கோவிட்-19 நோய்தொற்றுக்கள் இந்தியாவை மூழ்கடிக்கும் நிலையில், இலவச தடுப்பூசிகளுக்கு உத்தரவாதம் வழங்க மோடி அரசாங்கம் தவறிவிட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று தேசியளவில் ஒரே நாளில் உச்சபட்சமாக 3,645 புதிய கோவிட்-19 இறப்புக்கள் பதிவானது உட்பட, கொரோனா வைரஸ் பேரழிவு ஒட்டுமொத்த இந்தியாவையும் தொடர்ந்து கடும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. மேலும், நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையில் மற்றொரு உலக சாதனையாக, இந்தியாவில் நேற்று உச்சபட்சமாக 379,257 புதிய நோய்தொற்றுக்கள் பதிவானதானது நாட்டின் ஒட்டுமொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை 18 மில்லியனுக்கு அதிகமாக்கியது.

டெல்லி மற்றும் மும்பை போன்ற மிகப்பெரிய நகரங்கள் உட்பட, நாடெங்கிலுமுள்ள மருத்துவமனைகளும் பிணவறைகளும் நிரம்பிவழிகின்றன. இத்தகைய கொடிய நிலவரங்கள் இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு உத்தரவாதம் அளிக்க மறுத்துவிட்டது.

ஏப்ரல் 29, 2021, வியாழக்கிழமை, இந்தியாவில், மும்பையில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காத்திருக்கின்றனர் (AP Photo/Rajanish Kakade)

மோடி ஏப்ரல் 20 அன்று நாட்டுக்கு வழங்கிய உரையில், மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்று அறிவித்தார். அதற்கு முன்னர், 45 க்கு மேற்பட்ட வயதினருக்கு மட்டுமே அரசாங்கம் தடுப்பூசி வழங்கியது. இந்தியா “உலகிலேயே மலிவான தடுப்பூசியைக் கொண்டுள்ளது,” என்று மோடி பெருமையடித்துக் கொண்டாலும், 18-45 க்கு இடைப்பட்ட வயதினருக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்படவில்லை, அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஏப்ரல் 19 அறிக்கை, மோடி அரசாங்கத்தின் முன்னுரிமை மனித உயிரைப் பாதுகாப்பதாக இல்லை, மாறாக தனியார் உற்பத்தியாளர்களின் இலாப நலன்களையும், மற்றும் ஆளும் உயரடுக்கினரின் புவி-மூலோபாய நலன்களையுமே பாதுகாக்கிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

“இந்தியாவின் தனியார் துறை தடுப்பூசி உற்பத்தி திறனின் வலிமை என்பது,” “பொது-தனியார் கூட்டு ஆராய்ச்சி, பரிசோதனைகள் மற்றும் உற்பத்தி மேம்பாடு ஆகியவற்றுக்கு உதவுவது முதல், இந்தியாவின் ஒழுங்குமுறை அமைப்பில் இலக்கு வைக்கப்பட்ட பொது மானியங்களைப் பெறுவது மற்றும் தொலைநோக்கு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்வது வரையிலான முன்னுதாரணமற்ற தீர்க்கமான நடவடிக்கைகள் மூலம் மூலோபாய ரீதியாக அதிகாரத்தை பெற்றுள்ளது” என இது கூறியுள்ளது. இந்த கொடிய நோயை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு இத்தகைய மிகப்பெரிய மற்றும் இழிவான அறிக்கை சிறிதும் ஆறுதலளிக்கவில்லை.

ஆக்ஸிஜன், அடிப்படை மருத்துவ பொருட்கள், அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் பற்றாக்குறை குறித்த, அத்துடன் பெருந்தொற்றால் இறந்துபோனவர்களது சடலங்களை அகற்றுவதில் உள்ள சிக்கல்கள் குறித்த நெஞ்சை பதற வைக்கும் செய்திகளுடன் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தகன இடங்கள் நிரம்பிவழிவதாக ஏப்ரல் 29 அன்று Scroll.in செய்தி தெரிவித்தது. இது, ஒரு உடலை தகனம் செய்ய ஒரு ஈமச்சடங்கிற்கு 300 கிலோகிராம் மரக்கட்டை தேவை என்று குறிப்பிட்டதுடன், ஒரு தகனத் தொழிலாளியான ராம் பால் என்பவர், “இங்கு மரக்கட்டைகளை விட அதிகமாக சடலங்கள் உள்ளன… சடலங்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன” என்று கூறியதை மேற்கோள் காட்டியது.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் இறப்புக்களை குறைத்து கணக்கிடுவதை ஏனைய பல ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. டெல்லியிலுள்ள ஏழு தகன மைதானங்களை சென்று பார்வையிட்ட NDTV செய்தி வலையமைப்பின் ஊடகவியலாளர்கள், ஏப்ரல் 18 மற்றும் 24 ஆம் தேதிகளுக்கு இடையில் குறைந்தது 1,150 இறப்புக்கள் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்பு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ஏப்ரல் 28 அன்று அறிக்கை அளித்தனர். மேலும், வைரஸ் பாதிப்பால் வீட்டில் இறந்துபோனவர்களை கோவிட்-19 இறப்புக்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று ஒரு தகனத் தொழிலாளி NDTV நிருபர்களிடம் கூறினார்.

கோவிட்-19 இறப்புக்களின் துல்லியமான எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக கூறப்படும் ஒரு மாவட்ட நிர்வாகத்தைப் பற்றி ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியதற்கு, மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியின் (BJP) உறுப்பினரான ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், “இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரப்போவதில்லை என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி உரக்க கூறுவதில் அர்த்தமேதும் இல்லை” என்று அலட்சியமாக பதிலிறுத்தார்.

இந்திய மக்கள் மீதான ஆளும் உயரடுக்கின் குற்றவியல் அலட்சியம், குவிந்து வரும் பிணக் குவியல்களினால் மட்டும் அம்பலப்படுத்தப்படவில்லை, மாறாக அனைத்திற்கும் மேலாக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றே மறுத்ததிலிருந்தும் தெரிகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய உள்நாட்டு மற்றும் சர்வதேச தடுப்பூசி மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சகம் அதன் ஏப்ரல் 19 அறிக்கையில், நாட்டின் தேசிய தடுப்பூசி வியூகத்தின் மூன்றாம் கட்டம், “தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி விலை நிர்ணயத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றும், “விலை, கொள்முதல், தகுதி மற்றும் தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றை வெளிப்படை மற்றும் நெகிழ்வுத் தன்மை” கொண்டதாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஏற்பாடுகளின் கீழ், மோடி அரசாங்கம் Serum Institute of India (SII) மற்றும் Bharat Biotech என்ற இரண்டு உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளது, மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்கும் மூன்றாவது நிறுவனத்திற்கும் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமையை வழங்கியுள்ளது.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசி அளவுகளில் ஐம்பது சதவீதம் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்படும், மீதமுள்ள தடுப்பூசிகள் இந்த உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்படும் “வெளிப்படையான” விலைக்கு திறந்த சந்தையில் விற்பனை செய்யப்படும். இறுதியில், தீவிரமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முயற்சிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் மீது இந்த செலவுச் சுமை சுமத்தப்படும்.

SII நிறுவனம் தற்போது ஒரு அளவு (dose) கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் (8.16 அமெரிக்க டாலர்), இந்திய மாநில அரசாங்கங்களுக்கு 400 ரூபாய்க்கும், மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு 150 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றது.

