கோவிட்-19 பெருந்தொற்று நோயால் இந்தியா அழிக்கப்பட்டுவருகிறது - இது ஒரு உலகளாவிய பேரழிவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் சுனாமியால் இந்தியா இப்போது சின்னாபின்னாமாக்கப்பட்டு வருகிறது. இந்த எழுச்சியானது ஏற்கனவே உத்தியோகபூர்வமாக 145 மில்லியன் மக்களை பாதித்துள்ளதுடன் மற்றும் கிட்டத்தட்ட 3.1 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு உலகளாவிய பெருந்தொற்று நோயானது இதுவரை காணப்படாத எல்லாவற்றையும் மிகச் சிறிதாக்குவதற்கு அச்சுறுத்துகிறது.

நேற்று 314,644 புதிய கோவிட்-19 தொற்றுக்களின் ஒரு நாள் உலக சாதனையை இந்தியா அறிவித்தது, இது திங்கள்கிழமையிலிருந்து நாட்டின் மொத்த புதிய தொற்றுக்கள் 1.1 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்ததுடன், மேலும் 2,104 இறப்புக்களின் இந்திய சாதனையையும் எட்டியது.

2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமையன்று, இந்தியாவின் கவுஹாட்டியிலுள்ள ஒரு உட்புற மைதானத்தில் ஒரு பகுதியினர் காத்திருக்கும் போது, மக்கள் COVID-19 க்கான COVAXIN தடுப்பூசியைப் பெறுகிறார்கள். (AP Photo/Anupam Nath)

தொற்று மற்றும் இறப்பு மொத்தங்கள் இரண்டும் சந்தேகத்திற்கு இடமின்றி மொத்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களால் பட்டியலிடப்பட்ட இறப்பு மற்றும் தகன புள்ளிவிவரங்கள், உண்மையான இறப்பு எண்ணிக்கைக்கும் அரசாங்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ எண்ணிக்கைக்கும் இடையே ஒரு பரந்த முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் 718 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் பைனான்சியல் டைம்ஸ் நடத்திய ஆய்வில், உண்மையான இறப்பு எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று முடிவு செய்தது.

சடலங்கள் சூழ்ந்த சுடுகாடுகள் மற்றும் கல்லறைகள் நாடு முழுவதும் இருந்து உறைய வைக்கும் அறிக்கைகள் வெளிவருகின்றன. இந்தியாவின் 16வது பெரிய நகரமான போபாலில், அதன் முதல் மணி நேரத்திலேயே 2,200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற 1984 யூனியன் கார்பைட் எரிவாயு கசிவு பேரழிவிற்குப் பின்னர், சுடுகாடு தகன மையங்கள் அவற்றின் மிக உயர்ந்த மட்டங்களில் செயற்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்கு மாநிலமான குஜராத்தில், சுடுகாடுகள் இடைவிடாமல் 24 மணி நேரம் வேலை செய்து வருகின்றன, அவற்றின் உலோக ஆதரவுகள் உருகத் தொடங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.

நீண்டகாலமாக ஊழியர்கள் இல்லாத மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்தேசிவிர் (Remdesivir) போன்ற கோவிட் எதிர்ப்பு 19 மருந்துகள் தீர்ந்துவருவதால், இந்தியாவின் கட்டுக்கடங்காத சுகாதார அமைப்புமுறை சரிந்து வருகிறது. தலைநகரமான டெல்லி மற்றும் நிதி மையமான மும்பையிலிருந்து வந்த செய்தி அறிக்கைகள், மற்றும் கோவிட்-19 வைரஸினினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியேயுள்ள அவர்களின் உறவினர்கள் உதவிக்காக கூச்சலிடுவதைக் காட்டுகின்றன, யாரும் உதவிக்கு வரவில்லை என்று மட்டுமே சொல்லப்படுகிறது.

ஆயினும் கூட இந்தியாவின் அரசாங்கமும் ஆளும் உயரடுக்கும் இந்த பாரிய துன்பத்திற்கும் மரணத்திற்கும் முற்றிலும் அலட்சியமாகவும், பாதிப்பே அடையாதவர்களாகவும் உள்ளனர்.

