புதுடெல்லியும் வாஷிங்டனும் சீன எதிர்ப்பு இராணுவ-மூலோபாய கூட்டாட்சியை வலுப்படுத்துவதாக சபதம் செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின் கடந்த வார இறுதியில் மூன்று நாள் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இது புதிதாக பதவிக்குவந்த பைடென் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவரின் முதல் விஜயமாகும். ஆஸ்டினுக்கு வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு சந்திப்பு ஒதுக்கமைக்கப்பட்டமை, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்த வருகையின் முக்கியத்துவத்தை எவ்வாறு மதிப்பிட்டுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். அடுத்த நாட்களில், ஆஸ்டின் தனது இந்திய பிரதிநிதியான ராஜ்நாத் சிங் மற்றும் மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட பிற உயர்மட்ட சந்திப்புகளை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில், இரு தரப்பினரும் இருதரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளை பெரிதும் விரிவுபடுத்துவதாக உறுதியளித்தனர். கடந்த ஏழு ஆண்டுகளில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் போது, சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா ஒரு உண்மையான முன்னணி அரசாக மாற்றப்பட்டது.

இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மார்ச் 20, 2021 கூட்டு செய்தியாளர் கூட்டத்தில்.(AP Photo/Manish Swarup)

பென்டகனுடன் இந்தியாவின் இராணுவம் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் பாதுகாப்பு மந்திரி சிங், ஆஸ்டினுடனான தனது கலந்துரையாடல்கள் "சேவைகள், தகவல் பகிர்வு, வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர தளவாட ஆதரவு ஆகியவற்றில் இராணுவத்தின் ஈடுபாட்டை" உள்ளடக்கியிருந்ததாக கூறினார்.

ஆஸ்டினின் வருகை, பைடென் நிர்வாகம் சீனா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய அழுத்தத்தின் முழு பிரச்சாரத்தைத் தொடர விரும்புவதோடு மட்டுமல்லாமல், பைடென் நிர்வாகமும் எடுக்கவுள்ள தொடர் நகர்வுகளின் ஒரு பகுதியாகும் என சமிக்கை காட்டுகின்றது. பெய்ஜிங்குடன் பைடென் "தீவிர போட்டி" என்று அழைத்ததில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படும் இந்தியா போன்ற அதன் கூட்டாளிகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிட்ட அணிதிரட்டலுடன் அதை தீவிரப்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

ஆஸ்டின் தனது இந்திய பயணத்தைத் தொடங்கியபோது, அமெரிக்க அதிகாரிகள் இருதரப்பு அமெரிக்க-சீன அமைச்சரவை மற்றும் அலாஸ்காவில் நடைபெற்ற பிற உயர் அதிகாரிகளின் உச்சிமாநாட்டில் பெய்ஜிங்கிற்கு அச்சுறுத்தல் மற்றும் கோரிக்கைகளை வெளியிட்டனர். அமெரிக்க இராஜதந்திரிகள் மனித உரிமை மீறல்களுக்காக சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் கண்டனம் செய்ததோடு, தமது ஆரம்ப உரைகளில் “விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கை”, அதாவது அமெரிக்க மேலாதிக்கத்தை அச்சுறுத்துவதாக கூறியதையடுத்து, கூட்டம் பரஸ்பர சேற்றை வாரியிறைத்தல் மற்றும் கண்டனங்களாக சீரழிந்தது.

இந்த மாத தொடக்கத்தில் நாற்கர அரசாங்கத்தின் தலைவர்களின் முதல் கூட்டத்தை நடத்தியதன் மூலம் சீனாவை தனிமைப்படுத்தி சுற்றி வளைப்பதற்கான வாஷிங்டனின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தில் இந்தியாவை இன்னும் முழுமையாக ஒருங்கிணைப்பதில் தனது நிர்வாகம் கொண்டுள்ள முக்கியத்துவத்தை பைடென் தனிப்பட்ட முறையில் கோடிட்டுக் காட்டினார். அமெரிக்காவின் தலைமையில், இந்த நாற்கர கூட்டு என்பது இந்தியா மற்றும் வாஷிங்டனின் நீண்டகால முதன்மை பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய ஒரு “மூலோபாய உரையாடல்” ஆகும். இது, இந்தியாவினை ஏனைய நாற்கர (Quad) கூட்டாளிகளுடன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு நெருக்கமான வலைப்பின்னலால் சிக்கவைத்துள்ளது.

இந்தியாவுடனான தனது இராணுவ-மூலோபாய கூட்டாட்சியை விரிவுபடுத்துவதற்கான வாஷிங்டனின் உந்துதல் புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைவதை துரிதப்படுத்தும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் கடந்த ஆண்டு தங்களது சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் இரத்தக்களரி மோதல்களாக வெடித்தன.

உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கை சீன கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சினிலிருந்து பிரிக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சர்ச்சைக்குரிய எல்லையில் முதல் இறப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலும் இது இரு நாடுகளும் 1962 இல் ஒரு மாத கால எல்லைப் போரை நடத்தியதிலிருந்து இந்தோ-சீனப் போரின் பாரிய ஆபத்தை முன்வைக்கின்றது.

இந்த ஆண்டில் ஏழு மாதங்களுக்கும் மேலாக, புது டெல்லியும் பெய்ஜிங்கும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கி பிரிவுகள் மற்றும் இருபுறமும் டஜன் கணக்கான போர் விமானங்களை உள்ளடக்கிய ஒரு பதட்டமான இராணுவ நிலைப்பாட்டில் வைத்துள்ளன. சமீபத்திய வாரங்களில் மட்டுமே படைவிலக்கல் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

சீனாவுடனான தனது எல்லை மோதல்கள் குறித்து இந்தியா இன்னும் மோசமான நிலைப்பட்டை எடுக்க அமெரிக்கா ஊக்குவித்தது. 2017 ஆம் ஆண்டில் டோக்லாம் பீடபூமியில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் எல்லை மோதலில் ஈடுபட்டபோது அதன் பொது அறிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், வாஷிங்டன் பெய்ஜிங்கை "ஆக்கிரமிப்பாளர்" என்று முத்திரை குத்தியதுடன், இந்தியாவுடனான தனது எல்லையில் சீனாவின் ஊடுருவல்களை தென் சீனக் கடல் தகராறுடன் இணைத்தது. அங்கு வாஷிங்டன் சீனாவின் அண்டை நாடுகளை அவற்றின் பிராந்திய உரிமைகோரல்களுக்கு அழுத்தம்கொடுக்குமாறு தூண்டியுள்ளது.

வாஷிங்டனால் முடுக்கிவிடப்பட்ட இந்தியா, ஆகஸ்ட் 2020 இன் பிற்பகுதியில் மலை சிகரங்களை கைப்பற்றுவதற்காக ஆயிரக்கணக்கான துருப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்திய அதிகாரிகள் பின்னர் இந்த நடவடிக்கை ஒரு ஒட்டுமொத்த போராக வெடித்திருக்கலாம் என்பதை ஒப்புக் கொண்டனர்.

நாற்கர தலைவர்களின் உச்சிமாநாட்டில் மோடியின் பங்களிப்பும், அதைத் தொடர்ந்து ஆஸ்டினை புதுடில்லிக்கு வரவேற்பதும், கூட்டு எல்லையில் பதட்டங்களை குறைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுடன் இணைந்து சீன-இந்திய உறவுகளை மீட்டமைக்க கோரிய பெய்ஜிங்கின் அழைப்பை நேரடியாக மறுப்பதாகும். மேலும், வாஷிங்டன் மற்றும் அதன் முக்கிய பசிபிக் நட்பு நாடுகளுடனான அதன் உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில், மோடி அரசாங்கம் மோதல் தவிர்ப்பை கேள்விக்குரியதாக்கவும் தயாராக உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

ஆஸ்டினின் வருகை புது டெல்லி மற்றும் வாஷிங்டன் சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் இராணுவ-மூலோபாய கூட்டாட்சியை வளர்ப்பதற்கு எடுத்த நீண்ட தொடர் நடவடிக்கைகளில் சமீபத்தியது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்க இராணுவத்துடன் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைக்கு வசதியாக இந்தியா மூன்று "அடித்தள" ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதில் போக்குவரத்து பரிமாற்ற குறிப்பாணை ஒப்பந்தம் (Exchange Memorandum of Agreement - LEMOA), அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement - BECA) மற்றும் தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (Communications Compatibility and Security Agreement - COMCASA) ஆகியவை அடங்கும்.

