தளபதி ஓட்டோலோ சரைவா டி கார்வால்யோ: 1974 போர்த்துக்கீசிய புரட்சியை ஒடுக்கியவர் காலமானார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போர்த்துக்கலில் 48 வருட சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்த ஏப்ரல் 25, 1974 இராணுவ சதித்திட்டத்தை ஏற்பாடு செய்த இராணுவ தளபதி ஓட்டோ சரைவா டி கார்வால்யோ ஜூலை 25 அன்று தலைநகரான லிஸ்பனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் 84 வயதில் இறந்தார்.

உத்தியோகபூர்வ உரைகளில், கார்வால்யோ சமூகப் புரட்சி நோக்கத்தை கொண்ட இராணுவத்திலிருந்த ஒரு இடதுசாரி பிரிவின் பிடிவாதமான தலைவராக சித்தரிக்கப்படுகிறார். ஆனால் இவரின் ஆளுமை பெரும்பாலும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் போலி-இடது ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் வளர்க்கப்பட்டது. இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீன முன்னோக்கை எதிர்த்ததுடன் மற்றும் முதலாளித்துவ ஆயுதப்படை இயக்கத்தை (MFA) ஊக்குவித்தன. இவர் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வெடித்த 'கார்னேஷன் புரட்சி' (“Carnation Revolution”) என்றழைக்கப்படுவதன் இணை நிறுவனருமாவார்.

1976 இல் ஓட்டோ சரைவா டி கார்வால்யோ (courtesy, Wikimedia Commons)

கார்வால்யோ தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை ஒடுக்குவதில் பெரும் பங்கு வகித்தார். அவர் கட்டளைக்குட்பட்ட COPCON எனப்படும் 5,000 பேரை கொண்ட சிறப்பு இராணுவ 'தலையீடு' படை மூலம் பொது ஒழுங்கை பராமரித்தார். போர்த்துக்கலின் ஆளும் உயரடுக்கிற்கு ஒரு முதலாளித்துவ குடியரசை ஒன்றிணைத்து அதன் ஆட்சியைப் பாதுகாக்க அவர் ஒரு மூச்சுவிடும் அவகாசத்தை வழங்கினார்.

கார்வால்யோவின் இறப்பிற்கான பிரதிபலிப்பு

கார்வால்யோவின் மரணம் பற்றி அறிந்ததும், போர்த்துகீசிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சர்வாதிகாரத்தை தூக்கியெறிவதில் அவரது பங்கை விரைவாக ஒப்புக் கொண்டனர். ஆனால் இதனைத்தொடர்ந்த நிகழ்வுகளை ஆழமாக ஆராய்வதை எதிர்காலத்திற்கு விட்டுவிட்டவேண்டும் என வலியுறுத்தினர். இப்போது இவ்வாறு செய்வதுபோல் கார்வால்யோவின் மரணத்திற்கு ஒரு தன்னிச்சையான கட்டுப்பாடற்ற பிரதிபலிப்பை காட்டுவது, தீர்க்கமுடியாத சர்வதேச முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாள வர்க்கம் எவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டது மற்றும் போர்த்துக்கலில் ஒரு சோசலிசப் புரட்சியின் உண்மையான சாத்தியம் எப்படி தோற்கடிக்கப்பட்டது என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் ஏற்கனவே 2024 ஏப்ரல் 25 புரட்சியின் 50 வது ஆண்டு விழாவிற்கு நிகழ்வுகளைத் தயாரிக்க ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியுள்ளது. அது 'முழு வரலாற்று சுழற்சியையும்' எடுத்துக்காட்டும் என்று கூறியது. முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாறுவது மட்டுமே சாத்தியமான விளைவாக இருந்தது என்றும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் பயனற்றது என்றும் உத்தியோகபூர்வ கதையை அது அறிவிக்கும். சோசலிஸ்ட் கட்சி பிரதமர் அன்டோனியோ கொஸ்டா 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கூடியகாலம் நீடித்த சர்வாதிகாரத்தை முடிவிற்கு கொண்டுவந்த 'செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர்' என்று கார்வால்யோவை நினைவு கூர்ந்தார்.

'கார்னேசன் புரட்சியின் இரத்தம் சிந்தாத வெற்றிக்காக ஒட்டேலோ சரைவா டி கார்வால்யோவின் மூலோபாய மற்றும் செயல்பாட்டுத் திறனும் அவரது அர்ப்பணிப்பும் தாராள மனப்பான்மையும் தீர்க்கமானவை … அதனால் அதன் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதற்கு அவர் சரியானவர் என்றும் கொஸ்டா கூறினார்.

வலதுசாரி போர்த்துகீசிய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா, கார்வாலோவை 'போர்த்துகீசிய சமகால வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்தில் தலைசிறந்த கதாநாயகன்' என்று அழைத்தார். ஆனால் போர்த்துக்கீசிய சமூகத்தில் அவரது ஆளுமை உருவாக்கிய மற்றும் ஆழமான பிளவுகளைப் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 'வரலாற்று அவரை ஊக்குவிப்பது இன்னும் காலத்திற்கு முந்திய ஒன்று' என்று அவர் அறிவித்தார்.

போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி (PCP) ஒரு மேலெழுந்தவாரியான செய்திக்குறிப்பில் “ஏப்ரல் 25 இராணுவ எழுச்சியில் ஒட்டோலோ சரைவா டி கார்வால்யோவின் பங்கை அதன் உள்ளடக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அவர் இறக்கும் தருணம் அவரது அரசியல் பாதையைக் குறிக்கும் அணுகுமுறைகளையும் நிலைப்பாடுகளையும் பதிவு செய்யும் சந்தர்ப்பம் அல்ல” என தெரிவித்து வெளியிட்டது.

இடது கூட்டின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கத்தரினா மார்டின்ஸ், கார்வால்யோவை 'ஏப்ரல் 25 ஆம் தேதி தொழிலாளர்களில் ஒருவர், எங்களுக்கு சுதந்திரம் அளித்த சதித்திட்டத்தின் மூலோபாயவாதியாக அங்கீகரிக்கப்பட்டார்' என்று கூறி, அவர் 'நம் நாட்டின் விடுதலையாளர்களில் ஒருவராக நினைவுகூரப்பட வேண்டியவர்' என்று பாராட்டினார்.

சாலாஸார் சர்வாதிகாரம்

கார்வால்யோ 1936 இல் போர்த்துக்கல் காலனியான மொசாம்பிக்கில் ஒரு தபால் சேவை அதிகாரியின் மகனாகப் பிறந்தார். பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் (எட்டு ஜனாதிபதிகள் மற்றும் 45 அரசாங்கங்கள் 1910 மற்றும் 1926 க்கு இடையிலான முதல் குடியரசின் காலத்தில்) மற்றும் ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் மே 28, 1926 வலதுசாரி இராணுவ சதிக்கு வழிவகுத்தது.