உழைக்கும் மக்களின் உடல்நலம் மற்றும் உயிர்களை விட பெருநிறுவன இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்து, கடந்த இரண்டு மாதங்களாக கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொதுமுடக்க உத்தரவைக் கொடுக்க பிடிவாதமாக மறுத்துவிட்டன.

செவ்வாயன்று மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிரதமர் நரேந்திர மோடி பெருந்தொற்று நோயிலிருந்து அல்லாமல் வைரஸின் முன்னேற்றத்தை தடுத்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஒரு பொதுமுடக்கத்திலிருந்து இந்தியாவை "காப்பாற்றப்பட வேண்டும்" என்று அறிவித்தார்! "இன்றைய சூழ்நிலையில், நாட்டை பொதுமுடக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்," என்று அவர் அறிவித்தார். பின்னர் அவர் மாநில அரசாங்கங்களையும் இதேபோல் பொதுமுடக்கங்களை செய்யாதிருக்குமாறு வலியுறுத்தினார்.

தற்போதைய நிலைமையைப் போலவே பயங்கரமான மற்றும் மோசமான, அனைத்து ஆதாரங்களும் தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் வரவிருக்கும் வாரங்களுக்கு, மாதங்கள் கூட அதிவேகமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 8 க்குப் பின்னர் இரண்டு வாரங்களில், இந்தியாவில் வீரியமுள்ள தொற்றுக்களின் எண்ணிக்கை 910,000 இல் இருந்து கிட்டத்தட்ட 2.3 மில்லியனாக 250 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த எழுச்சியானது புதிய, அதிக தொற்றை ஏற்படுத்துகிற மற்றும் ஆபத்தான வகைகளால் எரியூட்டப்படுகிறது, இதில் இந்தியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட "இரட்டை-பிறழ்வடைந்த" திரிபு (“double-mutant” strain) உட்பட, இரண்டு வெவ்வேறு "தொடர்பு வகைகளில்" (“variants of concern”) பிறழ்வுகளை ஒருங்கிணைக்கிறது.

மக்களில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைவரும் தொற்று அபாயத்தில் உள்ளனர். இந்தியர்களில் வெறும் 8.4 சதவிகிதத்தினர் மட்டுமே முதல் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர், 1.4 சதவிகிதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

மேலும், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், சுத்தமான தண்ணீர் பெறுவதற்கான வசதிகூட இல்லாதவர்கள், மற்றும் ஒரு அறை குடியிருப்புகளில் வாழ்கின்றனர், அதாவது அவர்கள் சமூக இடைவெளி நடவடிக்கைகளை செயல்படுத்த முடியாது மற்றும் பல சந்தர்ப்பங்களில், ஏற்கனவே ஆரோக்கியத்தை விட்டுக்கொடுப்பு செய்துள்ளனர். சமீபத்திய நாட்களில் துன்பவியலாக நிரூபிக்கப்பட்டபடி, நாட்டின் பெரிய நகரங்களிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்றால், பொது சுகாதார வசதிகள் இல்லாத கிராமப்புற இந்தியாவின் பெரும் பகுதிகளில் நிலைமை இன்னும் இருண்டதாக உள்ளன. அங்கு பொது சுகாதார வசதிகள் எதுவும் கிடையாது.

இந்தியாவில் பேரழிவு என்பது தேசிய எல்லைகளை மதிக்காத மற்றும் கடவுச்சீட்டு தேவைப்படாத ஒரு வைரஸை எதிர்கொள்ளும் ஒரு உலகளாவிய பேரழிவாகும் என்பதை வலியுறுத்தப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் தலைமையில், பெருந்தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் எந்தவொரு திட்டமிட்ட முயற்சியையும் கைவிட வேண்டும் என்ற உலக அரசாங்கங்களின் முடிவானது கோவிட்-19 இன்னும் கடுமையான, சாத்தியமான தடுப்பூசி-எதிர்ப்பு திரிபு பிறழ்வுகளாக மாற்றமடையவும் அபிவிருத்தி செய்யவும் முடிந்த நிலைமைகளைத்தான் உருவாக்கியுள்ளது. கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய, விஞ்ஞான அடிப்படையிலான முயற்சியானது முதலாளித்துவ இலாபத்தை அல்ல, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் முன்னறிவிக்கப்பட்டாலொழிய, இந்த செயல்முறை தொடரும். இந்தியாவில் தற்போதைய பெருந்தொற்று நோய் காட்டுத்தீயில் இருந்து வரும் தீப்பொறிகள் உலகம் முழுவதும் தீயை ஏற்படுத்தப்போகிறது. உண்மையில், இந்திய இரட்டை-பிறழ்வு வகைத் தொற்றுக்கள் இப்போது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் அறிவிக்கப்படுகின்றன.

மேலும், தனது சொந்த நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கு ஒரு பிற்போக்குத்தனமான, பீதியுற்ற விடையிறுப்பில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு பொதுவான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதில் முக்கிய இடம் பெற்ற இந்தியாவானது கோவிட்-19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.

இந்த பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராட உலகின் வளங்களை அணிதிரட்டுவதற்கு தடையாக நிற்பது போட்டி தேசிய அடிப்படையிலான முதலாளித்துவ கும்பல்களின் இலாப மற்றும் சூறையாடும் பூகோள புவிசார் அரசியல் நலன்கள் ஆகும்.

இந்தியாவின் நிலைமையை எடுத்துக் கொள்ளுங்கள். மோடியும் அவரது அதிவலது இந்து மேலாதிக்கவாத பிஜேபியும், இப்போது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டைத் தொடர்ந்து வரும் பாரிய மரணங்களுக்கு பொறுப்பாளிகள் மட்டுமல்ல. முழு ஆளும் வர்க்கமும் அரசியல் ஸ்தாபகமும் தான் பொறுப்பாக இருக்கின்றன.

பல தசாப்தங்களாக, இந்திய அரசானது பிஜேபி அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசாங்கங்களின் கீழ், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை சுகாதாரப் பாதுகாப்புக்காக ஒரு ஏளனமாக செலவழித்துள்ளது. பாரிய வறுமை மற்றும் கைவிடப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை காரணமாக, இந்தியாவில் கோவிட்-19 இன் பெரும் பாதிப்புகளை உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டியபோதிலும், மோடி அரசாங்கம் 2020 ஆண்டு முதல் இரண்டரை மாதங்களுக்கு பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராட எந்த கணிசமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பின்னர் மார்ச் 25 அன்று, முன்னேற்பாடு எதுவுமின்றி, நான்கு மணி நேரத்திற்கும் குறைவான அறிவிப்பானது அது ஒவ்வொரு நடவடிக்கையிலும் தோல்வியுற்ற ஒரு பேரழிவுகரமான நாடு தழுவிய பொதுமுடக்கத்தை திணித்தது. வெகுஜன பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைக்கு வளங்களை பரந்த அளவில் உட்செலுத்துதல் மற்றும் ஒரே இரவில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு சமூக ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தமுடியாமல் அது தோல்வியுற்றது.

அதைத் தொடர்ந்து, மோடி அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்டதும், ஆனால் பா.ஜ.க அல்லது வெளிப்படையான எதிர்க்கட்சிகளின் தலைமையில் மாநில அரசாங்கங்களின் ஆதரவுடன், இந்தியா "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை ஏற்றுக்கொண்டது. ஏப்ரல் இறுதியில் தொடங்கி, அரசாங்கம் அதன் பொருளாதாரத்தை "மீண்டும் திறக்க" தொடங்கியது, இது தொடர்ந்தது, அடுத்த ஆறு மாதங்களில் தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் அதிகரித்தபோது ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி எறியப்பட்டது.

ஆளும் உயரடுக்கின் மனநிலைக்கு குரல் கொடுத்த மோடி அரசாங்கமானது சுகாதார ஆலோசகரும் தொற்றுநோயியல் நிபுணருமான ஜெயப்பிரகாஷ் முலியி, நாட்டின் மக்கள் தொகையில் மகத்தான பெரும் அளவைக் கருத்தில் கொண்டு, கடந்த நூற்றாண்டின் உலகப் போர்களுக்கு வெளியே காணப்படாத அளவில் வெகுஜன இறப்புக்கள் ஏற்கத்தக்கவை என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார். "முழு பொதுமுடக்கத்தை கணிசமாக திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா குறைந்தது இரண்டு மில்லியன் இறப்புக்களை காணக்கூடும்" என்றார் முலியி. "இறப்பு விகிதம் குறைவாக உள்ளது, இளைஞர்கள் வெளியே சென்று வேலை செய்யட்டும்."

இந்தியாவில் கோவிட்-19 "இரண்டாவது அலை" பிப்ரவரி மற்றும் மார்ச் மாதக் கடைசியில் பலத்தை பெற்றபோது, அரசியல் ஸ்தாபகம் ஒன்றுகூடி பொதுமுடக்க நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவித்தது. மோடியிடமிருந்து தங்கள் குறிப்பை எடுத்துக்கொண்டு, அவர்கள் இந்தியாவின் "உலகை வெல்லும்" தடுப்பூசி பிரச்சாரத்தை பெருந்தொற்று நோய்க்கான பதிலாக அறிவித்தனர். இதில் அவர்கள் பெருவணிகத்தின் கட்டளைப்படி செயற்பட்டனர், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற செய்தி ஊடகக் குரல்கள் தலையங்கத்திற்குப் பின் தலையங்கமாக "பொதுமுடக்கங்கள்" ஆனது "கட்டுப்படியாகாதவை" என்று கண்டனம் செய்து வருகின்றன.

இந்தக் கூலிப்படை பிரச்சாரத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல, அவர்கள் இந்த பெருந்தொற்று நோயால் பேரழிவிற்கு உட்பட்டுள்ள வாழ்வாதாரங்களான நூற்றுக்கணக்கான மில்லியன் கணக்கானவர்களை இழிந்த முறையில் சுட்டிக் காட்டியுள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட பியூ ரிசர்ச் (Pew Research) ஆய்வானது பெருந்தொற்று நோயின் முதல் அலையின் போது நாளொன்றுக்கு 150 ரூபாய்க்கு (அமெரிக்க 2 டாலர்கள்) குறைவாக சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக 135 மில்லியனாக இருந்தது, மேலும் 32 மில்லியன் பேர்கள் தங்கள் வருமானம் நாளொன்றுக்கு 10 டாலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்ததைக் கண்டனர்.

ஆளும் வர்க்கத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் பில்லியனர்களின் செல்வத்தில் ஒரு சிறு பகுதி என்பது கூட நினைத்துப் பார்க்க முடியாதது – ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 2020 ஆண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது- பெருந்தொற்று நோய் பரவுவதை நிறுத்தப்படும் வரை, மக்களுக்கு சமூக ஆதரவை வழங்குவதற்காக இவைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

மோடி அரசாங்கத்தின் "வெளிப்படையான" பொருளாதாரம், "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை என்பது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் மீதான தீவிரமான தாக்குதலின் வெட்டுமுனையாகும். பொருளாதாரத்தை மீட்சி செய்ய வேண்டும் என்ற பெயரில், மோடி "முதலீட்டாளர் சார்பு" நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களின் திவாலான விற்பனை, விவசாய வணிகத்திற்கு ஆதரவான விவசாயச் சீர்திருத்தம், மற்றும் நிரந்தமல்லாத ஒப்பந்த வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்த தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்கள், பெரிய முதலாளிகள் தொழிலாளர்களை விருப்பத்திற்கு ஏற்ப பணிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பெரும்பாலான வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்குதல் ஆகியவை இதில் அடங்குகின்றன.

அதே நேரத்தில், பிஜேபி அரசாங்கமானது சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலுடன், அமெரிக்க தலைமையிலான நாற்கர கூட்டு மூலம், மற்றும் வாஷிங்டனின் முக்கிய ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு மூலோபாய உறவுகளின் வளர்ந்து வரும் வலையமைப்புடன் இந்தியாவை மேலும் ஒருங்கிணைத்துள்ளது. இவை இரண்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இந்திய முதலாளித்துவ உயரடுக்கின் கரத்தை வலுப்படுத்தவும், அதன் சொந்த பெரும் சக்தி நோக்கங்களை தொடரவும் ஆகும்.

