வீகர் “இனப்படுகொலை” குறித்த வாஷிங்டன் போஸ்டின் போலி பிரச்சாரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ அவரது பதவிக் காலத்தின் இறுதி நாட்களில், மேற்கு ஜின்ஜியாங்கில் முஸ்லிம் வீகர் சிறுபான்மையினத்திற்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று முத்திரை குத்தினார். அவர் தனது குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரத்தையும் வழங்கவில்லை என்பதோடு, வீகர்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டனர் என்பது போன்ற கொள்கையை குறிப்பதாக அதனை “இனப்படுகொலை” என்று தான் குறிப்பிட்டதை நியாயப்படுத்தவும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

உண்மையில், பிப்ரவரியில் Foreign Policy செய்தியிதழ் தெரிவித்தபடி, ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதி வாரங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை மீளாய்வில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள், ஜின்ஜியாங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று தீர்மானிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றே முடிவு செய்தனர். நாஜி வதை முகாம்களில் படுகொலை செய்யப்பட்ட மில்லியன் கணக்கான யூதர்கள் உட்பட வெகுஜன படுகொலைகள் தொடர்புபட்ட மோசமான வழக்குகளுடன் இதுவும் பொருந்தும் என்று குறிப்பிட்டு, வழக்குரைஞர்கள் “உறுதியான சட்ட அடிப்படை எதுவும் இல்லாமல் ஜி-வார்த்தையைப் பயன்படுத்துவது கூட பதவியின் அதிகாரத்தை அரசியல்மயமாக்குவதற்கும் அழிப்பதற்குமான ஆபத்தைக் கொண்டிருக்கிறது,” என்று எச்சரித்தனர்.

இந்த ஆட்சேபனைகள் அனைத்தும் பொம்பியோவால் விரைந்து ஒதுக்கி வைக்கப்பட்டன, பின்னர் பைடென் நிர்வாகம் பதவிக்கு வந்தது. உண்மையில், ஜனாதிபதித் தேர்தலின் போது, இதுபோன்ற மனித உரிமை விவகாரங்கள் உட்பட, சீனாவிடம் ட்ரம்ப் மென்மையாக நடந்து கொள்கிறார் என்று பைடென் அவரைத் தாக்கினார். அவரது பிரச்சாரக் குழு ஆகஸ்ட் 2020 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது வீகர்களை பெருமளவில் தடுத்து வைப்பதற்கான ஆதாரமற்ற கூற்றுக்கள் தான் “இனப்படுகொலை” என்று சீனாவின் செயலை குறிப்பிட வைக்கிறது என முடிக்கின்றது, இது அடுத்து பதவிக்கு வந்த வெளியுறவுச் செயலர் அந்தோனி பிளிங்கனால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

மலைப்பூட்டும் வேகத்துடன், அமெரிக்க ஊடகங்கள், ஜின்ஜியாங்கில் தடுப்பு முகாம்களில் காணக்கூடிய நிஜ வாழ்வின் திகில் கதைகளுடன் அதிகரித்து வரும் பிரச்சார பிரளயத்தை தூண்டி வருகின்றன, இந்நிலையில் ஊடகங்கள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் கோருகின்றன. வீகர் “இனப்படுகொலை” பற்றிய இந்த கூக்குரல், பைடென் நிர்வாகம் சீனாவுடனான மோதலை அதிகரித்து வருவது மற்றும் போருக்கான அதன் இராணுவ கட்டமைப்பு ஆகியவற்றின் பின்னணியில் பொதுக் கருத்தை முத்திரை குத்துவதை நோக்கமாகக் கொண்டது.

“சீனா அதன் இனப்படுகொலை மறுப்பின் மூன்றாம் கட்டத்தை தீவிரப்படுத்துகிறது” என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட் திங்களன்று பிரசுரித்த ஒரு விவரணம் அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததை அம்பலப்படுத்துகிறது. பெய்ஜிங்கின் மறுப்புக்களை நிராகரித்ததன் பின்னர், ஒரு சிறு ஆதாரம் கூட இல்லாமல், பின்வரும் அறம்பாடுதலை போஸ்ட் வெறுமனே வலியுறுத்தியது: மிருகத்தனமான முகாம்களில் ஒரு மில்லியன் பேர் உள்ளனர், மசூதிகள் அழிக்கப்பட்டுவிட்டன, பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது, வீகர் குழந்தைகள் அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், “சீன கம்யூனிஸ்டுகள் ஒரு கலாச்சாரம், ஒரு வாழ்க்கை முறை, ஒரு மக்கள் தொகுப்பை அழிக்க முயற்சிக்கின்றனர்,” என்றும் இது அறிவித்தது.

சந்தேகத்திற்கு இடமின்றி, பெய்ஜிங்கிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சீனா முழுவதும் செயல்படுத்துவது போல, ஜின்ஜியாங்கில் எழும் எதிர்ப்பை நசுக்க பொலிஸ் அரசு நடவடிக்கைகளைப் பிரயோகிக்கிறது. இரண்டு தசாப்தங்களாக, சீனாவிற்குள் வன்முறைத் தாக்குதல் குற்றங்களை நடத்தி வந்துள்ள வீகர் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இது தனது சொந்த “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை” நடத்தியுள்ளது. பெய்ஜிங் இதை வாஷிங்டன் ஆதரவுடன் செய்தது, ஆரம்பத்தில் புஷ் நிர்வாகம் இதற்கு ஆதரவளித்தது, இது “பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோள அளவிலான போர்” என்ற பதாகையின் கீழ் தனது சொந்த குற்றவியல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவை எதிர்நோக்கியிருந்தது.

எவ்வாறாயினும், வீகர்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து அக்கறை காட்டும் அமெரிக்க கூற்றுக்களை, அல்லது இந்த விடயத்திற்காக பரிந்துபேசும் எவரையும் ஒருவரும் நம்பப்போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மூலோபாய நலன்களுக்கு ஏற்றவாறு “மனித உரிமைகள்” பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும் பின்னர் நிறுத்திக்கொள்வதுமான நீண்ட வரலாற்றை வாஷிங்டன் கொண்டுள்ளது. புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன், வீகர் பிரிவினைவாதக் குழுவான கிழக்கு துர்க்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (East Turkestan Islamic Movement - ETIM) ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டது. கடந்த ஆண்டு, ட்ரம்ப் நிர்வாகம் “வீகர் உரிமைகள்,” குறித்த தனது பிரச்சாரத்தை அதிகரித்தபோது, வெளியுறவுத்துறை அமைதியாக அதன் பயங்கரவாத பட்டியலில் இருந்து ETIM ஐ நீக்கியது.

வாஷிங்டன் போஸ்டின் அட்டூழியங்களின் பட்டியலுக்கு என்ன அடிப்படை உள்ளது? “இந்த நன்றி செலுத்துதல் Radio Free Asia நிருபர் குல்செஹ்ரா ஹோஜா (Gulchehra Hoja) மற்றும் அவரது சகாக்கள், ஒருசில வெறித்தனமான கல்வியாளர்கள் மற்றும் தைரியமாக சாட்சியமளித்த டசின் கணக்கான தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் நாடுகடத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கானது என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று இது அறிவித்தது. வேறொன்றுமில்லை. எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. கட்டுரையின் எஞ்சிய பகுதி, ஹோஜாவை மகிமைப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது, இவர் “ஒரு பயங்கரவாதியாக” பட்டியலிடப்பட்டிருந்தார் என்றும், இவரது நடவடிக்கைகளால் சீனாவில் உள்ள இவரது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது.

பதிலளிக்கும் வகையில் அடிப்படை கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.

குல்செஹ்ரா ஹோஜா யார்? சீனாவில் அரசு நடத்தும் ஊடகத்தில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்த இவர் அங்கிருந்து வெளியேறியதன் பின்னர், இரண்டு தசாப்தங்களாக, அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரச்சாரக் குழுவாகவுள்ள Radio Free Asia வில் இவர் பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு சுயாதீனமான கிழக்கு துர்கெஸ்தானை உருவாக்க அழைப்புவிடுக்கும் உலக வீகர் காங்கிரஸ் (World Uyghur Congress) மற்றும் அமெரிக்க வீகர் சங்கம் (America Uyghur Association) உள்ளிட்ட வீகர் நாடுகடந்த குழுக்களுடன் இவர் நெருக்கமாக இணைந்துள்ளார்.

மார்ச் 2019 இல் அப்போதைய வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோவுடனான ஒரு சந்திப்பின் போது குல்செஹ்ரா ஹோஜா (Credit: State Department/D.A. Peterson)

அமெரிக்க அரசு எந்திரத்தின் மிகவுயர்ந்த மட்டங்களில் ஹோஜா தெளிவாக நம்பப்படுகிறார், மேலும் பணியமர்த்தப்படுகிறார். ஜின்ஜியாங் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரதிநிதியாக, மார்ச் 2019 இல் வெளியுறவுச் செயலர் பொம்பியோவை சந்தித்த தேர்ந்தெடுக்கப்பட்ட வீகர் நாடுகடத்தப்பட்டவராக இவர் இருந்தார். நவம்பர் 2019 ஆம் ஆண்டில், ஜின்ஜியாங்கில் “மனித உரிமை நெருக்கடி” குறித்து அறிக்கை அளித்ததற்காக இவருக்கு மாக்னிட்ஸ்கி (Magnitsky) மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது, மேலும் ஜோர்டானின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் இவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Radio Free Asia என்றால் என்ன? RFA என்பது 1950 களில் ஆசியா முழுவதிலும் அமெரிக்க பிரச்சாரத்தை பரப்ப சிஐஏ ஆல் உருவாக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டது. உலகெங்கிலுமாக சிஐஏ இன் மோசமான நடவடிக்கைகள் அம்பலப்பட்டிருந்தாலும் கூட, அதே அத்தியாவசிய செயல்பாட்டை RFA இன்றும் தொடர்கிறது, இது வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கி வந்தது, அதேவேளை பெயரளவில் “சுயாதீனமானதாக” இதற்கு அமெரிக்க காங்கிரஸால் நிதியளிக்கப்பட்டு, மேற்பார்வையிடப்படுகிறது.

சிஐஏ இன் இழிநிலையால் களங்கப்படுத்தப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக முக்கிய நடவடிக்கைகளை தொடரும் வழிமுறையாக, RFA வும் ஹோஜாவும் 1983 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான தேசிய நன்கொடை (National Endowment for Democracy - NED) கருத்தரங்குடன் நெருங்கி ஒத்துழைக்கின்றனர். உலகெங்கிலுமுள்ள வலதுசாரி, அமெரிக்க சார்பு அமைப்புகளுக்கு நிதியளிப்பதற்கும், முன்னாள் சோவியத் குடியரசுகளில் “வண்ண புரட்சிகள்” என்ற அழைக்கப்பட்டவற்றை கட்டமைப்பதற்கும் NED அதன் சொந்த இழிநிலையை விரைந்து உருவாக்கியது.

உலக வீகர் காங்கிரஸூக்கு 2004 ஆம் ஆண்டில் அது தொடங்கப்பட்டதிலிருந்தும், மற்றும் 1998 இல் ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க வீகர் சங்கத்திற்கும் NED பல மில்லியன் டாலர்களை பாய்ச்சி வந்துள்ளது. இவை இரண்டும், சீனாவுக்கு எதிராக வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இயங்கும் வீகர் நாடுகடந்த அமைப்புக்களின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வலையமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் குறிப்பிடத்தக்க அடிப்படையாக துருக்கி உள்ளது, இதனுடன் துருக்கிய மொழி பேசும் வீகர்கள் வரலாற்று உறவைக் கொண்டுள்ளனர். துருக்கியின் பாசிச தேசிய இயக்க கட்சி (National Movement Party-MHP) மற்றும் அதன் Grey Wolves துணைப்படைகளுடன் AUA க்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, இது மத்திய ஆசியாவின் துருக்கிய மொழி பேசும் இனக்குழுக்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு-துருக்கிய தேசியவாதத்தை ஆதரிக்கிறது.

இந்த மோசமான வலதுசாரி சூழலுக்குள் தான் குல்செஹ்ரா ஹோஜா செயல்படுவதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பயனுள்ள கருவியாக செயலாற்றுகிறார். குறிப்பிடத்தக்க வகையில், வாஷிங்டன் போஸ்ட் ஹோஜாவை சீனாவின் “இனப்படுகொலை” மற்றும் வீகர்கள் மீதான அடக்குமுறைக்கு “ஆதாரமாக” வைத்திருந்தாலும் கூட, அவரது தாயாரும் சகோதரரும் தடுத்து வைக்கப்படாமல் சுதந்திரமாக இருப்பதைக் காட்டும் ஒரு காணொளியை சீன அதிகாரிகள் இந்த மாதம் தொடக்கத்தில் வெளியிட்டதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் இதற்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போஸ்ட் அதன் தம்பட்டத்தைக் கைவிடாமல், காணொளியை ஒரு போலி பிரச்சாரம் என்று நிராகரித்ததுடன், நியூ யோர்க்கரில் வெளியான ஒரு கசாக் நாடுகடத்தல் தொடர்புபட்ட மற்றொரு திகிலூட்டும் கதையை ஆதாரமாக குறிப்பிட்டு, ஜின்ஜியாங் தடுப்பு முகாம்களில் வீகர்கள் அனுபவிக்கும் நரக வேதனைகளை எவரும் சந்தேகிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.

ஒரு சிறிய எண்ணிக்கையிலான நன்கு தொடர்பிலுள்ள மற்றும் பெரும்பாலும் பணக்கார வீகர் நாடுகடத்தப்பட்டவர்களின் சுய ஆர்வமுள்ளவர்களின் விபரங்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் சந்தேகிக்க எல்லா காரணங்களும் உள்ளன. சீன சிறுபான்மையினருக்காக தான் ஆற்றும் பணிக்கு அவர் “கடவுளால் வழிநடத்தப்பட்டார்” என்று அறிவித்துள்ள வலதுசாரி ஜேர்மன் வர்ணனையாளரும், கிறிஸ்தவராக மீண்டும் பிறந்தவருமான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர் அட்ரியன் ஜென்ஸ் (Adrian Zenz) போன்றவர்களைப் பற்றி போஸ்ட் “சில வெறித்தனமான கல்வியாளர்கள்” என்று குறிப்பிட்டது பற்றியும் ஒரு வார்த்தை சொல்லப்பட வேண்டும். இவர், கம்யூனிசம் நினைவு அறக்கட்டளையின் தீவிர வலதுசாரி பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, வலதுசாரி, கம்யூனிச எதிர்ப்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சிந்தனைக் குழுக்களின் வலையமைப்புடன் தொடர்புடையவராவார்.

ஆயினும்கூட, ஜென்ஸின் உயர் மனப்பாங்குடைய ஆராய்ச்சி, வீகர் தடுப்புக்காவல்கள், கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு மற்றும் வீகர் பெண்களுக்கு கருத்தடை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களின் ஒரு பெரிய அங்கத்தை உருவாக்குகிறது. உத்தியோகபூர்வ அமெரிக்க ஆவணங்கள் உட்பட, இவரது ஆராய்ச்சி பரவலாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, இவர் அமெரிக்க காங்கிரஸில் சாட்சியம் அளித்துள்ளார், மேலும் வலதுசாரி குடியரசுக் கட்சியினர் மற்றும் வீகர் நாடுகடத்தப்பட்டவர்களுடன் இவர் தொடர்புடையவராவார். ஜின்ஜியாங்கில் உள்ள நிறுவனங்களை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க கடந்த மாதம் சீன அரசு இவரை அச்சுறுத்தியபோது, வாஷிங்டன் போஸ்ட் வீகர் இனப்படுகொலை விவகாரம் பற்றிய கூற்று பெரும்பாலும் நிற்பதற்கு அல்லது வீழ்வதற்கு காரணமாகவுள்ள “வெறித்தனமான கல்வியாளர்” என்ற கூற்றை பாதுகாக்க முனைந்தது.

விரைந்து அதிகரித்து வரும் அமெரிக்கா தலைமையிலான “வீகர் இனப்படுகொலை” பிரச்சாரம், 1999 ஆம் ஆண்டில் சேர்பியா மீது கொலைகார குண்டுவெடிப்பைத் தொடங்க அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளும் சுரண்டிய “பெரும் பொய்யை” நினைவுபடுத்துகிறது. புதிய ஹிட்லரான சேர்பியன் தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிக் (Slobodan Milosevic), கொசோவோவின் அல்பானிய மக்களை படுகொலை செய்வதைத் தடுக்கும் ஒரு பணியாக கூறி, கிளின்டன் நிர்வாகம் அதன் “மனிதாபிமான தலையீட்டை” நியாயப்படுத்தியது. முற்றிலும் மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் உடனடியாக சேர்பிய அட்டூழியங்கள் தொடர்புபட்ட பரபரப்பான கதைகளை பரப்புவதற்கு முனைந்தன.

100,000 இன அல்பானியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற இழிந்த கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை என்பது போருக்குப் பின்னர் நிரூபணமானது. உண்மையான இறப்பு எண்ணிக்கை சுமார் 2,000 தான் என்பதுடன், அதில் பெரும்பாலானவர்கள் கொசோவா விடுதலை இராணுவம் (Kosova Liberation Army - KLA) என்ற ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழுவால் கொல்லப்பட்டிருந்தனர். அல்கொய்தாவுடனான அதன் உறவின் காரணமாக KLA ஐ ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வாஷிங்டன் முன்னரே முத்திரை குத்தியிருந்தது, என்றாலும் அதிலிருந்து விரைந்து பின்வாங்கி, KLA க்கு பணத்தையும் ஆயுதங்களையும் வழங்கியதுடன், கொசோவோவின் மக்களுக்கான ஒரே நியாயமான பிரதிநிதி இதுதான் என்றும் அறிவித்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற கொசோவா குட்டி-அரசாங்கத்திற்கு தலைவரான KLA இன் தலைவர் ஹாசிம் தாசி (Hashim Thaci) ஹேக்கில் தற்போது போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டணி நாடுகளும் யூகோஸ்லாவியா இன மற்றும் மத ரீதியில் உடைந்ததை சாதகமாக்கிக் கொள்ள முயற்சித்ததன் ஒரு பகுதியாக சேர்பியா மீதான நேட்டோ போர் உள்ளது.

அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை சீனா சவால் செய்வதைத் தடுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, “வீகர் இனப்படுகொலை” குறித்த அமெரிக்க பிரச்சாரம் சீனாவை இன ரீதியில் பலவீனப்படுத்துவதையும் உடைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில், வாஷிங்டனின் கவனம் தலாய் லாமா மற்றும் திபெத்திய மக்கள் மீதான சீன ஒடுக்குமுறை குறித்த குற்றச்சாட்டுக்கள் மீது இருந்தது. வாஷிங்டன் வீகர்களை நோக்கித் திரும்பியது அவர்களது ஜனநாயக உரிமைகள் குறித்த அக்கறையினால் அல்ல, மாறாக ஜின்ஜியாங்கின் மூலோபாய நிலையைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது, அதாவது, இது, மத்திய ஆசியாவிற்கும் அதன் எரிசக்தி விநியோக வழிகளுக்கும் அருகேயுள்ளது, மேலும் யுரேசிய நிலப்பரப்பை சாலைகள், இரயில் பாதைகள், குழாய்வழிகள் மற்றும் தொலைத்தொடர்புகளுடன் இணைக்கும் சீனாவின் ஒரே இணைப்பு ஒரே பாதை முன்னெடுப்பு (Belt and Road Initiative) திட்டத்திற்கும் இது அவசியமானது என்பதே.

1999 இல் இருந்ததைப் போல, ஊடகங்களும் இதற்கு அணிதிரண்டுள்ளன. அதாவது, ஒரு இசைக்குழு நடத்துனர் அவரது தடியை தட்டினால், அனைத்து இசைக்கருவிகளும் அதையொட்டி ஒலிக்கத் தொடங்குவது போல இது உள்ளது. ஜின்ஜியாங்கில் நடப்பது “இனப்படுகொலை” தான் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது, அதாவது பெய்ஜிங்கில் ஸ்ராலினிச பொலிஸ் அரசை எதிர்க்க வேண்டும் என்று இவர்கள் கூறுவதற்கு நெருக்கமாக ஒத்திருக்கும் வகையில், அரசியல் வர்ணஜாலம் முழுவதுமான ஊடகங்களும் இதே குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்புடன் வெளிப்படுத்துகின்றன.

Loading