கருங்கடலில் பிரிட்டிஷ் போர்க்கப்பலின் ஆத்திரமூட்டல்களில் அமெரிக்காவின் ஈடுபாட்டை புட்டின் வெளிப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கருங்கடலில் கிரிமிய கடற்கரையில் நேட்டோ சக்திகளின் பாரிய மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையடுத்து பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

புதன்கிழமை, Direct Line நிகழ்ச்சியில் பொதுமக்களுடனான வருடாந்திர கேள்வி பதில் அமர்வில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ரஷ்யா உரிமை கோரும் கிரிமிய கடற்கரைப் பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்நுழைந்து பிரிட்டிஷ் அழிப்புக்கப்பலான HMS Defender ஈடுபட்ட ஜூன் 23 நடவடிக்கையில் அமெரிக்க அரசாங்கம் நேரடியாக ஈடுபட்டது பற்றி வெளிப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்ய ரோந்து கப்பல்கள் பிரிட்டிஷ் கப்பல் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், ரஷ்ய போர் விமானங்கள் அதன் பாதையில் குண்டுகளை வீசின.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜூன் 30, 2021, புதன்கிழமை, ரஷ்யாவின் மாஸ்கோவில் தனது வருடாந்திர நேரடி அழைப்பு நிகழ்ச்சியில் தோன்றுகிறார். (Sergei Savostyanov, Sputnik, Kremlin Pool Photo via AP)

ஊடகவியலாளர் யெகாடெரினா பெரேசோவ்ஸ்காயா (Yekaterina Berezovskaya), “இது கிரிமியா அருகிலுள்ள பிரிட்டிஷ் போர்க்கப்பலுடன் தொடர்புடையது. அனைத்து வகைகளிலும், உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்து புட்டின் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த சம்பவம் உலகப் போருக்கு வழிவகுத்திருக்கக்கூடும் என்பதை புட்டின் மறுத்து, “இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை… ஆரம்பத்திலேயே இது ஒரு விரிவான ஆத்திரமூட்டல் நடவடிக்கையாக உள்ளது, இது ஆங்கிலேயர்களால் மட்டுமல்லாமல் அமெரிக்கர்களாலும் நடத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் நமது பிராந்திய நீர்நிலைக்குள் அன்று பிற்பகல் நுழைந்தனர், ஆனால் அதற்கு முன்பாகவே, கிரீஸில் உள்ள நேட்டோ இராணுவ விமான நிலையத்திலிருந்து ஒரு அமெரிக்க மூலோபாய உளவு விமானம் காலை 7.30 மணியளவில் புறப்பட்டது, அதாவது கிரீட்டிலிருந்து புறப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இது பற்றித்தான் நான் விளக்கமளித்தேன், நிச்சயமாக, இது பற்றி எனக்கு எல்லாம் தெரியும். சரியாக நினைவுபடுத்தி கூறினால், விமானத்தின் டெய்ல் எண் 63/9792 ஆகும். அதை நாங்கள் தெளிவாகப் பார்த்தோம், மேலும் கண்காணித்தோம். இராணுவ நோக்கங்களுக்காக [ரஷ்ய பிராந்திய நீர்நிலைக்குள்] அழிப்புக்கப்பல் நுழைந்தது தெளிவாகத் தெரிந்தது, இது ஒரு ஆத்திரமூட்டலைத் தடுக்கும் விதமாக நமது ஆயுதப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும் முயற்சியாக இருந்தது, அதாவது உளவு விமான உதவியுடன் அவர்கள் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதையும், எங்கெல்லாம் நமது போர் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன, அவை எப்படி இயங்குகின்றன என்பதையும் கண்டறிய அவர்கள் முயன்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நாங்கள் அவர்களுக்கு தேவையான தகவல்களை அனுப்பினோம். நான் இதை நழுவ விட்டிருக்கலாம்; இராணுவம் என்னை மன்னிக்கும் என்றே நான் நம்புகிறேன். இது தான் முதல் விடயம்” என்று கூறினார்.

மற்றொரு ஊடகவியலாளர், “சீ ப்ரீஸ் இராணுவப் பயிற்சி தற்போது நடந்து வருகிறது, அதேவேளை நேற்று ஒரு டச்சு போர்க்கப்பலும் அங்கு நின்றுள்ளதே,” என்று கேட்டார்.

செவ்வாயன்று வெளியான ஒரு டச்சு பாதுகாப்பு அமைச்சக அறிக்கை, “முன்னைய வாரம், கருங்கடலில் நின்ற அதன் பீரங்கிக் கப்பல்களில் ஒன்றான Zr.Ms.Eversten க்கு அருகே ரஷ்ய போர் விமானங்கள் ஆபத்தான வகையில் நெருங்கி வந்ததாக” தெரிவித்ததை இது குறித்தது. HMS Defender இன் ஆத்திரமூட்டலுக்கு அடுத்த நாளான ஜூன் 24 அன்று இது நிகழ்ந்ததாக நெதர்லாந்து அரசாங்கம் கூறியது. இந்த அறிக்கை, “குண்டுகளையும், வானிலிருந்து நில மேற்பரப்புக்கு ஏவப்படும் ஏவுகணைகளையும் கொண்ட போர் விமானங்கள் வானிலிருந்து இலக்கு நோக்கி தாக்குதல் நடத்த நோக்கம் கொண்டிருந்தன” என்பதுடன், “பிற்பகல் 3.30 மணி முதல் 8.30 மணிக்குள் “பலமுறை”, “[போர்க்கப்பலை குறிவைத்து] ஆபத்தான வகையில் அதற்கு நெருக்கமாகவும் தாழ்ந்தும் பறந்து போக்கு காட்டும் தாக்குதல்களை நடத்தின” என்று கூறியது. ரஷ்யா அதன் பின்னர் “எவர்ட்சனின் மின்னணு சாதனங்களுக்கு இடையூறு விளைவித்தது.”

எவர்ட்சன் என்பது, இயந்திர துப்பாக்கிகள், செங்குத்து ஏவுகணை ஏவுதல் அமைப்பு, நில மேற்பரப்பில் இருந்து விண்ணுக்கு பாயும் ஏவுகணைகள் மற்றும் ரேதியோன் டொர்பிடோக்களைக் கொண்ட டொர்பிடோ ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத வகைகளைக் கொண்ட ஒரு கடும் ஆயுதமேந்திய போர்க்கப்பலாகும். இது அதிநவீன தொலைதூர மட்ட வான் மற்றும் நில மேற்பரப்பு கண்காணிப்பு ரேடார் அமைப்பைக் கொண்டுள்ளது.

அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களின் நிலையைக் குறிக்கும் ஒரு வழமைக்கு மாறான ஒரு அறிக்கையுடன் புட்டின் பதிலிறுத்தார்: “இது உலகத்தை உலகப் போரின் விளிம்பில் நிறுத்தியதாக நீங்கள் கூறினீர்கள். இல்லை, நிச்சயமாக இல்லை. நாம் அந்த கப்பலை [HMS Defender] மூழ்கடித்திருந்தாலும், இது உலகை மூன்றாம் உலகப் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்திருக்கும் என கற்பனை செய்வது கடினம், ஏனென்றால் இதைச் செய்தவர்களுக்கு அதுபோன்ற போரை வெல்ல முடியாது என்பது தெரியும்.”

அவர் மேலும், “நீங்கள் குறிப்பிட்ட [உலகப் போர் வெடிப்பு போன்ற!] திருப்பமெடுத்த நிகழ்வுகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைந்திருப்போம் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நாம் எதற்காக போராடுகிறோம் என்பது நமக்குத் தெரியும்: நாம் நமக்காக, நமது எதிர்காலத்துக்காக, நமது சொந்த பிரதேசத்தில் போராடுகிறோம்” என்று வெளிப்படையாகக் கூறினார்.

கருங்கடலில், 30 நாடுகளை ஈடுபடுத்தி முன்நிகழ்ந்திராத வகையில் நேட்டோ நடத்தும் மிகப்பெரிய அளவிலான நேட்டோ சீ ப்ரீஸ் நடவடிக்கை பற்றி, புட்டின், “இது, அவற்றை நோக்கி வான் மற்றும் கடல் சார்ந்த ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை பாதுகாக்கும் நம்மை பற்றியது அல்ல; நமது எல்லைகளை நெருங்கி நமது பிராந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த அவர்களைப் பற்றியது, இது ஒட்டுமொத்த சூழ்நிலையில் ஒரு முக்கியமான கூறாகும்” என்று கூறினார்.

உலகளாவிய மோதலின் ஆபத்துக்களைக் குறைக்கும் அதே வேளையில், புட்டின், “ரஷ்யாவின் பொருளாதார இறையாண்மை அதிகரித்து வருவதுடன், அதன் பாதுகாப்பு திறன்களும் மிகவுயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளன” என்று வலியுறுத்தினார். மேலும் அவர், “ரஷ்யா மீது எந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டாலும், ரஷ்யாவை எந்த வகையில் பயமுறுத்தினாலும் ரஷ்யா வளர்ந்து வருகிறது, மேலும் சில விடயங்களில் நமது நாடு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் விஞ்சிவிட்டது… அவர்கள் சில வரம்புகளைத் தாண்டினால், நமது கூட்டாளர்கள் போதும் என்று உணரும் அளவிற்கு நாம் பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்தார்.

அமெரிக்க அரசாங்கம் புட்டினின் அனைத்து கூற்றுக்களையும் உறுதிப்படுத்தியது. புட்டினின் அறிக்கை குறித்து கேட்டதற்கு, அமெரிக்க ஐரோப்பிய கட்டளையகத்தின் பொது விவகாரங்களின் தலைவரான, கடற்படை தளபதி வெண்டி ஸ்னைடர் (Wendy Snyder), “ஆம், எங்கள் விமானங்கள் செயல்பாட்டில் இருந்தன… நாங்கள் எப்போதும் போல, கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்தையும் இயக்கியும், கண்காணித்தும் வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய பிராந்திய நீர்நிலைக்குள் நுழைவதற்கான பொறுப்பற்ற நடவடிக்கைக்கு பல மாதங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம், இங்கிலாந்து பாதுகாப்பு பத்திரிகை வலைத் தளம், நேட்டோவின் சக நாடுகளிலிருந்து நியமிக்கப்பட்ட நேட்டோவின் இங்கிலாந்து தலைமையிலான விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவின் ஒரு பகுதியாக எவர்ட்சன் போர்க்கப்பலை இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் பட்டியலில் சேர்த்தது பற்றி குறிப்பிட்டது. விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு 21 (Carrier Strike Group 21-CSG21) ஐ இங்கிலாந்தின் புதிய 3 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள குயின் எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் வழிநடத்துகிறது, கருங்கடலில் HMS Defender போர்க்கப்பல் அதன் ஆத்திரமூட்டலை நிகழ்த்தியபோது, இது மத்தியதரைக் கடலில் தயாராக இருந்தது.

CSG21 அடுத்து இந்திய பெருங்கடலுக்குச் சென்று பின்னர் தென் சீனக் கடலில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். MoD இன் ஜனவரி அறிக்கை, “இந்த குழு, ராயல் கடற்படை, அமெரிக்க கடற்படை மற்றும் டச்சு கடற்படையிலிருந்து ஒன்றுசேர்க்கப்பட்ட அதிநவீன அழிப்புக்கப்பல்களை உள்ளடக்கியது. அதாவது இது, ராயல் கடற்படையின் Type 45s HMS Diamond மற்றும் HMS Defender மற்றும் அமெரிக்க கடற்படையின் Arleigh Burke-class USS The Sullivans, அத்துடன் பிரிட்டனின் HMS Northumberland மற்றும் HMS Kent மற்றும் டச்சு கடற்படையின் HNLMS Evertsen போன்ற நேட்டோவின் அதிநவீன அழிப்புக்கப்பல்களை உள்ளடக்கியது” என்று தெரிவித்தது.

இதற்கு முன்னர், செப்டம்பர் 2020 இல், குழு பயிற்சி 2020 (GROUPEX) மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை (Joint Warrior Exercises) நடத்திய HMS Queen Elizabeth பணிக்குழுவின் ஒரு பகுதியாக எவர்ட்சன் போர்க்கப்பல் இருந்தது. அந்த நடவடிக்கைகளில், ஒன்பது போர்க்கப்பல்கள், F-35B ரக லைட்னிங் ஜெட் விமானங்கள், 11 கப்பற்படை Air Arm ஹெலிகாப்டர்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. குழு பயிற்சி 2020 என்பது, அக்டோபரில் ராயல் கடற்படை கட்டளைப்படி வட கடலில் பயிற்சிகளை நடத்தியதை உள்ளடக்கியது, “பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஜெட் விமானங்கள் [Queen Elizabeth] விமானந்தாங்கிக் கப்பலில் இருந்து முதன் முறையாக நேரடி ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டன, அதேவேளை புதிதாக நவீனமயமாக்கப்பட்ட உதவிக் கப்பலான RFA Fort Victoria உம் HMS Kent உம், மூன்று ஆண்டுகளில் கடலில் ராயல் கடற்படையிலிருந்து முதல் வெடிமருந்து இடமாற்றத்தை மேற்கொண்டன.” இந்த நடவடிக்கையிலும் அமெரிக்கப் படைகளின் பெரும் ஈடுபாடு இருந்தது. செப்டம்பரில் VMFA-211 இல் இருந்து F-35B ரக தாக்குதல் விமானங்கள் வந்து சேர்ந்தது, “HMS Queen Elizabeth அமெரிக்க கடற்படையிலிருந்து ஒரு பகுதியை பிரித்து முதன்முறையாக நிலைநிறுத்தியதை குறித்தது. இது மேலும், “கூட்டு இராணுவப் பயிற்சியைத் (Exercise Joint Warrior) தொடர்ந்து GroupEx பயிற்சி நடத்தப்பட்டது என்றும், இதில் விமானந்தாங்கிக்கப்பல் தாக்குதல் குழு, வான், தரை மற்றும் கடல் முழுவதிலுமான தொடர்ச்சியான பயிற்சிகளுக்காக ஏனைய நேட்டோ போர்க்கப்பல்களுடன் இணைந்து கொண்டது” என்றும் தெரிவித்தது.

புட்டினின் ஆபத்தான கொந்தளிப்பை போலன்றி, ரஷ்யாவின் நுழைவாயிலில் நேட்டோ ஆயுதப் படைகளின் பாரிய பிரசன்னத்தின் காரணமாக எந்தவொரு சம்பவமும் பேரழிவுகர இராணுவ மோதலுக்கான தீப்பொறியாக அமையும்.

ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சரான சேர்ஜி ரியாப்கோவ் (Sergei Ryabkov), இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால், ரஷ்யாவின் பதிலடி வெறுமனே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு தாக்குதலாக இருக்காது: “இலக்கை குறிவைத்து எங்களால் குண்டு வீசி தாக்க முடியும்…” என்று கூறி HMS Defender கப்பலின் ஆத்திரமூட்டலுக்கு பதிலிறுத்தார்.

“அதே நாளில் [ரஷ்யா உரிமை கோரிய பகுதியை ஆக்கிரமித்ததற்காக HMS Defender மீது குண்டுவீசி தாக்கப்பட்டது], நள்ளிரவில், உரிமை கோரப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் கரையிலிருந்து வெறும் ஐந்து மைல்கள் தொலைவில், அமெரிக்க கடற்படையின் Arleigh Burke class அழிப்புக்கப்பலான USS Ross (DDG-71) கப்பல் உக்ரேனிய ரோந்து படகுடன் சேர்ந்து கண்காணிப்பு சேவைகளில் ஈடுபடுவது தெரிந்தது,” என்று டெய்லி மெயிலின் புதன்கிழமை கட்டுரை தெரிவிப்பதிலிருந்து இந்த கருத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

அந்தக் கட்டுரை, வெளிப்படையாக நம்பிக்கையின்றி, “கப்பல் ஒருபோதும் கிரிமியாவிற்கு அருகில் இல்லை என்று அமெரிக்க கடற்படை மறுத்ததாகவும், கடல்சார் கண்காணிப்பு தரவை வேண்டுமென்றே ஏமாற்றுவதற்கான ஒரு நிகழ்வாக இது இருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும்” கூறியது.

பிரிவு 5 இன் கீழ், நேட்டோ சக்திகள், ஆயுதமேந்திய தாக்குதலுக்குள்ளாகும் ஒரு நேட்டோ நட்பு நாடொன்றை பாதுகாக்க முன்வருகின்றன.

“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடனான [மே 9] சந்திப்பில் ருமேனியா தலைமையிலான ஒன்பது கிழக்கு ஐரோப்பிய நேட்டோ நாடுகளின் குழு கிழக்கு தொகுதியில் ஒரு பெரியளவிலான கூட்டு இராணுவ பிரசன்னத்துக்கு அழைப்பு விடுத்தது” என்று வாஷிங்டன் எக்ஸாமினர் இந்த வாரம் அறிவித்தது.

இதற்கு பைடென் என்ன வாக்குறுதி அளித்தார் என்று வலைத் தளமும் வார இதழும் கேட்டதற்கு, ருமேனிய வெளியுறவு அமைச்சர் போக்டன் அரேஸ்கு (Bogdan Aurescu), “நாடுகடந்த அட்லாண்டிக் பிணைப்பை இன்னும் வலுவாக மாற்றுவதற்கு முக்கியமான… பிரிவு 5 க்கான உறுதிப்பாட்டைப் பொறுத்த வரை ஜனாதிபதி பைடெனின் வாக்குறுதி மிகவும் வலுவானது. அது அட்லாண்டிக்கின் இரண்டு கரைகளையும் ஒன்றிணைப்பது பற்றியது மட்டுமல்ல, மாறாக கூட்டணிக்கான ஒரு மூலோபாய கண்ணோட்டத்தில் இந்த மிக முக்கியமான [பகுதி] உட்பட, இது கருங்கடலை நோக்கி ஐரோப்பா எங்கிலுமாக செல்வதைப் பற்றியது” என்று பதிலளித்தார்.

Loading