வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பொகவந்தலாவை, கொடியாகலை தோட்டத் தொழிலாளர்கள், வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக மூன்று மாத காலமாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். ஜூன் 15 அன்று, இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொடுத்த வாக்குறுதியை நம்பி, வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ள அவர்கள் தீர்மானித்தனர். ஜீவன் தொண்டமான் பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) தலைவராவார்.

இருப்பினும், ஜூன் 16 காலை மீண்டும் வேலைக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் வேலை கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். தொழிலாளர்கள் காலை முதல் உழைத்து, பறித்த பல நூறு கிலோ தேயிலை கொழுந்தையும் நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துவிட்டதால் அவற்றை தொழிற்சாலை வாசலிலேயே வைத்துவிட்டு தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

கொட்டியாகலை தோட்டத்தின் மூன்று பிரிவுகளையும் சேர்ந்த பல நூறு தொழிலாளர்கள், வழமையாக 13 கிலோ கொழுந்து பறித்து வந்தனர். இப்போது நிர்வாகம் மேலதிகமாக 5 கிலோவுடன் மொத்தம் 18 கிலோ பறிக்குமாறு நிர்ப்பந்தித்து வருகின்றது. நிர்வாகத்தால் சாக்குப் போக்கு கூறி வெட்டிக்கொள்ளப்படும் கொழுந்துடன் சேர்த்து தொழிலாளர்கள் சுமார் 23 கிலோ பறிக்க வேண்டும். சில சமயம் கொட்டியாகலை தொழிலாளர்கள் 14 கிலோமீட்டர் தூரம் பயணித்து வேலை செய்கின்றனர்.

ட்ரேடன் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் [Photo credit: K. Kishanthan]

மற்றொரு தோட்டத் தொழிற்சங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலர் ஒருவர் ஜூன் 15 அன்று தோட்ட நிர்வாகதுடன் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்வதை அறிந்த ஜீவன் தொண்டமான், தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள உடனடியாக அங்கு வந்து, தொழிலாளர்களை 13 கிலோ கொழுந்து பறிக்குமாறும், தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொண்டமான் நிர்வாகத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கவில்லை.

ஜூன் 10 அன்று, நிர்வாகத்தின் கோரிக்கைக்கு ஏற்ப 18 கிலோ கொழுந்து பறிக்குமாறு ஐந்து பேரை இ.தொ.கா. வேலைக்கு இறக்கிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடி கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தோட்ட முகாமையாளர்களை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டவாறு ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்க தோட்டக் கம்பனிகள் மறுத்து வருகின்றன. மாறாக வேலைச் சுமையை அதிகரித்து, வேலை நாட்களை குறைத்து, சம்பளத்தையும் வெட்டுகின்றன. அநேகமான தோட்டக் கம்பனிகள் கிலோவுக்கு 50 ரூபா படி 20 கிலோ பறித்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக நிர்ப்பந்திக்கின்றன. அதற்கு குறைந்தால் அரை நாள் சம்பளமும் மேலதிக கிலோவுக்கு 50 ரூபாவும் கொடுக்கப்படுகிறது. தோட்டங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்குவது ஊதிய செலவை வெட்டுவதற்கான இன்னொரு வழிமுறையாகும்.

