முன்னோக்கு

ஸ்ராலினிச குற்றங்களை புகழ்தல்: அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பும், லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரத்தில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பின் (DSA) பல முக்கிய தலைவர்கள் 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் ட்வீட்களையும், ஸ்ராலினிச GPU உளவாளியான கொலைக்காரர் ரமோன் மெர்காடரை மாவீரராகவும் சித்தரிக்கும் ட்வீட்களையும் பதிவிட்டிருந்தனர்.

DSA தலைவர்களின் பல ட்வீட்கள், ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்ய மெர்காடர் பயன்படுத்திய ஆயுதமான ஓர் பனிக்கோடாரியின் (alpenstock) சித்திரங்கள் மற்றும் படங்களோடு காட்டப்பட்டுள்ளன. அமெரிக்க இளம் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (YDSA) தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் ஓர் உறுப்பினரான நிக்கன் ஃபயாஸி (Nickan Fayyazi), “இது இன்று பயனுள்ளதாக இருக்கும்,” என்ற விவரிப்புடன் அதுபோன்றவொரு படத்தை முன்வைக்கிறார்.

வடக்கு கரோலினா, அஷ்வில் பகுதி DSA உறுப்பினர் டான் போஸி, “ரமோன் மெர்காடரின் நினைவாக: அவர் நமக்கு வழிகாட்டினார்,” என்ற வாசகத்துடன், ட்ரொட்ஸ்கியின் கொலையாளிக்கு ஒரு நினைவகத்தை அமைக்க முன்மொழிகிறார். கலிபோர்னியா, ஈஸ்ட் பே பகுதியின் சமீபத்திய DSA வழிகாட்டி குழு உறுப்பினர் ஒருவரின் ஒரு ட்வீட், “பனிக்கோடாரி நையாண்டிகள் ஒருபோதும் நகைச்சுவை கிடையாது,” என்றும், “நாம் அனைவரும் பகிரங்கமாக பனிக்கோடாரி நையாண்டிகளை + தயக்கமின்றி தொடர வேண்டும்,” என்று குறிப்பிடுகிறது.

இந்த ட்வீட்டுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்திற்கு DSA இன் சாமானிய உறுப்பினர்களிடையே வாசகர்களின் அதிகரிப்புக்கு DSA அதிகாரிகளின் கணிசமான பகுதியினரின் ஒருங்கிணைந்த பதிலின் ஒரு பகுதியாகும்.

மார்ச் மற்றும் ஏப்ரலில், DSA உறுப்பினரும் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினருமான அலெக்ஸாண்டிரியா ஒக்காசியோ-கோர்ட்டெஸ் பற்றிய உலக சோசலிச வலைத் தள கட்டுரை நிறைய கவனத்தைப் பெற்றது. அறிக்கையை அம்பலப்படுத்தி, பைடென் நிர்வாகத்தை விமர்சிப்பதை “தீங்கிழைக்கும்” செயல் என ஒக்காசியோ-கோர்ட்டெஸ் கண்டனம் செய்தார். கட்டுரை, ஆயிரக்கணக்கான DSA உறுப்பினர்கள் உட்பட 100,000 க்கும் அதிகமான தனித்துவமான வாசகர்களை பெற்றது. ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மீதான உலக சோசலிச வலைத் தள விமர்சனத்தின் தாக்கம் பற்றிய கவலை, ஏப்ரலில் அலபாமாவின் பெசெமர் அமசன் ஆலையில் AFL-CIO இன் தொழிற்சங்கமயப்படுத்தும் முனைவு தோல்வி அடைந்ததால் கூடுதலாக அதிகரித்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அலுவலக நிர்வாகிகள் மற்றும் DSA இன் இளைஞர் பிரிவு தலைவர்கள், கிளைத் தலைவர்கள், வளாக மன்ற தலைவர்கள் மற்றும் முக்கிய DSA தகவல் வாசிப்பாளர்கள், அத்துடன் கார்டியன் மற்றும் DSA உடன் இணைந்த ஜாகோபின் பத்திரிகை போன்ற செய்தி ஊடகங்களும் ட்ரொட்ஸ்கியின் படுகொலையைக் கொண்டாடும் DSA உறுப்பினர்களில் உள்ளடங்குவர்.

