50 க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கிப்போன நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியதரைக் கடல் குடியேற்றக் கொள்கையை ஐ.நா. கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற 50 க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கிப் போயினர். நிறைய பேர் மூழ்கிப் போனது இந்த ஆண்டு நிகழ்ந்த இதுபோன்ற சமீபத்திய பேரழிவாகும், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புலம்பெயர்வு-எதிர்ப்பு கொள்கைகளின் நேரடி விளைவாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கொள்கையின் சட்டவிரோதத்திற்கு இது மற்றொரு நிரூபணமாகும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் நேற்று ஒரு அறிக்கையை வழங்கியது, இது, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான, மேலும் முன்னைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான முற்றிலும் தவிர்க்கக்கூடிய மரணங்கள் ஏற்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை கூட்டுப் பொறுப்பாளி என முத்திரை குத்துகிறது.

ஸ்பானிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஓபன் ஆர்ம்ஸின் உதவிப் பணியாளர்கள் அவர்களை அணுகும்போது, பல்வேறு ஆபிரிக்க தேசங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் ஒரு நெரிசலான இரப்பர் படகில் உதவிக்காக காத்திருந்தனர், அவர்களில் மூன்று மாத கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்ணும் உள்ளார். (AP Photo/Bruno Thevenin)

சமீபத்திய பேரழிவு மே 16, திங்களன்று நடந்தது. லிபியாவில் இருந்து புறப்பட்டபோது 90 பேரை ஏற்றிச் சென்றதாகக் கூறப்பட்ட ஒரு படகு மறுநாள் துனிசியாவின் தெற்கு கடற்கரையில், ஸ்ஃபாக்ஸ் நகரத்திற்கு அருகில் மூழ்கியது. இந்த பயணிகளில் 33 பேர் மட்டுமே உயிர் தப்பினர், அருகிலுள்ள எண்ணெய் தளத்தில் இருந்த தொழிலாளர்கள் தான் இவர்களை காப்பாற்றினர், படகு மூழ்குவதைக் கண்டு அவர்கள் அதிகாரிகளை எச்சரித்தனர். தப்பியவர்கள் அனைவரும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 57 பேர் மீட்கப்படவில்லை.

கடந்த இரண்டு மாதங்களில் துனிசிய கடற்கரையில் இத்தகைய சம்பவம் ஐந்தாவது முறையாக நிகழ்ந்துள்ளது சோகமானதே. மேலும் 17 பேர் மாத தொடக்கத்தில் நீரில் மூழ்கினர். இந்த ஆண்டின் மிகக்கொடிய ஒரே நேரத்தில் நிறைய பேர் நீரில் மூழ்கிப் போன நிகழ்வு ஏப்ரல் 21 அன்று நடந்தது, லிபிய கடற்கரையில் அவர்களது படகு மூழ்கிய பின்னர் 130 க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கியிருப்பார்கள் எனக் கருதப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மத்தியதரைக் கடலில் அதிர்ச்சியூட்டும் வகையில் 685 பேர் நீரில் மூழ்கியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் நிகழ்ந்த இத்தகைய மரணங்களின் எண்ணிக்கை 20,000 க்கும் அதிகமாகும். ஆயினும், இந்த திகைக்க வைக்கும் எண்ணிக்கைகள் கூட கணிசமாக குறைத்து மதிப்பிடப்பட்டவையே, ஏனென்றால் தடயம் எதையும் விடாமல் அழிந்துபோன பலரை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த மரணங்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளின் கொள்கைகளின் திட்டமிட்ட விளைவாகும், அதாவது இக்கொள்கைகள் கண்டத்தில் புகலிடம் கோர அகதிகள் தங்களது சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துவதைத் தடுக்க ஐரோப்பாவிலிருந்து ஆபிரிக்காவை பிரிக்கும் கடலை ஒரு பரந்த மயானமாக மாற்றியுள்ளது.

“மரண புறக்கணிப்பு: மத்திய மத்தியதரைக் கடல் வழியில் புலம்பெயர்வோர்களை தேடுதல் மற்றும் மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணைய அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Human Rights-OHCHR) நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவை அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டன.

கடந்த நான்கு ஆண்டுகளில் படகுக் கடப்புக்களின் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க மற்றும் தொடர்ச்சியான அதிகரிப்பைக் கண்டுள்ளதை இது குறிக்கிறது. 2017 ஆம் ஆண்டில், 119,310 பேர் ஐரோப்பாவை அடைந்தபோது, இறப்பு விகிதம் ஏற்கனவே கிட்டத்தட்ட 2 சதவிகிதமாக இருந்தது, அல்லது பயணிக்க முயற்சித்த ஒவ்வொரு 51 பேரில் ஒருவர் இறந்தார். 2018 ஆம் ஆண்டில், இது 35 பேருக்கு ஒருவர் என இறப்பு விகிதத்தை அதிகரித்தது. மேலும் 2019 இல், இது ஒவ்வொரு 21 பேருக்கு ஒருவர் என மோசமடைந்தது.

“குறைந்தது ஆகஸ்ட் 2017 முதல்,” “ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் மத்திய மத்தியதரைக் கடலில் தங்களது கடல்சார் சொத்துக்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு, சர்வதேச நீர் நிலைகளில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்களை லிபிய எல்லைப் படையினர் வசம் மாற்றின” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

மார்ச் 2020 இல், மத்தியதரைக் கடலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் கடற்படை அமைப்பான SOPHIA வுக்கு “பதிலாக IRINI அமைப்பு நியமிக்கப்பட்டது… என்றாலும், IRINI கப்பல்களுக்கு தேடல் மற்றும் மீட்பு பணிக்கான குறிப்பிட்ட ஆணை எதுவும் வழங்கப்படவில்லை,” மேலும் இதன், “மிகுந்த கிழக்கு நோக்கிய செயல்பாட்டு பகுதி, ஏராளமான புலம்பெயர்வோர் கடக்க முயலும் மத்திய மத்தியதரைக் கடல் பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய கடல்சார் சொத்துக்களை விட்டுவைப்பதையும் தவிர்க்கிறது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐரோப்பிய ஒன்றியம் மத்தியதரைக் கடலில் அதன் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், தன்னார்வ அமைப்புக்களின் மீட்புக் கப்பல்கள் புலம்பெயர்ந்தோரை மீட்பதைத் தடுக்க அவர்களது கடல் பயண உரிமைகள் கூட அடிப்படை ஆதாரங்கள் எதுவுமின்றி பறிக்கப்பட்டுள்ளன, மேலும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் கீழ் கப்பல் பயணிப்பதைக் காட்ட கொடிகள் பறக்கவிடப்படுவதும் மறுக்கப்பட்டுள்ளது.

“மத்திய மத்தியதரைக் கடலில் இயங்கும் மனிதாபிமான அமைப்பான SAR இன் கப்பல்களும் விமானங்களும் கூட துயரத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தோரை கண்காணிப்பது, தேடுவது, உதவுவது மற்றும் மீட்பது தொடர்புபட்ட சேவைகளைச் சேய்ய தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகின்றன,” என்றும் அறிக்கை கூறுகிறது.

“அறிக்கையிடல் காலத்தின் பல சமயங்களில், மத்திய மத்தியதரைக் கடலில் எந்தவொரு மனிதாபிமான SAR தொண்டு நிறுவனங்களும் இல்லாமல் போகும் நிலையை ஏற்படுத்தியமை, துயரகரமான மற்றும் தடுக்கக்கூடிய உயிரிழப்புக்கு வழிவகுத்தது.” 2018 ஆம் ஆண்டிலிருந்து மட்டும், “ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளிலுள்ள தேசிய அதிகாரிகள் கப்பல் பணியாளர்கள் குழு உறுப்பினர்கள் அல்லது கப்பல்களுக்கு எதிராக, கப்பல்களை பறிமுதல் செய்தல் அல்லது கைப்பற்றுதல் உள்ளிட்ட, சுமார் 50 நிர்வாக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.”

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில், அகதிகளை பிடித்து லிபியாவுக்கு திருப்பியனுப்ப ஏதுவாக அகதிகள் படகுகள் குறித்து அது ஒப்பந்தம் செய்துள்ள லிபிய கடலோர காவல்படைக்கு நிதியும் நேரடி உளவுத்துறை உதவியும் வழங்குகிறது.

“லிபியாவில் ஒரு நேரத்தில், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத கொலைகள், அடிமைப்படுதல் மற்றும் கட்டாய உழைப்பு, சித்திரவதை மற்றும் தவறாக நடத்தப்படுதல், பாலின அடிப்படையிலான வன்முறை, தன்னிச்சையான தடுப்புக்காவல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா நடவடிக்கையாளர்களின் துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர், இதை முன்னைய பொது அறிக்கைகள் மற்றும் OHCHR இன் அறிக்கை உட்பட, ஏராளமான ஆதாரங்களும் அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன.”

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிரோத மற்றும் கொலைகார அகதிகள் கொள்கை பற்றி ஆவணப்படுத்திய சமீபத்திய அறிக்கையாக இது மட்டுமே உள்ளது. இதுபோன்ற முன்னைய அனைத்து அறிக்கைகளையும் போல, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களால் இதுவும் புறக்கணிக்கப்படும், மேலும் விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கும் அனைத்து சர்வதேச ஊடகங்களிலும் கூட இது பற்றி சுருக்கமாகவே குறிப்பிடப்படும்.

இந்த வாரம் தான், இதே அரசாங்கங்களும் செய்தி நிறுவனங்களும் பெலாரூஸிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த தார்மீக சீற்றத்தை பற்றிக் கொண்டன, இது ஒரு எதிர்க்கட்சி ஊடகவியலாளரை ஏற்றிச் சென்ற RyanAir விமானத்தை கட்டாயப்படுத்தி அவரைக் கடத்தியது. இதனால், ஐரோப்பிய சக்திகள் பெலாரூஸூக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளன, அந்நாட்டில் முதலீடு செய்வதை தடுத்துள்ளன, மேலும் பெலாரூஸின் நட்பு நாடான ரஷ்யாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் தொடர்ச்சியான இராணுவவாத அச்சுறுத்தல்களை விடுத்துள்ளன.

உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்ட படி, இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் “சட்ட விதியையும்,” பாதுகாக்க எதையும் செய்யவில்லை, மாறாக முக்கிய ஏகாதிபத்திய ஐரோப்பிய சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களுக்காக செயல்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான அகதிகள் ரஷ்யா அல்லது சீனாவின் கடற்கரையில் மூழ்கினால் என்ன நடக்கும் என்று ஒருவர் கேட்க வேண்டும், அதாவது அவர்களது கொள்கைகளின் திட்டமிட்ட விளைவுகள் பற்றிய ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களுடன் கேட்க வேண்டும். அகதிகள் நீரில் மூழ்கி அழிந்து போகும் செய்திகள் முதல் பக்க செய்திகளாக அங்கு வெளிவர வேண்டும். மாறாக, மத்தியதரைக் கடலில் அகதிகள் நீரில் மூழ்கிப் போகும் நிகழ்வுகளை ஐரோப்பிய ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் சம்பவங்களாகவே கருதாதது போல இந்நாடுகளும் நடந்து கொள்ளுமா.

ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வு-எதிர்ப்புக் கொள்கைகள், கண்டம் முழுவதும் நிலவும் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமையின் மிகவுயர்ந்த மட்டங்களால் உருவாகியுள்ள சமூக பதட்டங்களை திசைதிருப்ப நோக்கம் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் தீவிர வலதுசாரி அரசியலை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்தும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், பாதுகாப்பான வழியை வழங்குவது உட்பட, முழு குடியுரிமை உரிமைகளுடன், மக்கள் தாங்களே தேர்ந்தெடுக்கும் எந்த நாட்டிலும் வாழ்வதற்கும் வேலை செய்வதற்குமான அனைத்து மக்கள் உரிமைகளையும் பாதுகாப்பது ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு அடிப்படை பணியாகும்.

Loading