பிலிப்பைன்ஸ்: போப்போய் லக்மானின் அரசியல் சந்ததியினர் ஸ்ராலினிச பொய்களை மீண்டும் மறுசுழற்சி செய்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) அரை நூற்றாண்டு காலமாக பிலிப்பைன்ஸில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வெகுஜன போராட்டங்கள் குறித்து கருத்தியல்ரீதியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு முக்கியமான அரசியல் சந்தர்ப்பத்திலும், அது தொழிலாள வர்க்கத்தை தவறாக வழிநடத்தி மற்றும் காட்டிக் கொடுத்தது. அதன் போராட்டங்களை அக் கட்சியின் முதலாளித்துவ கூட்டாளிகளின் நலன்களுக்கு "தேசிய ஜனநாயகம்" என்ற பெயரில் கீழ்ப்படுத்தியுள்ளது.

இந்த வழியில் கட்சி 1972 இல் பேர்டினாண்ட் மார்க்கோஸால் இராணுவ சட்டம் சுமத்தப்படுவதற்கு உதவியதுடன், 1986 இல் கொராஸன் அக்கினோவின் ஆட்சியை உறுதிப்படுத்தியது. 2001 ஆம் ஆண்டில் குளோரியா மாகபகல் அரோயோவை ஜனாதிபதியாக பதவியிருத்திய அரசியலமைப்பு சதித்திட்டத்தை இலகுவாக்க உதவி, மேலும் 2016 இல் பாசிச ரோட்ரிகோ டுரேற்ற அதிகாரத்திற்கு உயர்வதற்கு உற்சாகமான ஆதரவை வழங்கியது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் சோசலிசத்தின் பதாகையின் பின்னால் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் தோன்றுவதைத் தடுத்து, ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவின் நலன்களுடன் வெகுஜன அமைதியின்மையைக் கட்டிவைத்தனர்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டும் ஒளிப்பதிவு காட்சி (நன்றி: YouTube, Rappler)

இந்த வரலாற்றின் போது பல அமைப்புகள் கட்சியிலிருந்து பிரிந்து, தங்களை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புரட்சிகர மாற்றுக்களாக தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைத்தன. எவ்வாறாயினும், இந்த குழுக்கள் எதுவும் ஸ்ராலினிசத்துடன் முறித்துக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வேலைத்திட்டமான தேசியவாதம் மற்றும் வர்க்க ஒத்துழைப்பிலிருந்து ஒரு தந்திரோபாய மாறுபாட்டையே குறிக்கின்றன.

பிரிந்து சென்ற அமைப்புகளில் மிக முக்கியமானவை ஃபிலிமோன் ‘போப்போய்’ லாக்மன் தலைமையிலானவையாகும். நவம்பர் 2020 இல், உலக சோசலிச வலைத் தளம் லாக்மனின் வரலாறு மற்றும் முன்னோக்கை ஆராயும் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது அவர் உண்மையில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச போட்டியாளர் என்பதை நிரூபிக்கிறது.

அந்தக் கட்டுரையின் கண்டுபிடிப்புகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம். லாக்மனுக்கும் மற்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மற்றும் கருத்தியல் தலைவரான ஜோஸே மரியா சிஸனுக்கும் இடையே தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஸ்ராலினிசத்தின் தேசியவாத கருத்தாக்கங்களில் வேரூன்றிய ஒரு அடிப்படை வேலைத்திட்ட தொடர்ச்சியை இருவரும் பகிர்ந்து கொண்டனர். லாக்மனும் சிஸனைப் போலவே, தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்பும் மார்க்சிச விரோத முன்னோக்கை முன்வைத்தார். இந்த முன்னோக்கு உலகெங்கிலும் உள்ள ஸ்ராலினிச கட்சிகளின் வர்க்க ஒத்துழைப்பு மற்றும் தேசியவாதத்தின் அடிப்படை வேராக இருந்தது.

