வெளியுறவுத்துறை சோசலிஸ்டுகள்: பிரேசிலில் ஜாகோபின் மற்றும் DSA இன் வஞ்சகமாக நடவடிக்கைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது புரட்சிகர மரபின் தற்போதைய பிரதிநிதிகளான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளுக்கு எதிரான DSA தலைவர்களின் நவ-ஸ்ராலினிச தாக்குதல்ளுக்கு பதிலாக உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சிக்கு (DSA) பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியது.

ட்ரொட்ஸ்கி, ரமோன் மெர்காடரால் படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடும் குறிப்புகள், அறிக்கைகள் மற்றும் ஸ்ராலினின் பயங்கரத்தின் கீழ் புரட்சியாளர்களை பாரிய கொலை செய்வதை நியாயப்படுத்த செய்யப்பட்ட ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு அவதூறுகளை மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவற்றுடன், இந்த பிரச்சாரம் ஜனநாயகக் கட்சியுடன் விரிவான தொடர்புகளைக் கொண்ட DSA தலைமையின் முக்கிய நபர்களால் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பதை WSWS வெளிப்படுத்திக்காட்டியது.

ட்ரொட்ஸ்கிசத்தை அதன் DSA முகவர்கள் மூலம் தாக்குவதன் மூலம், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற பாதுகாவலரான ஜனநாயகக் கட்சி, அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு எதிர்வினையாற்றுகிறது. வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியின் ஒரு பகுதியாக, இந்த இயக்கம் பிற்போக்குத்தனமான தொழிற்சங்க அமைப்புகளுடனும் மற்றும் முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையுடனும் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியடையும் இயக்கம் WSWS இல் நனவான வெளிப்பாட்டைக் காண்கிறது என்பதை ஆளும் வர்க்கம் அங்கீகரிக்கிறது. WSWS போர்க்குணமிக்க தொழிலாளர்களிடையேயும் DSA இன் மத்தியிலும் மற்றும் சோசலிச சிந்தனைகொண்ட இளம் தலைமுறையினர் மத்தியிலும் வளர்ந்து வரும் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு தொழிலாள வர்க்கம் DSA போன்ற அமைப்புகளால் ஆற்றிய மோசமான அரசியல் பங்கை கற்றுக் கொள்ள வேண்டும். இது அரசியல் வசதிமிக்க நடுத்தர வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும், இதே வர்க்கத் தன்மையையும் போலி-இடது அரசியலையும் பகிர்ந்து கொள்ளும் அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை தேசிய, இன மற்றும் பாலின அடிப்படையில் பிரித்து அதை முதலாளித்துவத்திற்கும் அதன் நாடுகளுக்கும் அடிபணியச் செய்ய செயல்படுகின்றன

முன்னாள் தொழிலாளர் கட்சி தலைவர் லூலா, ஜாக்கோபின் பிரதிகளை கைகளில் வைத்திருக்கிறார் (Twitter)

இந்த போராட்டம், பிரேசில் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக முக்கியமானதாகும். அங்கு சமீபத்திய தசாப்தங்களில் தொழிலாளர்கள் முதலாளித்துவ ரோசா நிற அரசாங்கங்களின் எழுச்சியின் அனுபவத்தை கண்டுள்ளனர். அவர்களின் ஜனரஞ்சக வார்த்தையாடல்கள் இருந்தபோதிலும், வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஆழமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளை இவை தீர்க்கத் தவறிவிட்டன.

DSA இன் அங்கத்தவரான பாஸ்கர் சங்கராவால் நிறுவப்பட்டு பிரசுரிக்கப்படும் ஜாக்கோபின் பத்திரிகையின் பின்னணியில் உள்ள அரசியல் சக்தியும் இதுவேயாகும். ஊழல் நிறைந்த ரோசா நிற எழுச்சி அரசாங்கங்களின் முற்போக்கான மற்றும் "சோசலிச" பாத்திரங்களைப் பற்றி மாயைகளை விதைக்க ஜாக்கோபின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பிரேசில் மற்றும் இலத்தீன் அமெரிக்காவிற்குள் ஊடுருவ ஜாக்கோபின் முயன்றது. இது 2019 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய மொழியில் பிரேசிலிய பதிப்பையும், ஸ்பானிய மொழியில் இலத்தீன் அமெரிக்க பதிப்பு ஒன்றையும் ஆரம்பித்தது.

இந்த உலகளாவிய நடவடிக்கைகள் ஒரு வஞ்சகமாக தன்மையைக் கொண்டுள்ளன. DSA என்பது ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாகும். ஜனநாயகக் கட்சி வரலாற்று ரீதியாக இலத்தீன் அமெரிக்காவை ஒடுக்கி, கடந்த நூற்றாண்டில் இப்பகுதியில் டஜன் கணக்கான படையெடுப்புகள், சதித்திட்டங்கள் மற்றும் தலையீடுகளை செய்திருந்தது.

DSA ன் வரலாற்று பாரம்பரியம்

DSA இன் சொந்த பாரம்பரியம் இந்த குற்றங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இது 1970 களின் முற்பகுதியில் மைக்கல் ஹாரிங்டனால் நிறுவப்பட்ட ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்புக் குழுவில் (Democratic Socialists Organizing Committee - DSOC) தனது மூலவேர்களை கொண்டுள்ளது. ஹாரிங்டன், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதை கைவிட்டு 1940 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் முறித்துக் கொண்ட மக்ஸ் சாக்ட்மனின் ஒரு கூட்டாளி ஆவார். சாக்ட்மன் பனிப்போர்கால கம்யூனிச எதிர்ப்பை தழுவிக்கொண்டு AFL-CIO இன் அரசியல் ஆலோசகரானார்.

முன்னணி சாக்ட்மன் ஆதரவாளர்களில் டாம் கான் (Tom Kahn) ஒருவராவார். இவர் 1980 களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளை, குறிப்பாக சல்வடோர், குவாத்தமாலா மற்றும் நிக்கரகுவாவுக்கு எதிரான CIA இரத்தக்களரி எதிர்-கிளர்ச்சிப் போர்களுக்கு ஆதரவழித்த, AFL–CIO இன் சர்வதேச விவகாரத் துறையின் (பின்னர் Solidarity Center என்றழைக்கப்பட்டது) இயக்குநரானார்.

மத்திய அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்பு AFL-CIO அதிகாரத்துவத்தின் பங்கு பிரேசிலில் அதன் முந்தைய தலையீட்டின் தொடர்ச்சியாக இருந்தது. CIA இன் ஒரு முன்னணி அமைப்பான சுதந்திர தொழிலாளர் அபிவிருத்திக்கான அமெரிக்க அமைப்பு (American Institute for Free Labor Development - AIFLD) மூலம் இது தொடரப்பட்டது. AIFLD தொலைபேசி மற்றும் தந்தி தொழிற்சங்கம் உட்பட வலதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பயிற்சி அளித்தது மற்றும் நிதியளித்து, 1964 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோவா கவுலார்ட்டை தூக்கியெறிந்து இரண்டு தசாப்த கால சர்வாதிகாரத்தில் இறங்கிய இராணுவ ஆட்சி சதிக்கு ஆதரவளித்தது.

1984 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கொடை (National Endowment for Democracy- NED) அமைப்பின் தலைவராக உள்ள கார்ல் கெர்ஷ்மான் இந்த போக்கிலிருந்து வெளிவருகின்றார். CIA முன்னர் இரகசியமாக நிதியளித்த அமெரிக்க சார்பு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு வெளிப்படையாக நிதி வழங்குவதற்காக NED உருவாக்கப்பட்டது. 1980 களில் நிக்கரகுவா முதல் வெனிசுவேலா வரையிலான பிராந்தியத்தில் வாஷிங்டனின் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் இவ்மைப்பும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியான ஹ்யூகோ சாவேஸுக்கு எதிரான 2002 ஆட்சி சதியின் தலைவர்களுக்கு நிதியளித்தது மற்றும் அமெரிக்க கைப்பாவையான ஜுவான் குவைடோவை இன்றுவரை ஆதரிக்கிறது.

பெருநிறுவன ஆதரவு AFL-CIO அமைப்பின் அடிமைத்தனமான பாதுகாவலரான DSA மற்றும் இலத்தீன் அமெரிக்காவினை நோக்கிய ஜாக்கோபினின் தற்போதைய திருப்பத்தை இந்த வரலாற்று சூழலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு "இடது" முகத்தை காட்டுகையில், அவை பிராந்தியத்தில் முன்னோடியில்லாத வகையில் தோன்றும் அரசியல் நெருக்கடிக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சுருக்கமான பாவனைப்பொருட்களின் உற்பத்தி ஏற்றத்தின் உடைவின் பின்னர், வறுமை, வேலையின்மை ஆகியவற்றின் விரைவான வளர்ச்சி மற்றும் ஏற்கனவே சமூக சமத்துவமின்மையின் மோசமான நிலைமைகள் தீவிரமடைவது ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஸ்தாபகமும் ரோசா நிற எழுச்சி கட்சிகளும் பரவலாக மதிப்பிழந்துள்ளன.

தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பு, குறிப்பாக 2019 முதல் பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஊடாக வெளிப்படுகின்றன. சமூக பேரழிவும் மற்றும் வெகுஜனங்களின் தீவிரமயமாக்கலும் கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமாக அதிகரித்துள்ளன. இது இலத்தீன் அமெரிக்கா முழுவதும் மரணம் மற்றும் அழிவின் தடயங்களை விட்டுச்செல்கிறது.

தங்களை மூடிமறைக்க முற்படும் "இடது" வார்த்தையாடல்களை பொருட்படுத்தாமல், தேசிய முதலாளித்துவங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் அரசியல் பிடியை உறுதியாக உடைப்பதன் மூலம் மட்டுமே இலத்தீன் அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் சமூக கோரிக்கைகளை அடைய முடியும். அவர்கள் தேசிய எல்லைகளை தாண்டி தங்கள் போராட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே அப்பிராந்தியத்திலும் ஏகாதிபத்திய நாடுகளிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களிடம் தங்கள் வேண்டுகோள்களை விடுத்து, ஒரு புரட்சிகர சோசலிச தலைமை மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை பின்பற்ற முடியும். ஜாக்கோபினின் முயற்சிகள் அத்தகைய புரட்சிகர வளர்ச்சியை இல்லாதொழிப்பதை துல்லியமாக நோக்கமாகக் கொண்டுள்ளன.

பிரேசிலில் ஜாக்கோபினின் பிற்போக்கு அரசியல் கூட்டு

2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, ஜாக்கோபினின் பிரேசிலிய பதிப்பு பிரேசிலில் சோசலிசத்தின் உத்தியோகபூர்வ குரலாக தன்னை அறிமுகப்படுத்த முயன்றது. இந்த நோக்கத்துடன், அது பப்லோவாத திருத்தல்வாதத்தின் பிரேசிலிய பிரதிநிதிகளையும் அதன் மொரேனோய்ட் பிரிவினர்களையும் ஒன்றிணைத்து ஸ்ராலினிசம் மற்றும் அடையாள அரசியலுடன் இணைத்துக்கொண்டு அவை தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று பொய்யாக முன்வைக்கின்றன.

DSA இன் சங்கராவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பத்திரிகையின் அரசியல் திட்டத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட நபர், ஏற்கனவே அமெரிக்க ஜாக்கோபினுக்கு எழுதிவரும் சபரினா பெர்னாண்டஸ் ஆவார். பிரேசிலில் ஒரு முக்கிய யூ டியூபராகவும், கல்வியாளராகவும் இருப்பதைத் தவிர, பெர்னாண்டஸ் சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சியின் (PSOL) போக்கான Subverta வின் முன்னணி உறுப்பினராக உள்ளார். Subverta பப்லோவாத அகிலத்துடன் இணைந்திருப்பதுடன் மற்றும் தன்னை ஒரு “சுற்றுச்சூழல் சமூக மற்றும் சுதந்திரமான கூட்டு” (ecosocialist and libertarian collective) என்று வரையறுக்கிறது.

பெர்னாண்டஸின் சர்வதேச தொடர்புகள் கவனிக்கத்தக்கவையாகும். அவர் தனது கல்வி வாழ்க்கையை கனடாவில் தொடங்கினார், அங்கு அவர் தன்னை பிற்போக்குத்தனமான புதிய ஜனநாயகக் கட்சியுடன் (NDP) இணைத்துக்கொண்டார். அவர் தற்போது ரோசா லுக்செம்பேர்க் அறக்கட்டளையின் ஒரு தொலைதூர கற்கைநெறி ஆய்வாளராக உள்ளார். இவ்வமைப்பு ஜேர்மன் அரசு மற்றும் போலி-இடது Die Linke (இடது கட்சி) ஆகியவற்றுடன் இணைந்துள்ளதுடன், இது பிரேசிலின் ஜாக்கோபினுக்கும் நிதியளிக்கிறது.

பிரதான பிரேசிலிய பத்திரிகையான Época (பொதுவாக இடது அரசியலில் ஆர்வம் காட்டாதது) பெர்னாண்டஸின் விரிவான மற்றும் புகழ்ச்சிமிக்க சுயவிவரத்தை வெளியிட்டது. தனது அரசியல் அஸ்திவாரங்களைப் பற்றி பத்திரிகையுடன் பேசிய அவர் இவ்வாறு அறிவித்தார்: “ ‘ஓ, லெனின் இதை எழுதியதால், ட்ரொட்ஸ்கி அதைச் செய்ததால்’ என்று தீவிர இடதுசாரிகள் பொதுவாக கூறி, இன்று நம்மிடம் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பதில்களைக் கொடுக்க முயற்சிக்கின்றனர். அந்த மரபு தற்காலத்திற்கு ஏற்றது அல்ல என்று நான் கூறுகிறேன்”.

இந்த மாதிரியான அடையாள அறிக்கை ஜாக்கோபினின் பிற்போக்கு நோக்கங்களுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாவசிய அம்சத்திலும், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் கட்சியை ஸ்தாபிப்பதற்கான அவர்களின் போராட்டம், குட்டி முதலாளித்துவத்தின் ஆளுமைகளுக்கு காட்டும் விரோதம், மற்றும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான போராட்டம் ஆகியவற்றை நிராகரிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் மட்டுமே இது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் மரபுக்கு உரிமை கோர இந்த பத்திரிகை விரும்புகிறது. ஜாக்கோபினின் நோக்கங்கள் அதன் முதல் பிரேசிலிய இதழில் “Marx & Co.” என்ற தலைப்பில் வெளிவந்தன. முதலாளித்துவ தேசியவாதி சால்வடோர் அலெண்டே, பிரேசிலின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஸ்ராலின் போன்ற மார்க்சிசத்தின் இழிவான எதிரிகளின் படங்களை மார்க்சின் “நண்பர்கள்” என்று இதழின் முதல் பக்கத்தில் பதிவிட்டு இது ஒரு நகைச்சுவைப் பத்திரிகை வகையானதாக உள்ளது. குறிப்பாக ஸ்ராலினின் வெளிப்படையான பாதுகாவலரும் அவரது வரலாற்று “பங்களிப்புகளுக்குமான” பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) உறுப்பினர் ஜோன்ஸ் மனோயலின் ஒரு கட்டுரையை வெளியிட்டதில் சில ஆசிரியர்கள் பகிரங்கமாக தமது அசௌகரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த அத்தியாயம் பிரேசிலில் ஜாக்கோபின் வெளியீட்டிற்கு முந்தைய நடவடிக்கைகளை வெளிப்படுத்தி காட்டியது. PSOL இன் பேராசிரியர்கள் சீன் பூர்டி மற்றும் மொரேனோய்ட் PSTU வின் முன்னாள் உறுப்பினர் ரூய் பிராகா ஜோன்ஸ் மனோயலின் பங்கேற்பு குறித்து “அவர்கள் முன்பு எச்சரித்திருக்க வேண்டும்” என்று பேஸ்புக்கில் எழுப்பிய பிரச்சினைகளுக்கு பதிலளித்த சபரினா பெர்னாண்டஸ்: "ஆனால் இதற்கு முன் ஒரு எச்சரிக்கை இருந்தது ... பாஸ்கர் இது பற்றி கேட்டபோது, பத்திரிகை ஒரு பரந்த விடயங்களை கொண்டுள்ளது என்று விளக்கினேன். அதன் சில தலைப்புகள் பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சிவரை நீண்டுள்ளது. கட்டுரை ஸ்ராலினைப் பற்றியது அல்ல, நீங்கள் அதை இதுவரை படிக்கவில்லை. கம்யூனிச எதிர்ப்பு நம் அனைவரையும் குற்றவாளியாக்குகிறது, அதுதான் நமது அரசியல் சூழ்நிலையின் படிப்பினை” என்று கூறினார்.

இங்கு செய்தி தெளிவாக உள்ளது: முதலாவதாக, ஸ்ராலினிசத்தின் பிரதிநிதியை பத்திரிகையில் சேர்ப்பது தற்செயலானது அல்ல, ஆனால் வேண்டுமென்றே DSA உடன் வகுக்கப்பட்ட வழிகாட்டுதலாகும். இரண்டாவதாக, ஸ்ராலினிசத்திற்கும் மார்க்சிசத்திற்கும் இடையிலான வரலாற்று பிளவு -ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால் இரத்த ஆற்றினால் பிரிக்கப்படும் ஒன்று- குறித்து தீவிரமயப்படும் புதிய தலைமுறையினருக்கு விளக்குவதற்கான எந்தவொரு முயற்சியும் ஜாக்கோபினால் "கம்யூனிச எதிர்ப்பு" என்று ஆவேசமாக தாக்கப்படும்.

லூலாவுக்கான ஜாக்கோபினின் தேடல்

தொழிலாளர் கட்சியின் (PT) முன்னாள் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வாவை (பொதுவாக லூலா என்று அழைக்கப்படுபவர்) முன்வைக்கும் பிரச்சாரத்திலும், பிரேசிலின் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக ஒரு புதிய தொழிலாளர் கட்சியின் நிர்வாகத்தின் சாத்தியக்கூறு குறித்தும் சமீபத்திய மாதங்களில் ஜாக்கோபின் அதன் கவனத்தை செலுத்தியுள்ளது.

14 ஆண்டுகளாக தொழிலாளர் கட்சி பிரேசிலை முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காகவும், நாட்டின் தற்போதைய பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ உட்பட அதன் அரசியல் ஸ்தாபகத்திற்குள் மிகவும் பிற்போக்கு சக்திகளுடன் கூட்டணி வைத்தும் ஆட்சி செய்தது. தொழிலாளர்கள் மத்தியில், தொழிலாளர் கட்சியின் பாரிய மதிப்பிழப்பு மற்றும் இராணுவ மற்றும் வலதுசாரி சக்திகளை இக் கட்சி ஊக்குவித்ததானது போல்சனாரோ ஜனாதிபதி பதவிக்கு உயர வழி வகுத்தது.

பிரேசிலின் முக்கிய கட்டுமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், லூலா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 2018 இல் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டார். ஆயினும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2022 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, தனது அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக லூலாவுக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டரீதியாக குறைபாடுடையவை என்றும் உச்சநீதிமன்றத்தால் தண்டனைகள் இரத்து செய்யப்பட்டன.

இந்த செய்தி ஜாக்கோபினால் தீவிரமாக கொண்டாடப்பட்டது, மேலும் இது "லூலா திரும்ப வந்துவிட்டார் மற்றும் அவர் பிரேசிலை போல்சனாரோவிடமிருந்து காப்பாற்ற முடியும்" என்பது போன்ற தலைப்புகளுடன் தொடர் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. லூலா "சமூக இயக்கங்கள் மற்றும் இடது சக்திகளின் தலைமையை" ஏற்றுக்கொண்டவுடன், அவர் சமூக நெருக்கடியை எதிர்கொண்டு, பிரேசிலில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து, மேலும் "தடுப்பூசிகளின் உலகளாவிய அணுகலுக்கான போராட்டத்தில் உலகளவில் முன்னிலை வகிப்பார்" என்று ஜாக்கோபினின் பிரேசிலின் ஆசிரியர் ஹ்யூகோ அல்புகெர்க்கி எழுதுகின்றார். அவரது கருத்துப்படி, இந்த அதிசயங்கள் அனைத்தும் முதலாளித்துவத்திமிருந்து உடைத்துக்கொள்ளாமல் சாத்தியமானவை. ஆனால் இது எதிர்மாறானது.

பிரேசிலிய நிதி தன்னலக்குழுவால் லூலா மறுவாழ்வு பெறுகிறார் என்பதற்கான அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டதே அவரது நம்பிக்கைகள் என்பதை அல்புகெர்கி தெளிவுபடுத்துகிறார். அவர் “பிரேசிலிய நெருக்கடியின் விரைவான அதிகரிப்பு நாட்டின் தன்னலக்குழுவில் ஒரு புதிய கண்ணோட்டத்தை உருவாக்கக்கூடும். ... ஆளும் வர்க்கம் அதன் நீண்டகால தொழிலாளர் கட்சி இல்லாத எதையும் என்ற மதிநுட்ப நிலைப்பாட்டைத் திருத்தத் தொடங்கலாம்" என கூறுகிறார்.

ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்திற்குள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் போல்சனாரோவை விட லூலாவின் கீழ் பாதுகாப்பான கைகளில் இருக்கும் என்று நம்புபவர்களும் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாக, DSA வாஷிங்டனில் இந்த தந்திரோபாயக் கருத்தாய்வுகளுக்கு "இடது" முகத்தை வழங்குகிறது.

இந்த முதலாளித்துவ சார்பு கொள்கையை போலி-புரட்சிகர மொழியுடன் மறைக்க, ஜாக்கோபின் ஒரு நிபுணரின் சேவைகளைப் பட்டியலிட்டது. அவர் மூத்த மொரேனாய்ட் இயக்கத்தின் வலேரியோ ஆர்கரி ஆவார். 1990 களின் முற்பகுதியில் தனது அமைப்பான Convergência Socialista கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு PSTUவை உருவாக்குவதற்கு முன்பு ஆர்கரி தொழிலாளர் கட்சியில் தலைமைப் பதவிகளை வகித்தார். இன்று அவர் PSOL இன் மொரேனோய்ட் போக்கு எதிர்ப்பை வழிநடத்துகிறார்.

"முதலாளித்துவ-விரோத வேலைத்திட்டத்துடன் ஒரு ஐக்கிய முன்னணிக்கு" என்ற தனது கட்டுரையில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் அரசியலை கோரமான திரிபிற்குள்ளாக்குவதுடன் மற்றும் ரஷ்ய புரட்சியின் வரலாற்றை வெட்கமின்றி பொய்மைப்படுத்துகிறார். 1917 பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர் போல்ஷிவிக்குகள் எழுப்பிய “அனைத்து அதிகாரமும் சோவியத்துகளுக்கே” என்ற கோரிக்கையுடன் லூலாவின் வேட்புமனுவுக்கான PSOL ஆதரவை ஒப்பிடுவதன் மூலம் அதனை நியாயப்படுத்த அவர் முயற்சிக்கிறார். "சோவியத்துகளுக்கு தலைமை தாங்கியவர்கள் யார்?" என ஆர்கரி கேட்டு, "மிதவாத மென்ஷிவிக் மற்றும் சோசலிசப் புரட்சியாளர்களின் தலைமைகள்" என்கிறார். லெனின் வரைந்த முழக்கத்திற்கு எதிராக திரும்பிய சோவியத்துகளின் துரோகத் தலைமையால் ஆதரிக்கப்பட்ட முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் இருப்பை பற்றி அவர் உணர்வுபூர்வமாக தவிர்க்கிறார். போல்ஷிவிக்குகளை முதலாளித்துவத்தின் முதுகெலும்பு இல்லாத இடது ஆதரவாளர்கள், அதன் தலைமையை இடது பக்கம் அழுத்தம் கொடுக்க முயல்கின்றனர்! என்று அவர்களுக்கு நேர்மாறாக சித்தரிப்பதே இதன் நோக்கமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களை PSOL இற்கு சமமானவர்களாக காட்டுதலாகும்.

பிரேசிலில் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியை சீர்குலைக்க ஜாக்கோபின் மேற்கொண்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவம் லூலாவாலேயே அங்கீகரிக்கப்பட்டது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, லூலா தானாகவே பிரேசிலின் ஜாக்கோபின் நகல்களைப் பிடித்துக் கொண்டு, தனது ஆதரவாளர்களிடம், “நீங்கள் இதை இன்னும் படிக்கவில்லையா?!” என்று கேட்டார்.

ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியடையும். உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் அதிகரிப்பின் ஒவ்வொரு புதிய அடியும் பிரேசிலிலும், சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சிக்கான பாதையில் திருப்புவதோடு, அதேநேரத்தில் இந்த குட்டி முதலாளித்துவ வஞ்சகர்களின் உண்மையான சோசலிசத்திற்கான உள்ளார்ந்த விரோதப் போக்கை இன்னும் ஆழமாக அம்பலப்படுத்தும்.

இந்த போக்குகளின் மார்க்சிச எதிர்ப்பு தன்மை மற்றும் அவற்றின் துரோகத்தின் வரலாற்று வேர்களை தெளிவுபடுத்துவதற்கும், ஒரு உண்மையான சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதற்குமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் போராட்டம் பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தினை அரசியல் அதிகாரத்திற்கு இட்டுச் செல்ல அதன் மத்தியில் ஒரு புதிய புரட்சிகர தலைமையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

Loading