எவ்வாறாயினும், ஏற்றுமதி சந்தையில் ஒரு டோஸ் (dose) தடுப்பூசியின் விலை ரூபாய் 1,125 முதல் 1,500 வரை விற்கப்படுவதாக வலியுறுத்தி, மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் விலையையும் 400 ரூபாயாக அதிகரிக்க நிறுவனம் முயன்று வருகிறது. இதற்கிடையில், உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்தை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், ஒரு அளவு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று ஏப்ரல் 24 அன்று தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், அதாவது 800 மில்லியன் பேருக்கு அல்லது நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட, 6.4 பில்லியன் டாலர், அல்லது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.32 சதவிகித தொகை மட்டுமே செலவாகும் என்று தெரிவித்த சமீபத்திய Times of India புள்ளிவிபரங்கள் மோடி அரசாங்கத்தால் இந்திய மக்கள் கைவிடப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மே 1 அன்று தடுப்பூசி போட ஆரம்பிக்க முடியுமா என்பதில் பல இந்திய மாநிலங்கள் தெளிவாக இல்லை, ஏனென்றால் SII மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து இதுவரை அவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்று ஊடகங்கள் தற்போது தெரிவிக்கின்றன.

இராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற “எதிர்க்கட்சி” அரசாங்கங்கள், “அவர்களிடம் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால்” மோடியின் தடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டத்தை அவர்கள் ஒத்திவைக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன என்று Indian Express நாளிதழ் ஏப்ரல் 27 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்காக மருத்துவமனை படுக்கை, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் பிராணவாயு கலன்களை ஆர்வத்துடன் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்; ஏனையோர் தமது அன்புக்குரியவர்களது உடல்களை தகனம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திகிலூட்டும் காட்சிகளுக்கு மத்தியில், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் ஐரோப்பாவிலுள்ள பாதுகாப்பான புகலிடங்கள், இந்தியப் பெருங்கடல் அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள உல்லாச ஸ்தலங்களுக்கு தனியார் ஜெட் விமானங்களில் பறந்து போக முடிகிறது.

மும்பையில் இருந்து துபாய்க்கு செல்லும் ஒரு வழி விமானக் கட்டணம் சுமார் 80,000 ரூபாய் (கிட்டத்தட்ட 1,000 டாலர்) அல்லது வழமையான கட்டணத்தை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாக இருந்தாலும், தனியார் ஜெட் விமானங்களுக்கான தேவை “முற்றிலும் வெறித்தனமானது” என்று Air Charter Service India நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், “நாளை எங்கள் நிறுவனத்தின் 12 விமானங்கள் துபாய்க்கு செல்கின்றன, அவை அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்டன” என்று ஏப்ரல் 27 அன்று AFP க்கு அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 க்கு எதிரான தங்களது குற்றகர அலட்சியமான நடவடிக்கை குறித்து அதிகரித்து வரும் மக்கள் சீற்றத்தைக் கண்டு மோடி அரசாங்கமும் மற்றும் அதன் மாநில அரசாங்க சமதரப்புக்களும் கடுமையாக பதற்றமடைந்துள்ளன. குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் ட்விட்டரில், அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மீதான கடுமையான கண்டனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த கொந்தளிப்பை தடுக்கும் ஒரு பிற்போக்குத்தன முயற்சியில், பெருந்தொற்று குறித்த அரசாங்கத்தின் பதிலிறுப்பை விமர்சிக்கும் அனைத்து இடுகைகளையும் ட்விட்டர் நீக்கிவிட வேண்டும் என்று மோடி அரசாங்கம் கோரியது. இந்த வாரம், இறக்கும் நிலையிலுள்ள தனது தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட வேண்டும் என்று ட்விட்டரில் வெளிப்படையான கோரிக்கையை பதிவு செய்த 26 வயது சஷாங்க் யாதவ், ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து வதந்திகளை பரப்பியதாக உத்தரபிரதேச பொலிசாரால் குற்றம்சாட்டப்பட்டார். அவர் மீது கூறப்படும் இந்த குற்றம் “வேண்டுமென்றே குற்றம் சுமத்தும்… அச்சுறுத்தும் அல்லது எச்சரிக்கை விடுக்கும் நோக்கம் கொண்டது.”

Loading