பிரெஞ்சு மொரேனோய்ட்டுகள் தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இணைய தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போலி-இடது வலைத் தளமான Révolution permanente (Permanent Revolution) கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு விஞ்ஞானரீதியான சுகாதார கொள்கைக்கு எதிராக தீவிர-வலது அணிதிரள்வுக்கு ஒரு 'இடது' போர்வையை கொடுக்க முயற்சிக்கிறது. தீவிர வலதுகள் அதே நேரத்தில் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுக்க ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் அடிபணியா பிரான்ஸ் (La France insoumise—LFI) கட்சி மேற்கோளிட்ட வாதங்களை எதிரொலிக்கும் வகையில், Révolution permanente ஆனது இந்த இயக்கத்தில் சேருமாறு தொழிற்சங்க எந்திரங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

மக்ரோனின் 'சுகாதார அனுமதி நுழைவுச்சீட்டு' என்பது ஒரு பிற்போக்குத்தனமான கொள்கையாகும், இதை சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) எதிர்க்கின்றன. தடுப்பூசியின் தேவை குறித்து சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் மற்றய மக்களுக்கும் கல்வியறிவூட்டாமல், அவர்கள் தடுப்பூசி போட மறுத்தால் ஊதியத்தை மக்ரோன் அதிகாரபூர்வமாக நிறுத்தி வைக்கவிருக்கிறார். இது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் ஆளும் வர்க்கம் மக்களை மீண்டும் வேலைகள் மற்றும் பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்தவும், விஞ்ஞானரீதியான பரிந்துரைகளை மீறி வைரஸ் பரவ அனுமதிக்கவும் பின்பற்றும் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

சனிக்கிழமை, ஜூலை 17, 2021 அன்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த பேரணியின் போது தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். (AP Photo/Jean-Francois Badias)

எவ்வாறாயினும், தொற்றுநோய்க்கு எதிரான மற்றும் காவல்துறை சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், ஒரு சர்வதேசப் போராட்டம் என்று பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) வலியுறுத்துகிறது. இது முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க எந்திரங்களிலிருந்து முழு சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்டுதல் மூலம் நடத்தப்பட வேண்டும். Révolution permanente முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது, தீவிர வலதுசாரிகளின் அழைப்பின் பேரில் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களின் அடுக்குகளை வழிநடத்த தொழிற்சங்க எந்திரங்கள் தலையிட அழைப்பு விடுத்துள்ளது.

'மக்ரோனின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக, ஒரு உண்மையான சுகாதார மூலோபாயத்திற்காக: இந்த சனிக்கிழமை தெருக்களில்!' என்ற தலைப்பில் அதன் பிற்போக்குத்தனமான அறிக்கையிலிருந்து இதுதான் வெளிப்படுகிறது. 'மக்ரோனின் உருவப்படத்தை அகற்றுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் Poitiers இலுள்ள நகரசபை மண்டபத்திற்குள் நுழைந்ததைப் போல, ஒரு குறிப்பிட்ட தீவிரத்தன்மையுடன் கைகோர்த்து சென்ற அணிதிரள்வை விரிவுபடுத்துவதை' அது வரவேற்கிறது. 'மத்திய சுலோகம் சுகாதார அனுமதி நுழைவுச்சீட்டுக்கு எதிர்ப்பாக இருந்தாலும்', அவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து வந்த 'பல அழைப்புகள்' 'இந்த சர்வாதிகார தாக்குதலுக்கும் அரசாங்கத்தின் சமூக விரோதத் தாக்குதலுக்கும் இடையேயான தொடர்பை' காட்டுகிறது என்று பாராட்டினார்கள்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தடுப்பூசிகளுக்கு விரோதமானவை, தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் இறப்புக்களை மட்டுப்படுத்த அவசியமானவையாக இருக்கின்றன. மேலும், மரியோன் மரேசால்-லு பென், மரின் லு பென்னின் முன்னாள் ஆலோசகரான ஃப்ளோரியான் பிலிப்போ, நிக்கோலா டுபோன்ட்-எய்னியோன் மற்றும் அடிபணியா பிரான்ஸ் கட்சியிலிருக்கும் பிரான்சுவா ரூஃபான் போன்ற சுதந்திரவாதிகள் போன்றவர்கள் நவ-பாசிசவாதிகளின் அழைப்பின் பேரில் இந்த எதிர்ப்புக்கள் நடத்தப்பட்டன என்பது Révolution permanente க்கு நன்கு தெரியும்.

அவர்கள் எழுதுகிறார்கள்:

'ஆரம்ப அரசியல்மயமாக்கலின் வெளிப்பாடு, தீவிர வலதுசாரி தலையிட்டு அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுக்க முடிந்ததால், உரிமைகோரல்களின் பொதுவான நிறம் குழப்பமான தன்மையால் குறிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் உரிமைகோரல்களை மதிப்பிழக்கச் செய்வதன் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு அரசியல்மயமாக்கல், இது தடுப்பூசி குறித்த சட்டபூர்வமான சந்தேகங்களுக்கு இடத்தைத் திறந்துள்ளது.”

Révolution permanente ஆனது பின்னர் தடுப்பூசிகளை கண்டிக்கும் தொழிற்சங்க எந்திரங்களை பாராட்டியது. அவர்கள் தொழிற்சங்க எந்திரங்களை விமர்சித்திருந்தால், அது அதிவலதுகளின் இயக்கத்தை இன்னும் ஆக்கிரோஷமாக ஆதரிக்கவில்லை என்பதற்காக மட்டுமே.

அவர்கள் தொடர்ந்தனர்:

'தொழிலாளர் இயக்கத்தின் புதிய பிரிவுகள் மேலும் இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளன. இவற்றில் CGT [தொழிலாளர் பொது கூட்டமைப்பு] வணிகத்துறையும் அடங்கும், ஆனால் Dreux அல்லது Bouches-du-Rhône இடங்களிலுள்ளது போன்ற உள்ளூர் கட்டமைப்புகளும் அடங்கும், அங்கு CGT மற்றும் FO [தொழிலாளர் சக்தி தொழிற்சங்கம்] கூட்டாக ஒரு அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்தன. எவ்வாறெனினும், இந்த அழைப்புக்கள் வேலைநிறுத்தத்திற்கான அழைப்புடன் சேர்ந்து கொள்ளக்கூடாது என்ற வரம்புகளைக் கொண்டுள்ளன மற்றும் தொழிற்சங்கத் தலைமைகளின் வெட்கக்கேடான செயற்பாடற்ற தன்மையை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை. இந்த செயற்பாடற்ற தன்மையானது தீவிர வலதுகளின் கைகளில் விளையாடுகிறது, இது நாளை இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மீண்டும் முயற்சிக்கும்.'

உண்மையில், அதிவலது இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கவில்லை; அதுதான் அதை ஆரம்பித்துவைத்துள்ளது. Révolution permanente இன் எதிர்ப்புக்களின் மூலங்களை அவர்கள் இப்போது குறிப்பிட்டிருந்த தீவிர வலதுகளின் அழைப்புகளில் பொய்யாக்குகிறது. இதன் நோக்கம் அதிவலதுகளின் அரசியல் நடவடிக்கைகளுடன் பெருகிய முறையில் நேரடி அணிதிரள்வை மறைப்பதாகும்.

ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒரு வெடிக்கும் கோபம் அதிகரித்து வருகிறது, அது தொற்றுநோயைத் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகளை மறுத்துவிட்டது. சமூக இடைவெளிக் கொள்கையை பின்பற்றுவதற்கு பதிலாக, வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாட்டுடன், அதைத் தொடர்ந்து ஒரு மறுஎழுச்சியைத் தடுப்பதற்கான ஒரு கொள்கையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் மீண்டும் மீண்டும் பகுதியளவு பொதுமுடக்கங்களை செய்துள்ளனர் மற்றும் 'வைரஸுடன் வாழ' அழைப்பு விடுத்தனர். பிரான்சில் 110,000 க்கும் மேற்பட்ட மரணங்கள் மற்றும் ஐரோப்பாவில் 1.1 மில்லியன் மரணங்களுக்குப் பின்னர், டெல்டா திரிபு வகையின் தோற்றம் ஒரு புதிய மரண அலைக்கு அச்சுறுத்துகிறது.

ஒரு விஞ்ஞானரீதியான சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தலையீடு செய்யும் சாத்தியக்கூறுடன், ஒரு சர்வதேச சுகாதார மற்றும் அரசியல் நெருக்கடி அபிவிருத்தியடைந்துள்ளது. மார்ச் 2020ல், இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களின் தன்னியல்பான வெளிநடப்புகள் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் தங்க அனுமதிக்கும் கடுமையான பொதுமுடக்கத்தை விதித்தன. ஆனால் இந்த நெருக்கடிக்கு Révolution permanente இன் விடையிறுப்பானது தீவிர வலதுகளுக்கு பின்னால், கோபமான மற்றும் நம்பிக்கையற்ற சுகாதாரப் பணியாளர்களை அணிப்படுத்த முயற்சிப்பதாகும்.

கொரோனா வைரஸ் உட்பட பல நோய்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடுவது என்பது Révolution permanente வலியுறுத்துவது போல் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அல்ல. இது தொழிலாள வர்க்க ஆயுட்காலத்தை மேம்படுத்த அனுமதித்த 20ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களால் பெறப்பட்ட சமூக தேட்டங்களின் ஒரு பகுதியாகும். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி என்பது தொழிலாள வர்க்கத்தின் பொது சுகாதாரம் மற்றும் தற்காப்புக்கான அடிப்படைத் தேவையாகும்.

விஞ்ஞானத்திற்கு எதிரான அதன் அணிதிரள்வை நியாயப்படுத்த Révolution permanente ஆல் வழங்கப்பட்ட வாதங்கள் மோசடியானவையாக இருக்கின்றன. முதலாவதாக, 'சுகாதார அனுமதி நுழைவுச்சீட்டிற்கு எதிராக வளர்ந்து வரும் அணிதிரள்வு குறித்த பகுப்பாய்வின் சில கூறுபாடுகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், தடுப்பூசிகளுக்கு எதிராக அதிவலதுகளால் அழைக்கப்படும் அணிதிரள்வுகள், 'மஞ்சள் சீருடை' இயக்கத்தை ஒத்தவை என்று Révolution permanente வலியுறுத்துகிறது.

முதலாவதாக, இந்த எதிர்ப்புகள் பல வர்க்க குணாம்சத்தைக் கொண்டுள்ளன, குட்டி-முதலாளித்துவ மற்றும் தொழிலாள வர்க்க அடுக்குகள் மற்றும் முதல் முறையாக பங்குபற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கணிசமான முறையில் உள்ளனர், அவர்கள் மக்ரோனுக்கு எதிராக ஒரு ஆரம்ப அரசியல்மயமாக்கல் செயல்முறையின் ஒரு பகுதியாக அணிதிரண்டனர். இரண்டாவதாக, துல்லியமான வழிமுறை, சுலோகம் அல்லது அமைப்பு இல்லாமல், பெரும்பாலும் சமூக ஊடகங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் தன்னியல்பான தன்மை உள்ளது. எதிர்ப்புக்களின் பொதுவாக அமைதியான தன்மையானது முதலாவது 'மஞ்சள் சீருடை' ஆர்ப்பாட்டங்களை உயிர்ப்பித்த அகிம்சை பற்றிய மாயைகளையும் நினைவுபடுத்துகிறது. இறுதியாக, எதிர்ப்புக்கள் மக்ரோன்-விரோத ஒரு வலுவான உள்ளடக்கத்தை வெளிப்படுத்தின, 'இராஜிநாமா செய், மக்ரோன்!' என்ற சுலோகத்திற்கு திரும்பியதன் மூலம் கோபத்தை படிகமாக்கியது.

அதிவலதுகளின் அழைப்பின் பேரில் 'மஞ்சள் சீருடைகளின்' ஒரு அடுக்கு தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சேர்ந்துள்ளது என்பது உண்மைதான். இது தன்னை 'அரசியலின்மை' என்று அறிவித்துக் கொண்ட ஒரு இயக்கத்தின் பலவீனங்களைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆயினும்கூட, தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் சர்வதேச வெடிப்பின் ஒரு பகுதியாக இருந்த 'மஞ்சள் சீருடைகள்' போன்ற இயக்கத்துடன் ஒப்பிடுவது தவறு.

'மஞ்சள் சீருடைகள்' பிரெஞ்சு மக்களில் பெரும்பெரும்பான்மையினரின் ஆதரவைக் கொண்டிருந்தாலும், ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களைப் போலவே, தற்போதைய ஆர்ப்பாட்டங்களும் ஒரு சிறுபான்மையினரை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன. மக்ரோனின் சுகாதாரக் கொள்கை பிரபலமாக இருப்பதால் அல்ல, மாறாக தடுப்பூசிகளுக்கான ஆதரவு காரணமாகத்தான், 'சுகாதார அனுமதி நுழைவுச்சீட்டை' ஆதரிப்பதாக மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மறுபுறம், இந்த எதிர்ப்புக்களை முன்னெடுத்த நவ-பாசிஸ்டுகள், எந்தவொரு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் கடுமையான எதிர்ப்பாளர்களாக உள்ளனர். 20ம் நூற்றாண்டின் பாசிச சர்வாதிகாரங்களில் அவர்களின் அரசியல் மூதாதையர்களைப் போலவே, அவையும் சமத்துவம் மற்றும் வெகுஜனங்கள் மீதான ஆளும் உயரடுக்கின் வெறுப்பை உள்ளடக்குகின்றன. உண்மையில், பெருந்தொற்று நோயின் போது ஊக்கப் பொதிகள் காரணமாக, ஐரோப்பிய பில்லியனர்கள் பெருந்தொற்று நோயின் போது தங்கள் கூட்டு செல்வத்தை 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளனர், அதே நேரத்தில் ஐரோப்பாவில் 1.1 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.

அவர்களின் மரண கொள்கையில், ஐரோப்பிய நிதிய பிரபுத்துவம் பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. உண்மையில், இந்த பெருந்தொற்று நோய்க்கு எதிரான சமூக இடைவெளி முடிவுக்கு வந்ததன் ஒரு பகுதியாக, வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு 750 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை வழங்கிய ஐரோப்பிய பிணையெடுப்பு ஊக்கப் பொதிகளை CGT ஆதரித்தது.

இது Révolution permanente இன் குட்டி-முதலாளித்துவ சக்திகளின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தையும், அது தோன்றிய புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியையும் (NPA) அம்பலப்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் தொழிற்சங்க எந்திரங்களிலிருந்து சுயாதீனமாக தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கத்திற்கு அதன் விரோதப் போக்கை நியாயப்படுத்துவதற்காக, 'மஞ்சள் சீருடைகளை' 'பூஜாடிஸ்ட்' என்று அதாவது நவ-பாசிசவாதி என்று அழைத்ததன் மூலம் NPA அவதூறு செய்தது. மறுபுறத்தில், Révolution permanente என்பது உண்மையிலேயே தீவிர வலதுகளால் அழைப்பு விடுக்கப்படும் தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது.

அதன் அரசியலின் பிற்போக்குத் தன்மையை மறைக்க, Révolution permanente ஆனது தொழிற்சங்கக் கருவிகள் தலையிடவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது, இது தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இடதுபுறம் தள்ளுவதற்காக என்று கூறப்படுகிறது.

ஆயினும்கூட, அனைத்து எதிர்ப்பாளர்களையும் இயக்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான கூறுபாடுகளாக குறைப்பது 2018 இல் இருந்ததைப் போலவே தவறானது. ஜூலை 17 அன்று 100,000 க்கும் மேற்பட்ட மக்களை ஒன்றிணைத்த பின்னர், இந்த அணிதிரள்வு செயல்முறை அரசாங்கத்திற்கு எதிரான பிற்போக்குத்தனமற்ற இயக்கத்தின் தொடக்கமாக இருக்கலாம். எனவே, தமது சொந்த கோரிக்கைகளையும் போராட்ட வழிமுறைகளையும் முன்மொழிவதன் மூலம், நடந்து கொண்டிருக்கும் அரசியல்மயப்படுத்தலுக்கு ஒரு வர்க்க முன்னோக்கை வழங்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அவர்களை அடைய அனைத்தையும் செய்வது தொழிலாளர் இயக்கத்தின் அமைப்புக்களின் மற்றும் புரட்சியாளர்களின் கடமையாகும்.

ஆர்ப்பாட்டங்கள் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையாகும். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 'மஞ்சள் சீருடைகள்' எதிர்ப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் அரசியல் கேள்விகளை தெளிவுபடுத்துவதற்கும், நவ-பாசிஸ்டுகளின் தடுப்பூசி எதிர்ப்புக் கொள்கையையும் மக்ரோனின் பிற்போக்குக் கொள்கைகளையும் எதிர்ப்பதற்கு பதிலாக, Révolution permanente ஆனது தொழிற்சங்க எந்திரங்களின் பிடியை வலுப்படுத்தவும், அவற்றை அதிவலதுகளுடன் அணிதிரட்டவும் முயற்சிக்கிறது.

தடுப்பூசி எதிர்ப்பு இயக்கத்தில் அதன் தலையீடு தொழிற்சங்கங்களை இடதுபுறம் தள்ளும் என்ற Révolution permanente இன் உறுதிமொழிகள் அரசியல் ரீதியாக குற்றவியல் மெத்தனத்தை பிரதிபலிக்கின்றன. ஐரோப்பாவில் நூறாயிரக்கணக்கான உயிர்கள் கொரோனா வைரஸால் பேரழிவிற்கு உட்பட்டுள்ளன, நவ-பாசிச இராணுவ அதிகாரிகள் பிரெஞ்சு மண்ணில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்துகின்றனர். இதற்கிடையில், போலி-இடதுகள் அதிவலதுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன, அதே நேரத்தில் Valeurs actuelles பத்திரிகையில் அதிகாரிகள் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கப் போவதாகவும் பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லப்போவதாகவும் அச்சுறுத்தி வெளியிட்ட தீர்ப்பாயங்களில் மெளனமாக உள்ளனர்.

அதிவலது, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போலி-இடதுகளுக்கு இடையிலான சிவப்பு-பழுப்பு கூட்டணியிலிருந்து முற்போக்கான எதுவும் வெளிவராது. அதிவலது இயக்கங்களை மூடிமறைக்கும் NPA இன் இழிந்த நடைமுறையின் பதிவு, தற்போது Révolution permanente வகிக்கும் பாத்திரம் குறித்து தொழிலாளர்கள் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உண்மையில், 2014 ல் ரஷ்ய சார்பு அரசாங்கத்திற்கு எதிராக உக்ரேனில் CIA ஆல் தொடங்கப்பட்ட ஒரு நவ-பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆதரவளித்த பின்னர் Révolution permanente ஆனது NPA இன் ஒரு பிரிவாக நிறுவப்பட்டது. 'பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகள் தற்போதைக்கு வலதுசாரி மற்றும் அதிவலதுகளாக இருந்தாலும், இயக்கத்திற்குள் ஒரு இடது எதிர்ப்பை கட்டியெழுப்ப முயற்சிக்கும் சமூக மற்றும் அரசியல் சக்திகளை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்று NPA தன்னை நியாயப்படுத்தியது.

இதன் விளைவு உக்ரேனில் ஒரு தீவிர வலதுசாரி ஆட்சியின் வருகை, நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கிற்கு இடையே ஒரு உள்நாட்டுப் போர் வெடித்தோடு மற்றும் அதன் பொருளாதாரத்தின் சரிவுமாகும். இறுதியாக, உக்ரேனிய ஆட்சியானது உக்ரேனிய தேசியவாத குடிப்படையின் முன்னாள் வீரர்களுக்கு கெளரவ ஓய்வூதியம் வழங்கியது, அவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தில் நாஜி துருப்புக்களுடன் யூதர்கள் இனப்படுகொலையில் கலந்து கொண்டவர்களாகும்.

பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஆனது பெருந்தொற்று நோய் மற்றும் முதலாளித்துவ உயரடுக்குகள் சர்வாதிகாரத்திற்கான போட்டியை நிறுத்த சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்ட போராடுகிறது. இதன் அர்த்தம் அத்தியாவசியமற்ற உற்பத்தி இடங்களை மூடுவது மற்றும் சாத்தியமான பரந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கு நிதி பிரபுத்துவத்திடமிருந்து செல்வத்தைப் பறிமுதல் செய்வது என்பதாகும். அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்துவது பிரான்சில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை எடுக்கும் ஒரு சமூகப் புரட்சியை முன்னிறுத்துகிறது.

ஒவ்வொரு பள்ளி மற்றும் பணியிடத்திலும் சாமானிய குழுக்களை கட்டமைப்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும், மேலும் மக்ரோன் மற்றும் ஒரு நவ-பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஆபத்து இரண்டிற்கும் எதிராக ஒரு விஞ்ஞானரீதியான சுகாதார கொள்கைக்கு அவர்களை அணிதிரட்டும். எவ்வாறெனினும், தேசிய தொழிற்சங்க இயந்திரங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கு, Révolution permanente ஆல் முன்வைக்கப்பட்ட குழப்பத்திற்கு எதிராக நனவான மற்றும் இரக்கமற்ற முறிப்பு தேவைப்படுகிறது.

Loading