ஷாட்டின் பிரெஞ்சு ஆதரவு ஜனாதிபதியான இட்ரிஸ் டெபி எதிர்ப்புப் போராளிகளுடனான மோதலில் இறந்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு ஷாட்டிலுள்ள போராளிகளான ஷாட்டின் இணக்கம் மற்றும் மாற்றத்திற்கான கிளர்ச்சிப் படை (FACT - Force for Change and Concord in Chad) உடனான மோதலின் போது திங்களன்று ஏற்பட்ட காயங்களால் ஷாட்டின் ஜனாதிபதி மார்ஷல் இட்ரிஸ் டெபி இட்னோ நேற்று இறந்துள்ளார். அவரது மகனான 37 வயதுடைய மஹமத் இட்ரிஸ் டெபி, தனிப்பட்டரீதியாலும் கவனமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 தளபதிகளால் பணியமர்த்தப்பட்ட ஒரு இராணுவ ஆணையத்தின் தலைமையில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அஸெம் பெர்மன்டோவா அகௌனா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்: "குடியரசின் ஜனாதிபதியும், அரசுத் தலைவரும் இராணுவங்களின் தலைமைத் தளபதியுமான இட்ரிஸ் டெபி இட்னோ, போர்க் களத்தில் நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் போது தனது கடைசி மூச்சை சுவாசித்தார். இந்த செவ்வாய்கிழமை, ஏப்ரல் 20, 2021 அன்று ஷாட்டின் மக்களுக்கு ஷாட் மார்ஷலின் இந்த மறைவை நாங்கள் அறிவிப்பது ஆழ்ந்த வருத்தமாக உள்ளது."

ஷாட்டியன் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இட்னோ, நடுவில் உள்ளார், சாட்டிலுள்ள என்'ஜமேனாவில் சமீபத்திய தேர்தல்களுக்கான அவரது இறுதிப் பிரச்சார பேரணியில் கலந்து கொள்கிறார். வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 9, 2021 (AP Photo)

மேலும் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நமது குடியரசு நிறுவனங்கள் கடுமையாக அச்சுறுத்தப்படுவதைப் போலவே, லிபியாவல் இருந்து வருகின்ற பயங்கரவாதக் கூட்டங்களுக்கு எதிரான வீரப் போராட்டங்களின் நடவடிக்கைகளை டெபி தலைமை தாங்கினார். போராட்டத்தில் காயமடைந்த அவர் உடனேயே நாட்டின் தலைநகரான என்'ஜமேனாவுக்குத் திரும்பியவுடன் காலமானார்.

1990ல் பிரெஞ்சு ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் 30 ஆண்டுகள் ஷாட்டினை இரும்புக் கரத்துடன் ஆட்சி செய்த டெபி, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நீண்டகால ஒரு கருவியாக இருந்தார். சாஹேலின் மையப்பகுதியிலுள்ள என்'ஜமேனாவிலுள்ள மூலோபாய தளங்களில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க துருப்புக்களை வரவேற்புச் செய்த ஷாட், 2011 ஆண்டு இஸ்லாமிய போராளிகளுடன் கூட்டணி சேர்ந்து கர்னல் முயம்மர் கடாபியை கவிழ்த்த பின்னர் லிபியாவில் நடந்த இரத்தம் தோய்ந்த நேட்டோ போருக்குப் பின்னர், ஷாட்டின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்தது. மாலியில் பிரெஞ்சுப் போருக்கு மத்தியில், நைஜர் மற்றும் புர்க்கினா ஃபாசோ உட்பட நைஜீரியாவிலும் சாஹேல் முழுவதிலும் பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைகளுக்கு ஷாட் இராணுவம் துருப்புக்களை வழங்கியுள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பெப்ருவரியில் மாலி மற்றும் பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான பெருகிய அழைப்புக்களை நிராகரித்த சிறிது காலத்திற்குப் பின்னர், சாஹேலில் பிரெஞ்சு ஏகாதிபத்திய மூலோபாயத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் டெபியின் மரணம் நடந்துள்ளது.

பாரிசிலுள்ள எலிசே ஜனாதிபதி மாளிகையானது டெபியின் மகன் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியதை அங்கீகரித்து, "தனது நாட்டின் பாதுகாப்பிற்காகவும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் மூன்று தசாப்தங்களாக இடைவிடாது பணியாற்றிய" பிரான்சின் "தைரியமான நண்பர்" என்று டெபியைப் புகழ்ந்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. "இந்த மாற்றமானது அமைதியான நிலைமைகளில், அனைத்து அரசியல் பங்காளர்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் உரையாடல் மனப்பான்மையுடன், சிவிலியன் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளடக்கிய நிர்வாகத்திற்கு விரைவாக திரும்ப அனுமதிக்கும் முக்கியத்துவத்தை" அது வலியுறுத்தியது.

