இலங்கை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் "விஞ்ஞான" ரீதியான பொதுமுடக்கத்தைக் கோரி மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

“கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக, விஞ்ஞானபூர்வமான முறைப்படி” நாட்டை “குறுகிய காலத்துக்கு' முடக்குவது சம்பந்தமாக ஆகஸ்ட் 20 அன்று தாம் முன் வைத்த ஒரு தொகை பிரேரணைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி தொழிற்சங்கங்க ஒருங்கிணைப்பு மையம் (தொ.ஒ.மை.) மீண்டும் ஆகஸ்ட் 27 அன்று ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

கண்டி மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

நாட்டை மூடுவதற்கு எடுத்த முடிவு சம்பந்தமாக எங்கள் “நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், எனினும், ஏனைய திட்டங்களை செயல்படுத்தாமை காரணமாக பரவி வருகின்ற தொற்றுநோயிலிருந்து மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியவில்லை என மிக மன வருத்ததுடன் தெரிவித்துக்கொள்ள்கிறோம்,' என்று அதில் கூறியுள்ளது. தொ.ஒ.ம. என்பது, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு, சுகாதார நிபுணனர்களின் சங்கம், மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டிலான அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் மற்றும் தேசிய தொழிற்சங்க மையம், இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும்.

10 நாட்களுக்கு விஞ்ஞானபூர்வமாக நாட்டை முடக்குவது, இதன் போது PCR மற்றும் அன்டிஜென் போன்ற ஒரு இலட்சம் கோவிட் பரிசோதனைகள் செய்தல், பாதிக்கப்பட்டவர்களை வகைப்படுத்தி நோய் அறிகுறி இல்லாதவர்களை கண்டறிந்து வீடுகளில் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை திட்டமிடல், சிகிச்சை அவசியமானவர்களுக்கு மருத்துவமனை அமைப்பில் 10,000 படுக்கைகளை தயார் செய்தல், விஞ்ஞான கண்காணிப்பு மூலம் நோயை துல்லியமாக முன்கணித்தல் மற்றும் நாடு முடக்கப்பட்டுள்ள காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு உட்பட பிற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது உட்பட 10 திட்டங்கள் அவர்களின் பிரேரணையில் அடங்கும்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் அந்த பேரழிவின் மத்தியில் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் சம்பந்தமாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பெரும் கோபம் மற்றும் வர்க்கப் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலைமையிலேயே தொ.ஒ.ம. ஜனாதிபதிக்கு இந்த முன்மொழிவுகளை அனுப்பியுள்ளது.

எனுனிம் உண்மையில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், விஞ்ஞான ரீதியாக நாட்டை முடக்கும் போது அத்தியாவசியமற்ற தொழில்களை மூடுவது அடிப்படைத் தேவையாகும். அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, முழு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். மருத்துவ பரிசோதனை மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, பில்லியன் கணக்கான நிதி மற்றும் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை விசாலமான வகையில் அணிதிரட்டப்பட வேண்டும்.

ஆனால் தொ.ஒ.ம. முன்மொழிவுகளில் இவற்றில் எதுவுமே அடங்கி இருக்கவில்லை. அது தற்செயலாக நடந்தது அல்ல. அவர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் “பொருளாதாரத்தைத் திறக்கும்” கொள்கையை எதிர்க்கவில்லை. கடந்த ஆண்டு, தொற்றுநோய் ஆரம்பத்தில் வெடித்தபோது, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கடுமையான எதிர்ப்பு தோன்றிய நிலையில், சில வாரங்கள் நாட்டை முடக்கிய பின்னர், மே மாதத்தில் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கவும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை வெட்டவும் இராஜபக்ஷ அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை தொழிற்சங்கங்கள் தயக்கமின்றி ஆதரித்தன.

