இந்தியா: 11 நாள் வேலை நிறுத்தத்தை மாவோயிச தலைமையிலான தொழிற்சங்கம் நிறுத்தியதால் மதர்சன் வாகன தொழிலாளர்கள் கோபம் கொண்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேலைநிறுத்தம் செய்யும் மதர்சன் தொழிலாளர்கள் தங்கள் கஷ்டத்தை எடுத்துக் காட்டும் வகையில் உணவுக் கோப்பைகளை கைகளில் ஏந்தி நிற்கின்றனர். (WSWS)

தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் அண்ட் இன்ஜினியரிங் (மேட்) ஆலையில் உள்ள தொழிலாளர்களிடையே அவர்களின் 11 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் மாவோயிச தலைமையிலான இடது தொழிற்சங்க மையத்தினால் (LTUC) காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிராக கோபம் வளர்ச்சியடைந்து வருகிறது. நிரந்தர தொழிலாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தை ஆகஸ்ட் 14 இல் LTUC, திரும்பப் பெற்றது மேலும் முந்தைய நாள் தொழிலாளர் உதவி ஆணையர் (ACL) முன்னிலையில் மதர்சன் நிர்வாகத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி தொழிலாளர்களை பணிக்குத் திரும்ப உத்தரவிட்டது. இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களிடையே சமர்ப்பிக்கப்படாமல் தன்னிச்சையாக செயல்படுத்தப்பட்டது, இது தொடர்பாக வாக்கெடுப்போ அல்லது வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்புதலோ பெறப்படவில்லை என்ற விஷயம் ஒரு பக்கமாக உள்ளது.

300 க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள், 450 ஒப்பந்தத் தொழிலாளர்கள், 224 பயிற்சியாளர்கள் மற்றும் 350 அரசாங்க நிதியுதவி பெற்ற நீம் தொழிலாளர்கள் உட்பட 1,600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மேட் இல் வேலை செய்கின்றனர். மேட் என்பது மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் (எம்எஸ்எஸ்எல்) இன் பாலிமர் பிரிவு. அதன் தாய் நிறுவனம் ஜப்பானை அடிப்படையாக கொண்ட சுமிதோமோ வயரிங் சிஸ்டம்ஸ் உடன் கூட்டு நிறுவனத்தை உருவாக்கியது. மதர்சன், இந்தியாவுக்கு வெளியே 42 நாடுகளில் இயங்குகிறது அவற்றில் 135,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

மதர்சன் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 3 அன்று தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியபோது பதினொரு கோரிக்கைகளை எழுப்பிய போதிலும், நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் அவற்றை ஒரே ஒரு பிரச்சினையாக LTUC தலைமை சுருக்கியது; அதாவது அந்த நிறுவனம் இரவுப் பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் உண்ணக்கூடிய, புழு இல்லாத உணவை வழங்க வேண்டும். அவர்களுக்கு தற்போது 'கேக்' மற்றும் வாழைப்பழம் மட்டுமே வழங்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில், நைட் ஷிப்ட் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது, அதே நேரத்தில் பகல் ஷிப்ட் ற்றும் பொது ஷிப்ட் இல் ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு நல்ல உணவு வழங்கப்பட்டு வருவதாக நிர்வாகம் கூறியது. மேலும் தொழிற்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று MATE நிர்வாகமும் 'ஒப்புக் கொண்டது'.

வேலைநிறுத்தம் செய்தவர்களின் அசல் பதினோரு கோரிக்கைகளில் தேநீர் மற்றும் கழிப்பறை இடைவேளை, சுகாதாரமான கழிவறை வசதிகள், தரமான உணவு கோரியதற்காக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீதான ஒழுக்க நடவடிக்கையை நிறுத்த வேண்டும் மற்றும் நான்கு மணிநேர வேலைக்குப் பிறகு இரவு நேர பணியாளர்களுக்கு 30 நிமிட இடைவேளை ஆகியவை அடங்கும். கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் முழு சிகிச்சை செலவையும் நிறுவனம் ஏற்க வேண்டும், தொற்றுநோய் ஊரடங்கின் போது தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து இல்லாமல் வேலைக்கு வர முடியாத தொழிலாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அரக்கோணம், வாலாஜா, செங்கல்பட்டு மற்றும் செய்யாறு போன்ற தொலைதூர இடங்களிலிருந்து பயணிக்கும் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.. இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர LTUC ஒப்புக்கொண்டது.

ஆலைக்குள் தொழிலாளர்கள் திரும்பி சென்ற போது, நிர்வாகம் 'ஒப்புக் கொண்டது' என்று தொழிற்சங்கம் கூறிய கோரிக்கைகளை கூட நிறுவனம் மதிக்கவில்லை என்பதை அறிந்து அவர்கள் கோபமடைந்தனர். வேலைநிறுத்தத்தில் இணைந்த தொழிலாளர்களுக்கு நைட் ஷிப்ட் ரத்து செய்யப்பட்டது மற்றும் அவர்கள் முதலாவது மற்றும் இரண்டாவது ஷிப்டுகளில் ஒருங்கிணைக்கப்பட்டனர். நைட் ஷிப்டில் வேலை செய்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. வேலைநிறுத்த காலத்தில் நிர்வாகத்தால் கருங்காலிகளாக நியமிக்கப்பட்ட நாட்கூலியாட்கள் இன்னும் அங்கே வேலை செய்வதையும் தொழிலாளர்கள் பார்த்தனர். வேலைநிறுத்த த்தில் ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்பியதும் அவர்கள் தன்னிச்சையாக வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இதன் விளைவாக, தொழிலாளர்கள், நிர்வாகத்தால் மட்டுமல்ல, மாவோயிஸ்ட் எல்.டி.யு.சி தலைமையாலும் ஏமாற்றமடைந்தனர், வேலைநிறுத்தத்தின் முதல் நாளிலிருந்தே அதை சீக்கிரமாக முடித்து தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்ப சங்கம் அவசரப்பட்டது. LTUC தலைமை மற்றும் வேலைநிறுத்தத்திற்கு துரோகம் செய்ததை கண்டித்து சமூக ஊடகங்களில் தொழிலாளர்கள் கோபமான செய்திகளை வெளியிட்டனர். ஒரு தொழிலாளி கூறினார்: 'தலைவரே! எங்களுடைய 11 கோரிக்கைகள் எங்கே? ஆகஸ்ட் 14 அன்று நாங்கள் வேலைக்குத் திரும்பியபோது, ஆலையில் எதுவும் மாறவில்லை என்று எனக்குத் தோன்றியது. 11 கோரிக்கைகளை நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளோம். இவற்றில் எத்தனை கோரிக்கைகளை நிர்வாகம் ஒப்புக்கொண்டு அதன் கையொப்பத்தை இட்டது? சொல்லுங்க தலைவரே?

'11 நாட்கள் வேலைநிறுத்தத்தின் போது நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் நாங்கள் உங்கள் பின்னால் வந்தோம். ஆனால் தொழிலாளர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஏன் வேலை நிறுத்தத்தை கைவிட்டீர்கள்? தொழிலாளர்களின் முன்முயற்சியால் தான் நீங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தீர்கள். ஆனால் இப்போது அனைவருக்கும் தரமான உணவு என்ற ஒரே கோரிக்கையை கூட வென்றெடுக்காமல் தொழிலாளர்களை ஏன் வேலைக்குத் திரும்ப போகச் சொன்னீர்கள்? மற்றொரு தொழிலாளி கேட்டார்: ' சொல்லுங்க தலைவரே! 11 கோரிக்கைகளையும் நிர்வாகம் எத்தனை நாட்களில் செயல்படுத்த ஒப்புக்கொண்டது?”

இந்தக் கேள்விகளை எழுப்பிய தொழிலாளர்கள் எல்டியுசி தலைமையால் பயமுறுத்தப்பட்டனர், அவர்கள் தலைமையைக் கேள்வி கேட்க முடியாது என்றும் அவர் தொழிற்சங்கத்தை விட்டு 'விருப்பப்படி” வெளியேறலாம் என்றும் கூறப்பட்டது. LTUC தலைவர் எஸ்.குமாரசாமியின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு தொழிலாளி LTUC இன் வாட்ஸ்அப் குழுவிலிருந்து நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொழிற்சங்கத் தலைமைக்கும் சாமானிய தொழிலாளர்களுக்கும் இடையே பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. MATE தொழிலாளர்களிடையே போர்க்குணமிக்க மனநிலை வளர்ந்து வருகிறது. சில தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க வேலைநிறுத்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாமானிய தொழிலாளர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்டளவு நம்பகத்தன்மையை தக்க வைப்பதற்காக மாவோயிச எல்.டி.யு.சி ஆகஸ்ட் 3 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க கடமைப்பட்டதாக இருந்தது. 2019 இல் மதர்சனின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்த போர்க்குணமிக்க தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் ஒன்றை கூட வெல்லாத நிலையில் அவர்களை வேலைகளுக்கு திரும்ப செல்லும்படி எல்.டி.யு.சி உத்தரவிட்டு போராட்டத்தை காட்டிக்கொடுத்தது. இவ்வாறாக நிர்வாகத்தின் முன் மண்டியிட்டதன் ஒரு பகுதியாகத் தான், பணிநீக்கம் செய்யப்பட்டு பின்னர் ஒரு மோசடியான விசாரணையைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 49 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி வலியுறுத்த எல்.டி.யு.சி மறுத்து விட்டது.

நிறுவனத்துக்கும் LTUC க்கும் இடையே துரோக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதன் எழுத்துப்பூர்வ வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது குறித்து போர்க்குணமிக்க தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கோபத்திற்கு பதிலளிக்கும் விதமாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நிர்வாகத்திடம் ”புகார்” செய்ய ஆகஸ்ட் 24 இல் பேச்சுவார்த்தை நடத்தினர். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தலைமை நிர்வாகப் பிரதிநிதி ரமணா, தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் கூறுகையில், இரவு ஷிப்ட் பணியாளர்களுக்கு இரவு 10 மணிக்கு வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலை முடிந்து செல்வதற்கு முன்பு காலை 5.30 மணிக்கு ’டிஃபின்’ (சிற்றுண்டி அல்லது லேசான தேநீர் உணவு) மட்டுமே வழங்க முடியும் என்று கூறினார். கேக் மற்றும் வாழைப்பழம் காலை 1:30 மணிக்கு வழங்கப்படும் என்றும் பல்வேறு இடைவெளியில் தேநீர் வழங்கப்படும் என்றும் நிறுவனத்தின் பிரதிநிதி கூறினார். இந்த சலுகையை தொழிலாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற பயத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அதனை நிராகரிக்க நிர்பந்திக்கப்பட்டனர், அதற்கு பதிலாக தொழிலாளர்களுக்கு பசி எடுக்கும் நேரமான அதிகாலை 2:30 மணியளவில் தரமான முழு உணவு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்துவது மற்றும் தொழிலாளர்களுக்கு தேநீர் இடைவேளை வழங்குதல் உள்ளிட்ட பிற 'ஒப்புக்கொள்ளப்பட்ட' கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் தவறியது குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். 'வேலை சுழற்சி' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு துறைகளில் பணிக்கு திரும்பிய வேலைநிறுத்தக்காரர்களை நிறுத்துவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், மேட் நிர்வாகம் இந்த பிரச்சினைகள் குறித்த எந்தவொரு விவாதத்தையும் எதிர்கால சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒத்திவைத்தது.

மேட் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை பகுப்பாய்வு செய்து, உலக சோசலிச வலைத் தளம் ஆகஸ்ட் 11 அன்று எச்சரித்தது: “இன்று, வேலைநிறுத்தம் செய்யும் மதர்சன் தொழிலாளர்கள் இரண்டு முனைகளில் ஒரு போரை எதிர்கொள்கின்றனர். ஒருபுறம், அவர்கள் மேட் நிர்வாகத்தை எதிர்கொள்கிறார்கள், அது ஆலைக்குள் அதன் மிருகத்தனமான வேலை முறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. இதில், தமிழ்நாட்டின் புதிய திராவிட முன்னேற்றக் கழக (திமுக) மாநில அரசாங்கத்தின் முழு ஆதரவும் மேட் இற்கு உள்ளது, இது முக்கிய ஸ்டாலினிசக் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றது மற்றும் மாநிலத்திலுள்ள வாகனத் துறை சர்வதேச வாகன முதலீட்டாளர்களுக்கு ‘போட்டித்திறனுடன்’ இருப்பதை உறுதி செய்துள்ளது.

'மறுபுறம், மதர்சன் தொழிலாளர்கள் எல்.டி.யு.சி. இன் தலைமைக்கு எதிராக தாங்கள் எதிர்த்து நிற்பதை காண்கிறார்கள். ஸ்ராலினிச சிபிஎம் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)] மற்றும் சிபிஐ [இந்திய கம்யூனிஸ்ட் கட்சி] தலைமையிலான தொழிற்சங்கங்களை விட மாவோயிச தலைமையிலான எல்டியுசி மிகவும் போர்க்குணமிக்கதாகக் கூறிக்கொண்டாலும், போராட்டத்தை விரிவுபடுத்தும் விஷயம் குறித்து அவர்களது அதே கடுமையான எதிர்ப்பை பகிர்ந்து கொள்கிறது. அவற்றை போலவே அரசாங்கம் மற்றும் தொழிலாளர் துறையின் ஆதரவு கேட்டு பயனற்ற முறையீடுகளில் தொழிலாளர்களை திசை திருப்ப முயற்சிக்கிறது.

மாவோயிச எல்.டி.யு.சி நடத்திய சமீபத்திய துரோகம் WSWS இன் எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. அனைத்து தொழிற்சங்கங்களைப் போலவே, LTUC யும் தொழிலாளர்களின் மிகவும் அடிப்படை கோரிக்கைகளுக்காக கூட போராட திராணியற்றது என்பதை அது நிரூபித்துள்ளது. தங்களின் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், மதர்சன் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தவும் ஒரு சாமானிய தொழிலாளர் வேலைநிறுத்தக் குழுவை அமைக்க வேண்டும். அதில் ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களும் அணிதிரட்டப்பட்டு அது சோசலிச வேலைத்திட்டத்தினால் பலப்படுத்தப்பட வேண்டும். இந்த போராட்டத்திற்கான ஒரு முன்நிபந்தனை என்னவென்றால், தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் உட்பட அவற்றுடன் தொடர்புடைய கட்சிகளிடமிருந்து அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக முறித்துக் கொள்ள வேண்டும்.

மதர்சன் தொழிலாளர்களின் வலுவான கூட்டாளிகள் இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலுள்ள வாகன தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் தான். அவர்கள் சிறந்த ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்காக போராடுவதற்கும், வேலைகளை பாதுகாப்பதற்குமான தொழிலாளர்களின் போராட்டங்களின் பூகோள எழுச்சியில் இணைந்துள்ளனர். பூகோள ரீதியாக இயங்கும் நிறுவனங்களுக்கு எதிரான சர்வதேச எதிர் தாக்குதலில் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவின் வாகன துறை முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு மதர்சன் சாமானிய தொழிலாளர் குழு ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

Loading