இது மஹமத் டெபி மற்றும் இராணுவத் தளபதிகளின் நகர்வுகளை திறம்பட அங்கீகரித்தது, அவர்கள் தேசிய சட்டமன்றத்தை கூடுதல் சட்டபூர்வமாக கலைத்து, 18 மாத இராணுவ சர்வாதிகாரத்தை அறிவித்தனர்.

என்'ஜமேனாவில் லிபிய எல்லையிலிருந்து இன்னும் தெற்கே நகர்ந்து கொண்டிருக்கும் FACT போராளிகளினால் தலைநகரில் பீதி அதிகரித்து வருகிறது, புதிய இராணுவ ஆட்சிக்குழுவானது ஊரடங்கு உத்தரவை பிற்பகல் 6:00 மணி முதல் காலை 5:00 மணிவரை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் என்'ஜமேனாவிலிருந்து எல்லையைக் கடந்து அண்டை நாடான கேமரூனுக்கு தப்பிச் செல்லத் தொடங்கியிருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மாலியிலும் சாஹேல் முழுவதிலும் நடவடிக்கைகளால் தளர்ந்து விட்ட பிரெஞ்சுப் படைகள் FACT க்கு எதிராக தலையிடக்கூடும் என்ற ஊகங்கள் பெருகிவருகின்றன. ஷாட்டில் 5,100 பிரான்சின் துருப்புக்கள் உள்ளன, இதில் 1,000 துருப்புக்கள், வேட்டைக்கார-கொலையாளி ஆளில்லா விமானங்கள் (hunter-killer drones) மற்றும் மிராஜ் ஜெட் விமானங்களின் ஒரு படைப்பிரிவு ஆகியவை அடங்கும். 2008 ஆண்டு மற்றும் மீண்டும் 2019 இல், பிரெஞ்சு போர் விமானங்கள் லிபியாவுடனான எல்லைப் பகுதியிலிருந்து என்'ஜமேனா மீது தெற்கே அணிவகுத்துச் சென்ற கிளர்ச்சிப் போராளிகளை குண்டுவீசித் தகர்த்தன.

பிரெஞ்சு உத்தியோகபூர்வ ஆதாரங்களை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது: "பிரான்சும் அதன் நட்பு நாடுகளும் வரவிருக்கும் நாட்களில் அரசியல் ஒப்படைப்பு எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்க்கும். ... [FACT] இன் முன்னேற்றம் இப்போது ஒன்றுசேர்ந்த வேகமான முன்னேற்றமாக இருந்தால், அது பாரிஸின் கைகளை நிர்ப்பந்திக்கக்கூடும், இருப்பினும் அது பரந்த சாஹேல் நடவடிக்கைகளில் அது ஏற்படுத்தக்கூடிய பொதுவான நிச்சயமற்ற தன்மை மற்றும் தாக்கத்தை நேரடியாக தலையிடுவதைத் தவிர்க்க முயற்சிக்கும்."

வாஷிங்டனும் லண்டனும் ஏற்கனவே தங்கள் அத்தியாவசியமற்ற இராஜதந்திர அதிகாரிகளை ஷாட்டினை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளன, FACT இன் துருப்புக்கள் தலைநகரை அடைந்தால் வன்முறை ஏற்படலாம் என்று அஞ்சுகின்றன. "என்'ஜமேனாவுக்கு நெருக்கமாக இருப்பது மற்றும் நகரத்தில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, அத்தியாவசியமற்ற அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் வர்த்தக விமான நிறுவனத்தால் ஷாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

இது மூலோபாய ரீதியாக முக்கியமானது மற்றும் குறிப்பிடத்தக்க பெட்ரோலிய வளங்களைக் கொண்டிருந்தாலும், ஷாட்டானது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. 1960 இல் சம்பிரதாயமான சுதந்திரம் வழங்கப்பட்ட ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியானது இது 2019 மனித மேம்பாட்டு குறியீட்டில் (Human Development Index) 189 நாடுகளில் 187 வது இடத்தில் உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக சீர்குலைவுக்கு முன்னர், அதன் மக்கள் தொகையில் 66.2 சதவீதம் மக்கள் 2019 இல் கடுமையான வறுமையில் வாழ்ந்தனர்.

ஷாட்-கமரூன் எண்ணெய் குழாய்த் திட்டத்திலிருந்து ஷாட்டானது 12.5 சதவீத வருவாயை மட்டுமே பெற்றாலும், குழாய்த் திட்டத்தின் வருவாய்கள் பொதுத்துறை தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கான டெபியின் மட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கு ஒரு அடித்தளத்தை வழங்கியது. இருப்பினும், இது 2017 இல் எண்ணெய் விலை சரிவுடன் முடிவிற்கு வந்தது.

அப்போதிருந்து, பிராந்தியம் முழுவதும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்ப, டெபிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் சமூக அதிருப்தியும் அதிகரித்துள்ளன. இதில் 2019ல் அல்ஜீரிய இராணுவ ஆட்சிக்கு எதிரான ஹிராக், அத்துடன் பொதுத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் மாலியில் பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறக் கோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அடங்கும்.

டெபி இறப்பதற்கு சற்று முன்னர், ஏப்ரல் 11 அன்று ஒரு ஜனாதிபதித் தேர்தலை ஷாட் நடத்தியது, பாதுகாப்பு படைகள் பலமுறைகளில் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பேரணிகளை தாக்கிய பின்னர், அது டெபியின் திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலில் உத்தியோகபூர்வமாக 79.3 சதவீத வாக்குகளுடன் முடிவடைந்தது. இந்த தேர்தல்களின் பின்னணியில் டெபிக்கு எதிராக FACT ஆனது அதன் நடவடிக்கைகளைத் தொடங்கியது.

FACT உம் அமைப்பும் கூட பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஒரு முன்னாள் கருவியாகும், ஆனால் பாரிஸிற்கும் மாஸ்கோவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதாக வந்த செய்திகளுக்கு மத்தியில் அதன் ஆதரவு ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இது தெற்கு லிபியாவை தளமாகக் கொண்ட ஒரு ஷாட்டியன் கிளர்ச்சிப் போராளிகளாகும், இது சமீபகாலம் வரை ஜெனரல் கலீபா ஹஃப்தாருடன் நெருக்கமாக வேலை செய்தது, அவர் ஒரு பிரெஞ்சு மற்றும் ரஷ்ய ஆதரவு போர்ப் பிரபு மற்றும் முன்னாள் சிஐஏ சொத்து ஆவார், இது 2011 நேட்டோ போரினால் லிபியாவில் தூண்டப்பட்ட உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. சமீபகாலம் வரை, ஹஃப்தாரும் டெபியும் சுமூகமான உறவுகளைப் பேணி வருவதாக அறிவிக்கப்பட்டது. முதன்மையாக கோரனே (Gorane) (அல்லது டுபு) இனத்தில் ஆட்சேர்ப்பு செய்து, அது லிபியாவின் பெஸ்சான் பிராந்தியத்திலுள்ள செபாவை தளமாகக் கொண்டதாகவும், ரஷ்யாவின் வாக்னர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் தொடர்புபட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டில், "பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்தல், அல்லது செய்ய முயற்சித்தது" என்ற இன்னதென்று குறிப்பிடப்படாத குற்றச்சாட்டின் பேரில், பாரிசானது FACT இன் தலைவர் மகாமத் மஹ்தி அலி மீது திரும்பி, பிரெஞ்சு வங்கிகளில் அவரது நிதியை முடக்கியது.

சமீபத்திய ஷாட்டின் தேர்தல்களுக்கு முன்னதாக, FACT ஆனது தெற்கு நோக்கி ஷாட் எல்லையை நோக்கி நகர்ந்தது, ஆனால் தேர்தல்கள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு எல்லைச் சாவடியைத் தாக்கியது. ஜேர்மன் சர்வதேச விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு சிந்தனைக் குழுவைச் சேர்ந்த வொல்ஃப்ரம் லாச்சர் கூறினார்: அதாவது "ஷாட் உடனான எல்லைப் பகுதியை நோக்கி நகர்வதன் மூலம், ஹஃப்தாரின் கட்டுப்பாட்டில் இருந்த மண்டலத்தை விட்டு FACT வெளியேறியது. ஷாட் மீது தாக்குதல் நடத்த ஹஃப்தாரிடமிருந்து பச்சை விளக்கு தேவையா என்பது முற்றிலும் உறுதியாகத் தெரியவில்லை."

மக்ரோன் அரசாங்கமானது தனது கோபத்தை பத்திரிகைகளில் வெளிப்படுத்தியது, ஷாட்டானது ஒரு பிரெஞ்சு இராணுவத் தளம் என்ற அதன் நவ-காலனித்துவ கருத்தை வெட்கமின்றி வெளிப்படுத்தியது. "வாக்னருடன் சேர்ந்து ஹஃப்தாருக்கு வேலை செய்ததால் FACT ஆனது பணம் மற்றும் ஆயுதங்களைப் பெற முடிந்தது," என்று ஒரு உத்தியோகபூர்வ பிரெஞ்சு வட்டாரம் லு மொண்ட் பத்திரிகையிடம் கூறியது, "இந்த மக்கள் இப்போது எங்கள் மூலோபாய செல்வாக்கு மண்டலத்தில் ஷாட்டில் முடிவடைந்துள்ளனர் என்ற உண்மை மிகவும் சிக்கலானது."

எவ்வாறெனினும், இந்த FACT ஆனது பிரெஞ்சு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்துடனான உறவுகளை தெளிவாக தக்கவைத்துக் கொண்டுள்ளது, நேற்று மஹமத் மஹ்தி அலி ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனலுக்கு (RFI) ஒரு சுருக்கமான பேட்டியை அளித்தார். "இட்ரிஸ் டெபி தான் வெல்ல முடியாதவர் என்று நினைத்தார்" என்று கூறிய அவர், புதிய ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பைக் காட்ட என்'ஜமேனாவிலுள்ள "சிவில் சமூகத்திற்கு" வேண்டுகோள் விடுத்தார்.

Loading