இனிமேல் நாடு முடக்கப்பட்டால், 'பொருளாதாரம் வீழ்ச்சியடையும்' என்று கூறிய ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், நாட்டை மூடுவதை தொடர்ந்து மறுத்து வந்தனர். தொற்றுநோயின் பேரழிவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் தருவாயில் உள்ள சூழ்நிலையிலேயே ஆகஸ்ட் 20 முதல் 10 நாட்களுக்கு நாட்டை முடக்குவதற்கு இராஜபக்ஷ முடிவு செய்தார்.

ஆகஸ்ட் 18 அன்று, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டத்தில், செவிலியர்கள், மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள், மருத்துவிச்சிகள் மற்றும் குமாஸ்தாக்கள் உட்பட பல ஆயிரம் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்மொழியப்பட்டபடி “விஞ்ஞான பூர்வமாக” நாடு முடக்கப்படாவிட்டால், ஆகஸ்ட் 23 அன்று அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை நடத்துவதாக வாய்ச்சவடால் விடுத்த தொ.ஒ.ம. சார்ந்த தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷவின் மோசடியை நாட்டை மூடும் நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, இராஜபக்ஷ நாட்டை அரைகுறையாக முடக்கினாரே அன்றி, உண்மையில் நாடு முடக்கப்படவில்லை. ஆடை மற்றும் ஏற்றுமதி, பெருந்தோட்டம் மற்றும் கட்டுமானம் உட்பட, அத்தியாவசியமற்ற ஆனால் 'அத்தியாவசிய' துறைகள் என அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட ஏனைய தொழில் துறைகளில் பெரும்பாலான நிறுவனங்கள் திறந்த நிலையில் உள்ளன. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

தொழிற்சாலைகள், சுகாதார வழிகாட்டுதல்களின் படி செயல்படுகின்றன என்று, அரசாங்கமும் முதலாளிகளும் கூறிக்கொள்கின்ற போதிலும், ஆடை மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் உள்ளிட்ட வேலைத் தளங்களில் உள்ள தொழிலாளர்கள், முறையான சுகாதார வசதிகள், சமூக இடைவெளி மற்றும் சரியான கிருமி நீக்கம் இல்லாத நிலைமையிலேய வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, ஆடை மற்றும் ஏற்றுமதி தொழிற்துறையானது தொற்றுநோய் பரவும் முக்கிய பகுதியாக மாறியுள்ளது.

ஜனாதிபதி இராஜபக்ஷ, ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஜூன் 2 நடத்திய கலந்துரையாடலின் போது, ஒரு தொழிலாளி வைரஸால் பாதிக்கப்பட்டமைக்காக தொழிற்சாலைகளை மூட வேண்டியதில்லை என்று வலியுறுத்தினார். 'ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டவுடன், ஒரு தொழிற்சாலை அல்லது ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை மூடுவதற்குப் பதிலாக, சுகாதாரப் பரிந்துரைகளின் படி தடையின்றி அவற்றை நடத்துவதற்கான சாத்தியத்தை அவர்கள் ஆராய வேண்டும்,' என்று அவர் கூறினார்.

