பிரெஞ்சு யூத இனப்படுகொலையிலிருந்து உயிர்பிழைத்தவர் அதிவலதின் தடுப்பூசி-எதிர்ப்பு போராட்டங்களைக் கண்டிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 18 ஞாயிறன்று, பாரிஸில் யூத தியாகிகள் சதுக்கத்தில் (Carré des Martyrs juifs) ஒரு நினைவுச் சேவை நடத்தப்பட்டது. பிரான்சில் இனவாதம் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு தினத்தை குறிக்கும் நினைவார்த்த நிகழ்வுகளின் பாகமாக நடத்தப்பட்ட அது, பல பொது இடங்களில் நுழைய வேண்டுமானால் கோவிட்-19 க்கு எதிராக இரண்டு தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்தும் ஆவணமோ அல்லது நோய்தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை ஆவணமோ கோரும், மக்ரோன் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட 'சுகாதார அனுமதிச்சீட்டுக்கு' எதிராக அதிவலது நடத்திய சனிக்கிழமை போராட்டங்களுக்கு அடுத்த நாள் நடத்தப்பட்டது.

அந்த நிகழ்வில், 94 வயதான யூத இனப்படுகொலையிலிருந்து உயிர் பிழைத்த ஜோசப் சுவார்க் (Joseph Szwarc), தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரகர்களையும் இரண்டாம் உலகப் போரின் போது கொலை செய்யப்பட்ட 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களையும் ஒப்பிடுவதற்குப் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார். விச்சி பிரெஞ்சு மற்றும் நாஜி படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 75,000 பிரெஞ்சு யூதர்களில், போரின் முடிவில் 3,000 பேர் மட்டுமே பிரான்சுக்குத் திரும்பினர். நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி, மக்கள் வெறுப்பதற்காக பிரான்சிலிருந்த யூதர்களைத் தனித்துக் காட்டுவதற்காகவும், அவர்களை மரண முகாம்களுக்கு அனுப்புவதற்காகவும் அவர்கள் ஒரு மஞ்சள் நட்சத்திர அடையாளத்தை அணிய வேண்டும் என்று கோரியது.

மரியோன் மரிஷால் லு பென் மற்றும் நவ-பாசிச தேசபக்தர்கள் கட்சியின் தலைவரான புளோரியான் பிலிப்போ உட்பட முன்னணி நவ-பாசிசவாதிகள் இந்த 'சுகாதார-அனுமதிச்சீட்டு' எதிர்ப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். தடுப்பூசிகளை எதிர்க்கும் தாராளவாத குழுக்கள் அல்லது போலி-இடது நடுத்தர வர்க்க குழுக்களும் அதிவலது அணிவகுப்பாளர்களுடன் இணைந்திருந்த நிலையில், பத்தாயிரக் கணக்கானோர் பிரான்ஸ் எங்கிலும் அணிவகுத்தனர். ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (La France insoumise—LFI) பல பிரமுகர்களும் கூட அந்த போராட்டங்களை அங்கீகரித்திருந்தனர்.

A star that reads “not vaccinated” is attached on the back of an anti-vaccine protester during a rally in Paris, Saturday, July 17, 2021 [Credit: AP Photo/Michel Euler, File]

அதிவலது அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் பலரை தாவீத்தின் மஞ்சள் நட்சத்திரத்துடன் புகைப்படம் எடுக்க முடிந்தது, அந்த நட்சத்திரத்தின் நடுவில் 'தடுப்பூசி வேண்டாம்' என்றோ அல்லது 'தடுப்பூசிகள் இல்லாமல்' என்றோ எழுதப்பட்டிருந்தது. இசேர் மற்றும் பிரெனே இன் இரண்டு பிராந்திய தடுப்பூசி மையங்கள் போராட்டக்காரர்களால் நாசமாக்கப்பட்டன, அவற்றில் ஒன்றில் பிரான்சின் நாஜி ஆக்கிரமிப்பைக் குறிக்கும் குறிப்பு கிறுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதிவலது போராட்டங்களைப் பற்றி சுவார்க் கூறுகையில், 'இந்த வாரம் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது குறித்து நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பதை நான் கூற விரும்புகிறேன். அதனால் நான் எந்தளவுக்கு உணர்ச்சிகரமாக இருந்தேன் என்பதை உங்களால் கற்பனையும் செய்ய முடியாது,” என்றார். போராட்டக்காரர்களால் மேற்கூறிய பாணியில் திருத்தப்பட்ட தாவீதின் நட்சத்திரத்தின் படத்தை உயர்த்திப் பிடித்து, அவர் தொடர்ந்து கூறினார், 'இந்த ஒப்பீடு வெறுக்கத்தக்கது!'

