இலங்கை ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் 30 அன்று, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ திடீரென ஒடுக்குமுறையான தேசிய 'அவசரகால நிலையை' பிரகடனம் செய்தார். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் 'பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கும்' இந்த புதிய நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் அறிவித்தார்.

உணவு பற்றாக்குறை மற்றும் அரிசி மற்றும் சீனி போன்ற உணவு விலையில் பாரிய அதிகரிப்பு ஆகியவற்றைக் கையாள்வதற்கு இந்த அறிவிப்பு அவசியம் என்பதே உத்தியோகபூர்வ காரணமாக காட்டப்டுகின்றது. அரிசி விலை கிலோவுக்கு 250 மற்றும் சீனி விலை 220 ரூபாயாக இரட்டிப்பாகியுள்ளது. அரச சார்பு ஊடகங்கள், பதுக்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டமையும், இராஜபக்ஷ வலியுறுத்திய பிற நடவடிக்கைகளும் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் என்றும், பொருட்களின் முறையான விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறி உடனடியாகப் பாராட்டின.

எவ்வாறாயினும், புதிய 'அவசர நிலை' நடவடிக்கைகள், பதுக்கல் மற்றும் விலை உயர்வுகளை சமாளிக்க ஏற்கனவே இருக்கும் சட்டங்களை இலகுவாக விஞ்சிச் செல்கின்றன. இராஜபக்ஷவின் பிரகடனத்திற்கும் 'சமூகத்தின் வாழ்க்கைக்கு இன்றியமையாத' சேவைகளை வழங்குவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாறாக அது இன்னும் கடுமையான ஜனாதிபதி அதிகாரங்களுக்கான பாரதூரமான நகர்வாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையை திணிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்க்கின்ற தொழிலாள வர்க்கத்தின் மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் பாய்வதற்காக, சர்வதேச அளவில் முதலாளித்துவ வர்க்கங்களும் அவற்றின் ஆட்சிகளும் சர்வாதிகார வழிமுறைகளை விரைவாக கையில் எடுக்கின்றன.

கோட்டாபய இராஜபக்ஷ (AP Photo/Eranga Jayawardena)

புதிய நடவடிக்கை, 'அவசரகால (அத்தியாவசிய உணவு வழங்கல்) விதிகள்' என்று அழைக்கப்பட்டாலும், தற்போதுள்ள அவசரகால அதிகாரத்தின் கீழ், ஜனாதிபதியானவர் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் 'எந்த சட்டத்தையும் திருத்தவும், எந்த சட்டத்தின் செயல்பாட்டையும் நிறுத்தவும் மற்றும் திருத்தத்துடன் அல்லது இல்லாமல் ஏதேனும் சட்டத்தை பயன்படுத்தவும்' அதிகாரம் கொண்டவராவார். இது ஊடகங்களை தணிக்கை செய்யவும் அனுமதிக்கிறது.

கடந்த வாரம், இராஜபக்ஷ 'அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை' புதுப்பித்தார். முதலில் மே 27 அன்று அமுல்படுத்தப்பட்ட இது, சுமார் ஒரு மில்லியன் அரச ஊழியர்களை உள்ளடக்கியவாறு அவர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கின்றது.

அத்தியாவசிய சேவை சட்டங்களை 'மீறியதாக' குற்றம் காணப்படும் எவரும், ஒரு நீதவான் முன் நடத்தப்படும் சுருக்கமான விசாரணையைத் தொடர்ந்து, கடுமையான சிறைத்தண்டனை, அபராதம், அவர்களின் சொத்தை பறிமுதல் செய்வது மற்றும் எந்தவொரு தொழிலிலும் வேலை செய்யமுடியாத தடையையும் எதிர்கொள்வார். இந்த விதிகளை 'மீறுவதற்காக' அரசாங்க ஊழியர்களை 'தூண்டுவிடுவதாக' அல்லது 'ஊக்குவிப்பதாக' குற்றம்சாட்டி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எவருக்கும் அதே தண்டனைகள் விதிக்கப்படலாம்.

இராஜபக்ஷவின் புதிதாக பிரகடனப்டுத்தப்பட்ட அவசரகால விதிகள், அரசியலமைப்பில் கோரப்பட்டுள்ளவாறு, இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சிகளின் அடிபணிவான விமர்சனங்களை பொருட்படுத்தாமல், மசோதாவை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஆளும் கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

கடந்த வாரம், திடீரென பெருந்தொகை சீனி, அரிசி மற்றும் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை 'அம்பலப்படுத்தி' ஊடகங்கள் ஒரு விரிவான பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தன. பதுக்கல்காரர்கள் அடையாளம் காட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து அரசாங்க நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுடன் பொலிசார் களஞ்சிய சாலைகளில் சோதனை நடத்தி வளாகங்களுக்கு சீல் வைத்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள், சட்டவிரோத பதுக்கல்காரர்களிம் இருந்து 'நியாயமான' விலையில் அரசாங்க அதிகாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்தது. இழப்பீடு கொடுக்காமல் இந்த அத்தியாவசிய உணவு பொருட்களை கைப்பற்றுவதற்கு பதிலாக, 'சட்டவிரோத பதுக்கல்காரர்களுக்கு' வெகுமதி அளிக்கப்பட்டுள்ளமை, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும் வணிகர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டவை அல்ல என்ற தெளிவான சமிக்ஞையை அவர்களுக்கு காட்டியுள்ளது.

உண்மையில், அதிக விளம்பரப்படுத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் கைப்பற்றல்களும் விலைவாசி உயர்வு, பற்றாக்குறை மற்றும் தொற்றுநோயால் மோசமடைந்துள்ள சமூக பேரழிவு ஆகியவை சம்பந்தமான அரசாங்க எதிர்ப்பு உணர்வைத் திசைதிருப்பி விடுவதற்கான ஒரு பொது உறவுப் பேணல் பயிற்சியாகும். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 வைரஸால் இறந்துள்ளனர். இதில் 8,000 மரணங்கள், பொது சுகாதார சேவையை டெல்டா மாறுபாடு மூழ்கடித்துள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் நடந்தவை ஆகும்.

அரசாங்கத்திற்குள் இன்னொரு சிரேஷ்ட இராணுவப் பிரமுகரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில், மேஜர் ஜெனரல் டி.எஸ்.பி. நிவுன்ஹெல்லவை, அத்தியாவசிய உணவு விநியோகங்களை ஒருங்கிணைப்பதற்காக, அத்தியாவசிய சேவைகளின் ஆணையர் நாயகமாக ஜனாதிபதி இராஜபக்ஷ நியமித்தாதர்.

எவ்வாறாயினும், உணவுப் பற்றாக்குறையானது பதுக்கலால் ஏற்படுவதில்லை, மாறாக அது இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள தடைகள் மற்றும் உயரும் பணவீக்கத்தினதும் விளைவாகும். உண்மையில், கொழும்பானது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பங்கீடு முறையில் வழங்குவதற்குத் தயாராகி வருகிறது.

பால் மா உட்பட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள், இந்த ஆண்டு 4 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கையோடு சம்பந்தப்பட்டதாகும். ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு பண வருகையின் மூலமான வருவாயில் ஏற்பட்டுள்ள கூர்மையான சரிவினால், அரசாங்கத்தின் அந்நிய செலவானி இருப்பை கடந்த மாதம் 2.8 பில்லியன் டொலராக குறைந்தது. இலங்கையின் எரிசக்தி அமைச்சர், ஐக்கிய அரபு ரஜ்ஜிய அதிகாரிகளுடன், கடனுக்கு எண்ணெயைப் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 30 வரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சுமார் 13.5 சதவிகிதம் வியத்தகு முறையில் சரிந்துள்ளது சரிந்துவிட்டதாக அறிவித்துள்ள அதே நேரம் வணிக வங்கி பரிமாற்ற விகிதங்கள் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் சரிந்து விட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் 30 அன்று, பணப் பற்றாக்குறையில் வாடும் திறைசேரியால், அதன் பிணை முறைகளை 4 பில்லியன் ரூபாய்களுக்கு மட்டுமே விற்க முடிந்த நிலையில், பங்கு பத்திர சந்தையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்க செலவின பற்றாக்குறைகளை சமாளிக்க மத்திய வங்கி பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிட்டமை, மேலும் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்ததுடன் ரூபாயின் மதிப்பைக் குறைக்கிறது. உத்தியோகப்பூர்வ பணவீக்க விகிதம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் 6 சதவீதமாக அதிகரித்தது.

நவம்பரில் மற்றொரு சிக்கன பாதீட்டுக்குத் தயாராகும் நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ, 'அரச வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது... அடுத்த அடுத்த செலவுகளுக்கு கூட இது போதாது' என்று கடந்த வாரம் அமைச்சரவை அமைச்சர்களிடம் கூறினார். அவரது அமைச்சானது ஏனைய அனைத்து அமைச்சுக்களுக்கும் செலவுகளைக் குறைக்கவும், அனைத்து திட்டங்களையும் நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது. ஒரு “தீர்வாக” அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வெட்டுவதற்கு அரசாங்க அமைச்சர்கள் ஏற்கனவே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான தாக்குதல்களை தீவிரமாக்க அது தயாராகின்ற நிலையிலும், இராஜபக்ஷ அரசாங்கம் பெரிய வணிகர்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளதுடன், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான அனைத்து கடன் பொறுப்புக்களையும் வைத்துக்கொண்டுள்ளதோடு, தொழிலாளர்களை பாதுகாப்பற்ற நிலையில் ஏற்றுமதி ஆலைகள் மற்றும் ஏனைய வேலைத் தளங்களில் வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது. தொற்றுநோய் காலகட்டத்திலும் வங்கிகளும் ஏனைய வணிகங்களும் பெரும் இலாபங்களைப் பெற்றுள்ளன.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவசரகாலச் சட்டங்களை கோழைத்தனமான முறையில் விமர்சித்தன. அவசரகால விதிகளை அமுல்படுத்துவதற்கு பதிலாக, 'தொற்றுநோயை சமாளிப்பதற்கான சட்டத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஐ.ம.ச. அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. அரசாங்கம் 'அவசரநிலையை விதிப்பதற்கு பதிலாக, தனியான பொது சுகாதார அவசர சட்டங்களை' கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு கூறியது.

ஜே.வி.பி. அவசரகால விதிமுறைகள் குறித்து அமைதியாக உள்ளது. ஒரு ஜே.வி.பி. தலைவரான சுனில் ஹதுன்நெத்தி, ஆகஸ்ட் 29 அன்று அரசாங்கத்திற்கு பயனுள்ள விலைக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த அழைப்பு விடுத்தார். அவசரச் சட்டங்கள் திணிக்கப்பட்டபோது, ஜே.வி.பி. பாராளும்ன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அவை வர்த்தகர்களுக்கு மட்டுமே பயனளிப்பதாகக் கூறினார். போலி இடது முன்நிலை சோசலிசக் கட்சி, அவசர காலச் சட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

இராஜபக்ஷ அரசாங்கம், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது குழுக்களும், உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பையிட்டு பீதியடைந்துள்ளன. இராஜபக்ஷ கடந்த மாதம் தனது தேசிய உரையின் போது, தயக்கத்துடன் புதிய முடக்கத்தை அறிவிக்கையில், 'இது வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கான நேரம் அல்ல,' என அறிவித்தார்.

கடந்த மாதங்களில், கிட்டத்தட்ட 250,000 ஆசிரியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையும் புகையிரதம், தபால், பெருந்தோட்ட மற்றும் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்தமை, அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இராஜபக்ஷவின் வர்க்கப் போர் அவசரகால நிலை மற்றும் அத்தியாவசிய சேவைகள் வேலைநிறுத்த தடைக்கு, அரசியல் ரீதியாகவும் தனது பலத்தை அணிதிரட்டியும் தொழிலாள வர்க்கம் பதிலிறுக்க வேண்டும். அரசாங்கத்தின் பக்கத்தில் திற்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் நம்ப முடியாது.

தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்தும் விலகி, அவசரகால நிலை மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டங்களை உடனடியாக இரத்துச் செய்யக் கோருவதோடு, பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமைகளை எதிர்ப்பது உட்பட தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் உலகளாவிய வர்க்க சகோதர சகோதரிகள் பக்கம் திரும்புவதன் மூலமும், நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பிற்காகப் போராடுவதன் மூலமும் மட்டுமே இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த போராட்டம் இலங்கையில் சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்திற்குமான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) மட்டுமே இந்த வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதோடு அதற்காகப் போராடுகிறது.

Loading