பிலிப்பைன்ஸ் போன்ற முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் புரட்சியின் பணிகள் இன்னும் சோசலிசமாக இல்லை, ஆனால் தேசிய மற்றும் ஜனநாயக தன்மை கொண்டவை என்று லாக்மனும் சிஸனும் முழு உடன்பாடு கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஸ்ராலினிச இரண்டு கட்டப் புரட்சி முன்னோக்கை ஆதரித்தனர். பகிரங்க அரசியல் போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கம் நுழைந்தபோது, அவர்கள் முதலாளித்துவத்தை இன்னும் தூக்கி எறிய முடியாது, தொழிலாள வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க முடியாது என வலியுறுத்தினர். இந்த முன்னோக்கின் அடிப்படையில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லாக்மனின் அமைப்புகள் தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவின் நலன்களுக்கு அடிபணியசெய்தன.

லாக்மன் கிராமப்புறங்களில் ஆயுதப் போராட்டம் தொடர்பான பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்குநிலைக்கு ஒரு தந்திரோபாய எதிர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார். நகரங்களில் தொழிற்சங்கப் பணிகளில் கவனம் செலுத்தினார். தனது தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர் சிஸனை விட சோசலிசத்தைப் பற்றி அடிக்கடி பேசினார். ஆனால் சிஸனைப்போலவே அதனை யதார்த்தமாக்குவது தொலைதூர எதிர்காலத்திற்குரிய இரண்டாம் கட்டமாக கருதினார்.

லாக்மன் 2001 இல் படுகொலை செய்யப்பட்டபோது, அவர் நிறுவிய அமைப்புகள் பல்வேறு போட்டி குழுக்களாக உடைந்தன. அவை அனைத்தும் அவரது ஸ்ராலினிச அரசியல் முன்னோக்கை தக்கவைத்துக் கொண்டன. இந்த குழுக்களில் ஒன்றான பார்ட்டிடோ என் மங்ககாவா (PM, Workers’ Party - தொழிலாளர் கட்சி) பிப்ரவரி மாதம் உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஒரு பதிலை வெளியிட்டது.

தொழிலாளர் கட்சியின் பதிலில் இரண்டு அடிப்படை பகுதிகள் உள்ளன.

முதலாவதாக, முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் ஒரு புரட்சி இவ்வாறான ஒரு வடிவத்தையே எடுப்பது சாத்தியப்படக்கூடிய ஒரே வடிவம் என்பதால் லாக்மன் இரண்டு கட்டப் புரட்சிக்காக போராடினார் என்று தொழிலாளர் கட்சி கூறியது. எவ்வாறாயினும், சிஸனைப் போலல்லாமல், லாக்மன் "தேசிய முதலாளித்துவத்துடனான கூட்டணிக்கு" ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என்று தொழிலாளர் கட்சி அறிவித்தது.

இரண்டாவதாக, தொழிலாளர் கட்சி போலியான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு மனிதனாக அவரைக் காட்டி லாக்மனின் அரசியல் நிலைப்பாட்டை மூடிமறைத்தது. புரட்சி, ஜனநாயக கட்டத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டில் ஒரு புரட்சியை முன்னெடுப்பதற்கு முன்பு “உலகப் புரட்சி வெடிப்பதற்குக் காத்திருக்க வேண்டும்” என்றும் ட்ரொட்ஸ்கி கூறியதாக அவர்கள் பொய் கூறினர்.

புரட்சியை ஜனநாயக மற்றும் சோசலிச நிலைகளாகப் பிரிப்பது தவிர்க்க முடியாமல் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஆதரவாக வழிவகுக்கிறது. மாறாக நோக்கங்களும் அறிவிப்புகளும் இந்த புறநிலை வரலாற்று தர்க்கத்தை மாற்ற முடியாது. தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரம் குறித்த லாக்மனின் பிரகடனங்களும், முதலாளித்துவத்திற்கு எதிரான விரோத அறிக்கைகளும் அவரது அரசியலின் வர்க்க ஒத்துழைப்பை மறைக்க மட்டுமே உதவியது.

ஒவ்வொரு புரட்சிகர சூழ்நிலையிலும், இரு கட்ட கருத்தாக்கத்தை வைத்திருக்கும் ஒரு கட்சியின் செயல்பாடு, தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதும், முதலாளித்துவ வர்க்கத்திற்கு, குறிப்பாக அதன் முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு, அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் உதவுவதாகும். போபோய் லாக்மனின் அரசியல்வாழ்க்கை மற்றும் பார்ட்டிடோ மங்ககாவாவின் தொழிலாளர் கட்சியின் வரலாறு ஆகிய இரண்டும் இதைத் தாங்கியிருக்கின்றன.

