இங்கிலாந்து: வாக்கெடுப்பு தொடங்கும் போது JDE இல் எதிர்ப்பை முடிவிற்குகொண்டுவர Unite முயற்சிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

JDE (Jacobs Douwe Egberts) தொழிலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் மற்றும் தணிக்கை பிரச்சாரத்தை தொடங்குவதன் மூலம் JDE உடனான அதன் அழுகிய ஒப்பந்தத்தின் மீதான பரவலான கோபத்திற்கு தொழிற்சங்கம் பதிலளித்துள்ளது.

'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்' (“fire and rehire”) ஒப்பந்தங்களை சுமத்துவதற்கு எதிரான இரண்டு மாத தொழில்துறை நடவடிக்கைகளை தொழிற்சங்கம் 'இடைநிறுத்திய' பின்னர், நிறுவன நிர்வாகிகளுடனான எட்டப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கலாமா என்பது குறித்து திங்களன்று தொடங்கி வாக்களிப்பு ஆகஸ்ட் 4 ஆம் தேதிமுடிவடையும்.

JDE தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒரு காட்டிக்கொடுப்பு என்று கண்டித்துள்ளனர். இது மேலதிக வேலைநேர கொடுப்பனவுகளை குறைத்து, வாரத்தின் வேலைநாட்களை அதிகரித்து மேலும் இரவுநேர பணிமுறைக்கு சுமார் 35 கூடுதல் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும். சிலர் ஆண்டுதோறும் 10,000 பவுண்டுகள் வரை இழக்க நேரிடும். மேலும் இந்த விதிமுறைகளுக்கு 'இல்லை' என்று வாக்களித்தால், 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் அமர்த்தல்' இன்னும் நடைமுறையில் இருப்பதோடு மட்டுமல்லாது, செப்டம்பர் 13 முதல் பணிநீக்கம் நடைமுறைக்கும் வரும்.

பான்பரி 300 (Banbury 300) ட்விட்டர் கணக்கு இந்த ஒப்பந்தத்திற்கான தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு குரல் கொடுத்து, 'இல்லை' என வாக்களிக்க அழைப்பு விடுத்து மற்றும் நிறுவனத்துடன் Unite ஒத்துழைப்பதை கண்டனம் செய்தது. பான்பரி 300 உடன் சம்பந்தப்பட்ட ஒரு JDE தொழிலாளி, Unite ஒப்பந்தம் வேண்டுமென்றே பிளவுபடுத்துவதாக கூறினார். 'Unite தொழிற்சங்கம் ஒரு குழு தங்களுக்கு ஊதிய உயர்வுக்கு வாக்களிக்க அனுமதிப்பதுடன், வாக்களிக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் பவுண்டுகள் (£10k) ஊதிய இழப்பை ஏற்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை கையாண்டுள்ளது. இது அருவருப்பானது மற்றும் ஒழுக்கக்கேடானது. இது அருவருப்பானது மற்றும் ஒழுக்கக்கேடானது. இதற்கெல்லாம் பின்னர் JDE இல் Unite அவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகின்றது என விவாதிக்கவேண்டியிருக்கும். தொழிலாளர்கள் அவர்கள் மீதான அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.

பான்பரி 300 ட்விட்டர் கணக்கு 'இல்லை' என வாக்களிக்க அழைப்புவிடுகின்றது (credit: @Banbury3001 Twitter account)

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, 'தொழிலாளர்கள் அழிக்கப்படுகிறார்கள், குடும்பங்கள் உடைந்துவிட்டன, நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை.' Unite நிர்வாகத்துடன் மிகவும் ஒருங்கிணைந்து, அது 'இவ்வாறான பணிமுறைகளில் யார் வேலை செய்ய முடியும் என்பது பற்றி முடிவுகளை எடுக்கிறது'.

அவர் தொடர்ந்தார், “பான்பரி தொழிற்சங்கக் குழு கூட நியாயமானதல்ல. அவர்கள் தேர்தல்களை நடத்த வேண்டும், ஆனால் இந்த தேர்தல்கள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போதைய பான்பரி தொழிற்சங்கக்குழு உத்தியோகபூர்வமானது அல்ல. ஆனால் அவர்கள் எங்களுக்காக முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். தொழிற்சங்கத் தலைவரும் கிளைச் செயலாளரும் தம்மை தாமே தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர்!”

