முன்னோக்கு

பள்ளிகளின் மறுதிறப்பால் ஏற்படும் உயிரிழப்புகள்: குழந்தைகள் கோவிட்-19 நோய்தொற்றால் இறக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரைலாண்ட் லீ டெய்க் க்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டு டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள மெமோரியல் ஹெர்மன் குழந்தைகள் மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 அன்று இறந்துபோனார். இவருக்கு பதின்மூன்று வயதாவதற்கு வெறும் ஒரு மாதம் இருந்தது என்பதுடன், டெக்சாஸின் டேய்ட்டனில் (Dayton) உள்ள Woodrow Wilson Junior High பள்ளியில் தனது ஆறாம் வகுப்பைத் தொடங்கவிருந்தார்.

ரைலேண்ட் லீ டெய்க்

அவரது தாயார், கேசி காஸ்டோரினா, டெய்க் க்கு லேசான சளி போன்ற நோயறிகுறிகளுடன் ஆரம்பத்திலேயே நோய் தீவிரமடைந்து கிசுகிசுத்து பேச மட்டுமே முடியும் என்ற அளவிற்கு மோசமாக பாதிப்படைந்திருந்தான் என்று Bluebonnet News க்கு தெரிவித்தார். காஸ்டோரினா அவரை முதலில் அவசர மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், பின்னர் ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் இருந்தார்.

மேலும், “வாழ்நாள் முழுவதும் பிறரது உதவியுடன் வாழும் நிலையில் அவன் இருப்பதாக கூறி அவர்கள் முடித்துவிட்டனர். அவனது நுரையீரல் கோவிட் திரவத்தால் நிரம்பியிருந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தும் செவ்வாயன்று அவன் இறந்துவிட்டான்,” என்று விவரித்ததுடன், “அது மோசமான வேகத்துடன் நடந்துவிட்டது” என்று கூறினார்.

13 வயதான Mkayla Robinson க்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டு ஒரே நாளில், ஞாயிறன்று இறந்துவிட்டார். எட்டாம் வகுப்பு மாணவியான இவர் முகக்கவசம் அணிவதற்கான கட்டாயம் எதுவுமின்றி, மிசிசிப்பியின் ராலேயில் உள்ள ராலே ஜூனியர் ஹை பள்ளிக்கு ஏற்கனவே திரும்பியிருந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்களிடையே 76 மற்றும் ஊழியர்களிடையே 11 உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றாளர்களில் ராபின்சனும் ஒருவராவார். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 700 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்கு பள்ளியை மூடுமாறு பள்ளி நிர்வாகக் குழு வாக்களித்துள்ளது. குடியரசுக் கட்சியின் ஆளுநர் டேட் ரீவ்ஸ் குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ் நோய்தொற்று என்பது வெறும் “ஜலதோஷம் தான்,” என்று கூறி நிராகரித்த அதே வேளையில், மிசிசிப்பியில் கோவிட்-19 க்கு பலியான ஐந்தாவது குழந்தையாக ராபின்சன் இருக்கிறார்.

வடக்கு கரோலினாவின் க்ரீட்மூரை (Creedmoor) சேர்ந்த பதினேழு வயது மத்தேயு கிர்பி கடந்த வியாழனன்று நோய்க்கு பலியாவதற்கு முன்னர் கோவிட்-19 நோய்தொற்றுடன் ஒன்பது நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இவரது தந்தை, ஸ்டீபன் கிர்பி, மாரடைப்பு அல்லது பக்கவாதத்தைத் தூண்டும் வகையில் நோய்தொற்று இவருக்கு இதய தசைகளில் வீக்கத்தை (myocarditis) ஏற்படுத்தியிருந்ததாக முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மத்தேயுவின் பெற்றோர்களுக்கும் இந்த நோய்தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், நோயிலிருந்து மீண்டவுடன் தங்கள் மகனுக்கு நினைவிடம் அமைக்க அவர்கள் திட்டமிடுகின்றனர்.

மத்தேயு கிர்பி பேஸ்பால் விளையாடுவதில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார், வடக்கு கரோலினாவின் பர்லிங்டனில் (Burlington) உள்ள ஒரு பயணக் குழுவான Dirtbags Baseball க்காக அவர் விளையாடி வந்தார், இந்த குழு, கல்லூரி மற்றும் முக்கிய லீக் நிலை போட்டிகளில் கலந்துகொள்ள இளம் விளையாட்டு வீரர்களை தயார்படுத்துகிறது.

“இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது,” என்று Dirtbags இன் தலைமை இயக்க அதிகாரி ரோக்சன் மார்கி WRAL Durham செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார். மேலும், “எனக்கு சொந்தமாக மூன்று குழந்தைகள் உள்ளனர் என்ற நிலையில் இதைக் கேட்கும்போது, குடும்பத்திற்கு பேரழிவு தரக்கூடிய வகையில் நாம் இருக்கிறோம். நாம் உடனடியாக அவர்கள் இருக்கும் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால், நாம் அந்த சூழ்நிலையில் இருந்தால் எப்படி உணர்வோம். … இது மிகவும் தீவிரமானது, மேலும் அனைவரும் இதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம், ஏனென்றால் ஒரு குழந்தையை இழப்பது என்பதை விட மோசமான ஒன்று இல்லை” என்றும் கூறினார்.

புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள வுல்ஃப்சன் குழந்தைகள் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5 அன்று அடையாளம் தெரியாத ஒரு 16 வயது இளம்பெண் கோவிட்-19 ஆல் இறந்தார். இவருக்கு அடிப்படை உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லை, ஆனால் அவருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று மருத்துவமனை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் தெற்கு பகுதியை அழித்து வரும் மற்றும் பிற பகுதிகளில் நோய்தொற்றுக்களை தீவிரமாக அதிகரித்து வரும் அதிக தொற்றும் தன்மையுள்ள டெல்டா மாறுபாட்டால் தூண்டப்பட்ட நான்காவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நகரத்திற்கு சேவை செய்யும் ஒரு மருத்துவமனையில் தொற்றுநோயின் சமீபத்திய எழுச்சியால் ஏற்பட்ட முதல் குழந்தை இறப்பாக இது உள்ளது. குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸ் பள்ளிகளில் முகக்கவச பயன்பாட்டிற்கான உத்தரவுகளை அமல்படுத்துவதைத் தடைசெய்ததுடன், அதன் தேவையை வலியுறுத்தும் மாவட்டங்களிலிருந்து மாநில நிதியை திரும்பப் பெறப் போவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

அமெரிக்காவில் கோவிட்-19 நோய்தொற்றால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட இளையோர்களாக இந்த நான்கு பேர் மட்டும் உள்ளனர், என்றாலும் நேரடி கற்பித்தலுக்கான ஏற்பாடுகளுடன் பள்ளிகளை மீளத்திறக்க ஆளும் வர்க்கம் அழுத்தம் கொடுத்து வருவதால் நோய்தொற்றால் இன்னும் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள்.

12 வயதுக்குட்பட்ட தடுப்பூசி போடத் தகுதியற்ற அனைவரும் உட்பட, மக்கள்தொகையில் பாதி பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இவர்களின் இறப்புக்கள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கான இரு கட்சி கொள்கையின் விளைவாகும். இதன் நோக்கம், தொழிலாளர்களை தொடர்ந்து வேலையில் தக்க வைத்திருப்பதும், மற்றும் முகக்கவச பயன்பாட்டிற்கான உத்தரவுகள், அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது மற்றும் பூட்டுதல்கள் உட்பட உயிர்களைக் காப்பாற்றும் மற்றும் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதைத் தடுப்பதாகும், என்றாலும் இது பங்குச் சந்தையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்படாது, ஒருவேளை அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும், அது அவ்வளவு தீவிரமானதல்ல, மேலும் அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு அவர்களால் வைரஸை பரப்ப முடியாது என்பது போன்ற பல பொய்களை இந்த பிரச்சாரம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பள்ளிகளை மீளத்திறப்பதற்கான முனைப்பு, தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடன் ஜனாதிபதி ஜோ பைடெனாலும் மற்றும் ஜனநாயகக் கட்சியினராலும் அப்படியே பின்பற்றப்பட்டது.

பிப்ரவரியில் ஒரு டவுன் ஹால் நிகழ்ச்சியில், பைடென், “உங்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு அம்மா அல்லது அப்பாவுக்கு இந்த நோய்தொற்றை நீங்கள் பரப்ப வாய்ப்பில்லை” என்று ஒரு கவலையடைந்த இரண்டாம் வகுப்பு மாணவியிடம் பொய் கூறினார். மேலும் “கோவிட் அடிக்கடி வரக்கூடியது தான் என்றாலும் குழந்தைகளுக்கு அது தொற்றாது. இது நிகழ்வது அசாதாரணமானது” என்றும், “உலகிலேயே பாதுகாப்பான மக்கள் குழுவில் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றும் மேலும் பொய்யாக அந்த மாணவிக்கு அவர் உறுதியளித்தார். “விஞ்ஞானத்தை பின்பற்றுவோம்,” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்த பைடென், அதற்கு முற்றிலும் எதிராகவே அவர் இப்போது செயல்படுகிறார்.

விஞ்ஞான ஆய்வுகள், குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட முடியும் என்பதுடன், அவர்கள் தங்கள் நண்பர்கள், உடன்பிறப்புகள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு அதனை பரப்பவும் முடியும் என்பதை உறுதி செய்கின்றன. குழந்தைகள், ஆசிரியர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் வைரஸை பரப்புகிறார்கள் அதேபோல இவர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு நோய் பரவுகிறது என்ற நிலையில், பள்ளிகள் அதிவேக நோய் பரப்பும் தளங்களாக செயல்படுகின்றன.

ஆதாரங்களை எதிர்கொள்கையில், (வருடத்திற்கு 560,000 டாலர் சம்பளம் பெறும்) அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராண்டி வைன்கார்டனும், (வருடத்திற்கு 370,000 டாலர் க்கு அதிகமாக சம்பளம் பெறும்) தேசிய கல்வி சங்கத்தின் தலைவர் பெக்கி பிரிங்கிளும், தொற்றுநோயின் மையங்களாக இருக்கும் வகுப்பறைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை திரும்ப வைக்க அழுத்தம் கொடுப்பதற்கு தங்களது முழு ஆதரவை அளித்துள்ளனர். “குழந்தைகளை பள்ளிகளுக்கு மீண்டும் திரும்ப வைப்பதே முதன்மை முன்னுரிமை வாய்ந்ததாகும்,” என்று வைன்கார்டன் இந்த மாத தொடக்கத்திலேயே அறிவித்துவிட்டார்.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்களின் முக்கிய கவலை என்னவென்றால், முகக்கவச பயன்பாடு மற்றும் தடுப்பூசி வழங்கல் தொடர்புபட்ட உத்தரவுகளை குடியரசுக் கட்சி ஆளுநர்கள் எதிர்ப்பதானது, பள்ளிகளை மீளத்திறப்பதற்கான, பள்ளி ஆண்டு முழுவதும் அவற்றை திறந்து வைத்திருப்பதற்கான முயற்சியைத் தடுக்கும் என்பதே.

கொலைகார மறுதிறப்புக் கொள்கையின் விளைவாக, நாடு முழுவதுமான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் ஏராளமான குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றிக்கொள்ளும் நிலை உருவாகி வருவதானது, நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் மேலதிக வெடிப்புக்கு களம் அமைக்கின்றது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் அல்லது நோய்தொற்றுள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் அவர்கள் இருந்ததால் அவர்களை தனிமைப்படுத்த வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ சங்கம் (American Association of Pediatrics-AAP) திங்களன்று, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 121,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 குழந்தை நோய்தொற்றாளர்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், இது ஜனவரி இறுதிக்கு பின்னைய உச்சபட்ச எண்ணிக்கையாகும் என்றும் அறிவித்தது. தற்போது 4.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இந்த நோய்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இந்த வாரம் உச்சபட்சத்தை தொட்டுள்ளது, இந்த எண்ணிக்கை தொற்றுநோய் காலத்தில் முதல் முறையாக 1,900 ஐ தாண்டியுள்ளது, இது தேசியளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த கோவிட்-19 நோயாளிகளில் 2.4 சதவீதம் ஆகும்.

AAP இன் கருத்துப்படி, இலையுதிர்கால அரை வருட கல்வி காலத்திற்காக முதலில் பள்ளிகள் திறக்கத் தொடங்கியபோது, 43 மாநிலங்களிலும் மற்றும் ஜூலை 22 முதல் வயது பகிர்ந்தளிப்பை வழங்கிய நியூயோர்க் சிட்டியிலும் 29 குழந்தை இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

தீவிர நோய் மற்றும் இறப்புகளுக்கான சாத்தியத்திற்கு மேலதிகமாக, நஞ்சூட்டலுக்கு இணையாக, அறிவாற்றல் வளர்ச்சியை கோவிட்-19 கடுமையாக பாதிக்கும் என்று காட்டப்பட்டுள்ளது. வைரஸூடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு, லோங் கோவிட் தொற்று மற்றும் பன்முனை அழற்சி நோயறிகுறிகள் (MIS-C) உட்பட, இன்னும் ஏராளமான அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, இவை ஆரம்ப கோவிட் தொற்றுக்குப் பின்னர் பல வாரங்களில் உருவாகின்றன. அமெரிக்காவில் 4,400 க்கும் மேற்பட்ட MIS-C நோய்தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்பதுடன், அதனால் ஏற்பட்ட 37 இறப்புக்களும் பதிவாகியுள்ளன, முதன்மையாக 6 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் குழுந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை வைரஸால் இழந்து வாழ்நாள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ABC News ஆல் மதிப்பாய்வு செய்யப்பட்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான பூர்வாங்க மையங்களின் (CDC) தரவு, 140,000 க்கும் அதிகமான குழந்தைகள் கோவிட்-19 நோய்தொற்றின் போது ஒரு முதன்மை அல்லது இரண்டாம் நிலை பராமரிப்பாளரை இழந்துவிட்டனர்.

வோல் ஸ்ட்ரீட்டின் பூர்த்தி செய்ய முடியாத அதன் தேவைகளுக்காக இலாபமீட்டும் அளவிற்கு எத்தனை குழந்தைகள் மாண்டு போக வேண்டும் அல்லது அவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட வேண்டும்?

ஏற்கனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிகள் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். டெக்சாஸின் கில்லீனில் உள்ள பெற்றோர் செவ்வாய்க்கிழமையன்று, முகக்கவச பயன்பாட்டுக்கு உத்தரவிடவும், 46,000 மாணவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கவும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தவும் கோரி பள்ளி மாவட்ட நிர்வாக கட்டிடத்திற்கு வெளியே ஒன்றுதிரண்டனர்.

ஜியோர்ஜியாவின் கோப் கவுண்டியில் உள்ள பெற்றோர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கோரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இங்கு ஜூலை 1 க்கு பின்னர் 253 நோய்தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன், நோய்தொற்று வெடிப்புக்குப் பின்னர் ஒட்டுமொத்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களையும் இணையவழி கற்றலுக்காக வீட்டிற்கு அனுப்ப நேரிட்டது. இதேபோன்ற போராட்டங்கள், சம்பந்தப்பட்ட பெற்றோர்களால் அயோவாவின் டெஸ் மொய்னெஸில் (Des Moines) உள்ள மாநில கேப்பிடோலிலும், மற்றும் புளோரிடாவின் மியாமியில் உள்ள மியாமி-டேட் கவுண்டி பொதுப் பள்ளிகள் கட்டிடத்திற்கு வெளியேயும் நடத்தப்பட்டன.

மில்லியன் கணக்கான குழந்தைகளின் உயிர்களை ஆபத்திற்குட்படுத்துவது குறித்து எந்தவித கவலையும் இல்லை. “தணித்தல்” உத்திகள் என்றழைக்கப்படுபவை, அந்தளவிற்கு போதுமானதாக இல்லை என்பதுடன், தவறான பாதுகாப்பு உணர்வையே உருவாக்குகின்றன. மேலும், நாடு முழுவதுமாக உள்ள பள்ளிகளின் மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட காயத்திற்கு ஒரு கட்டு போடுவது போலவே “தணிப்பு” நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே பயனுள்ள உத்தி என்பது, வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கு கவனம் செலுத்துகையில், குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரேமாதிரி பார்க்க வேண்டும்.

இதன் பொருள், நேரடி கற்பித்தலுக்காக பள்ளிகளை கொலைகாரத்தனமாக மீளத்திறப்பதை உடனடியாக நிறுத்துவதும், தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும் வரை அவற்றை மூடி வைத்திருப்பதும் ஆகும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் வீட்டில் இருந்தவாறு தொலைதூரக் கல்வி பயிலுகையில் அவர்களை வீட்டிலிருந்து பாதுகாக்க தங்களுக்கு முழு நிதியுதவி வழங்குமாறு கோர வேண்டும்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கான, மற்றும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தை ஒருங்கிணைக்க கல்வியாளர்களும் பெற்றோர்களும், ஒவ்வொரு பள்ளியிலும் மற்றும் பணியிடத்திலும் தொழிற்சங்கங்களிலிருந்தும், மற்றும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டும்.

Loading