1998 முதல் 2001 வரை பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியான ஜோசப் எஸ்ட்ராடா, ஒரு தொழிலாள வர்க்க ஜனரஞ்சகத்தின் மூலம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். இது ஒரு திரைப்பட நட்சத்திரமாக பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கட்டியிருந்த ஒரு ஆளுமையின் அடிப்படையில் கட்டப்பட்டது. கடுமையான தொழிலாளர் அமைதியின்மை காலத்தில், ஆசிய நிதிநெருக்கடியை அடுத்து, தொழிலாளர்-மூலதன நல்லிணக்கத்திற்கான முறையீடுகளின் மூலம் பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்த எஸ்ட்ராடா முயன்றார்.

லாக்மன் மற்ற தொழிலாளர் தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் "தொழிலாளர்-மூலதன உறவுகளுக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவருவதற்கான எஸ்ட்ராடாவின் விருப்பத்துடன் முழுமையாக உடன்பட்டார்" என்று பகிரங்கமாக அறிவித்தார். லாக்மனுடன் இணைந்த தொழிற்சங்கத்திற்கு எதிரான தொழிலாளர் உரிமை மீறல்களுக்கு பொறுப்பான முன்னணி முதலாளியான லூசியோ டானை கைது செய்வதே அதற்கான சிறந்த வழி என்று அவர் மேலும் கூறினார். இது தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரம் அல்ல. இது "தொழிலாளர்-மூலதன நல்லிணக்கம்" என்ற பெயரில் ஒரு தாழ்மையான முறையீடு ஆகும்.

பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் பெரும்பான்மையானது எஸ்ட்ராடாவுக்கு எதிராக திரும்பியபோது, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லாக்மன் தலைமையிலான அமைப்புகளும் இதைப் பின்பற்றின. எஸ்ட்ராடாவை வெளியேற்றவும், அவரது துணைத் தலைவரான குளோரியா மாகபகல் அரோயோவை பதவியிலிருத்தவும் முனையும் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளின் நலன்களுக்குப் பின்னால் அவர்கள் வெகுஜன எதிர்ப்பைத் திருப்பினர். லாக்மன் தனது தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு பேரணியை பிலிப்பைன்ஸ் பங்குச் சந்தையின் முன்னணி பிரதிநிதியான Makati Business Club உடன் நடத்தினார். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் முன்னணி உறுப்பினரான ரிகோபெர்டோ டிக்லாவ் அரோயோ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் எஸ்ட்ராடாவை வெளியேற்றுவதில் லாக்மனின் பங்கைப் பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

2001 இல் லாக்மனின் படுகொலைக்குப் பின்னர், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது பிளவிலிருந்து தோன்றிய அனைத்து அமைப்புகளும் அவரது மரபுக்கு மேலதிக உரிமை கோர முயன்றன. அவை அனைத்தும் முதலாளித்துவ வர்க்கத்துடனும் அதன் அரசியல் பிரதிநிதிகளுடனும் கூட்டணிகளை உருவாக்கின.

போப்போய் லாக்மன் (Facebook)

லாக்மனின் வர்க்க ஒத்துழைப்பைத் தொடர்வதில் தொழிலாளர் கட்சி குறிப்பாக மிகச்சிறந்த வரலாற்றுப்பதிவைக் கொண்டுள்ளது. தொழிலாளர் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும் தொழிலாளர் கட்சி தலைவருமான ரெனாடோ மாக்டூபோ செய்தித் தொடர்பாளராக பணியாற்றியுள்ளார். அவரது உரைகள் முதுகெலும்பு இல்லாத மற்றும் தாழ்மைமிக்க கருத்துக்களால் குறிக்கப்படுகின்றன. 1999 ஆம் ஆண்டில், அவர் சட்டமன்றத்தில் பிரதமர், "தொழிலாளர் கட்சி" பிரதிநிதியாக ஒரு முன்னுரிமைமிக்க உரை நிகழ்த்தினார். அதில் அவர் பின்வருமாறு அறிவித்தார்:

"உங்கள் நேர்மை மற்றும் நியாயமான உணர்வுக்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்: ஒரு சாதாரண தொழிலாளியின் உழைப்புக்கு ஒரு நியாயமான ஊதியம் அல்லது நியாயமான விலை நம் நாடு தாங்க முடியாத ஒரு ஆடம்பரம் அல்ல என கருதுகின்றேன். நான் கேட்பது என்னவென்றால், சராசரி தொழிலாளிக்கு அவரது உழைப்பு சக்திக்கான மதிப்பைக் கொடுத்து, அனைத்து தொழிலாளர்களுக்கும் விலை உயர்வால் அரிக்கப்படும் அவர்களின் ஊதியத்தின் இழந்த மதிப்பை மீட்டுக் கொள்ள வேண்டும்… எனது முந்தைய முன்னுரிமைமிக்க உரைகளில் உங்களில் பலரின் உணர்ச்சிகளை நான் ஆத்திரமூட்டியுள்ளேன் என்பதை நான் அறிவேன். எனது தாழ்மையான மன்னிப்பை கோருகிறேன். ஆனால் நான் பிரார்த்தனை செய்கிறேன், வாதிடுகின்றேன்.… [ஒரு] பொருளாதாரத்தின் சிக்கலுக்கு நடுவில், ஒரு எளிய உண்மை வெளிப்படுகிறது: மகிழ்ச்சியான தொழிலாளி ஒரு கடின உழைப்பாளி. பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமூக நீதிக்கும் இதுவே முக்கியம். எங்கள் தொழிலாளர்களுக்கு ஒரு இனிய நத்தார் வாழ்த்துக்களை கொடுப்போம், அவர்கள் வரும் மில்லினியத்தில் நம் நாட்டிற்காக கடுமையாக உழைப்பார்கள். Mabuhay ang Uring Manggagawa! [தொழிலாள வர்க்கம் நீடூழி வாழ்க!] திரு சபாநாயகருக்கு நன்றி.”

இந்த உரையை தொழிலாளர் கட்சியின் கல்லறையில் பொறிக்க வேண்டும். ஒரு புரட்சிகரக் கட்சி தொழிலாள வர்க்கத்தில் தனது சொந்த வலிமையின் உணர்வை வளர்த்து, தொழிலாளர்கள் நிமிர்ந்து நிற்க்கவும், அவர்களின் விதியின் எஜமானர்களாக அவர்களை மாறவும் கற்றுக்கொடுக்கிறது. மாக்டூபோவும் தொழிலாளர் கட்சியும் இதற்கு மாறாக, முதலாளித்துவத்திற்கு முன்பாக சிரம்தாழ்ந்து, மேசையிலிருந்து விழும் எச்சங்களுக்காக பிச்சை கேட்கிறார்கள்.

2006 ஆம் ஆண்டில் தொழிலாளர் கட்சி இராணுவத்தின் ஆட்சிகவிழ்ப்பு பிரிவுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி, லெப்டினென்ட் சார்ஜென்ட் அன்டோனியோ ட்ரில்லன்ஸ் மற்றும் பிரிகேடியர். ஜெனரல் டானிலோ லிம் உடன் தங்கள் ஒற்றுமையை பகிரங்கமாக அறிவித்தது. இந்த வலதுசாரி இராணுவ பிரமுகர்கள், மணிலா தீபகற்ப ஹோட்டலை ஆயுதமேந்திய முறையில் பறிமுதல் செய்தனர் மற்றும் தமது அமைப்புகள் ஊடாக அரசியல் பதவிகளை பெற்றுக்கொண்டனர். ட்ரில்லன்ஸ் இப்போது ஒரு செனட்டராக உள்ளார். லிபரல் கட்சியின் விருந்தினர் வேட்பாளராக நின்றபோது, தொழிலாளர் கட்சியின் ஆதரவுடன் லிம் 2010 இல் செனட்டில் போட்டியிட்டார். சதிசெய்த ஜெனரல்கள் "சீருடையில் உள்ள தொழிலாளர்கள் எனவும் ஊழல் இல்லாத மற்றும் கொள்கைரீதியான போராளிகளுக்கான அடையாளம்" என்று மாக்டூபோ அறிவித்தார். லிம் தனது செனட்டர் ஆவதற்கான முயற்சியில் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் 2017 ஆம் ஆண்டில் டுரேட்ட இன் நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்க மெட்ரோ மணிலா மேம்பாட்டு ஆணையத்தின் (MMDA) தலைவராக சேர்ந்தார்.

