பெருந்தொற்று நோய் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கு ஒரு “பேரழிவுகர ஆண்டை” உருவாக்கியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க (MENA) பிராந்தியத்தில் பெருந்தொற்று நோய் ஏற்படுத்தியுள்ள பேரழிவுகர தாக்கத்திற்கும் மற்றும் அதனால் உருவாகியுள்ள சமூக மற்றும் அரசியல் அமைதியின்மைக்கும் சமீபத்திய அறிக்கைகள் சாட்சியமளிக்கின்றன.

சர்வதேச மன்னிப்பு சபையின் வருடாந்திர அறிக்கையை தொடங்கிவைத்து, ஹெபா மொராயெஃப் (Heba Morayef), சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையை நிலைத்திருக்கச் செய்துள்ளதும் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமான பேரழிவிற்கு வழிவகுத்ததுமான மக்களை பிளவுபடுத்தும் மற்றும் அழிவுகர கொள்கைகளின் கொடூரமான மரபுகளை பெருந்தொற்று அம்பலப்படுத்தியுள்ளது எனக் கூறினார்.

ஏப்ரல் 21, 2021, புதன்கிழமை, ஈரானில், தெஹ்ரானுக்கு சற்று வெளியே அமைந்துள்ள பெஹெஸ்ட்-இ-ஜஹ்ரா கல்லறையில், கல்லறைத் தொழிலாளி ஒருவர் கோவிட்-19 தொற்றுநோயால் இறந்த ஒருவரது உடலை இறுதிச் சடங்கிற்காக எடுக்கிறார் (AP Photo/Ebrahim Noroozi)

2020 ஆம் ஆண்டு “ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒரு பேரழிவு தரும் ஆண்டாக இருந்தது, அதிலும் கோவிட்-19 பெருந்தொற்று அவர்களது சூழ்நிலையை முன்னெப்போதையும் விட ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பெருந்தொற்று இப்பகுதியில் ஏற்கனவே நிலவும் பிளவுகள், பாகுபாடு மற்றும் சமத்துவமின்மைகளை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.”

ஒரு சிறிய, அதி-பிற்போக்கு அடுக்கை வளப்படுத்தியுள்ள பெரும் எரிசக்தி வளங்களின் தாயகமாகவுள்ள இந்த பிராந்தியம், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய மற்றும் பிராந்திய கூட்டணி நாடுகளால் திட்டமிடப்பட்ட பல தசாப்த கால போர்கள், மோதல்கள், ஏகாதிபத்திய தலையீடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் பேரழிவிற்குட்பட்டது. பல மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக்கப்பட்டனர், இவர்கள் அகதிகள் முகாம்களில் அல்லது உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்த மக்களின் (IDP) முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலையில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அகதிகளில் சுமார் 5.8 மில்லியன் பேரும் IDP களில் சுமார் 6.8 மில்லியன் பேரும் குழந்தைகளாவர், இவர்களில் பலருக்கு பள்ளிப்படிப்புக்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது.

இந்த பெருந்தொற்று, 7.3 மில்லியனுக்கு அதிகமான நோய்தொற்றுக்களையும் மற்றும் 150,000 இறப்புக்களையும் விளைவித்து மனிதகுல அழிவு தொடர்புபட்ட ஒரு பயங்கரமான எண்ணிக்கையை உருவாக்கியுள்ளது, பரிசோதனை மற்றும் பதிவு முறைகளின் பற்றாக்குறை காரணமாக உண்மையான இழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் பற்றி வெறுமையான பிரதிபலிப்பு உள்ளது. ஈரான் இதுவரை அண்ணளவாக 65,000 இறப்புக்களை பதிவு செய்து படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அதேவேளை ஈராக்கும் எகிப்தும் கிட்டத்தட்ட 15,000 மற்றும் 12,000 இறப்புக்களை பதிவு செய்துள்ளன.

பிராந்தியம் எங்கிலும், அதிகாரிகள் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதையும், விமர்சனங்களை மவுனமாக்குவதையும் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதையும் அதிகரிக்க பெருந்தொற்றை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

வேலை வழங்குநர்கள் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். எகிப்தில், பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் குறைக்கப்பட்ட ஊதியத்தை பெறவும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்யவும், அல்லது ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்கவும் ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். இங்கு தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜோர்டானில், தொற்றுநோய் காரணமாக பொதுத்துறை ஊதியத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முடிவு எடுத்தது தொடர்பாக ஆசிரியர்களின் புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் கடந்த ஆகஸ்டில் வெடித்தன. அப்போது, அரசாங்கம் 13 தொழிற்சங்க கிளைகளை சோதனை செய்யவும் டசின் கணக்கானவர்களை கைது செய்யவும் பொலிஸை அனுப்பியது, அதேவேளை நீதிமன்றம் ஆசிரியர்கள் சங்கத்தை கலைக்க உத்தரவிட்டது.