அதாவது, தொழிலாளர்கள் மரணித்தாலும் உற்பத்தியை பராமரிக்க வேண்டும். தொழிலாளர்கள் மீது ஜனாதிபதி இராஜபக்ஷவின் அக்கறை இத்தகையதே ஆகும். ஒரு தொழிலாளி அல்ல, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டாலும், தொழிற்சாலைகளை மூடுவதில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை விடுமுறையில் அனுப்பிவிட்டு வழக்கம் போல உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லை. அவர்கள் பெரும்பாலும், மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து வாழ போதுமான சுகாதார வசதிகள் இல்லாத தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். உற்பத்தி கட்டளை இழப்பைத் தடுக்க, இந்த தொழிற்சாலைகளில் உள்ள ஒட்டமொத்த தொழிலாளர் படைகளையும் வேலையில் ஈடுபடுத்தக் கூடியவாறு, 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுமாறு கோரி, ஒன்றிணைந்த ஆடை உற்பத்தி அமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. வெறுமனே தடுப்பூசி போட்டால் மட்டும் வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுக்க முடியாது என்றே சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே, “பொருளாதாரத்தைத் திறந்துவிடும்” அதன் அழிவுகரமான கொள்கையை ஆதரித்த இந்த தொழிற்சங்கங்களும், தொற்றுநோய் வேகமாக பரவுவதற்கும் அதனால் ஏற்படும் உயிர் பாதிப்புக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும். புதிய டெல்டா மாறுபாட்டினால், தொற்றுநோய் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. உலகளாவிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 218 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன் மரண எண்ணிக்கை 4.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4,500-5,000 வரை காணப்படுவதோடு மொத்த மரண எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தினசரி கிட்டத்தட்ட 200 பேர் இறக்கின்றனர்.

மருத்துவமனை கொள்ளளவு முழுமையாக நிரம்பி வழிகின்றது. தொற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுமார் 6,000 சுகாதாரப் பணியாளர்கள், இப்போது தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் போதிய சுகாதார பராமரிப்பு இன்மை, தாங்க முடியாத பணிச்சுமை மற்றும் உபகரணப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.

கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் குழு, நாட்டை முழுமையாக முடக்கி தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஜனவரி மாதத்திற்குள் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டும் என்று எச்சரித்தது.

ஆனாலும், இந்த எச்சரிக்கைகளை இராஜபக்ஷ அரசாங்கம் அலட்சியம செய்தவிட்டது. உலகின் ஏனைய அனைத்து முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களைப் போலவே, அது பெருந் தொற்றிலிருந்து மனித உயிர்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ளவில்லை, மாறாக பெரிய வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இலாபம் ஈட்டும் நலன்களைப் பாதுகாப்பதிலேயே அக்கறை கொண்டுள்ளது.

முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், தொற்றுநோய்கள் பற்றிய தொற்றுநோய் மருத்துவ நிபணர்களின் விஞ்ஞானப்பூர்வமான கருத்துக்களை அடிப்படையாக கொள்வதில்லை, மாறாக, விஞ்ஞானப்பூர்வமற்ற மற்றும் பிற்போக்குத்தனமான “நோயை பரவச் செய்து சமூகத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குதல்”, “புதிய வழமை” ஆகியவற்றை பின்பற்றி, பொருளாதாரங்களை திறந்து விட்டு, தொழிலாள வர்க்கத்தை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது.

தொற்றுநோயின் பேரழிவுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்புகள் எழும்போது, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சித்த போதிலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கொள்கைக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்துவதற்கு அவை இலாயக்கற்றவை. தொழிற்சங்கங்கள் என்பது, முதலாளித்துவ தேசிய-அரசு மற்றும் சர்வதேச மூலதனத்தின் நலன்களுடன் பிணைந்துள்ள அமைப்புகளாகும்.

தொற்றுநோயை வேரோடு ஒழிப்பதற்கான ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில், மருத்துவ நிபுணர்களின் ஆதரவுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் இயக்கப்படும், உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கையால் மட்டுமே தொற்று நோயை முழுமையாக அழிக்க முடியும். அதற்காக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் பரந்த செல்வத்தையும் வளங்களையும் கைப்பற்ற வேண்டும் மற்றும் குவிந்துள்ள பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை நிராகரிக்க வேண்டும்.

முதலாளித்துவ அரச மற்றும் சர்வதேச மூலதனத்தின் நலன்களுக்காக செயல்படும் தொழிற்சங்கங்கள், இத்தகைய வேலைத் திட்டத்திற்கு விரோதமானவை ஆகும். எனவே, தொற்றுநோயை வேரோடு ஒழிப்பதற்கும் சமூக உரிமைகளுக்குமான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் தமது கையில் எடுக்கவேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்குவதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

Loading