போர்த்துக்கல் சர்வாதிகாரி அந்தோனியோ டி ஒலிவேரா சாலாஸார் (Courtesy of Wikimedia Commons)

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பொருளாதார விரிவுரையாளர் அன்டோனியோ டி ஒலிவேரா சாலாஸார் நிதி அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். 1934 இல் ஐந்து நாள் கிளர்ச்சியில் உச்சத்தில் இருந்த தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு நேரடி பதிலாக, சாலாஸார் தனது பாசிச புதிய அரசை (எஸ்டாடோ நோவோ - Estado Novo) அறிவித்தார். போர்த்துக்கலின் ஆளும் உயரடுக்கிற்கு சாலாஸார் ஆட்சியின் மிக முக்கியமான செயல்பாடு உள்நாட்டில் வறிய தொழிலாள வர்க்கத்தையும், காலனிகளில் சுதந்திரத்திற்கான வளர்ந்து வரும் கோரிக்கைகளையும் கொடூரமாக ஒடுக்குவதாகும்.

போர்த்துக்கலின் சிறை நிலைமைகள் குறித்த 1965 சர்வதேச மன்னிப்பு சபையின் (AI) ஒரு அறிக்கை, போலீஸ் அரசின் கீழ் வாழ்க்கை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. சாலாஸார் எந்தவொரு எதிர்க் கட்சியும் உருவாவதை தடுப்பதற்காக நாட்டை 'ஏறக்குறைய ஒரு நபர் அடிப்படையில்' ஆட்சி செய்தார். ஒப்புதல் இல்லாமல் எந்த அமைப்பையும் அமைக்க முடியாது. மேலும் 'நடைமுறையில் அரசாங்கத்தின் அனைத்து விமர்சனங்களும்' விலக்கப்பட்டு வெளியீடுகள் இத்தகைய கடுமையான தணிக்கைக்கு உட்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து எதிர்ப்புகளும் தலைமறைவாக இருக்க தள்ளப்பட்டு, 'விரோதமானதாக' பின்தொடரப்பட்டன.

ஒவ்வொரு தொழிலாளியும் உத்தியோகபூர்வ சின்டிக்கேட் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் எவரும் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மாணவர்களிடையே அதிகரித்து வரும் அமைதியின்மை காரணமாக, 1965 ஆம் ஆண்டு 'இதுவரை மாணவர் கைதுகள் மற்றும் விசாரணைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது' என்று சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டது.

Policia Internacional e de Defesa do Estado (PIDE) என்ற இரகசிய போலீஸ் கெஸ்டபோவின் மாதிரியாக இருந்தது. இது கிட்டத்தட்ட யாருடைய வீட்டையும் விருப்பப்படி தேடலாம் மற்றும் அவர்களை காலவரையின்றி மீண்டும் மீண்டும் தடுத்து வைக்கலாம். கைது செய்யப்பட்டவர்கள் கங்காரு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு அரசியல் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர் அல்லது Cape Verde தீவில் உள்ள தாராஃபால் வதை முகாமிற்கு அனுப்பப்பட்டனர். துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் கொலைக்கான எண்ணற்ற கொடூரமான உதாரணங்களை சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை பதிவு செய்தது.

இராணுவத்தினுள் எதிர்ப்பின் எழுச்சி

சாலாஸார் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளிடமிருந்து மட்டுமல்லாமல் இராணுவத்தின் எதிர்ப்பையும் எதிர்கொண்டார். அது ஆட்சி முறிகின்றது என்பதற்கான உறுதியான அறிகுறியாகும்.

ஜெனரல் ஹம்பெர்டோ டெல்காடோ (1926 புரட்சியில் பங்கேற்று 1941 இல் ஹிட்லரைப் புகழ்ந்தவர்) போட்டியிட்டார் ஆனால் தோல்வியடைந்தார். 1958 ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வேட்பாளருக்கு எதிரான போட்டியிட்டபோது அவரால் தன்னை சுற்றி எதிர்தரப்பாக இருந்த முழு ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசவாதிகளை அணிதிரட்ட முடிந்தது. PIDE 1965 இல் டெல்காடோவை படுகொலை செய்தது.

1959 ஆம் ஆண்டில், பல இராணுவ மற்றும் பொது பிரமுகர்கள் சாலாஸாரை தூக்கியெறியும் நோக்கத்துடன் 'Coup da Sé' என்று அழைக்கப்படும் லிஸ்பனில் ஒரு தோல்வியுற்ற கிளர்ச்சியைத் தொடங்கினர். 1961 இல் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பொட்டெல்ஹோ மோனிஸ் தலைமையிலான தாராளவாத அதிகாரிகள் குழுவால் மற்றொரு சதி முயற்சி தொடங்கப்பட்டது.

போர்த்துக்கலும் சர்வதேச நிலைமையும்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அபரீத வளர்ச்சி மற்றும் முதலாளித்துவத்தின் ஒரு அமைப்புரீதியான நெருக்கடி வெடித்ததன் பின்னணியில் கார்னேஷன் புரட்சிக்கு இட்டுச்சென்ற எழுச்சியுறும் எதிர்ப்பு வெளிப்பட்டது. நாட்டிற்கு நாடு, தொழிலாள வர்க்கப் போராட்டங்களுடன் பொருளாதார முரண்பாடுகளின் பரஸ்பர தாக்கங்கள் அரசியல் எழுச்சிகளையும், இடதுசாரி மற்றும் சோசலிச இயக்கங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் உருவாக்கியது.

இந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் 'குருஷ்சேவின் இரகசிய பேச்சு, ஹங்கேரிய புரட்சி, காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் ஒரு பெரிய அலை வெடித்தது (அதாவது வியட்நாம், எகிப்து, அல்ஜீரியா, கொங்கோ), கியூபாவில் காஸ்ட்ரோ ஆட்சியை நிறுவுதல், வியட்நாமில் அமெரிக்க தலையீடு மற்றும் உலகளாவிய மாணவர் எதிர்ப்பு இயக்கத்தின் அடுத்தடுத்த வெடிப்பு, 1965-66 இந்தோனேசியாவில் எதிர் புரட்சி படுகொலை, சீனாவில் கலாச்சார புரட்சி, மே-ஜூன் 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம், ஆகஸ்ட் 1971 இல் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு சரிவு, செப்டம்பர் 1973இல் சிலியில் அலெண்டே கவிழ்ப்பு, அக்டோபர் 1973 இன் இஸ்ரேலியப் போர், மார்ச் 1974 இல் டோரி அரசாங்கத்தின் மீது பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களின் வெற்றி, ஏப்ரல் 1974 இல் போர்த்துக்கீசிய புரட்சி, ஜூலை 1974 இல் கிரேக்க ஜுன்டாவின் சரிவு, ஆகஸ்ட் 1974 இல் நிக்சனின் இராஜினாமா, மே 1975 இல் வியட்நாமில் அமெரிக்காவின் தோல்வி, 1978-79 இன் ஈரானியப் புரட்சி, 1979 மற்றும் 1980 இல் தாட்சர் மற்றும் றேகன் ஆட்சிக்கு வந்தமை, அதன் பின்னர் சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கான ஒரு நிகழ்ச்சிப்போக்கு தொடங்கியது ஆகியவை அடங்கும். (டேவிட் நோர்த் - 'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் 1982-86 பிளவின் அரசியல் தோற்றம் மற்றும் விளைவுகள்' - 3 ஆகஸ்ட் 2019)

ஆபிரிக்காவில் விடுதலைக்கான போர்கள்

இந்த காலகட்டத்தில் போர்த்துக்கலின் அனைத்து ஆப்பிரிக்க காலனிகளான மொசாம்பிக், அங்கோலா, கினியா, சாவோ டோமே மற்றும் பிரின்சிப்பே, மற்றும் கேப் வெர்டே ஆகியவற்றில் சுதந்திர இயக்கங்கள் தோன்றின. இது 1961 இல் அங்கோலாவில் கெரில்லாப் போரைத் தொடங்க இட்டுச்சென்றது.

இராணுவத்திற்குள் ஒரு எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. விடுதலை அல்லது காலனித்துவ போர் என்பது வெல்ல முடியாதது மற்றும் உயிர்களினதும் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் இதற்கான விலை அதிகமானது என்று அது நம்பியது. சுமார் 9,000 போர்த்துக்கீசியர்கள், முக்கியமாக மோசமான ஊதியம் பெற்ற கட்டாய இராணுவ சேவையாளர்கள் மற்றும் 70,000 ஆபிரிக்க கெரில்லாக்கள் மற்றும் பொதுமக்கள் மோதல் முடிவதற்குள் இறந்துவிடுவார்கள். போர்த்துக்கலின் வரவு-செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட பாதி தசாப்த கால போருக்காக செலவிடப்பட்டது.

சாலாஸார் ஆட்சி பேச்சுவார்த்தைக்கு மறுத்தது. 1947 இல் ஆங்கிலேயர்களால் இந்திய சுதந்திரம் வழங்கப்பட்டபோது, போர்த்துக்கல் தனது கோவா காலனியை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்ட இந்தியாவின் கோரிக்கைகளை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 இல் எதிர்ப்பின்றி படையெடுத்து இப்பகுதியை இணைத்துக்கொண்டது.

அமெரிக்கா போர்த்துக்கலை எதிர்த்தது

1961 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோன் எஃப் கென்னடி நிர்வாகம் சர்வாதிகாரத்திற்கு அழுத்தம் கொடுத்தது. 17 புதிய ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற வழிவகுத்த காலனித்துவ எதிர்ப்பு எழுச்சியை எதிர்கொண்டு, மற்றும் பனிப்போரின் சூழலில் சோவியத் ஒன்றியத்தின் சமாதானமாக செல்வதற்கான முயற்சிகளால், அமெரிக்கா சுய-நிர்ணயம் மற்றும் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஒரு புதிய ஆபிரிக்க கொள்கையை ஏற்றுக்கொண்டது. கணிசமான உதவிக்கு பதிலாக போர்த்துகீசிய காலனிகளில் சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள அது பரிந்துரைத்தது.

சாலாஸார் 'அமெரிக்காவின் யோசனைக்கு போர்த்துக்கல் இணங்குவதற்கான எந்த எண்ணத்தையும்' நிராகரித்தார். மற்றும் கடல்கடந்து மட்டுமல்ல, ஐபீரிய தீபகற்பத்திலும் போர்த்துக்கீசிய நிலை மீதான கம்யூனிஸ்ட் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள தவறியதற்காக கென்னடியை விமர்சித்தார். இது மேற்கத்திய நிலையை பலவீனப்படுத்தி, சர்வதேச கம்யூனிச சக்திகளின் தலையீட்டிற்கு சாதகமான சூழ்நிலையைத் தூண்டும் என தான் விளங்கிக்கொள்வதாக” அவர் கூறினார். (About-Face: The United States and Portuguese Colonialism in 1961, Luís Nuno Rodrigues, University Institute of Lisbon-Center for Contemporary History Studies, 2004)

1949 இலிருந்து நேட்டோ அங்கத்துவ நாடாக இருந்து அசோராஸில் மத்திய அத்லாந்திக் இல் ஒரு முக்கிய வான்படை தளத்தை வழங்கியபோதும், அங்கோலாவில் போர்த்துக்கீசிய காலனித்துவத்தை கண்டித்த ஒரு ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்ததால் போர்த்ததுக்கீஸிய அமெரிக்க உறவுகள் மேலும் சீர்குலைந்தது.

சலாஸாரின் வாரிசாக 1968 இல் மார்சல்லோ கைடானோ நியமிக்கப்பட்ட பின்னர் காலனித்துவப் போரை தொடர்ந்தபோது, உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா கூட வியட்நாமில் தோல்வியடைகின்றது என்பது தெளிவாகத் தெரிந்தபோது, பேச்சுவார்த்தையில் தீர்வுகாண வேண்டும் என்ற உணர்வு இராணுவத்தில் அதிகரித்தது. இராணுவத்தின் இரண்டாவது தளபதியான ஜெனரல் அன்டோனியோ டி ஸ்பெனோலா, தனது பிரபலமான புத்தகமான போர்த்துக்கல்லும் மற்றும் எதிர்காலமும் என்பதில் இதை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். இது பிப்ரவரி 1974 இல் வெளியிடப்பட்டது மற்றும் ஏப்ரல் 25 க்கு முன்னர் மேலும் மூன்று பதிப்புகளில் தோன்றியது. அவர் ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கு ஒரு ஒழுங்கான முறையில் படிப்படியாக மாறுவதற்கு அழைப்பு விடுத்தார். மற்றும் விடுதலை இயக்கங்களை எதிர்க்கும் காலனிகளில் ஒரு மிதவாத கறுப்பின உயரடுக்கின் ஆதரவுடன் பிரிட்டிஷ் பொதுநலவாய அமைப்பின் வழியில் சில வகையிலான கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தார்.

கார்வால்யோவும் காலனித்துவ யுத்தமும்

போர்த்துகீசியப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் கார்வால்யோ நேரடியாக வாழ்ந்தார். அவரது இராணுவ அனுபவங்கள் மற்றும் ஆபிரிக்காவில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் கார்னேஷன் புரட்சியின் போது அவருக்கும் போர்த்துக்கீசிய ஆளும் உயரடுக்கிற்கும் நன்றாக சேவை செய்தது.

கார்வால்யோ தனது 19 வது வயதில் 1955 இல் லிஸ்பனில் உள்ள இராணுவ பயிலகத்தில் சேர்ந்து மற்றும் ஆயுத விடுதலைப் போராட்டம் வெடித்தபோது 1961 இல் பீரங்கிப்படை லெப்டினன்டாக அங்கோலாவுக்கு அனுப்பப்பட்டார். சலாஸாரால் 'தேசத்தின் ஆன்மீக பாரம்பரியத்தை பாதுகாப்பது மற்றும் கம்யூனிஸ்ட் அச்சுறுத்தல் மற்றும் அராஜகவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக' உருவாக்கப்பட்ட பாசிச ஆயுதகுழுவான போர்த்துக்கீசிய படைப்பிரிவின் (Portuguese Legion) பயிற்றுவிப்பாளராக 1963 இல் அவர் நியமிக்கப்பட்டார். இது PIDE இற்கான மண்ணிற உடை பாசிசப்படையாக செயல்பட்டு ஆர்ப்பாட்டங்களை உடைத்து விரோதமான அமைப்புகளை இயங்காமல் செய்தது.

கார்வால்யோ மீண்டும் அங்கோலாவில் 1965 முதல் 1967 வரை பணியாற்றினார். அங்கு இராணுவ உளவுத்துறையின் தலைவர்களில் ஒருவராகவும், பின்னர் 1970 மற்றும் 1973 க்கு இடையில் கினியா-பிசாவ்விலும் பணியாற்றினார். பொதுவிவகாரங்கள் மற்றும் உளவியல் நடவடிக்கை துறையின் பத்திரிகை பிரிவு மற்றும் ஒலி-ஒளிபரப்பு துறையின் தலைவராக ஸ்பெனோலாவிற்கு தகவல்களை அனுப்பினார். உளவியல் நடவடிக்கை என்பது கிளர்ச்சியாளர்களுடனான தொடர்பைக் குறைக்க முள்வேலியால் சூழப்பட்ட புதிய 'கிராமங்களில்' சிறந்த வாழ்க்கை நிலைமைகள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கு உறுதியளிக்கும் ஒரு கிளர்ச்சி எதிர்ப்பு 'இதயங்களும் சிந்தனைகளும்' என்ற பிரச்சாரமாகும்.

கார்வால்யோ பின்னர் தனது தனிப்பட்ட அனுபவங்கள் 'பாசிச கூட்டுழைப்புவாதத்தின் யதார்த்தம் மற்றும் சிறிய அதிகாரிகளிடையே அதற்கான ஆதரவுடன் தொடர்பு கொள்ள' உதவியது மற்றும் காலனித்துவ போர்களின் தார்மீக மற்றும் அரசியல் அநீதியை அவருக்கு நம்ப வைத்தது என்று கூறினார். அவர் விடுதலை இயக்கங்கள் மீது இரகசியமான அபிமானம் மற்றும் அதன் சில தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும், இறுதியாக MFA இன் முன்னோடி அமைப்பான தளபதிகளின் இயக்கத்தை (Movement of the Captains) உருவாக்கியது சொந்த நாட்டுடன் தொடர்புபட்ட ஒன்றாகும். 1973 அரசாங்க ஆணை ஒன்று குறைந்த தகுதி வாய்ந்த படையினரை தளபதிகளாக அல்லது மேஜர்களாக பதவி உயர்வு பெற முயன்றது. இந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது, ஆனால் இயக்கம் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது.

MFA இன் வேலைத்திட்டம்

கார்வால்யோவும் மற்றும் தளபதிகளின் இயக்கமும் ஏப்ரல் 25 ஆம் தேதி ஒரு சதித்திட்டத்திற்கான திட்டங்களைத் தயாரித்து, ஜெனரல் ஸ்பினோலா மற்றும் ஜெனரல் பிரான்சிஸ்கோ டா கோஸ்டா கோம்ஸுடன் விவாதித்தனர். அவர்கள் சமீபத்தில் கைய்டானோவுக்கு விசுவாசமாக இருக்க மறுத்ததால் ஆயுதப் படைகளின் தலைவராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஸ்பினோலா MFA இற்கான ஒரு வேலைத்திட்டத்தினை இறுதியாக பூர்த்தி செய்துவைத்தார். 'வெளிநாடுகளில் பதின்மூன்று வருட போராட்டத்திற்குப் பின்னர், தற்போதைய அரசியல் அமைப்பானது அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த போர்த்துக்கீசிய மக்களிடையே சமாதானத்திற்கு வழிவகுக்கும் ஒரு வெளிநாட்டு கொள்கையை உறுதியாகவும் புறநிலைரீதியாகவும் வரையறுக்க முடியவில்லை என்று.” அது அறிவித்தது. குடியரசின் ஜனாதிபதியை உடனடியாக அகற்றவும், ஒரு தேசிய அரசியலமைப்பு மன்றத்திற்கான திட்டத்தை வரைவதற்கான ஒரு இடைக்கால அரசாங்கத்தையும் உருவாக்கும்வரை அரசியல் அதிகாரத்தையும் ஒரு தேசிய விடுதலை வாரியத்திடம் (Junta de Salvação Nacional, JSN) ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியது.

ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, ஸ்பினோலா தேசிய விடுதலை வாரியத்தின் தலைவராகவும், கோம்ஸ் அவரது துணைவராகவும் ஆனார். கார்வால்யோ ஒரு பிரிகேடியர் ஆக்கப்பட்டு, கண்டத்திற்கான சிறப்பு இராணுவக் கட்டளைக்கு (COPCON) பொறுப்பாக இருத்தப்பட்டார். சட்டத்தில் பொறிக்கப்பட்ட அதன் நோக்கம், உள்நாட்டு நிலைமை மக்களின் சமாதானத்திற்க்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாகுமானால் 'பொது அதிகாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் அவர்களின் வேண்டுகோளின்படியும் ஒழுங்கை பராமரித்தல் மற்றும் மீட்டெடுப்பதில் நேரடியாக தலையிடுவதாகும் என குறிப்பிட்டது.

கார்வால்யோ பின்னர் அவரை ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை வெளிப்படுத்தினார். ஆனால் 'புரட்சி உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் நாம் தளபதிகளைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் அவர்கள் மிகப் பெரிய கௌரவத்துடன் இருக்க வேண்டும்' என்று நினைத்தாக கூறினார். கைடானோ கைது செய்யப்பட்டபோது, அதிகாரத்தை ஸ்பினோலாவிடம் ஒப்படைக்குமாறு கோரினார், அதனால் 'அதிகாரம் தெருவில் உள்ளவர்களிடம் விழாமலிருக்கும்' என்றார்.

ஸ்பினோலா சதித்திட்டத்தை ஒரு எளிய சீரமைப்புடன் (renovação) மட்டுப்படுத்த விரும்பினாலும், அது மக்களை தெருக்களுக்கு கொண்டு வந்தது. பழைய ஆட்சியின் அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள், குறிப்பாக வெறுக்கப்பட்ட PIDE இரகசிய போலீசாரை கைது செய்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை கோரி தொழிலாளர்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள் மற்றும் பண்ணைகளை கைப்பற்றத் தொடங்கினர். ஒரு வாரம் கழித்து மே தினத்தில் லிஸ்பன் வழியாக அரை மில்லியன் பேர் அணிவகுத்து சென்றனர்.

மே 1, 1974 லிஸ்பனுக்கு அருகிலுள்ள பேரேரோவில் உள்ள மக்கள் கூட்டணி மற்றும் MFA இன் நீடூழி வாழ்க என்ற பதாகையின் கீழ் ஆர்ப்பாட்டம். (courtesy of Ephemera Library and Archive of José Pacheco Pereira)

முன்னர் தடைசெய்யப்பட்ட கட்சிகள் தலைமறைவிலிருந்து அல்லது நாடுகடத்தலில் இருந்து வெளிவந்தன. இதில் அல்வாரோ குன்ஹால் (Álvaro Cunhal) தலைமையிலான போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சியின் (PCP) சுமார் 2,000-3,000 உறுப்பினர்களும் மற்றும் மாரியோ சோரஸ் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி (PS) 200 உறுப்பினர்களும் இருந்தனர்.

போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சியின் பங்கு

போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சி தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதிலும், ஒரு சுயாதீனமான வேலைத்திட்டத்தை நிராகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்க இருந்தது. சலாஸாருக்கு எதிரான போராட்டத்தை 'ஜனநாயக மற்றும் தேசிய புரட்சி' என்று விவரித்து, உண்மையான சமூகப் புரட்சியை எதிர்ப்பதற்காக ஸ்ராலினிச 'இரண்டு-கட்ட தத்துவத்தின்' வழியே சோசலிசப் புரட்சியை காலவரையற்ற எதிர்காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

இந்த ஸ்ராலினிச இரண்டு-கட்ட தத்துவம் மார்க்சிசத்தையும் மற்றும் ரஷ்ய புரட்சியின் முக்கியமான படிப்பினைகளையும் முற்றுமுழுதாக மறுப்பதாகும். 1917 இல் போல்ஷிவிக்குகளின் வெற்றி லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சக்திவாய்ந்த நிரூபணமாக இருந்தது. உலகப் பொருளாதாரத்தின் சூழலில், முதலாளித்துவப் புரட்சியுடன் தொடர்புடைய ஜனநாயகப் பணிகளை கிராமப்புற மக்களை அதன் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் சோசலிசப் புரட்சியின் ஒரு உட்பகுதியாக அதனை உலக அரங்கில் கட்டாயமாக முழுமையடைய செய்வதன் ஊடாக மட்டுமே பூர்த்திசெய்ய முடியும் என்று வலியுறுத்தியது.

லியோன் ட்ரொட்ஸ்கி

இந்த அடிப்படையிலும், கம்யூனிச அகிலத்தின் (Comintern) உதவியுடனும், 1921 இல் போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சி உருவாக்கப்பட்டது. எவ்வாறாயினும், உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடுத்த பரிணாமம் லெனின் மரணத்திற்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்திற்குள் ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான அதிகாரத்தின் எழுச்சியால் வடிவமைக்கப்பட்டது. 1924 இல் ஸ்ராலின் மற்றும் நிகோலாய் புகாரின் ஆகியோரால் வெளியிடப்பட்ட 'தனி ஒருநாட்டில் சோசலிசம்' என்ற தத்துவம் உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்தை கைவிடுவதற்கும் மற்றும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சொந்த சடத்துவ நலன்களுக்காக பாதுகாப்பதற்குமான கருத்தியல் நியாயப்படுத்தலை வழங்கியது.

1933 இல் ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் மிக மோசமாக தொழிலாள வர்க்கத்திற்கு பாரிய தோல்விகள் தொடர்ந்தன. இதனை அடுத்து, மூன்றாம் அகிலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட கட்சிகளையும் சீர்திருத்த முடியாது என்று முடிவு செய்து உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நான்காம் அகிலத்தை நிறுவுவதற்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

ஸ்ராலினிசத்தின் இரத்தம் தோய்ந்த எதிர்புரட்சிகரப் பங்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் 1936 இல் தொடங்கிய ஸ்பானிய உள்நாட்டுப் போரில் சோகமாக உறுதி செய்யப்பட்டன. தாராளவாத முதலாளித்துவம், சமூக ஜனநாயகம், ஸ்ராலினிச மற்றும் அராஜகவாதிகளின் மக்கள் முன்னணி கூட்டிற்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்களுக்கு கூறப்பட்டது. சுயாதீன தொழிலாளர் அமைப்புகள் கலைக்கப்பட்டு பாசிச எதிர்ப்பு போராளிகளிக் குழுக்கள் முதலாளித்துவ அரசுக்கு அடிபணிய செய்யப்பட்டனர்.

போர்த்துகீசிய முதலாவது இடைக்கால அரசாங்கம்

ஆளும் உயரடுக்கின் தொலைநோக்குள்ள அங்கத்தவர்கள், போர்த்துக்கலில் புரட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதில் போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சி இதேபோன்ற பங்கை வகிக்கும் என்பதை அறிந்திருந்தனர். ஸ்பினோலா மே 16, 1974 அன்று முதல் தற்காலிக அரசாங்கத்திற்கு இரண்டு போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி (மற்றும் இரண்டு சோசலிஸ்ட் கட்சி தலைவர்களையும்) அமைச்சர்களாக நியமித்தார். அத்துடன் ஏழு இராணுவ அமைச்சர்கள் மற்றும் இரண்டு அரை பாசிச மக்கள் ஜனநாயகக் கட்சி (PPD) இனை சேர்ந்தவர்களும் இணைக்கப்பட்டனர்.

1ஆவது இடைக்கால அரசாங்கத்தின் பதவியேற்பு. இடமிருந்து மரியோ சோரஸ் மற்றும் அல்வாரோ குன்ஹால் மே 16, 1974. (Copyright: Mário Soares Foundation)

போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சி, 'மக்கள்- MFA கூட்டணி' என்ற மக்கள் முன்னணி வியூகத்தின் பின்னால் தொழிலாள வர்க்கத்தை இணைத்துக் கொள்ள முயன்றது. தொழில் ஒழுக்கத்தை அமுல்படுத்த மற்றும் சிக்கன திட்டத்தை MFA இன் 'உற்பத்திக்கான போராட்டத்தை' செயல்படுத்த, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அல்வாரோ குன்ஹால் அமைச்சரகம் இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்டார் மற்றும் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள Intersindical தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் அவெலினோ கோன்சால்வ்ஸ் அமைச்சரானார். அடுத்தடுத்த இடைக்கால அரசாங்கங்களில் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி இந்த பதவியை வகித்ததுடன், “தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்க' தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறியதுடன் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கையின் எவ்வித வெளிப்பாட்டையும் கண்டித்தது.

எதிர்ப்புரட்சி உருப்பெறுகின்றது

தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களை எதிர்கொண்ட ஸ்பினோலா செப்டம்பர் 10, 1974 இல் ஒரு சதித்திட்டத்தை ஆரம்பித்தார். தொழிலாளர்கள் தெருக்களில் இறங்கி தடுப்புகளை அமைக்கத் தொடங்கிய பின்னர் அது முறியடிக்கப்பட்டது. ஸ்பினோலா வெறுமனே இராஜினாமா செய்ய அனுமதிக்கப்பட்டார்.

1974இல் ஜெனரல் அந்தோனியோ டி ஸ்பினோலா (Credit: Wikimedia Commons)

புரட்சி முழுவதும் கார்வால்யோ மற்றும் COPCON இன் மற்ற தலைவர்கள் தொழிலாள வர்க்கத்தை 'இறுதியில்' ஆயுதமாக்குவதாக உறுதியளித்தனர். ஆனால் அவர்களின் பங்கு போராளிக்குழுக்களை உருவாக்குவதற்கான எந்த நகர்வையும் தடுப்பதாகும். அரசு விமான நிறுவனமான TAP, LISNAVE கப்பல் கட்டும் ஆலை மற்றும் Timex தொழிற்சாலை உட்பட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடைக்க இராணுவம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

1975 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிகரித்து வரும் கிளர்ச்சி மனநிலை அனைத்து கட்சிகளும் MFA அரசாங்கத்தை நடாத்தும் பொறுப்பை வலுப்படுத்துவதை ஆதரிக்க இட்டுச்சென்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிசிங்கர் மற்றும் அமெரிக்க தூதர் ஃபிராங்க் கார்லூசி ஆகியோரால் ஒப்புதலளிக்கப்பட்ட ஸ்பினோலா, மார்ச் 11, 1975இல் இரண்டாவது சதித்திட்டத்தைத் தொடங்கினார். தொழிலாளர்களின் பொது அணிதிரட்டலுக்குப் பின்னர் அது மீண்டும் முறியடிக்கப்பட்டது.

புரட்சி கருக்கலைக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரு புரட்சிக் குழு 14 மார்ச் 1975 இல் உருவாக்கப்பட்டது. அதற்கு கார்வாலோ நியமிக்கப்பட்டார். மே 1975 இல், அவர் தற்காலிகமாக ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார் மற்றும் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் ஜெனரல் கோம்ஸ் மற்றும் ஜெனரல் வாஸ்கோ கோன்சால்வ்ஸ் ஆகியோருடன் சேர்ந்து, மூன்று பேர் இயக்குநர் குழுமத்தை உருவாக்கி, தொடர்ச்சியான நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர முயன்றார். போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் 'ஜனநாயக ஒழுங்கு மதிக்கப்பட வேண்டும்' என்பதற்கான தீர்வுகளை கொண்டு வருமாறு கோரியது.

மே மற்றும் ஜூன் 1975 க்கு இடையில், நாடு முழுவதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் வேகமாக அதிகரித்தன. டஜன் கணக்கான பெரிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இரட்டை அதிகாரத்தின் சூழ்நிலையை உருவாக்கும் குடியிருப்பாளர் குழுக்களின் வளர்ச்சி இருந்தது. ஒரு சில குறுகிய வார இடைவெளியில், அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், மகப்பேற்றுக்கால, நோய்க்கால, வேலையின்மை மற்றும் இயலாமைக்கான சலுகைகளை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நிர்பந்திக்கப்பட்டது. பல நிறுவனங்கள் ஊதியத்தை அதிகரிக்க மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள், விடுமுறைகால ஊதியம் மற்றும் நத்தார் பண்டிகைகால மேலதிக கொடுப்பனவு போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தொழிலாள வர்க்கம் எவ்வளவு கிளர்ந்தெழ முற்பட்டதோ அந்தளவிற்கு போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள்- MFA கூட்டணியை கடுமையாக சுமத்த முற்பட்டது. அது MFA 'எங்கள் புரட்சியின் உந்து சக்தியும் உத்தரவாதமும்' என்று வலியுறுத்தியதுடன், இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் கார்வாலோ மற்றும் ஜுன்டாவின் மற்ற உறுப்பினர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றது.

போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியும் MFA உம், MFA இற்கும் மக்களுக்கும் இடையிலான 'உடன்படிக்கையை' 'நிறுவனமயமாக்க' ஒரு புரட்சிகர ஐக்கிய முன்னணியை (FUR) கூட்டின. FUR ஒரு மக்கள் முன்னணியாக இருந்தது. இது புரட்சியை மிக முக்கியமான நேரத்தில் காட்டிக்கொடுக்க அமைக்கப்பட்டது மற்றும் அது பெரும்பாலான போலி-இடது குழுக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

அது முதலாளித்துவ இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முயன்று, வெடித்தெழுந்த தொழிலாளர்களின் சுயாதீனமான தன்மையுடைய கூட்டங்களை அழித்ததுடன் மற்றும் இரட்டை அதிகாரத்தை நோக்கிய நகர்வையும் சோவியத்துக்கள் தொழிலாளர்களினது குழுக்களுக்கும் எதிராக பாய்ந்தது. கூட்டங்கள் தங்கள் பணியை 'MFA- இன் மதிப்பீட்டிற்கு' பின்னர்தான் தொடங்க முடியும், மேலும் 'அனைத்து தரப்பினரிடமிருந்தும் சுதந்திரத்தை' பாதுகாக்க அனைத்து மட்டங்களிலும் இராணுவ கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டது. MFA தவிர ஆயுதப் படைகளில் எந்த அரசியல் அமைப்புகளும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அறிவித்தது.

போலி இடதுகளின் பங்கு

கார்னேஷன் புரட்சியின் போது போலி இடதுகள் ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் நிலை கையாட்களாக ஸ்ராலினிசத்தின் வால்களில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சியால் (PRP) பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அரசு-முதலாளித்துவ சர்வதேச சோசலிச அமைப்பு (IS) (பிரிட்டனில் இன்றைய சோசலிச தொழிலாளர் கட்சி) MFA மற்றும் COPCON க்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. 'MFA மற்றும் மக்களுக்கிடையேயான கூட்டுக்கான MFA முன்மொழிவை' அது 'புரட்சிகர சபைகளைக் கட்டியமைப்பதற்காக பல மாதங்களாக போராடியவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி' என்று வாழ்த்தியது.

புரட்சிகர சபைகளுக்கான பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சியின் அழைப்பை ஆதரிப்பதில் கார்வால்யோவுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஏனெனில் அவை 'கட்சி சாராதவர்களாக' இருக்க வேண்டும் மற்றும் 'கட்சிகள் இல்லாத இராணுவ அரசாங்கம்' என்ற தனது சொந்த அழைப்போடு இணைந்திருந்தன. கார்வால்யோ அத்தகைய அமைப்புகள் 'புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதி' என்று கூறி, ஆனால் அவை 'மறைந்து போவதற்கு சாபிக்கப்பட்டவை' என்றார்.

நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகம் (USec) போர்த்துக்கலில் அதிகாரபூர்வ சர்வதேச கம்யூனிஸ்ட் லீக் (LCI) மற்றும் ஒரு 'ஆதரவான' பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சி (PRT) ஆகிய இரண்டு அமைப்புகளைக் கொண்டிருந்தது. இரண்டும் MFA மற்றும் COPCON ஐ ஆதரித்து, 'சுரண்டப்பட்ட மக்களின் இயக்கத்துடன் ஒரு உண்மையான மற்றும் திடமான ஒருங்கிணைப்பை' உருவாக்க அழைப்பு விடுத்தனர். MFA 'இரட்டை அதிகாரத்தை' அறிமுகப்படுத்துவதாகவும், இராணுவக் குழுக்கள் 'சோவியத் அதிகாரத்திற்கான ஒரு முன்முயற்சியாக' மாறியுள்ளதாகவும் தொழிலாளர் புரட்சிக் கட்சி கூறியது.

1978 இல், சர்வதேச கம்யூனிஸ்ட் லீக் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தன. இது 1999 இல் இடது கூட்டின் உருவாக்கத்தின் முக்கிய சக்தியாக மாறியது. 2015 இல் இடது கூட்டு மற்றும் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் சிக்கன சார்பு ஒரு புதிய சிறுபான்மை கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள உதவியது.

1990இல் மரியோ சோரஸ் (வலது) பப்லோவாத புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பிரான்சிஸ்கோ லூகா (மத்தி) ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார் (courtesy Mario Soares Foundation)

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பங்கு

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் அதன் போர்த்துக்கீசிய ஆதரவாளர்களான புரட்சிகரக் கட்சி கட்டுமானத்திற்கான கழகம் (Liga para an Construção do Partido Revolucionário, LCPR) மட்டுமே, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியும் சோசலிஸ்ட் கட்சியும் வலதுசாரி கட்சிகள், அரசு எந்திரம் மற்றும் MFA இலிருந்து வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இராணுவத்தை கலைத்து, MFA மற்றும் போலி அரசியலமைப்பு சபைக்கான அதன் முன்மொழிவுகளுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிப்பாய்களின் சோவியத்துக்களை உருவாக்குமாறு கோரியது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வருமாறு வலியுறுத்தியது, 'இராணுவம் முதலாளித்துவ அரசின் கருவியாக உள்ளது, இது தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டால் உடைக்கப்பட வேண்டும். இராணுவம் ஒரு புரட்சிகரமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் பிற்போக்குத்தனமானது. ('நவம்பர் 25 க்குப் பின்னர் போர்த்துக்கல் மீதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை,' ஜாக் ஹேல் இன் திருத்தல்வாதிகளும் போர்த்துக்கல்லும் என்ற அறிக்கை 1975 நவம்பர் Labor Publications இல் சேர்க்கப்பட்டுள்ளது)

'போர்த்துக்கீசிய இராணுவத்தின் தொடர் கலகங்கள் ஆழ்ந்த நெருக்கடியின் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன ... குட்டி முதலாளித்துவத்தின் சஞ்சலங்களை வெளிப்படுத்தும் இடதுசாரி ஜெனரல்கள் என்று அழைக்கப்படும் கோன்சால்வ்ஸ் மற்றும் கார்வால்யோ போன்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது (மேலே கூறப்பட்ட அறிக்கையிலிருந்து).

எல்லாவற்றிற்கும் மேலாக, இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதைக் குறிக்கிறது. இதுதான் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் மற்றும் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் திறன் கொண்ட ஒரே அமைப்பாகும்.

குறிப்பாக தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் 1985-86 பிளவின் போது ஆவணங்கள் அழிக்கப்பட்டதால் புரட்சிகரக் கட்சி கட்டுமானத்திற்கான கழகம் பற்றிய தலைவிதி தெரியவில்லை. இக்கழகம் பற்றிய சில குறிப்புகளை போர்த்துக்கலில் உள்ள காப்பகங்களில் காணலாம்.

1975 நவம்பர் 25

1975 ஆம் ஆண்டின் 'வெப்பமான கோடைகாலத்தில்' தொடர்ச்சியான அமைதியின்மைக்கு மத்தியில், சிவில் கட்டுமான தொழிற்சங்கம் அழைத்த பெரிய நவம்பர் 12 ஆர்ப்பாட்டம் உட்பட, பாராளுமன்றத்திற்குள் உள்ள பிரதிநிதிகளை இரண்டு நாட்கள் முற்றுகையிட்டது, மேஜர் எர்னஸ்டோ மெலோ அன்டூன்ஸை சுற்றியுள்ள 'ஒன்பது குழு' அதிகாரிகள் புரட்சிகர குழு அரசு 'அராஜகத்தினுள் சீரழியும்' என்று எச்சரித்து தாக்குதலில் ஈடுபட்டார். அவர்கள் முதலாளித்துவத்தின் நிர்வாகத்தில் 'சமூக-ஜனநாயக கட்டுப்பாட்டை' முக்கியமாக தவிர்த்து அன்டூன்ஸின் பொருளாதாரத் திட்டத்தை செயல்படுத்தக் கோரினர்.

அதே நேரத்தில் குன்ஹால் ஒன்பது பேரின் குழுவை 'புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கிற்காக மீட்டெடுக்க முடியும்' என்றும், போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி 'இராணுவ இடதுசாரிகளை' ஆதரிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அவர் 'முற்போக்கு சக்திகளின் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்கும் தீவிர இடது மற்றும் அராஜகவாத பிரிவை' தாக்கினார்.

நவம்பர் 25, 1975 அன்று, அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. ஜெனரல் அன்டோனியோ ரமால்ஹோ ஈனஸ் ஏற்பாடு செய்த இராணுவம் தடுப்புகளை அகற்றவும், தொழிலாளர்கள் மற்றும் படையினரை ஒரு சூடு கூட சுடாமல் நிராயுதபாணியாக்கியது. கார்வாஹோவின் COPCON வெறும் 200 கமாண்டோக்களின் முன்னால் கலைந்துபோனது. கார்வால்யோ மறைந்து, தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தார். அதன் தலைமையகம் முற்றுகையிடப்படுகையில் அதன் உறுப்பினர்களின் ஆயுதங்களுக்கான கோரிக்கைகளை போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சி மறுத்ததுடன், அதன் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டக் கூடாது என்று உத்தரவிட்டது.

நவம்பர் 25 நிகழ்வுகளில் கார்வால்யோ இன் பங்கு

2015 இல் போர்த்துக்கீசிய அரச ஒளிபரப்பு சேவையான RTP உடனான ஒரு வெளிப்படையான நேர்காணலில், கார்வால்யோ நவம்பர் 24 ஆம் தேதி தாமதமாக புரட்சி குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதை விவரித்தார். அங்கு அவருக்கு பதிலாக 'ஒன்பதுபேர் குழு' உறுப்பினர் வாஸ்கோ லாரென்சோவை லிஸ்பன் இராணுவ பிராந்தியத்தின் தளபதியாகவும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதனால் COPCON பிரதியீடு செய்யப்பட்டது. நேர்காணல் செய்பவரின் கூற்றுப்படி, கார்வால்யோ தனது கைகளில் ... ஒன்பதுபேரின் குழுவின் உத்தரவின் கீழ் இருந்த முக்கிய செயல்படுத்தும் படையை விரைவாக நடுநிலையாக்கும் சாத்தியம் இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக அப்படியே விட்டுச்சென்றார்.

கார்வால்யோ தனது நெருங்கிய ஒத்துழைப்பாளரான அல்மாடா கோட்டைப் படைகளின் தளபதி ரோசாடோ டா லூஸிடம் இருந்து 'மிகவும் குழப்பமான' தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகக் கூறுகிறார். 'என் ஜெனரல் ... எங்களிடம் செட்டனேவ் மற்றும் லிஸ்னேவ் (கப்பல் கட்டுமிடம்) இருந்து வந்த சுமார் 10,000 தொழிலாளர்கள் ஆயுதங்கள் வேண்டும் என்று கேட்பதாக கூறினார். …. “நான் கூறினேன்: ரோசாடோ டா லூஸ், நீங்கள் யாருக்கும் ஒரு கத்தியை கூட கொடுக்காதீர்கள் ... யாராவது சுவர்களில் ஏறினால், அல்லது தடைகளைத் தாண்டினால், அவரது தலைக்கு மேலே ஒரு எச்சரிக்கையாக சுடவும், யாராவது உள்ளே குதிக்க விரும்பினால் ... அவரை நோக்கி சுடவும்”.

நவம்பர் 25 எதிர்ப்புரட்சி சதி விளைவாக ஒன்பதுபேரின் குழுவிற்கும் மற்றும் போர்த்துக்கீசிய கம்யூனிச கட்சிக்கும் இடையே ஒரு உண்மையான கூட்டணி ஏற்பட்டது. ஒரு புதிய முதலாளித்துவ அரசியலமைப்பு ஏப்ரல் 2, 1976 அன்று அறிவிக்கப்பட்டது. பல வாரங்களுக்குப் பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இது குடியரசின் புதிய சட்டசபையில் ஒரு சோசலிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது மற்றும் ஈன்ஸ் ஜனாதிபதியானார். ஏறக்குறைய சோசலிஸ்ட் கட்சியின் புதிய பிரதம மந்திரி மரியோ சோரஸ் 'சோசலிசத்தை அலமாரியில் வைப்பது' அவசியம் என்று அறிவித்து, சர்வதேச நாணய நிதியத்தை நோக்கி திரும்பி மற்றும் ஒரு சிக்கன திட்டத்தை திணித்தார்.

எதிர்ப்புரட்சிக்கு பின்னர் கார்வால்யோ

1976 ஆம் ஆண்டில், கார்வால்யோ ஜனாதிபதி தேர்தலில் ஈனெஸுக்கு எதிராக வேட்பாளராக நின்றார் மற்றும் 1980 இல் மீண்டும் பல்வேறு போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்டார். அதன் உறுப்பினர்கள் அவரது பிரச்சாரங்களுக்கு அடிமட்ட உதவியாளர்களை வழங்கினர். 1976 இல் அவர் 800,000 (மொத்தத்தில் 16.2 சதவீதம்) வாக்குகளைப் பெற்றார். ஆனால் 1980 வாக்கில், அவரது வாக்கு 86,000 (1.4 சதவீதம்) ஆகக் குறைந்தது.

'ஜனாதிபதி பதவியில் ஒரு நண்பர்' என்ற1976 தேர்தல் பதாகையில் கார்வால்யோ (Courtesy of Ephemera Library and Archive of José Pacheco Pereira)

1987 ஆம் ஆண்டில், கார்வால்யோ 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவர் ஏப்ரல் 25 ஆம் தேதி மக்கள் சக்தி (இது FP-25 என அழைக்கப்படுகிறது - Popular Forces) என்றழைக்கப்படும் தலைமறைவு பயங்கரவாதக் குழுவால் செய்யப்பட்ட குற்றங்களின் 'புத்திஜீவித ஆசிரியராக' இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இவ் அமைப்பு சுமார் 20 வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி 1980 மற்றும் 1986 க்கு இடையில் போர்த்துக்கலில் டஜன் மக்களை கொன்றது. கார்வால்யோ FP-25 உடன் தனக்கு “ஒருவிதமான தொடர்பும் இல்லை” என்று எப்போதும் வலியுறுத்தி வந்தார். இறுதியில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதியான சோரஸின் வற்புறுத்தலின் பேரில் 1996 இல் பாராளுமன்றத்தால் மன்னிக்கப்பட்டார்.

2011 இல், 2008 நிதி வீழ்ச்சியை அடுத்து, கார்வால்யோ கூறினார், 'வேலையின்மை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு மக்களுக்கு சிரமத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது ஒரு சமூக வெடிப்புக்கு வழிவகுக்கும். இது எந்தவொரு அமைப்பும் இல்லாத ஒரு மக்கள் கிளர்ச்சி, எந்த கட்டுப்படுத்துவோரும் இல்லாமல் பேரழிவுக்கு வழிவகுக்கும்” என்றார்.

போர்த்துக்கலில் ஒரு புதிய இராணுவ சதி சாத்தியம் என்று அவர் அறிவித்தார். 'என்னைப் பொறுத்தவரை, இராணுவத்தின் செயற்திறன் வரம்புகளுக்குள், ஒரு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து அரசாங்கத்தை கவிழ்க்ககூடியதாக இருக்க வேண்டும்'. 1974 இல் இருந்ததை விட அதை அடைவது இன்னும் எளிதாக இருக்கும் என்று அவர் நினைத்தார், ஏனெனில் 'குறைவான முகாம்கள் உள்ளன, எனவே எதிரிகளின் வாய்ப்பு குறைவாக உள்ளது'. '800 பேர் போதும்' என்று அவர் அறிவித்தார். 'சலாசரின் புத்திசாலித்தனம் மற்றும் நேர்மை கொண்ட ஒரு மனிதன்' தேவை, ஆனால் அவரது பாசிச முன்னோக்கு இல்லாமல் என்று அவர் Business Journal இடம் கூறினார்.

முதலாளித்துவம் புரட்சியின் வெற்றிகளைத் திரும்பப் பெறுகின்றன

பல ஆண்டுகளாக முதலாளித்துவம் 1974-75 இல் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்ததை திரும்பப் பெற்றது மற்றும் சோசலிசம் பற்றிய அனைத்து பொய்யான குறிப்புகளையும் நீக்க அரசியலமைப்பை திருத்தியது. ஆனால் உலக முதலாளித்துவ அமைப்பின் தீர்க்க முடியாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் சர்வதேச அளவில் ஆளும் உயரடுக்குகள் கடந்த பத்தாண்டுகளில் சர்வாதிகார மற்றும் பாசிசவகைப்பட்ட ஆட்சி முறைகளை நோக்கி திரும்பியுள்ளன. குற்றவாளிகளும் மற்றும் மனநோயாளிகளும் கூட அதிகாரத்திற்கு உயர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த போர்த்துக்கல் ஜனாதிபதித் தேர்தலில், 2019 இல் நிறுவப்பட்ட பாசிச செகா (Chega - போதும்) கட்சி வாக்குகளில் அதிகரிப்பை சந்தித்தது. இது ஆளும் வர்க்கத்தில் பாசிச உணர்வு அதிகரித்து வருவதை காட்டுகிறது.

அதே சமயத்தில், பதிவுசெய்யப்பட்ட குறைந்த வாக்குப்பதிவு 39.5 சதவிகிதம் அரசியல் அமைப்பு மீதான வெகுஜன அதிருப்தியையும், 2008 இல் உலகளாவிய வங்கி நெருக்கடியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் திணிக்கப்பட்ட சிக்கன திட்டங்களினால் தொழிலாள வர்க்கத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் காட்டுகின்றது.

கோவிட்-19 தொற்றுநோய் முதலாளித்துவத்தின் திவால்நிலையை வியத்தகு முறையில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு பெரும் வணிகங்களின் அழுத்தத்தின் கீழ் விதிக்கப்பட்ட கொலைகார சமூக நோய் எதிர்ப்பு கொள்கையின் விளைவாக போர்த்துக்கல் உலகின் மிக மோசமான கோவிட்-19 தொற்றுக்களைப் பதிவு செய்தது.

ஐரோப்பாவில் தடுப்பூசிகளை வினியோகிப்பதில் மிகவும் பின்தங்கிய நாடு மற்றும் தொற்றுநோய்களின் போது உடல்நலத்திற்காக குறைந்தபட்சம் செலவழிக்கும் நாடாக போர்த்துக்கலை சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஐரோப்பாவில் தனிநபருக்கு ஆகக்குறைந்த மருத்துவமனை இடங்களை கொண்டிருப்பதால் பாதிக்கப்படுவதுடன் மற்றும் தேசிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

1974-76 நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச தலைமையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் நிரூபிக்கின்றன. வெற்றிகரமாக முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டிருக்குமானால் அது உலக வரலாற்றை மாற்றியிருக்கும் என்ற அந்தக் காலகட்டத்தின் படிப்பினைகள், வர்க்கப் போராட்டம் தீவிரமடையும் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் நாம் வாழும் தசாப்தத்திற்கு இன்றியமையாதவை.

Loading