எகிப்தில், வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட சுகாதார அமைப்புமுறைகள் மற்றும் பரிதாபகரமான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஈரானில் பெருந்தொற்று குறித்த அரசாங்கத்தின் அலட்சியமான பதிலிறுப்புக்கு எதிராக பேசும் சுகாதாரப் பணியாளர்களை ஈரான் அச்சுறுத்துகிறது அல்லது கைது செய்கிறது என்றும் மொராயெஃப் கூறினார். அரசாங்கத்தை விமர்சித்ததற்காக குறைந்தது ஒன்பது சுகாதாரப் பணியாளர்கள் எகிப்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், எகிப்து, துனிசியா மொராக்கோ மற்றும் சிரியாவில் தொழிலாளர்களுக்கு போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கப்படவில்லை.

அல்ஜீரியா, ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் எதிர்ப்பு இயக்கங்கள் மீண்டும் எழுந்தபோது, தொற்றுநோயின் முதல் சில மாதங்களில் அது தணிந்ததன் பின்னர், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக எதிர்ப்பாளர்கள் கைது, தடியடி மற்றும் வழக்குகளை எதிர்கொண்டனர். ஈராக்கில், கூட்டாட்சி அதிகாரிகள் ஆண்டின் முதல் சில மாதங்களில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை கைது செய்தனர், அதேவேளை குர்திஸ்தான் பிராந்திய அரசாங்க அதிகாரிகள் வழங்கப்படாத ஊதியத்திற்காக போராடிய தொழிலாளர்களுக்கு எதிராக கொடிய சக்தியைப் பயன்படுத்தினர், மேலும் கடந்த டிசம்பரில் “மின்னணு சாதனங்களை தவறாகப் பயன்படுத்தி” ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்த ஏனையோர் மீது குற்றம்சாட்டினர்.

லெபனானில், பாதுகாப்புப் படையினர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை காயப்படுத்தும் வகையில் தீங்கான இரப்பர் குண்டு சூட்டை நடத்தினர், அதேவேளை துனிசியாவில், மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் சென்றும் அருகே இருந்த மருத்துவமனையையும் தாக்கும் வகையில் குப்பிகளுடனான கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி பொலிசார் தாக்குதல் நடத்தினர். ஈரானில், பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்களை தாக்க கூர்மையான சிறு இரப்பர் உருண்டைகள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். எகிப்தில், கடந்த செப்டம்பரில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்கள் “பயங்கரவாதம்” மற்றும் எதிர்ப்பு தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்ய வழிவகுத்தன.

பாதுகாப்புப் படையினரால் தண்டனையின்றி அதிகப்படியான படை பயன்படுத்தப்பட்டது. ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின்படி, 12 அரபு நாடுகளிலுள்ள சுமார் 64 மில்லியன் பேர், அல்லது ஆறு அரேபியர்களில் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க போதுமான உணவு கிடைக்கவில்லை. போர், மோதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பசியே வாழ்வின் உண்மை என ஆக்கிவிட்டது, பூகோள அளவிலான உணவுப் பொருட்களின், குறிப்பாக கோதுமை போன்றவற்றின் விலை உயர்வு குறித்து ஸ்திரமான அரசாங்கங்கள் கூட கவலை கொண்டுள்ளன, அதிலும் பெரிதும் ரொட்டி துணை உணவாக எடுத்துக்கொள்ளப்படும் நிலைமைகளின் கீழ் இது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் யேமனில் நிலைமை மிகவும் கொடுமையானது, அங்கு பாதியளவு மக்கள்தொகையினர் பசியில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிரியாவில், ஒரு கூடை அடிப்படை உணவுப்பொருட்களின் விலை முன்னைய ஆண்டை விட பிப்ரவரியில் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் ஒரு பொதுத்துறை ஊழியரின் சராசரி மாத ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. நூறாயிரக்கணக்கானவர்களுக்கு முழு உணவாக இருக்கக்கூடிய ரொட்டியை வாங்க, அதாவது அரசாங்க மானியத்துடன் கூடிய பேக்கரிகளில் அதை வாங்க மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. யேமனில், உதவி நிறுவனங்களுக்கான நிதியளிப்பு பற்றாக்குறைகளினால் அவர்கள் தங்களது திட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், பஞ்சம் பெருகும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஈரான் மற்றும் சிரியாவை கீழறுக்க ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான பிரச்சாரத்தின் இணை சேதமான, நாணய மதிப்பின் சரிவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு லெபனானில் உணவு விலைகள் 400 சதவிகிதம் உயர்ந்துள்ளன. பல்பொருள் அங்காடிகளில் மானிய விலையில் கிடைக்கும் சமையல் எண்ணெய் வாங்குவதில் வெடித்த மோதல்களினால் ஒரு மனிதர் கொல்லப்பட்டதால், மானிய விலையில் பொருட்களை விநியோகிக்க ஆயுதமேந்திய காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் அங்கு ஏற்பட்டுள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய பிராந்திய பொருளாதார அறிக்கை தொற்றுநோய் மற்றும் பூட்டுதல்களால் உருவாகும் அரசியல் தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. இது, வறுமை, அரசாங்கக் கடன் மற்றும் பொது கடன்பாடு ஆகியவற்றின் அதிகரிப்பு MENA பிராந்தியத்தில் அரசாங்கத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையை மேலும் அரித்துவிட்டது என்று எச்சரித்தது. எண்ணெய் விலை சரிவு காரணமாக வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் மத்தியில், 2020 ஆம் ஆண்டில் அரசாங்க வருவாயில் ஏற்பட்ட மிகக் கடுமையான வீழ்ச்சியுடன், இதன் பொருளாதாரங்கள் அவ்வாண்டில் 3.8 சதவிகிதம் சுருங்கியிருந்தன. எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் தொற்றுநோய்க்கு முன்னைய காலத்துடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.3 சதவிகித அளவிற்கு சுருங்கும் என எதிர்பார்க்கின்றன, அதேவேளை வளைகுடா பகுதியிலுள்ள எண்ணெய் உற்பத்தியாளர்கள் 7.7 சதவிகிதம் சுருங்குவதைக் காண்கின்றனர். இதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக தொகுக்கப்பட்ட கோவிட் தொடர்புபட்ட இழப்புக்கள் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 227 பில்லியன் டாலரை எட்டும் என்று வங்கி எதிர்பார்க்கிறது.