கடந்த வியாழக்கிழமை, பான்பரி 300 டிவிட்டர் கணக்கு, Unite அதிகாரிகள் மற்றும் JDE நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை தொடர்ந்து இணையத்தில் இயங்காது சென்றது. ஆனால் 24 மணி நேரம் கழித்து அது மீண்டும் இயங்கி, ஒரு எதிர்மறையான செய்தியை வெளியிட்டது, 'துரதிர்ஷ்டவசமாக JDE/@Unitetheunion ஆனது #Banbury300 இனை மூடிவிடமுயன்றது. துரதிர்ஷ்டவசமாக Banbury300 அடிபணிய தயாராக இல்லை” என்றது.

Unite, தொழிற்சாலை கிளை ஃபேஸ்புக் குழுவில், JDE தொழிலாளர்களை மௌனமாக்கியது. Unite இன் ஒப்பந்தத்தை விமர்சிக்கும் இடுகைகள் அகற்றப்பட்டன. ஒரு JDE தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை WSWS இடம் கூறியது போல், 'ஒப்பந்தத்திற்கு எதிராக பேசிய எவரும் தணிக்கை செய்யப்படுகிறார்கள் ... நாளை வாக்குப்பதிவு தொடங்கும் போது, தமது கருத்துக்களை கூறும் மக்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்'.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்கள் கோபத்துடன் செயல்பட்டதால், Unite சேதத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தள்ளப்பட்டது. ஒரு நாளுக்கு முன்பு WSWS வெளியிட்ட ஒரு கட்டுரையான 'JDE இல் Unite இன் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தை நிராகரிக்கவும்!' பான்பரி 300 ஆல் வெளியிடப்பட்டு மற்றும் பரவலாக பரவியது. Unite இன் உணவு, பானம் மற்றும் வேளாண்மைக்கான தேசிய அதிகாரி ஜோ கிளார்க், JDE உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை வழங்கினார். 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவது' தோற்கடிக்கப்பட்டதாக அவர் முன்னர் கூறிய கூற்றுக்களை பின்னுக்குத் தள்ளினார். பணிநீக்க அறிவிப்புகள் இன்னும் மேஜையில் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், JDE உடனான Unite ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றி தொழிற்சங்கம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தும் என்று அறிவித்தார்.

ஜோ கிளார்க் (credit: WSWS Media)

கிளார்க் மேலும், 'சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மீதான துஷ்பிரயோகம் உள்ளது. அந்த பொருத்தமற்ற உரையாடலில் ஈடுபடுவதற்கு நாங்கள் தரக்குறைவாக இருக்க மாட்டோம்.' உண்மையில், Unite நிறுவனங்களுடன் 'பொருத்தமான உரையாடலில்' மட்டுமே பங்கேற்கிறது” எனக் குறிப்பிட்டார்.

48 மணி நேரத்திற்குப் பின்னர் இரண்டாவது கடிதம் வந்தது. இந்த முறை கிளார்க் மற்றும் Unite சட்ட அதிகாரி கிறிஸ் கிரே ஆகியோரிடமிருந்து வந்தது. இந்த ஒப்பந்தத்தை முன்பு பரிந்துரைத்த பின்னர், இந்த ஜோடி இப்போது அறிவித்தது, “நாங்கள் இந்த ஒப்பந்தத்தை பெரிதும் பரிந்துரைக்கவில்லை [sic]. அதை நிராகரிக்கும்படியும் நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. ஒட்டுமொத்த தொகுப்பைப் பார்ப்பது மற்றும் அதை நிராகரிப்பது ஒரு தனிநபராக உங்களிடம் உள்ளது.”

இந்த அறிக்கையால் JDE தொழிலாளர்கள் குழப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இது Unite இன் அரசியல் நடுநிலைமை பற்றிய அபத்தமான கருத்து (அவர்கள் ஒப்பந்தத்தை வரைவதற்கு உதவினார்கள்!) விரைவில் கவனத்திற்கு எடுக்கப்படாது போனது எனினும், கிளார்க் மற்றும் கிரே ஆகியோர் நிறுவனத்தை இடமாற்றுவது என்ற அச்சுறுத்தல்களை பயன்படுத்தி தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தனர்.

4x4 பணிமுறையை முறையைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் போது அவர்களின் முயற்சிகளை விவரித்த கிளார்க் மற்றும் கிரே, 'நாங்கள் கிட்டத்தட்ட அதனை இரத்துச்செய்யும் நிலைக்கு வர இருந்தோம், ஆனால் செலவில் அதிகரிப்பு இருக்கும் என்பதால் நிதிரீதியாக நாங்கள் கஷ்டப்பட்டோம். எங்களுக்கு சுமார் 750,000 - 800,000 பவுண்டுகளுக்கு குறைவாக இருந்ததால் ஐரோப்பாவின் செயல்பாட்டு இயக்குனர் ஆபேல் மார்டினெஸை சந்திக்க ஒப்புக்கொண்டோம். துரதிருஷ்டவசமாக சந்திப்பின் போது ஆபெல் தெளிவாகவும் அப்பட்டமாகவும் இருந்தார். அந்த பணத்திற்காக அவர் உற்பத்தியை வேறு இடத்திற்கு மாற்றுவதாக கூறினார்”.

இதுதான் இன்றைய தொழிற்சங்கத் தலைவர்களின் மொழியாகும். செயல்பாட்டு மேலாளருடனான முதல் பெயரை கொண்டு அழைத்து மற்றும் 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய பானங்கள் கூட்டுநிறுவனத்தின் நிதிய “அவலநிலைக்கு” அனுதாபத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறனர்.

Unite இன் கடிதம் பின்வருமாறு தொடர்ந்தது, “பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களைப் போலவே JDE, செலவுகள் மற்றும் வேலையைச் செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் வேலையை நகர்த்துகிறது. 24 மணித்தியாலம் 7 நாட்களும் வேலை இல்லாமல் உலகளாவிய அளவில் JDE இன் முழு ஆலைக்கும் ஆபத்து உள்ளது என்பது தெளிவாகிவிட்டது. இதனால் உற்பத்தியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தயாராக இருந்தது”.

முதலாளித்துவ பொருளியலின் யதார்த்தங்களுக்கு Unite இன் பதில் முழு அடிபணிவாகும். இதில் தனித்தன்மை எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாடுகளில் வேரூன்றிய தொழிற்சங்கங்கள், பூகோளமயமான உற்பத்திக்கு பதிலளித்து, நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்புகளில் தங்களை மேலும் ஒருங்கிணைத்து, சர்வதேச அளவில் போட்டி ஊதிய விகிதத்திற்கு தங்கள் உறுப்பினர்களை வழங்குகின்றன.

JDE தொழிலாளர்கள் கடும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால் இங்கிலாந்திலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் ஊதியக் குறைப்பு, நீண்டநேர வேலை மற்றும் முழு 'நெகிழ்வுத்தன்மையான' உழைப்பு ஆகிய அதே நிறுவன கோரிக்கைகளை எதிர்கொள்கின்றன. 1930 களுக்கு பின்னர் முதலாளித்துவத்தின் ஆழமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தூண்டிய உலகளாவிய தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக இத்தகைய கோரிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன.

Uniteஇன் அடிப்படை செய்தி, 'அனைத்து நம்பிக்கையையும் கைவிடுங்கள்' என்பதாகும்.

நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிராக போராட முடியும் மற்றும் போராட வேண்டும். ஆனால் இதன் பொருள் Unite இன் பிடியிலிருந்து விடுபட்டு உலகளாவிய மூலோபாயத்தின் அடிப்படையில் ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை அமைப்பதாகும். உலகளாவிய JDE ஆலைகளில் தங்கள் வர்க்க சகோதரர்களுக்கு எதிராக இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தும் JDE மற்றும் Unite இன் முயற்சிகளுக்கு எதிராக, பான்பரியில் உள்ள தொழிலாளர்கள் சர்வதேச ஆதரவுக்கு அவசர அழைப்புவிட வேண்டும்.

மே தினத்தன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை உருவாக்க வெளியிட்ட அறிக்கையை படிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி JDE தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. எதிர்வரவிருக்கும் மாதங்களில் ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்க செய்ய விரும்பும் தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading