காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலை ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விமர்சிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இஸ்ரேலிய ஆயுதப்படைகள் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இரத்தக்களரியான தாக்குதல் நடத்துவது குறித்து மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் தெஹ்ரான் நகரங்கள் விமர்சனங்களை தூண்டியுள்ளன. எவ்வாறாயினும், இந்த அறிக்கைகள், பாதுகாப்பற்ற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டு திகிலடைந்துள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உணர்வுகளை பிரிக்கும் வர்க்க இடைவெளியையும், மற்றும் யுரேசியா முழுவதிலுமான முதலாளித்துவ ஆட்சிகளின் வாயடைத்துப் போன நிலையையும் மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள கிரெம்ளின், இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையே நடுநிலையாக இருப்பது போன்ற பாசாங்குத்தன போக்கைக் காட்டி, ஒரு சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய கிழக்கு நான்குமுனை அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மே 20, 2021, வியாழக்கிழமை, மேற்குக் கரை நகரமான ரமல்லாவில், காசாவிலுள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் போராட்டத்தின் போது குழந்தைகள் பாலஸ்தீனிய கொடிகளை அசைக்கின்றனர் (AP Photo/Nasser Nasser)

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், “இரு தரப்பினரும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குவதை நாங்கள் கண்டிக்கிறோம். …நடந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு சர்வதேச சமூகம் அலட்சியமாக இருக்காது என்றே நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், பாலஸ்தீனிய விவகாரத்திற்கு தீர்வு காண நேரடியாக பங்களிக்க வேண்டிய சர்வதேச மத்தியஸ்தர்களின் நான்குமுனை அமைப்பு இங்கு உள்ளது” என்று கூறினார்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இஸ்ரேலிய தாக்குதல் ஒரு பரந்த போரை தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளார். மாஸ்கோ “அதிகரித்து வரும் மனித உயிரிழப்புக்கள் குறித்து மிகுந்த கவலையடைகிறது” என்று கூறி, “பொதுவாக, இந்த பிராந்தியம் மிகவும் பலவீனமான பாதுகாப்பு அமைப்பைக் கொண்டது, பெரியளவில் பரஸ்பர நம்பிக்கையில்லாதது, மற்றும் உறுதிப்பாட்டிற்கு பங்களிக்காத பகுதி என்பதால் பிராந்திய மோதல்களுக்கு நீண்டகால சாத்தியமுள்ளது” என்று அவர் இடக்கரடக்கலாக அறிவித்தார்.

காசாவில் மேலும் பொதுமக்கள் உயிரிழப்பது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூற புதன்கிழமை இஸ்ரேலிய தூதர்களுக்கு அழைப்புவிடுத்த ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பை இஸ்ரேல் நிராகரித்தது. இதற்கு, காசா மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர கால வரையறை எதையும் தான் வகுக்கவில்லை என்று கூறி இஸ்ரேல் பதிலிறுத்தது.

பெய்ஜிங்கை பொறுத்தவரை, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனிடம் அது முறையிட்டது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாலஸ்தீனம் பற்றிய ஐ.நா. பாதுகாப்பு குழு விவாதத்தில் வாஷிங்டன் “அதன் பொறுப்புக்களை ஏற்று, சரியான நிலைப்பாட்டை எடுக்க” கோரினார். மேலும், இராணுவ விரிவாக்கத்திற்கு எதிராகவும் யி எச்சரித்து, “சூழ்நிலை மேலும் மோசமடைவதை தடுக்கவும், இப்பிராந்தியம் மீண்டும் கொந்தளிப்பிற்குள்ளாகாமல் தடுக்கவும்” அழைப்பு விடுத்தார்.

முக்கியமாக, இஸ்ரேல்-பாலஸ்தீனிய பேச்சுவார்த்தைகளை சீனா நடத்த முடியும் என்பதையும் யி சுட்டிக்காட்டி, இவ்வாறு தெரிவித்தார்: “பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் இருந்து சமாதான தூதுவர்கள் சீனாவில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனா வலியுறுத்துகிறது, மேலும் சீனாவில் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் இருந்து பேச்சுவார்த்தையாளர்களையும் வரவேற்கிறது.”

எவ்வாறாயினும், படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலைக் கேட்பதை யி தவிர்த்து, இஸ்ரேல் “காசா மீதான முற்றுகையையும் ஆக்கிரமிப்பையும் விரைந்து முடிவுக்குக் கொண்டுவரவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய பிராந்தியத்திலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவும், மற்றும் மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைய அனுமதிக்கவும்” மட்டும் கோரினார்.

வாஷிங்டனிடம் பெய்ஜிங் விடுத்த வேண்டுகோள்கள் தோல்வியடைந்தபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அமெரிக்க நிராகரிப்புக்கள் பாதுகாப்புக் குழுவை முடக்கியதாக புகார் கூறினார். மேலும், “அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது மனித உரிமைகள் குறித்த இராஜதந்திரமா என்று கேட்க மக்களுக்கு உதவ முடியாது. அமெரிக்கா முஸ்லிம்களின் மனித உரிமைகளை நிலைநாட்டுவது பற்றி பேசிக் கொண்டிருக்கும் அதேவேளை, பாலஸ்தீனிய மக்களின் மனித உரிமைகள் குறித்து மட்டும் அமெரிக்கா ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

இது, காசா மீதான இஸ்ரேலின் போருக்கான வாஷிங்டனின் ஆதரவுக்குப் பின்னால் உள்ள அதிர்ச்சியூட்டும் பாசாங்குத்தனத்தை குறிக்கும் ஒரு விவேகமான குறிப்பு என்பது அப்பட்டமாக தெரிந்தது, அதேவேளை மேற்கு சீனாவில் முஸ்லிம் வீகர்களின் “இனப்படுகொலையை” பெய்ஜிங் நடத்தியதாக குற்றம்சாட்டி அதிகரித்தளவில் பொய் பிரச்சாரங்களை அது பரப்புகிறது.

“அமெரிக்காவின் கவனம் பெரும் வல்லரசு போட்டியை நோக்கி முற்றிலும் மாறிவிட்டது,” என்று புகார் கூறி, சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் வாஷிங்டனை விமர்சித்தது, குறிப்பாக, மத்திய கிழக்கு விவகாரங்களில் அது ஈடுபடவில்லை என்பதற்காக கூறியது: “சீனா மற்றும் ரஷ்யா மீது கவனம் செலுத்துவதற்காக, வாஷிங்டன் மத்திய கிழக்கிலிருந்து பின்வாங்க ஆர்வமாக உள்ளது என்பதுடன், பாலஸ்தீனம்-இஸ்ரேல் அமைதிக்காக புதிய எரிசக்தி மற்றும் வளங்களில் முதலீடு செய்ய அது விரும்பவில்லை. … ஆனால் நீதியை உயிரோடு புதைத்துவிட முடியாது என்பதை வாஷிங்டன் அறிந்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தது.

உண்மையில், 1989-91 காலகட்டத்தில் சோவியத் மற்றும் சீன ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததற்கு பின்னைய மூன்று தசாப்தங்களில் மத்திய கிழக்கில் நடந்த ஏகாதிப்பத்தியப் போர்கள் ஒரு விடயத்தை நன்கு தெளிவுபடுத்தியுள்ளன. அதாவது “நீதிக்காக” அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திடம் முறையிடுவது அர்த்தமற்றதாகும். சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு வாஷிங்டனுக்கு இருந்த பிரதான இராணுவ எதிர்ப்பை அகற்றியதன் பின்னர், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில், மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவித்த மற்றும் முழு சமூகங்களையும் சிதறடித்த ஆட்சி மாற்றத்திற்கான ஆக்கிரமிப்பு போர்களை அது நடத்தியுள்ளது.

குறிப்பாக, 2009 இல், 2012 இல், 2014 இல் மற்றும் தற்போது 2021 இல் காசாவில் ஒருதலைப்பட்ச இஸ்ரேலிய படுகொலைகளுக்கு அவர்கள் பலமுறை தங்களது உறுதியான ஆதரவை வழங்கியுள்ளனர்.

நாடுகடந்த நிறுவனங்களுக்கான மலிவு உழைப்பு புகலிடமாக சீனாவின் பொருளாதார முன்னேற்றம் நிச்சயமாக இந்த பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை அதிகரித்துள்ளது. சீனா தற்போது அரபு நாடுகளின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது, அதாவது சீனா அவர்களிடமிருந்து 250 மில்லியன் டன்கள் வரை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, அண்ணளவாக 240 பில்லியன் டாலர் அளவிற்கு ஆண்டு வர்த்தக அளவை கொண்டுள்ளது” என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஜெருசலேம் போஸ்ட் சீனா-இஸ்ரேல் வர்த்தக உறவை “பரலோகத்தில் செய்யப்பட்ட ஒரு திருமணம்” என்று அழைத்தது, காரணம் சீனாவின் வர்த்தக மதிப்பு “1992 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 50 மில்லியன் டாலரிலிருந்து 13.1 பில்லியன் டாலராக உச்சமடைந்தமை,” அதனை இஸ்ரேலின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக்கியது. என்றாலும், சீனா சமீபத்தில் ஈரானுடன் 400 பில்லியன் டாலர் மதிப்பிற்கு, 25 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் நிதிய மற்றும் இராணுவ ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருந்தாலும், காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இது துணை நிற்கிறது. ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச எதிர்ப்பைத் திரட்டுவதைச் சார்ந்திராத காசாவை பாதுகாப்பதற்கான எந்தவொரு முன்னோக்கின் திவால்நிலையையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சமூக சமத்துவமின்மை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் அரசியல் ரீதியாக குற்றகரமாக உத்தியோகபூர்வமாக கையாளப்பட்டதற்கு இஸ்ரேலிய, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஆழ்ந்த எதிர்ப்பு நிலவுகிறது என்றாலும், மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் தெஹ்ரான் நகரங்கள் அத்தகைய உணர்வுகளுக்காக முறையிடுவதற்கு திறனற்றும் விரோதமாகவும் உள்ளன.

ரஷ்ய, சீன மற்றும் ஈரானிய ஆட்சிகள் உள்நாட்டிற்குள் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை கண்டு அஞ்சுகின்றன. சீனாவில், 400 க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் கூட்டாக 2 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக செல்வத்தை குவித்துள்ள நிலையிலும் கூட, பெய்ஜிங் ஓய்வூதிய வயதில் ஆழ்ந்த செல்வாக்கற்ற அதிகரிப்புக்கு தயாராகி வருகிறது. தொற்றுநோய்க்கு மத்தியில், “பசி, வறுமை மற்றும் வேலையின்மையை எதிர்கொள்ளும் மக்கள் வீதிகளுக்கு வரக்கூடும்” என்று தனது ஆட்சி அச்சமடைந்துள்ளதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரானில் நடக்கும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் அதிகரித்து வரும் கோபத்திற்கும் மத்தியில், காசா குறித்த மிக முக்கியமான அறிக்கைகளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் ஈரானிய ஆட்சி இருப்பதாகத் தெரிகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் முக்கியமான சுகாதாரப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கொலைகார தடைகள் மற்றும் நடான்ஸில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் வசதி மீது இஸ்ரேல் குற்றவியல் தாக்குதல் நடத்தியது உட்பட, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆத்திரமூட்டல்களைத் தொடர்ந்து காசா மீதான போர் நடக்கிறது.

காசாவில் உள்ள கட்டாரிய ரெட் கிரசண்ட் கட்டிடத்தை இஸ்ரேலியர்கள் தாக்கியதையடுத்து, கட்டாரி வெளியுறவு அமைச்சகம் டெல் அவிவை திங்களன்று கண்டனம் செய்தது. மேலும், துருக்கிய அரசு நடத்தும் அனடோலு செய்தி முகமை, “கடந்த வாரம் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்கள் பற்றி செய்திகள் சேகரித்த அதன் இரண்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்ததை” அடுத்து, முகமது தஹ்லா என்ற அதன் புகைப்பட ஊடகவியலாளரும் புதன்கிழமை காசாவில் நடந்த இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அறிவித்தது. மேலும், காசாவில் உள்ள AP மற்றும் அல் ஜசீரா ஊடக மையங்கள் மீதும் இஸ்ரேல் குண்டு வீசித் தாக்கியுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசுகையில் “பாலஸ்தீனம் இஸ்லாமிய சமூகத்தின் மிக முக்கியமான பொதுவான பிரச்சினை” என்று கூறினார். IRNA செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, அவர் “பாலஸ்தீனத்திற்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்வதும், ஒடுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற மக்களைக் கொல்வதை உடனடியாக நிறுத்துவதும் மிக முக்கியமானதாகும்” என்றும், “சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organization of Islamic Cooperation-OIC) போன்ற சர்வதேச அமைப்புக்களின் திறனைப் பயன்படுத்த இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் கூறினார்.

இஸ்ரேலிய போருக்கு ஆதரவைக் காண்பிக்க அரசாங்க கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய கொடிகள் ஏற்றப்பட்டதை அடுத்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரீஃப் திட்டமிட்டிருந்த வியன்னா பயணத்தை இரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் இவ்வாறு ட்வீட் செய்தார்: “அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது அமெரிக்கா தயாரித்த ஆயுதங்கள் மழை பொழியும் போது, அதிக துல்லியத்துடன் அதிக குழந்தைகளை கொல்ல அமெரிக்கா இஸ்ரேலுக்கு மற்றொரு 735 மில்லியன் டாலர் மதிப்பிலான ‘துல்லியமான’ ஏவுகணைகளை வழங்குகிறது”.

இஸ்ரேலுடன் “இயல்பான” உறவைப் பேணும் பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பிராந்திய ஆட்சிகளையும் ஸரீஃப் விமர்சித்து, இவ்வாறு கூறினார்: “பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்படுவது இன்று இயல்பாக்கல் என்று கூறப்படுவதை பின்பற்றுகிறது.”

எவ்வாறாயினும், இந்த “இயல்பாக்கலின்” முக்கிய வடிவமைப்பாளரும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் முன்னணி கூட்டாளியுமான சவுதி அரேபியாவுடனான உறவுகளை மீட்டெடுக்க பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரான் ஈடுபட்டுள்ளது. இது, ஈரானிய கொள்கையின் இழிந்த தன்மையையும், மற்றும் காசா மீதான தாக்குதல்களைத் தடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச, போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கான அவசர அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading