மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசுத் தலைவர்கள் புரூசெல்ஸில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக ஒன்று கூடினர், அம்மாநாடு பெருந்தொற்று மீதான ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை ஏற்றுக் கொண்டதுடன், அதேவேளையில் வெளியுறவுக் கொள்கை மீது குறிப்பாக ரஷ்யா சம்பந்தமாக கடுமையாக மோதலைக் கொண்டிருந்தது.
வியாழக்கிழமை மாலை, ஐரோப்பிய ஒன்றியம் ஓர்வெல்லியன் பாணியில் அதன் பெருந்தொற்று கொள்கைகளை பூசிமொழுகி உச்சி மாநாட்டின் முதல் கூட்டறிக்கையை வெளியிட்டது. அது "தடுப்பூசியில் நல்ல முன்னேற்றமும் மற்றும் ஒட்டுமொத்தமாக தொற்றுநோய் நிலைமையில் முன்னேற்றம்" இருப்பதாகவும் பாராட்டியதோடு, "இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில் சர்வதேச நல்லிணக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமைப்பாட்டை" வலியுறுத்தியது.
யதார்த்தத்தில் விஞ்ஞானபூர்வ சமூக-இடைவெளி கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பதன் காரணமாக ஐரோப்பாவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அது அந்த பெருந்தொற்றின் பல உயிர்பறிக்கும் வாரங்களின் போது கூட, நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வேலைகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் வைத்திருந்தது. டெல்டா வகை பரவி, ஒரு புதிய தொற்று அச்சுறுத்தி வருகின்ற போதும் கூட, இப்போதும் ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் அனைத்து சமூக இடைவெளிகளையும் முடிவுக்குக் கொண்டு வர அழுத்தமளித்து வருகின்றன. அனைத்திற்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின் மருந்துகளுக்காக ஏங்கி நிற்கின்றன, ஏற்கனவே அவை ஐரோப்பாவில் 325.1 மில்லியன் மருந்துகளைச் செலுத்தி இருந்தாலும், 2021 இறுதிக்குள் 100 மில்லியன் மருந்துகளை மட்டும் செலுத்த சூளுரைத்துள்ளன.
ஆனால், ரஷ்யாவையும் அகதிகளையும் இலக்கில் வைத்து ஓர் ஆக்ரோஷமான ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை திட்டமிடுவதே அந்த உச்சி மாநாட்டின் இதயதானத்தில் இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு இடையே இம்மாத தொடக்கத்தில் நடந்த இருதரப்பு சந்திப்புக்குப் பின்னர், அந்த உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்னரே, மாஸ்கோ உடனான ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் சம்பந்தமாக மோதல்கள் அதிகரித்து வந்தன.
இம்மாநாடு, கருங்கடலில் ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதன்கிழமை நடந்த ஓர் ஆபத்தான சம்பவத்திற்குப் பின்னர் நடந்தது, அதில் கருங்கடலில் ரஷ்ய கடல் எல்லைக்குள் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு பிரிட்டிஷ் சிறிய ரக போர்க்கப்பல் சென்ற பாதையில் ரஷ்ய போர்விமானம் ஒரு குண்டு வீசியது. இதற்கு விடையிறுத்து பேர்லினும் பாரிஸும் ஐரோப்பிய ஒன்றிய-ரஷ்யா பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்க முன்மொழிந்தன, இத்தகைய பேச்சுவார்த்தைகள் 2014 நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சி மாற்ற நடவடிக்கைக்குப் பின்னர் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் வியாழனன்று காலை ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் இந்த முன்மொழிவை முன்வைத்தார். "அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதியிடம் பேசுவது மட்டும் போதாது. அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும் வெவ்வேறு விதமான பேச்சுவார்த்தை வடிவங்களை உருவாக்க வேண்டும்,” என்று அப்பெண்மணி தெரிவித்தார். லிபியா மற்றும் சிரிய போர்களை மேற்கோளிட்டு, மேர்க்கெல் தொடர்ந்து கூறுகையில், "நாம் மூலோபாய நலன்களின் ஒரு பொதுவான திட்டநிரலை வரையறுக்க வேண்டும், சான்றாக காலநிலை பாதுகாப்பு, என்றாலும் அது சமாதானம் மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் வேண்டும்."
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வியாழக்கிழமை புரூசெல்ஸ் வந்தபோது மேர்க்கெலின் கருத்துக்களை ஆதரித்தார். "ஐரோப்பிய கண்டத்தை ஸ்திரப்படுத்த உரையாடல் அவசியம், ஆனால் அது உறுதியாக இருக்க வேண்டும், அதேவேளையில் நமது மதிப்புகள் அல்லது நமது நலன்கள் எதையும் நாம் விட்டுக் கொடுக்க கூடாது," என்று மக்ரோன் கூறினார். அவர் தொடர்ந்து கூறினார், "நாம் ஒவ்வொரு விஷயத்திலும், ரஷ்யாவுடன் முற்றிலும் தற்காப்பு மனப்பான்மையில் இருக்க முடியாது, அதே நேரத்தில் மிகவும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும், ஜனாதிபதி பைடென் மற்றும் ஜனாதிபதி புட்டினுக்கு இடையே கட்டமைக்கப்பட்ட ஒரு விவாதம் வெளிப்பட்டதைக் கண்டோம்."
அந்த முன்மொழிவிலிருந்து பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய அரசுகள், வெகு தொலைவு விலகி நின்று, சிறிதும் தயக்கமின்றி அதை நிராகரித்தன. முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளைப் புட்டின் நிறைவேற்றட்டும், முதலும் முக்கியமாக உக்ரேன் சம்பந்தமான மின்ஸ்க் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தட்டும் என்று போலாந்து அரசாங்கம் கோரியது. அதற்கு முன்னர் ரஷ்யாவை அணுகுவது "ஒரு மோசமான சமிக்ஞையாக" இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் தொடக்கத்திலேயே லித்துவேனிய ஜனாதிபதி ஜிதானாஸ் நயூஸ்டா (Gitanas Nauseda) கூறினார். "இது சிறிதளவு தேனைக் காப்பாற்றுவதற்காக கரடியிடம் பேச முயற்சிப்பது போல் இருக்கும்," என்றார்.
அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு கடுமையான போக்கை கோருகிறது. அதன் கூட்டறிக்கை "ரஷ்யா மேற்கொண்டு ஏதாவது தீங்கு விளைவிக்கும், சட்டவிரோத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கை எடுத்தால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமிருக்கும் எல்லா கருவிகளையும் முழுமையாக பயன்படுத்தி, பங்காளிகளுடனான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடம் இருந்து ஓர் உறுதியான ஒருங்கிணைந்த விடையிறுப்பை வலியுறுத்துகிறது.” இதற்காக, ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும் உயர் பிரதிநிதியும் "பொருளாதாரத் தடைகள் உட்பட கட்டுப்படுத்தும் கூடுதல் நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு வளங்களை முன்வைக்க" பணிக்கப்பட்டுள்ளனர்.
யதார்த்தத்தில் மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் முன்மொழிவுக்கும் மேலதிக சமாதான கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிராக அதன் கரத்தை வலுப்படுத்தவும், உள்நாட்டில் கொரோனா வைரஸ் மீது "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவது" மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் அதன் கொள்கைகளைத் திணிக்கவும், வாஷிங்டனில் இருந்து இன்னும் சுயாதீனமான ரஷ்யாவை நோக்கி ஒரு வெளிநாட்டு மற்றும் இராணுவக் கொள்கையை அபிவிருத்தி செய்யவும் நோக்கம் கொண்டதாகும்.
ஆனால் அவர்களின் கண்ணோட்டத்தில், "அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து நமக்குள் நாம் குறுக்கு விசாரணை செய்து" கொண்டிருப்பது போதாது என்று மேர்க்கெல் விவரித்தார். ஐரோப்பிய ஒன்றியம் "நேரடிப் பேச்சுவார்த்தைகளில் அதன் கண்ணோட்டத்தை முன்வைக்க போதுமானளவுக்கு ஆணாகவும் போதுமானளவுக்கு பெண்ணாகவும்" இருக்க வேண்டும் என்றவர் கூறினார்.
பேர்லினும் பாரிஸும் ரஷ்யா மீது இராணுவ அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன. கருங்கடலில் ஜூன் 28 முதல் ஜூலை 10 வரை திட்டமிடப்பட்டுள்ள மிகப்பெரும் Sea Breeze கடற்படை பயிற்சியில் பிரான்ஸ் பங்கேற்க உள்ளது. அமெரிக்க மற்றும் உக்ரேனிய படைகளால் நடத்தப்படும் இதில் டஜன் கணக்கான நாடுகளிலிருந்து 5,000 துருப்புக்கள், 32 கப்பல்கள் மற்றும் 40 விமானங்கள் கலந்து கொள்கின்றன.
இவ்வாரம், ஜேர்மனிய விமானப்படை Luftwaffe கருங்கடலில் நடத்தப்படும் நேட்டோ விமானக் கண்காணிப்பு திட்டத்தில் முதல் முறையாக பங்கேற்கிறது. தந்திரோபாய விமானப் பிரிவு 71 "Richthofen" இன் இரண்டு Eurofighter போர்விமானங்கள் வியாழக்கிழமை கான்ஸ்டான்டாவில் ருமேனியாவின் மிகைல் Kogălniceanu விமானத் தளத்தில் தரையிறங்கின. ஜூலை 9 வரை, அவை பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து கருங்கடல் வான்தளத்தில் ரோந்து செல்லும்.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் இராணுவ அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துகையில், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பிளவுகள் அதிகரித்து வருகின்றன. பாரிஸ் மற்றும் பேர்லின் அவற்றின் முன்மொழிவுக்கு ஆதரவைப் பெறத் தவறியது பற்றி எழுதிய ஜேர்மனிய வாரயிதழ் Der Spiegel பின்வருமாறு எச்சரித்தது: “மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் தோல்வி வெறுமனே இந்நாளுக்குரியதல்ல. ... ஹங்கேரியை அது கையாள்வது தொடர்பாகவும் ஒன்றியம் பிளவுபட்டுள்ளது: கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான பிளவு ஒரு பெரும் இடைவெளியாக மாற அச்சுறுத்துகிறது."
ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் கருத்துக்களைப் பள்ளிகள் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஹங்கேரியின் புதிய LGBT-எதிர்ப்பு சட்டத்தைத் தாக்கும் ஒரு கூட்டு கடிதத்தில் கையெழுத்திட, ஹங்கேரி மற்றும் போர்ச்சுக்கலுக்கு அப்பாற்பட்டு —இது சுழற்சி முறையின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைமையை வகிக்கிறது— எட்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் (பல்கேரியா, குரோஷியா, லித்துவேனியா, போலந்து, ருமேனியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு) மறுத்துவிட்டன. ராய்டர் செய்தி ஒன்று இதை "இந்த முகாம் தலைவர்களிடையே பல ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகவும் தீவிர தனிப்பட்ட மோதல்” என்று குறிப்பிட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் வெடிப்பார்ந்த உட்பிளவுகளுக்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கும் ஒரு நிலையான பொலிஸ் அரசு மற்றும் இராணுவ கட்டமைப்பைக் கொண்டு விடையிறுத்து வருகிறது.
மத்தியதரைக்கடல் மற்றும் ஆபிரிக்கா விஷயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் புலம்பெயர்வோரைத் தடுக்கவும், தஞ்சம் கோரும் அவர்களின் உரிமையை மறுக்கவும் மற்றும் அவர்களை முகாம்களின் சிறையில் அடைக்கவும் நெருக்கமாக செயல்படுமாறு அதன் அப்பிராந்திய கூட்டாளிகளுக்கு அழைப்பு விடுத்தது. "எங்கிருந்து வருகிறார்களோ மற்றும் எவ்வழியில் வருகிறார்களோ அந்த நாடுகளுடன் பரஸ்பரம் ஆதாயமான பங்காண்மைகளும் கூட்டுறவும் தீவிரப்படுத்தப்படும்" என்று அது குறிப்பிட்டது. இது, நூறாயிரக்கணக்கான அகதிகள் படுமோசமான நிலைமைகளில் வைக்கப்பட்டுள்ள துருக்கி, லிபியா, பொஸ்னியா, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் தடுப்பு முகாம்கள் கட்டுவதற்கு வழிவகுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியை அகதிகளுக்கு எதிரான ஒரு முக்கிய பங்காளியாக அடையாளம் கண்டது. "இடம்பெயர்வு, பொது சுகாதாரம், காலநிலை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் போன்ற பரஸ்பர நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் துருக்கியுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தப் பணிகளை" அது பாராட்டியது.
"துருக்கி, ஜோர்டான், லெபனான் மற்றும் அப்பிராந்தியத்தின் பிற பகுதிகளில் சிரிய அகதிகள் ஏற்பாட்டாளர் சமூகங்களுக்கு தொடர்ந்து நிதிவழங்குவதற்கான அதிகாரபூர்வ முன்மொழிவுகளை தாமதமின்றி முன்வைக்குமாறு ஐரோப்பிய கவுன்சில் ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. கிரீஸ் மற்றும் பிரான்சுடன் துருக்கியின் மோதல் நிலவிய "கிழக்கு மத்தியதரைக்கடலில் தீவிரப்பாட்டைக் குறைப்பதை" குறித்தும் மற்றும் துருக்கி உடனான புதிய சுங்க உடன்படிக்கைகளையும் அது பாராட்டியது.
ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை, மாலியில் பிரான்சின் போரையும், பமாகோவில் 2020 ஆகஸ்ட் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் நிறுவப்பட்ட இராணுவ ஆட்சிக் குழுவுடனான அதன் ஒத்துழைப்பையும் அங்கீகரித்தது. "இடைக்கால சாசனத்தை முழுமையாக செயல்படுத்துமாறும்" மற்றும் பெயரளவுக்காகவது மக்கள் ஆட்சிக்குத் திரும்புமாறும், அது "மாலி இடைக்கால அதிகாரிகளுக்கான [அதன்] அழைப்பை" மீண்டும் உறுதிப்படுத்தியது.
கைகௌரூ (Kaigourou) அருகே ஆறு பிரெஞ்சு சிப்பாய்கள் ஒரு கால் குண்டுவெடிப்பில் காயமடைந்து நான்கு நாட்களுக்குப் பின்னர், வடக்கு கோவா பிராந்தியத்தில் இச்சாகாரா அருகே மாலியில் பிரெஞ்சுப் படைகளுக்கு ஆதரவாக இருந்த 12 ஜேர்மன் துருப்புகளும், எந்த நாடென அடையாளம் காணப்படாத மற்றொரு சிப்பாயும் ஒரு கார் குண்டுவெடிப்பில் காயமடைந்த பின்னர் இது வந்தது. ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி அன்னகிரேட் க்ரம்ப்-காரன்பவர் மூன்று ஜேர்மனிய சிப்பாய்கள் கடுமையாக காயமடைந்ததாக தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சுக்கு ஆதரவாக ஆபிரிக்காவில் அதன் பணிகளைப் பாராட்டியது, "ஐரோப்பிய ஒன்றிய CSDP பணிகளைத் தொடர்வது மற்றும் [பிரான்சுக்கு அப்பாற்பட்டு 12 ஐரோப்பிய நாடுகளின் துருப்புகளைக் கொண்ட] டகூபா செயல்படையைப் பயன்படுத்துவது" ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.
இந்த பெருந்தொற்றின் போது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு கூட்டாக 2 ட்ரில்லியன் யூரோக்களுக்கும் கூடுதலாக பணத்தைப் பாய்ச்சும் பல்வேறு பிணையெடுப்புகளில் ஒன்றான, Next Generation ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு மீதான ஒரு மூடிய கதவு விவாதத்துடன் இந்த உச்சிமாநாடு நிறைவடைந்தது. இத்தகைய பிணையெடுப்புகள், ஸ்பெயினில் புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பிரான்சில் ஏற்கனவே தயாரிப்பில் உள்ள ஓய்வூதிய வெட்டுக்கள் போன்ற, தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்ட சிக்கன நடவடிக்கை தாக்குதல்களைக் கொண்டு வழங்கப்படும்.
இந்த உச்சி மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தன இயல்புக்கு கூடுதலாக மறுக்கவியலாத நிரூபணத்தையும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கீழிறக்கி அதற்கு பதிலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசைக் கட்டமைக்கும் போராட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாளர்களை அணித்திரட்டி ஐக்கியப்படுத்துவதற்கான அவசியத்தையும் முன்வைக்கிறது.