கடந்த ஆண்டில், புது டெல்லி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் LEMOA ஐப் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, எரிபொருள் நிரப்புதல் மற்றும் மறுபயன்பாட்டுக்கு இராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது. இதில் வருடாந்திர இந்தோ-அமெரிக்க மலபார் கடற்படை போர் பயிற்சிகளை ஒரு நாற்கர பயிற்சியாக மாற்றுவது உட்பட அடங்கும்.

ஆஸ்டினுக்கும் சிங்குக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உலகளாவிய அரங்கில் கூட்டு சவால்களை சமாளிக்க அமெரிக்க-இந்தியா கூட்டாண்மை எவ்வாறு விரிவாக்கப்படலாம் என்பதை ஆராய்ந்தன. அவர்களின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஆஸ்டினுடனான கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் சிங், அவர்கள் “இருதரப்பு மற்றும் பலதரப்பு பயிற்சிகளின் பரந்த அளவை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகம், மத்திய கட்டளையகம் மற்றும் ஆபிரிக்கா கட்டளையகம் ஆகியவற்றுடன் மேம்பட்ட ஒத்துழைப்பைத் தொடர ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். அடிப்படை ஒப்பந்தங்களாகிய LEMOA, COMCASA மற்றும் BECA இனை பரஸ்பர நன்மைக்கான அவற்றின் முழுத் திறனை பயன்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியா பெருகிய முறையில் ஆசியா, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலும் அமெரிக்காவின் பங்காளியாக தன்னைப் பார்க்கிறது.

உலகளாவிய புவிசார் அரசியலில் இந்தியா ஒரு பெரிய பங்கை வகிக்கவேண்டும் என்ற வாஷிங்டனின் ஊக்கத்திற்கு இணங்க, ஆப்கானிஸ்தான் "சமாதான முன்னெடுப்புகளில்" ஈடுபடுமாறு இந்தியாவை இப்போது வலியுறுத்துகிறது. அதாவது, தலிபான் மற்றும் காபூல் அரசாங்கத்திற்கு இடையில் அது ஒழுங்கமைத்துள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள கேட்கின்றது. அதன் நோக்கம், அதன் வளங்களில் பெருமளவானவற்றை உள்ளிளுத்துள்ளது என நிரூபிக்கப்பட்ட இரண்டு தசாப்த கால போரிலிருந்து அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றுவதாகும். ட்ரம்ப் நிர்வாகம், பாகிஸ்தானை கருத்தில்கொண்டு ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த, ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதுடெல்லியை சேர்க்கவில்லை.

எவ்வாறாயினும், பெய்ஜிங்கிற்கு எதிரான போர் உந்துதலில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காளியாக ஒருங்கிணைப்பதே வாஷிங்டனின் முன்னுரிமையாக உள்ளது. சிங்குடனான தனது கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், ஆஸ்டின் கூறினார், “குறிப்பாக இந்தியா இன்று வேகமாக மாறிவரும் சர்வதேச இயக்கவியலில் பெருகிய முறையில் முக்கிய பங்காளியாகும். பிராந்தியத்துடனான எங்கள் அணுகுமுறையின் மைய தூணாக இந்தியாவுடனான ஒரு விரிவான மற்றும் எதிர்நோக்கிய பாதுகாப்பு கூட்டாக நாம் பார்க்கும் எங்கள் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்” என்றார்.

சீனாவை நேரடியாக கருத்தில் எடுத்துக் கொண்ட ஆஸ்டின் தொடர்ந்தார், “இந்த உறவு ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் கோட்டையாகும். இந்திய கடல்பாதைகளின் சுதந்திரம் மற்றும் மேலாக பறப்பதற்கான சுதந்திரம், தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகம் மற்றும் சர்வதேச சட்டத்தை பின்பற்றுதல் ஆகியவற்றை ஆதரிக்கின்றது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்புக்கான எங்கள் பகிரப்பட்ட கருத்துக்களின் ஒரு உறுதியான உறுதிப்படுத்தல் ஆகும்.”

அணு ஆயுத சக்திகளுக்கு இடையில் ஒரு பேரழிவு மோதலைத் தூண்டும் உண்மையான ஆபத்தை கொண்டுள்ள இந்த பொறுப்பற்ற நிகழ்ச்சி நிரல் இந்தியாவின் ஆளும் உயரடுக்கிற்குள் பெரும் ஆதரவைப் பெறுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலக நிலைப்பாட்டில் பரந்த அரிப்பில் வேரூன்றியுள்ள ஒரு வரலாற்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ளபோதும், அதன் சொந்த கொள்ளையடிக்கும் உலகளாவிய நலன்களை முன்னேற்றுவதற்கும், தொழிலாள வர்க்கத்திடமிருந்து விரைவாக அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்வதில் அதன் கையை வலுப்படுத்துவதற்கும் இந்திய முதலாளித்துவம் வாஷிங்டனின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸில் “ஆழமான உறவுகள்” என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் ஆஸ்டினின் வருகையை உறுதியாக வரவேற்றது. இது அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கான மோடியின் "அரசாங்கத்தின் உற்சாகமான வரவேற்பை" பாராட்டியது. இது "இருதரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உயர்த்துவதற்கான இரு தலைநகரங்களிலும் உள்ள அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." இது மேலும் கூறுகையில், “சீனாவிலிருந்து வளர்ந்து வரும் இருதரப்பிற்கும் பொதுவான அச்சுறுத்தல்களால் உந்தப்பட்டு, இந்தோ-பசிபிக் பற்றிய புதிய புவிசார் அரசியல் கண்ணோட்டத்தால் ஒன்றுபட்டு டெல்லியும் வாஷிங்டனும் பாதுகாப்பு கூட்டின் அளவையும் நோக்கத்தையும் விரிவுபடுத்துவதாகத் தெரிகிறது. சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் இயக்கத்தில் இந்தியாவின் நெருக்கமான ஒருங்கிணைப்பை நியாயப்படுத்தும் வகையில், தலையங்கம் மேலும் கூறுகையில், “பெரிய இமயமலை மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு தந்திரோபாயங்கள் டெல்லி மற்றும் வாஷிங்டன் ஆகிய இரு நாடுகளுடனான பெய்ஜிங்கின் உறவை சேதப்படுத்த தொடங்கியபோது, இந்தியாவும் அமெரிக்காவும் தவிர்க்க முடியாதது அவர்களின் பாதுகாப்பு அரவணைப்பை இறுக்குவது தவிர்க்க முடியாததே" என்கிறது.

இராணுவ-மூலோபாய கூட்டாண்மை இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள், குறிப்பாக புது டெல்லியின் ரஷ்யாவுடனான நீண்டகால இராணுவ-மூலோபாய உறவுகள் குறித்து உள்ளன. இந்தியா தனது ஆயுதங்கள் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தின் மூலப்பொருட்களுக்கு ரஷ்யாவை நம்பியுள்ளது. மேலும் மாஸ்கோவுடனான தனது உறவுகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முழுமையாக மூலோபாய ரீதியாக சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கு நம்புகிறது. எவ்வாறாயினும், ரஷ்யாவுடனான இந்தியாவின் மூலோபாய உறவுகளை மட்டுப்படுத்தவும், சீர்குலைக்கவும், இறுதியில் முறித்துக் கொள்ளவும் வாஷிங்டன் உறுதியாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் வலியுறுத்துவதற்கு ஏற்றுக்கொள்ள முடியாத தடையாக ரஷ்யாவை கருதுகிறது.

தற்போது, அக்டோபரில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ள ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவது குறித்து அமெரிக்கா, புதுடில்லிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. புதுடெல்லி வாங்குவதற்கு முன்னேறினால், அமெரிக்காவின் எதிரிகளுக்கான பொருளாதாரத் தடைகள் சட்டத்தின் (CAATSA) கீழ் பொருளாதாரத் தடைகளை விதிக்க வாஷிங்டன் அச்சுறுத்தியுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது CAATSA பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தலை அவர் எழுப்பியிருக்கிறாரா என்று சிங்குடனான தனது கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கேட்டபோது, ஆஸ்டின், அவர்கள் S-400 வாங்குவதைப் பற்றி விவாதித்ததாகக் கூறினார். ஆனால் "பொருளாதாரத் தடைகள் பற்றிய பிரச்சினை" அவர்களின் விவாதங்களில் காணப்படவில்லை, ஏனெனில் இந்தியா ரஷ்யாவிலிருந்து ஏவுகணை அமைப்பை இன்னும் பெறவில்லை என்றார். ஆஸ்டின் பின்னர் தனது கருத்துக்களில் ஒரு ஊசியை ஏற்றி, "ரஷ்ய உபகரணங்களிலிருந்து விலகி, பொருளாதாரத் தடைகளைத் தூண்டும் எந்தவிதமான வாங்குதல்களையும் தவிர்க்குமாறு எங்கள் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் நாங்கள் நிச்சயமாக கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

Loading