நெப்போலியன் இறப்பின் இருநூறாண்டுகள்: போனபார்டிச போலீஸ்-அரசு ஆட்சியை மக்ரோன் பாராட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 5, 1821 அன்று செயிண்ட் ஹெலினா (Saint Helena) தீவில் நெப்போலியன் போனபார்ட் நாடுகடத்தப்பட்டு இறந்த இருநூறாண்டு குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உரையாற்றினார்.

நெப்போலியன், அவரது இராணுவ மேதைமை மற்றும் அவரது அரசியல் வாழ்க்கையின் வீச்சு ஆகியவை இந்த இரண்டு நூற்றாண்டுகளாக எண்ணற்ற உத்தியோகபூர்வ உரைகளின் தலைப்பாக இருந்து வருகின்றன. அவரது வாழ்க்கையானது – 1793-ல் பிரெஞ்சுப் புரட்சியின் தீவிர சகாப்தத்திலிருந்து, 1799 ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலமும், 1804-ல் தன்னை பேரரசராக முடிசூட்ட முடிவு செய்ததன் மூலமும், 1815-ல் வாட்டர்லூவில் அவர் தோல்வியுற்றது வரை- பிரெஞ்சுப் புரட்சியின் சகாப்தத்தின் அனைத்து முரண்பாடுகளாலும் குறிக்கப்படுகிறது. நெப்போலியனைப் பற்றி உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் எதை முன்னிலைப்படுத்த தேர்ந்தெடுத்தார்கள் என்பது, பொதுவாக வரலாற்றில் நெப்போலியனின் இடத்தைப் குறித்து அல்ல, அவர்களின் ஆட்சிகளைக் குறித்து அதிகம் கூறுகிறது.

இதில், மக்ரோனின் உரையும் விதிவிலக்கல்ல. பிரெஞ்சு இராணுவமானது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான பாசிச அச்சுறுத்தல்களை வெளியிடும் போது, மக்ரோனே விஞ்ஞானரீதியான ஆலோசனையை புறக்கணித்து, கோவிட்-19 ஆனது ஐரோப்பாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட பின்னர், "வைரஸுடன் வாழ" அழைப்பு விடுக்கிறார், அது பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் ஜனநாயகத்தின் மரண நெருக்கடிக்கு சாட்சியமளித்தது.

அவர் ஒரு குடியரசின் ஜனாதிபதியாக இருந்தாலும், தான் பதவிக்கு வருவதற்கு தேர்தலுக்கு நன்றிகூற கடமைப்பட்டிருந்தாலும், பிரெஞ்சு மக்கள் தெய்வீக உரிமையின் மூலம் ஆட்சி செய்வதாகக் கூறிக் கொண்ட முடியாட்சிகளை தூக்கியெறிந்த பின்னர், ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி மற்றும் பரம்பரைவழி பட்டங்களை மீண்டும் ஸ்தாபிப்பதன் மூலம் முதலாளித்துவ சொத்துக்களை பாதுகாத்ததற்காக நெப்போலியனை மக்ரோன் பாராட்டினார்.

பிரான்ஸ் இன்ஸ்டிடியூட்டிலுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய மக்ரோன், "தோல்வியின் பல மாதங்களுக்கு பின்னரும், பிரான்ஸ் முற்றுகையிடப்பட்டு, மறைந்திருக்கும் வன்முறைக்குப் பின்னர், நெப்போலியன் ஒழுங்கின் அவதாரமாக எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். ... தெய்வீக உரிமையால் ஆட்சியின் முடிவால் தூண்டப்பட்ட தலைச்சுற்றலுக்கு விடையிறுப்பதன் அவசியத்தை நெப்போலியன் மிக விரைவாகப் புரிந்துகொண்டார். அதனை மற்றொரு சட்டபூர்வமான, அதனை விஞ்சும் ஒன்றால் பதிலீடு செய்தார்."

பின்னர், பிரெஞ்சு முதலாவது குடியரசை முடிவுக்குக் கொண்டு வந்து 1804 இல் தன்னை பேரரசராக முடிசூட்டிய நெப்போலியனின் முடிவை மக்ரோன் பாராட்டினார்: "ஜனவரி 21 [கில்லட்டின் மூலம் பதினாறாம் லூயி 1793 இல் தூக்கிலிடப்பட்டார்] அரசரின் உருவம் விட்டுச் சென்ற வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்பது அவரது மிகப் பெரிய உள்ளுணர்வு ஆகும். தீர்வு ... தீவிரமானது மற்றும் அவரது அசாதாரண ஆக்ஸிமோரானில் (முரண்பாடு உள்ளது போல் இருக்கும் சொல் அடுக்கு) வெளிப்படுத்தப்பட்டது: "குடியரசுக்கு ஒரு பேரரசு உள்ளது."

