மக்ரோனின் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் மத்தியில் பிரெஞ்சு மசூதி பாசிச எழுத்துகளாலும் சித்திரங்களினாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வார இறுதியில் பிரெஞ்சு நகரமான ரென்னிலுள்ள அவிசென் கலாச்சார மையம் மற்றும் மசூதி மீதான காழ்ப்புணர்ச்சி சேதப்படுத்தல்கள், இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்தால் தூண்டிவிடப்படும் முஸ்லீம்-விரோத சூழ்நிலையின் அபாயகரமான தாக்கங்களையும், அதன் அரசியல் குற்றவியல் தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனைகள் நடந்து கொண்டிருந்தபோது மையத்தின் பராமரிப்பாளர் காலை 6:00 மணிக்கு எழுத்துகளையும் சித்திரங்களையும் கண்டுபிடித்தார். "இஸ்லாமியமயமாக்கல் கூடாது", அத்துடன் "குடியேற்றம் கொல்லுகிறது," "சிலுவைப் போர்கள் மீண்டும் தொடங்கும்," "அரசர் நீடூழி வாழ்க", "அரச மதம் கத்தோலிக்கம்", அத்துடன் கத்தோலிக்க சிலுவைகள் மற்றும் முடியாட்சிவாத சின்னமான லிஸ் பூ (fleur-de-lis) போன்ற முடியாட்சிவாத சுலோகங்கள் மற்றும் பாசிசவாத முஸ்லீம்-விரோத கோஷங்கள் எழுத்துகளிலும் சித்திரங்களிலும் அடங்கியிருந்தன.

Paris - Mosquée de Paris Moschee Camii (muratc3/Creative Commons)

தாக்குதல் பற்றிய செய்தியானது தேசிய அளவில் வெளிவந்த பின்னர், அரசாங்கம் ஒரு பாசாங்குத்தனமான கண்டனத்தை வெளியிட்டது. உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன், "இந்த முஸ்லீம்-விரோத பதிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" ட்டுவீட் செய்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரென்னுக்கு சென்றார், அங்கு அவர் "இந்த பதிவுகள் மீதான எங்கள் வெறுப்பை இந்த சங்கத்தின் அதிகாரிகளுக்கு ... தெரிவிக்குமாறு ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டார்" எனக் கூறினார். அனைத்து மத தலங்கள், மத உத்வேகம் அனைத்து இடங்களிலும் எங்கள் நாட்டில் வரவேற்கப்படுகின்றன மற்றும் எங்கள் கிறிஸ்தவர்கள் அல்லது யூத சக குடிமக்கள் போலவே எங்கள் முஸ்லீம் சக குடிமக்களின் பாதுகாப்பிற்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்."

இந்த அறிக்கைகளால் யாரும் முட்டாளாகக்கூடாது. மக்ரோன் அரசாங்கத்தின் முஸ்லீம்-விரோத பிரச்சாரம்தான் ரென்னில் தாக்குதலை நடத்தியவர்களைப் போன்ற வெளிப்படையான பாசிச சக்திகளுக்கு நேரடியாக தைரியம் கொடுக்கும் அரசியல் சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்த முயற்சியில் டார்மனன் முக்கிய பங்கை கொண்டுள்ளார்.

ரென்னில் மசூதியில் எழுதப்பட்ட அதிவலது கோஷங்களில் "பசுமைவாதிகள் = துரோகிகள்" என்ற கோஷங்களும் அடங்கும், இது அல்சாஸ்-லொரன் பிராந்தியத்தின் நகரமான ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ளூர் பசுமைக் கட்சி மேயருக்கு எதிரான மக்ரோன் அரசாங்கத்தின் தற்போதைய பிரச்சாரத்தை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த மாதம், மேயர் ஒரு மசூதி கட்டுவதற்கு 2.5 மில்லியன் டாலர்களை ஒதுக்க வாக்களித்தார். அல்சாஸ்-லொரன் பிராந்தியம் 1905 மதச்சார்பின்மை சட்டத்திற்கு உட்பட்டதல்ல, இது அல்சாஸ்-லொரன் பிரான்சின் ஒரு பகுதியாக இல்லாத போது நடைமுறைக்கு வந்த மத கட்டிடங்களுக்கு அரசு நிதியளிப்பதை தடை செய்தது. இந்தப் பிராந்தியம் முன்பு யூத மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