2019 ஆம் ஆண்டளவில், டுரேட்டவிற்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்பின் உத்தியோகபூர்வ கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமாக இருந்தன. மாக்டூபோ லிபரல் கட்சி பதவிக்கு மரிகினா நகர சபைக்கு போட்டியிட்டார். அவர் லிபரல் கட்சியின் உறுப்பினராக நகரத்தின் இரண்டாவது மாவட்டத்தில் ஒரு இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிலாளர் கட்சியின் கட்டுரையின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு பொய்கள் இந்த துரோக வரலாற்றை மறைக்க பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே தொழிலாளர் கட்சியும், "தேசிய ஜனநாயகம்" என்ற எல்லைக்குள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. அவ்வாறு செய்ய, மாற்றீட்டான வேலைத்திட்டமான ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கை அது நிராகரிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், தொழிலாளர் கட்சிக்கு இங்கு புதிதாக எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் ஸ்ராலினிசத்தின் கையருப்பிலுள்ள வாதங்களையே பயன்படுத்துகிறார்கள். லாக்மன் ஒரு ஸ்ராலினிசவாதி என்ற கூற்றை தொழிலாளர் கட்சி தீர்மானிக்கையில், அவர்களின் சொந்த வாதம் இதுவே அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்பதை வேலைத்திட்டரீதியாக நிரூபிக்கிறது.

தொழிலாளர் கட்சியால் மறுசுழற்சி செய்யப்பட்ட பொய்கள் முதலில் 1920களின் பிற்பகுதியில் முன்வைக்கப்பட்டன. 1930 களில், இந்த பொய்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை உயர்த்துவதற்கான நோக்கத்திற்கு போதுமானதாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டபோது, அவை போலி விசாரணைகள், பரந்த களையெடுப்புகள் மற்றும் படுகொலைகள் இதற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்டன. தொழிலாளர் கட்சி மற்றும் சிஸன் இருவரும் இந்த திரிபுகளையும் மற்றும் இரத்தக்களரியான பொய்களை மறுசுழற்சி செய்யும் போது தங்கள் பார்வையாளர்களுக்கு வரலாறு தொடர்பாக அறியாமையே உள்ளது என்பதை நம்பியிருக்கிறார்கள்.

நிரந்தரப் புரட்சி முன்னோக்கு ஜனநாயகக் கடமைகளைத் தவிர்த்து சோசலிசத்தை நோக்கி செல்வதை பரிந்துரைக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பணிகள், எல்லாவற்றிற்கும் மேலாக, பெரிய விவசாய பண்ணைகளை உடைப்பதன் மூலம் விவசாய பிரச்சினைக்கு ஒரு புரட்சிகர தீர்வு தேவை எனக் கூறுகின்றது. ஒரு ஜனநாயக தன்மையான ஆனால் சோசலிச நடவடிக்கை அல்லாத நில சீர்திருத்தத்தை செய்வதன் மூலமே, தொழிலாள வர்க்கம் தனது அதிகாரப் போராட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகளின் ஆதரவை வென்றுகொள்ள முடியும்.

எவ்வாறாயினும், புரட்சியின் ஜனநாயக மற்றும் சோசலிச பணிகளுக்கு இடையில் காலவரிசைரீதியான வேறுபாட்டைப் பேணுவதும் மற்றும் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக நிறைவேற்ற வேண்டிய கட்டங்களாகக் கருதுவதும் சாத்தியமற்றது. பிளெக்ஹானோவ் மற்றும் மென்ஷிவிக்குகளிடமிருந்து பெறப்பட்ட மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் தங்கள் தேசிய நலன்களுக்கு சேவையாற்ற ஏற்றுக்கொண்ட இந்த படிநிலைரீதியான கருத்தாக்கம், வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று இயக்கவியலைப் புறக்கணிக்கும், ஒரு உள்ளடக்கத்தை மறைக்கும் வெற்று பொதுமைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டது.

படிநிலைரீதியான கருத்தாக்கம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டங்களுக்கு ஒரு செயற்கையான வரம்பை விதித்து, தொழிலாளர்களுக்கு "இதுவரை மற்றும் இதற்குமேல் இல்லை" என்று கூறுகிறது. புரட்சிகர போராட்டங்களை துண்டித்து, அதிகாரத்தை முதலாளித்துவத்தின் கைகளில் விட்டுவிடுவதே இதன் விளைவாகும். முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்திற்கு இனி புரட்சியின் ஜனநாயக பணிகளைச் செய்வதற்கான திறனும் இல்லை, ஆர்வமும் இல்லை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நிலைமை இவ்வாறே உள்ளது.

"தேசிய முதலாளித்துவம்" என்று அழைக்கப்படுவது நீண்டகால பொருளாதார மற்றும் குடும்ப பிணைப்புகளால் நிலப்பிரபுக்களுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வர்க்க எதிரியாகும். தொழிலாளர்களின் ஒரு புரட்சிகர இயக்கத்தை எதிர்கொள்கையில், முதலாளித்துவ வர்க்கம் அதை நோக்கித் திரும்பி அடக்குகிறது. அவசியமானது என்று நிரூபிக்கப்பட்டால், சர்வாதிகாரத்தையும், கொலையையும் அது பயன்படுத்துகின்றது.

இருபதாம் நூற்றாண்டானது, புரட்சிக்குப் பின்னர் புரட்சி தோற்கடிக்கப்பட்டு, சில சந்தர்ப்பங்களில் அதிகாரம் முதலாளிகளின் கைகளில் விடப்பட்டதால் இரத்தம் தோய்ந்தமுறையில் ஒடுக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு பேரழிவிலும் ஸ்ராலினிசம் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது.

புரட்சியின் ஜனநாயகப் பணிகளை பூர்த்திசெய்வதற்கு தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது அவர்கள் முதலாளித்துவ உடைமைகளுக்குள் ஊடுருவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு தொழிலாளர் அரசாங்கம் முதலாளித்துவ சொத்துடமை உறவுகளுடன் ஆட்சிசெய்வது சாத்தியமில்லை. ஒவ்வொரு சமூகப் போராட்டத்திலும், ஒவ்வொரு வேலைநிறுத்தத்திலும் தொழிலாளர் அரசாங்கம் முதலாளிகளின் பக்கமாக அல்லது தொழிலாளர்களின் பக்கமாக இருக்க வேண்டும். நடுநிலைமை என்பது சாத்தியமற்றது. தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, தொழிலாளர் அரசாங்கம் சோசலிச நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும்.

புரட்சியின் ஜனநாயக பணிகளைத் தவிர்ப்பதை ஆதரிப்பதற்குப் பதிலாக, ட்ரொட்ஸ்கி அவற்றை நிறைவேற்றுவதற்கான ஒரே சிறந்த வழிமுறையை நிரந்தரப் புரட்சியின் மூலம் நிறுவினார். ஜனநாயக கடமைகளை செய்வதற்கு, சோசலிச நடவடிக்கைகள் அவசியம். புரட்சியை படிநிலைகளாக பிரிக்க முடியாது.

தொழிலாளர் கட்சி, லாக்மனின் நிலைப்பாட்டை மீண்டும் கூறி, ஸ்ராலினிசத்தின் மற்றொரு வரலாற்று பொய்யை எதிரொலிக்கின்றது: அதாவது ட்ரொட்ஸ்கி, ஒரே நேரத்தில் உலகப் புரட்சி நடைபெறும்வரை காத்திருக்கவேண்டும் என்பதை ஆதரித்தார் என்பதே அது. இந்த பொய் இன்னும் நீடித்திருப்பது முற்றிலும் அரசியல் மற்றும் வரலாற்று அறியாமை மீது தங்கியுள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் படிக்கும் எவருக்கும் அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் உலகெங்கிலும் உள்ள புரட்சிகரப் போராட்டங்களை அரசியல்ரீதியாக தயார்ப்படுத்த அர்ப்பணித்தார் என்பது தெரியும். எந்த நேரத்திலும் ஒருங்கிணைந்த உலகளாவிய எழுச்சிக்காக காத்திருக்கவேண்டும் என்று எந்த குழுவிற்கும் அவர் அறிவுறுத்தவில்லை. இக்கூற்று அபத்தமானது.

பெட்ரோகிராட் சோவியத் மற்றும் இராணுவ புரட்சிக் குழுவின் தலைவராக, ட்ரொட்ஸ்கி அக்டோபர் புரட்சிக்கு தலைமை தாங்கினார். அவரும் லெனினும் பொதுவான அரசியல் கருத்தாக்கத்தை பகிர்ந்து கொண்டனர்: அதாவது ரஷ்ய புரட்சியின் தலைவிதி, தொழிலாள வர்க்கத்தால் சோசலிச வழிமுறையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் முழுவதும் புரட்சியின் பரவலில் தங்கியிருந்தது என்பதே அதுவாகும்.

தனியொரு நாட்டில் சோசலிசத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. ஒருங்கிணைந்த உலக உற்பத்தி மற்றும் பரிமாற்றம் உட்பட முதலாளித்துவத்தின் சாதனைகளுக்கு அப்பால் சோசலிசம் ஒரு மகத்தான முற்போக்கான படியாக இருக்கும். இந்த வெற்றியிலிருந்து ஒரு தேசிய பொருளாதாரவாதத்தின் வடிவத்திற்கு பின்னோக்கி நகர்வதும் அதனை “சோசலிசம்” என அறிவிப்பதும் மார்க்சிசத்தை காட்டிக்கொடுப்பதாகும்.

அக்டோபர் 1917 இன் சோசலிசப் புரட்சி, சோவியத் யூனியனை ஒரு இடைமருவு தொழிலாளர் அரசாக உருவாக்கியதே தவிர ஒரு சோசலிச சமுதாயமாக அல்ல. அக்டோபர் புரட்சிக்கு இரண்டு சாத்தியமான வரலாற்று தலைவிதிகள் இருந்தன: ஒன்று உலக அரங்கில் சோசலிசத்தை அடைவதற்கு சர்வதேச புரட்சி பரவுவது, அல்லது சோவியத் ஒன்றியத்தின் தேசிய தனிமைப்படுத்தல் மற்றும் இறுதியில் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பது. ஸ்ராலினிசத்தின் துரோகங்கள் இந்த பிந்தைய விளைவிற்கு முற்றிலும் பொறுப்பாகின்றன.

ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி என்ற படைப்பில் எழுதியதாவது, “சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, அது சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறு, சோசலிசப் புரட்சி ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது. இது எங்கள் முழு கிரகத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே நிறைவு பெறுகிறது.”

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, லாக்மனைப் பின்பற்றுபவர்கள் வர்க்க ஒத்துழைப்பு மற்றும் தேசியவாதத்தை தொழிலாள வர்க்கத்திற்கு விற்க முற்படுகிறார்கள். அவர்கள் தங்கள் துரோகங்களை லெனினின் சொல்லாட்சிக் குறிப்புகளை எடுத்துக்காட்டியும் மற்றும் பொய்கள் மேல் குவிக்கப்பட்ட பொய்களாலும் மறைக்கிறார்கள்.

முதலாளித்துவ சுரண்டலுக்கும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கும் எதிரான வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான அதன் போராட்டத்தில் பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரே வழி, நிரந்தரப் புரட்சியின் முன்னோக்காகும். போபோய் லாக்மனின் பாரம்பரியத்தை தாங்கிய ஒவ்வொரு அமைப்பும் உட்பட பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் அனைத்து கிளைகளும் முற்றுமுழுதாக ஸ்ராலினிசவாதிகள் ஆவர். அவர்கள் லியோன் ட்ரொட்ஸ்கி மீதும் அவரும், அவரால் 1938 இல் நிறுவப்பட்ட நான்காம் அகிலமும் போராடும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் மீதும் பொதுவான வெறுப்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஸ்ராலினிஸ்டுகளின் கைகளில் அவர்கள் மீண்டும் மீண்டும் அனுபவித்த துரோகங்களுக்கு ஒரு புரட்சிகர மாற்றீட்டைத் தேடும் தொழிலாளர்கள் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கை படித்து, உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்புகொண்டு, பிலிப்பைன்ஸில் உலக சோசலிச புரட்சியின் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் (ICFI) ஒரு பிரிவை உருவாக்குவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விடயங்களைப் பற்றி விவாதிக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading