நேட்டோ பாரிய ரஷ்ய எதிர்ப்பு "சீ ப்ரீஸ்" இராணுவ பயிற்சிகளை தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கருங்கடல் பிராந்தியத்தில் இரண்டு வார இராணுவப் பயிற்சிகளைத் தொடங்குவதன் மூலம், நேட்டோ திங்களன்று ரஷ்யாவிற்கு எதிரான தனது ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது. சீ ப்ரீஸ் செயல்பாடு குறைந்தபட்சம் ஜூலை 10 வரை தொடரும்.

ரஷ்யாவின் கிரிமிய பிராந்திய நீர்நிலைக்குள் நுழைந்த பிரிட்டிஷ் போர்க்கப்பலான HMS Defender இன் பாதையில் ரஷ்ய ஆயுதப்படை துப்பாக்கிச் சூடு நடத்தியும், நான்கு குண்டுகளை வீசியும் எச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கி வெறும் ஆறு நாட்களுக்குப் பின்னரான வெடிப்புறும் சூழலில் கருங்கடலில் முன்நிகழ்ந்திராத அளவிற்கு நேட்டோ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மோதலுக்கான அபாயம் இருப்பதாக மாஸ்கோ எச்சரிக்கை விடுத்து இந்த ஆண்டு Sea Breeze இராணுவ பயிற்சியை இரத்து செய்ய வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் ஜூன் 22 அன்று – அமெரிக்க போர்க்கப்பல் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் - விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.

1997 ஆம் ஆண்டு முதல் வருடாந்திரம் நடத்தப்பட்டு வரும் Sea Breeze சூழ்ச்சி நடவடிக்கைகளில் இந்த வாரம் நடத்தப்பட்டது முன்னெப்போதும் இல்லாதளவிற்கு மிகப்பெரியது. அமெரிக்க மற்றும் உக்ரேனிய கடற்படைகள் இணைந்து நடத்தும் Sea Breeze 2021 பயிற்சியில் 32 நாடுகள், 5,000 துருப்புகள், 32 கப்பல்கள், 40 விமானங்கள் மற்றும் 18 சிறப்பு நடவடிக்கைகள் ஈடுபடும். இது நான்கு முதல் ஆறு அழிப்புக்கப்பல்கள் (destroyers) மற்றும் போர்க்கப்பல்களைக் கொண்ட உடனடி எதிர் தாக்குதல் படையான Standing NATO Maritime Group 2 (SNMG2) ஆல் வழிநடத்தப்பட்டு வருகிறது. இத்தாலியின் நேப்போல் ஐ தலைமையிடமாகக் கொண்ட ஆறாவது அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவு முக்கியமாக இதில் பங்கேற்கிறது.

2020 Sea Breeze பயிற்சிகளில் எட்டு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் விமானங்களும் பங்கேற்கின்றன (navy.mil/Ukraine Navy)

“அல்பானியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பல்கேரியா, கனடா, டென்மார்க், எகிப்து, எஸ்தோனியா, பிரான்ஸ், ஜோர்ஜியா, கிரீஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, மால்டோவா, மொராக்கோ, நோர்வே, பாகிஸ்தான், போலந்து, ருமேனியா, செனகல், ஸ்பெயின், தென் கொரியா, சுவீடன், துனிசியா, துருக்கி, உக்ரேன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா” ஆகிய நாடுகளிலிருந்து “கூட்டாளிகளும் கூட்டாளர்களும்” இதில் பங்கேற்பார்கள் என்று நேட்டோ வலைத் தளம் கூறுகிறது.

2021 Sea Breeze பயிற்சிக்கான சுவரொட்டி பங்கேற்கும் நாடுகளைக் காட்டுகிறது (Credit: navi.mil)

கடந்த ஆண்டு ஜூலை 20 முதல் 24 வரை வெறும் நான்கு நாட்களுக்கு Sea Breeze பயிற்சி நடத்தப்பட்டது. இது அமெரிக்கா, உக்ரேன், பல்கேரியா, ஜோர்ஜியா, நோர்வே, ருமேனியா, ஸ்பெயின் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து கப்பல்கள், விமானங்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

நேட்டோ ஜூன் 25 அறிக்கையில், “இந்த பயிற்சி, தரை மற்றும் கடற்படை போர், தரைப்படை சூழ்ச்சி போர், நீர் மூழ்குதல் நடவடிக்கைகள், கடல்சார் தடுப்பு நடவடிக்கைகள், வான் பாதுகாப்பு, சிறப்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பு, நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு போர், மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உட்பட பல போர் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு முன்னர், ஏவுகணை அழிப்புக்கப்பலான USS Ross ஜூன் 26 அன்று கருங்கடலுக்குள் சென்றது. உக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள தூதரான கிறிஸ்டினா கெவியன் (Kristina Kvien), “இது உக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவை உறுதிப்படுத்தும் ஒரு உறுதியான நிரூபணம் என்றும், முன்னெப்போதையும் விட இப்போது இது மிக அவசியம் என்றும்” கூறினார். இந்த அறிக்கை, “ஸ்பெயினின் கடற்படை நிலையம் ரோட்டாவிற்கு முன்னோக்கி அனுப்பப்பட்ட ரோஸ் (Ross) போர்க்கப்பல், ஐரோப்பாவில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஆறாவது கடற்படை பகுதியில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது… ரோஸ் ஸ்பெயினின் ரோட்டாவைத் தளமாகக் கொண்ட அமெரிக்க கடற்படை அழிப்புக்கப்பல்களில் ஒன்றாகும் என்பதுடன், நேட்டோவின் ஒருங்கிணைந்த வான்வழி ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பிற்கு உதவும் பணிக்குழு 65 க்கான தளபதியையும் நியமித்தது” என்று குறிப்பிட்டது.

USS Ross போர்க்கப்பல் கருங்கடலுக்குள் அதன் வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்கியது (Credit: U.S. Naval Forces Europe-Africa/U.S. Sixth Fleet/Twitter)

Sea Breeze நடவடிக்கை பற்றி இந்த மாதம் தான் முறையாக அறிவிக்கப்பட்டது என்றாலும், பல மாதங்களாக இதற்கு திட்டமிடப்பட்டு வந்துள்ளது. ஏப்ரலில், இலண்டன் டைம்ஸ் பத்திரிகை, “மூத்த கடற்படை ஆதாரங்களின்படி, “விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்ட Type 45 அழிப்புக்கப்பலும் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு Type 23 பீரங்கிக்கப்பலும் மத்தியதரைக் கடலிலுள்ள ராயல் கடற்படை பணிக்குழுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, Bosphorus ஜலசந்தி ஊடாக கருங்கடலுக்கு செல்லும்” என்று கூறியது.

கப்பற்படை தாக்குதல் குழு (Carrier Strike Group) மே 23 அன்று இங்கிலாந்தை விட்டு வெளியேறியது, மேலும் Type 45 அழிப்புக்கப்பலான HMS Defender, செவாஸ்டோபோலை தளமாகக் கொண்ட ரஷ்யாவின் பிரதான கருங்கடல் கடற்படையிலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள கிரிமியப் பகுதியில் அதன் ஆத்திரமூட்டலை மேற்கொள்ள கடந்த வாரம் கருங்கடலுக்குள் நுழைந்தது.

Sea Breeze ஐ அறிவிக்கும் நேட்டோ அறிக்கை, “2014 இல் ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டதை,” கண்டித்து, அதற்கு பதிலடியாக “நேட்டோ கருங்கடலில் தனது பிரசன்னத்தை அதிகரித்தது. நேட்டோ உக்ரேனின் இறையாண்மையையும், அதன் பிராந்திய நீர்நிலைகளுக்குள் நீளும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதன் எல்லைகளுக்குள் பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஆதரிக்கிறது. மேலும், கிரிமியாவை ரஷ்யா சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் இணைத்துக் கொண்டதை அங்கீகரிக்கவில்லை, மேலும் அங்கீகரிக்காது என்பதுடன், ரஷ்யாவின் தற்காலிக ஆக்கிரமிப்பைக் கண்டிக்கிறது.”

ரஷ்யா அதன் பிராந்தியத்திற்குள் மேலும் ஊடுருவல்கள் நிகழ்த்தப்படுவதை எதிர்த்து கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோயுக் (Sergei Shoigu), Defender கப்பல் சம்பவத்திற்குப் பின்னர், “கடந்த ஏழு ஆண்டுகளில், ஐரோப்பாவில் அமெரிக்க விமானப் படையின் மூலோபாய குண்டுவீச்சு விமானங்களின் தீவிரம் 14 மடங்கு அதிகரித்துள்ளது” என்று கூறினார். கூட்டணி நாடுகளுடனான ஏழு கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு உக்ரேனில் 2021 இல் மட்டும் தான் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய போர் வெடிப்பு புள்ளிகளில் ஒன்றில் போர் அபாயம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. தனது எல்லைகளில் நேட்டோவின் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பெரிதும் எதிர்ப்பைக் காட்டுகிறது. USS Ross போர்க்கப்பல் கருங்கடலுக்குள் நுழைந்தது முதல் தனது கடற்படை அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னைய நாளில் கிழக்கு மத்தியதரைக் கடலில் ரஷ்யா அதன் சொந்த மிகப்பெரிய அளவிலான இராணுவ பயிற்சிகளைத் தொடங்கியது, இங்கு தான் இங்கிலாந்து/நேட்டோவின் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவின் முக்கிய கப்பலான HMS Queen Elizabeth விமானந்தாங்கி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சூழ்ச்சி நடவடிக்கைகளில், பல போர்க்கப்பல்கள், இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்கள், தொலைதூர தாக்குதல் திறன் கொண்ட Tu-22M3 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் பிற போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, சிரியாவில் மாஸ்கோ நடத்தும் ஹெமீமீம் விமானத் தளத்திலிருந்து (Hemeimeem airbase) இயக்கப்படும் Kinzhal hypersonic ஏவுகணைகளை தாங்கிச் செல்லக்கூடிய இரண்டு MiG-32 ரக போர் விமானங்கள் மத்தியதரைக் கடலில் உள்ள இலக்குகளை நோக்கி தாக்குதல் பயிற்சிகளை நடத்தின. இந்த ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை என்பதுடன், 2,000 கிலோமீட்டர் வரை (அதாவது சுமார் 1,250 மைல்கள்) தொலைதூர தாக்குதல் மட்டத்தைக் கொண்டுள்ளன. “கின்ஷாலை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட போர் விமானங்கள் ரஷ்யாவின் எல்லைகளுக்கு வெளியே நிலைநிறுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்” என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையும் பெரியளவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம், ரஷ்ய கடற்படை அதன் முதல் Yasen-M-Class அணுசக்தி உதவியில் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக்கப்பலும், கட்டமைக்கப்பட்டு வரும் ஏழு கப்பல்களில் முதலாவதுமான Kazan ஐ இயக்கத் தொடங்கியது.

ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளின் இந்த தீவிரம், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் மேற்கில் மேலும் 20 இராணுவ தளங்களை விளாடிமிர் புட்டின் அரசாங்கம் ஸ்தாபிக்கும் என்ற பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு வின் மே 31 அறிவிப்பை தொடர்ந்து நிகழ்கிறது. ரஷ்யாவின் எல்லைகளுக்கு நெருக்கமான நேட்டோவின் சுற்றிவளைப்பு மற்றும் நடவடிக்கைகள் “சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிக்கும் என்பதுடன், தகுந்த எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை எடுக்க எங்களை நிர்ப்பந்திக்கும்,” என்று ஷோயுக் கூறினார்.

கருங்கடலின் ஆபத்துநிறைந்த நிகழ்வுகளை உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில், அழிப்புக்கப்பல்களையும் போர் விமானங்களையும் உள்ளடக்கிய ரஷ்ய இராணுவமும், ஹவாயிலிருந்து 35 மைல் தொலைவுக்குள் ஜூன் 19 அன்று இராணுவ பயிற்சிகளைத் மேற்கொண்டது. டெய்லி மெயிலின் கூற்றுப்படி, இவை “பனிப்போருக்கு பின்னைய மிகப்பெரிய போர் பயிற்சிகளாகும்” என்பதுடன், இதில் “20 போர் விமானங்கள் சூழ குறைந்தது 20 ரஷ்ய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், உதவிக் கப்பல்கள் ஈடுபடும்.”

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், பயிற்சியின் போது, இரண்டு பிரிவுகள் “ஒரு கேலி எதிரியின் விமானந்தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவுக்கு எதிராக அதனைக் கண்டறிதல், எதிர் தாக்குதல் நடத்துதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துதல் போன்ற பணிகளை திட்டமிடும்” என்று கூறினார்.

மாஸ்கோவிற்கு எதிரான நேட்டோவின் பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்கள் எந்த நேரத்திலும் வெளிப்படையான மோதலுக்கு வழிவகுக்கும், அதாவது இது முக்கிய ஏகாதிபத்திய நாடுகளின் இராணுவத் தலைவர்கள் நன்கு அறிந்த ஒரு ஆபத்தாகும்.

HMS Defender போர்க்கப்பல் மீதான ரஷ்யா குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டு வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர், இங்கிலாந்தில் Chalke Valley History Festival நிகழ்ச்சியில் பேசுகையில், இங்கிலாந்தின் ஆயுதப்படை தலைவர் ஜெனரல் சர் நிக் கார்ட்டர், இத்தகைய நிகழ்வுகள் கட்டுப்பாட்டை மீறி ஒரு துப்பாக்கிச் சூடு போராக விரைந்து தீவிரமடையக்கூடும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், “இது இரவில் என்னை படுக்கையில் விழித்திருக்கச் செய்யும் வகையில், தேவையற்ற நடவடிக்கைகளிலிருந்து எழும் ஒரு தவறான கணக்கீடாகும்” என்றும் அவர் கூறினார்.

Sea Breeze நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் இருந்தபோது ஒரு அசாதாரண தலையீட்டைச் செய்து, கிரெம்ளின் எதிர்ப்பு கார்ட்டர், “திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கருங்கடலில் நாம் கண்ட விடயங்கள் நிகழக்கூடியவை தான். என்றாலும், ஒருவர் இதனை கடினமான விடயமாக சிந்திக்க வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் இது செய்யப்படக்கூடாது,” என்றார்.

Loading