ட்ரொட்ஸ்கியின் கொலை பற்றிய அருவருக்கத்தக்க நையாண்டிகளை ட்வீட் செய்பவர்கள் ஆபாசப்படத்திற்கு நிகரான அரசியல் படங்களைப் பரப்பி வருகிறார்கள். அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் சோசலிச வரலாற்றில் தலைச்சிறந்த நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதை எள்ளி நகையாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் ஸ்ராலினின் சர்வாதிபத்திய ஆட்சி நடத்திய பாரிய படுகொலை நடவடிக்கையோடு தங்களை இணக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த நபர்கள் தான் DSA க்குள் தலைமை பதவிகளில் இருக்கிறார்கள் என்ற உண்மையை இந்த அமைப்பின் சாமானிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியலில், நபர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கொண்டே அவர்கள் எடை போடப்படுகிறார்கள். ஸ்ராலினின் குற்றங்களுக்கு அனுதாபம் காட்டுபவர்களுக்கும் உண்மையான இடதுசாரி அரசியலுக்கும் முற்றிலும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் அரசியலின் பாதை சோசலிசத்தை நோக்கி அல்ல, மாறாக சோசலிச இயக்கத்திற்கு எதிரான அரசு ஒடுக்குமுறையை ஆதரிப்பதை நோக்கி உள்ளது.

சர்வதேச வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிச தலைவிதியின் நிலைப்பாட்டிலிருந்து, ஆகஸ்ட் 20, 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையானது இருபதாம் நூற்றாண்டில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய அரசியல் குற்றமாகும். அவரது படுகொலையானது, உயிர் வாழ்ந்து வந்த 1917 அக்டோபர் புரட்சியின் கடைசி தலைவரை மற்றும் உலக சோசலிச புரட்சியின் தலைச்சிறந்த மூலோபாயவாதியைச் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடமிருந்து பறித்தது. ட்ரொட்ஸ்கி, ஒரு தத்துவவாதியாக, சொற்பொழிவாளராக, எழுத்தாளராக, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை ஒழுங்கமைப்பவராக, செம்படையின் தலைவராக, ஸ்ராலினிசத்தின் சமரசமற்ற எதிர்ப்பாளராக, நான்காம் அகிலத்தின் ஸ்தாபகராக, எல்லா விதமான அடுக்குமுறை வடிவங்களில் இருந்தும் உலகை சுதந்திரப்படுத்தும் சோசலிச இலட்சியவாதியாக, உலக சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு நிலைபேறான பங்கைக் கொண்டிருந்தார். இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்தின் வெற்றிக்குத் தயாரிப்பு செய்வதில் ட்ரொட்ஸ்கியின் பரந்த மரபை ஆராய்வதும் உள்ளீர்த்துக் கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும்.

ஆனால் ட்ரொட்ஸ்கி மட்டுமே ஸ்ராலினிசத்திற்கு பலியான ஒரே நபர் கிடையாது. அவர் படுகொலை செய்யப்பட்டமை, மூன்று மாஸ்கோ வழக்கு விசாரணைகளில் முதலாவதுடன் 1936 இல் தொடங்கிய ஸ்ராலினிச பயங்கரவாத அலையின் உச்சக்கட்டமாக இருந்தது. 1936-40 இன் மாபெரும் பயங்கரத்தின் (Great Terror) போது, ஸ்ராலினிச ஆட்சி ஒரு மில்லியன் புரட்சிகர தொழிலாளர்களை, புத்திஜீவிகளை மற்றும் கலைஞர்களைப் படுகொலை செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1917 அக்டோபர் புரட்சியைத் தயாரிப்பு செய்வதில், தலைமை வகிப்பதில் மற்றும் அதை பாதுகாப்பதில் தீர்க்கமான பாத்திரம் வகித்த, மார்க்சிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகளின் ஒட்டுமொத்த தலைமுறையும் —நடைமுறையளவில் லெனினுக்கு நெருக்கமான எல்லா தோழர்களும் உட்பட— படுகொலை செய்யப்பட்டனர். முக்கிய சோசலிசவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்களைத் அழிப்பதற்காக துல்லியமாக அவர்களை இலக்கில் வைத்திருந்த அந்த மாபெரும் பயங்கரம், அரசியல்ரீதியில் வழிநடத்தப்பட்ட மனிதப்படுகொலை என்று மிகச் சரியாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த வலதுசாரி பிரச்சாரத்தில் முன்னணி பங்களிப்பாளர்கள்

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் DSA உறுப்பினர்களின் பல ட்வீட் சேதிகளின் ஒரு சிறிய மாதிரி கீழே கொடுக்கப்படுகிறது. இந்த இடுகைகளை மறுட்வீட் செய்தவர்கள் அல்லது "விரும்புவோர்" களில், DSA தலைமையின் பல நிர்வாகிகள் உள்ளடங்குவார்கள்.

YDSA இன் தேசிய ஒருங்கிணைப்புக் குழு தலைமை அமைப்பின் உறுப்பினரும், YDSA இன் UC பெர்க்லி மன்றத்தின் இணைத் தலைவருமான நிக்கன் ஃபயாஸியின் முன்குறிப்பிட்ட பதிவு, பிற கொச்சையான வார்த்தைகளுடன் சேர்ந்து, “இது இன்று பயனுள்ளதாக இருக்கும்,” என்ற வாசகத்துடன் ஒரு பனிக்கோடாரியின் படத்தை முன்வைக்கிறது. இதை லோஸ் ஏஞ்சல்ஸ் DSA இன் முக்கிய உறுப்பினரான டேரி ரெஸ்வானி மறுட்விட் செய்திருந்தார்.

பனிக்கோடாரி பற்றிய அந்த ட்வீட் மீது பல DSA உறுப்பினர்களும், அத்துடன் பின்வரும் DSA தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் உட்பட, 100 க்கும் அதிகமானவர்கள் "விருப்பம்" தெரிவித்திருந்தனர்:

• ஜாகோபின் பங்களிப்பாளரான கேப்ரியல் பேட்ரிக்

• நியூ யோர்க் நகர DSA வழிகாட்டும் குழு உறுப்பினர் ஜேக் கொலோசா

• வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் DSA ஒழுங்கமைப்பாளர் மேடிசன் பெர்ரி

• பால்டிமோர் DSA தொழிலாளர் ஒழுங்கமைப்பவர் ரியான் கெகேரிஸ்

• வேர்மாண்ட், சாம்ப்ளைன் பள்ளத்தாக்கு DSA ஒழுங்கமைப்பாளர் அலெக்ஸ் லாசன்

• DSA லாஸ் ஏஞ்சல்ஸ் தொழிலாளர் குழு உறுப்பினர் மைக்கேல் லம்ப்கின்

• இலினாய், நாக்ஸ் கல்லூரியின் YDSA இணைத் தலைவர் மாட் மிலெவ்ஸ்கி

• லோயர் மன்ஹாட்டன் DSA ஒழுங்கமைப்பு குழு உறுப்பினர் ஹோண்டா வாங்

• சிகாகோ DSA உறுப்பினரும் வாசிப்பாளருமான கென்சோ ஷிபடா

• சிலிக்கான் பள்ளத்தாக்கு DSA கிளையின் இணைத் தலைவர் பிராண்டன் ஹென்ரிக்ஸ்

வாஷிங்டன் D.C. DSA உறுப்பினர் பென் டேவிஸ் பதிவிட்ட ஒரு பிரத்யேக பதிவு ட்ரொட்ஸ்கி மீதான அவர் தாக்குதலை நடத்துவதற்காக அவர் தயாரித்த ஒரு வரைபடத்தைக் காட்டுகிறது. ட்ரொட்ஸ்கி அவர் மேசையில் வேலை செய்து கொண்டிருக்கையில் அவர் தலைக்கு மேலே கொலையாளி ஒரு பனிக்கோடாரியைத் தூக்கிப் பிடித்திருப்பதை அது காட்டுகிறது. “சீர்குலைப்பவர்களை அழிக்கவும்" (“Clear out the wreckers”) என்ற வாசகத்தை அது தாங்கியுள்ளது. டேவிஸ் 2020 இல் பேர்ணி சாண்டர்ஸ் பிரச்சாரத்தில் தரவு பகுப்பாய்வாளராக பணியாற்றினார், அவர் பிரிட்டிஷ் கார்டியன் செய்தித்தாளுக்காகவும் எழுதியுள்ளார், அப்பத்திரிகை டேவிஸை "வாஷிங்டன் D.C இல் அரசியல் தரவுகளில் பணியாற்றும்" ஒருவர் என்று குறிப்பிடுகிறது.

இந்த பதிவின் மீதும் பல DSA உறுப்பினர்கள் "விருப்பம்" காட்டியிருந்தனர்.

ஸ்ராலினிசத்தின் சொற்களஞ்சியத்தில் இருந்து பெறப்பட்ட "சீர்குலைப்பவர்கள்" (wreckers) என்ற சொல் தனித்துவமான அரசியல் உள்நோக்கங்களைக் கொண்டதாகும். "ட்ரொட்ஸ்கிச சீர்குலைப்பாளர்கள்" என்பது ஸ்ராலினிச ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் ட்ரொட்ஸ்கிசவாதிகளும் பயங்கரவாதம் மற்றும் நாசவேலையில் ஈடுபட்டதாக பொய்யான வாதத்தின் அடிப்படையில், அவர்களைப் பாரியளவில் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்த அது ஸ்ராலினால் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தையாகும். ஜோடிக்கப்பட்ட மூன்று மாஸ்கோ விசாரணைகளிலும் முக்கிய இடம் பெற்றிருந்த அந்த வார்த்தை, ட்ரொட்ஸ்கியும் அவர் ஆதரவாளர்களும் பாசிசத்தின் முகவர்கள் என்ற அவதூறை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. மார்ச் 29, 1937 இல், இரண்டாம் மாஸ்கோ விசாரணைக்கு முன்னதாக, "கட்சிப் பணியில் குறைபாடுகளும் ட்ரொட்ஸ்கிசவாதிகளைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளும்" என்ற தலைப்பில் ஸ்ராலின் ஓர் உரையை வழங்கினார். அந்த உரையின் போது, ஸ்ராலின் 16 முறை "ட்ரொட்ஸ்கிச சீர்குலைப்பாளர்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

முன்னாள் DSA தேசிய தேர்தல் குழு உறுப்பினர் Nate Knauf பதிவிட்ட மற்றொரு ட்வீட் பதிவும் ட்ரொட்ஸ்கி படுகொலையைச் சித்தரிக்கும் அதே வரைபடத்தை உள்ளடக்கி இருந்ததுடன், “அது சரி தான்!!!” என்ற வார்த்தைகளையும் கொண்டிருந்தது. பென் டேவிஸ், Knox கல்லூரி YDSA இன் மாட் மிலேவ்ஸ்கி, நியூ யோர்க் DSA இன் கனீவ் சிச்சகோவ் மற்றும் Purdue பல்கலைக்கழகத்தின் YDSA இணைத் தலைவர் மேசன் வைஸ் ஆகியோரும் அந்த பதிவுக்கு விருப்பம் வெளியிட்டிருந்தனர்.

கிழக்கு வளைகுடா பகுதியின் வழிகாட்டி குழுவின் சமீபத்திய உறுப்பினர் பதிவிட்ட மற்றொரு இடுகைக்கு, DSA தேசிய அரசியல் கல்வி குழுவின் உறுப்பினரும் சார்லோட் மெட்ரோ DSA இன் இணைத் தலைவருமான கே பிரவுன்; New Yorker மற்றும் the Hill பத்திரிகைகளில் பங்களிப்பு செய்பவரும் DSA ஆதரவாளருமான மவுரா குயின்ட்; போர்ட்லேண்ட் DSA இன் வழிகாட்டி குழுவின் அடையாளம் தெரியாத ஓர் உறுப்பினர் ஆகியோரால் "விருப்பம்" பதிவிடப்பட்டது.

ஒரு தனி பதிவில், தென்மேற்கு புளோரிடா DSA மற்றும் புளோரிடா வளைகுடா கடற்கரை பல்கலைக்கழக YDSA உறுப்பினர் மோர்கன் கிர்க் ஆகியோர் ட்ரொட்ஸ்கியின் மரணம் குறித்த ஒரு நையாண்டி படத்தை ட்வீட் செய்திருந்தனர்.

பின்வரும் DSA தலைவர்கள் இந்த பதிவுக்கு "விருப்பம்" தெரிவித்திருந்தனர்:

• டி.எஸ்.ஏ தேசிய அரசியல் குழு உறுப்பினர் பிளாங்கா எஸ்டீவ்ஸ்

• YDSA தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் நேட் ஸ்டீவர்ட்

• புலம்பெயர்வு உரிமைகளுக்கான DSA குழு இணை தலைவர் அலெக்சாண்டர் ஹெர்னாண்டஸ்

• DSA தேசிய தேர்தல் குழு உறுப்பினர் ஆஸ்டின் பின்ஸ்

• இலினோய் Champagne-Urbana பல்கலைக்கழகத்தின் YDSA இணைத் தலைவர் நிகோ ஜான்சன்-ஃபுல்லர்

• பென்சில்வேனியாவின் ஈரே DSA கிளையின் இணைத் தலைவர் கோல் ஷென்லி

• DSA நியூ யோர்க் நகர ஒழுங்கமைப்பு குழு உறுப்பினர் கெய்லீன் பெனா.

ஜனநாயகக் கட்சி முகவர்களின் பாத்திரம்

ஜனநாயகக் கட்சியின் செயலூக்கமான உறுப்பினர்கள் அல்லது AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அதிகாரிகள் தான் இந்த ட்வீட்களில் பெரும்பாலானவற்றைப் பதிவிடுகிறார்கள், மறுட்வீட் செய்கிறார்கள் அல்லது "விருப்பம்" காட்டுகிறார்கள். இவர்களில் உள்ளடங்குபவர்கள்:

• ஜனநாயகக் கட்சியின் பெர்க்லி நகர சபை உறுப்பினர் கேட் ஹாரிசனின் சட்டமன்ற பயிற்சியாளரும், மாணவர் அரசாங்க பிரதிநிதியுமான YDSA இன் தலைவர் நிக்கன் ஃபயாஸி.

• கலிபோர்னியாவில் 22 ஆவது காங்கிரஸ் சபை மாவட்டத்திற்கான ஜனநாயகக் கட்சியின் 2020 முதன்மை வேட்பாளராக இருந்தவரும், அந்தாண்டின் பிற்பகுதியில் கலிபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவில் சமூகக் கல்லூரி மாவட்ட அறங்காவலருக்காக ஜனநாயகக் கட்சியின் ஒப்புதல் பெற்ற வேட்பாளராக இருந்தவருமான லாஸ் ஏஞ்சல்ஸ் DSA உறுப்பினர் டேரி ரெஸ்வானி. இவர் இரண்டு தேர்தல்களிலுமே தோல்வியடைந்தார்.

• NYC DSA உறுப்பினர் ஆண்ட்ரே கனீவ் சிச்சாகோவ், இவரின் LinkedIn சுயவிபரம், இவர் நியூ யோர்க் நகர ஜனநாயகக் கட்சி உள்ளாட்சி குழு உறுப்பினர் என்றும், ஜனநாயகக் கட்சியின் நியூ யோர்க் மாநில செனட்டர் ஜூலியா சலாஜரின் அலுவலக நிர்வாகியாக இருந்தவர் என்றும் காட்டுகிறது.

• சர்வதேச ஓவியர்கள் மற்றும் நேச நாடுகளது வர்த்தகங்களின் தகவல் தொடர்பு இயக்குனரான ரியான் கெகேரிஸ். தொழிலாளர் துறை விபரங்களின்படி, 2019 இல், இந்த தொழிற்சங்க நிர்வாகி 99,367 டாலர்களை சம்பாதித்தார்.

• பிரபல சிகாகோ DSA வாசிப்பாளர் கென்ஜோ ஷிபாட்டா, இவர் சிகாகோ ஆசிரியர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் என்பதோடு, 2013 இல் இருந்து இலினோய் ஆசிரியர் ஊடகப்பிரிவு இயக்குனருமாக இருந்து வருகிறார். ஒரு தொழிற்சங்க நிர்வாகியாக இவர் 2017 இல் 142,817 டாலர்ககள் சம்பாதித்ததாக தொழிலாளர் துறை விபரங்கள் காட்டுகின்றன.

• நியூ ஹாம்ப்ஷயர் டோவரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகக் குழுவின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் நியூ ஹாம்ப்ஷைர் ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரதிநிதியுமான YDSA இன் தலைவர் நேட் ஸ்டீவர்ட்.

• வாஷிங்டன் டி.சி. DSA இன் பிரட் செஸ்டர், இவர் பெருநகர D.C இல் பேர்ணி சாண்டர்ஸின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான பிராந்திய கள இயக்குனராக இருந்தார் என்பதுடன், வேர்ஜீனியா மற்றும் டெக்சாஸ் ஜனநாயக கட்சிகள் மற்றும் பல்வேறு ஜனநாயகக் கட்சி பிரச்சாரங்களில் செயல்பாட்டாளர்களுடன் பணியாற்றிய இவர் நீண்டகால ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர் ஆவார். "மோசமானதை முறித்தல்: ஒரு சுதந்திரமான தொழிலாளர் கட்சி மீதான தொல்லைகள் எவ்வாறு சோசலிச தேர்தல் திட்டத்தைப் பாதிக்கிறது" என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

• UNITE HERE கிளை 23 D.C பிரிவின் துணைத் தலைவர் ஜோசுவா ஆர்ம்ஸ்டெட்.

• ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி தேர்வுக்குழுவின் துணை தலைவரும், அமெரிக்காவின் இளம் ஜனநாயகக் கட்சியினரின் தேசிய வேட்பாளர் தேர்வுக்குழு துணை தலைவருமான தஸ்னீம் அல்-மைக்கேல்.

DSA க்குள் இருக்கும் முக்கிய ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பாளரும் நியூ யோர்க் நகர DSA ஒழுங்கமைப்புக் குழு உறுப்பினருமான ஹோண்டா வாங் அத்தகைய ட்வீட்களை "விரும்பிய" DSA உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். வாங் தொடர்ந்து உலக சோசலிச வலைத் தளத்தின் மீது தாக்குதல்கள் தொடுப்பவர். உலக சோசலிச வலைத் தளத்தினை தாக்கும் அவரின் டிக்டாக் காணொளிகளின் கருத்துரை பகுதியில் கருத்துரையாளர்கள், பனிக்கோடாரிகளின் படங்களால் நிரப்பி உள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான DSA இன் தாக்குதல்களை வழிநடத்தும் வலதுசாரி ஜனநாயகக் கட்சி செயற்பாட்டாளர்களின் வகையைப் பற்றி, Schoen Consulting நிறுவனத்தின் அரசியல் ஆலோசகராக வாங்கின் அரசியலும் அவரது கடந்த காலமும் ஒரு தோற்றத்தை வழங்குகின்றது.

வாங் அவர் LinkedIn சுயவிபரத்தில், அவர் Schoen நிறுவனத்திற்குப் பணியாற்றும் போது அவர், "உள்நாட்டு சந்தைகள் மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிலும் அரசியல் வாடிக்கையாளர்களுக்கான மூலோபாயம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும்", "பரந்த பல துறைகளில் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும்" விவரிக்கிறார்.

வாங் அவர் பணியாற்றிய அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், அரசு முகமைகள் மற்றும் பெருநிறுவனங்களைப் பட்டியலிடவில்லை என்றாலும், பில்லியனர் மைக்கேல் ப்ளூம்பேர்க் மற்றும் அரசியல் ஆதரவை விலைக்கு வாங்கும் ஒரு தனியார் நிதி நிறுவனமான அவரின் சுதந்திர PAC, அத்துடன் வால்மார்ட் ஆகியவை இப்போது Schoen Consulting நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் உள்ளடங்குகின்றன.

Schoen Consulting நிறுவனத்தின் ஒரு பொது அறிக்கை, பில் கிளிண்டனின் ஆலோசகராக இருந்த அதன் நிறுவனர் பௌல் ஸ்கோனின் பின்வரும் வாடிக்கையாளர்களைப் பட்டியலிடுகிறது, அதில் உள்ளடங்குபவர்கள்:

செனட்டர் ஹிலாரி ரோதம் கிளின்டன் (நியூ யோர்க்), நியூ ஜெர்சி ஆளுநர் ஜொன் கோர்ஜைன் மற்றும் இண்டியானா ஆளுநர் இவான் பேஹ் மற்றும் அவரின் பெருநிறுவன வாடிக்கையாளர்களான வால்மார்ட், AOL டைம் வார்னர், பிராக்டர் & கேம்பிள் மற்றும் ஏடி&டி ஆகியவையும் உள்ளடங்கும். சர்வதேச அளவில், அவர், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர், இத்தாலிய பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனி மற்றும் மூன்று இஸ்ரேலிய பிரதமர்கள் உட்பட 15 க்கும் அதிகமான நாடுகளின் அரசுத் தலைவர்களுக்காக பணியாற்றியுள்ளார். உக்ரேனின் செல்வந்தர், நிதியாளர், நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான விக்டர் பின்சுக் நிதியுதவிகள் வழங்குவதைப் பரப்புவதற்கும் Schoen நிறுவனம் உதவியுள்ளது. சர்வதேச பொருளாதாரங்களுக்கான பீட்டர்சன் மையம், சர்வதேச நெருக்கடி குழு மற்றும் கிளிண்டன் அமைப்பு ஆகியவற்றின் பொதுக்குழுவில் இப்போது சேவையாற்றும் ஒரு சர்வதேச பிரமுகமாக அவரை உருவாக்குவதிலும் Schoen நிறுவனம் அவருக்கு உதவியுள்ளது.

DSA இன் தலைமைக்குள் உள்ளடங்கி இருக்கும் ஜனநாயகக் கட்சியின் மற்றும் DSA இன் அரசியல் செயல்பாட்டாளர்கள் அவர்களின் சடரீதியான அந்தஸ்திற்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் ட்ரொட்ஸ்கியில் ஓர் அச்சுறுத்தலைக் காண்கிறார்கள் என்பதையே ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளராக வாங் இன் தொழில் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. ஐயத்திற்கிடமின்றி, இங்கே பெயரிடப்படாத இன்னும் பல ஆத்திரமூட்டுபவர்களும் இருக்கிறார்கள், இவர்களும் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்து திரைக்குப் பின்னால் இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்து வருகிறார்கள்.

DSA இன் நவ-ஸ்ராலினிச கொள்கைகள்

ஒரு ஏகாதிபத்திய-முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சி, வெறித்தனமான சோசலிச-எதிர்ப்பு கட்சியாகும். அப்படியானால், பின்னர், ஸ்ராலினிச விரோத சோசலிசத்தின் வேறு வகையாக கூறிக்கொள்ளும் DSA க்குள் இருக்கும் அதன் செயல்பாட்டாளர்கள் ஏன் ஸ்ராலினிசத்தின் குற்றங்களைப் பெருமைப்படுத்தி, ட்ரொட்ஸ்கிக்கு எதிரான அதன் அவதூறுகளை மறுசுழற்சி செய்கிறார்கள்?

இந்த வெளிப்படையான முரண்பாட்டிற்கு அடியிலிருக்கும் அரசியல் தர்க்கத்தை புரிந்து கொள்ள, 1930களின் ஸ்ராலினிச பயங்கரத்தினதும் மற்றும் ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்படிக்கை சகாப்தத்தில் அமெரிக்க அரசியலுடனான அதன் உறவினதும் வரலாற்று பின்னணியை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும். அந்தக் காலகட்டம், ஜனநாயகக் கட்சியின் தாராளவாதிகளின் கணிசமான பிரிவுக்கும் ஸ்ராலினிச அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான அரசியல் கூட்டணியின் பொற்காலமாக இருந்தது. இந்தக் கூட்டணி, ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக ஏகாதிபத்திய அரசாங்கங்களைச் சோவியத் ஒன்றியத்துடன் ஒரு கூட்டணிக்குள் இழுக்க கிரெம்ளின் திட்டமிட்ட மக்கள் முன்னணி என்றறியப்பட்டது. இந்த ஏகாதிபத்திய அரசுகளுடன் இன்னும் அனுகூலமான இராஜாங்க உறவுகளுக்குப் பிரதி உபகாரமாக, சோவியத் ஆட்சியும் அதன் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதலாளித்துவ அரசாங்கங்களை ஆதரிக்கும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டங்களை நசுக்கும் என்றிருந்தது.

சோவியத் ஒன்றியம் போல்ஷிவிசத்துடனும் லெனின்-ட்ரொட்ஸ்கியின் உலக சோசலிச புரட்சி முன்னோக்குடனும் தீர்மானகரமாக முறித்துக் கொண்டது என்று "மேற்கத்திய ஜனநாயகங்களை" நம்ப வைப்பதே, மாஸ்கோ விசாரணைகள் மற்றும் பயங்கர நடவடிக்கைகளுக்கான ஸ்ராலினின் மைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

மக்கள் முன்னணியின் வர்க்க ஒத்துழைப்புவாத கொள்கைகள், 1939 இல் ஸ்பெயினில் பாசிச பிராங்கோ சர்வாதிகாரத்தின் வெற்றிக்கும், 1940 இல் பிரான்சில் விச்சி ஆட்சி ஸ்தாபிக்கப்படுவதற்கும் வழிவகுத்தது.

அமெரிக்காவில், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த உற்சாகத்துடன் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தை ஊக்குவித்தது. ஜனநாயகக் கட்சி தாராளவாதிகள் அதிகரித்தளவில் ஸ்ராலினை ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாக பார்த்ததுடன், பழைய போல்ஷிவிக்குகளை அவர் அழித்தொழித்ததை அங்கீகரித்தனர்.

நன்கு அறியப்பட்டவாறு, New Republic மற்றும் Nation போன்ற முன்னணி இடது-தாராளவாத பத்திரிகைகள் மாஸ்கோ விசாரணைகளை ஆதரித்தன என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ட்ரொட்ஸ்கி மக்கள் முன்னணியை "GPU உடனான கூட்டணியில் ஜனநாயகம்" என்று வகைப்பாடு செய்ததை அது உறுதிப்படுத்தியது. பிரதிவாதிகளுக்கு எதிராக அவர்களின் சொந்த சந்தேகத்திற்குரிய "ஒப்புதல் வாக்குமூலங்கள்" மட்டுமே ஒரே ஆதாரமாக முன்வைக்கப்பட்டிருந்த போதினும், லில்லியன் ஹெல்மேன், லூயிஸ் ஃபிஷர், ஃப்ரெடா கிர்ச்வே மற்றும் மால்கம் கௌலி போன்ற முக்கிய கலைஞர்களும், எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் மாஸ்கோ சூனிய விசாரணைகளின் ஒருமைப்பாட்டில் அவர்கள் நம்பிக்கையை வெளியிட்டனர். மாஸ்கோ வழக்கு விசாரணைகள் மீதான விசாரணைக் குழு தலைவராக பணியாற்ற ஒப்புக் கொண்டதற்காக, அவர்கள் அமெரிக்க தத்துவஞானி ஜோன் டுவியை கடுமையாகத் தாக்கினர். அதற்குப் பின்னர், ட்ரொட்ஸ்கிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் அவர் நிரபராதி என்றும், மாஸ்கோ விசாரணைகள் ஜோடிக்கப்பட்டவை என்றும் அந்த விசாரணைக் குழு கண்டறிந்ததையும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தால் ஜனநாயகக் கட்சி மீண்டுமொருமுறை அச்சுறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களும் தொழிலாள வர்க்கமும் தீவிரமயப்படுவது, திசை திருப்பி விடப்படாவிட்டால், முதலாளித்துவ அரசியலிலிருந்து முறித்துக் கொள்வதை நோக்கியும், அவ்விதத்தில், சோசலிசத்திற்கான ஒரு தீவிர இயக்கத்தை நோக்கியும் செல்லக்கூடும் என்பதை அது அங்கீகரிக்கிறது மற்றும் அது குறித்து அஞ்சுகிறது.

இந்த வளர்ச்சியை தடுக்கவே ஜனநாயகக் கட்சி DSA ஐ பயன்படுத்துகிறது.

இந்த உள்ளடக்கத்தில், ட்ரொட்ஸ்கி மீதான ஜனநாயகக் கட்சி மற்றும் DSA தலைமையின் தாக்குதல்களை இரண்டு விஷயங்கள் தூண்டிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும், ஒன்று ஒக்காசியோ-கோர்ட்டெஸை உலக சோசலிச வலைத் தளம் அம்பலப்படுத்தியமை, இது நமது விமர்சனங்களுக்குக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் DSA உறுப்பினர்களே அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தி WSWS க்கு எழுத இட்டுச் சென்றது, மற்றொன்று நாடெங்கிலும் நடந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக போராட்டங்களில் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) அதிகரித்தளவில் முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றன. ஜனநாயகக் கட்சியும் DSA உம், அலபாமா, பெசெமரில் AFL-CIO இன் தொழிற்சங்கமயமாக்கும் முயற்சி தோல்வியடைந்ததையும் மற்றும் விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தை நிராகரித்து சமீபத்தில் தொழிலாளர்கள் வாக்களித்ததையும், அரசு கட்டுப்பாட்டிலான தொழிலாளர் இயக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் பெருநிறுவன சார்பு AFL-CIO க்கு தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் ஆழ்ந்த விரோதத்துடன் மோதலுக்கு வருகிறது என்பதற்கான ஓர் எச்சரிக்கையாக பார்க்கின்றன.

ஜனநாயகக் கட்சி, உண்மையான சோசலிசத்திற்கு எதிரான அரசியல் சூழ்நிலையை நச்சுப்படுத்துவதற்காக, மாஸ்கோ விசாரணைகளின் பொய்களை DSA மூலமாக வடிகட்டி, பாதுகாப்பாக அந்த மாஸ்கோ விசாரணைகளின் பொய்களை நோக்கி திரும்புகிறது. இன்று சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் (WSWS) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ட்ரொட்ஸ்கிசம், தொழிலாள வர்க்கத்திலும் இளைஞர்களிடையேயும் வளர்ந்து வரும் சோசலிச உணர்வுகளுக்கு நனவான வெளிப்பாட்டை வழங்கும் அரசியல் சக்தியாக விளங்குகிறது என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

சோசலிச அமைப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும், தன்னை முற்போக்கான அமைப்பாக கூறிக்கொள்ளும் எந்தவொரு அமைப்பும் ஸ்ராலினிசம் மற்றும் GPU இன் குற்றங்களை நியாயப்படுத்துவதைச் சகித்துக் கொள்ளாது. இந்தக் குற்றங்கள் DSA தலைமையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரால் பாராட்டப்படுகின்றன என்பது அந்த அமைப்புக்குள் ஓர் ஆழ்ந்த பிற்போக்குத்தனமான மற்றும் இழிவான அரசியல் கலாச்சாரம் இருப்பதை அம்பலப்படுத்துகிறது.

இடதுக்கு எதிரான ஓர் அச்சுறுத்தலாக வலதுசாரி வன்முறை வளர்ந்து வரும் இந்த வேளையில், அதிவலது மற்றும் பாசிச சக்திகளால் அரசியல் வன்முறையுடன் அச்சுறுத்தப்படுபவர்களைப் பாதுகாப்பது சோசலிசவாதிகளின் கடமையாகும். அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்ட்டெஸின் அரசியலை நாம் தெளிவாக எதிர்த்த போதினும், ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் போது அவரைக் கொல்ல முயன்ற பாசிசவாதிகளின் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து அவரையும் அவர் பணியாளர்களையும் நாம் சளைக்காது பாதுகாத்து வந்துள்ளோம்.

ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி மற்றும் சோசலிச எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் பொய்களைப் பரப்புவதை அதன் அமைப்பிற்குள்ளே அது அனுமதிக்காது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது இப்போது DSA இன் அரசியல் கடமையாக ஆகியுள்ளது. DSA இன் உள்ளூர் கிளைகள் ட்ரொட்ஸ்கிச-விரோத அவதூறுகளைக் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். வரவிருக்கும் அதன் தேசிய மாநாடு நவ-ஸ்ராலினிச பிரச்சாரத்தை ஐயத்திற்கிடமின்றி கண்டிக்க வேண்டுமென அவை கோர வேண்டும்.

வரலாறு, தத்துவம், சோசலிச மற்றும் மார்க்சிச அரசியலில் தீவிரமாக அக்கறை கொண்டுள்ள DSA இன் அனைத்து உறுப்பினர்களையும், இருபதாம் நூற்றாண்டின் சோசலிசப் புரட்சியின் தலைச்சிறந்த போராளியாக லெனினுடன் சேர்ந்து அணிவகுத்த லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளை வாசிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

***

உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் எழுதிய லியோன் ட்ரொட்கியின் பாதுகாப்பில் என்பதை DSA உறுப்பினர்கள் வாசிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் பரிந்துரைக்கிறது. இந்த நூல் லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிரான ஸ்ராலினிச பொய்களுக்கு ஒரு விரிவான மறுப்பை வழங்குகிறது.

Loading