தங்களது மக்களின் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புக்காக நிதியளிக்க செலவுகள் ஏற்படும் நிலையில் பிராந்தியம் எங்கிலுமுள்ள அரசாங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி வங்கி விளக்கமளிக்க முனைந்த அதேவேளை, எழுந்த துல்லியமான எதிர்ப்பு இதுபற்றி இருந்தது: அதாவது, உலகெங்கிலும் உள்ள அவர்களது சமதரப்பினரைப் போல, பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபங்களைப் பெருக்கும் வகையில் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

MENA நாடுகளில் சராசரி பொதுக் கடன் 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 46 சதவிகிதமாக இருந்ததிலிருந்து 2021 ஆம் ஆண்டில் 54 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதேவேளை எண்ணெய் அல்லாத உற்பத்தியாளர்களிடையேயான கடன் 2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 93 சதவிகிதத்தை எட்டுகிறது. இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் பொருள், பெரும்பாலான அரசாங்க செலவினங்கள் கடன் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும், அதேவேளை சமூக பாதுகாப்பு வலை, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய பொது சேவைகளுக்கு கிடைக்கக்கூடிய நிதி குறைக்கப்படும் என்பதே.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு பகுதி பொருளாதார மீட்சியை வங்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், இது “தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தைச் சார்ந்தது” என்று இது கூறுகிறது, இது ஒரு பகற்கனவே.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, மொராக்கோவிலிருந்து ஆப்கானிஸ்தான் வரை (அல்ஜீரியா மற்றும் இஸ்ரேல் தவிர) பரந்திருக்கும் 21 நாடுகளில் 14 நாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கிடைத்துள்ளன, அதாவது 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சாத்தியமானளவில் 20 சதவிகித அளவிற்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.

மத்திய கிழக்கில், இஸ்ரேல் அநேகமாக 60 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது, இது தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை வாங்கியுள்ள போதிலும், இதன் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசி வழங்க மறுக்கிறது. கட்டார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் உள்ளிட்ட சிறிய வளைகுடா நாடுகள் மட்டும் உள்நாட்டினருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போட்டு வருகின்றன. பொது விவாதங்கள் தடுப்பூசிகளை அணுகுவது தொடர்பாக கவனம் செலுத்தி வந்தாலும், சிரியா, யேமன், லெபனான் மற்றும் லிபியா போன்ற உணவு பற்றாக்குறையுள்ள, அரிதாக செயல்படும் சுகாதார அமைப்புமுறைகளை அல்லது பொது நிறுவனங்களைக் கொண்ட பகுதிகளுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பது இன்னும் அதிக சிக்கலாகவுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நோய் ஒரு பூகோள அளவிலான பிரச்சினை என்பதால், இதற்கு பூகோள அளவிலான தீர்வு தான் தேவைப்படுகிறது. இது, ஒரு ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம், தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும் வரை அனைத்து அத்தியாவசிய உற்பத்தியையும் நிறுத்தி வைப்பது, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் செல்வத்தை பறிமுதல் செய்வது, மற்றும் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் ஊதியம் வழங்குவது, மற்றும் தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்கு நிதியளிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். முதலாளித்துவ இலாப அமைப்புமுறையினால் உருவாகும் சமூக சமத்துவமின்மை மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவர, இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை பெருமளவில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Loading