முன்னோக்கு

பாரிஸ் கம்யூனின் 150 ஆவது ஆண்டுதினம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்றிலிருந்து நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 18, 1871 இல், பாரிஸ் தேசிய காவல்படையின் பீரங்கிகளை பிரெஞ்சு இராணுவம் திருடுவதை தடுக்க பாரிஸின் தொழிலாள வர்க்கம் கிளர்ந்தெழுந்தது. அதற்கு ஒரு வாரம் கழித்து பாரிஸ் கம்யூன் உருவாவதற்கு வழிவகுக்க இருந்த அந்த கிளர்ச்சி உலக வரலாற்று முக்கியத்துவம் கொண்டிருந்தது. வரலாற்றிலேயே முதல்முறையாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி தொழிலாளர்களின் ஓர் அரசை அமைத்தது.

சிப்பாய்கள் துப்பாக்கிச்சூடு நடத்துமாறு கூறிய தமது அதிகாரிகளின் கட்டளைகளை மறுத்து, பாரிஸ் தொழிலாளர்களுடன் சகோதரத்துவத்துடன் இருந்ததால், அடோல்ப் தியேரின் பிரெஞ்சு அரசாங்கம் பாரிஸிலிருந்து வேர்சாய்க்கு பீதியில் ஓடியது. பாரிஸ் மக்கள் ஆயுதமேந்திய நிலையில் தியேர் அரசாங்கம் அந்நகரை கைவிட்டு ஓடியதால், அதிகாரம் தொழிலாளர்களின் கரங்களுக்குச் சென்றது.

மார்ச் 18, 1871 இல் மெனில்மொன்தானில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு தடுப்பரண்

மார்ச் 26 இல், கம்யூனுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிரெஞ்சு முதலாளித்துவ ஆட்சியால் உருவாக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையின் கொடூரமான அளவைக் குறைப்பதற்கும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் உழைக்கும் மக்களை அதன் பக்கம் அணிதிரட்டுவதற்கும் கம்யூன் கொள்கைகளை வகுத்தது.

தியேர் அரசாங்கத்தின் பதிலடி காட்டுமிராண்டித்தனமானது, நிதியப் பிரபுத்துவம் அதனுடைய வர்க்க ஆட்சிக்கு பெரும் மரண அச்சுறுத்தலாக உணர்ந்ததற்கு நேரடி விகிதளவில் பொருத்தமாகயிருந்தது. இரண்டு மாதங்களாக தயாரிப்பு செய்த பின்னர், தியேர் கம்யூனை நசுக்கி, பாரிஸை இரத்தத்தில் மூழ்கடிக்க ஓர் இராணுவத்தை களமிறக்கினார். மே 21-28, 1871 இன் இழிபெயரெடுத்த இரத்தக்களரியான வாரத்தில், வேர்சாய் இராணுவம் பாரிஸைத் தாக்கி கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கம்யூனுக்காக போராடியதாக அல்லது அனுதாபம் காட்டியதாக சந்தேகிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்மூடித்தனமாக படுகொலை செய்தது.

ஒரு மதிப்பீட்டின்படி 20,000 பாரிஸ்வாசிகள் விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். இன்னும் 40,000 பேர் பிரான்ஸ் சிறையில் அடைக்க அல்லது நாடு கடத்த வேர்சாய்க்கு நடத்தி கொண்டு செல்லப்பட்டனர் அல்லது தண்டனை விதிப்பதற்காக இருந்த காலனி நாடுகளான பிரெஞ்சு கயானா மற்றும் நியூ கலிடோனியாவில் கட்டாய உழைப்புக்கு நிர்பந்திக்கப்பட்டனர்.

இரத்தக்களரி வாரத்திற்குப் பின்னர் றிவொலி வீதி

கம்யூன் மிகப்பெரியளவில் குருதிகொட்டி விலை கொடுத்து, அதிகாரத்திற்கான ஒரு விலைமதிப்பற்ற போராட்ட அனுபவத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அளித்தது. விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக்குகள் 1917 அக்டோபர் புரட்சிக்கும் மற்றும் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் தயாரிப்பு செய்த போது, இந்த படிப்பினைகளைப் பற்றி அயராது ஆய்வு செய்திருந்தனர். இன்று, மோசமான பெரும் சமூக சமத்துவமின்மை, பொலிஸ் அரசு இராணுவவாதம் மற்றும் சமகால முதலாளித்துவத்தின் ஊழல்மிகுந்த நிதிய ஊகவணிகங்களுக்கு மத்தியில், இந்த படிப்பினைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமாக உள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, கார்ல் மார்க்ஸ் அந்த படிப்பினைகளை வரைந்தளித்தார். கம்யூன் உருவான போது சர்வதேச உழைப்பாளிகள் சங்கத்திற்கு எழுதிய, உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கான அவரது உரைகள், கம்யூனைப் பாதுகாத்தன. அவற்றை அவர் "வானுலகையே உலுக்கியதாக" புகழ்ந்தார். ஐரோப்பா முழுவதும் வெளியிடப்பட்டு பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற பிரசுரத்தில் தொகுக்கப்பட்ட அவை பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் நீடித்த ஆதரவை மார்க்ஸிற்கு வென்று கொடுத்தது.

பிரான்சில் வர்க்கப் போராட்டமும் வரலாற்றின் சடவாத கருத்துருவும்

மார்க்ஸ் மற்றும் தலைசிறந்த அவரின் சக சிந்தனையாளரான பிரெடெரிக் ஏங்கெல்ஸின் கம்யூனைப் பற்றிய பகுப்பாய்வு, வரலாற்றின் சடவாத கருத்துருவை விளங்கப்படுத்துவதுடன் பிணைந்த மூன்று தசாப்த கால தத்துவார்த்த கருதுகோளின் விளைபொருளாக இருந்தது. 1844 இல், மனிதகுல விடுதலையில் பாட்டாளி வர்க்க புரட்சியின் முக்கிய பங்கை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார்: "மெய்யியலே இந்த விடுதலையின் மூளையாக இருக்கும், பாட்டாளி வர்க்கமே அதன் இதயமாக இருக்கும்,” என்றவர் எழுதினார். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதிய 1847 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பின்வரும் பிரபல வாசகத்துடன் தொடங்கியது:

இதுநாள் வரையிலும் இருந்த சமுதாயங்களில் வரலாறு அனைத்தும் வர்க்கப் போரட்டங்களது வரலாறேயாகும். சுதந்திரமானவனும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் குடிமகனும், நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும் கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து, ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் எப்போதும் எதிரெதிராக நின்றனர். … ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்க சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில்: வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது. சமுதாயம் ஒட்டுமொத்தமாய் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், நேரடியாக எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாக, அதாவது முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாக பிளவுண்டு வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் முதல் மாபெரும் சமூக வெடிப்பான 1848 புரட்சி, ஜேர்மனியிலும், ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் அதற்கு அப்பாலும் எங்கெங்கிலும் பரவிய போது, அதற்கு சற்று முன்னர் தான் பிரசுரிக்கப்பட்டது. அதேயாண்டு நடந்த பாரிஸ் கிளர்ச்சி, பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் பிரான்சில் நெப்போலியனிச போர் தோல்விகளால் அதிகாரத்தை மீட்டமைத்த பேரரசர்களின் வரிசையில் கடைசி மன்னரை ஆட்சியிலிருந்து அகற்றியது. 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 1789 பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் முதல்முறையாக, பிரான்சில் மீண்டும் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது.

கார்ல் மார்க்ஸ் (1818-1883)

1848 புரட்சி அதற்கு முந்தைய 18 ஆம் நூற்றாண்டின் அதன் முன்னோடிகளிலிருந்து ஏன் வித்தியாசமாக கட்டவிழ்ந்தது என்பதை ஒரு மார்க்சிச பகுப்பாய்வு மட்டுமே விளங்கப்படுத்தியது. 1789 புரட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜாகோபின்கள் (Jacobins) நிலப்பிரபுத்துவச் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, எதேச்சதிகார முடியாட்சியை ஒழித்து, முதல் குடியரசை நிறுவிய போதும் — அவர்கள் தங்களைச் சுயாதீனமான கைவினைஞர்களான சான்ஸ்-குலோட்டுகளை (sans-culottes) அடிப்படையாக கொண்டிருந்தனர். 1848 இல் இரண்டாம் குடியரசில் ஆட்சியைப் பிடித்த தாராளவாத முதலாளித்துவம் புதிய தொழில்துறை பாட்டாளி வர்க்கத்துடன் மரண மோதலுக்கு வந்தது.

ஜூன் 1848 இல், இரண்டாம் குடியரசு வேலையற்றவர்களுக்கு வேலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய பட்டறைகளை (National Workshops) மூடிய போது, பாரிஸ் தொழிலாளர்கள் வறுமை மற்றும் பட்டினியை குறிக்கும் ஒரு கொள்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். தளபதி ஏஜேன் கவன்னியாக் (Eugène Cavaignac) 3,000 க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொன்றும், 25,000 பேரைக் கைது செய்தும் மற்றும் 11,000 பேரை சிறையில் அடைக்க அல்லது நாடுகடத்த உத்தரவிட்டும், ஜூன் நாட்களின் இரத்தந்தோய்ந்த அடக்குமுறையில் இராணுவம் மற்றும் பாதுகாப்புப்படைகளுக்குத் தலைமை வகித்தார். 1851 இல் நெப்போலியனின் மருமகன் லூயி போனபார்ட் ஓர் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஆட்சியைப் பிடித்து, இரண்டாம் பேரரசை நிறுவி, மூன்றாம் நெப்போலியன் என்று பெயர் பெற முடிந்தது எனும் அளவுக்கு இரண்டாம் குடியரசு மிகவும் மதிப்பிழந்திருந்தது.

1848-1851 புரட்சிகள் கட்டவிழ்ந்த போது அவற்றை மேதமையோடு பகுப்பாய்வு செய்த படைப்புகளை எழுதிய மார்க்ஸ் அந்த மகத்தான போராட்டத்திலிருந்து முக்கிய முடிவுகள் எடுத்தார். லூயிஸ் கூகெல்மானுக்கு (Louis Kugelmann) எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்:

எனது பதினெட்டாவது புரூமேர் படைப்பின் கடைசி அத்தியாயத்தைப் பார்த்தால், பிரெஞ்சு புரட்சியின் அடுத்த முயற்சி, இனி முந்தையதைப் போல, அதிகாரத்துவ-இராணுவ எந்திரத்தை ஒரு கையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதாக இருக்காது, மாறாக அதை தகர்ப்பதாக இருக்கும். இது அக்கண்டத்தில் ஒவ்வொரு நிஜமான மக்கள் புரட்சிக்கும் இன்றியமையாதது என்று நான் கூறுவதைக் காண்பீர்கள்.

பாரிஸ் கம்யூனும் இரத்தந்தோய்ந்த வாரமும்

அதற்கடுத்து பிரான்சில் மாபெரும் புரட்சிகர முயற்சியான கம்யூன், பிரஷ்யாவுக்கு எதிராக 1870 ஜூலையில் மூன்றாம் நெப்போலியன் தொடங்கிய போரிலிருந்து எழுந்தது. ஒரு குற்றகரமான சாகசமாக இருந்த அந்த போரின் நோக்கம், உள்நாட்டில் பெருகி வந்த வர்க்கப் போராட்டங்களை அடக்கி அதேவேளையில் ஜேர்மனியை ஒன்றிணைப்பதற்கான பிரஷ்யாவின் நகர்வுகளைத் தடுப்பதன் மூலமாக உலகளவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிலையை நிலைநிறுத்துவதாக இருந்தது. உண்மையில், அதற்கு வெறும் ஆறு மாதங்களுக்கு முன்பு தான், ஜனவரி 1870 இல், இளவரசர் பியர் போனபார்ட் இடதுசாரி பத்திரிகையாளர் லூயி நுவார் (Louis Noir) ஐ சுட்டுக் கொன்ற பின்னர், நுவாரின் இறுதிச் சடங்கில் 100,000 க்கும் அதிகமானவர்கள் நடத்திய ஒரு போராட்டம் பாரிஸில் முயற்சிக்கப்பட்ட கிளர்ச்சியாக மாறியிருந்தது.

பிராங்கோ-பிரஷ்ய போர் இரண்டாம் பேரரசை வீழ்த்தியது. அதன் எண்ணிக்கையிலும், பீரங்கிகள் மற்றும் தளவாடங்களிலும் விஞ்சப்பட்ட, திறமையற்றவர்களால் வழிநடத்தப்பட்ட பிரெஞ்சு இராணுவம் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. செப்டம்பர் 2 இல் செடோனில் மூன்றாம் நெப்போலியன் பிடிபட்டார், பிரஷ்ய இராணுவம் வடக்கு பிரான்ஸை ஆக்கிரமித்தது. செப்டம்பர் 4 இல், பாரிஸில் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில், மூன்றாம் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. தியேர், ஜூல்ஸ் ஃபாவ்ர் மற்றும் தளபதி லூயி-ஜூல் துரோசு போன்ற தாராளவாதிகள் மற்றும் போனபார்ட்டிச முதலாளித்துவ பிரமுகர்கள் தலைமையில் தேசிய பாதுகாப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டது. செப்டம்பர் 17 இல், பிரஷ்ய இராணுவம் பாரிஸை முற்றுகையிட்டது.

அடோல்ப் தியேர் (புகைப்படம் நடார்)

இவ்வாறிருக்கையில் ஜனநாயகம் மற்றும் மக்களின் பாதுகாப்பு இரண்டுக்கும் முதலாளித்துவம் விரோதமானது என்பதை மீண்டும் நிரூபித்தது. அக்டோபர் 28 இல், கிழக்கில் பிரெஞ்சு ஆயுதப்படைகளின் தளபதி பிரான்சுவா-ஆஷில் பாசென் (François-Achille Bazaine), மெட்ஸில் (Metz) ஒரு குறுகிய கால முற்றுகைக்குப் பின்னர் அவருடைய படைகளை ஒரு சிறிய பிரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்தார். குடியரசுவாதம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான வெறுப்புக்கு நன்கறியப்பட்ட பாசென், பரவலாக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். புதிய குடியரசின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான பாரிஸின் நிலைமை அதிகரித்தளவில் நம்பிக்கையிழந்ததாகிக் கொண்டிருந்தது.

ஜனவரி 26, 1871 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, தேசிய காவல்படைகளாக உருவாக்கப்பட்டு ஆயுதமேந்திய பாரிஸ் மக்கள் பரவலான பட்டினிக்கு மத்தியில் இருந்தனர். குடியரசு நிறுவப்பட்ட போது பாரிஸிற்குத் திரும்பி, முற்றுகை நெடுகிலும் அங்கே வாழ்ந்திருந்த, பிரபல நாவலாசிரியரும் லெ மிசேராபிள் (Les Misérables)இன் ஆசிரியருமான விக்டர் ஹூகோ (Victor Hugo), “பாரிஸை தாக்கியவர்களால் அது எந்தளவுக்கு பாதிப்புக்குள்ளானதோ அதேயளவுக்கு அதன் பாதுகாவலர்களாலும் பாரிஸ் பாதிக்கப்பட்டது,” என்றவர் எழுதிய போது, ஆளும் உயரடுக்கின் மீதிருந்த பரந்த கோபத்திற்கு குரல் கொடுத்தார்.

பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் முதலாளித்துவங்களுக்கு இடையிலான தேசிய மோதலை விட வர்க்க மோதல் மிகவும் சக்தி வாய்ந்ததாக மற்றும் அடிப்படையானதாக நிரூபணமானது. தியேர் பிரஷ்யாவுடன் ஒரு போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போதே, பாசென் போலவே அவரும் முக்கியமாக புரட்சியைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்தியிருந்தார். பிரஷ்ய இராணுவத்தைப் பொறுத்த வரையில், சாம்ப்ஸ்-எலிசே வீதியின் ஒரு சிறிய மூன்று நாள் ஆக்கிரமிப்பைத் தவிர, அது, குறிப்பாக நெருக்கமாக மக்கள் வாழும் ஆயுதமேந்திய தொழிலாள வர்க்க கிழக்கு பாரிஸ் மாவட்டங்களைத் தவிர்ப்பதற்காக, மிகவும் கவனமாக பாரிஸ் நகர எல்லைக்கு வெளியே நிலைநிறுத்தப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பிரெஞ்சு மற்றும் பிரஷ்ய ஆளும் வர்க்கங்கள் இரண்டுமே பாரிஸ் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கும் பெரும்பிரயத்தனத்தில் இருந்தன.

மார்ச் 18, 1871 எழுச்சியானது தேசிய காவல்படையின் பீரங்கிகளைக் கைப்பற்றுவதன் மூலம் பாரிஸ் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கும் தியேரின் முதல் முயற்சிக்கு பாரிஸ் தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான விடையிறுப்பாக இருந்தது. தொழிலாளர்கள், படையினருடன் சகோதரத்துவமாக இருந்தனர். தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிட்டு தோல்வியடைந்த இரண்டு தளபதிகள் — 1848 ஜூன் அடக்குமுறையை வழிநடத்த உதவியிருந்த கிளெமொன்ட் தோமா மற்றும் குளோட் லுகொன்த் (Clément Thomas and Claude Lecomte) — கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நாளில், தியேர் பாரிஸை விட்டு வேர்சாய்ஸுக்குத் தப்பிச் சென்றார்.

மார்ச் 18, 1871 இல் இராணுவம் பீரங்கிகளை திருட முயன்றதைத் தொடர்ந்து கம்யூனார்ட்டுக்களால் பாரிஸில் உள்ள மொன்ட்மார்த்ர் மலைக்கு கொண்டு செல்லப்பட்ட பீரங்கிகள்.

மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட கம்யூன் மற்றும் தேசிய காவல்படையினது மத்திய குழுவிற்கான தேர்தல்கள் தொழிலாள வர்க்க பகுதிகளுக்கு பெரும் பெரும்பான்மையை வழங்கின. இந்த அமைப்புகள் தொழிலாளர்களது அதிகாரத்தின் அங்கங்களாக உருவெடுத்தன. செல்வந்த மேற்கு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூன் உறுப்பினர்கள் மற்றும் தேசிய காவல்படையினது மத்திய குழு உறுப்பினர்கள் அவ்விரு அமைப்புகளது கூட்டங்களிலும் கலந்து கொள்ள அக்கறை காட்டவில்லை. பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற பிரசுரத்தில் மார்க்ஸ் புதிய தொழிலாளர் அரசின் தன்மையை பின்வருமாறு விளங்கப்படுத்தினார்:

நகரத்தின் பல்வேறு வட்டாரங்களில் அனைவருக்குமான வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொறுப்பான மற்றும் எந்நேரத்திலும் பதவியைத் திரும்ப பெறத்தக்க நகராட்சி ஆணையாளர்களால் கம்யூன் உருவாக்கப்பட்டது. இயல்பாகவே அதன் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் உழைக்கும் மக்களாக இருந்தனர், அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழிலாள வர்க்க பிரதிநிதிகளாக இருந்தனர். … அதுவரையில் அரசாங்கத்தின் கருவியாக இருந்த பொலிஸ், உடனடியாக அதன் அரசியல் பண்புகள் அகற்றப்பட்டு, பொறுப்பானவர்களாக மாற்றப்பட்டு, எந்நேரத்திலும் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடிய, கம்யூனின் முகவர்களாக மாற்றப்பட்டார்கள். நிர்வாகத்தின் மற்ற அனைத்து கிளைகளின் அதிகாரிகளும் அவ்வாறே இருந்தனர். கம்யூனின் கீழ்நிலை உறுப்பினர்களில் இருந்து, அனைவரும் அரசாங்க சேவையை தொழிலாளர்களின் கூலிக்கு செய்ய வேண்டியிருந்தது. உயர் பிரமுகர்களுடன் சேர்ந்து அரசின் உயர் பிரமுகர்களின் சலுகைகளும் பிரதிநிதித்துவ கொடுப்பனவுகளும் காணாமல் போயின.

பிரெஞ்சு மற்றும் பிரஷ்ய படைகளால் சூழப்பட்டிருந்தாலும், கம்யூன் சோசலிச மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை முன்னெடுத்தது. அது குறைந்தபட்ச கூலியை நிர்ணயித்தது, தொழிலாளர்களுக்கு நகராட்சி உணவுவிடுதிகளை அமைத்தது, ஏழைக் குடும்பங்களுக்குக் காலியாக இருந்த குடியிருப்புகளை வழங்கியது. அது, வங்கிகள் மற்றும் நில உரிமையாளர்களின் செலவில், முற்றுகையால் திவாலான சிறு வணிகர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்தது, அடகு கடைகளில் இருந்து தொழிலாளர்கள் அவர்களின் மதிப்புமிக்க பொருட்களை திரும்பப் பெறச் செய்தது. அது பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்ததோடு, உள்நாட்டு மக்கள் பங்காண்மைகளை, மதச்சார்பற்ற கல்வியை நிறுவியது, ஆண்களும் பெண்களும் சம வேலைக்கு சம கூலி பெற வேண்டுமென அறிவுறுத்தியது.

கம்யூன் தேசிய பாகுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு பகிரங்கமாக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக நின்றது. மார்க்ஸ் எழுதியது போல:

ஓர் அழிவேயில்லாத காரணத்திற்காக மரணிக்கும் அனைத்து வெளிநாட்டினரையும் கூட கௌரவிப்பதை கம்யூன் ஏற்றுக் கொண்டது. தேசத்துரோகத்தால் ஏற்பட்ட வெளிநாட்டு போர் தோல்விக்கும், வெளிநாட்டு படையெடுப்புடன் சேர்ந்து சதித்திட்டத்தால் தூண்டப்பட்ட உள்நாட்டு போருக்கும் இடையே, முதலாளித்துவ வர்க்கம் பிரான்சில் ஜேர்மனியர்கள் மீது பொலிஸ் வேட்டைகளை ஒழுங்கமைத்ததன் மூலமாக அவர்களின் தேசபக்தியைக் காட்ட நேரத்தை கண்டுகொண்டது. கம்யூன், ஒரு ஜேர்மன் தொழிலாளியை [லியோ ஃபிரான்கெல்] அதன் தொழிலாளர் நல அமைச்சராக்கியது. … கம்யூன், போலாந்து மாவீரர்களின் மகன்களை [தளபதிகள் ஜெ. டப்ரோவ்ஸ்கி மற்றும் டபிள்யு. ரோப்லெவ்ஸ்கி ஆகியோரை] பாரிஸ் பாதுகாவலர்களின் தலைமையில் நிறுத்தி கௌரவித்தது.

வென்டோம் நகரில் கவிழ்ந்த நெப்போலியன் சிலையுடன் கம்யூனார்டுகள்

சமத்துவத்துக்காக போராடிய பாட்டாளி வர்க்க கம்யூனுக்கும், முதலாளித்துவ தனிச்சலுகையை பாதுகாத்த மூன்றாம் குடியரசிற்கும் இடையே ஒரு பேரழிவுகரமான மோதல் உருவெடுத்தது. தியேர், பிரஷ்யாவுடனான பேரம்பேசலின் போது, ஓர் ஆயுதப்படையை உருவாக்குவதற்காக போதுமானளவில் பிடித்துவைத்திருந்த பிரெஞ்சு சிப்பாய்களை விடுவிக்க துடிப்புடன் செயலாற்றினார், கம்யூனை நசுக்க, பிரதானமாக கிராமப்புறங்களில் இருந்து ஆட்களைச் சேர்த்தார். பாரிஸிலிருந்து வேர்சாய்க்கு தப்பியோடி இருந்த செல்வந்த குடும்பங்களின் இளைஞர்களால் கூடுதலாக பலப்படுத்தப்பட்டு மது பங்கீட்டு அளவு இரண்டு மடங்கு கூடுதலாக வழங்கப்பெற்ற இந்த சக்தி, இறுதியில் மே இல் அதன் தாக்குதலைத் தொடங்க தயாரானது.

மே 21 இல் பலவீனமான பாதுகாப்பிலிருந்த நகர சுவரின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய பின்னர், வேர்சாய் இராணுவம் ஒரு வார கால கொடூரமான மனித படுகொலைகளின் போக்கில் கம்யூனைப் படுகொலை செய்தது. கனரக பீரங்கிகளுடன் பாரிஸ் மீது குண்டுவீசிய அது, கிழக்கு நோக்கி தொழிலாள வர்க்க மாவட்டங்களுக்கு நகர்ந்து, பாரிஸ் எங்கிலுமான வீதிகளில் கம்யூன் உறுப்பினர்கள் (Communards) அமைத்திருந்த தடுப்புக்களை உடைத்தெறிந்தது. மூன்றாம் குடியரசின் கொள்கை குறித்து தியேர் எவ்வித ஐயுறவையும் விட்டுவைக்கவில்லை, மே 24 இல் தேசிய சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், “நான் இரத்த ஆறு ஓடவிட்டேன்,” என்று பகிரங்கமாக அறிவித்தார்.

கம்யூனார்ட்டுக்களின் மரணதண்டனை, 1871

கம்யூன் போராளிகள் சிறைபிடிக்கப்பட்டதும் சுட்டுக் கொல்லப்பட்டனர், அல்லது, அதிகமானவர்கள் இருந்தால், மரணதண்டனைக்கு வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மோன்ஸோ பூங்கா (Monceau) மற்றும் லுக்செம்பேர்க் பூந்தோட்டம் (Jardin du Luxembourg), இத்தாலி சதுக்கம் (place d’Italie), இராணுவப் பள்ளி (École militaire) மற்றும் பேர் லா சேய்ஸ் கல்லறை (cimetière du Père Lachaise) போன்ற பிரபலமான சுற்றுலா தலங்கள் உட்பட பாரிய படுகொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட திறந்தவெளி இடங்களைச் சுற்றி இருந்த வீதிகள் இரத்தத்தால் செந்நிறமாகி இருந்தன. துப்பாக்கிப்படைகளும் அல்லது இயந்திர துப்பாக்கிகளும் நாள் முழுவதும் இயங்கின. சில கைதிகள் அவர்களின் கல்லறைகளை அவர்களே தோண்ட கட்டாயப்படுத்தப்பட்டு, பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள், ஆணும் பெண்ணும், சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது பொதுமக்களை மிரட்டுவதற்காக நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் எறியப்பட்டனர்.

ஒரு கொலைகார வெறி செல்வந்தர்களைக் பற்றிக்கொண்டது. லு ஃபிகாரோ (Le Figaro) பத்திரிகை எழுதியது: “கடந்த 20 ஆண்டுகளாக பாரிஸை அரித்து தின்றுள்ள தார்மீக சீரழிவிலிருந்து தன்னைக் குணப்படுத்திக் கொள்ள அதற்கு இதுபோன்ற ஒரு சந்தர்ப்பமும் ஒருபோதும் ஏற்படாது. … நேர்மையான மக்களே, செல்வோம் வாருங்கள்! ஜனநாயக மற்றும் சோசலிச பூச்சிகளை முடிவு கட்ட எங்களுக்கு உதவுங்கள், தலைமறைவாக இருப்பவர்களை காட்டு மிருகங்களைப் போல வேட்டையாட வேண்டும்.”

நிதிய பிரபுத்துவத்தைப் பொறுத்த வரை, அது தொழிலாளர்களைக் கொன்று குவிப்பதற்கான காலமாக இருந்தது. கம்யூனின் பெண் உறுப்பினர்கள் பெட்ரோலால் வீடுகளைத் தீயிட்டு கொளுத்தி வருவதாக பத்திரிகைகளில் பெரும் வதந்திகள் பரவியதால், எண்ணெய்யுடன் தென்படும் எந்தவொரு தொழிலாள வர்க்க பெண்ணும் ஆபத்திற்குள்ளானார். உயிரிழந்த கணவன்மார்களைத் தகனம் செய்ய முயன்றபோதோ, அல்லது சமைப்பதற்காக பெண்கள் ஆலிவ் எண்ணெய் வாங்கிய வரும் போது பிடிபட்டவர்களோ படுகொலை செய்யப்பட்டனர். கம்யூன் உறுப்பினர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் செல்வசெழிப்பான கூட்டத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டனர் அல்லது கம்யூனின் பெண் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ததைப் பற்றி பெருமை பேசும் சிப்பாய்களுக்கு அவர்கள் பணம் வழங்கினர். வரலாற்றாசிரியர் ஜோன் மெர்ரிமன் படுகொலை (Massacre) என்ற பாரிஸ் கம்யூன் பற்றிய அவரின் 2014 நூலில் பின்வருமாறு எழுதினார்:

அவர்களின் உடை களையப்பட்டு, அவர்களின் தோள்களில் துப்பாக்கி பயன்படுத்தியதற்கான தழும்புகள் இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டனர். ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அதைக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். "அலங்கோலமாக" தோற்றமளிக்கும் ஆண்கள், வறிய உடையணிந்தவர்கள், அதற்கான காரணத்தை உடனடியாக நியாயப்படுத்த முடியாதவர்கள் அல்லது "முறையான" வேலையில் இல்லாதவர்களுக்கு, ஒரு மேல்முறையீடு செய்யமுடியாத நீதிமன்றத்தின் குறுகிய விசாரணையின் முன்பு உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

பிரெஞ்சு இராணுவத்தின் விருப்பப்படி 20,000 பாரிஸ்வாசிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், இன்னும் 40,000 பேர் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் தீர்ப்புக்காக வேர்சாய்ஸுக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டனர். வழியில், அதிகாரிகளும் காவலர்களும் பின்தங்கியவர்களை அல்லது பிற கைதிகளை விருப்பப்படி சுட்டுக் கொன்றனர். சுமார் 11,000 பேர் கட்டாய உழைப்பு முகாங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இரத்தக்களரி வாரத்தில் கம்யூனார்டுக்கள் கொலை செய்யப்பட்டனர். மே 1871 இல் André-Adolphe-Eugène Disdéri எடுத்த புகைப்படம்.

அவரது நாட்குறிப்பில் அந்த இரத்தந்தோய்ந்த வாரத்தை திரும்பிப் பார்த்த, பிரபல இலக்கிய விமர்சகர் எட்மோன்ட் டு கோன்கோர்ட் (Edmond de Goncourt) ஆளும் உயரடுக்கின் கொலைகாரக் கணக்கீடுகளை 1871, மே 31 இல் பின்வருமாறு எழுதினார்:

சமரசமோ பேரம்பேசலோ நடைபெறவில்லை என்பது நல்லது தான். தீர்வு காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. அது முற்றிலும் பலத்தால் அடையப்பட்டது. … அந்த தீர்வு இராணுவத்திற்கு நம்பிக்கையை மீட்டளித்துள்ளது, மக்களின் போராடும் பகுதியைக் கொல்வதன் மூலமாக அதுபோன்றவொரு களையெடுப்பு, ஒரு முழு தலைமுறையின் அடுத்த புரட்சியை தள்ளி வைக்கிறது; அப்போதும் போராடக்கூடியவர்களாக இருந்த கம்யூன் உறுப்பினர்களின் அந்த இரத்தத்தில் இருந்து இராணுவம் இதைக் கற்றுக் கொண்டது. அரசு இப்போது செய்யத் துணிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து தைரியமாக செய்தால், அந்த பழைய ஆட்சி இப்போது 20 ஆண்டு காலத்திற்கும் மற்றும் அதற்கடுத்து வரவிருக்கும் காலத்திலும் அமைதியைக் கொண்டிருக்கும்.

இந்த நாசகரமான அனுபவம் குறித்து, தலைச்சிறந்த மார்க்சிஸ்டுகளால் தொழிலாள வர்க்க நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. அது புரட்சியினது தோல்வியின் கொடூரமான விளைவுகளில் ஒரு மறக்க முடியாத பாடமாக இருந்தது. முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அதன் வெறித்தனமான விடையிறுப்பை அந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டின — அதற்கு எதிராக அது நகரங்களை, ஒட்டுமொத்த நாடுகளை அல்லது உலகையே கூட அழிக்க தயாராகி விடுகிறது. தனிச்சலுகை பெற்ற சிறுபான்மையினரின் எதிர்புரட்சிகர வன்முறையைத் தொழிலாள வர்க்கம் அடக்க வேண்டுமானால், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி தக்க வைப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை அவசியமாகும்.

வரலாற்றில் பாரிஸ் கம்யூன்

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு கம்யூன் முன்வைக்கும் மைய கேள்வி அதன் புரட்சிகர தலைமையை உருவாக்குவதாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ரஷ்ய உள்நாட்டு போரில் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு எதிராக இளம் சோவியத் குடியரசின் போராட்டத்தை ட்ரொட்ஸ்கி வழிநடத்திக் கொண்டிருந்த போது அவர் குறிப்பிட்டார், ஒருவர் “கம்யூனின் முழு வரலாற்றையும், பக்கம் பக்கமாக, புரட்டி எடுத்தால், அதிலிருந்து நமக்கு ஒரு படிப்பினை கிடைக்கும், அதுவாவது: ஒரு வலுவான கட்சி தலைமை அவசியமாகும்.” மூன்றாம் நெப்போலியன் வீழ்ந்த போது மூன்றாம் குடியரசு அல்லாது, தொழிலாள வர்க்கம் ஆட்சியைப் பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ட்ரொட்ஸ்கி மாற்றீட்டை முன்வைத்தார்:

செப்டம்பர் 1870 இல் பிரான்சில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகர நடவடிக்கைக்கான மத்தியமயப்படுத்தப்பட்ட கட்சி இருந்திருக்குமானால், பிரான்சின் முழு வரலாறும் அதனுடன் சேர்ந்து மனிதகுலத்தின் முழு வரலாறுமே வேறொரு திசையை எடுத்திருக்கும். மார்ச் 18 இல் பாரிஸ் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில் அதிகாரம் கிடைத்திருந்தால், அது பெரும்பிரயத்தனத்துடன் கைப்பற்றியதால் அல்ல, மாறாக அதன் எதிரிகள் பாரிஸை விட்டு வெளியேறியதால் அது நடந்திருக்கும். … ஆனால் அது அதற்குப் பிந்தைய காலத்தில் மட்டுமே இந்த உண்மையைப் புரிந்து கொண்டது. புரட்சி எதிர்பாராத விதமாக அதன் மீது விழுந்தது.

கம்யூன் வழங்கிய முக்கிய அனுபவத்தின் மீது தான் மார்க்சிச இயக்கம் ஓர் உறுதியான புரட்சிகர தலைமைக்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த அடித்தளத்தை விரிவுபடுத்தியது.

லியோன் ட்ரொட்ஸ்கி (1879-1940)

இது, போல்ஷிவிக் கட்சி அக்டோபர் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாரிப்பு செய்த போது, அது கம்யூன் அனுபவத்தின் மீது முழுமையாக மீண்டும் ஆய்வுசெய்ததில் அதன் உச்சக்கட்ட வெளிப்பாட்டைக் கண்டது. அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மீதும் மற்றும் பாரிஸ் கம்யூன் வழங்கிய குறுகிய கால தொழிலாளர்களது அதிகார அனுபவம் மீதும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்களை லெனின் அரசும் புரட்சியும் என்பதில் மேதமையோடு மீளாய்வு செய்தார்.

அரசு என்பது வர்க்கங்களைச் சமரசப்படுத்துவற்கான ஒரு கருவி அல்ல, மாறாக சமரசமற்ற வர்க்க விரோதங்களின் விளைபொருளாகும் என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் தீர்மானத்தை லெனின் விளக்கினார். அரசு என்பதே இல்லாத ஆரம்பகால ஆதிச் சமூகங்களைக் குறித்த மானுடவியல் தரவுகளையும் மற்றும் 1871 இல் முதலாளித்துவ அரசுக்கும் பாரிஸின் ஆயுதமேந்திய மக்களுக்கும் இடையிலான மோதலையும் இரண்டையும் அவர்கள் ஆராய்ந்தனர். அரசு என்பது, மக்கள் தங்களைத் தாங்களே ஓர் ஆயுதமேந்திய சக்தியாக ஒழுங்கமைத்துக் கொள்வதுடன் நேரடியாக ஒருங்கே பொருந்தாத "ஒரு பொது அதிகாரத்தை அரசு ஸ்தாபிப்பது என ஏங்கெல்ஸ் எழுதினார்.

இந்த சிறப்பு, பொது அதிகாரம் அவசியம் தான், ஏனென்றால் இரண்டு வர்க்கங்களாக பிரிந்ததில் இருந்து மக்களின் சுயமாக செயல்படும் ஓர் ஆயுதமேந்திய அமைப்பானது சாத்தியமற்றதாகி விட்டது. … இந்த பொது அதிகாரம் ஒவ்வொரு அரசிலும் உள்ளது; அது ஆயுதமேந்திய நபர்களை மட்டுமல்ல, மாறாக சடரீதியிலான எடுபிடுகள், சிறைச்சாலைகள், மற்றும் எல்லா வகையான அச்சுறுத்தும் அமைப்புகளையும் உள்ளடக்கி உள்ளது. … ஆனால் இது அரசுடன் வர்க்க விரோதங்கள் இன்னும் அதிகமாக கூர்மையடைவதோடு அதே விகிதாச்சாரத்தில் வலுவாக வளர்கிறது.

பாரிஸ் கம்யூனின் அனுபவமும், தலைச்சிறந்த மார்க்சிஸ்டுகளின் அரசைப் பற்றிய இந்த பகுப்பாய்வும் நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருந்தன. வர்க்க விரோதங்களைக் குறைப்பதற்கும் மற்றும் நீடித்த சமாதானம் செல்வ செழிப்பை வழங்குவதற்கும் முதலாளித்துவ அரசைப் பயன்படுத்த நம்பிய, ஒரு சீர்திருத்தவாத முன்னோக்கு, பொய்யானது மற்றும் அவநம்பிக்கைக்குரிய கற்பனாவாதமானது. அரசு அதிகாரத்தை உடனடியாக கலைப்பதற்கு அழைப்பு விடுத்த ஓர் அராஜகவாத முன்னோக்கும் இதே போன்றது தான். அவ்விதத்தில் அது ஆளும் வர்க்கத்தின் எதிர்புரட்சிகர வன்முறையை எதிர்த்து தொழிலாளர்களின் ஓர் அரசை நிறுவுவதை எதிர்க்கிறது.

"தொழிலாள வர்க்கம் சர்வசாதாரணமாக ஏற்கனவே இருக்கும் அரசு எந்திரத்தைப் கையகப்படுத்திக் கொண்டு அதன் சொந்த நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்தி விட முடியாது" என்ற மார்க்சின் முடிவை லெனின் அழுத்தமாக வலியுறுத்தினார். அதற்கு பதிலாக, 1871 இல் பாரிஸ் தொழிலாளர்கள் செய்ததைப் போல தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. இதன் அர்த்தம், முதலாவதாக, தொழிலாள வர்க்கத்தில் அரசியல் மற்றும் வரலாற்று நனவையும் மற்றும் ஒரு புரட்சிகர கொள்கையின் அவசியத்தையும் நிரப்பும் ஒரு கட்சியைக் கட்டுவதாகும்.

விளாடிமிர் லெனின் (1870-1924)

இந்த முன்னோக்கு தான், அக்டோபர் 1917 புரட்சியில், ஜாரிச எதேச்சதிகாரத்திடம் இருந்து அரசு அதிகாரத்தை போல்ஷிவிக் கட்சி தலைமையில் தொழிலாளர்களது அதிகாரத்திற்கான அங்கங்களான சோவியத்களுக்கு மாற்றியதன் அடித்தளத்தில் இருந்தது. போல்ஷிவிக் கட்சியை அதிகாரப் போராட்டத்திற்கு அணிதிரட்டி கொண்டிருந்த போது முதலாம் உலகப் போரின் மனிதகுல படுகொலைகளுக்கு மத்தியில் லெனின் எழுதுகையில், தொழிலாளர்களின் ஓர் அரசை ஸ்தாபிப்பதற்கான போராட்டம் உலகக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய கண்டத்தில் ஓர் உண்மையான புரட்சியை முன்னெடுப்பதற்காக தொழிலாள வர்க்கம் "அதிகாரத்துவ-இராணுவ இயந்திரத்தை" நொறுக்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்தைச் சுட்டிக்காட்டி லெனின் எழுதினார்:

இன்று, 1917 இல், இந்த முதல் மாபெரும் ஏகாதிபத்திய போரின் போது, மார்க்ஸ் குறிப்பிட்ட [ஐரோப்பிய கண்டத்திற்கான] இந்த மட்டுப்படுத்தல் இனி செல்லுபடியாகாது. ஆங்கிலோ-சாக்சன் "சுதந்திரத்தின்" —ஒட்டுமொத்த உலகிலும்— மிகப்பெரிய மற்றும் கடைசி பிரதிநிதிகளான பிரிட்டனும் அமெரிக்காவும், அவற்றில் இராணுவவாதக் குழுக்களும் அதிகாரத்துவமும் இல்லை என்ற அர்த்தத்தில், ஒவ்வொன்றையும் தங்களுக்கு அடிபணிய செய்யும் மற்றும் ஒவ்வொன்றையும் ஒடுக்கும் மொத்த ஐரோப்பாவின் இழிவான, இரத்தந்தோய்ந்த அதிகாரத்துவ-இராணுவ அமைப்புகளின் புதைக்குழிக்குள் முழுமையாக மூழ்கி உள்ளன.

பாரிஸ் கம்யூனுக்கு 150 ஆண்டுகளுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் அக்டோபர் 1917 இல் செய்ததைப் போல அது ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. மே 1968 இல், பிரான்சில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் நடத்திய பொது வேலைநிறுத்தம் கலகம் ஒடுக்கும் பொலிஸைத் தோற்கடித்து, டு கோல் அரசாங்கத்தை அதன் காலடியில் கொண்டு வந்து, தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகர திறன்களில் எதையும் இழக்கவில்லை என்பதைக் எடுத்துக்காட்டியது. மிக சமீபத்தில், 2011 இல், எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரமான அணிதிரள்வும் பொது வேலைநிறுத்தமும் இராணுவ சர்வாதிகாரியும் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியுமான ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து அகற்றியது.

எவ்வாறாயினும் பாரிஸ் கம்யூன் எழுப்பிய அரசியல் முன்னோக்கு சம்பந்தமான மற்றும் தலைமை சம்பந்தமான முக்கிய கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன. 1968 இல், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியைத் தடுத்தது. ஒரு ஸ்ராலினிசக் கட்சியாக, அது, அக்டோபர் புரட்சியின் சர்வதேசவாத முன்னோக்கை நிராகரித்து, சோவியத் ஒன்றியத்தில் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினின் தேசியவாத முன்னோக்கைக் கொண்டு நியாயப்படுத்தி ஏகாதிபத்தியத்துடன் ஓர் ஏற்பாட்டை செய்து கொள்ள உடன்பட்டது. இந்த அடிப்படையில் தான், மே 1968 இல், அது கிரெனெல் ஒப்பந்தங்கள் (Grenelle Accords) மூலம், தொழிலாள வர்க்கத்தைப் பிரெஞ்சு முதலாளித்துவ அரசுடன் கட்டிப்போட்டது.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்புக்குப் பின்னர், பல தசாப்த கால முடிவில்லா ஏகாதிபத்தியப் போர்கள், சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் நிதிய பிரபுத்துவத்தைச் செல்வ செழிப்பாக்கியமை என இவற்றால் புரட்சிகர தலைமை மற்றும் தொழிலாளர்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்விகள் குறிப்பாக கூர்மையடைந்துள்ளன.

கோவிட்-19 தொற்றுநோய்க்கான விடையிறுப்பு முதலாளித்துவ அமைப்புமுறையை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் இதர நடவடிக்கைகளுக்குப் பணமில்லை என்ற வாதங்களின் அடிப்படையில், உலகின் செல்வந்த நாடுகளும் கூட, நூறாயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கு அனுமதித்துள்ளன, அதேவேளையில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களும் யூரோக்களும் வங்கி பிணையெடுப்புகள் மூலமாக செல்வந்தர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. இன்றைய முதலாளித்துவ ஒட்டுண்ணிகள், ஈவிரக்கமற்று இருப்பதில் இரண்டாம் பிரெஞ்சு பேரரசில் இருந்தவர்களை விடவும் குறைவானர்கள் அல்லர், இன்னும் முதிர்ந்தவர்கள் தான், என்பதை நிரூபித்துள்ளனர்.

மறுபுறம், சமீபத்திய ஆண்டுகளில் ஒவ்வொரு கண்டத்திலும் வர்க்கப் போராட்டம் வெடிப்பு கண்டுள்ளது. இப்போது நடந்து வரும் சமூக எதிர்ப்பின் உலகளாவிய வெடிப்பை ஆய்வு செய்யும் ஒரு சமீபத்திய அறிக்கையில், மூலோபாயம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் என்ற அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனைக்குழாம் பின்வருமாறு எழுதியது:

எண்ணிக்கையிலும், அளவிலும், வீச்சிலும் வரலாற்று ரீதியில் முன்னோடியில்லாத உலகளாவிய பாரிய போராட்டங்களின் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். … உண்மையில் [இவை] மக்கள் நிறைந்த உலகின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் பாதித்துள்ள தசாப்த காலப்போக்கின் பாகமாக உள்ளன, இவற்றின் எண்ணிக்கை 2009 மற்றும் 2019 க்கு இடையே ஆண்டு சராசரியாக 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்திய போராட்டங்களின் அளவும் நிகழும் வேகமும், 1960 களின் இறுதியிலும், 1980 களின் இறுதியிலும், 1990 களின் ஆரம்பத்திலும் நடந்ததைப் போன்ற பாரிய போராட்ட சகாப்தங்களின் வரலாற்று சான்றுகளையே விஞ்சி விட்டன.

வர்க்க போராட்டத்தின் சர்வதேச மீளெழுச்சியை உந்தி வரும் சமூக பிரச்சினைகளை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிசப் போராட்டம் இல்லாமல் தீர்க்க முடியாது, இது பாரிஸ் கம்யூன் அனுபவம் முன்னிறுத்திய அனைத்துப் பிரச்சினைகளையும் புதிதாக மீண்டும் மீளெழுப்பி வருகிறது. நிதிய பிரபுத்துவம் ஆதிக்கம் செலுத்தும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறை சீர்திருத்தத்திற்கான அழைப்பிற்கு எவ்விதத்திலும் பதிலளிக்கக்கூட முற்றிலும் இலாயக்கற்றது என்பதற்கு குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் ஒரு நாசகரமான நினைவூட்டலாகும். 1871 இல் பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு இருந்ததைப் போலவே, இன்று முன்னிருக்கும் மாற்றீடு சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்பதல்ல, மாறாக சோசலிசப் புரட்சியா அல்லது முதலாளித்துவ எதிர்ப்புரட்சியா என்பதாகும்.

புது டெல்லியில் இந்திய விவசாயிகளின் ஆர்ப்பாட்டம், மே 6, 2021 சனிக்கிழமை

வாழ்க்கைத் தரங்கள், சுகாதாரம் மற்றும் மனிதகுலத்தின் உயிர் வாழ்வே கூட, ஒவ்வொரு நாட்டிலும் அரசு அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கத்திற்கு கை மாற்றுவதற்கான போராட்டத்தைச் சார்ந்துள்ளது. வங்கிகளது சர்வாதிகாரத்திற்கு எதிராக, மனிதகுலத்தின் செல்வவளத்தை உருவாக்கும் தொழிலாளர்கள், அவர்களின் சொந்த தலைவிதி மீது அவர்களே கட்டுப்பாட்டை எடுக்க வேண்டும், இதை செய்ய அவர்களுக்கு ஒரு சர்வதேச புரட்சிகர தலைமை அவசியமாகும்.

"பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை" நிறுவுவதற்கான முயற்சியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் நிராகரிப்பவர்களும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையை ஸ்ராலினிச ஆட்சியின் குற்றங்களுடன் பொய்யாக இணைப்பது பொதுவான விஷயமாகிவிட்டது, உண்மையில் அது சோவியத் ஒன்றியத்தை கலைத்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1991 இல் முதலாளித்துவ ஆட்சியை மீட்டமைத்தது. தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான இந்த போராட்டத்தின் இத்தகைய எதிர்ப்பாளர்களுக்கு, ஏங்கெல்ஸின் பின்வரும் வரிகளைக் கொண்டு ஒருவர் பதில் கூற முடியும்:

இப்போது மீண்டுமொருமுறை சமூக-ஜனநாயக பிலிஸ்தீனியர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற இந்த வார்த்தைகளால் ஒட்டுமொத்தமாக பீதியில் நிறைந்துள்ளார்கள். சரி நல்லது கோமான்களே, இந்த சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பாரிஸ் கம்யூனைப் பாருங்கள். அதுதான் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்.

Loading