சீனா: தியனென்மென் சதுக்க படுகொலைக்குப் பின் முப்பது ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த விரிவுரை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் 2019 ஜூலை 25 அன்று பீட்டர் சைமண்ட் வழங்கியதாகும். சைமண்ட் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவில் ஒரு அங்கத்தினர் ஆகவும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய WSWS ஆசிரியராகவும் இருக்கிறார்.

மே 1989 இல் தியனன்மென் சதுக்கத்தில் வெகுஜன ஆர்ப்பாட்ம் (AP Photo - Sadayuki Mikami)

ஜூன் 3-4 இரவுக்குப் பிந்தைய நாட்கள் மற்றும் வாரங்களில் ஒரு கொடூரமான இராணுவ ஒடுக்குமுறையில் சென்று முடிவடைந்த, 1989 ஏப்ரல் தொடங்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தமையானது சீனாவில் ஒரு வெகுமுக்கியமான வரலாற்றுத் திருப்புமுனையாகவும் சர்வதேச அளவில் நடந்தேறிக் கொண்டிருந்த ஸ்ராலினிசத்தின் நெருக்கடியில் ஒரு முக்கியமான கூறாகவும் அமைந்திருந்தது.

“தியானென்மென் சதுக்க படுகொலை”யாக குறிப்பிடப்படுவது பெய்ஜிங் மற்றும் அதன் அடையாள மைய சதுக்கத்துடன் மட்டுப்பட்டதுமில்லை, அல்லது மாணவர்களை மட்டும் பிரதான இலக்காகக் குறிவைத்ததுமில்லை. எல்லாவற்றுக்கும் மேல், சீனப் புரட்சியின் தேட்டங்களை அழித்துக் கொண்டிருந்த டெங் ஷியாவோபிங் (Deng Xiaoping) தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) இன் சந்தை-ஆதரவுக் கொள்கைகளது சமூக விளைவுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் முன்னெடுத்த ஒரு கிளர்ச்சியை ஒடுக்குவதை நோக்கியே அது செலுத்தப்பட்டது.

இந்த இரத்தம்தோய்ந்த ஒடுக்குமுறையானது, முதலாளித்துவ மீட்சி நிகழ்ச்சிப்போக்குகள் மிகப்பரந்தளவில் வேகமெடுப்பதற்கு கதவு திறந்து விட்டது. இதனால் வெளிநாட்டு மூலதனம் வெள்ளமெனப் பாய்ந்ததால் மலைப்பூட்டும் பொருளாதார வளர்ச்சி மட்டங்களை உருவாக்கிய அதேநேரத்தில் சீனா இப்போது சிக்கியிருக்கின்றதான உள்முகமான சமூகப் பதட்டங்களும் வெளிப்புறமிருந்தான புவியரசியல் மோதல்களும் தீவிர கூர்மையடைகின்ற நிலைமைகளையும் உருவாக்கியுள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தேறிய நிகழ்வுகளின் போக்கை, சுருக்கமாகவென்றாலும் கூட, கோடிட்டுக் காட்டுவது அவசியமாகும். இது வெறுமனே பழைய நினைவுகளை மீட்டுக்கொள்வதோ அல்லது அந்த சமயத்தில் பிறந்திராதவர்களுக்கு தகவல்களை வழங்குகின்ற ஒரு பிரச்சினையல்ல. திரும்பிப்பார்ப்பதில் உள்ள அனுகூலத்தினால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது போராட்டங்களின் வீச்சும் புரட்சிகரத் தன்மையும், அது 1949 சீனப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் அதுவரை கண்டிராததாக இருந்தது என்பது மிக வெளிப்படையாகப் புலப்படுகிறது. CCP ஆட்சியானது வேர் வரை உலுக்கப்பட்டது என்பதுடன், அப்போது முதலாக இன்னொரு கொந்தளிப்பான சமூக எழுச்சி குறித்த அச்சத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறது.

டெங் ஷியாவோபிங்

1978 இல் டெங் ஷியாவோபிங் இனால் துவக்கமளிக்கப்பட்ட சந்தை-ஆதரவு மறுசீரமைப்பு, ஆரம்பத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறாய் அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டுவரத் தவறியமையானது 1989 இல் புத்திஜீவிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரவலான ஏமாற்றத்தை உருவாக்கியிருந்தது. வேர்சாய் ஒப்பந்த ஷரத்துகளின் கீழ், ஜப்பானிடம் சீனப் பகுதியை விட்டுக்கொடுத்தமையை அடையாளப்படுத்தும் மே 4 இயக்கத்தின் 70வது ஆண்டுதினத்தைக் கொண்டாடும் விதமாக திட்டமிடப்பட்ட மாணவர் ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு மிகப் பரந்த இயக்கமாக வெடித்தன.

ஆயினும், CCP இன் முன்னாள் பொதுச் செயலரான ஹு யோபாங் 1989 ஏப்ரல் 15 அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து திட்டங்கள் மாற்றப்பட்டன. ஒரு அரசியல் சீர்திருத்தவாதியாக கருதப்பட்ட அவர் 1986-87 இல் நடந்த முந்தைய மாணவர் போராட்டங்களுக்கு காரணகர்த்தாகவாக குற்றம்சாட்டப்பட்டவராவார். “முதலாளித்துவ தாராளவாத”த்தை அனுமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட அவர், மாணவர் ஆர்ப்பாட்டங்கள் போலந்தில் 1980-81 இல் வெடித்த Solidarity இயக்க போராட்டங்களைப் போன்றதொரு பரந்த சமூக அமைதியின்மையை பற்றவைத்து விடும் என்று ஸ்ராலினிச எந்திரத்தில் எழுந்த அச்சங்களது மத்தியில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

ஹூ யோபாங்கின் மரணத்தை அனுசரிக்கும் விதமான ஆர்ப்பாட்டங்கள் துரிதமாக ஒரு தேசியளவிலான ஆர்ப்பாட்ட இயக்கமாக விரிவடைந்தது. மாணவர்கள் ஹூ வெளியேற்றப்பட்டதற்கான ஒரு விளக்கத்திற்கு அழைப்பு விடுத்ததுடன் மட்டுமின்றி, உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களது வருமானங்களை வெளிப்படுத்த வேண்டும்; ஊடக சுதந்திரம்; கல்வி நிதியாதார அதிகரிப்பு; ஆர்ப்பாட்டங்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; மற்றும் “மோசமான” அரசாங்க அதிகாரிகளைப் பிரதியிட ஜனநாயகரீதியான தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பன போன்ற மற்ற கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கினர். பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னாட்சி கூட்டமைப்பு (Autonomous Federation of Beijing University Students) மற்றும் பெய்ஜிங் தொழிலாளர்கள் தன்னாட்சி கூட்டமைப்பு (Beijing Workers Autonomous Federation) ஆகியவற்றின் உருவாக்கம் குறிப்பாக ஸ்ராலினிச எந்திரத்திற்கு கவலையூட்டியது.

ஏப்ரல் 22 அன்று, 100,000 பேர் தியனென்மென் சதுக்கத்தில் திரண்டனர், ஒரு மில்லியன் பேர் ஹூவின் இறுதி ஊர்வலத்திற்காய் வீதிகளில் இறங்கினர் —இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள். அந்நாளில், தொழிலாளர்’ கூட்டமைப்பானது, டெங் ஷியாவோப்பிங் குடும்பத்தாரது சொத்துமதிப்பு, அதிகாரத்துவ சிறப்புச் சலுகைகள் மற்றும் சந்தை சீர்திருத்தத்தின் “குறைபாடுகள்” ஆகியவற்றைக் கண்டனம் செய்யும் துண்டறிக்கைகளை விநியோகித்தது. குறிப்பாக, விலைவாசி ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர், ஏனென்றால் பணவீக்கம் கிட்டத்தட்ட 30 சதவீதத்தில் சென்று கொண்டிருந்தது.

மே 4 அன்று, தியனென்மென் சதுக்கத்திலான எண்ணிக்கை 300,000 ஆக உயர்வு கண்டது, 60,000 மாணவர்களுடன் கால் மில்லியன் பெய்ஜிங் தொழிலாளர்களும் சங்கமித்திருந்தனர். ஷாங்காய், நாஞ்சிங், வூஹான், சாங்ஷா மற்றும் ஷியான் உள்ளிட்ட 51 பிற நகரங்களில் குறிப்பிடும்படியான பேரணிகளும் ஊர்வலங்களும் நடைபெற்றன.

இதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதில் CCP தலைமை பிளவுபட்டிருந்தது. கட்சித் தலைவராக ஹூவின் இடத்தில் அமர்த்தப்பட்டிருந்த ஷாவோ ஷியாங் (Zhao Ziyang) ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு படைவலிமையை பிரயோகிக்க தயக்கம் காட்டினார், மாணவர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முயலவே அவர் விரும்பினார். ஜனாதிபதி லி பெங் பிரதிநிதித்துவம் செய்த மற்றும் டெங் ஷியாவோபிங்கினால் ஆதரிக்கப்பட்ட கடும்-நிலைப்பாட்டுக் கன்னை, இயக்கம் விரிவடையாமல் தடுப்பதற்கு போலிஸ்-அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அழுத்தமளித்தது. எவ்வாறாயினும், மாணவர் தலைவர்களை சமரசம் செய்வதற்கான ஷாவோ ஷியாங் இன் முயற்சிகளை நிகழ்வுகள் துரிதமாக முந்திக் கொண்டு விட்டன.

மே 13 அன்று, பல தசாப்த காலத்தில் ஒரு சோவியத் தலைவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாக மிக்கையில் கோர்பச்சேவ் வந்துசேர்வதற்கு சற்று முந்தைய சமயத்தில், மாணவர்களின் ஒரு குழு தியானன்மென் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்று தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையான ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கியது. மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பிற குடிமக்கள் அந்த மிகப்பெரும் சதுக்கத்திற்குள் வெள்ளமெனப் பாய்ந்ததை அடுத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒரு உள்ளிருப்புப் போராட்டமாக துரிதமாக விரிவடைந்தது. பலருக்கு கோர்பச்சேவ் மீதும் அவரது கிளாஸ்னோஸ்ட் அல்லது “வெளிப்படைத் தன்மை” கொள்கை மீதும் பிரமைகள் இருந்தன. உத்தியோகபூர்வ வரவேற்பை இந்த சதுக்கத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த CCP இன் தலைவர்களுக்கு இந்த உள்ளிருப்புப் போராட்டம் ஒரு பெரும் தொந்தரவாய் இருந்தது, அவர்கள் இறுதி நேரத்தில் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை மாற்ற வேண்டியதானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சீன-சோவியத் சந்திப்புக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்ற ஷாவோ ஷியாங் இன் பகிரங்க விண்ணப்பங்களையும் தாண்டி, மே 15 அன்று, அரை மில்லியன் தொழிலாளர்களும் மாணவர்களும் தியனென்மென் சதுக்கத்தில் அணிதிரண்டனர். மே 17 அன்று, இரண்டு மில்லியன் மக்கள் பெய்ஜிங்கில் அணிவகுத்திருந்தனர், இவர்களில் பலரும் தமது வேலையிட பதாகைகளின் கீழ் திரண்டிருந்தனர். பதினெட்டு மாகாணங்கள் மிகப்பெரும் அளவிலான ஆர்ப்பாட்டங்களின் செய்திகளைக் கொண்டிருந்தன. உதாரணமாக, ஹெபேய் (Hebei) மாகாண தலைநகரத்தில், மே 18 அன்று, 150,000 பேர் வீதிகளில் இறங்கியிருந்தனர். ஷாங்காயில் 100,000 தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்குபற்றியிருந்தனர்.

ஒரு கல்வியாளர் இவ்வாறு குறித்திருக்கிறார்:

மே மாத மத்தியிலான பாரிய ஆர்ப்பாட்டங்களின் முக்கியத்துவம் வெறுமனே பங்கேற்றவர்களின் மிகப் பிரம்மாண்டமான எண்ணிக்கை மட்டுமல்ல, அதன் சமூக ஒன்றுசேர்க்கையுமாகும். மாணவர்கள், அவர்களுடன் புத்திஜீவிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து இப்போது கட்சிக் காரியாளர்களின் குழுக்கள், அரசாங்க அலுவலகப் பணியாளர்கள், பள்ளியாசிரியர்கள், பெய்ஜிங்கின் கிராமப்புற புறநகர்ப்பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள், மற்றும் மிக முக்கியமாய், நூறாயிரக்கணக்கான தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர்... முதலாவது மாணவர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு மாதத்திற்குப் பின்னர், கிட்டத்தட்ட நகர்ப்புற சமூக மற்றும் தொழிற்சார்ந்த குழுக்கள் என அனைவருமே அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டிருந்தோர் மத்தியில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருமே தத்தமது ஸ்தாபனங்கள் மற்றும் வேலைப் பிரிவுகளை அடையாளம் காட்டும் தமது சொந்த பதாகைகளை பெருமைபொங்க பறக்கவிட்டிருந்தனர்.... ஒட்டுமொத்த நகரமுமே டெங் ஷியாவோப்பிங் ஆட்சிக்கு எதிராய் தன்னெழுச்சியாக எழுந்து விட்டதைப் போலிருந்தது. [The Deng Xiaoping Era, Maurice Meissner, p.428]

CCP அதிகாரத்துவம் மாணவர் தலைவர்களது கோரிக்கைகள் சிலவற்றை பூர்த்தி செய்வதைப் பரிசீலித்ததே தவிர, தொழிலாள வர்க்கத்துடனான எந்த சமரசமும் கேள்விக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. நிலையான விலைவாசி, உத்தரவாதமான வேலைகள் மற்றும் சமூக சேவைகளைப் பராமரிப்பதான அவர்களது கோரிக்கைகள் முதலாளித்துவ மீட்சித் திட்டநிரலுக்கு நேரடியாக குறுக்கே வந்ததாய் இருந்தது. மேலும், அவர்களது குரோதமானது ஒட்டுமொத்த அதிகாரத்துவ எந்திரத்தை நோக்கியும், CCP தலைவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாரால் குவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் சலுகைகளை நோக்கியுமாய் இருந்தது.

டெங் ஷியாவோபிங்கின் தூண்டுதலின் பேரில், ஸ்ராலினிச ஆட்சி செயற்பட்டது. ஷாவோ ஷியாங் ஓரங்கட்டப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மே 20 அன்று இராணுவச் சட்டத்தை திணித்து லி பெங் அறிவித்தார். ஆயினும், இதற்கெல்லாம் பயந்துபோவதற்கு அப்பாற்பட்டு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடுத்த நாளிலும் அதன்பின் மறுபடி மே 23 அன்றும் தியனென்மென் சதுக்கத்தில் திரண்டனர். மே 23 அன்று இராணுவம் வந்துசேர்ந்தபோது, சிப்பாய்கள் தங்கள் ஆயுதங்களை மக்களை நோக்கித் திருப்ப வேண்டாம் என்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் விண்ணப்பம் செய்தனர். துருப்புகளில் பலவும் கண்ணீர்மல்க நெகிழ்ச்சி கொண்டனர், தங்களது டிரக்குகளை திருப்பியும் கூட சென்று விட்டனர். அடுத்த நாள், சிப்பாய்கள் தொழிலாளர்களுடன் சேர்ந்து கொள்வதை தடுப்பதற்காக, பெய்ஜிங் பிராந்தியத்தைச் சேர்ந்த இராணுவப் பிரிவுகளை திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டது.

ஜூன் 3-4 இரத்தக்களரியான ஒடுக்குமுறைக்காக எங்கோ மூலைகளில் இருக்கும் மாகாணங்களில் இருந்து துருப்புகளை கொண்டுவர டெங் ஷியாவோப்பிங் நிர்ப்பந்தம் பெற்றார். இடைப்பட்ட இரண்டு வாரங்களில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் அரசியல் தலைமையின் நெருக்கடி வெட்டவெளிச்சமாய் இருந்தது. மாணவர் தலைவர்கள் பிளவுபட்டிருந்தனர், மிகவும் பழமைவாத அடுக்குகள் தியனென்மென் சதுக்க ஆக்கிரமிப்பு முடிவதாக அறிவித்த வேளையில், கூடுதல் தீவிரப்பட்ட கூறுகள் —இவர்களில் பலரும் மற்ற நகரங்களில் இருந்து பெய்ஜிங் பயணித்து வந்திருந்தவர்கள்— தொடர்ந்து ஆக்கிரமிப்பை நீடிக்க உறுதியேற்றனர். தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் மாணவர்களைப் பாதுகாப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்திச் செல்வதற்குமான தமது தீர்க்கமான உறுதியை வெளிப்படுத்தினர். தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டன, மோட்டார் பைக்குகளிலான பறக்கும் படையினர் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்தனர்.

தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பின் (Workers Autonomous Federation) அங்கத்துவம் 20,000 ஆக வளர்ச்சி கண்டது. பெய்ஜிங்கில் இருந்த அதிகாரிகள் முடங்கிய வேளையில், தொழிலாளர்கள் விடயங்களை தங்களது சொந்தக் கைகளில் எடுக்கத் தொடங்கினர், போக்குவரத்தை ஒழுங்குசெய்வது போன்ற அடிப்படையான செயல்களை மேற்கொண்டனர். தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றதன் காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மே 25 அன்று, ஒரு மில்லியன் பேர் பெய்ஜிங்கில் இன்னுமொரு பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அடுத்த நாள் வெளியான கூட்டமைப்பின் ஒரு அறிக்கை அறிவித்தது:

நாமே [தொழிலாள வர்க்கம்] இந்த தேசத்தின் நியாயமான எஜமானர்கள். தேசிய விவகாரங்களில் நமது குரல் செவிமடுக்கப்பட்டாக வேண்டும். தேசத்தின் சீரழிந்த கழிசடைகளைக் கொண்ட ஒரு சிறிய கூட்டம்... நமது பெயரை அபகரித்துக் கொண்டு மாணவர்களை ஒடுக்குவதையும், ஜனநாயகத்தை படுகொலை செய்வதையும் மனித உரிமைகளை காலில் போட்டு நசுக்குவதையும் நிச்சயமாக நாம் ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது.

ஜூன் 3 அன்று இரவு தியனென்மென் சதுக்கம் நோக்கி துருப்புகள் நகர்ந்த வேளையிலும் அங்கே துணிச்சலுக்கு பஞ்சமிருக்கவில்லை, ஆயினும் முக்கிய யுத்தங்கள் பெய்ஜிங்கின் தொழிலாள-வர்க்க புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்றன. ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோரே சதுக்கத்திலேயே இருந்தனர். கண்ணால் கண்ட ஒரு சாட்சி கூறினார், “ஆயுதமேந்திய வாகனங்கள் சாலைத்தடைகளை நசுக்கிச் சென்றன, கார்கள் மற்றும் பேருந்துகளை மோதித் தள்ளின. நிராயுதபாணியாய் இருந்த மக்களுக்கு செங்கல்கள் மட்டுமே கைகளில் கிடைத்தன.. பதிலுக்கு அவர்கள் பெற்றது குண்டுகளை, எந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகளில் இருந்தான குண்டு மழையை.” [Meissner இல் மேற்கோளிடப்பட்டவாறு, பக்.458]

கண்ணால் கண்ட இன்னுமொரு சாட்சி எழுதியதாவது:

ஒட்டுமொத்த பெய்ஜிங் நகருமே கோபாவேசம் மற்றும் தீவிரக் கிளர்ச்சி நிலையில் இருப்பதாகப்பட்டது. சாங்கன் சாலையின் பக்கவாட்டு வீதிகளில், எங்களில் ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிச்சத்த இடைவெளிகளுக்கு இடையில், “நீங்கள் மிருகங்கள்!” “லீ பெங்—பாசிஸ்ட்!” மற்றும் “வேலைநிறுத்தத்தில் இறங்குவோம்!” என்று முழங்கினோம். ஆயினும் துருப்புகள் திருப்பிச் சுட்டதில், சட்டென்று குனிந்து படுத்துக்கொள்ள அல்லது நகர்ந்துகொள்ள முடியாதவர்கள் அல்லது குண்டுகள் வருவதை கொஞ்சமும் அறியாதவர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் தொடர்ச்சியாக கீழே விழுவதும் அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதுமாய் இருந்தார்கள், ஆயினும் அவமதிக்கப்பட்ட மனோநிலையானது அச்சம் குறித்த எந்த உணர்வுகளையும் முழுமையாக விஞ்சியிருந்தது. [Meissner இல் மேற்கோளிடப்பட்டது, p.460]

நிராயுதபாணியான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் கோபமடைந்து, தொழிலாளர்கள் கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு இராணுவ வாகனங்கள் மீது தாக்கினர், ட்ரக்குகளுக்கும் ஆயுத வாகனங்களுக்கும் தீவைத்தனர். படுகொலை செய்திகள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதை அடுத்து, ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்தன, இதற்கு ஆட்சியானது பாரிய கைது நடவடிக்கைகளைக் கொண்டு பதிலிறுத்தது. மாணவர் தலைவர்களுக்கு ஒப்பீட்டளவில் மென்மையான அணுகுமுறை கிட்டிய அதேநேரத்தில், அரசின் முழு வலுவும் தொழிலாள வர்க்கத்தின் மீது இறக்கப்பட்டது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக ஆட்சியானது தொழிலாளர்கள் மீது பகிரங்க மரணதண்டனைகளை அரங்கேற்றியது.

தீர்க்கமான உறுதிக்கும் முற்றுமுழுதான தைரியத்திற்கும் பஞ்சமிருக்கவில்லையே தவிர, அரசியல் தலைமையே அங்கு இல்லாமலிருந்தது. 1949க்குப் பிந்தைய காலத்தில் CCP ஆட்சியின் மிகக் கூர்மையான நெருக்கடிக்கும், ஒரு கிளர்ச்சியின் தன்மை கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சிக்கும் மத்தியில், இந்த வெகுஜன இயக்கத்தை வழிநடத்துவதற்கு அங்கே எந்த புரட்சிகரக் கட்சியோ அல்லது புரட்சிகரத் தலைமையோ இருக்கவில்லை. இயக்கத்தால் தன்னியல்பாக முன்நிறுத்தப்பட்ட தலைவர்கள், அவர்கள் எத்தனை தான் தீவிரப்பட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தபோதிலும், ஆட்சியை தூக்கியெறிவதற்காய் அல்லாமல், சீர்திருத்தங்களுக்காக ஆட்சிக்கு நெருக்குதலளிக்கவே விழைந்தார்கள்.

ICFI பதிலிறுக்கிறது

இந்த வருங்கால முக்கியத்துவமுடைய நிகழ்வுகளின் மத்தியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஜூன் 8 அன்று “சீனாவில் அரசியல் புரட்சியின் வெற்றி!” மற்றும் ஜூன் 22 அன்று “சீனத் தொழிலாளர்களுக்கு எதிரான ஸ்ராலினிச பயங்கரத்தை தடுத்து நிறுத்துவோம்” ஆகிய இரண்டு அறிக்கைகளை விடுத்தது. அது ஸ்ராலினிச கொடூரத்தை கண்டனம் செய்ததுடன் நில்லாமல், நிகழ்வுகள் குறித்த ஒரு தெளிவான பகுப்பாய்வை வழங்கியது; அவசியமான படிப்பினைகளை தேற்றம் செய்தது; பெய்ஜிங்கில் இருந்த சீரழிந்த மாவோயிச அதிகாரத்துவத்தை தொழிலாள வர்க்கம் எதிர்த்துப் போராடுவதற்கு அடிப்படையான ஒரு அரசியல் முன்னோக்கையும் முன்வைத்தது.

அந்தக் கட்டத்தில், சீனப் புரட்சியின் தேட்டங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடவில்லை என்பதையும், சீனாவானது ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னர் குணாதிசயப்படுத்தியிருந்தவாறாக ஒரு ஊனமுற்ற தொழிலாளர் அரசாகவே தொடர்ந்தும் இருந்தது என்பதையும் மனதில் கொண்டு, ICFI, அதன் முதல் அறிக்கையில், CCP ஆட்சியை வெளியேற்றுவதற்கும், 1949 புரட்சிக்கு பின்னர் நிலைநாட்டப்பட்ட சொத்துறவுகளை பாதுகாப்பதற்கும் மற்றும் விரிவுபடுத்துவதற்கும், அத்துடன் சர்வதேசரீதியாக சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஒரு உண்மையான தொழிலாளர்’ அரசைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு அரசியல் புரட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

நான்காம் அகிலம், ஜனவரி-ஜூன் 1989

படுகொலை முடிந்து நான்கு நாட்களின் பின்னர், அனைத்துலகக் குழுவின் முதலாவது அறிக்கை அறிவித்தது:

நெருக்கடியின் இப்போதைய கட்டத்தின் உடனடி முடிவு என்னவாக இருக்கும்போதிலும், தியனென்மென் சதுக்க படுகொலையானது சீனாவில் அரசியல் புரட்சியை முடித்து விடவில்லை. மாறாக, இப்போது இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்ட பின்னர், புரட்சியானது ஒரு புதிய மற்றும் கூடுதல் அரசியல்-நனவு மிக்க அபிவிருத்தி மட்டத்திற்குள் நுழையவிருக்கிறது. வெகுஜன ஆர்ப்பாட்டங்களது அழுத்தத்தின் கீழ், ஸ்ராலினிச ஆட்சியானது சீர்திருத்தப்பட முடியும் என்பதான அப்பாவித்தனமான பிரமைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் மூலமாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் புரட்சிகரமாக தூக்கிவீசப்படுவதன் அவசியத்தின் மீது நான்காம் அகிலம் அளித்து வந்த வலியுறுத்தத்தை கடந்த வாரத்தின் துன்பியல் நிகழ்வுகள் சக்திவாய்ந்த விதத்தில் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன. [நான்காம் அகிலம், தொகுதி 16, எண்ணிக்கை 1-2, ஜனவரி-ஜூன் 1989, பக். 2]

அந்த அறிக்கை, வெளிநாட்டு மூலதனத்திற்கான வாய்ப்புகள் குறித்து தமது கையை கசக்கிக் கொண்டிருந்த ஏகாதிபத்தியத் தலைவர்களின் கபடத்தனமான நீலிக் கண்ணீரையும், அத்துடன் இன்றைய தினம் வரையில் ஆர்ப்பாட்ட இயக்கத்தை எதிர்ப்புரட்சிகரமானது என்று தொடர்ந்து முத்திரை குத்தி வருகின்ற ஸ்ராலினிச ஆட்சியின் பொய்களையும் அம்பலப்படுத்தியது. மேற்கு ஊடகங்கள் தியனென்மென் சதுக்கத்தின் மாணவர் ஆர்ப்பாட்டங்கள் மீது கவனம் குவித்த நேரத்தில், தொழிலாள வர்க்கமே ஆட்சியின் பிரதான குறியாக இருந்தது என்பதை ICFI விரைவாக கண்டுகொண்டது.

அது தெரிவித்தது:

உண்மையில், சென்ற வாரத்தின் பாரிய படுகொலைகள், சீனாவில் முதலாளித்துவத்தை மீட்சி செய்வதற்கும் அதன் பொருளாதாரத்தை உலக ஏகாதிபத்தியத்தின் கட்டமைப்பிற்குள் மீண்டும் ஒருங்கிணைப்பதற்குமாய் பெய்ஜிங்கின் ஸ்ராலினிஸ்டுகள் ஒரு சகாப்தமாய் திட்டமிட்டு செய்து வந்திருந்த அரசியல் வேலைகளது உச்சகட்டமே ஆகும். சீன வெகுஜனங்களை பயமுறுத்துவதும் சீனப் புரட்சியின் சமூக வெற்றிகளை திட்டமிட்டு கலைப்பதற்கு எழுகின்ற அத்தனை எதிர்ப்பையும் நசுக்குவதுமே பெய்ஜிங் ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரத்தின் பிரதான நோக்கமாகும். [அதே அறிக்கை, பக்.1]

ICFI எச்சரித்தது:

ஸ்ராலினிச ஆட்சியால் சீனப் பாட்டாளி வர்க்கம் தீர்மானகரமானவொரு விதத்தில் தோற்கடிக்கப்படுவதன் —எவ்விதத்திலும் இது இன்னும் அடையப்பட்டிருக்கவில்லை— பின்விளைவுகளாய், சீனப் புரட்சியின் எஞ்சிய சமூக வெற்றிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுவதும் புதிய முதலாளித்துவ அடித்தளங்களின் மீது பொருளாதாரம் கட்டுப்பாடற்ற வகையில் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுவதும் இருக்கும். [அதே அறிக்கை, பக். 3]

ICFI இன் சரியான நேரத்திலான பதிலிறுப்பு, நேரடியாக பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) ஓடுகாலிகளுக்கு எதிராக அது நடத்தியிருந்த அரசியல் போராட்டத்தில் இருந்தும் மற்றும் அதன்பின் அபிவிருத்தி செய்யப்பட்ட 1988 ஆகஸ்டில் வெளியிடப்பட்ட அதன் சர்வதேச முன்னோக்குகளது ஆவணத்தில் இருந்தும் எழுந்திருந்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தைக் கைவிட்டு, தொழிலாள வர்க்கத்தை சமூக ஜனநாயகத்திற்கு, தொழிற்சங்கங்களுக்கு, முதலாளித்துவ தேசியவாதத்திற்கு மற்றும், குறிப்பாக, ஸ்ராலினிசத்திற்கு கீழ்ப்படுத்த முனைந்த எந்த பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்காக 1953 இல் ICFI ஸ்தாபிக்கப்பட்டிருந்ததோ அதே அரசியல் சக்திகளுக்கு WRP தகவமைத்துக் கொண்டு விட்டிருந்தது.