இந்த வர்க்கப் போர்த் தாக்குதலும், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் வகையில் வகுப்புவாதத்தை தூண்டிவிட மோடி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. நாடு முழுவதும் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் விரைவான, வறுமை ஊதியங்கள் மற்றும் பிபிஇ (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் PPE - personal protective equipment) பற்றாக்குறைக்கு எதிராக வெடித்துள்ளன. கடந்த நவம்பர் 26 ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் மில்லியன் கணக்கானவர்கள் கலந்துகொண்டு அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை எதிர்த்தனர் மற்றும் பெருந்தொற்று நோய்களால் வருமானங்கள் குறைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் கணக்கானவர்களுக்கு அவசர கால ஆதரவைக் கோரினர். கடந்த ஐந்து மாதங்களாக மோடியின் விவசாய சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியின் புறநகர்ப் பகுதியில் நூறாயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.

ஆனால் எல்லா இடங்களிலும் தொழிலாள வர்க்கமானது அதன் வர்க்க நலன்களை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி உடனடியாக அதன் பெயரில் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புக்களால் தடுக்கப்படுகிறது: முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபக இடது கட்சிகள் ஆகும். 1930களின் பெருமந்த நிலைக்குப் பின்னர், உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடி வெடித்த நிலைமைகளின் கீழ், இரட்டை ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை காங்கிரஸ் கட்சியுடன் தங்கள் அரசியல் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளன. இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த ஆண்டு மோடி மீது தனது தாக்குதலின் பெரும்பகுதியை அவர் "சீனா மீது மென்மையாகவுள்ளார்" என்ற கூற்றின் மீது குவிமையப்படுத்தியுள்ளது.

முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறையின் முற்றிலும் இணக்கமின்மையையும், சமூகத்தின் மிக அத்தியாவசியத் தேவைகளுடன் முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநல வர்க்க நலன்களையும் இந்த பெருந்தொற்று நோய் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், பல தசாப்தங்களாக முதலாளித்துவத்தை அதிகரித்தளவில் வகைப்படுத்தி வரும் அனைத்து புற்றுநோய்களையும் அது அதிகப்படுத்தியுள்ளது – அதாவது வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான மோதல் மற்றும் பெரும் சக்திக்கான போட்டி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் முறிவு மற்றும் அதிவலது, பாசிச சக்திகளை ஆளும் வர்க்கம் வளர்த்தல் ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பெருந்தொற்று நோய் ஒரு பூகோள நெருக்கடியாகும், இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த சுயாதீன நடவடிக்கையின் மூலம் மட்டுமே பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், உலகெங்கிலும் தொழிலாளர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க தேவையான சமூக ஆதரவைப் பெறவும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட முடியும்.

அதேபோல், தொழிலாளர்கள் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஏகாதிபத்திய போரையும் பிற்போக்குத் தாக்குதலையும் எதிர்ப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகள் புதிய வெகுஜன அமைப்புக்களை கட்டியெழுப்புவதை அவசியமாக்கும் ஒரு உலகளாவிய போராட்டமாகும். நாடுகடந்த பெருநிறுவனங்கள், போட்டி முதலாளித்துவ அரசாங்கங்கள், மற்றும் அவர்கள் தங்கள் சூறையாடும் உலகளாவிய நோக்கங்களை முன்னெடுக்க முயலும் வர்த்தக மற்றும் இராணுவக் கூட்டணிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கமானது ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பொதுவான மற்றும் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆகியோரின் மாபெரும் விடுதலைக் கருத்துக்களால் உயிரூட்டப்பட்ட அத்தகைய உலகளாவிய இயக்கத்தை அபிவிருத்தி செய்யத்தான் உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மே 1 சனிக்கிழமை அன்று ஒரு இணையவழி மே தின பேரணியை நடத்துகின்றன — "கொரோனா வைரஸின் ஓராண்டு: உலகளாவிய பெருந்தொற்று நோயிலிருந்து உலகளாவிய வர்க்கப் போராட்டம் வரை." இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிடுமாறு இந்தியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட தொழில்வல்லுநர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading