மொரோக்கோவின் எல்லையைத் தாண்டி தப்பித்து வரும் அகதிகளுக்கு எதிராக ஸ்பெயின் இராணுவத்தை நிறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன், மொரோக்கோ எல்லையைத் தாண்டி தப்பியோடி வரும் நிர்கதியான புலம்பெயர்ந்தோரை சுற்றி வளைக்க எல்லையில் இராணுவம், சிறப்புப் படைகள் மற்றும் கலக எதிர்ப்பு காவல்படை ஆகியவற்றை ஸ்பெயின் நிலைநிறுத்தி, ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றியது. இது, புதிய எல்லை தாண்டிய மக்கள் உள்நுழைவைத் தடுக்க பெரும் வன்முறையை பயன்படுத்தவும், மொரோக்கோவுடனான பதட்டங்களைத் தூண்டவும் அச்சுறுத்துகிறது.

இந்த கொடூரமான காட்சிகள் முதலாளித்துவ அமைப்பின் காட்டுமிராண்டித்தனமான தன்மைக்கு சாட்சியமளிக்கின்றன. மத்தியதரைக் கடலின் ஒரு பக்கம், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் காசாவின் பாதுகாப்பற்ற மக்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுகிறது, மறுபக்கம், ஐரோப்பிய ஒன்றியம் அதன் புலம்பெயர்வு எதிர்ப்பு கொள்கையின் மிருகத்தனத்தை காட்டி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தின் முழு பலமும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அணிதிரட்டப்படுவதால், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் மத்தியதரைக் கடலில் மூழ்கிப் போக விடப்படுகிறார்கள்.

திங்கட்கிழமை அதிகாலை தொடங்கி, நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர், பெரும்பாலும் இளைஞர்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள், மேலும் குழந்தைகளுடன் முழு குடும்பங்களும் கூட, ஆபிரிக்காவின் மொரோக்கோவிற்கு சற்று வடக்கேயுள்ள சியூட்டாவின் ஸ்பானிய எல்லையை கடக்கத் தொடங்கினர். பெரும்பாலானவர்கள் ஆறு மீட்டர் வேலியைச் சுற்றி கடலில் நீந்தி அல்லது சிறு அலைகளுக்குள் நடந்து கடக்க முயன்றனர். பலர் ஊதப்பட்ட இரப்பர் வளையங்கள் மற்றும் சிறு இரப்பர் படகுகளை (dinghies) பயன்படுத்தினர். நேற்று மாலை வாக்கில், இவர்களின் எண்ணிக்கை 1,500 சிறியவர்கள் உட்பட 8,000 ஆக அதிகரித்தது.

மே 18, 2021 ஆம் தேதி சியூட்டாவின் ஸ்பானிய எல்லையில் மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் எல்லையின் காட்சி (AP Photo/Mosa’ab Elshamy)

அவர்களில் பலருக்கு செயற்கையாக உடல் வெப்பநிலையை குறைக்கும் (hypothermia) சிகிச்சையளிக்க வேண்டியிருந்தது, மேலும் குறைந்தது ஒருவராவது நீரில் மூழ்கிவிட்டார்.

அவர்களில் பெரும்பாலானவர்கள், கோவிட்-19 தொற்றுநோய் விளைவித்த கடும் பொருளாதார நெருக்கடி வறுமையும் வேலையின்மையும் மிகப் பெரியளவில் அதிகரிப்பதற்கு வழிவகுத்ததன் எதிரொலியாக மொரோக்கோவில் இருந்து வெளியேறுபவர்கள் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. முக்கால்வாசி குடும்பங்கள் கடந்த ஆண்டில் தங்களது முக்கிய வருமான ஆதாரத்தை இழந்துள்ளன.

2018 நடுப்பகுதியில் ஆட்சிக்கு வந்தபோது புலம்பெயர்ந்தோர் மீது அதிக “மனிதாபிமானம் காட்டும்” கொள்கையைக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் பிரபல்யப்படுத்தப்பட்ட PSOE – பொடேமோஸ் அரசாங்கம், இப்போது பாதுகாப்பற்ற இந்த மக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கண்டித்து, வன்முறை கொண்டு பதிலிறுத்துள்ளது.

சியூட்டாவில் வசிக்கும் ஸ்பானிய குடியிருப்பாளர்களை குறிப்பிட்டு, பிரதமர் பெட்ரோ சான்செஸ், அவரது அரசாங்கம் “எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்கையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஒரு பகுதியாக அவர்களின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கும் மிகுந்த உறுதியுடன்” பதிலளிக்கும் என்று கூறினார். துணை பிரதமர் கார்மென் கால்வோ இதை ஸ்பெயினின் எல்லைகளுக்கு எதிரானதொரு “ஆக்கிரமிப்பு” என அழைத்ததுடன், இது நடக்க அனுமதித்ததற்கு மொரோக்கோவை குற்றம்சாட்டினார்.

நேற்று, கவச வாகனங்களில் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் கடற்கரைகளில் நிலைநிறுத்தப்பட்டனர். சியூட்டாவில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள 1,100 பொலிஸூக்கு ஆதரவாக 200 க்கும் மேற்பட்ட கலக எதிர்ப்பு பொலிசார் அணிதிரட்டப்பட்டனர். படையினரும் காவல்துறையினரும் கடற்கரையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற தடியடி நடத்தியதுடன், ஏனையோர் கடந்து வருவதை தடுக்க புகை குண்டுகளை வீசினர். வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதில் சிறப்பு வாய்ந்த, தொழிலாள வர்க்க எதிர்ப்பு பிரிவான Guardia Civil’s GRS உம் கூட அங்கு நிலைநிறுத்தப்பட்டது.

சர்வதேச சட்டத்தை மீறி, வீதிகளில் திரிந்த வயதுவந்த புலம்பெயர்ந்தவர்கள் பெனோலியல் விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்டனர், மேலும் 24 மணி நேரத்தில் 4,000 க்கும் மேலானோர் மொரோக்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

எல் பாய்ஸ் இன் கூற்றுப்படி, இந்த நாடுகடத்தல்கள் எந்தவொரு சட்ட முறையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சியூட்டா வழக்குரைஞர்கள் சங்கம் அதன் வழக்குரைஞர்கள் திரும்பி வருபவர்களுக்கு சட்ட தேவைக்கேற்ப சட்டபூர்வமாக உதவுவதற்கு கூட கேட்கப்படவில்லை என்பதையும், புலம்பெயர்ந்தோரின் திடீர் வருகை நிகழும் போதெல்லாம் இது அடிக்கடி நிகழ்வதையும் உறுதிப்படுத்தியது.

ஸ்பெயினின் இந்த இரக்கமற்ற நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விரைந்து ஒப்புதலளித்தது. ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் மார்கரிடிஸ் சினாஸ் (Margaritis Schinas), இந்த பகுதியின் எல்லை ஐரோப்பிய எல்லையின் ஒரு பகுதி என்பதால், “ஸ்பெயினுடன் முழு ஒற்றுமையை” வெளிப்படுத்தி, “நமது எல்லைகளை வலுவாக பாதுகாப்போம்” என்று அழைப்பு விடுத்தார்.

அரசாங்கத்தில் பொடேமோஸ் கூட்டணியில் ஒரு பகுதியான ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி கூட இதை ஆதரித்ததுடன், இவ்வாறு இழிவாக கூறியது: “ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பணயம் வைக்க தயங்காத மொரோக்கோவின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஸ்பெயின் தனது இறையாண்மையை பாதுகாக்க வேண்டும், மற்றும் சர்வதேச சட்டத்திற்கு உடன்பட வேண்டும்.”

மொரோக்கோவிலிருந்து மேற்கு சஹாராவை விடுவிக்கக் கோரும் சஹ்ராவி சுதந்திர இயக்கமான, மொரோக்கோவிற்கும் பொலிசாரியோவிற்கும் இடையிலான மேற்கு சஹாரா போர் தொடர்பாக மாட்ரிட் மற்றும் ரபாத் இடையே அதிகரித்த பதட்டங்களை இது குறிக்கிறது. இந்த மாதம் தொடக்கத்தில், அல்ஜீரியாவால் ஆதரிக்கப்படும் முதலாளித்துவ தேசியவாத பொலிசாரியோ முன்னணி அமைப்பின் தலைவரான பிரஹிம் காலிக்கு இரகசியமாக அடைக்கலம் வழங்க மாட்ரிட் முடிவு செய்தது. ஆனால், காலி கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வடக்கு ஸ்பெயினிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த செய்தி கசிந்த பின்னர், மொரோக்கோ வெளியுறவு அமைச்சர் நாசர் புரிட்டா, ஸ்பெயினில் காலி இருப்பது பற்றி ரபாத்துக்கு தகவல் தெரிவிக்கத் தவறியதால் “மொரோக்கோவுடனான உறவுகளை தியாகம் செய்ய” மாட்ரிட் திட்டமிட்டுள்ளதா என்று கேட்டார். “காலி இருப்பது பற்றி மொரோக்கோவிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஸ்பெயின் ஏன் கருதவில்லை? அவர்கள் மொரோக்கோவின் எதிரிகளுடன் பழகுவார்களா? இது எங்களது உறவுகள் குறித்த ஒரு பரிசோதனையே,” என்றும் புரிட்டா கூறினார். ஸ்பெயினுக்குள் புலம்பெயர்ந்தவர்கள் நுழைவதை அனுமதித்த ரபாத்தின் முடிவு இந்த இராஜதந்திர பதட்டங்களுக்கு அதன் பிரதிபலிப்பாகும் என்று ஸ்பானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

மொரோக்கோ முடியாட்சி வேண்டுமென்றே அதன் எல்லைகளைத் திறந்துவிட்டதாக கூறப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்களின் உண்மை என்னவாக இருந்தாலும், இங்குள்ள உண்மையான குற்றவாளிகள் ஐரோப்பிய ஒன்றியமும், PSOE-பொடேமோஸ் அரசாங்கமும் தான். ஏகாதிபத்திய போர்களால் பாதிக்கப்பட்டவர்களும், நாடுகடந்த நிறுவனங்களால் கொடூரமாக சுரண்டப்படும் நாடுகளில் வறுமை மற்றும் பசிக் கொடுமையிலிருந்து தப்பியோடி வருபவர்களும், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புப் படைகள் மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பான ஃபிரான்டெக்ஸ் ஆகியோரால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர், மேலும் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கடலில் மூழ்கிப் போக விடப்படுகின்றனர். மேலும், கிரீஸிலும் ஸ்பெயினின் கேனரி தீவுகளிலும் உள்ள வதை முகாம்களில் ஆயிரத்துக்கும் மேலானோர் சிறையிலிடப்பட்டுள்ளனர்.

சியூட்டாவுக்கு வரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஸ்பெயினின் பிராந்திய ஒருமைப்பாட்டை அவர் பாதுகாக்க வேண்டும் என்று சான்செஸ் அறிவித்திருப்பது அவர்களுக்கு எதிராக கொடிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான வெளிப்படையான மாறுபட்ட அச்சுறுத்தலாகும். இந்த விடயத்தில், சான்செஸூக்கு ஒரு ஊழல் ஊடகம் உதவுகிறது, இது புலம்பெயர்வோரை “நாடோடிகள்” என்று கண்டிப்பதுடன், புலம்பெயர்வோர் வருகையை “படையெடுப்பு” என்று முத்திரை குத்துகிறது.

இத்தகைய அச்சுறுத்தல்களின் தன்மையைப் புரிந்து கொள்ள, ஒருவர் 2014 ஆம் ஆண்டின் இழிவான தாராஜல் படுகொலையை (Tarajal Massacre) நினைவுகூர வேண்டும், அப்போது சியூட்டாவிற்குள் நுழைய நீந்த முயன்ற புலம்பெயர்ந்தோர் மீது பெரும் ஆயுதமேந்திய பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளையும் இரப்பர் தோட்டாக்களையும் வீசித் தாக்கினர். இதில் 15 பேர் இறந்தனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணீர்ப்புகையால் மூச்சுத் திணறி நீரில் மூழ்கிப் போயினர். பின்னர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.

இந்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறை ஸ்பெயினில், ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும். உலக முதலாளித்துவம், தொற்றுநோய் மற்றும் “வைரஸூடன் வாழ பழக வேண்டும்” என்று அரசாங்கங்கள் அழைப்பு விடுத்தமை மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது குறித்து பெருகிவரும் தொழிலாள வர்க்க கோபம் ஆகியவற்றின் காரணமாக 1930 களில் இருந்து அதன் ஆழ்ந்த சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. பாதுகாப்பற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஆயுதப்படைகளை விரைந்து திருப்பிவிடக்கூடிய ஒரு அரசாங்கம் உள்நாட்டிற்குள்ளும் அவ்வாறு செய்யத் தயாராகி வருகிறது.

தங்கள் சொந்த நாடுகளிலும் இதையொத்த நடவடிக்கைகளை எடுக்கக் கோர PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மிருகத்தனமான கொள்கையை ஐரோப்பாவின் தீவிர வலதுசாரி விரைந்து பிடித்துக் கொண்டது. இத்தாலிய தீவிர வலதுசாரி லெகா கட்சியின் தலைவர் மத்தேயோ சால்வீனி இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்: “ஸ்பெயின், ஒரு இடதுசாரி அரசாங்கத்துடன், சட்டவிரோதமான மக்கள் நுழைவைத் தடுக்க இராணுவத்தை அதன் எல்லையில் நிறுத்துகிறது. விமினாலேவின் [உள்துறை அமைச்சகத்தின்] தகவலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.” புலம்பெயர்வோருக்கு எதிராக இத்தாலியும் இராணுவத்தை நிறுத்த வேண்டும் என்று சால்வீனி பரிந்துரைத்தார்.

பிரான்சில், தீவிர வலதுசாரி தேசிய பேரணியின் தலைவர் மரின் லூ பென், “எங்களது தலைவர்களின் மீளுறுதியளிக்கும் வார்த்தைகளுக்கு மாறாக, மக்கள் நுழையும் இடங்களில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சல்லடையாக உள்ளது. இதை நிறுத்த வேண்டும்” என்று கூறி, சியூட்டாவிற்குள் பெருமளவில் புலம்பெயர்ந்தோர் நுழைவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை குற்றம்சாட்டினார். 23 ஓய்வுபெற்ற ஜெனரல்கள் கையெழுத்திட்ட பாசிசக் கடிதங்களுக்கு இவர் ஆதரவளித்து, மற்றும் பிரான்சில் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் முஸ்லீம்களையும் பிரான்சின் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளையும் கண்டித்து, அதில் தலையிட்டு ஆயிரக்கணக்கானவர்களை கொல்வதற்கு உறுதிபூண்ட சில வாரங்களில் இது நடக்கிறது.

ஸ்பெயினில், தீவிர வலதுசாரி வோக்ஸ் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல், “இந்த நேரத்தில் படைபலம் கொண்டு ஒடுக்குவது மட்டுமே நடக்க வேண்டும். நீங்கள் இராணுவத்தை அனுப்ப வேண்டும், அது வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல: மாறாக தேவையானதைச் செய்ய” என்று கூறி வன்முறை போதுமானதாக இல்லை என்று சான்செஸை esRadio வில் தாக்கி பேசினார். மேலும், மொரோக்கோவை குறிப்பிட்டு, புலம்பெயர்ந்தோர் “அகதிகள் அல்ல, அவர்கள் தங்கள் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சிப்பாய்கள்” என்று அபாஸ்கல் கூறினார்.

இத்தகைய கருத்துக்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் ஸ்தாபகத்தின் பிற்போக்குத்தன தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உண்மையில், 2014 இல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் ஒரு “தீவிர ஜனநாயக” கட்சியாக தன்னை காட்டிக்கொண்ட, குட்டி முதலாளித்துவ போலி இடது பொடேமோஸ் கட்சி, தீவிர வலதுசாரிகளால் வகுக்கப்பட்ட புலம்பெயர்வோர் எதிர்ப்பு கொள்கையை செயல்படுத்த PSOE உடன் இணைந்து செயல்படுகிறது.

சரியாக 85 ஆண்டுகளுக்கு முன்னர், 1936 ஆம் ஆண்டில், மொரோக்கோவில் இரத்தக்களரியான வன்முறைக்கு பயன்படுத்த பயிற்சி பெற்ற ஸ்பானிய இராணுவப் பிரிவுகள், ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் கீழ் ஸ்பெயினில் நான்கு தசாப்த கால பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய ஒரு சதி மற்றும் ஒரு உள்நாட்டுப் போரைத் தொடங்கின. வோக்ஸூக்கு நெருக்கமான ஸ்பானிய அதிகாரிகள் இன்று ஒரு சதித்திட்டத்திற்கு அச்சுறுத்தும், மற்றும் கொரோனா வைரஸூக்கு எதிராக வீட்டில் அடைந்திருக்கக் கோரும் வேலைநிறுத்தங்களை கண்டிக்கும் நிலையில், அவசர எச்சரிக்கைகள் அவசியம். புலம்பெயர்ந்தோர் மீதான இந்த மிருகத்தனமான தாக்குதலை எதிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் இந்த வன்முறை தவிர்க்க முடியாமல் வீட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக திரும்பியதாக வரலாறு காட்டுகிறது.

Loading