இலாபத்திற்கு பதிலாக வாழ்க்கைக்கு முக்கியத்துவம்! முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு பதிலாக சோசலிசம்!

ஜேர்மன் கூட்டாட்சி தேர்தலுக்கான SGP இன் பிரச்சாரத்தை ஆதரிக்கவும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் முதலாளித்துவத்தின் திவால்தன்மையை முழு உலகின் கண்களுக்கு முன்பாக அம்பலப்படுத்தியுள்ளது. தொற்றுநோயின் முதல் ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதுடன், நூறு மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதிய தன்னலக்குழுவின் இலாபங்களுக்காக உழைக்கும் மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்யும் கொள்கைக்கு அவர்கள் பலியாகியுள்ளனர். பள்ளிகளையும் வணிகங்களையும் மூடிவிட்டு, இதனாலான சமூக விளைவுகளை ஈடுசெய்ய நிதி உதவியை வழங்குவதற்கு பதிலாக, அரசாங்கங்கள் வங்கிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் பெரும் தொகையை வழங்கியுள்ளன. சவப்பெட்டிகள் தகனம் செய்யப்படும் இடங்களில் அதிகமாக குவிகையில் பங்குச் சந்தைகள் இப்போது சாதனையளவிலான இலாபங்களைக் கொண்டாடுகின்றன. மேலும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும் வருமானத்தையும் இழக்கின்றனர்.

தொற்றுநோய் இந்த நெருக்கடிக்கு காரணம் அல்ல. அது வெறுமனே நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் நலன்புரி சலுகைகள் நீண்ட காலமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான செலவுகள் வெட்டிக்குறைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஒரு சிறிய சிறுபான்மையினர் முன்னோடியில்லாத அளவிற்கு தன்னை செல்வந்தராக்கிக் கொண்டுள்ளனர். இராணுவ மறுசீரமைப்பு மற்றும் போர்களுக்கு பெரும் தொகைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாளித்துவ அமைப்பு ஒரு நிதிய தன்னலக்குழுவால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. அதன் ஆட்சிமுறை இனியும் ஜனநாயகத்துடன் பொருந்தாதுள்ளது. இதுதான் எல்லா இடங்களிலும் பாசிச சக்திகள் ஊக்குவிக்கப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால் இவற்றிற்கான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆளும் வர்க்கத்தின் கொலைகார மூலோபாயத்திற்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில், பாதுகாப்பான பணி நிலைமைகளுக்காக வாகனத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இந்தியாவில், மில்லியன் கணக்கான விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கின்றன. ஜேர்மனியில் தீவிர வலதுசாரி மாற்றீட்டு கட்சிக்கும் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தினதும் (CDU) சமூக ஜனநாயகக் கட்சியினதும் (SPD) பெரும் கூட்டணி அரசாங்கத்தின் வலதுசாரி நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

இந்த எதிர்ப்பிற்கு, ஒரு குரலையும் முன்னோக்கையும் அளிக்க சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) கூட்டாட்சி தேர்தலில் பங்குபற்றுகிறது. நோய்வாய்ப்பட்ட இந்த அமைப்பின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க நாங்கள் முயலவில்லை, மாறாக முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப பரிந்துரைக்கிறோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எங்கள் சகோதரர கட்சிகளுடன் இணைந்து, சமூக சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டங்களில் அனைத்து எல்லைகளையும் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துகிறோம்.

இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்த உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகள் மீண்டும் வெடிக்கின்றன. 1930 களில் இருந்ததைப் போலவே, தொழிலாளர்கள் பின்வரும் தேர்வை எதிர்கொள்கின்றனர்: அதாவது சர்வதேச சோசலிசமா அல்லது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமா என்பதே. வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் கையகப்படுத்தாமலும் அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் எந்த சமூகப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. அவர்களின் இலாபமும் செல்வமும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். கடந்த ஆண்டில் அவர்களுக்கு வழங்கப்பட்ட டிரில்லியன்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். உலகப் பொருளாதாரம் ஒரு விஞ்ஞானபூர்வமான, பகுத்தறிவான திட்டத்தின் அடிப்படையில் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த கட்சி அவசியம். உங்கள் கையொப்பத்துடன் இப்போது கூட்டாட்சி தேர்தலில் நாங்கள் பங்கேற்பதை ஆதரித்து, சோசலிச சமத்துவக் கட்சியில் அங்கத்தவராகுங்கள்!

இலாபத்திற்கு பதிலாக வாழ்க்கைக்கு முன்னுரிமை!

கிறிஸ்தவ ஜனநாயகக் ஒன்றியம் / கிறிஸ்தவ சமூக ஒன்றியம் தொடக்கம் இடது கட்சி வரை மத்திய மற்றும் மாநில மட்டங்களில் அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பின்பற்றும் கொரோனா வைரஸ் கொள்கைகள், நிதிய தன்னலக்குழுவின் நலன்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அவை பள்ளிகளையும் வணிகங்களையும் திறந்து விடுவதன் மூலம் இலாபங்கள் தொடர்ந்து பாயச் செய்கின்றன. இதன் மூலம் கோவிட்-19 மறுப்பாளர்கள் மற்றும் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீடு கட்சியின் (AfD) வேலைத்திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்துகின்றன. இந்த கொலைகாரக் கொள்கையின் விளைவு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பாரியளவிலான மரணங்களாகும்.

போதியளவு நிதியுதவி இல்லாத மருத்துவமனைகளில் செவிலியர்கள் கொல்லப்படுகையிலும் பள்ளிகளில் அடிப்படை காற்று வடிகட்டிகளுக்கு கூட பணம் இல்லை என்று கூறப்படுகின்றபோதிலும், மத்திய அரசும் ஐரோப்பிய மத்திய வங்கியும் பங்கு கொள்முதல் திட்டங்கள் மற்றும் உதவித்திட்டங்கள் மூலம் முக்கிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை பரிசளித்தன. இதன் விளைவாக, ஜேர்மனியின் முக்கிய பங்குச் சந்தையான DAX கடந்த 10 மாதங்களில் 60 சதவீதம் உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. 10 பணக்கார ஜேர்மனியர்கள் தொற்றுநோய்களின் போது தங்கள் செல்வத்தை 35 சதவீதம் அதிகரித்து 242 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளனர். மக்கள்தொகையில் பணக்கார 1 சதவிகிதம் ஏழ்மையான 75 சதவிகிதத்தை விட அதிகமான செல்வத்தைக் கொண்டுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம், ஒரு வர்க்கப் போராட்டமாக வளர்ந்து வருகிறது. இது சமுதாயத்தில் இரண்டு பெரிய வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கமும் மற்றும் தொழிலாள வர்க்கமும் சமரசம் செய்யமுடியாத நலன்களைக் கொண்டுள்ளன என்பதை மேலும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உத்தியோகபூர்வ தொற்றுநோய் கொள்கை, மனித வாழ்வின் முன்னே இலாபத்தை முக்கியமானதாக முன்வைக்கிறது. நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்:

தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் உடனடியாக நிறுத்து! பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்குவதுடன், சுயதொழில் செய்பவர்களுக்கான உண்மையான உதவியும், ஏழை வீடுகளுக்கு விரிவான ஆதரவும் வழங்கவேண்டும்! தடுப்பூசி தேசியவாதம் மற்றும் இலாபமீட்டலுக்கு பதிலாக ஒரு உலகளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி பிரச்சாரம் தேவை!

அனைத்து வேலைகளையும் பாதுகாக்க!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் கொடூரமான விளைவுகளை முக்கிய நிறுவனங்கள் தமக்கு சாதகமாக சுரண்டிக் கொண்டு, இதனால் நூறாயிரக்கணக்கான வேலைகளை அழிக்க நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட வேலைநீக்கங்களைச் செய்கின்றன. வாகனத் தொழிலில் மட்டும் 500,000 வேலைகள் வெட்டப்படும் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வேலையையும் பாதுகாப்பதற்காக நாங்கள் போராடுகிறோம். கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சமூக ரீதியாக முக்கியமான துறைகளில் பொதுப்பணித் திட்டத்தை கோருகிறோம்!

இராணுவவாதத்தை நிறுத்து!

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், பெரு வல்லரசுகள் அனைத்தும் தங்கள் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்காக புதிய போர்களுக்கு தயாராகி வருகின்றன. ஜேர்மன் மத்திய அரசு 2021 ஆம் ஆண்டில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான வரவு-செலவுத் திட்டங்களைக் குறைத்து, இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை 50 பில்லியன் யூரோக்களாக உயர்த்தியுள்ளது.

ஒரு அரசாங்க அறிக்கையில், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது "எல்லாவற்றையும் செய்ய வேண்டியது அவசியம், எனவே பொருளாதாரத் துறையில் ஜேர்மனியின் வலிமையை தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அமைப்புகளின் உலகளாவிய போட்டிகளிலும் எங்களை தக்கவைக்க வேண்டும்" என்று கோரினார். ஜேர்மனிய நிதிய உயரடுக்கு தனது ஏகாதிபத்திய நலன்களை இராணுவ பலத்துடன் பின்தொடர்வதால் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க உள்ளனர்.

அனைத்து வெளிநாட்டு இராணுவ தலையீடுகளுக்கும் உடனடி முடிவு! நேட்டோ மற்றும் ஜேர்மன் ஆயுதப்படைகளின் கலைப்பு! இராணுவ மறுசீரமைப்பு மற்றும் போருக்கு பதிலாக கல்வி மற்றும் வேலைகளுக்கு பில்லியன்களை வழங்க நாங்கள் கோருகிறோம்!

பாசிசம் மீண்டும் ஒருபோதும் வேண்டாம்!

பாரிய மரணம், சமூக சமத்துவமின்மை மற்றும் போர் ஆகியவை ஜனநாயகத்துடன் பொருத்தமற்று உள்ளன. இதனால்தான் உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கு சர்வாதிகார ஆட்சி முறைகளை நோக்கி திரும்புகிறது. டொனால்ட் ட்ரம்பின் ஜனவரி 6 ஆம் திகதி பாசிச சதி முயற்சி மிகப் பழமையான மேற்கத்திய ஜனநாயகம் கூட உடைந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ட்ரம்ப்பை போலவே, வோல் ஸ்ட்ரீட்டின் அதே நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் ட்ரம்பின் ஆதரவாளர்களுடன் “ஐக்கியம்” மற்றும் “நல்லிணக்கத்தை” போதிக்கும் ஜனாதிபதி பைடெனின் கீழ் இது மாறாது. ஐரோப்பாவில், கடக்கப்பட்டுவிட்டதாக நீண்டகாலமாக கருதப்பட்ட கடந்த காலத்தின் அசுத்தங்களான மக்கள்வாத தேசியவாதம், இனவாதம், இராணுவவாதம் உயிர்த்தெழுப்பப்படுகிறது.

ஜேர்மனியில் வலதுசாரிகளிலிருந்து வரும் அச்சுறுத்தல் குறிப்பாக கடுமையானது. காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலைப்பின்னல்களால் ஊடுருவப்பட்டுள்ளன. அவை அரசின் மிக உயர்ந்த மட்டங்களின் ஆதரவைப் பெறுகின்றன. ஹால, ஹனோவ் மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் காசெல் மாவட்டத் தலைவர் வால்டர் லுப்க கொலை செய்யப்பட்ட போதிலும், இந்த பாசிச கட்டமைப்புகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் சுதந்திரமான மனிதர்களாக வெளியே இருக்கிறார்கள்.

இதற்கு நேர்மாறாக, தீவிர வலதுசாரிகளை எதிர்க்கும் எவரையும் அரசும் அரசாங்கமும் எதிர்க்கின்றன. உள்துறை அமைச்சகத்தின் வார்த்தைகளில், "தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்கு" எதிராக போராடுகிறது, மேலும் "ஒரு ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமுதாயத்தை ஆதரிக்கிறது" என்பதால் சோசலிச சமத்துவக் கட்சி உள்நாட்டு உளவுத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள் நாஜிக்களின் குற்றங்களை தீமையற்றதாக காட்டுகின்றார்கள். அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களால் AfD திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. கடந்த கூட்டாட்சித் தேர்தலுக்குப் பின்னர் பெரும் கூட்டணியைத் தொடர முடிவெடுத்ததன் மூலம், SPD மற்றும் CDU / CSU ஆகியவை வலதுசாரி தீவிரவாதக் கட்சியான AfD யை உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியாக ஆக்கி பாராளுமன்ற விவகாரங்களில் ஒருங்கிணைத்தன.

அனைத்து கட்சிகளும் பின்னர் வலதுசாரி தீவிரவாதிகளின் மனிதாபிமானமற்ற வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைக்குக் கொண்டுவந்தன. அதில் ஐரோப்பாவின் வெளி எல்லைகளை மூடுதல், அகதிகளை நாடுகடத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற முகாம்களில் அடைத்தல், ஒரு பொலிஸ் அரசைக் கட்டியெழுப்புதல், நாஜிக்களுக்குப் பின்னர் இராணுவ மறுஆயுதமயமாக்கலுக்கான மிகப்பெரிய திட்டம், கடைசியாக மக்களை பெருமளவில் தொற்றுக்குள்ளாக்கும் கொலைகார கொள்கை ஆகியவை அடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தீவிர வலதுசாரிகளின் எழுச்சியை எதிர்க்கிறது. நாங்கள் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதுடன், அரசாங்கங்களாலும் பெருவணிகங்களாலும் இணையம் தணிக்கை செய்யப்படுவதற்கு எதிராக போராடுகிறோம். இங்கு வசிக்கும் அனைவருக்கும் சம உரிமை, நாடுகடத்தப்படுவதை நிறுத்துதல் மற்றும் அனைத்து நாடுகடத்தல் முகாம்களையும் மூட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். உளவு அமைப்புகளால் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் பிற இடதுசாரி அமைப்புகள் கண்காணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் உள்நாட்டு உளவுத்துறை கலைக்கப்பட வேண்டும். ஜூலியன் அசான்ஜ் விடுதலை செய்யப்படவேண்டும்!

தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்தக் கட்சி தேவை

இந்த கோரிக்கைகளை ஆளும் உயரடுக்கிற்கு முறையீடு செய்வதன் மூலம் நிறைவேற்ற முடியாது. மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரட்டல் மூலம் மட்டுமே பூர்த்திசெய்யப்படமுடியும். எனவே சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களின் அனைத்து உண்மையான முன்னெடுப்புகளையும் ஆதரிப்பதுடன் மற்றும் பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளில் சாமானிய நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க அழைப்பு விடுக்கிறது. இது தொழிலாளர்களின் போராட்டங்களை சர்வதேசரீதியாக ஐக்கியப்படுத்தி ஒழுங்கமைக்கும்.

தங்கள் நலன்களை செயல்படுத்த தொழிலாளர்களுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் சொந்தக் கட்சி தேவை. அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் சமூக செலவினக் குறைப்புக்கள், அடக்குமுறை அரச எந்திரத்தை வலுப்படுத்துதல், இராணுவ மறுஆயுதமயமாக்கல் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்காக கொடிய கொரோனா வைரஸ் கொள்கை ஆகியவற்றை ஆதரிக்கின்றன. இது வெளிப்படையாக வலதுசாரி மற்றும் வலது தீவிரவாத மற்றும் பெயரளவிலான இடது கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஹெகார்ட் ஷ்ரோடரின் சான்சிலர் பதவியின் கீழ், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிவாதிகள் 2010 நிகழ்ச்சிநிரல் சீர்திருத்தங்களுடன் வரலாற்றில் மிகப் பெரிய செல்வத்தை அடிமட்டத்திலிருந்து சமூகத்தின் மேல்மட்டத்திற்கு மாற்ற ஒழுங்கு செய்தனர். சமூக ஜனநாயகக் கட்சியின் சான்சிலர் வேட்பாளரான தற்போதைய நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன், சமூக ஜனநாயகக் கட்சி தற்போது பெரும் கூட்டணியின் தொழிலாளர் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு தலைமை தாங்குகிறது. 1999 இல் கொசோவோவிலும், 2001 இல் ஆப்கானிஸ்தானிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் ஜேர்மன் இராணுவத் தலையீடுகளை ஏற்பாடு செய்த பசுமைக் கட்சிவாதிகள், உற்சாகமான இராணுவவாதிகளாகி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் ஆளும் கூட்டணியை நிறுவ ஆர்வமாக உள்ளனர்.

இடது கட்சியும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் தீவிர ஆதரவுக்குரல் கொடுக்கும் ஒரு பாதுகாவலராகும். போர்-ஆதரவு, சிக்கன-ஆதரவு கட்சிகளுடன் கூட்டணியில் அவர்கள் மாநில அளவில் எங்கு ஆட்சி செய்தாலும், இடது கட்சி சமூக செலவினங்களைக் குறைத்து, அகதிகளை நாடு கடத்துகிறது மற்றும் துரிங்கியா மாநிலத்தில் போலவே AfD உடன் உடன்படிக்கைகளை செய்கிறது. கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச அரச கட்சியான SED மற்றும் மேற்கு ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றில் அதன் வேர்களைக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் மீதான விரோதப் போக்கு அதன் மரபணுக்களிலேயே காணப்படுகிறது. இடது கட்சி, அரசு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

தொழிற்சங்கங்களும் நீண்டகாலமாகவே உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் வேலை வெட்டுக்களை ஒழுங்குபடுத்துகிறார்கள், எல்லா எதிர்ப்பையும் அடக்கிவிடுகிறார்கள். கொடூரமான வேலை நிலைமைகள் இருந்தபோதிலும், தொற்றுநோய்களின் போது உற்பத்தி தொடர்ந்து சீராக இயங்குவதற்கு தொழிற்சாலையில் முதலாளிகளின் கண்காணிப்பு படையாக இயங்குகின்றனர்.

தங்கள் நலன்களைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் ஒரு புதிய வெகுஜன சோசலிசக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாரம்பரியத்தில் நிற்கிறது. இது ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகம் ஆகிய இரண்டிற்கும் எதிராக சோசலிசத்ற்கான மார்க்சிச வேலைத்திட்டத்தை பாதுகாத்தது.

இடது எதிர்ப்பாளர்களினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் போராட்டங்கள், ஸ்ராலினிசத்திற்கு ஒரு சோசலிச மாற்று உள்ளது என்பதற்கான ஒரு உயிர்வாழும் ஆதாரத்தை வழங்குகிறது. ஸ்ராலின் ஒரு சிறிய சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த அதிகாரத்துவம் 1920 களில் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றி மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஜேர்மனியில் விரிவாக்கிக்கொண்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ராலினிஸ்டுகள் தான் உலகம் முழுவதும் பயங்கரமான சமூக மற்றும் அரசியல் பின்விளைவுகளுடன் முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினர்.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

உலகெங்கிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரேமாதிரியான பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர். மேலும் அவர்கள் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே சுரண்டல், இராணுவவாதம் மற்றும் பாசிசத்தை அவர்களால் எதிர்க்க முடியும். இதனால்தான் எங்கள் தேர்தல் பிரச்சாரம் ஜேர்மனிக்குள் மட்டுப்படுத்தப்படாது, ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களை நோக்கி திரும்புகின்றது! நாங்கள் அதற்காக எங்கள் ஐரோப்பிய சகோதர கட்சிகளான பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியுடனும் பிரான்சிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) உடனும் துருக்கியிலுள்ள சோசலிச சமத்துவக் குழு (Sosyalist Eşitlik Grubu) உடனும் இணைந்து போராடுகின்றோம்.

வங்கிகள், பெருவணிகம் மற்றும் இராணுவவாதத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) எதிராக நாங்கள் கீழே இருந்து ஒன்றிணைவதனை முன்வைக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் தேசியவாதத்தின் வளர்ச்சிக்கு மாற்றீடு அல்ல, மாறாக அதை ஊக்குவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மூலதனத்தின் நலனுக்காக இரக்கமற்ற சிக்கன திட்டங்களை ஆணையிடுகிறது. பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகளை முற்றிலும் ஆயுதமயமாக்கி, இராணுவத்தை மறுஆயுதமயமாக்கி மிகவும் வலதுசாரி அரசியல் சக்திகளை பலப்படுத்துகிறது. ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை மேற்கொண்டால் மட்டுமே காட்டுமிராண்டித்தனத்திற்குள் மறுபடியும் வீழ்வதை தடுக்க முடியும்.

ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய இராணுவவாதம் மீண்டும் திரும்புவதையும், வறுமையின் அதிகரிப்பையும், தீவிர வலதுசாரிகளின் எழுச்சியையும் பொறுத்துக்கொள்ள விரும்பாத அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு நாங்கள் அழைக்கிறோம்.

இந்த தேர்தல் அறிக்கையை நண்பர்கள், சக தொழிலாளர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கலந்துரையாடுங்கள், தேர்தலில் நாங்கள் பங்கேற்பதை ஆதரிக்க கையொப்பங்களை சேகரியுங்கள்.

எங்கள் பிரச்சாரத்தின் தீவிர ஆதரவாளராக இன்று பதிவுசெய்து எங்கள் தேர்தல் நிதிக்கு நன்கொடை அளிக்கவும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தினசரி வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தை படிக்கவும். சோசலிச சமத்துவக் கட்சியில் அங்கத்தவராகுங்கள்!

ஜேர்மன் தேர்தல் சட்டத்தின்படி மத்திய பாராளுமன்றத்திலோ அல்லது மாநில பாராளுமன்றங்களிலோ இதுவரை பிரதிநிதிகளை கொண்டிராத கட்சிகள் தேர்தல் வேட்பாளர் படிவத்தில் தமது கட்சியின் பெயரையோ அல்லது வேட்பாளரின் பெயரையோ இடம்பெற செய்வதானால், ஜேர்மனியில் வாக்குரிமை பெற்றவர்களிடம் 2000 உத்தியோகபூர்வ படிவத்தில் தாங்கள் இக்கட்சி தேர்தலில் கலந்துகொள்வதற்கான உரிமைக்கு ஆதரவாக கையெழுத்துக்களை சேர்க்கவேண்டும். இந்த நடைமுறையை எமது கட்சியும் பின்பற்ற வேண்டியுள்ளது. இந்த படிவமானது ஜேர்மன் தேர்தல் ஆணையாளரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்றது. இத்தேர்தலில் பங்குபற்றுவதற்கான எமது ஜனநாயக உரிமைக்கு ஆதரவான எமது வாசகர்களை இப்படிவத்தை தரவிறக்கம் செய்து அவற்றை முழுமையாக பூர்த்திசெய்து கீழே குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பேர்லின் மத்திய தேர்தலுக்கும் மாநிலத் தேர்தலுக்குமான இரண்டு படிவங்கள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

பின்வரும் இணைப்புகளில் இருந்து அவற்றைப் பெறமுடியும்

Unterschreibt jetzt für die Wahlteilnahme der SGP!

அனுப்பவேண்டிய தபால் முகவரி

SGP
Neuenburgerstr.13
10969 Berlin

மேலும் படிக்க

Loading