முன்னோக்கு

வொல்வோவில் வர்க்க போரும், சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைப்பதற்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ஜினியாவின் டப்ளின் வொல்வோ ட்ரக் ஆலையில் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களில் 60 சதவீத்தினரால் எதிர்த்து வாக்களிக்கப்பட்ட ஒப்பந்த முன்வரைவு மீது மறுவாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) அறிவித்தது.

ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் 'முட்டுச்சந்தை' எட்டிவிட்டதாகவும், தொழிலாளர்கள் நிராகரித்த அந்த ஒப்பந்தத்தை அது தன்னிச்சையாக திணிக்க நகர்ந்து வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளதைப் பற்றிய ஓர் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து UAW இன் இந்த அசாதாரண நடவடிக்கை வந்தது.

தொழிலாளர்கள் மீது வொல்வோ போர் பிரகடனம் செய்து வருகிறது, ஐக்கிய வாகனத்துறை சங்கமோ வேலைநிறுத்தத்தை உடைக்கும் அவர்களது நடவடிக்கைக்கு மூடிமறைப்பை வழங்கி வருகிறது. UAW சங்கத்தின் 2069 உள்ளூர் கிளை தலைவர் மாட் ப்ளாண்டினோ, நிறுவனம் வேலைநிறுத்தத்தை உடைக்க முயற்சித்து வருகிறது என்பதை ஒப்புக்கொண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டார் என்றாலும், அனேகமாக 'தொழிலாளர் மீதான நியாயமற்ற குற்றச்சாட்டு' வழக்கு பதிவு செய்வதைத் தவிர UAW வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார், அந்த சங்கத்தின் கருத்துப்படி, அந்த வழக்கு “தீர்க்கப்பட மாதக் கணக்கில் அல்லது ஆண்டுக்கணக்கில் ஆகலாம்.”

இதன் அர்த்தம், புதன்கிழமை 'மறுவாக்களிப்பின்' முடிவு என்னவாக இருந்தாலும், தொழிலாளர்கள் நிராகரித்துள்ள அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்படுவார்கள் என்று UAW தொழிலாளர்களுக்குக் கூறுகிறது.

Volvo Trucks workers strike in Dublin, Virginia (Photo: UAW local 2069)

உண்மையில் நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே எந்த 'முட்டுக்கட்டையும்' இல்லை, மாறாக ஒருபுறம் வொல்வோவுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் மறுபுறம் UAW க்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் தான் 'முட்டுக்கட்டை' உள்ளது. வொல்வோ போராட்டம் நெடுகிலும், நிர்வாகத்தின் கோரிக்கைகளை திணிப்பதற்காக UAW வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களைத் திட்டமிட்டு தனிமைப்படுத்தியுள்ளது. அவர்கள் வாக்களித்த அந்த ஒப்பந்தங்களை முழுவதும் பார்ப்பதற்குக் கூட தொழிலாளர்களுக்கு அது உரிமை கொடுக்காமல், வேலைநிறுத்தம் நடந்து வருகிறது என்பதைக் கூட அதன் உறுப்பினர்களுக்குக் கூற மறுத்ததன் மூலம் சாமர்த்தியமாக அந்த போராட்டத்தை இருட்டடிப்பு செய்துள்ளது, மேலும் வாரத்திற்கு 275 டாலர் வேலைநிறுத்த சம்பளம் வழங்கி தொழிலாளர்களைப் பட்டினியில் கிடத்தியது.

வொல்வோ தொழிலாளர்களின் 'வேண்டாம்' என்ற எதிர்ப்பு வாக்குகள், அதற்கு முந்தைய இரண்டு ஒப்பந்த முன்வரைவுகளை 90 சதவீத்தினர் நிராகரித்த பின்னர் வெள்ளியன்று வருகிறது. அது, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் அமைப்புக்களுடன் நேரடி மோதலுக்குக் கொண்டு வரும், அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க கிளர்ச்சி மற்றும் போர்குணத்தின் பாகமாக உள்ளது.

  • பேக்கரி, மிட்டாய் தயாரிப்புத்துறை, புகையிலை துறை தொழிலாளர்கள் மற்றும் Grain Millers ஆலை தொழிலாளர்கள் சங்கத்தால் (BCTGM) ஆதரிக்கப்பட்ட நான்காவது ஒப்பந்தத்தை நிராகரித்த பின்னர் திண்பண்ட உற்பத்தி ஆலையான கன்சாஸ், டோபிகாவில் உள்ள Frito-Lay ஆலையில் அண்மித்து 600 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர். BCTGM சங்கம் இந்த போராட்டத்தைத் தனிமைப்படுத்தி வருவதுடன், மறியல் களத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்த சம்பளமாக வாரத்திற்கு வெறும் 105 டாலர் வழங்கி பட்டினியில் கிடத்தி வருகிறது.
  • இண்டியானா டெர்ரே ஹாட்டில், SEIU உடன் இணைந்த தொழிலாளர்கள் ஐக்கிய சங்கம் ஜூலை 3 இல் ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக திணிப்பதை அறிவித்தது, Amcor நிறுவனத்தின் பண்டங்களை மூடி அடைக்கும் 460 தொழிலாளர்கள் இதை நிராகரித்து வாக்களித்திருந்தனர். தொழிலாளர்களின் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்பட்டு வரும் அந்த ஒப்பந்தத்தின் மீது தொழிலாளர்கள் வாக்களிப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒப்பந்தத்தைப் பார்க்கவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
  • பென்சில்வேனியா மற்றும் ஏனைய நான்கு மாநிலங்களில் உள்ள Allegheny Technologies (ATI) நிறுவனத்தில் சுமார் 1,300 தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இது ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கத்தால் (USW) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வேலைகளை வெட்டும் மற்றும் பணவீக்க விகிதத்தை விட குறைவான சம்பள உயர்வுகளைக் கொண்ட ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக USW கடந்த வாரம் அறிவித்தது. தொழிலாளர்கள் செவ்வாயன்று இந்த ஒப்பந்தம் மீது வாக்களிக்கின்றனர்.
  • அலபாமாவில், சுரங்கத் தொழிலாளர்களை மறியல் களத்தில் தனிமைப்படுத்தி, எதிர்ப்பை மிரட்டுவதற்காக சரீரரீதியான வன்முறையில் தஞ்சமடைந்த அமெரிக்க ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்த பின்னர், அங்கே 1,100 சுரங்கத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுபோக்கு சர்வதேச அளவில் கட்டவிழ்ந்து வருகிறது. பெல்ஜியத்தில், வொல்வோ கார்ஸ் நிறுவன (வொல்வோ டிரக் நிறுவனத்திற்குச் சொந்தமானதல்ல) தொழிலாளர்கள் வேலை வாரத்தை நீட்டிக்கும் ஒரு நிறுவன-நிர்வாக ஒப்பந்தத்திற்கு எதிராக வியாழக்கிழமையிலிருந்து, உற்பத்தியை நிறுத்த திடீர் நடவடிக்கையைத் தொடங்கினர். கனடாவில், ஒன்டாரியோவின் சுட்பரியில் 2,450 Vale சுரங்கத் தொழிலாளர்கள், தொழிற்சங்க ஆதரவு பெற்ற விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை நிராகரித்த பின்னர் ஆறு வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியில் ஆயிரக்கணக்கான மின்சாரத் தொழிலாளர்கள் Tes-İş தொழிற்சங்கம் ஒப்புக் கொண்ட ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து போராட தொடர்ச்சியாக தன்னிச்சையான வேலைநிறுத்தங்களைத் தொடங்கியுள்ளனர்.

வர்க்கப் போராட்டத்தின் இந்த வளர்ச்சியானது, தொழிற்சங்கங்களே தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒரே சட்டபூர்வ வடிவமாக சித்தரிக்கும் போலி-இடது அமைப்புக்களின் முயற்சிகளை முற்றிலும் மறுத்தளிக்கிறது.

சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதற்காக ஒன்றை வெளிப்படுத்துங்கள் (Exhibit One) என்று நாம் அழைப்பு விடுத்து வரும் நிலையில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் அதனுடன் இணைந்த ஜாகோபின் இதழ் போன்ற போலி-இடது அமைப்புக்கள் உட்பட அதிகாரத்துவ எந்திரத்தின் இந்த பாதுகாவலர்கள் சோசலிச சமத்துவக் கட்சியை 'குறுங்குழுவாதமாக' குறிப்பிடுகின்றன. 'குறுங்குழுவாதம்' என்பதன் மூலம், அவை தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களிடையே செயல்படாமல் இருப்பதாக கூறுவதை அர்த்தப்படுத்தவில்லை. உண்மையில் சொல்லப் போனால் தொழிலாளர்களின் சுயாதீனமான முனைவை அபிவிருத்தி செய்வதில் SEP க்கு வெளியே, தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவ அங்கே வேறெந்த அமைப்பும் இல்லை.

மாறாக, சாமானிய தொழிலாளர் அமைப்புகளை எதிர்க்கும் இந்த எதிர்ப்பாளர்கள் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சிகர இயக்கத்தின் வளர்ச்சியால் பீதியுற்றுள்ளனர். அவை, வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கான அத்தியாவசிய கருவிகளாக தொழிற்சங்கங்களைச் சரியாக காணும் ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளுடன், பைடென் நிர்வாகம் உள்ளடங்கலாக, அணி சேர்ந்துள்ளன. உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் நோக்கம், அரசு மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு 'தொழிலாளர் இயக்கத்தை' நிலைநிறுத்துவதாகும். பல தசாப்தங்களில் மிக முக்கியமான தொழிலாள வர்க்க போராட்டங்களில் ஒன்றான வொல்வோ வேலைநிறுத்தம் குறித்து அவர்கள் எதுவுமே எழுதவில்லை என்ற உண்மையை ஒருவர் வேறு எவ்வாறு விளங்கப்படுத்த முடியும்?

தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் தொழிலாளர்களுக்கு பதிலளிக்கும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை, போராட்டத்திற்கான சுயாதீனமான அமைப்புகளாக உருவாக்குவது தொழிலாள வர்க்கத்தின் எதிர்தாக்குதலுக்கு அவசியமாகும்.

ஏப்ரலில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கான முன்முயற்சியைத் தொடங்கியது. 'சர்வதேச அளவில் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் தொழிலாளர்களின் சுயாதீனமான, ஜனநாயகரீதியான மற்றும் போர்க்குணமிக்க சாமானிய அமைப்புகளின் புதிய வடிவங்களுக்கான கட்டமைப்பை உருவாக்க,” “IWA-RFC” பணியாற்றும் என்றது எழுதியது. தொழிலாள வர்க்கம் போராட தயாராக உள்ளது. ஆனால் அதன் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் நசுக்கும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புக்களால் அது கட்டிப் போடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை மாதங்கள் இந்த முன்முயற்சியின் சரியானதன்மையை ஊர்ஜிதப்படுத்தி உள்ளன. வொல்வோ தொழிலாளர்கள் விஷயத்தில், நிறுவனத்தின் கட்டளைகளையும் மற்றும் தோல்வியைத் திணிக்க UAW இன் முயற்சிகளையும் எதிர்ப்பதற்கான அவர்களின் ஆற்றல், NRV இல் ஒருங்கிணைந்த எதிர்ப்பைக் கொண்டுள்ள வொல்வோ ஆலை சாமானிய தொழிலாளர் குழுவின் அபிவிருத்தியுடன் பிணைந்துள்ளது. இந்த தொழிலாளர்கள், சர்வதேச அளவில் தொழிலாளர்களிடமிருந்து வரும் ஆதரவு அறிக்கைகள் மற்றும் கடந்த ஒப்பந்த வாக்கெடுப்புக்கு முன்னரே வெடித்த வொல்வோ கார்ஸ் ஆலையின் தன்னிச்சையான நடவடிக்கை ஆகியவற்றாலும் மிகப் பெரியளவில் பலமடைந்துள்ளனர்.

வொல்வோவில் போராட்டம் நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக பெருநிறுவன தொழிற்சங்கங்களால் வர்க்கப் போராட்டம் நசுக்கப்பட்டமை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த தொற்றுநோயும், முன்னெப்போதும் இல்லாத வகையில் செல்வந்தர்களுக்குச் செல்வசெழிப்பை கைமாற்றியதுடன் சேர்ந்து பாரியளவில் மரணங்களுக்கு இட்டுச் சென்ற ஆளும் வர்க்க விடையிறுப்பும், ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையையும் ஆழமாக மதிப்பிழக்கச் செய்துள்ளதுடன், உலகெங்கிலும் தொழிலாளர்களின் ஒரு புரட்சிகர மேலெழுச்சிக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.

சாமானியத் தொழிலாளர் குழுவில் உள்ளவர்களில் பலர் தங்களை இன்னும் சோசலிஸ்டுகளாக கருதவில்லை. அவர்களின் வேலைநிறுத்தம் ஜெயிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள், அதில் வெற்றி பெற முடியும் என்பதோடு அதை ஜெயித்தாக ஆக வேண்டும். தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலை இனியும் ஏற்க தயாராக இல்லாத, அதிகரித்தளவில் போர்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் பாகமாக அவர்கள் இருக்கிறார்கள்.

சோசலிஸ்டுகளின் பொறுப்பு ஒதுங்கி இருப்பதல்ல, மாறாக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள போராட்டங்களின் சமூக மற்றும் அரசியல் தாக்கங்களின் ஆழமான புரிதலை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கும் அதேவேளையில், அவர்களின் சுயாதீனமான அமைப்பு மற்றும் முன்முயற்சியின் அபிவிருத்திக்கு அவர்களுக்கு உதவுவதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களுக்குப் பின்னால் பரந்த அளவில் தொழிலாள வர்க்கத்தைச் சாத்தியமானளவுக்கு அணிதிரட்ட அழைப்பு விடுக்கிறது. வொல்வோ நிர்வாகம் மற்றும் UAW ஐ எதிர்த்து அறைகூவல் விடுத்து அவர்கள் தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

ஆனால் அவர்களால் இந்தப் போராட்டத்தைத் தனியாக போராட முடியாது. வேர்ஜீனியாவின் டப்ளின் ஆலையை மீண்டும் திறந்து இந்த வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கான அச்சுறுத்தலுக்கு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வொல்வோ செயல்பாடுகளை நிறுத்துவதன் மூலமாக, தொழிலாளர்கள் விடையிறுக்க வேண்டும். இந்த போராட்டம் வாகனத் தொழில்துறை மற்றும் அதற்கு அப்பாலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தொழில்துறை அடிமைமுறை நிலைமைகளை டப்ளினில் நடைமுறைப்படுத்த முடியும் என்றால், டெட்ராய்ட் மற்றும் சிகாகோவின் கென்ட் மற்றும் சுட்பரியிலும் அவற்றைத் திணிக்க முடியும்.

ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் கட்டமைப்பதன் மூலமாக வொல்வோவில் நடக்கும் இந்த வர்க்க போருக்கு விடையிறுக்க வேண்டும்.

Loading