கைதட்டல்களுக்கு நடுவில் பேசிய சுவார்க் தொடர்ந்து கூறினார், 'இந்த அவமானத்திற்கு எதிராக நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். நான் கண்ணீர் விட்டேன், நான் நட்சத்திரத்தை அணிந்திருந்தேன், அது என்னவென்று எனக்குத் தெரியும், இன்னும் அது என் சதையோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த மூர்க்கத்தனமான, யூத-எதிர்ப்பு, இனவாத அலையைத் தடுப்பது நம் அனைவரின் கடமையாகும். இது பழங்காலந்தொட்டு வரும் கடமையென நம்புகிறேன்.'

ஜூலை 16, 1942 இல், கைதிகள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் குளிர்கால விளையாட்டரங்கின் (Winter Stadium) சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் அதற்காக பெயர்பெற்ற இழிவார்ந்த Vel d’Hiv சுற்றிவளைப்பில், பிரெஞ்சு பொலிஸால் பாரிஸில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த 13,152 யூதர்களில் சுவார்க்கும் ஒருவராக இருந்தார். பாரிஸ் பொலிஸ், Gendarmerie மற்றும் பிரெஞ்சு மக்கள் கட்சியின் (Parti populaire français) பாசிச குண்டர்களால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலை 4:00 மணிக்குத் தொடங்கி, இந்த சக்திகள் யூத பின்னணி இருப்பதாக அவர்கள் கருதிய எவரொருவரையும் கைது செய்ததுடன், யூத மக்கள் வாழ்ந்த பகுதிகளில் வெறியாட்டம் ஆடினர்.

அந்த சோதனையில் கைது செய்யப்பட்ட கிட்டத்தட்ட எல்லோருமே இறுதியில் அவுஸ்விட்ச் நிர்மூலமாக்கல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். Vel d’Hiv வேட்டையாடலின் போது சுற்றி வளைக்கப்பட்ட 3,900 குழந்தைகளில் ஆறு பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

யூத இன-ஒழிப்பு படுகொலைகளுக்கும் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஒரு விஞ்ஞானபூர்வ பிரதிபலிப்புக்கும் இடையிலான ஒப்பீடு பிரான்சுடன் மட்டும் நின்றுவிடவில்லை. கடந்த வாரம், நெதர்லாந்தில் சமூக அடைப்புக்கு எதிரான போராட்டக்காரர்கள் 'நாங்கள் புதிய அன்னே ஃபிராங்க்' என்ற வாசக பலகைகளை ஏந்திச் சென்றனர். அமெரிக்க காங்கிரஸ் சபையிலுள்ள பாசிச பெண்மணியும், Qanon சதிக் கோட்பாட்டின் ஊக்குவிப்பாளருமான மார்ஜோரி டெய்லர் கிரீன் இந்தாண்டு மே மாதம் கூறுகையில், 'நாஜிக்கள் யூத மக்களைத் தங்க நட்சத்திரம் அணிய நிர்ப்பந்தித்ததைப் போல தடுப்பூசி போடப்பட்ட பணியாளர்களுக்கும் தடுப்பூசி அடையாளச் சின்னம் இடப்பட வேண்டும்,' என்றார்.

உயிர் காக்கும் தடுப்பூசிகளுக்கும் யூத-இன ஒழிப்பு படுகொலைகளுக்கும் இடையிலான மோசமான ஒப்பீடுகள் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான குற்றங்களையே குறைத்துக் காட்டுகின்றன. இந்த கோவிட்-19 பெருந்தொற்று நெடுகிலும் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் பின்பற்றி வரும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு ஒரு ஜனரஞ்சக-தாராளவாத மூடுமறைப்பை வழங்குவதற்கான அதிவலதுகளின் விருப்பத்திலிருந்தே அவர்களுக்கு அரசியல் உத்வேகம் வருகிறது. ஐரோப்பாவில் கோவிட்-19 நோயால் 1.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த பின்னரும் கூட, முதலீட்டாளர்களுக்கு இலாபங்களை வாரி வழங்குவதற்காக, இந்த கொள்கை அத்தியாவசியமற்ற தொழில்துறைகளிலும் தொழிலாளர்களை வேலையில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுவார்க்கின் கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு எதிராகவும், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் வாழ்வில் அதிவலது சக்திகளை இயல்பாக்குவது மற்றும் ஊக்குவிப்பதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பிரிவினர் மத்தியில் நிலவும் பாரிய உணர்வின் ஓர் அரிய வெளிப்பாடாகும். கட்டாய தடுப்பூசிக்கு அதிவலதின் எதிர்ப்பு பிரெஞ்சு மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் மோலோங்கி உள்ள அதேவேளையில், மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கட்டாய தடுப்பூசி நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.

