அதிகரித்து வரும் அமெரிக்க-சீனா மோதல்களுக்கு மத்தியில் சீன ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதாக தைவான் அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவுடனான அமெரிக்க மோதலை பைடென் நிர்வாகம் வேண்டுமென்றே தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இரு அணு ஆயுத சக்திகளுக்கிடையில் போரைத் தூண்டக்கூடிய தீப்பொறியாக தைவான் விரைவாக கவனத்திற்கு வந்துள்ளது. ட்ரம்பை தொடர்ந்து பைடென், தைவான் ஜலசந்தி முழுவதும் பல தசாப்தங்களாக ஒரு அமைதியற்ற மற்றும் ஆபத்தான அமைதியைக் பேணிவரும் இராஜதந்திர கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்.

தைவானுடனான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், 1979 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாக இருந்த ஒரு சீனக் கொள்கையை அமெரிக்கா கேள்விக்குள்ளாக்குகிறது. சீனாவை விட மிகவும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை எடுக்க அது தைபேயை (Taipei) ஊக்குவிக்கிறது. சீனாவிலிருந்து அதிக சுயாட்சியை கோரும் தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி முழு சுதந்திரத்தையும் அறிவிக்கக்கூடும் என்ற அச்சத்தை பெய்ஜிங்கில் தூண்டி மோதலுக்கான ஆபத்தை கூட்டுகின்றது.

அமெரிக்க கடற்படை கப்பலான USS ரோனால்ட் றேகனின் மேலாக பல விமானங்கள் பறக்கின்றன (Kaila V. Peters/U.S. Navy)

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய தைவானின் வெளியுறவு மந்திரி ஜோசப் வு, (Joseph Wu) தைவான் மீது சீனா தாக்குதலைத் தொடங்கும் அபாயம் குறித்து “அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள்” எச்சரிக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுத்தார். சீனாவுடனான ஒரு மோதலில் தைவான் அனைத்தையும் ஈடுபடுத்தும் என்று அவர் அப்பட்டமாக அறிவித்தார் “நாங்கள் போரை எதிர்த்துப் போராட வேண்டுமானால் நாங்கள் போரை நடத்துவோம். கடைசி நாள் வரை நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தால், கடைசி நாள் வரை நம்மை தற்காத்துக் கொள்வோம்” என்று அவர் அறிவித்தார்.

தென் சீனக் கடலில் தைபே கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளுக்கு (Pratas Islands) மிக அருகில் வந்த சீன ட்ரோன்களை தைவான் சுடும் என்று தைவானின் பெருங்கடல் விவகார குழுவின் தலைவரான லீ சுங்-வெயியின் அச்சுறுத்தல்களை தொடர்ந்து வூவின் கருத்துக்கள் புதன்கிழமை வந்தன. சீன ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக லீ கூறினார். ஆனால் அவை தீவுகளிலிருந்து 6 கி.மீ தூரத்தில் தடைசெய்யப்பட்ட நீர் மற்றும் வான்வெளியில் நுழையவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்கள் நுழைந்திருந்தால், “அது சட்டங்களின் கீழ் கையாளப்படும். நாம் சுட வேண்டி வந்தால், நாங்கள் சுடுவோம்” என்றார்.

இந்த அறிக்கைகள் இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா தூண்டிக்கொண்டிருக்கும் அசாதாரண பதட்டங்களுக்கு சான்றாகும். வாஷிங்டனில் இருந்து "சீன ஆக்கிரமிப்பு" மற்றும் "சீன விரிவாக்கம்" ஆகியவற்றின் கண்டனங்கள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களால் மீண்டும் மீண்டும் கூறப்படுவது, யதார்த்தத்தை தலைகீழாக்குகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த தசாப்தத்தில் இப்பகுதி முழுவதும் ஒரு பெரிய இராணுவ கட்டமைப்பை மேற்கொண்டுள்ளதுடன், தென் சீனக் கடல் மற்றும் கொரிய தீபகற்பம் உள்ளிட்ட சாத்தியமான வெடிக்கும்புள்ளிகளை வேண்டுமென்றே தூண்டிவிட்டுள்ளது.

புதன்கிழமை, அமெரிக்க கடற்படை தைவானுக்கும் சீன பெருநிலப்பகுதிக்கும் இடையிலான முக்கியமான தைவான் நீரிணை வழியாக மற்றொரு போர்க்கப்பலை அனுப்பியது. பெருநிலப்பகுதி நீரிணையின் குறுகிய இடத்திலிருந்து 130 கி.மீ தூரத்திலுள்ளது. வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலான USS John S. McCain பைடென் பதவியேற்றதிலிருந்து "கடந்துசெல்லும்" நான்காவது கடற்படைக் கப்பலாகும். இந்த வேகத்தில் சென்றால், பைடென் நிர்வாகம் கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் செய்யப்பட்ட 13 கடந்துசெல்லுதல்களின் சாதனையை தாண்டிவிடும்.

அதே நாளில், விமானம் தாங்கி கப்பல், USS Theodore Roosevelt மற்றும் அதனுடன் தொடர்புடைய தாக்குதல் குழு ஆகியவை தென் சீனக் கடலில் நிலையான மற்றும் சுழலும் விமான நடவடிக்கைகள், கடல்சார் தாக்குதல் பயிற்சிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக, அணுசக்தியால் இயங்கும் மிகப்பெரிய தாங்கிக்கப்பலும் அதன் துணைகப்பல்களும் சீன நிலப்பரப்பு மற்றும் தெற்கு சீனாவின் முக்கிய கடற்படை தளங்களுக்கு அருகில் போர் பயிற்சிகளை நடத்தியுள்ளன. "எங்கள் போரிடும் வலிமை ஒப்பிடமுடியாது" என்று கட்டளை அதிகாரி கேப்டன் எரிக் ஆண்டூஸ் பெருமையாகக் கூறினார்.

பைடென் பதவிக்கு வந்ததிலிருந்து தென் சீனக் கடலில் குறைந்தது இரண்டு சுதந்திர கடற்போக்குவரத்து நடவடிக்கைகளை (FONOP) அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ளது. சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்கு அருகில் பயணம் செய்வதன் மூலம் அமெரிக்க போர்க்கப்பல்கள் சீனக் கடல்பிராந்திய உரிமைகோரல்களை நேரடியாக சவால் செய்கின்றன. இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ இராணுவ மோதலைத் தூண்டும் சாத்தியத்தை கொண்டவை.

"சுதந்திர கடற்போக்குவரத்து நடவடிக்கைகள்" என்ற போலிக்காரணத்தில், சீன கடற்கரைப் பாதைக்கு நெருக்கமான இந்த இராணுவப் பயிற்சிகள் சட்டபூர்வமானவை என்று வாஷிங்டன் அறிவிக்கிறது. ஆனால் சீன இராணுவ விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களின் செயல்பாடுகள் குறித்து வரும்போது, இவை எப்போதும் மிக மோசமான வெளிச்சத்தில் சித்தரிக்கப்படுகின்றன. நேற்று, தைவானால் சுயமாக அறிவிக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் படி எவ்வித செல்லுதகமையுமற்ற பரந்த வான்வெளி கட்டுப்பாட்டு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் 15 சீன விமானங்கள் "ஊடுருவியதற்கு" பதிலளிக்கும் வகையில் தைவான் போர் விமானங்களைத் துரத்தியது.

அதே நேரத்தில், அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை பசுபிக்கில் சீனாவின் விமானம் தாங்கி கப்பலான லியோனிங் மற்றும் ஐந்து துணை கப்பல்கள் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடையிலான மியாகோ நீரிணை வழியாக சென்றதை பெரிதுபடுத்தின.

இந்தோ பசிபிக் கட்டளையகத்தின் முன்னாள் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்சன் மற்றும் பதவிக்குவரும் தலைவர் அட்மிரல் ஜான் அக்விலினோ ஆகிய இரு அமெரிக்க இராணுவ பிரமுகர்கள், எதிர்காலத்தில் தைவானுக்கு எதிராக சீனாவுடனான அமெரிக்கப் போரின் அபாயத்தை பற்றி எச்சரித்தனர். டேவிட்சன் "இந்த தசாப்தத்தில் இந்த அச்சுறுத்தல் வெளிப்படுகிறது. உண்மையில், அடுத்த ஆறு ஆண்டுகளில்" என்று அறிவித்தார். அதே நேரத்தில் அக்விலினோ தனது காங்கிரஸின் உறுதிப்படுத்தல் விசாரணையில் கேட்கப்பட்டபோது, "இந்த பிரச்சினை பெரும்பாலானவர்கள் நினைப்பதை விட எங்களுக்கு மிகவும் நெருக்கமானது" என்று கூறினார்.

1979 ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா ஒரு சீனக் கொள்கையை கடைப்பிடித்தது. இதன் விளைவாக பெய்ஜிங்கை தைவான் உட்பட சீனா அனைவற்றினதும் நியாயபூர்வமான ஆட்சியாளராக அங்கீகரித்தது. இதன் விளைவாக, அமெரிக்காவிற்கு தைவானுடன் முறையான இராஜதந்திர உறவுகள் இல்லை மற்றும் எந்தவொரு தொடர்பும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. அதே நேரத்தில், தைவான் உறவுச் சட்டத்தின் கீழ், அமெரிக்கா தொடர்ந்து தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதோடு, சீனத் தாக்குதல் ஏற்பட்டால் அது தைவானின் பாதுகாப்புக்கு வரும் என்று உறுதியளிக்கிறது.

கடந்த ஆண்டு அமைச்சரவை மட்டத்திலான அமெரிக்க அதிகாரி சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் விஜயம் உட்பட தைவானுடனான தொடர்புகளின் அளவை உயர்த்துவதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு சீனக் கொள்கையுடன் தொடர்புடைய முந்தைய இராஜதந்திர நெறிமுறைகளை கிட்டத்தட்ட குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப்பின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, அமெரிக்க தைவானிய குடிமக்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். தைவானுடனான இந்த கொள்கைக்கான தனது அர்ப்பணிப்பை “உறுதியானது” என்று பைடென் தொடருகின்றார்.

பைடென் நிர்வாகத்தின் கீழ், பென்டகன் தைவான் உட்பட சீன நிலப்பரப்பை சுற்றிவளைக்கும் முதல் தீவு சங்கிலி என அழைக்கப்படும் இடத்தில் தாக்குதல் இடைநிலை தூர ஏவுகணைகளை நிறுத்துவதை பரிசீலித்து வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல் விரிவாக்கத்திற்கு அமெரிக்கா உதவுகிறது. சீனாவிற்குள் ஆழமாகத் தாக்க தைவான் தனது சொந்த உள்நாட்டு தாக்குதல் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது.

அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் நெருப்புடன் விளையாடுகிறது. 1979 இல் பெய்ஜிங்குடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா தைவானுடனான உறவை முறித்துக் கொண்டு தனது இராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றது. தைவானில் தனது துருப்புக்களை அல்லது இராணுவ தளபாடங்களை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியும் சீனாவிடமிருந்து ஒரு விரோதமான பதிலை உருவாக்கி மற்றும் இராணுவ மோதலைத் துரிதப்படுத்துவதற்கு அச்சுறுத்தும்.

ஒரு பெரிய விடயங்கள் ஆபத்தில் உள்ளன. தைவான் மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் தீவு சங்கிலியின் ஒரு பகுதியாக, சீனா மீது பொருளாதார முற்றுகையை சுமத்துவதற்கோ அல்லது முழு அளவிலான போரைத் தொடங்குவதற்கோ அமெரிக்காவின் முயற்சியில் இது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அதே நேரத்தில், இது தைவான் குறைகடத்தியின் (Semiconductor) உற்பத்தி நிறுவனத்தின் தாயகமாகும், இது வணிக மற்றும் இராணுவ பயன்பாடுகளுக்கு பரந்த அளவில் தேவைப்படும் மிகவும் மேம்பட்ட கணினி சில்லுகளின் உற்பத்தியில் 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

"சீன ஆக்கிரமிப்பை" விட, சீனா பொருளாதார மற்றும் மூலோபாயரீதியில் அமெரிக்காவை முந்திக் கொண்டிருக்கிறது என்ற வாஷிங்டனில் உள்ள அச்சங்களுடன், அமெரிக்க அட்மிரல்களின் யுத்தம் பற்றிய எச்சரிக்கைகள் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளன. தைவானுடனான வலுவான உறவுகளின் அவசியம் குறித்து வாஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல், இந்த மூலோபாய தீவு பென்டகனின் சீனாவுடனான போருக்கான திட்டத்தின் முக்கிய அங்கமாகும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய ஆதிக்கத்தை உயர்த்துவதற்காக, இது ஒரு பேரழிவு அணுசக்தி மோதலுக்கு வழிவகுத்தாலும் கூட அமெரிக்காவிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த தயாராக உள்ளது.

உள்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்க ஆளும் வர்க்கமும் இந்த பாரிய சமூக பதட்டங்களை வெளிப்புற எதிரிக்கு எதிராக திருப்ப முயல்கிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பெருகிய முறையில் இனவெறி அடிப்படையில் சீனாவை அரக்கர்களாக்கும் பிரச்சாரத்தின் அலைகளை நிராகரித்து, அதே வகையான முதலாளித்துவ சுரண்டலை எதிர்கொள்ளும் சீன தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்ப வேண்டும். போரின் அபாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை ஒரு சோசலிச அடிப்படையில் கட்டியெழுப்புவதே ஆகும்.

Loading