என்று கூறி பேஸ்புக் அதன் தளத்தில் வெளியிடப்படுவதைத் தடுத்தது.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, உலக சோசலிச வலைத் தளம், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு ஆகியவை பேஸ்புக் தனது நடவடிக்கைகளை மாற்றியமைக்கக் கோரி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கின.

இந்த பிரச்சாரம், சர்வதேச அளவில் பரவலான ஆதரவைப் பெற்றதுடன் மற்றும் பேஸ்புக்கை சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் பக்கம் மற்றும் நிர்வாகிகளின் கணக்குகளை மீட்டெடுக்க கட்டாயப்படுத்தியது. நிச்சயமாக, நிறுவனம் பிரிட்டனில் உள்ள Financial Times க்கு அளித்த அறிக்கையில், பக்கங்கள் மூடப்பட்டமை "தானியங்கிமுறை தவறின்" விளைவாகும் எனக் கூறியது.

Financial Times ன் அறிக்கையில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் அளித்த அறிக்கையும் அடங்கும். அவர் கூறினார், “இந்த குறிப்பிட்ட தடை பின்வாங்க செய்யப்பட்டிருந்தாலும், இது அடுத்து என்ன வரக்கூடும் என்று எங்களுக்குத் தெரியாத ஒரு எச்சரிக்கையாகும்”.

மார்க் ஸக்கர்பேர்க்கின் அறிக்கைகள் பேஸ்புக்கின் திட்டங்கள் என்ன என்பது பற்றிய ஒரு கருத்தைத் தருகின்றன. ஜனவரி 6 ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் மீதான வலதுசாரி தாக்குதலுக்கும், பாசிச அமைப்பாளர்களை இயக்குவதில் சமூக ஊடகங்கள் வகித்த பங்கிற்கும் பதிலளிக்கும் விதமாக முதலாளித்துவ பத்திரிகைகளில் வரும் அறிக்கைகள் அவரது கருத்துக்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அவை எதுவும் அதனை தொடர்ந்து இடதுகள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலை சுட்டிக்காட்டவில்லை.

எடுத்துக்காட்டாக, Guardian வாஷிங்டனில் உள்ள நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மை பற்றிய விசாரணைகள் மற்றும் Federal Trade Commission மற்றும் 48 மாநிலங்கள் தாக்கல் செய்த வழக்கில் பேஸ்புக்கின் தவறான வணிக நடைமுறைகளை குற்றம் சாட்டியுள்ளன. இது அரசாங்கத்தின் ஒரு வழிமுறையாக சமூக ஊடக ஏகபோகத்தில் கொள்கை மாற்றங்களை கட்டாயப்படுத்துகிறது. பேஸ்புக்கின் இடதுசாரிகள் மீதான தணிக்கை பற்றி Guardian எதுவும் கூறவில்லை.

ஸக்கர்பேர்க்கின் கருத்துக்கள் குறித்த தனது அறிக்கையில், ஆதரவாளர்களை வெல்வதற்கான இத்தளத்தை நம்பியுள்ள “அடிமட்ட” இயக்கங்கள் மீது பேஸ்புக் அரசியலற்றதாக செய்யும் கொள்கையின் தாக்கத்தை Politico குறிப்பிடுகிறது. இக்கொள்கை மாற்றம் “ட்ரம்ப் காலத்து பெண்கள் அணிவகுப்பு அல்லது கறுப்பின மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் போன்றவற்றிற்கு புதிய நபர்களை இயக்கங்களுக்குள் கொண்டு செல்ல உதவும் அமைப்பாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்” என்று ஆலோசனை குழு தலைவர்கள் அஞ்சுகிறார்கள் என்று Politico கூறுகிறது.

ஸக்கர்பேர்க்கின் மாநாட்டு அழைப்பு அறிக்கையைப் பற்றி அறிவித்த முதல் வெளியீட்டாளர்களில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட Independent, அமெரிக்க செனட்டர் எட் மார்க்கியின் (மாசசூசெட்ஸின் ஜனநாயகக் கட்சி) அறிக்கையை மேற்கோள் காட்டி மார்க் ஸக்கர்பேர்க்கிற்கு எழுதிய கடிதத்தில் பேஸ்புக் குழுக்கள் “வெறுப்புக்கான விளைநிலம், தவறான தகவலகளை எதிரொலிக்கும் அறைகள் மற்றும் வன்முறையை ஒருங்கிணைப்பதற்கான இடங்கள், 2021 ஜனவரி 6 அன்று அமெரிக்க காங்கிரஸ் கிளர்ச்சிக்கான வெளிப்படையான திட்டமிடல் உட்பட” இருந்ததாக எழுதியதை எடுத்துக்காட்டியது.

தரவு சார்ந்த செய்தித்துறையை மையமாகக் கொண்ட வெளியீட்டாளரான The Markup விசாரணையையும் மார்க்கி சுட்டிக்காட்டினார். இது "அரசியல் அல்லது சமூகப் பிரச்சினைக் குழுக்களை" பரிந்துரைப்பதை நிறுத்திவிடும் என்ற பேஸ்புக்கின் தேர்தலுக்கு முந்தைய கூற்றுக்கள் தவறானவை என்றும் அது ஒருபோதும் நிகழவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

Loading