அவுஸ்விட்ச் நினைவு அருங்காட்சியகத்தின் ட்விட்டர் கணக்கு அந்த வெறுக்கத்தக்க ஒப்பீடுகளுக்கு எதிராக சுவார்க்கின் கருத்துக்களை அங்கீகரித்ததுடன், தொடர்ந்து குறிப்பிடுகையில், '1933-45 க்கு இடையில் பாதிக்கப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட மற்றும் நாஜி ஜேர்மனியின் வெறுக்கத்தக்க சர்வாதிகார ஆட்சியால் கொலை செய்யப்பட்ட அனைவரின் துயரத்தையும் மனித உயிர்களைக் காப்பாற்றும் தடுப்பூசிக்கு எதிராக வாதிட கருவியாக்குவது தார்மீக மற்றும் புத்திஜீவித வீழ்ச்சியின் ஒரு சோகமான அடையாளமாகும்,” என்றது.

வரலாற்றாசிரியரும், முன்னாள் நாஜிக்கள் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்து சேகரித்தவருமான சேர்ஜ் கிளார்ஸ்ஃபீல்டும் தடுப்பூசி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த ஒப்புமை மற்றும் ஜனநாயக விரோத கோரிக்கைகளை விமர்சித்தார். அவர் கூறுகையில், 'மஞ்சள் நட்சத்திரம் யூதர்களை சமூகத்தில் இருந்து விலக்கி, அவர்களை அழித்தொழிப்பதற்காக குறிக்கப்பட்ட மரண சின்னமாக இருந்தது, அதே நேரத்தில் மறுபுறம் தடுப்பூசிகளோ உயிர்களைக் காப்பாற்றுகின்றன,' என்ற அவர், 'அவர்கள் என்ன சுதந்திரத்தை விரும்புகிறார்கள்? நோய்தொற்றுக்கான சுதந்திரமா?' என்றார்.

பிரான்சில் ஏனைய 11 நோய்களுக்கு ஏற்கனவே சட்டபூர்வமாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்கின்ற நிலையில், கோவிட்-19 க்கு எதிரான கட்டாய தடுப்பூசி, அந்த கொடிய வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கியமான விஞ்ஞான நடவடிக்கையாகும். என்றாலும், அது எல்லா அத்தியாவசியமற்ற உற்பத்தி மற்றும் சேவையை நிறுத்துவது, திறம்பட்ட பரிசோதனை மற்றும் தடம் அறியும் முறை மற்றும் அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் முழு வருமானம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி மக்ரோனின் 'சுகாதார அனுமதிச்சீட்டை' ஆதரிக்கவில்லை, அது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக பொருளாதாரத்தை முழுமையாக திறக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்னும் மில்லியன் கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், அதுவும் கூட வைரஸை அகற்ற போதுமானதாக இருக்காது. ஜூலை 22 இல் பிரான்சில் 21,000 க்கும் அதிகமான நோயாளிகள் பதிவு செய்யப்பட்டதுடன், தடுப்பூசியையே எதிர்ப்பு வகைகளின் அச்சுறுத்தல் நிலவும் நிலையில், அதிகளவில் தடுப்பூசி போடாத மக்களிடையே அந்த வைரஸ் சுதந்திரமாக பரவ அனுமதிக்கும் மக்ரோனின் கொள்கை ஆயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுக்கும்.

ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சி உட்பட பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தால் இடது சாரியாக ஊக்குவிக்கப்படும் சக்திகளால் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டங்கள் ஆதரிக்கப்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டில் பாசிசத்திற்கு எதிராகவும் மற்றும் தங்களின் இன்றைய ஆரோக்கியத்திற்காகவும் ஐரோப்பிய தொழிலாளர்களின் போராட்டங்களை அவமதிப்பதோடு தங்கள் அரசியல் சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் தலைவர்களைக் கொண்ட இந்த போலி-இடது கட்சியின் அரசியல் மற்றும் தார்மீக திவால்நிலையை மீண்டும் சுவார்க்கின் கருத்துக்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

Loading