மார்ச் 23 அன்று டார்மனன் தலையிட்டு ஒரு மசூதி கட்டுவதற்கு நிதியளிப்பது குறித்து கண்டனங்களை சுற்றி ஒரு தேசிய அரசியல் பிரச்சாரத்தை உருவாக்கினார். பசுமைக் கட்சி தலைமையிலான கவுன்சில் "அரசியல் இஸ்லாமை" ஆதரிக்கிறது என்ற கூற்றை மையமாகக் கொண்டிருந்தது, மேலும் வெளிநாட்டு சக்திகள், குறிப்பாக மசூதியைக் கட்டும் சங்கத்துடனான உறவுகளைக் கொண்டுள்ள துருக்கி, பிரான்சில் அரசியல் தலையீட்டை நடத்த மறைமுகமாக அனுமதிக்கிறது என்பதையும் கொண்டிருந்தது.

பசுமைக் கட்சியினரை "தீவிர இஸ்லாமை நோக்கி மெத்தனமாக இருக்கும் கட்சி" என்று டார்மனன் கண்டனம் செய்தார். குடியுரிமைக்கான இளநிலை மந்திரியான மார்லென் ஷியாப்பா ட்டுவீட் செய்ததாவது: "இங்கே, தெளிவாக, பசுமைக் கட்சியினரின் பொறுப்பின்மை உள்ளது. ... உண்மைகளில், எந்த விஷயத்திலும் அரசியல் இஸ்லாமுடன் ஒரு உடந்தை உள்ளது" என்று கண்டனம் செய்தார்.

இன்னும் பரந்த அளவில், மக்ரோன் அரசாங்கமானது பிரான்சின் முஸ்லீம் மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தி, முஸ்லீம்-விரோத சூழ்நிலையை ஊக்குவிப்பதற்கான இன்னும் வெளிப்படையான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்துள்ளது. மான்ஸ் (Mans) மசூதி மீது தாக்குதல் நடத்தி பலரைக் கொல்வதாக அச்சுறுத்தியதாக வந்த ஒரு செய்திக்குப் பின்னர், வெள்ளியன்று, ஆன்ஜே (Angers) போலீசார் நாஜி சித்தாந்தத்தை ஆதரிக்கும் 24 வயது நபரை கைது செய்ததாக தெரிவித்தனர். அவர் வசித்து வந்த இடத்தில் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் இந்த அச்சுறுத்தலை ஒப்புக்கொண்டதாகவும், "அரேபியர்கள் மீது தனக்கு வெறுப்பு" இருப்பதாகவும் கூறினார்.

மக்ரோன் தற்போது "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தை நிறைவேற்ற முயன்று வருகிறார், இது இஸ்லாமிய "பிரிவினைவாதத்தின்" ஆபத்து என்று கூறப்படுவதைக் குறிக்க இதற்கு பெயரிடப்பட்டுள்ளது, இது பின்னர் சட்டத்தை "குடியரசுக் கோட்பாடுகளை பாதுகாத்தல்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அரசுக்கு தங்கள் விசுவாசத்தை உறுதியளிக்க, முஸ்லீம் சங்கங்கள் சட்டபூர்வமாக கையெழுத்திட வேண்டிய கட்டாயத்திலுள்ள ஒரு "கோட்பாட்டுச் சாசனத்தை" சட்டம் நிறுவும். தனிப்பட்ட உறுப்பினர்களின் நடத்தையின் அடிப்படையில் அவற்றை கலைக்கும் அதிகாரம் உட்பட, மத மற்றும் அரசியல் அமைப்புக்கள் போன்ற பிற அனைத்து அமைப்புக்கள் மீதும் இது அரசாங்கத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. மசூதிகளுக்குள் அரசியல் விவாதம் தடை செய்யப்பட்டுள்ளது, பிரெஞ்சு அரசை இனவெறி என்று கண்டனம் செய்யும் அறிக்கைகள் அவதூறானவை என்று அறிவிக்கப்படுகின்றன.

சர்வதேச மன்னிப்புச் சபையானது கடந்த மாதம் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டம் அடிப்படை ஜனநாயக உரிமைகளுடன் இணக்கமற்றது என்று கண்டனம் செய்தது. சர்வதேச மன்னிப்புச் சபையின் கட்ஜா ரூஜ் கூறுகையில், "குடியரசின் அடிப்படை சின்னங்களை ஏற்றுக்கொள்வதில் சங்கங்களுக்கு பொது நிதியை நிபந்தனைக்கு உள்ளாக்குவதானது கருத்து சுதந்திரத்திற்கான உரிமையில் சட்டவிரோத கட்டுப்பாட்டை உருவாக்குகிறது" என்று கூறினார். ஒவ்வொரு சங்கமும் சமர்ப்பிக்க வேண்டிய "குடியரசுக் கட்சி ஈடுபாட்டின் ஒப்பந்தத்தை" குறிப்பிடும் சட்டத்தின் 6வது சட்டப் பிரிவை அகற்றுமாறு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

ஏப்ரல் 30 அன்று, தேசிய சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டம் பற்றிய அதன் முதல் வார விவாதத்தில், செனட் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பொது இடங்களில் மத ஆடைகளை அணிவதைத் தடை செய்வதன் மூலம் மசோதாவை திருத்த வாக்களித்தது - இந்த நடவடிக்கை இளம் பெண்கள் முகமறைப்பு அணிவதைத் தடை செய்வதை தெளிவாக இயக்கியுள்ளது.

கடந்த ஆண்டில், மக்ரோன் அரசாங்கமானது 70 க்கும் மேற்பட்ட மசூதிகளை மூடிவிட்டது, இதில் மசூதிகள் பயங்கரவாத அனுதாபிகளுக்கு அடைக்கலம் தரக்கூடியவை என்று தொடர்ந்து சந்தேகிக்கப்படும் ஒரு வெறித்தனமான சூழ்நிலையை ஊக்குவித்துள்ளது.

அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஒரு தொலைக்காட்சி பேட்டியில், ஹலால் மற்றும் கோஷர் உணவுகள் போன்ற சர்வதேச உணவுகள் தனித்தனியாக பல்பொருள் அங்காடி அலுமாரி தட்டுகளில் இருப்பதை கூட டார்மனன் கண்டனம் செய்தார். அக்டோபர் 16 திகதியன்று உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சாமுவல் பட்டி இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் கொல்லப்பட்டதை அடுத்து டார்மனன் அறிவித்தார். அதாவது "ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து சில சமூகத்திற்கு ஒருபுறத்திலும் மறுபுறத்திலுள்ளவைகள் மற்றய சமூகத்திற்கும் உணவு வகைகளின் ஒரு தட்டைப் பார்க்கும் போது எப்பொழுதும் அதிர்ச்சியடைந்தேன். வகுப்புவாதம் இப்படித்தான் தொடங்குகிறது என்பது எனது கருத்து".

மக்ரோன் அரசாங்கத்தின் பெருகிய முறையில் வெறித்தனமான முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் அரசியல் உள்ளடக்கமானது கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாகும், இது வைரஸுக்கு விடையிறுப்பாக மக்ரோன் அரசாங்கம் பின்பற்றி வரும் கொலைகாரக் கொள்கை காரணமாக தொழிலாள வர்க்கத்தின் சமூக சமத்துவமின்மை மற்றும் எதிர்ப்பு தீவிரப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் உள்ளதைப் போலவே, இந்த வைரஸ் மக்கள் தொகை முழுவதும் பரவ மக்ரோன் அனுமதித்துள்ளார், உற்பத்தி மற்றும் பெருநிறுவன இலாபம் ஈட்டலில் எந்த கட்டுப்பாடும் ஏற்படாமல் தடுப்பதற்காக பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை திறந்து விட்டுள்ளார். இதன் விளைவாக நாட்டில் கிட்டத்தட்ட 100,000 பேர் இறந்துள்ளனர்.

பிரெஞ்சு ஆளும் வர்க்கமானது இந்த நிலைமைகள் மீதான வெடிக்கும் சீற்றத்தை அறிந்திருக்கிறது மற்றும் சமூக எதிர்ப்பை வன்முறையில் நசுக்குவதற்கு அரசின் அதிகாரங்களை கட்டியெழுப்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கனவே சமூக சமத்துவமின்மை மீதான "மஞ்சள் சீருடை" எதிர்ப்புக்களின் வடிவத்தில் பெரும் எழுச்சிகளைக் கண்டுள்ளன, அவைகள் கலகப் பிரிவு போலீசார், கண்ணீர்ப்புகை மற்றும் இரப்பர் தோட்டாக்களை சந்தித்தன.

மக்ரோன் அரசாங்கத்தின் முஸ்லீம்-விரோத பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை மத வழிகளில் பிளவுபடுத்துவதையும், சமூக எதிர்ப்புக்கு எதிராக அரசின் ஒடுக்குமுறைப் பிரிவாக பயன்படுத்தப்படும் அதிவலது சக்திகளை ஊக்குவிப்பதற்கும் வழிநடத்தப்படுகிறது.

Loading