ஆத்திரமூட்டும் ஒரு நகர்வாக, இந்தியா சீனாவுடனான அதன் சர்ச்சைக்குரிய எல்லைக்கு 50,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா சீனாவுடனான அதன் சர்ச்சைக்குரிய ஹிமாலய எல்லைப் பகுதிக்கு 50,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அனுப்பியுள்ளது, இந்த நடவடிக்கை சீனாவின் இராணுவ கட்டமைப்புக்கான பதிலிறுப்பு எனக் கூறப்படுகிறது.

போட்டி அணுவாயுத சக்திகள், 1962 இல் ஒரு மாதம் நீடித்த அவர்களது எல்லைப் போருக்குப் பின்னர், கடந்த ஆண்டு முழுமையான போருக்கு நெருக்கமாக வந்தன. இதில் ஜூன் 15, 2020 இரவில் கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) உள்ள ஒரு மலை உச்சியில் நடந்த ஒரு மிகுந்த இரத்தக்களரியான போரும் அடங்கும், இதில் 20 இந்திய மற்றும் 4 சீன சிப்பாய்கள் இறந்தனர், மேலும் இதில் ஆகஸ்ட் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்கள் ஈடுபட்ட ஒரு இந்திய இராணுவ நடவடிக்கையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போதைய நடைமுறை எல்லையின் ஒரு பகுதியான பாங்காங் த்சோ ஏரிக்கு (Pangong Tso lake) அருகேயுள்ள தொடர்ச்சியான மலை முகடுகள் கைப்பற்றப்பட்டதும் அடங்கும். அமெரிக்க செயற்கைக்கோள் உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த மிகுந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை, சீன துருப்புக்கள் போருக்காக துடித்துக் கொண்டிருக்கையில் இது ஒரு வன்முறை மோதலுக்கு எளிதில் வழிவகுத்திருக்கக்கூடும் என்பதை இந்திய அதிகாரிகள் பின்னர் ஒப்புக்கொண்டனர்.

பிப்ரவரி 10, 2021, புதன்கிழமை, இந்தியா-சீனா எல்லையில் லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் கரையில் நிறுத்தப்பட்டுள்ள பீரங்கி வண்டிகள். (Indian Army via AP) [AP Photo/India Army via AP]

இந்தியா சமீபத்தில் துருப்புக்களை அனுப்பியது உட்பட, அதன் வடக்கு எல்லையில் தற்போது குறைந்தது 200,000 துருப்புக்கள், அதிலும் சில அறிக்கைகளின் படி, 250,000 துருப்புக்கள் வரை அங்கு அணிவகுத்துள்ளன. ப்ளூம்பேர்க் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவுடன் 3,000 கிலோமீட்டருக்கு அதிகமாக (அதாவது 2,000 மைல்) நீளும் இந்திய எல்லைப் பகுதி ஊடாக அமைந்துள்ள குறைந்தது ஐந்து இராணுவத் தளங்களுக்கு கூடுதல் துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 20,000 துருப்புக்கள் இந்தியாவின் வசமுள்ள லடாக்கின் லே (Leh) நகருக்கு அனுப்பப்பட்டுள்ளன. சீன-இந்திய எல்லைப் பிரச்சினையில், சீனாவின் வசமுள்ள அக்ஸாய் சின் (Aksai Chin) பகுதிக்கு அருகேயுள்ள கிழக்கு லடாக் தற்போதைய மோதலின் மைய இலக்காக உள்ளது.

இந்தியாவும் அதன் எல்லைப் பகுதிகளில் ஒரு மோதல் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பும் ஒரு தீவிர இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய கோட்டைகளையும், விமானம் ஓடும் தடங்களையும் கட்டமைப்பதுடன், துருப்புக்களையும் போர் தளவாடங்களையும் போர்ப் பகுதிக்கு விரைந்து நகர்த்த ஏதுவாக, சாலை மற்றும் ரயில் பாதைகளையும் அது உருவாக்கி வருகிறது. கடந்த கோடையின் பிற்பகுதியில், பிரான்சிலிருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ள 35 ரஃபால் போர் விமானங்களில் முதல் விமானத்தை பெற்றவுடன் இந்திய விமானப்படை உடனடியாக அதனை இந்திய கட்டுப்பாட்டிலுள்ள லடாக் பகுதிக்கு அனுப்பும்படி கருத்து தெரிவித்தது. வட இந்திய மாநிலமான ஹரியானாவின் அம்பல (Ambala) நகரை தளமாகக் கொண்டு, சீனாவை எதிர்க்கும் நோக்கம் கொண்ட 18 புதிய போர்விமான படைப்பிரிவுகளை இந்தியாவும் உருவாக்கியுள்ளது, மேலும் அதேபோல சீனாவுடனான அதன் எல்லையின் கிழக்குப் பகுதியை காவல் காக்க மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா (Hasimara) விமானத் தளத்தில் கூட விரைவில் ஒரு படைப்பிரிவை உருவாக்க அது உத்தேசித்துள்ளது.

“இந்த விஷயத்தை நன்கறிந்த” நபர்களை மேற்கோள் காட்டி, ப்ளூம்பேர்க் அறிக்கை, இந்திய இராணுவம் மிகுந்த ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை எடுக்க தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது. “அதேசமயம் முன்னர்,” இந்த அறிக்கை, “இந்தியாவின் இராணுவ இருப்பு சீனாவின் நகர்வுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும், மீண்டும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதானது, ‘தாக்குதலிருந்து பாதுகாப்பு’ என்றறியப்படும் ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில், தேவைப்பட்டால் சீனப் பிராந்தியத்தை தாக்கி கைப்பற்ற இந்திய தளபதிகளுக்கு அதிகப்படியான வாய்ப்புக்களை அது வழங்கும்” என்றும் விளக்கமளித்தது. மேலும் இந்த அறிக்கை, இந்தியப் படைகள் தற்போது அதிகளவு இடம்பெயரும் வாய்ப்பைக் கொண்டுள்ளன என்றும் கூறியது. இதற்கு சமீபத்தில் பெறப்பட்ட அமெரிக்க தயாரிப்பு ஹெலிகாப்டர்கள் தான் காரணமாகும், இது சிப்பாய்களையும், பிரிட்டிஷ் தயாரிப்பு M777 ரக ஹோவிட்சர் உள்ளிட்ட பீரங்கிகளையும் ஹிமாலயத்திலிருந்து “பள்ளத்தாக்கிலிருந்து பள்ளத்தாக்கிற்கு” எடுத்துச் செல்ல முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிர வலதுசாரி பாரதிய ஜனதாக் கட்சி தலைமையில், இந்திய அதிகாரிகளின் பட்டாளமும் மற்றும் அதன் அரசாங்கமும், சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பலமுறை பெருமை பீற்றின. கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “தூண்டப்பட்டால், இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும்” என்று உறுதியளித்தார். உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்துடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுவாயுதங்கள் உட்பட, பேரழிவுகர ஆயுதங்களை இந்தியா நிச்சயமாக வைத்துள்ளது, இதன் அர்த்தம் என்னவென்றால், எந்தவொரு சீன-இந்திய மோதலும், தவறான கணக்கீட்டின் காரணமாக வெடித்தாலும் மற்றும் ஆரம்பத்தில் அந்தந்த எல்லைப் பகுதி வரம்புகளுக்கு அது மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, ஆசியா மற்றும் உலக மக்களை அளவிட முடியாத பேரழிவிற்குள் விரைந்து மூழ்கடிக்கவே அது அச்சுறுத்துகிறது.

ஆனால் இரு நாடுகளும் தோராயமாக ஒரே அளவு மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரத்தை விட சீனாவின் பொருளாதாரம் நான்கு மடங்கிற்கு மேலாக பெரியது என்பதுடன், பெரும்பாலான தொழில்நுட்ப களங்களில் இந்தியாவை விட சீனா பெரிதும் மேம்பட்டுள்ளது. இந்திய உள்கட்டமைப்பின் மோசமான நிலை, கோவிட்-19 தொற்றுநோயின் பேரழிவுகர தாக்கத்தினால், அதாவது உத்தியோகபூர்வ மொத்த குறைமதிப்பீட்டின்படி கூட, 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டது மற்றும் 400,000 க்கும் அதிகமானவர்கள் அதற்கு பலியானது என்பனவற்றின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதிலும், இந்தியா குறிப்பிடத்தக்க தடுப்பூசி உற்பத்தி திறனைக் கொண்டிருந்தாலும், இன்றுவரை இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சீனாவுடனான தற்போதைய எல்லை மோதலில் புது டெல்லியின் ஆக்கிரோஷமான இந்த நிலைப்பாடு வாஷிங்டனின் ஆதரவு மற்றும் ஊக்கமளிப்புடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கிற்கும் புது டெல்லிக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்திய இராணுவ அதிகாரிகளும் சீன மக்கள் விடுதலை இராணுவ (Chinese People’s Liberation Army) அதிகாரிகளும் இலையுதிர் காலத்திலும் மற்றும் குளிர்கால ஆரம்பத்திலும் படைகளை மீளப்பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தினர், அதனால் பாங்காங் த்சோ ஏரிக்கு அருகே இரு தரப்பினரும் படைகளை பின்வாங்கச் செய்தனர். இருப்பினும், ஜோ பைடென் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று சற்று நேரத்திலேயே இந்த பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துப்போயின.

பதவியேற்றவுடனேயே, பைடென் தனது ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கீழ், சீனாவுக்கு எதிராக வாஷிங்டன் அதன் பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ-மூலோபாய ரீதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என்பதையும், மேலும் தேவைபட்டால், போரின் மூலமாகக் கூட சீனாவின் “முன்னேற்றத்தை” தடுக்கும் அமெரிக்காவின் மூலோபாயத்தில் இந்தியாவும் இந்தியப் பெருங்கடலும் தான் அதன் மையமாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்துவதற்கு சிறிதும் தாமதிக்கவில்லை. மார்ச் மாதத்தில், அரசாங்கத்தின் தலைவர்களுக்கான முன்நிகழ்ந்திராத முதல் நாற்கர கூட்டத்தை பைடென் நடத்தினார், இது அமெரிக்காவின் தலைமையில், இந்தியா மற்றும் அதன் மிக முக்கிய ஆசிய-பசிபிக் ஒப்பந்த நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவும் உட்பட நடத்தப்பட்ட, அரை-இராணுவ கூட்டணிக்கான ஒரு “மூலோபாய பேச்சுவார்த்தை” ஆகும். அதனையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின் முதல் உயர்மட்ட பைடென் நிர்வாக அதிகாரியாக புது டெல்லிக்கு விஜயம் செய்தார். வாஷிங்டனுடனான இராணுவ-மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு சைகையாக, ஆஸ்டின் மோடியுடன் ஒத்துப்போனார்.

கடந்த ஜூலை முதல், இந்திய கடற்படைக்கும் இந்தியாவிற்கு அருகே கடந்து சென்ற அமெரிக்க விமானப் பணிக்குழுக்களுக்கும் இடையில் உடனடி இராணுவப் பயிற்சிகள் கிட்டத்தட்ட வழமைபோல் நடந்தன, சீனாவிற்கு விடுக்கப்படும் தெளிவான செய்தி என்னவென்றால், அதன் பொருளாதாரம் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதிக்கான மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இந்தியப் பெருங்கடல் சார்ந்த ஏற்றுமதிகளையும் பெரிதும் சார்ந்துள்ளது என்பதை உணர்த்துவதே. ஜப்பானைத் தளமாகக் கொண்ட USS Ronald Reagan விமானந்தாங்கிக்கப்பல் தாக்குதல் குழு, வட அரேபிய கடலுக்குச் செல்லும் வழியில் இந்தியாவை கடந்து சென்றபோது, ஜூன் 23-24 தேதிகளில் இதுபோன்ற மிக சமீபத்திய பயிற்சி நடத்தப்பட்டது, இது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறுவதற்கு துணைபுரிகிறது. இந்திய கடற்படை செய்தி வெளியீட்டின்படி, இந்த பயிற்சி, இரண்டு இராணுவங்களின் “போரிடும் திறமைகளுக்கு” மெருகூட்டுவதையும், “ஒருங்கிணைந்த சக்தியாக அவர்களது இயங்குதன்மையை” மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் நீர்மூழ்கிக்கப்பல் போர் எதிர்ப்பை பயிற்சி செய்வதிலும் இது ஈடுப்பட்டது.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட மே மாதம் தொடங்கிய தற்போதைய இந்திய-சீன எல்லை பிரச்சினையில் வாஷிங்டன் ஒரு ஊடுருவும் பங்கைக் கொண்டுள்ளது. சீனா மற்றும் பூட்டான் இரு நாடுகளும் உரிமை கோரிய இமயமலை பீடபூமியில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் நேரடியாக மோதிக்கொண்டபோது, 2017 டோக்லாம் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரண்பட்ட வகையில், அமெரிக்கா நடுநிலை வகிப்பதாக எந்தவித பாசாங்கும் செய்யாமல், விரைந்து சீனாவை “ஆக்கிரமிப்பாளர்” என முத்திரை குத்தியது. மேலும், இந்திய-சீன எல்லைப் பிரச்சினையை தென் சீனக் கடலில் சீனா “சட்டவிரோதமான” நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறும் அதன் குற்றச்சாட்டுக்களுடன் இணைப்பதன் மூலம் அது மேலும் விரோதத்தை அதிகரித்தது. தென் சீனக் கடலில் சீனாவின் “விரிவாக்கத்தை” அமெரிக்கா எதிர்ப்பது, இந்தோ-பசிபிக் பகுதியில் அது தனது இராணுவத் திறன்களை பெருமளவில் கட்டியெழுப்புவதற்கு முன்னேறியுள்ளதற்கான முக்கிய சாக்குப்போக்களில் ஒன்றாகும் என்பதுடன், சீனாவின் கரையில் அதன் ஆத்திரமூட்டும் “கடல்வழி சுதந்திர” பயிற்சிகளை நடத்துவதற்கும் காரணமாக்குவதாகும்.

இந்தியாவின் மோசடி முதலாளித்துவ உயரடுக்கின் வலுவான ஆதரவுடன், மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம், காங்கிரஸ் கட்சி தலைமையிலான அதன் முன்னோடிகளால் எரியூட்டப்பட்ட பாதையை பின்பற்றி வந்துள்ளதுடன், நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்வதன் மூலம் புது டெல்லி அதன் வல்லரசாகும் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியும் என்ற சூதாட்டத்தில், சீனாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் இந்தியாவை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது. இந்த முடிவை நோக்கி, அதன் முதல் ஆறு ஆண்டுகால பதவிக் காலத்தில் பிஜேபி அரசாங்கம், அமெரிக்க இராணுவப் படைகளின் “ஓய்விற்கும் மறுவிநியோகத்திற்கும்” இந்திய துறைமுகங்களையும் விமானத் தளங்களையும் திறந்துவிட்டது, கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு பென்டகன் வலியுறுத்தும் ஏனைய ஒப்பந்தங்களிலும் அது கையெழுத்திட்டது, மற்றும் தென் சீனக் கடலில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.

ஆனால் கடந்த 14 மாதங்களில், தொற்றுநோயால் சீர்குலைந்து, இந்தியாவின் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பொருளாதாரம் முன்நிகழ்ந்திராத வகையில் மேலும் சுருங்கியதால், மோடி அரசாங்கம் இவையனைத்தையும் ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அமெரிக்கா, மற்றும் அதன் நெருங்கிய பிராந்திய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான இந்தியாவின் இருதரப்பு, முத்தரப்பு, மற்றும் நாற்கர உறவுகளின் மிகப் பரந்த விரிவாக்கத்தை நியாயப்படுத்த சீனாவுடனான இந்தியாவின் எல்லைத் தகராறு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவும் இதுவரை அதன் கட்டைவிரலின் கீழ் வைக்க முயன்ற இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான, மாலத்தீவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் கையெழுத்திடும் வாஷிங்டனை எதிர்ப்பதை கைவிடுவது உட்பட, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதுமான சீன செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்காவுடனான தனது ஒத்துழைப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க மூலோபாய தாக்குதலில் இந்தியா எந்தளவிற்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதற்கான மேலதிக அறிகுறியாக, கடந்த இலையுதிர்காலத்தில் சீனாவை எதிர்ப்பதை மையமாகக் கொண்ட அமெரிக்க தலைமையிலான Five Eyes உலகளாவிய உளவு நடவடிக்கை கூட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் இணைந்துகொண்டது உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான சிற்றரசர்களாகும் வாய்ப்பை இந்திய மக்களுக்கு வழங்குவதாக கூறி, மோடி அரசாங்கமும் இந்திய முதலாளித்துவ வர்க்கமும், கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மோடி சமீபத்தில் அழைக்கப்பட்டது, இந்தியாவை சீனாவுக்கு ஒரு போட்டி உற்பத்தி சங்கிலி மையமாக மாற்றுவதற்கு உதவியது, மற்றும் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களின் முக்கிய முதலீடுகள் கிடைத்தது ஆகியவைற்றைப் போல, பெரியளவில் சர்வதேச முக்கியத்துவத்துடன் தங்களது வெகுமதியை பெறுவதற்கு நம்பிக்கை கொண்டுள்ளன.

வாஷிங்டன் மற்றும் ஏனைய அரசாங்கங்கள் மற்றும் ஆளும் உயரடுக்குகளைப் போல, கோவிட்-19 தொற்றுநோயை பேரழிவுகரமான முறையில் கையாண்டது குறித்த கோபத்தைத் திசைதிருப்பும் ஒரு வழிமுறையாக இந்தியாவும் சீனாவுக்கு எதிரான விரோதத்தைத் தூண்டிவிடுகிறது. முதலில் பாசிச ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்டு, சமீபத்தில் பைடென் நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டதான, கோவிட்-19 இன் தோற்றம் பற்றிய வூஹான் ஆய்வக சதி கோட்பாட்டிற்கு சமீபத்திய வாரங்களில் இந்திய ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்துள்ளன.

இந்தியாவின் ஆக்கிரோஷமான புதிய எல்லைப் பகுதி இராணுவ அணிவகுப்புக்கு பெய்ஜிங்கின் உத்தியோகபூர்வ பதில் ஒப்பீட்டளவில் முடக்கப்பட்டுள்ளது. அதன் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் நிலைமை தொடர்ந்து சீராக உள்ளது என்று வலியுறுத்தியுள்ளதுடன், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தற்போதைய பிரச்சினையை தீர்க்க மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். “இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் நிலைமையை தணிப்பதையும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, நிலைமையை தலைகீழாக மாற்றுவதல்ல,” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin) கூறினார். எவ்வாறாயினும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாளித்துவ மீட்டெடுப்பின் மூலம் உருவாக்கப்பட்ட தன்னலக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெய்ஜிங் ஆட்சியிடம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எந்தவித தீர்வும் இல்லை. மாறாக அது, சீன தேசிய பேரினவாதத்தை தூண்டிவிடுவது, அதன் சொந்த இராணுவ கட்டமைப்பைத் தொடர்ந்து மேற்கொள்வது, மற்றும் சலுகைகளை வழங்குவதன் மூலம் வாஷிங்டனை சமாதானப்படுத்த தீவிரமாக முயற்சிப்பது ஆகியவற்றிற்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்தியாவிற்கும், பல தசாப்தங்களாக பெய்ஜிங்கின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகவுள்ள பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்து வரும் பிற்போக்குத்தனமான மூலோபாய மோதலும், மற்றும் சீன-இந்திய எல்லைப் பிரச்சினையும், எப்போதும் ஆழமடைந்து வரும் அமெரிக்க-சீன புவிசார் மூலோபாய போட்டியிலிருந்து பிரிக்கமுடியாத அளவிற்கு அதனுடன் மூழ்கியுள்ளன, இது மூன்று பிரச்சினைகளின் வெடிக்கும் தன்மையை பெரிதும் அதிகரித்துள்ளது. வீழ்ச்சியடைந்த முதலாளித்துவம் மனிதகுலத்தை உலகளாவிய மோதலில் மூழ்கடிப்பதைத் தடுக்க, சோசலிசப் புரட்சியின் மூலம் தேசிய அடிப்படையிலான போட்டி முதலாளித்துவ குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும்.

Loading