இந்த தாக்குதலுக்கு எதிராக கடந்த ஏப்பிரல் முதல் மஸ்கெலியா, பொகவந்தலாவை, ஹட்டன், டிக்கோயா மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மஸ்கெலியா லங்கா தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் [Photo credit: Malayaga Kuruvi, Facebook]
  • கடந்த புதன்கிழமை, தினசரி 16 கிலோ பறித்து வரும் மஸ்கெலியாவில், கிளன்டில்ட் பெருந்தோட்ட குழுமத்தின் லங்கா தோட்டத்தின் தொழிலாளர்கள், நிர்வாகம் 20 கிலோ பறிக்க கோரியதற்கு எதிராக மறியல் போராட்டம் செய்தனர். மேலும் மூன்று நேரம் கொழுந்து நிறுக்கும் போதும், கொமிஷன் என்ற பெயரில் 2 கிலோபடி 6 கிலோக்களை நிர்வாகம் வெட்டிக்கொள்வதால் தினசரி 26 கிலோ கொழுந்து பறிக்க தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 20 கிலோ பறிக்காவிட்டால் ஊழியர் சேமலாப நிதிக்காக ரூபா 2.50 வெட்டிக்கொண்டு கிலோவுக்கு ரூபா 47.50 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகின்றது.
  • பல தோட்டங்களில் நடப்பதைப் போலவே லங்கா தோட்டத்திலும் கம்பனிகள் தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க மறுத்து வருவதுடன் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி எதுவும் இன்றி அடிப்படை ஊதியம் 600 ரூபா மட்டுமே வழங்குகின்றன.
  • கிலன்டில்ட் குழுமத்திற்கு சொந்தமான இன்னும் ஐந்து தோட்டங்களின் தொழிலாளர்களும், 20 கிலோ நிபந்தனைக்கு எதிராக கடந்த வாரம் மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிலாளர் தேசிய சங்க அலுவலர்களுடன் நடத்திய பேச்சுவார்தையின் பின்னர், நிர்வாகம் இந்த கோரிக்கையை கைவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கொட்டகலையில் டிரேடன் தோட்டத்தின் டிடி பிரிவு தொழிலாளர்கள் ஜூன் 21 அன்று ஒரு போராட்டத்தை நடத்தினர். திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வேலை வழங்கப்படும், 20 கிலோ பறிக்காவிட்டால் வேலை கொடுக்கப்படமாட்டாது என்று கூறி, நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
  • பதுளை மாவட்டத்தின், ஹப்புத்தலையில் போவை தோட்டத் தொழிலாளர்கள் இ.தொ.கா. வின் ஒரு தலைவரான செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமையை கடந்த வராம் முழுவதும் 5 கிலோ கொழுந்து மட்டுமே பறித்து வந்தனர். ஆனால், நிர்வாகம் 20 கிலோ பறிக்காத தொழிலாளர்களுக்கு அரைநாள் ஊதியம் மட்டுமே கொடுத்துள்ளது. பின்னர் செந்தில் தொண்டமான் உடனான பேச்சுவார்த்தையை அடுத்து நிர்வாகம் இந்த நெருக்குதலை கைவிட்டுள்ளது.
டிரேட்டன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள கடிதம்

தொழிற்சங்கங்களின் இத்தகைய பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைவதை தடுப்பதற்கான முயற்சி மட்டுமே. மொத்தத்தில் வேலைச்சுமை அதிகரிப்பு சம்பந்தமான பிரச்சினையில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களால் முழுமையாக கைவிடப்பட்டுள்ளனர். உற்பத்தி திறன் அதிகரிப்பை இ.தொ.கா. நேரடியாகவே பரிந்துரைக்கின்ற அதே வேளை, அதற்கு எதிராக வளரும் தொழிலாளர் எதிர்ப்பை அவ்வப்போது வாய்ச்சவடால் விடுப்பதன் மூலம் திசை திருப்பிவிடும் வேலையை ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கின்றன.

1990களின் ஆரம்பத்தில் தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்ட காலத்தில் இருந்தே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட பின்னர், ஏனைய தொழிற்சங்கங்களின் பாசாங்குத்தனமான எதிர்ப்புடன், இ.தொ.கா. வேலைச் சுமை அதிகரிப்பை அனுமதித்து வந்துள்ளதுடன், இன்று அதை 20 கிலோ வரை கொண்டுவந்து விட்டுள்ளது.

அரசாங்கம் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை அறிவித்த பின்னர், உற்பத்தி திறன் அதிகரிப்பு சம்பந்தமான ஏனைய தொழிற்சங்கங்களின் பாசாங்கு விமர்சனத்திற்கு பதிலளித்த இ.தொ.கா. பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன், பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது, “தோட்டம் இருந்தால்தான் நமக்கு தொழில், தொழில் இருந்தால்தான் தோட்டம். ஒவ்வொரு முறையும் சம்பள பேச்சுவார்த்தை முடிந்தவுடன் ஒரு கிலோ இரண்டு கிலோ கூட்டுவதெல்லாம் வழமை,” என்பது உங்களுக்குத் தெரியும் என்றார்.

வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தை தடுப்பதற்காக, ஜீவன் தொண்டமான் சம்பள அதிகரிப்புக்கு எதிராக கம்பனிகள் தாக்கல் செய்துள்ள வழக்கைப் பற்றிக்கொள்கின்றார். சூரியன் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு பதிலளித்த தொண்டமான், “வேலை நாட்கள், மேலதிக கிலோ பற்றி பேசவில்லை, ஏனென்றால் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதைப் பற்றி பேச முடியாது, அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று கபடத்தனமாக கூறினார்.

தொண்டமான் அங்கு மேலும் கூறிய தகவல்கள் மிகவும் பாரதூரமானவை. புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை தயாரிப்பதாக கூறிய அவர், சீக்கிரம் மக்களுக்கு நல்லது செய்யக் கூடியவாறு “ஒரு சிஸ்டம் கொண்டுவருவோம்,” எனக் கூறிய அதே மூச்சில், “எனக்கு நாள் சம்பளத்தில் நம்பிக்கை கிடையாது, வெள்ளையர் காலத்தில் உள்ள சிஸ்டம்,” எனக் கூறினார்.

தொண்டமான் இங்கு பரிந்துரைக்கும் சிஸ்டம் (முறை), ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியுடன் சேர்த்து ஓய்வூதிய உரிமைகள் உட்பட சம்பள முறையை அகற்றுவதற்காக, தோட்டக் கம்பனிகள் நீண்ட காலமாக பரிந்துரைத்து வரும் வருமானப் பகிர்வு முறையே ஆகும். ஏற்கனவே இந்த முறைமை அமுல்படுத்தப்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் போராடி அதை திரும்பப் பெற நிர்வாகத்தை நிர்ப்பந்தித்தனர்.

இனியும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகப் போராட தயார் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய தொண்டமான், ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளோம், “இனி 1,500 க்கு போய் சண்டை போட்டுக்கொண்டு இருக்க முடியாது” என்று கூறியதோடு புதிய முறைமை பற்றி கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கம்பனிக்கும் நன்மை பயக்க வேண்டும் தொழிலாளிக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற போர்வையில், இந்தியாவை உதாரணமாக காட்டிய தொண்டமான், ஒரு கொடூரமான சுரண்டல் திட்டத்தை முன்மொழிந்தார். “1960களில் இருந்தே நமது தேசிய உற்பத்தி திறன் 260,000 முதல் 360,000 இடையிலேயே ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவில் மீள் பயிர்ச்செய்கை செய்யாமல் இலங்கைக்கு சமமான அளவு தேயிலை செடிகளைக் கொண்டு உற்பத்தி செய்யும் கொழுந்தின் அளவை பத்து இலட்சத்துக்கும் அதிகமாக்கி இருக்கின்றார்கள். அவர்களும் அதே இரண்டு இலட்சத்தில் தான் தொடங்கினார்கள். இந்த முறையை மாற்றினால் சம்பளத்துக்கு மட்டுமல்லாமல் பொருளாதாரத்துக்கும் தீர்வை கொண்டு வர முடியும்,” என அவர் பிரகடனம் செய்தார்.

தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் அரசுக்குச் சொந்தமான தோட்டங்களில் 340 இந்திய ரூபாய் நாள் சம்பளத்துக்கு சராசரி 30 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். இதே போல் தனியார் தோட்டங்களில் 250-300 ரூபா வரையான ஊதியத்துக்கு சராசரி 30-35 கிலோவரை கொழுந்து பறிக்க வேண்டும். அசாம் மாநிலத்தில் கடந்த பெப்பிரவரி மாதத்தில்தான் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி 167 ரூபா ஊதியம் 205 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2016இல் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், கொழுந்து பறிக்கும் அளவை 40-60 வரை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டமான் கூறுவது போல், இரண்டு இலட்சம் கிலோவில் தொடங்கிய இந்திய தொழிலாளர்கள், மீள் பயிர்ச்செய்கை செய்யாமல் பத்து இலட்சத்துக்கும் அதிகமாக கொழுந்து பறிப்பார்கள் எனில், அது மிகவும் அடிப்படையில், கொழுந்து பறிக்கும் வேகத்தையும் நேரத்தையும் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

பொருளாதாரத்துக்கும் சம்பளத்துக்கும் தீர்வு கொண்டுவரும் தொண்டமானின் வழிமுறை இதுவே ஆகும். இந்தியாவில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்த்துள்ள விதம், அவர்களுக்கு இதுவரை கிடைத்து வருகின்ற ஊதியத்தின் மூலம் தெளிவாகின்றது. மேற்கூறிய தொகை, 4 அமெரிக்க டொலர் அளவுக்கு அற்பமானதாகும். எவ்வாறெனினும் வேலைச் சுமையை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவில் பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபத்தை பெருமளவில் அதிகரித்துக்கொண்டுள்ளன.

கம்பனிகளும் இ.தொ.கா.வும் வருமானப் பகிர்வு முறையை எப்படியாவது இலங்கையில் நிறுவ முயற்சிப்பது, தொழிலாளர்களின் நலனுக்காக அல்ல. மாறாக இந்தியாவில் போலவே தொழிலாளர் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தி, கம்பனிகளின் இலாபத்தை அதிகரிக்கப்பதற்கே ஆகும். தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாக மக்கள் முன்னணி ஆகியவை அடங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி, “தோட்டங்களைத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை காணி உரிமையாளர்களாக ஆக்குதல் என்ற பெயரில் இந்த சூறையாடலுக்கே வக்காலத்து வாங்குகின்றன.

மேற்கூறிய வேலை நாள் வெட்டுக்களால் வருமானமின்றியும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் பிள்ளைகளின் இணையவழி கற்கை நடவடிக்கைகளுக்கான செலவுகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையால், அட்டை கடி மற்றும் குளவி, விஷப் பாம்புகள் மற்றும் சிறித்தைப் புலிகளிடம் இருந்தும் உயிர் அச்சுறுத்தலையும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக கொவிட்-19 வைரஸ் தோட்டப் பகுதியிலும் பரவி வருகின்ற சூழ்நிலையில், ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களைப் போலவே தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், எந்தவித நிவாரணமும் இன்றி உயிராபத்தான நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமைகளால் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் காலைவாரிவிடும் வேலையையும் மீறி போராட்டங்களுக்கு வருவதையிட்டு விழிப்படைந்துள்ள இ.தொ.கா., ஏனைய தொழிற்சங்களின் ஆரவுடன் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் அடக்குமுறைகளை திணிப்பதற்கு நேரடியாக பங்களிப்பு செய்து வருகின்றது. கடந்த பெப்பிரவரியில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபா சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் போது, தோட்ட முகாமையாளர் வீட்டின் முன்னால் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பற்றிக்கொண்ட நிர்வாகமும் பொலிசும், தொழிலாளர்கள் மீது பொலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டன.

இந்த அடக்குமுறையில் நேரடியாக பங்குகொண்ட இ.தொ.கா., அந்த தொழிலாளர்களை சிறையில் அடைக்கவும், குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தவும், இறுதியாக சுமார் 40 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் ஒத்துழைத்தது. இப்போது ஓல்டன் தோட்டத்தில் பொலிஸ் காவல் அரண் ஒன்றை அமைக்கும் முயற்சியும் உள்ளது. அதற்கு முன்னதாக நுவரெலியா பார்க் தோட்டத்தில் நடந்த போராட்டத்தின் பின்னரும், தொழிலாளர்கள் மீது பொலிஸ் அடக்குமுறையை திணிக்க இ.தொ.கா. ஒத்துழைத்தது. இந்த நடவடிக்கைகளை ஏனைய தொழிற்சங்கங்கள் மௌனமாக ஆதரித்தன.

தோட்டத் தொழிலாளர்கள் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் உலகம் பூராவும் அரசாங்கங்கள் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளினால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் பாகமாகும். இ.தொ.கா. மட்டுமன்றி இலங்கையில் ஏனைய தொழிற்சங்கங்களும் உலகம் பூராவும் உள்ள தொழிற்சங்கங்களும் முதலாளிகளின் இலாபத்துக்காக தொழிலாளர்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்ய தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கின்றன. இதனால் தொழிலாளர்கள் இன்று தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பை எதிர்த்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

உலகம் பூராவும் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் இணையவழி மே தினக் கூட்டத்தில், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை அமைப்பதற்கான முன் நடவடிக்கையை எடுத்தது. தோட்டத் தொழிலாளர்கள் வரலாற்று ரீதியில் இலாயக்கற்றுப் போன இந்த தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு உலகளாவிய கூட்டணியில் இணைந்துகொள்வதன் மூலமே தங்கள் தொழில் மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தை பலப்படுத்த முடியும்.

.

Loading