பதட்டங்கள் அதிகரிக்கையில், உக்ரேன் ரஷ்யாவுடன் போருக்கு "தயாராக" இருப்பதாக ஜனாதிபதி செலென்ஸ்கி கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை இரவு உக்ரேன் ரஷ்யாவுடன் போருக்கு "தயாராக" இருப்பதாக அறிவித்தார். போர் ஏற்பட்டால் நாடு “கடைசி மனிதன் வரை நிற்கும்” என்று அவர் எச்சரித்தார்.

உக்ரேனிய இராணுவம் தனது சேமப்படையினரை 24 மணி நேரத்திற்குள் முன்னறிவிப்பின்றி அணிதிரட்ட அனுமதிக்கும் சட்டத்திலும் செலென்ஸ்கி கையெழுத்திட்டார். இச்சட்டத்தை தவிர்ப்பவர்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். புதிய சட்டம் உக்ரேனிய இராணுவ தளபதியால் முன்மொழியப்பட்டது.

பயிற்சியின் போது உக்ரேனின் ஆயுதப்படைகளின் SSO போராளிகள் [Credit: Wikipedia/ArmyInform]

ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே நேட்டோவின் செயல்பாடு அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் செலென்ஸ்கியின் ஆக்கிரமிப்பு அறிவிப்புகள் வந்தன. புதன்கிழமை, ரஷ்ய பத்திரிகைகள் இரண்டு நேட்டோ விமானங்கள், ஒரு அமெரிக்க P-8A Poseidon, ஒரு பிரித்தானிய RC-135W மற்றும் ஒரு அமெரிக்க ட்ரோன் ஆகியவை கருங்கடலில் உள்ள கிரிமியன் தீபகற்பத்திற்கு அருகே பல மணி நேரம் உளவுபார்த்ததாக தெரிவித்தது.

ருமேனிய கருங்கடல் கடற்கரையில் ஒரு பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பல் காணப்பட்டது. மேலும் பல நேட்டோ விமானங்கள் செவ்வாயன்று எஸ்தோனியா, லாட்வியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளை நோக்கி சென்று ரஷ்ய உளவு விமானம், போர்விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களை பால்டிக் கடல் மீது தடுத்து நிறுத்தியது. ஏப்ரல் 19 அன்று, உக்ரேன் மற்றும் நேட்டோ உறுப்பினரான ருமேனியா ஆகியவை கருங்கடலில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன.

20 க்கும் மேற்பட்ட அமெரிக்க F-16 மற்றும் F-15 போர்விமானங்கள் இங்கிலாந்தில் இருந்து போலந்திற்கு திடீரென அனுப்பப்பட்டதாக Nezavisimaya Gazeta பத்திரிகை தெரிவித்துள்ளது. இரண்டு அமெரிக்க ஏவுகணை அழிக்கும் கப்பல்களான USS Donald Cook, USS Roosevelt ஆகியவை “இப்போது ஏஜியன் கடலின் வடக்கு பகுதியில் [கருங்கடலுக்கு அப்பால்] நிறுத்தப்பட்டிருப்பதாகவும், நேட்டோவின் Rammstein Dust II 21 என்ற பயிற்சிகளில் பங்கேற்றன என்று ஒரு ரஷ்ய இராணுவ நிபுணரை அது மேற்கோளிட்டுள்ளது. “கடந்தவாரம், அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை கருங்கடலுக்கு அனுப்புவதை குறுகிய அறிவிப்புடன் இரத்து செய்தது. ஆனால் சில நாட்களின் பின்னர் இரண்டு போர்க்கப்பல்களை அங்கு அனுப்பியது.

கருங்கடலில் ரஷ்யா தனது சொந்த இராணுவப் பயிற்சிகளை முடித்துக்கொண்டது. இதில் கருங்கடல் கடற்படையில் இருந்து 20 போர்க்கப்பல்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளடங்கியிருந்தன. இராணுவப் பயிற்சிகளுக்காக கிரெம்ளின் அங்கு அனுப்பிய பெரும்பாலான துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் இப்பகுதியிலையே உள்ளன.

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் கடற்படைத் தளம் அமைந்துள்ள கிரிமியாவின் தெற்குப் பகுதியும், கருங்கடலின் சில பகுதிகளும் உட்பட, கிரிமியாவின் பெரும் பகுதிகள் “விமானங்களுக்கு தற்காலிகமாக ஆபத்தானவை” என்று திங்களன்று கிரெம்ளின் அறிவித்தது. ஏப்ரல் 24 முதல் அக்டோபர் 31 வரை வெளிநாட்டு போர்க்கப்பல்களுக்காக அசோவ் கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையிலான கடல் வழிப்பாதையையும் ரஷ்யா மூடியுள்ளது.