1789 புரட்சி முடியாட்சியை தூக்கியெறிந்தமையானது நிரப்பப்பட வேண்டிய ஒரு "வெற்றிடத்தை" விட்டுச் சென்றது என்ற மக்ரோனின் கருத்து, இப்போது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தில் நிலவும் சர்வாதிகார கருத்தாக்கங்களை பிரதிபலிக்கிறது. மக்ரோன் பேசும்போது, நவ-பாசிச இதழான தற்போதைய மதிப்புகள் (Valeurs actuelles) ஆயிரக்கணக்கான அதிகாரிகளின் மற்றொரு கடிதத்தை தயாரித்து, "உள்நாட்டுப் போருக்கு" அச்சுறுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுக்க பிரெஞ்சு மண்ணில் இராணுவ ரீதியில் தலையிடப்போவதாக உறுதியளித்தது. குறிப்பிடத்தக்க வகையில், மக்ரோன் தனது உரையில் இந்த அச்சுறுத்தல் குறித்து முற்றிலும் மெளனமாக இருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

பிரான்சையும் உலகையும் உற்று நோக்கிப் பார்க்கும்போது, மக்ரோன் தோல்விகளையும் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களையும் மட்டுமே காண்கிறார் என்றால், அது அவர் 1776 அமெரிக்க, 1789 பிரெஞ்சு மற்றும் 1791 ஹைட்டிய புரட்சிகளின் சகாப்தத்தைப் பற்றிப் பேசவில்லை, ஆனால் இன்றைய பிரான்சை குறித்து பேசுகிறார். அதிகமாக, அவர் தனது சொந்த ஜனாதிபதி பதவி குறித்து கலந்துரையாடுகிறார்.

ஜூலை 14, 1789 அன்று பாஸ்டியை மக்கள் கைப்பற்றிக்கொண்டதற்கும் நெப்போலியனின் 1799 ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கும் இடையிலான தசாப்தமானது தோல்வி அல்ல, அல்லது அதன் வன்முறை "மறைந்திருக்கவில்லை." ஜூலை 14, 1789 அன்று பாஸ்டியை கைப்பற்றிக் கொண்ட ஐந்து ஆண்டுகளில், புரட்சிகர பிரான்ஸ் ஐரோப்பாவின் முடியாட்சிகளின் நேச நாட்டுப் படைகளை தோற்கடித்தது மற்றும் நிலப்பிரபுத்துவ சொத்துக்களை பறிமுதல் செய்தது. பிரான்சிலும் கூட, அது எதிர்ப் புரட்சிகர கிளர்ச்சிகளையும், மேற்கில் வென்டே (Vendée) மற்றும் தெற்கில் கூட்டாட்சிவாதிகளின் (federalists) கிளர்ச்சிகளையும் நசுக்கியது.

மாக்சிமிலியன் ரோபஸ்பியர் தூக்கிலிடப்பட்ட பின்னர் மற்றும் 1794 தேர்மிடோரில் புரட்சியின் தீவிர காலம் முடிவுக்கு வந்த பின்னர், முதலாளித்துவ குடியரசு கிராக்கூஸ் பாபேஃப் (Gracchus Babeuf) இன் கூட்டுச் சதியாளர்கள் போன்ற பொதுவில் சொத்துக்களை வைத்திருக்க அழைப்பு விடுத்த பல கிளர்ச்சிகளை நசுக்கியது. 1793ல் பிரிட்டனிலிருந்து துலோன் துறைமுகத்தை மீண்டும் எடுத்துக் கொண்டதற்காக அவருக்கு சிறப்புமதிப்பளித்த ரோபஸ்பியரின் இளைய சகோதரர் அகுஸ்டினுடன் கொண்டிருந்த உறவுகளுக்காக ஆரம்பத்தில் அவமானகரமாக இருந்தபோதிலும் நெப்போலியன் புதிய ஒழுங்கின் வலுவான மனிதராக ஆனார். ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவ முடியாட்சிகள் மீது போர் தொடுத்த அவர், பிரான்சிலும் ஐரோப்பாவின் பெரும் பகுதியிலும் முதலாளித்துவ சொத்துக்களை கெட்டியாக்கினார்.

நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கு அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரவில் தனது "குடியரசு வணக்கத்தை" தெரிவித்த மக்ரோன், ஜனநாயகவாதிகள் மற்றும் முடியாட்சிவாதிகள் இருவருடனும் கூட்டணி சேர்ந்ததற்காக நெப்போலியனைப் பாராட்டினார். "நெப்போலியன் தொடர்ந்து தேசிய ஒற்றுமையையும் மேன்மையையும் நாட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். ... புரட்சியை இரத்தத்தில் எதிர்த்தவர்களை சமரசப்படுத்த வேலை செய்ததன் மூலம் அவர் அதைச் செய்தார்," என்று மக்ரோன் கூறினார். பிரான்சின் ஆரம்பகால மெரோவன்ஜியன் வம்சத்தின் சின்னமான தேனீயை பேரரசராக முடிசூட்டப்பட்ட போது ஒரு சின்னமாக பயன்படுத்த நெப்போலியனின் எடுத்த முடிவை அவர் பாராட்டினார்.

இத்தகைய தெளிவற்ற குறிப்புகள் ஒரு சந்தேகத்திற்கு இடதில்லாத அரசியல் உண்மையை பிரதிபலிக்கின்றன. மக்ரோன் நெப்போலியனை, குறிப்பாக முடியாட்சிவாதிகளின் சதிகள் மற்றும் இடதுசாரி எதிர்ப்பு இரண்டிற்கும் எதிராக நெப்போலியன் அமைத்த பரந்த பொலிஸ் எந்திரத்தை திரும்பிப் பார்க்கிறார், ஏனெனில் மக்ரோன் 21 ஆம் நூற்றாண்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை வடிவமைக்க பிரான்சில் போனபார்டிச ஆட்சியின் மரபுகளுக்கு நனவுடன் முறையீடு செய்ய முயன்று வருகிறார்.

ஒரு போனபார்ட்டிச ஆட்சியானது நாட்டின் உயர் நலன்களுக்காக, வர்க்கங்களுக்கு இடையே சமநிலைப்படுத்துவதாக தன்னை காட்டிக் கொள்ள இராணுவத்தையும் பொலிஸையும் நம்பியுள்ளது. ஆயினும், அது எப்பொழுதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் இரும்பு முஷ்டி என்பதை நிரூபிக்கிறது.

ஐரோப்பாவில் 1848 புரட்சிக்குப் பின்னர், 1851 இல் நெப்போலியனின் மருமகன் லூயி-நெப்போலியன் அமைத்த பிரெஞ்சு இரண்டாம் பேரரசு இதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும். 1848 ஜூனில் பாரிஸ் பாட்டாளி வர்க்கத்தை இரத்தம் தோய்ந்த முறையில் நசுக்கியதன் மூலம் தன்னை இழிவுபடுத்திவிட்ட முதலாளித்துவ இரண்டாம் குடியரசை கவிழ்த்த அவர், தொழிலாள வர்க்கத்தின் மீது இடைவிடாமல் உளவு பார்த்த ஒரு பொலிஸ் அரசை அமைத்து கலைகளை தணிக்கை செய்து, விவசாயிகள் மீது அதன் கடுமையான வரிச்சுமையை விதித்தார். 1871ல் ஜேர்மனியால் அவமானகரமான தோல்விக்குப் பின்னர், அவரது இராணுவம் உலகின் முதலாவது தொழிலாளர் அரசான பாரிஸ் கம்யூனை படுகொலை செய்தது, அந்த "இரத்தக் களரி வாரத்தின்" போது 20,000 மக்களைக் கொன்று குவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

"போனபார்ட்டிசம், பாசிசம் மற்றும் போர்" என்ற அவரது கடைசி கட்டுரைகள் ஒன்றில், லியோன் ட்ரொட்ஸ்கி, 1940 இல் மூன்றாம் குடியரசின் தேசிய சட்டமன்றத்தால் பதவிக்கு வர வாக்களிக்கப்பட்ட மார்ஷல் பெத்தானின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியை, "ஏகாதிபத்திய வீழ்ச்சி சகாப்தத்தில் போனபார்ட்டிசத்தின் ஒரு முதுமையான தளர்வுற்ற வடிவம்" என்று வகைப்படுத்தினார். அதன் ஆரம்ப காலத்தில், அது தேசிய நலன்களின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கும் முதலாளித்துவவாதிகளுக்கும் இடையே நடுநிலைமை வழங்குவதாக உறுதியளித்த ஒரு கூட்டுறவுவாத "தொழிலாளர் சாசனத்தை" இயற்றியது. பின்னர் அது யூதப் படுகொலை, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜி அழிப்புப் போர் மற்றும் பிரெஞ்சு எதிர்ப்பாளர்களை (French resistance) இரத்தம் தோய்ந்த முறையில் ஒடுக்குதல் ஆகியவற்றில் இணைந்தது.

நிச்சயமாக, மக்ரோன் இன்னும் குடியரசு மற்றும் ஜனநாயக ஆட்சியின் பொறிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறார். எவ்வாறெனினும், அவரது ஜனாதிபதி பதவியானது 100,000 கோவிட்-19 இறப்புக்களை மட்டுமன்றி, வேலைநிறுத்தக்காரர்கள், மாணவர்கள் மற்றும் அதிக சமூக சமத்துவத்தை கோரிய "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையில் ஒரு அலையெழுச்சியாகும். "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கலகப் பிரிவு பொலிஸை அனுப்புவதற்கு முன்னர் மக்ரோன் பெத்தானை ஒரு "பெரும் சிப்பாய்" என்று பாராட்டியதில் இருந்து, பல்லாயிரக்கணக்கான கைதுகள், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தார்கள் மற்றும் பொலிசாரால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் சமூக ஒழுங்கு உலகளாவியளவில் மதிப்பிழந்துள்ளது பற்றியும் மற்றும் பிரான்சிற்குள் இராணுவத் தலையீடுகளால் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வது பற்றி பிரெஞ்சு தளபதிகள் எச்சரிக்கையிலும், பரந்த ஒடுக்குமுறை விரிவாக்கத்திற்காக இராணுவ பிரதிநிதிகளால் திட்டங்கள் ஆவேசமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நெப்போலியன் மீதான சர்ச்சைகளை ஒப்புக்கொண்டு, அவரது பெரும் குற்றங்களில் ஒன்றான 1802 இல் அடிமைத்தனத்தை மீண்டும் ஸ்தாபிப்பதைக் குறிப்பிட்டு, சமீபத்தில் கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் (Black Lives Matter) இயக்கத்துடன் தொடர்புடைய குட்டி-முதலாளித்துவ சக்திகள் உட்பட பல்வேறு சக்திகளால் மக்ரோன் விமர்சிக்கப்பட்டார்.

நெப்போலியன் "1794 இன் உடன்படிக்கையால் ஒழிக்கப்பட்ட அடிமைத்தனத்தை மீண்டும் நிறுவினார்" என்று மக்ரோன் கூறினார். "1848 இல், விக்டர் சுல்ஷேசருடன், இரண்டாவது குடியரசு இந்த தார்மீக பிழையை சரிசெய்தது, இது அறிவொளியின் ஆன்மாவைக் காட்டிக்கொடுத்தது." அதே சமயம், மக்ரோன் தனது "கடந்த காலத்தை அழிக்க விரும்புவோருக்கு ஒரு அங்குலம் கூட கொடுக்கக் கூடாது என்ற உறுதியை வலியுறுத்தினார், ஏனென்றால் அது நிகழ்காலத்தைப் பற்றிய எண்ணத்துடன் ஒத்துப்போவதில்லை". "நெப்போலியன் உணர்ந்தாரா அல்லது அதற்கு பதிலாக புரட்சிகர மதிப்புகளை காட்டிக் கொடுத்தாரா என்று சொல்ல எனக்கு எந்த நோக்கமும் இல்லை. நான் நிச்சயமாக அத்தகைய இடங்கைளைத் தவிர்ப்பேன்” என்று அவர் முடித்தார்.

நெப்போலியனின் மரணத்திற்குப் பிந்தைய நூற்றாண்டுகளில், பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள் போனபார்ட்டிச ஆட்சி மட்டுமல்ல, முதலாளித்துவ அமைப்புமுறையும் 1789 இல் பிரகடனப்படுத்தப்பட்ட "சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்" கொள்கைகளுடன் இணக்கமற்றது என்பதைக் காட்டுகின்றன. பிரெஞ்சு இராணுவத்திடமிருந்து ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்ரோனின் உரை ஒரு அரசியல் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். "சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்" என்ற சர்வதேச கொள்கைகளை பாதுகாப்பதற்கு சோசலிசம் மற்றும் தொழிலாளர் அதிகாரத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச, புரட்சிகர அணிதிரட்டல் தேவைப்படுகிறது.

Loading