தியனென்மென் சதுக்கப் படுகொலையை ஒட்டிய உடனடிப் பிந்தைய காலத்தில் வெளியிடப்பட்ட நான்காம் அகிலம் ஜனவரி-ஜூன் இதழின் “ட்ரொட்ஸ்கிசமும் சீனப் புரட்சியும்” என்ற தலைப்பிலான தலையங்கம், பப்லோ மற்றும் மண்டேலும், அத்துடன் WRP ஓடுகாலிகளும் மாவோயிசத்திற்குத் தகவமைத்துக் கொண்டமைக்கு எதிரான ICFI இன் போராட்டம் குறித்த ஒரு விபர அறிக்கையை வழங்கியது.

ICFI இன் ஸ்தாபகத்தைக் குறித்து நின்ற, 1953 இல் ஜேம்ஸ் கனன் ஆல் எழுதப்பட்ட பகிரங்க கடிதம், பப்லோவும் மண்டேலும் சீனாவில் உள்ள மாவோயிச ஆட்சிக்கு தகவமைத்துக் கொண்டதையும், 1952 இல் கூர்மையடைந்து வந்த சமூகப் பதட்டங்களுக்கு மத்தியில் கூட்டமாய் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளைப் பாதுகாக்க அவர்கள் மறுத்ததையும் கண்டனம் செய்தது. சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீதான ஒடுக்குமுறையை மக்களிடம் கொண்டு சென்று சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஆதரவை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளை பப்லோ திட்டமிட்டு முடக்கினார். அலட்சியத்துடன் அவர் அறிவித்தார்: “மாவோ சேதுங்கின் புரட்சியின் சாதனையுடன் ஒப்பிடுகையில், சில நூறு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கைது முக்கியத்துவமிக்கதில்லை.”

பகிரங்கக் கடிதத்தில், கனன் எழுதினார்:

குறிப்பாக நான்காம் அகிலத்தின் சீனப் பிரிவின் அரசியல் நிலைப்பாடு பற்றி பப்லோ அவதூறானமுறையில் தவறாக காட்டுவது மிகவும் ஆத்திரமூட்டுவதாகும். அவர்கள் பப்லோ கன்னையால் “குறுங்குழுவாதிகள்” என்றும் “புரட்சியில் இருந்து தப்பி ஓடியவர்கள்” என்றும் சித்திரப்படுத்தப்படுகிறார்கள். பப்லோ கன்னையால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சித்திரத்திற்கு நேரெதிராக, சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சீனப் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதிகளாக செயல்பட்டனர். அவர்கள் மாவோ ஆட்சிக்கு பலிகளாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதில் அவர்கள் செய்த தவறு எதுவுமில்லை... மாறாக ஸ்ராலினிசத்தை நோக்கிய பப்லோவின் நல்லிணக்கவாத நிலைப்பாடு தான் மாவோ ஆட்சியை ரோஜா வர்ணத்தில் காண்பிப்பதற்கும் நமது சீனத் தோழர்களின் உறுதியான கோட்பாடான நிலைப்பாட்டை மங்கலான நிறத்தில் காட்டுவதற்கும் அவரை தடுக்கவியலாமல் இட்டுச்செல்கிறது.

1963 இல் பப்லோவாதிகளுடன் SWP மறுஇணைவு காண்பதை WRP தலைமை எதிர்த்தது, என்றபோதும் ஸ்ராலினிசத்தை நோக்கிய அதன் அணுகுமுறை நாளுக்கு நாள் பப்லோவாதிகளுடைய அணுகுமுறையை நெருங்கிக் கொண்டிருந்தது. 1960கள் முதலாக, மைக்கல் பண்டா —WRP இன் முன்னாள் தேசியச் செயலாளர்— மாவோவின் கலாச்சாரப் புரட்சி மற்றும் செங்காவலர் இயக்கம் ஆகியவற்றைப் போற்றுவதும் மாவோவின் கெரில்லா தந்திரோபாயத்தை பாராட்டுவதுமாய் மாவோயிச புகழ்பாடிக் கொண்டிருந்தார். நான்காம் அகிலத்தின் தலையங்கம் தெரிவித்ததைப் போல, பண்டாவின் மாவோயிச சாய்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் ஹீலி தவறியமையானது, WRP தலைமை ஸ்ராலினிசத்திற்கு தகவமைத்துக் கொண்ட நிலையில், மரணகரமான அரசியல் பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. உடைவின் சமயத்தில், ஓடுகாலிகளின் அத்தனை கன்னைகளுமே, முதலாளித்துவ மீட்சியின் முன்னணியில் இருந்த கோர்பச்சேவ் தலைமையை வெட்கமற்று விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன.

ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளது வெற்றிகள் திரும்பவியலாதவை என்று மைக்கல் பண்டா போன்றவர்கள் அறிவித்த நிலைக்கு எதிரான விதத்தில், ICFI, சீனாவில் இருந்த மாவோயிஸ்ட் ஆட்சியானது 1949 புரட்சியை ஒட்டி உருவாக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளை அகற்றுவதை நோக்கி துரிதமாக முன்னேறிக் கொண்டிருந்தது என்று அதன் 1988 முன்னோக்குகள் ஆவணத்தில் எச்சரித்தது. அது கூறியது:

கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனா, வியட்நாம் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில், அதிகாரத்துவங்கள், தமது தேசியப் பொருளாதாரங்களை உலக முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைப்பதற்கு, சோவியத் ஒன்றியத்தை விடவும் மிக துரித கதியில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கு சீனாவில் மிக முன்னேறிய நிலையில் உள்ளது. மாவோவின் சடலம் பொதுமக்கள் பார்வைக்காக வாசனைத்திரவியமிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவரது மரபு ஏற்கனவே நாற்றம் பிடித்த தன்மையின் முன்னேறியதொரு கட்டத்தில் இருக்கிறது. அவருக்கு அடுத்துவந்தவர்கள் திட்டமிட்ட பொருளாதாரத்தில் எஞ்சியிருந்த அத்தனையையும் அகற்றுவதை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். 1949க்குப் பின்னர் கூட்டுற்பத்திக்குள் கொண்டுவரப்பட்ட கிட்டத்தட்ட அத்தனை நிலங்களுமே தனியார் உடமைகளாய் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன, அத்துடன் “பணக்காரராவது அற்புதமானது” என்ற அரசாங்க-ஆதர்ச சுலோகத்தின் கீழ், முதலாளித்துவ உறவுகள் நாட்டுப்புறங்களில் செழித்துக் கொண்டிருக்கின்றன.

அதன்பின் ஒன்பதே மாதங்களின் பின்னர், தியனென்மென் சதுக்க படுகொலையானது மாவோயிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையை ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்தது. ICFI மட்டுமே இந்த அபாயங்கள் குறித்து எச்சரித்து சீனத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை முன்வைத்த ஒரேயொரு அரசியல் கட்சியாக இருந்தது.

நான்காம் அகிலம் இதழின் தலையங்கம் விளக்கியது:

1985-86 உடைவில் ஒன்றையொன்று எதிர்த்து நின்ற இரண்டு போக்குகளும், இன்று சீன நிகழ்வுகளின் தடையரண்களின் எதிரெதிர் பக்கங்களில் தங்களைக் காண்கின்றன. அனைத்துலகக் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வதேசியப் போக்கு, சர்வதேச சோசலிசம் மற்றும் அரசியல் புரட்சியின் பேரில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களது போராட்டத்தை பாதுகாக்கிறது. WRP இன் ஓடுகாலித் தலைமையாலும், மற்ற அனைவரினும் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டராலும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட குட்டி-முதலாளித்துவ தேசியவாதப் போக்கு, இந்த வடிவம் அல்லது இன்னொரு வடிவம் என ஏதேனுமொரு வடிவத்தில், ஸ்ராலினிஸ்டுகளுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது.

சீனப் புரட்சி

நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவாக சீனாவில் ஒரு புரட்சிகரக் கட்சியை ஸ்தாபிப்பதற்கு, இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில், தொழிலாள வர்க்கம் பெற்ற மூலோபாய அனுபவங்களைக் குறித்த ஒரு புரிதல் இன்றியமையாததாகும். 1989 ஜூன் 8 அன்றான அனைத்துலகக் குழுவின் அறிக்கை, சீனாவில் மாவோயிசத்திற்கு எதிராய், உண்மையான மார்க்சிசத்திற்கான, அதாவது ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் அமைந்திருக்கும் அதிமுக்கியமான பிரச்சினைகள் குறித்த ஒரு இரத்தினச் சுருக்கத்தை வழங்கியது. மாவோயிசம் என்பது சோவியத் ஸ்ராலினிசத்திற்கான ஒரு புரட்சிகர மாற்றாக இல்லை, மாறாக ”தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் அதே பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டத்தில் வேரூன்றிய அதன் சீன வகையாகவே இருந்தது என்பதை அது தெளிவுபடுத்தியது.