நேட்டோவின் நடவடிக்கைகள் இராணுவ நிலைமை ஏற்கனவே கத்தி விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரிக்கிறது. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரேனில் உக்ரேனிய இராணுவத்திற்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையில் சண்டையில் ஒரு அதிகரிப்பு காணப்பட்டது.

பிப்ரவரி 2014 முதல் அமெரிக்க மற்றும் கியேவில் ஜேர்மன் ஆதரவுடைய ஆட்சி கவிழ்ப்பினால் ரஷ்ய சார்பு அரசாங்கமான விக்டர் யானுகோவிச்சிலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து இங்கு ஒரு உள்நாட்டுப் போர் மூண்டது. யுத்தம் 14,000 மக்களைக் கொன்றுள்ளதுடன் மற்றும் மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 30 க்கும் மேற்பட்ட உக்ரேனிய படையினர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் 2020 ஆம் ஆண்டில் 50 உக்ரேனிய துருப்புக்களே கொல்லப்பட்டிருந்தனர்.

கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய இராணுவத்திற்கும் இடையே தோல்வியுற்ற யுத்த நிறுத்தத்தை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் உக்ரேன், ரஷ்யா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் பிரதிநிதிகள் சந்திக்க திட்டமிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்னர் திங்களன்று மற்றொரு உக்ரேனிய சிப்பாய் கொல்லப்பட்டார். பேச்சுவார்த்தைகள் சிறிதளவே பிரயோசனமுள்ளதாக இருந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் இராணுவ மோதல்கள் அதிகரிப்பதற்கான உடனடி பின்னணி, டொன்பாஸில் ஒரு தாக்குதலைத் தொடங்கவும், கிரிமியாவை "மீட்கவும்" உக்ரேனிய அரசாங்கம் ஒரு மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டதாலாகும். கியேவில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து, 2014 மார்ச் மாதத்தில் கருங்கடலில் தீபகற்பம் ரஷ்யாவால் இணைக்கப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் கிரிமியாவின் மக்கள் ரஷ்ய பிரதேசமாக மாறுவதற்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்தனர்.

கடந்த சில வாரங்களாக, வோலோடிமைர் செலென்ஸ்கியின் உக்ரேனிய அரசாங்கம் நேட்டோவில் உக்ரைனை இணைப்பதை அனுமதிப்பதை துரிதப்படுத்த அமெரிக்காவிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இருப்பினும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் இந்த கட்டத்தில் உக்ரைனை நேட்டோவினுள் அனுமதிக்க ஆதரிக்க மறுத்துவிட்டனர்.

நேட்டோவில் சேர அனுமதி வழங்கப்படாவிட்டால், கியேவ் அணு ஆயுதங்களை “சொந்தமாக” பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக ஜேர்மனிக்கான உக்ரேனிய தூதர் அச்சுறுத்தியுள்ளார். ரஷ்ய பத்திரிகை அறிக்கைகளின்படி, உக்ரேனிய பாராளுமன்றம் இப்போது அமெரிக்க காங்கிரசுக்கு "நேட்டோ அல்லாத பெரிய நட்பு நாடு" (MNNA) அந்தஸ்தைக் கோருவதற்கான கடிதத்தையும் தயார் செய்து வருகிறது.

புதன்கிழமை, உக்ரேனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரி குலேபா, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோனி பிளிங்கனை ரஷ்யாவுடன் நின்றுபிடிப்பதற்கு உக்ரேனுக்கு "மின்னணு யுத்தத்தின் சக்திவாய்ந்த வழிமுறைகளை" வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக வெளிப்படுத்தினார். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கான சர்வதேச தகவல் தொலைத்தொடர்பு அமைப்பான SWIFT அமைப்பிலிருந்து ரஷ்யாவை துண்டிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்தகைய ஒரு நடவடிக்கை ரஷ்ய நிதி அமைப்பின் முழுமையான சரிவுக்கு வழிவகுக்கலாம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

உக்ரேனிய ஆளும் வர்க்கமும் போருக்கான உள்நாட்டு தயாரிப்புகளை முடுக்கிவிட்டு வருகிறது. இந்த திங்கட்கிழமை, உக்ரேனிய பாதுகாப்பு சேவை (SBU) நாடு முழுவதும் "பல கட்ட பயங்கரவாத எதிர்ப்பு" பயிற்சிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தது. இராணுவச் சட்டத்திற்கு அரசாங்கம் தயாராகி வருவதற்கான ஒரு அறிகுறியில், “ஒரு சிறப்பு ஆட்சிமுறை தற்காலிகமாக சில பகுதிகளில் பயிற்சிகளுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படலாம். அத்துடன் மோட்டார் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள், அடையாள அட்டைகள், வாகன சோதனைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படலாம். இதற்கு ஒரு முன்னுதாரணத்தை முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ 2018 இல் அமைத்தார். அவர் அசோவ் கடலில் ஆத்திரமூட்டலை நடத்திய பின்னர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குழுவுடனான ஒரு கூட்டத்தில், செலென்ஸ்கி அரசாங்கத்தின் இராணுவ தயார்நிலை குறித்து விவாதித்தார். குடிமக்களை "எங்கள் பொது ஊழியர்கள் அல்லது ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளை மட்டுமே நம்ப வேண்டும்" என்று அவர் கூறினார். "இராணுவம் தயாராக உள்ளது ,அது மிக முக்கியமான விஷயம்." என்றார்.

கியேவ் நகரத்தின் செய்தித்துறை சேவை முன்னர் புதுப்பிக்கப்பட்ட வெடிகுண்டு பாதுகாப்பு பதுங்குகுழிகளின் வரைபடத்தை வெளியிட்டது. மேலும் போரின் போது மக்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக பொது பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது.

கிழக்கு உக்ரேனில் போரின் தொடர்ச்சிக்கோ விரிவாக்கத்திற்கோ மக்களின் ஆதரவு இல்லை என்பது நன்கு தெரிந்த ஒன்றாகும். உக்ரேனிய ஆளும் வர்க்கம் நாட்டின் தீவிர வலதுசாரிகளை அணிதிரட்ட முயல்கிறது. நவ-நாஜி படைகள் ஏற்கனவே 2014 சதி மற்றும் அதைஅடுத்த உள்நாட்டுப் போரில் ஒரு முக்கிய பங்கைக் வகித்திருந்தன.

கடந்த வாரம் தீவிர வலதுசாரிகளுக்கு நெருக்கமானவரும், நாட்டின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவருமான உக்ரேனின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஆர்சன் அவாகோவ் பேஸ்புக்கில் இந்த சக்திகளுக்கு அழைப்புவிட்டார். அவர்களை “தேசபக்தர்கள்” என்று அழைத்து பாசிச மொழியைப் பயன்படுத்தி, போருக்குத் தயாராகவும் “தாய்நாட்டை” பாதுகாக்கும்படியும் கேட்டார். அமெரிக்காவிலிருந்து 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான இராணுவ உதவி மற்றும் உபகரணங்கள் காரணமாக உக்ரேன் 2014 ஆம் ஆண்டை விட சிறப்பாக செயல்படும் என்று அவகோவ் பரிந்துரைத்தார்.

உள்நாட்டு விவகார அமைச்சராக, அவகோவ் நாட்டின் தேசிய காவலர்படையைக் கட்டுப்படுத்துகிறார். இது 2014 இல் உருவாக்கப்பட்டு மற்றும் நவ-பாசிச அசோவ் மற்றும் டொன்பாஸ் படைப்பிரிவுகளை இணைத்தது. சமீபத்திய ஆண்டுகளில், நாட்டின் தீவிர வலதுசாரி சக்திகளைப் பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் அவரது அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது. அசோவ் படைப்பிரிவு மற்றும் சி-14 போன்ற அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் ஊடகவியலாளர்கள் மற்றும் இன சிறுபான்மையினர் மீது பல கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.

உக்ரேனிய செய்தித்துறைக்குள், அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனை இராணுவ ரீதியாக ஆதரிக்கும் என்ற கருத்து தொடர்ந்து முன்தள்ளப்படுகிறது. உக்ரேனுக்கான தற்காலிக அமெரிக்க தூதர் கிறிஸ்டினா க்வியன் ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் உக்ரேனுக்கு அதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்தமை சமீபத்திய கருத்துக்களில் அதிகளவில் தெரிவிக்கப்பட்ட ஒன்றாகும்.

உக்ரேனிய பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹாலுடன் பேசும்போது, க்வியன் பின்வருமாறு கூறினார். “நாங்கள் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடுகிறோம், உக்ரேனிய தரப்பின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பீடு செய்கிறோம். எங்களிடம் 160 அமெரிக்க துருப்புக்கள் நிரந்தரமாக உள்ளன. எங்கள் மதிப்பீடுகளின்படி, தேவைகள் மாறுமானால் மற்றும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றால், நாங்கள் இவ்விடயத்தை கருத்தில் கொள்வோம்.”

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு முழுமையான போருக்கு மக்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பு உள்ளது. கிழக்கு உக்ரேனில் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் முன்னணியில் இருந்து வெளியேறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் வெறித்தனமான ரஷ்ய-விரோத கொள்கைகள் மற்றும் போர்முழக்கங்களுக்கான வெகுஜன எதிர்ப்பு காரணமாகவே செலென்ஸ்கி 2019 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உக்ரேனைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் முடிவு எதுவாக இருந்தாலும், ஏகாதிபத்திய யுத்த உந்துதலைத் தடுப்பதற்கான ஒரே வழி கிழக்கு ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் சர்வதேச, சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் காலாவதியான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்ப்பதாகும்.

Loading