பைடென் ஐரோப்பாவை “பனிப்போருக்கு” அணிதிரட்டும் நிலையில், அமெரிக்க இராணுவம் சீனாவை “முதல் நிலை” சவால் என்று அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் முழுவதும் அமெரிக்கா, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை நெரிக்கவும், உலக மக்களின் பார்வையில் அதை பூதமாக சித்தரிக்கவும் மற்றும் இராணுவ மோதலுக்கு தயார் செய்யும் நோக்கத்தோடு, ஒரு தொடர்ச்சியான இராணுவ, பொருளாதார, இராஜதந்திர மற்றும் பிரச்சார முயற்சிகளை மேற்கொண்டு சீனாவுடனான தனது மோதலை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது.

புதன்கிழமை, அமெரிக்க பாதுகாப்பு செயலர் லொயிட் ஆஸ்டின், அமெரிக்க இராணுவத்தின் “முதல் நிலை” இலக்கு சீனா தான் என்று நேரடியாக அறிவித்துள்ளார். ஆஸ்டினின் அறிக்கை, முன்னாள் இடைக்கால அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாட்ரிக் ஷனஹானின் கருத்துக்களை பிரதிபலித்தது, இவர் கடந்த ஆண்டு அமெரிக்க இராணுவத்தின் இலக்கு “சீனா, சீனா, சீனா” ஆக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜூன் 9, 2021, புதன்கிழமை, இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள RFA மில்டென் அரங்கில் அமெரிக்க சேவை உறுப்பினர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஜோ பைடென் பேசுகிறார் (AP Photo/Patrick Semansky)

ஆஸ்டினின் அறிக்கைகள், செவ்வாய்க்கிழமை செனட்டில் செனட்டர்கள், கார்ப்பரேட் மானியங்களையும் பொருளாதாரத் தடைகளையும் உள்ளடக்கிய 250 பில்லியன் டாலர் பெரும் தொகுப்புடன் கூடிய “சீன போட்டித்திறன் மசோதா,” பற்றி குறிப்பிட்டதைத் தொடர்ந்து வெளிவந்தன, இதனை நியூ யோர்க் டைம்ஸ் “பல தசாப்தங்களில் தொழில்துறை கொள்கையில் அரசாங்கத்தின் மிக முக்கியமான தலையீடு” என்று குறிப்பிட்டது.

இந்த செலவுத் தொகுப்பு, குறைக்கடத்தி (semiconductor) உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்காக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள பல மில்லியன் டாலர் மானியங்களை உள்ளடக்கியது, ஒரு இராணுவ மோதலில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை சீனா முடிவுக்கு கொண்டு வருமானால் அப்போது இது முக்கியமானதாக இருக்கும். குறைக்கடத்திகளின் திறன் அனைத்து நவீன நுகர்வோர் சாதனங்களுக்கு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஆயுத அமைப்புகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கும் கூட முக்கியமானதாகும்.

இந்த மசோதா, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கிறது, மேலும் சீனா அதன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாகவும் பொய்யாக அறிவிக்கிறது.

இது, அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக கூறி, சீன நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அரசாங்கத்தை அறிவுறுத்துவதுடன், அமெரிக்கா தனது அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக கூறும் சீனப் பொருட்களின் ஏற்றமதியைத் தடுக்க அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு ஒரு கட்டமைப்பையும் உருவாக்குகிறது.

South China Morning Post கருத்து தெரிவித்தபடி, இந்த மசோதா “பெய்ஜிங் மீதான வாஷிங்டனின் ஆழ்ந்த அவநம்பிக்கை என்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு வெறுமையான அம்சம் மட்டுமல்ல என்பதற்கு இன்னும் முறையான அங்கீகாரம் இல்லை… மாறாக காங்கிரஸின் அரசியல் வர்ணஜாலம் முழுவதும் ஒருமித்த கருத்து பிரதிபலிக்கிறது… அதாவது சீனாவுடன் போட்டியிட அமெரிக்கா அவசரமாக செயல்பட வேண்டும் அல்லது உலகின் மிக சக்திவாய்ந்த வல்லரசு நாடாக அதன் அந்தஸ்தை இழக்க வேண்டும்.”

இந்தியானாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டோட் யங், “இந்த நூற்றாண்டை வெல்வதற்கான எங்கள் நோக்கத்தையும், மற்றும் அதைப் பின்பற்றுபவர்களையும் இன்று அறிவிக்கிறோம்” என்று கூறினார்.

குடியரசுக் கட்சியின் ஜோன் கார்னின் மேலும் கூறினார்: “தேசிய பாதுகாப்பு முதல் பொருளாதாரக் கொள்கை வரை அனைத்திற்கும், சீனாவின் சவாலை நம் நாடு பார்க்கும் மற்றும் அதற்கு பதிலிறுக்கும் விதத்தை மறுசீரமைக்க ஒரு தெளிவான மற்றும் அவசர தேவை உள்ளது.”

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து, “21 ஆம் நூற்றாண்டை வெல்வதற்கான ஒரு போட்டியில் நாம் இருக்கிறோம், மேலும் தொடக்க துப்பாக்கிகள் காணாமற் போய்விட்டன” என்று கூறினார்.

இதற்கு பதிலிறுப்பாக, சீனா தனது சொந்த “பொருளாதாரத் தடை எதிர்ப்பு மசோதாவை,” நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் எடுக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கு சீன நிறுவனங்களுக்கு சேதங்களைக் கோர அனுமதிக்கும் ஒரு கட்டமைப்பை வழங்கும். ஜின்ஜியாங் மற்றும் ஹாங்காங்கில் சீனாவின் நடவடிக்கைகளை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக சீனா எடுத்த முதல் பெரிய நடவடிக்கை இதுவாகும்.

இராணுவ உறவுகளை கொண்டுள்ளதாகக் கருதப்பட்ட 59 சீன நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்த பைடென் நிர்வாகத்தின் ஜூன் 3 நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேறியுள்ளது.

குளோபல் டைம்ஸின் கருத்துப்படி, சென்ற வார இறுதியில் மூன்று செனட்டர்கள் தைவான் தீவுக்கு விஜயம் செய்ததை அடுத்து, பைடென் நிர்வாகம் இந்த வாரம் தைவான் உடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும். இரண்டு நடவடிக்கைகளுமே 1970 களில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த அமெரிக்காவின் “ஒரே சீனா” கொள்கையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது, ஜி7 உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியம்–அமெரிக்கா மற்றும் நேட்டோ உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்கும் பைடென் பயணிப்பதற்கு களம் அமைத்தது, கார்டியனின் கருத்துப்படி, பைடென் அங்கு “அடுத்த பனிப்போருக்கு கூட்டாளிகளை நியமிக்க” முனைவார்.

பைடென் வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார், அடுத்து நேட்டோ உச்சிமாநாட்டிற்காக பெல்ஜியம் செல்வார், பின்னர் அடுத்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க ஜெனேவா செல்வார்.

Rafael Behr இன் ஒரு நுண்ணறிவான கருத்தில், கார்டியன் அப்பட்டமாக இந்த பிரச்சினைகளுக்கு ஆபத்து இருப்பதாக கூறியது.

“வாஷிங்டனால் எங்கு முடியுமோ அங்கு மாஸ்கோ அதன் சுருங்கிப் போன செல்வாக்கைக் கொண்டு ஈடுசெய்ய முனையும் ஒரு வீழ்ச்சியடைந்த சக்தியாகவே மாஸ்கோவை வாஷிங்டன் பார்க்கிறது. புட்டின் ஒரு எரிச்சலூட்டுபவராக பார்க்கப்படுகிறாரே தவிர, ஒரு போட்டியாளராக அல்ல. இது சீனா மீதான அமெரிக்கப் பார்வைக்கு முரண்பட்டிருப்பதை குறித்தது, அதாவது மேற்கு ஜனநாயக நாடுகளின் கூட்டணியை புதுப்பிப்பதைப் பற்றி பேசும் போது பைடென் சீனாவை ஒரு உண்மையான வல்லரசு மற்றும் கிழக்கு துருவமாக மனதில் வைத்து பேசினார்.”

ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகை “மீண்டும் அமைதியைக் கொண்டு வந்து, குறைந்த போர் நோக்கம் கொண்ட ஒரு சகாப்தத்திற்கு வழி ஏற்படுத்தும்” என்று ஐரோப்பிய அரசாங்கங்கள் நம்பியிருந்தாலும் கூட, உண்மையில், பெய்ஜிங்குடனான உலகளாவிய மேலாதிக்கத்திற்கான வரவிருக்கும் பந்தயத்தில் ஐரோப்பாவை ஒருங்கிணைந்து செயலாற்றுமாறு கூற பைடென் முயல்கிறார்” என்று Behr குறிப்பிடுகிறார்.

பைனான்சியல் டைம்ஸ் அதன் பங்கிற்கு இதை கவனித்தது: “ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அவர் நுழைந்தது முதல், சீனாவைக் கட்டுப்படுத்தி நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற, மற்றதை விட ஒரே வெளியுறவுக் கொள்கை குறிக்கோள் பற்றி ஜோ பைடென் தெளிவாகப் பேசினார்.”

“ஜின்ஜியாங்கில் வீகர்களைத் துன்புறுத்துவது, ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை நசுக்கியது, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை பொருளாதார வற்புறுத்தல் செய்தது, மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் அதன் ஆக்கிரோஷமான இராணுவ நடவடிக்கை ஆகியவை குறித்து சீனாவை கண்டிக்க தனது சமதரப்பினரை அறிவுறுத்த முடியும் என பைடென் நம்புகிறார்.”

சீன எல்லைக்கு நெருக்கமான அவர்களின் இராணுவப் பயிற்சிகள் மற்றும் இராணுவ திறன்களை ஆக்ரோஷமாக வலுப்படுத்தும் அதேவேளையில், அமெரிக்க பொருளாதாரத் தடைகள் நிரூபிக்கின்றபடி, பெய்ஜிங்கிற்கு எதிராக "பொருளாதார வற்புறுத்தலை" மேற்கொள்வது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான்.

சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் முழு நீதிமன்ற வற்புறுத்தலின் இறுதிக் கூறு, கோவிட்-19 தொற்றுநோய் வூஹான் வைராலஜி நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற தீவிர வலதுசாரிகளின் கூற்றுக்களை அமெரிக்க பத்திரிகைகள் ஏற்றுக்கொண்டதுதான். “நம்பத்தகுந்தது,” என்பதுடன், சீனாவுக்கு எதிராக இன்னும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டைக் கோருவதற்கு பாசிஸ்டுகளையும் ஊக்குவிக்கிறது.

கடந்த வாரம் பேசுகையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன இறக்குமதிகளுக்கு 100 சதவீத தடை விதிக்க கோரியதுடன், தொற்றுநோயை உருவாக்கியதாகக் கூறி, சீனா அமெரிக்காவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்த பிரச்சாரம் சீனாவிற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு கருத்தியல் அடிப்படையை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது, மேலும் அமெரிக்கா “தாக்கப்பட்டுள்ளது” என்ற நம்பிக்கையை உருவாக்குவதுடன், ஒரு இராணுவ மோதலுக்கு தேவையான இனவெறி மற்றும் தேசியவாதத்தை தூண்டுகிறது.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் மிகுந்த ஆபத்தானவை என்று சொல்லாமல் நடக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை போருக்கு வழிவகுத்த ஒரு வகை பொருளாதார மற்றும் இராணுவப் போட்டி மூலம் அமெரிக்க சமூகம் “பெரும் வல்லரசு மோதலுக்காக” மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

Loading