அந்த அறிக்கை விளக்கியது:

பெய்ஜிங் ஆட்சியின் பரிணாமவளர்ச்சியானது, மாவோயிசம் வெறுமனே ஸ்ராலினிசத்தின் ஒரு முற்போக்கான வகை மட்டுமல்ல, மாறாக ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தின் காலாவதியான “மரபுவழி” (orthodox) மார்க்சிசத்தை விஞ்சிய ஒரு உண்மையான புரட்சிகர சித்தாந்தமும் கூட என்பதாக கடந்த 40 ஆண்டுகளாக கூறிவரும் குட்டி-முதலாளித்துவப் போக்குகள் அத்தனையின் மீதுமான ஒரு அழுத்தமான வரலாற்றுக் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தை மிகவும் விடாப்பிடியாக பின்பற்றி வந்திருப்பவர்களான பப்லோவாதிகளைப் பொறுத்தவரை மாவோயிசம் எடுத்துக்காட்டியிருந்தது என்னவென்றால், சோசலிசத்தை சாதிப்பதென்பது உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்கக் கட்சியை கட்டியெழுப்புவதை சார்ந்திருக்கவில்லை. அதைவிடவும், பெருவாரியாக விவசாயிகளை அல்லது மற்ற பாட்டாளி-வர்க்கமல்லாத சக்திகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் அதிகாரத்திற்கு வரமுடியும், அதன்பின் ஒரு தேசியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பினுள்ளாக, சமூகத்தின் சோசலிச உருமாற்றத்தை நடத்த முடியும். தொழிலாள வர்க்கம் சுயாதீனமாய் அரசியல் அணிதிரட்டப்படுவதையும் அதன் சொந்த அதிகார அங்கங்களை உருவாக்குவதையும் இந்த நிகழ்ச்சிப்போக்கு அவசியமாகக் கொள்ளவில்லை — சொல்லப்போனால், இல்லாது செய்து விட்டது.

இந்த வாதமானது, எதார்த்தத்தில், பொதுவாக ஸ்ராலினிசத்திற்கும் குறிப்பாக மாவோ சேதுங்கின் கொள்கைகளுக்குமான ஒரு வசதியான வக்காலத்தாக இருந்ததற்கு மேலாக ஏதுமில்லை. 1927 இல் சியாங் கேய்-ஷேக்கின் கரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தலைசீவப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில், சீனப் பாட்டாளி வர்க்கம் ஸ்ராலினிஸ்டுகளால் கைவிடப்பட்டதை நியாயப்படுத்த இது சேவைசெய்தது. சீன முதலாளித்துவத்துடன் கூட்டு சேரும் ஸ்ராலினின் கொள்கையால் விளைந்த இந்தத் தோல்வியில் இருந்து மாவோ, நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையில் புரட்சிகரக் கட்சியை அபிவிருத்தி செய்ய முயல்வது பயனற்றது என்ற “படிப்பினை”யை தேற்றம் செய்தார். பதிலாக, கம்யூனிஸ்ட் கட்சியானது இன்னொரு சமூக சக்தியான விவசாயிகளை தனக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும், என்றார்.

1949 சீனப் புரட்சியானது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும், அத்துடன் சீனா போன்ற தாமதமாக முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து எழுந்த புரட்சிகரப் போராட்ட அலையின் பகுதியாக இருந்தது. பிற்போக்கான மற்றும் நெருக்கடி-நிறைந்திருந்த கோமின்டோங் ஆட்சி தூக்கிவீசப்பட்டமையானது, நாட்டை பிளவுபடுத்தி அதனை அழுக்கடைந்த மற்றும் பிற்போக்கான நிலையில் அமிழ்த்தி வைத்திருந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பிரம்மாண்டமான அடியாக இருந்தது. அரசியல் எழுச்சி மற்றும் போரின் பல தசாப்தங்களுக்குப் பின்னர் பொருளாதார பாதுகாப்பிற்கும், அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கும், மற்றும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்திற்கும் மிகப்பெருவாரியான மக்கள் கொண்டிருந்த அபிலாசைகளை அது வெளிப்படுத்தியது.

1949 சீனப் புரட்சியின் போது பெய்ஜிங்கிற்குள் நுழையும் மக்கள் விடுதலை இராணுவம்

எவ்வாறாயினும், புரட்சியின் பாதையும் அதனையடுத்து 1949 இல் மாவோ சேதுங்கினால் பிரகடனம் செய்யப்பட்ட சீன மக்கள் குடியரசின் (PRC) பரிணாம வளர்ச்சியும், 1925-27 இரண்டாம் சீனப் புரட்சியை ஸ்ராலின் காட்டிக்கொடுத்ததை ஒட்டி CCP இல் மேலாதிக்கம் செலுத்திய ஸ்ராலினிசத்தால் திரிக்கப்பட்டும் உருக்குலைக்கப்பட்டும் இருந்தது. இளம் CCP ஐ ஸ்ராலின் முதலாளித்துவ தேசியவாத கோமிங்டாங்கிற்கு கீழ்ப்படியச் செய்தமையானது, சீன கம்யூனிஸ்டுகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் 1927 ஏப்ரலிலும் அதன்பின் மறுபடியும் 1927 மேயிலும் அழிவுகரமான தாக்குதல்கள் ஏற்பட்டதில் முடிந்தது. நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படையில், ஸ்ராலினின் காட்டிக்கொடுப்பு குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை ஆதரித்த CCP தலைவர்களும் அங்கத்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

CCP விவசாயிகளை நோக்கித் திரும்புவது குறித்தும் அதன் விவசாய இராணுவம் பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் நுழைகின்ற நிலையில் தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கக் கூடிய அபாயங்கள் குறித்தும் ட்ரொட்ஸ்கி 1932 இல் எச்சரித்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்து ஜப்பானிய ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், மாவோயிசத் தலைமையானது, மாஸ்கோ சர்வதேச அளவில் ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலைப்பாட்டை பின்பற்றி, ஆரம்பத்தில், ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருந்த போர்க்காலக் கூட்டணியை தொடர்வதற்கும் சியாங் கேய்-ஷேக் உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் விழைந்தது. பின்னர் தாமதமாகத்தான் அது 1947 அக்டோபரில் கோமின்டாங்கை (Kuomintang) தூக்கிவீச அழைப்புவிடுத்தது. CCP தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை, மேலும் மேலும் "புதிய ஜனநாயகம்" என்ற மாவோவின் முன்னோக்கின் ஒரு பகுதியாகவும், குட்டி முதலாளித்துவ மற்றும் தேசிய முதலாளித்துவத்தின் பிரிவுகளுடனான கூட்டணியின் ஒரு பகுதியாகவும், நகரங்களுக்குள் நுழைந்த சமயத்தில் தனியார் சொத்துக்களைப் பாதுகாத்தது.

சீன ட்ரொட்ஸ்கிஸ்டான பெங் சூஷி தனது எழுத்துக்களில், CCP இன் புதிய ஆட்சி தொழிலாள வர்க்கத்திற்கு காட்டிய குரோதத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்; ஊதியங்கள் மற்றும் ஒடுக்குமுறை நிலைமைகள் தொடர்பாக தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள் கொடூரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். அவரது உதாரணங்களில் ஒன்றை மேற்கோளிடுவதானால்:

ஹோபே மாகாணத்தில் உள்ள சிங் ஹ்ஸிங் நிலக்கரிச் சுரங்கங்களில், சோவியத் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களின் கொடூரம் மற்றும் ஆணவத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கலகம் செய்தபோது [1950 மே], அந்த கலகத்தை ஒடுக்க CCP மிகப்பெரும் எண்ணிக்கையில் துருப்புகளை அனுப்பியது. 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் மரணமடைந்தார்கள் அல்லது காயமடைந்தார்கள், அத்துடன் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு மஞ்சூரியா அல்லது சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். [அதிகாரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, பெங் சூஷி, பக்.132]

கொரியப் போரினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் “விடுதலை” செய்யப்படும் வாய்ப்பைக் கண்ட முதலாளித்துவ அடுக்குகளால் மேற்கொள்ளப்பட்ட உள்முக சதி ஆகியவற்றின் பின்னர் தான் மாவோயிச ஆட்சியானது, சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ பாணியில் தனியார் சொத்துக்களை பரந்த அளவில் பறிமுதல் செய்வதை நோக்கியும் மையப்பட்ட திட்டமிடலை நோக்கியும் திரும்பியது. கொரியப் போருக்கும் தொழிலாள வர்க்கத்தில் அமைதியின்மை பெருகி வந்ததற்கு மத்தியில் தான் CCP 1952 டிசம்பரில் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அத்தனை பேரையும் சுற்றிவளைத்து சிறையிலடைத்தது.

சீன ட்ரொட்ஸ்கிஸ்டான பெங் சூஷி

CCP யால் எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பத்தில், போரினால்-நாசம் செய்யப்பட்டிருந்த பொருளாதாரத்தின் ஒரு மறுமலர்ச்சிக்கு இட்டுச்சென்றது என்ற அதேநேரத்தில், “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற அதன் தேசியத் தன்னிறைவு முன்னோக்கு தவிர்க்கவியலாமல் பொருளாதார மற்றும் சமூகக் குழப்பம் மோசமடைவதற்கும், CCP அதிகாரத்துவம் தீர்வு கொண்டிராத நெருக்கடிகளுக்கும் இட்டுச் சென்றது. விளைவு கடுமையான உள்முக கன்னை யுத்தங்களும் திடீர் திடீர் திருப்பங்கள் மற்றும் மாற்றங்களும் நடந்தன. மாவோவின் “முன்னோக்கிய மாபெரும் பாய்ச்சல்” இன் கீழமைந்திருந்த ஒரு சோசலிச சமூகத்திற்கான அவரது கற்பனாவாதத் திட்டங்கள் பொருளாதாரப் பெருந்துயரிலும் பரந்த பட்டினி நிலையிலும் முடிவடைந்தது. லியு ஷவோகி (Liu Shaoqi) தலைமையிலான மாவோவின் கன்னை எதிர்ப்பாளர்கள், கனரகத் தொழிற்துறை மீதான முக்கியத்துவத்துடனான சோவியத் அதிகாரத்துவ திட்டமிடல் மாதிரியைப் பின்பற்றினர், ஆனால் இது எந்த மாற்றையும் வழங்கவில்லை. சோவியத் ஒன்றியத்துடனான 1961-63 உடைவினாலும் சீனாவை முழுமையாக தனிமைப்படச் செய்யும் விதத்தில் சோவியத்தின் உதவி மற்றும் ஆலோசகர்கள் திரும்பிப் பெறப்பட்டதாலும் பொருளாதார நெருக்கடி மிகப்பெருமளவில் மோசமடைந்தது.

பல்வேறு நவ-மாவோவாத போக்குகளும் இன்று பயன்படுத்துகின்ற மாவோவாத கட்டுக்கதைகளில் பெரும்பான்மையானவை மாவோவின் மகத்தான பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி (Great Proletarian Cultural Revolution) என்று சொல்லப்படுவதில் இருந்து தேற்றம் செய்யப்படுவதாகும்; அது மகத்தானதாகவும் இருக்கவில்லை, பாட்டாளி வர்க்கத்தினதாகவும் இருக்கவில்லை, அல்லது புரட்சிகரமானதாகவும் இருக்கவில்லை. அது கலாச்சாரத்தை ஸ்ராலினிச அற்பங்களைக் கொண்டு பிரதியிடுவதாக, கலாச்சாரத்தை நோக்கி முற்றிலும் பிற்போக்கானதொரு மனோபாவத்தை —கடந்தகால கலாச்சார முன்னேற்றங்களை கண்டனம் செய்வது மற்றும் அழிப்பது— எடுத்தது. யதார்த்தத்தில், மாவோவின் கலாச்சாரப் புரட்சி என்பது ”முதலாளித்துவ பாதையமைப்பாளர்கள்” (“capitalist roaders”) என்று அவர் முத்திரை குத்திய அவரது எதிர்ப்பாளர்களை வெளியேற்றுவதற்கான அவரது இறுதியானதும், அவநம்பிக்கையானதுமான ஒரு முயற்சியாக இருந்தது. அது விரைவில் கட்டுப்பாட்டை மீறிச் சென்று, ஆட்சியின் இருப்பையே அச்சுறுத்திய குழப்பமான மற்றும் கொந்தளிப்பான சமூகப் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது. ஷாங்காய் தொழிலாளர்கள், மாவோவின் முழக்கமான “தலைமையகங்களைத் தகர்ப்போம்” என்பதை வார்த்தைமாறாமல் எடுத்துக் கொண்டு பாரிய வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டு, 1967 இல் சுதந்திர ஷாங்காய் மக்கள் கம்யூன் ஐ உருவாக்கியபோது, மாவோ இராணுவத்தைக் கொண்டுவந்தார்.

IC இன் அறிக்கை இதனை பற்றி பின்வருமாறு எழுதியது:

இந்த தொழிலாள வர்க்க போராட்ட வெடிப்பை நோக்கிய மாவோயிசத் தலைமையின் மனோபாவம் கலாச்சாரப் புரட்சியின் “பாட்டாளி வர்க்க” தன்மை குறித்த அவர்களது மோசடியான கூற்றுகளை அம்பலப்படுத்தியது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் “பொருளாதாரவாத”த்திற்கு அடிபணிந்து விட்டதாக அதிகாரத்துவவாதிகள் கண்டனம் செய்தனர்; கலாச்சாரப் புரட்சிக் குழுவின் தலைவராகவும், இந்தக் காலகட்டத்தில் மாவோவின் பிரதான ஊதுகுழலாகவும் இருந்தவர் ஷாங்காய் பாட்டாளி வர்க்கத்தை நோக்கி ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்: “தொழிலாளர்களாய், அவர்களது பிரதான பணி, வேலைசெய்வது தான். புரட்சியில் சேர்வது எல்லாம் இரண்டாம்பட்சம் மட்டுமே. ஆகவே அவர்கள் வேலைக்குத் திரும்பியாக வேண்டும்.”

மாவோவும் அவரது கன்னையும் “முதலாளித்துவ பாதையமைப்பாளர்கள்” ஐ கண்டனம் செய்து, சோசலிசத்திற்கான தமது இணக்கத்தை பிரகடனம் செய்த அதேநேரத்தில், அவர்கள் வேறு மாற்று எதனையும் வழங்க முடியவில்லை. தன்னிறைவு பெற்ற சீனா குறித்த மாவோவின் கற்பனைக்கனா ஒரு பெருநாசமாக நிரூபணமானது. நாட்டை உலுக்கிக் கொண்டிருந்த தீவிரமான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறனற்ற நிலையிலும், சோவியத் ஒன்றியத்துடன் ஒரு இராணுவ மோதலுக்கு முகம்கொடுத்த நிலையிலும், CCP அதிகாரத்துவமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு சோவியத்-விரோத கூட்டணியை ஏற்படுத்தியது, இதுவே உலக முதலாளித்துவத்திற்குள் சீனா ஒருங்கிணைவதற்கான அடிப்படையை உருவாக்கியது. டெங் ஷியாவோப்பிங் தான் சந்தை சீர்திருத்தங்களுக்கு தொடக்கமளித்தவராக குறிப்பிடப்படுகின்ற போதிலும், 1972 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனுடன் மாவோ ஏற்படுத்திக் கொண்ட நல்லிணக்கம் தான் அந்நிய முதலீட்டுக்கான அத்தியாவசிய அரசியல் மற்றும் இராஜதந்திரரீதியான முன்-நிபந்தனையாக இருந்தது, மேற்குடனான வர்த்தகத்தை அதிகரித்தது.

ஆயினும், ஏகாதிபத்தியத்தை நோக்கியும் முதலாளித்துவச் சந்தையை நோக்கியும் திரும்பியது எதனையும் தீர்த்துவிடவில்லை. கலாச்சாரப் புரட்சியின் சமயத்தில் “இரண்டாம் எண் முதலாளித்துவ பாதையமைப்பாளர்” (“No 2 capitalist roader) என்று சொல்லி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த டெங் ஷியாவோபிங் மறுவாழ்வளிக்கப்பட்டார், 1976 இல் மாவோவின் மரணத்திற்குப் பின்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் செல்வாக்கான மனிதராகவும் வளர்ந்தார். 1978 தொடங்கி, டெங் ஷியாவோபிங் அவரது அலைபோன்ற “சீருதிருத்தம் மற்றும் திறந்துவிடல்” திட்டநிரலுக்கு —வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கென நான்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது, நாட்டுப்புறங்களில் கம்யூன்களை அகற்றுவது, தனியார் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவது மற்றும் விலையை சந்தை நிர்ணயித்துக் கொள்ள அதிகமான அளவில் அனுமதிப்பது— தொடக்கமளித்தார். அதனால் விளைந்தவை: தனியார் நிறுவனங்களின், குறிப்பாக நாட்டுப்புறங்களில், ஒரு பரந்த விரிவாக்கம்; சமூக சமத்துவமின்மையின் துரிதமான வளர்ச்சி; CCP அதிகாரத்துவவாதிகளின் கொள்ளை மற்றும் ஊழல்; வேலைவாய்ப்பின்மையின் வளர்ச்சி மற்றும் எகிறும் பணவீக்கம். இந்த சமூக வெடிமருந்து தான் ஜனநாயக உரிமைகள் தொடர்பான மாணவர் ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டு 1989 இல் வெடித்தது.

தியானென்மென் சதுக்க படுகொலையானது சீனாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும், மற்றும் நான்காம் அகிலத்திற்கும் ஒரு வெகுமுக்கிய அனுபவமாக இருந்தது. சீனாவிலான நிகழ்வுகள் சர்வதேச அளவில் ஸ்ராலினிசம் கண்ட நெருக்கடியுடன் முழுமையாகப் பிணைந்தவையாக இருந்தன என்பதுடன், 1989 நவம்பரில் பேர்லின் சுவர் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் துரிதமான உருக்குலைவு, மற்றும் 1992 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவற்றுக்கு கட்டியம் கூறியவையாகவும் இருந்தன.

இந்த படுகொலைக்கு முன்னும் பின்னும் சர்வதேச அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ICFIம் அதன் பிரிவுகளும் தீவிரத்துடன் தலையீடு செய்தன, சீனாவில் அரசியல் புரட்சிக்கு அழைப்பு விடுத்ததும் சீன மாணவர்கள் மற்றும் சீனவாசிகள் மத்தியிலான பிரச்சினைகளை தெளிவுபடுத்த முனைந்ததுமான ICFI அறிக்கையின் பிரதிகளை விநியோகித்தன. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பெய்ஜிங்கிற்குள் டாங்கிகள் உருண்டு வந்தபின்னர் அரசியல்புரட்சிக்கான எந்த சாத்தியமும் முடிந்து விட்டிருந்ததாகத் தோன்றக் கூடும், ஆனால், உண்மையில், CCP ஆட்சியானது எவ்வாறு முன்செல்வது என்பதில் பிளவுபட்டிருந்த நிலையிலும் மக்களின் குரோதத்திற்கு முகம்கொடுத்திருந்த நிலையிலும் ஆழ்ந்த நெருக்கடியில் மூழ்கியிருந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள், சந்தைக்கு கடிவாளம் போடுவது மற்றும் மெதுவான வேகத்திலான வளர்ச்சி ஆகியவற்றை ஆதரித்த லி பெங் மற்றும் அவரது ஆதரவாளர்களான சென் யூன் போன்றவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படுவதே உடனடி விளைவாக இருந்தது. பெய்ஜிங்கிலான விவாதம், கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தக் கன்னை சீனாவுக்கான முன்மாதிரியாக வலியுறுத்தி வந்த சோவியத் ஒன்றியத்தின் அபிவிருத்திகளுடன் பிணைந்ததாய் இருந்தது. CCP அதிகாரத்துவத்தில் இருந்த அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் மைய திட்டமிடலுடன் தங்களின் சலுகைகள் பிணைந்திருக்கக் கண்ட அடுக்குகளை லி பெங்கும் சென் யுன்னும் பிரதிநிதித்துவம் செய்தனர் என்ற அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட எழுச்சியைக் குறித்து ஆழமான அச்சம் அவர்களுக்கு இருந்தது என்பதால் அவர்கள் தியனென்மென் சதுக்க ஆர்ப்பாட்டங்களுக்கு, “சீர்திருத்த மற்றும் திறந்துவிடல்” கொள்கைகளை குற்றம் சாட்டினர்.

ஆனால், டெங் ஷியாவோபிங்கோ, இத்தகையதொரு அணுகுமுறை பொருளாதாரத் தேக்கத்தில் விளையும் என்றும், சந்தை சீர்திருத்தங்களது ஒரு அதிரடி வேக அதிகரிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார். பாரிய வேலைவாய்ப்பின்மையை தவிர்ப்பதற்கும் சமூக அமைதியின்மையைத் தடுப்பதற்கும் உயர் வளர்ச்சி விகிதங்கள் அவசியமாய் இருந்தன என்றார். டெங் ஷியாவோப்பிங்கின் புதுப்பட்ட மேலெழுச்சிக்கு அடிப்படையாக அமைந்த 1992 இலான அவரது தெற்கத்திய சுற்றுப்பயணம், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட சில நாட்களில் நடைபெற்றது என்பது வெறுமனே தற்செயலானதல்ல. முதலாம் வளைகுடாப் போரில் அமெரிக்க ஆயுதங்களால் ஈராக் நாசம் செய்யப்பட்டதைக் கண்ணுற்று, மக்கள் விடுதலை இராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு பணமும் ஆயுதங்களும் வழங்க டெங் ஷியாவோபிங்கை நோக்கி நின்ற உயர் இராணுவ ஆளுமைகளின் ஆதரவையும் டெங் வென்றிருந்தார். மிக முக்கியமாக, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் மாவோயிச முன்னோக்கின் அப்பட்டமான திவால்நிலையின் பிரதிபலிப்பாக, அவரது போட்டியாளர்களிடம் முன்வைப்பதற்கென எந்தவொரு மாற்று பொருளாதார முன்னோக்கும் இருக்கவில்லை.

சீனா, 30 ஆண்டுகள் கடந்து

இன்று முப்பது ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், CCP கீழமைந்த பொருளாதார முரண்பாடுகள் அல்லது புவியரசியல் சங்கடங்களில் எதனையும் வெற்றி கண்டிருக்கவில்லை. மிகப்பரந்த அளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு போலிஸ் அரசு எந்திரத்தின் மூலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சமூகப் பதட்டங்கள், இன்னும கூர்மையானவையாகவே ஆகியிருக்கின்றன.

ஒரு அசாதாரணமான பொருளாதார விரிவாக்கம் நடைபெற்றிருக்கிறது. 1992க்கும் 2010க்கும் இடையில், சீனப் பொருளாதாரம் 11 மடங்கு வளர்ந்திருக்கிறது. 1995 இல், விக்கிபீடியா புள்ளிவிவரப்படி, சீனா உலகின் எட்டாவது பெரும் பொருளாதாரமாக இருந்தது, 2011க்குள்ளாக, அது ஜப்பானை முந்தி உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரத்தின் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த வளர்ச்சி வேகங்கள், முதலாவதாய், 1949 இன் தேட்டங்களையும் —ஒரு கல்விபெற்ற மற்றும் திறன்மிக்க தொழிலாளர் படை, அடிப்படைத் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவது— இரண்டாவதாய், தனித்துவமிக்க மலிவு-உழைப்புக் களமாக உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் இடத்தையும் சார்ந்திருந்தன. 1992க்குப் பின்னர், வெளிநாட்டு முதலீடும், அவற்றுடன் வெளிநாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவமும், நாட்டிற்குள் வெள்ளமெனப் பாய்ந்தது.

சீனாவை “ஏகாதிபத்தியம்” என்று குணாம்சப்படுத்துகின்ற போலி-இடது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வருணனையாளர்களும் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய பொருளாதாரக் குறியீடுகளை அவற்றின் சர்வதேச மற்றும் வரலாற்றுப் பொருட்சூழலில் இருந்து பிய்த்தெடுத்து பற்றிக் கொள்கின்றனர். சீனாவின் மேலதிக பொருளாதார விரிவாக்கமானது, அமெரிக்காவினால் மேலாதிக்கம் செய்யப்பட்டதும் நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்ட ஏகாதிபத்திய ஒழுங்கிற்கு எதிராகச் செல்வது மேலும் மேலும் அதிகமாய் வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும், சீனாவின் பொருளாதார விரிவாக்கம் அவற்றின் பொருளாதார மற்றும் புவியரசியல் நலன்களை சவால் செய்யாதவரையில், மலிவு சீன உழைப்பின் இலாபங்களை மகிழ்ச்சியுடன் அறுவடை செய்தன. சீனா, அமெரிக்க மேலாதிக்கத்தை சவால் செய்வதை தடுப்பதற்கு, ஒபாமாவின் கீழும் இப்போது ட்ரம்ப்பின் கீழும், அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது பொருளாதார வலிமை மற்றும் இராணுவ வலிமையின் முழு பலத்தையும் பயன்படுத்துவதற்கு தீர்மானத்துடன் இருக்கிறது. சீனா “சர்வதேச விதிகள் அடிப்படையிலான அமைப்புமுறை”க்கு, அதாவது வாஷிங்டன்தான் விதிகளை உருவாக்குவதாய் இருக்கும், இப்போதைய உலக ஏகாதிபத்திய ஒழுங்கிற்கு, இணங்கி நடந்தாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நிரந்தர பல்லவியாக இருக்கிறது.

போரை நோக்கிய விரைவான வீழ்ச்சியின் மத்தியில், CCP, சீனாவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி மோதலைத் தடுக்க சக்திபடைத்த ஒரேயொரு சமூக சக்தியாக இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த விண்ணப்பமும் செய்வதற்கு உயிர்ப்பான திறனற்று இருக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவமானது ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலைக் காட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தைக் கண்டுதான் மிகக் கூடுதல் பயம் கொண்டதாயிருக்கிறது. ஒரு சமூக நேரவெடிகுண்டின் (time bomb) மேலே தான் அமர்ந்திருப்பதைக் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கும் அது, இராணுவத்திற்குச் செலவிடுவதைக் காட்டிலும் அதிகமாய் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காய் செலவிடுகிறது.

சீனாவில் சமூக சமத்துவமின்மையின் திகைப்பூட்டும் வளர்ச்சியானது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டமை மற்றும் தனியார்மயமாக்கப்பட்டமை, தொட்டில் முதல் சுடுகாடு வரையான நல உதவிகளின் அழிப்பு மற்றும் ஒரு சிறு எண்ணிக்கையிலான பெருஞ்செல்வந்தர்களது கரங்களில் மலை போன்ற செல்வம் குவிந்தமை ஆகியவற்றுடன் கரம்கோர்த்து முன்னேறியிருக்கிறது. 2019 இல் குறைந்தபட்சம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துடையவர்கள் தான் சீனாவின் ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் மேல் நூறு இடங்களை பிடிக்க முடிந்தது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தவர் அலிபாபா குழுமத்தின் நிறைவேற்று இயக்குநரான ஜாக் மா, இவருடைய நிகர சொத்துமதிப்பு 38 பில்லியன் டாலர், இது 2018 மதிப்பில் இருந்து 3.4 பில்லியன் டாலர் உயர்வாகும். சீனாவிலுள்ள தலைமை ஐந்து பெரும் செல்வந்தர்களின் மொத்த சொத்துமதிப்பு 155.9 பில்லியன் டாலராகும். இந்த அடுக்கினையே CCP பிரதிநிதித்துவம் செய்கிறது, இவர்களுடன் தான் அது நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது. இவர்களில் ஒரு சிலர் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாக இருப்பதோடு உயர் அரசியல் ஆலோசனை அமைப்புகளிலும் பதவிகள் வகிக்கின்றனர்.

இதற்கு நேரெதிராக, சீனாவில் ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு சுமார் 370 டாலர்களாக அல்லது வருடத்திற்கு சுமார் 4,440 டாலர்களாக உள்ளது. எனினும் அதுவும் கூட, தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினர், குறிப்பாக, உள்நாட்டு கிராமப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்து, அடிப்படை சமூக உரிமைகளும் கூட இல்லாதவர்களாய் இருக்கும் பத்து மில்லியன் கணக்கான மக்கள், முகம்கொடுக்கின்ற நிலைமையை வெளிச்சத்தில் காட்டாமல் செய்து விடுகிறது. குறைவூதியங்களும் ஊதியமில்லாமையும் பரவலாய் இருக்கிறது. தொழிற்சாலைகளில் நிலைமைகள் ஒடுக்குமுறையானவையாக, பலசமயங்களில் ஆரோக்கியமற்றவையாகவும் ஆபத்தானவையாகவும் உள்ளன. அனைத்து சீனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது வேலையிடங்களில், எதிர்ப்புகள், போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதாக, கிட்டத்தட்ட CCP அதிகாரத்துவத்தின் கரமாக செயல்படுகிறது.

முதலாளித்துவச் சந்தை மற்றும் ஒட்டச் சுரண்டல் ஆகியவற்றின் மீள்வருகையானது, 1949 புரட்சிக்குப் பின்னர் பெருமளவில் துடைத்தெறியப்பட்டிருந்த குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமைத் தொழிலாளர் முறை, விபச்சாரம், போதைமருந்துகள் புழக்கம் ஆகிய சமூகக் கேடுகளின் ஒரு மீள்வருகைக்கும் இட்டுச்சென்றிருக்கிறது.

ஒரு சில குறியீடுகளைக் குறிப்பிடுவதானால்:

 உலக அடிமைத்தன குறியீடு (The Global Slavery Index) மதிப்பீட்டின் படி, 2016 இல் எந்தவொரு நாளிலும், சீனாவில் 3.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், நாட்டின் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 2.8 பேர் என்ற விகிதத்தில், நவீன அடிமைத்தன நிலைமைகளின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்தனர். [Global Slavery Index]

 சீனாவில் பாலியல் தொழிலாளர்களின் துல்லியமான எண்ணிக்கை என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது... 2013 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு, போலிஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இந்த எண்ணிக்கை நான்கு முதல் ஆறு மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிட்டது. சீனாவில் நான்கு மில்லியன் முதல் 10 மில்லியன் வரை பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது பொதுவாக உடன்படும் கருத்தாக இருக்கிறது. [சவுத் சீனா மார்னிங் போஸ்ட், 2018]

 2016 இன் பிற்பகுதி நிலவரப்படி, சீனாவில் 2.51 பேர் மில்லியன் போதை மருந்து பழக்கத்தினர் இருந்தனர், இது முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 7 சதவீத அதிகரிப்பாகும் என்று சீனாவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் 2017 அறிக்கை ஒன்று மதிப்பிட்டிருந்தது. [டைம் இதழ், 2019]

இன்று ICFI எதிர்கொள்ளும் அரசியல் பணிகள் என்ன?

சீனாவில் நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவை ஸ்தாபிப்பது, அல்லது, துல்லியமாய் சொல்வதானால் மீள்ஸ்தாபிப்பது நிச்சயமாய் ஒரு முக்கியமான மூலோபாயப் பணி ஆகும். சீனத் தொழிலாள வர்க்கம்தான் உலகில் மிகப்பெரியதாகும், ஒரு மதிப்பீட்டின் படி, இதன் எண்ணிக்கை 400 மில்லியனைத் தொடுவதாகும், இந்த எண்ணிக்கை உலகின் அநேக நாடுகளது மக்கள்தொகைகளை விடவும் பெரியதாகும். மேலும், சீனா 1949க்குப் பின்னர், 1989க்குப் பின் இன்னும் அதிகமாய் மிகப்பெருமளவில் உருமாற்றமடைந்திருக்கிறது, அது இனியும் ஒரு விவசாய அல்லது கிராமப்புற சமூகம் மேலோங்கியதல்ல, மாறாக ஒரு நகர்ப்புற சமூகம் மேலோங்கியதாகும். மக்களில் பெரும்பான்மையானோர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்கின்றனர், பலரும் மிகப்பரந்த அளவில் விரிவாக்கம் கண்டிருக்கும், அல்லது முன்னிருந்திராத மிகப்பெரும் நகரங்களில் வாழ்கின்றனர்.

இதுதவிர, ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மீதான அனைத்துலகக் குழுவின் அறிக்கை தெளிவாக்கியதைப் போல, தனது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள நப்பாசையுடன் பிரயத்தனம் செய்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்களது ஒரு மைய இலக்காக சீனா இருக்கிறது. போர் உந்துதலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசப் போராட்டம், அவசியமான வகையில் சீனாவில் உள்ள தொழிலாளர்களை உள்ளடக்கியதாக இருந்தாக வேண்டும்.

சர்வதேச அளவில் இருப்பதைப் போலவே, சீனாவில் உள்ள தொழிலாள வர்க்கமும் உலகெங்குமான வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியின் பகுதியாக இருக்கிறது, அதிகமான அளவில் இருக்கவும் போகிறது. கிடைக்கத்தக்கதாய் இருக்கும் மிகக் குறைந்த புள்ளிவிவரங்களும் கூட தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களது அதிகரிக்கும் மட்டங்களை குறித்துக்காட்டுகின்றன. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களது மாணவர்களது ஒரு அடுக்கு இந்தப் போராட்டங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது, அவர்களது ஈடுபாட்டிற்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையானது, இந்தப் போராட்டங்கள் ஒரு அரசியல் குணாம்சத்தை எடுக்கவிருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.

இப்போது ஆயுட்கால ஜனாதிபதியாக இருக்கும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கரங்களில் அசாதாரண அளவுக்கான அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பது சீனாவிற்குள் நிலவுகிற தீவிர சமூக மற்றும் அரசியல் பதட்டங்களின் தெளிவான அறிகுறியாக இருக்கிறது. ICFI சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் முன்னோக்கில் அறிவித்ததைப் போல, ஷி, CCP அதிகாரத்துவத்தின் போட்டிக் கன்னைகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்து கொண்டும், எல்லாவற்றுக்கும் மேல், அத்தனை விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பையும் ஒடுக்குகின்ற வகையில் அதன் பரந்த போலிஸ் அரசு எந்திரத்தை வலுப்படுத்திக் கொண்டும், சீன குணாம்சங்களுடனான ஒரு போனபார்ட்டிசவாதியாக இருக்கிறார்.

ஸ்ராலினிச ஆட்சியானது, 1989 ஜூன் நிகழ்வுகள் குறித்த அதன் மதிப்பீட்டை எந்தவிதத்திலும் திருத்திக் கொள்வதற்கும், அல்லது அவற்றில் பலியானவர்களுக்கு அரசியல் ரீதியாக மறுநிவாரணமளிப்பதற்குமான அத்தனை அழைப்புகளையும் இதுநாள் வரையில் தவிர்த்து வந்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக இராணுவச் சட்டத்தை அறிவித்த லி பெங் இறந்த தினமான ஜூலை 22 அன்று, அரசுக்கு-சொந்தமான உத்தியோகப்பூர்வ Xinhua செய்திமுகமை அறிவித்தது: “தோழர் லி பெங் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார், பொலிட்பீரோவில் இருந்த பெரும்பான்மையான தோழர்களுடன் சேர்ந்து குழப்பத்தைத் தடுத்து நிறுத்தவும் எதிர்ப்புரட்சிகர கலகத்தை அடக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.”

இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக துருப்புகள் மீண்டும் கூட அழைக்கப்படலாம் என்பதற்கான எச்சரிக்கைக்கு நிகரானதாகும். இது பலத்தின் அடையாளமல்ல, மாறாக மிகப்பெரும் பலவீனத்தின் அடையாளமாகும், இது குறிப்பாக வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு வெடிக்கும் தன்மையை கொடுக்கும்.

1989 போராட்டங்களின் விளைமுடிவு தெளிவாக்குவதைப் போல, எல்லாவற்றிலும் நமது முதற்பணிகளாய் இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தை வழிநடத்தக்கூடிய தத்துவார்த்த மற்றும் அரசியல் முன்னோக்கை தெளிவுபடுத்துவதாகும். சோசலிச சர்வதேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை பகுப்பாய்வு செய்வதும், ஏதேனும் ஒரு வடிவில் சீன தேசியவாதத்தின் மீது வேரூன்றியதாக இருக்கும் சீனாவில் முதலாளித்துவ மீட்சியின் மீதான பல மற்றும் பல்வேறு விமர்சகர்களது வேலைத்திட்டங்களில் இருந்து அதனை வேறுபடுத்திக் காட்டுவதும் அவசியமானதாகும். முதல் கை விடயங்களது பற்றாக்குறையால் —ஆட்சியின் சர்வ-வியாபக தணிக்கையால் இது சிக்கலாக்கப்படுகிறது— இந்தப் பணி இன்னும் சிரமமாகிறது. மேலும், இந்த எதிர்க்கட்சி வரிசை அரசியல்போக்குகள் —புதிய இடது, நவ-மாவோவாதிகள்— அனைத்தும் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

வேர்க்கர்ஸ் நியூஸ் மே 26 1989

சீன மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு தெளிவுபடுத்துவதில் மையமாக இருப்பது வரலாற்றுக் கேள்விகள் —சீனாவிலான புரட்சிகளை ஒரு இன்றியமையாத மூலபாகமாகக் கொண்ட சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான மூலோபாய அனுபவங்கள்— ஆகும். ஆஸ்திரேலியாவில் பயிலும் சீன மாணவர்களுடன் நாம் நடத்திய கலந்துரையாடல்களில் இருந்து, லியோன் ட்ரொட்ஸ்கி குறித்தும் 1925-27 சீனப் புரட்சி மீதான ஸ்ராலினின் காட்டிக்கொடுப்பு குறித்தும் மிகக் குறைவாகவே தெரிந்திருக்கிறது அல்லது எதுவும் தெரியாதிருக்கிறது என்பதாய் தென்படுகிறது. 1949 புரட்சி மற்றும் கலாச்சாரப் புரட்சி போன்ற, அதனையடுத்த அபிவிருத்திகள் குறித்த எந்தவொரு அறிவும், ஸ்ராலினிச ஆட்சியின் பிரச்சாரம் மற்றும் பொய்களின் ஊடாகவே கடந்து வருகிறது.

இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு அடுக்கு, பதில்கள் தேடி மாவோயிசத்தை நோக்கியும், அதன் வெற்று “புரட்சிகர” சுலோகங்களை நோக்கியும் திரும்பியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். என்றாலும், சீனாவில் முதலாளித்துவ மீட்சியானது மாவோயிசத்தில் இருந்தான ஒரு முறிவாக இருக்கவில்லை. அது இயல்பாகவே “தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் முட்டுச்சந்தில் இருந்து பிறந்ததாகும். மாவோயிசம் அல்லது சீன ஸ்ராலினிசமானது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலுக்கு அது காட்டிய குரோதம், அகநிலையான விருப்பத்தினை அது வலியுறுத்துவது மற்றும் அனைத்தையும் விட அதன் நாற்றமெடுத்த தேசியவாதம் ஆகியவற்றால் குணாம்சம் பெற்றதாகும். அது, உண்மையான மார்க்சிசத்திற்கு, அதாவது சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் உள்ளிட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் மட்டுமே தாங்கிப் பிடிக்கப்பட்ட சோசலிச சர்வதேசிய முன்னோக்கிற்கு நேரெதிரானதாகும்.

பெய்ஜிங்கில் உள்ள CCP ஆட்சியையும், அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையையும் எதிர்த்துப் போராட அரசியல் வழிகளைத் தேடும் சீனத் தொழிலாளர்களும் இளைஞர்களும் இருப்பார்கள், அவர்கள் அவசியமான சர்வதேசிய முன்னோக்கிற்காக அனைத்துலகக் குழுவை நோக்கித் திரும்புவார்கள் என்பதில் நாம் உறுதிபட நம்பிக்கை கொள்ள முடியும்.

Loading