ஜேர்மனிக்கான மாற்றீட்டின் தலைவர் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவின் சர்வாதிகாரத்திற்கான திட்டங்களை ஆதரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரேசிலில் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான ஜெயர் போல்சனாரோவின் சமீபத்திய முயற்சிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டின் துணைத் தலைவர் (AfD), பெயாட்ரிக்ஸ் வான் ஸ்ரோர்ச் மற்றும் பிரேசில் ஜனாதிபதியின் இடையே நடந்த சந்திப்பின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சுகின்றது.

ஜெயர் போல்சனாரோ பெயாட்ரிக்ஸ் மற்றும் ஸ்வென் வான் ஸ்ரோர்ச் (Instagram)

வான் ஸ்ரோர்ச் மற்றும் அவரது கணவர் ஸ்வென் ஜூலை 21 அன்று ஜனாதிபதி மாளிகையில் போல்சனாரோவை சந்தித்தனர். வான் ஸ்ரோர்ச் பின்னர் இக்கூட்டத்தைபற்றி இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தினார். அதன்போது போல்சனாரோ இருவருரையும் நட்புடன் அரவணைத்திருந்த படத்தை பிரசுரித்திருந்தார்.

அவர் பின்னர் 'பிரேசிலில் ஒரு சுவாரசியமான சந்திப்பு: நட்புரீதியான வரவேற்புக்காக பிரேசில் ஜனாதிபதிக்கு நான் நன்றி கூறுகிறேன். ஐரோப்பாவில் உள்ள பிரச்சனைகள் மற்றும் நம் காலத்தின் அரசியல் சவால்களைப் பற்றிய அவரின் தெளிவான புரிதலால் நான் ஈர்க்கப்பட்டேன். இடதுசாரி அதன் சித்தாந்தத்தை உலகளாவிய அளவில் அதன் சர்வதேச வலைப்பின்னல்கள் மற்றும் அமைப்புகளின் மூலம் முன்னெடுத்துச் செல்லும் நேரத்தில், பழமைவாதிகளான நாங்கள் சர்வதேச அளவில் நமது பழமைவாத மதிப்புகளுக்காக எழுந்து நிற்க கூடுதலாக இணைந்திருக்கவேண்டும்” என எழுதினார்.

பிரேசிலுக்கான பயணத்தின் போது, ஸ்ரோர்ச் ஜனாதிபதியின் வலது கையான போல்சனாரோவின் மகன் எடுவார்டோவையும் சந்தித்தார். எடுவார்டோ போல்சனாரோ பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரி சமூக லிபரல் கட்சியை (PSL) வழிநடத்துவதுடன் மற்றும் உலகெங்கிலும் உள்ள தீவிர வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புகளைப் பராமரிக்கிறார்.

மற்றைய தொடர்புகளில், எடுவார்டோ, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஜனவரி 6 ஆம் தேதி காங்கிரஸைத் தாக்கி ஜோ பைடென் ஜனாதிபதியாக உறுதிப்படுத்துவதைத் தடுக்க முயன்றபோது, எடுவார்டோ போல்சனாரோ வாஷிங்டனில் இருந்தார் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்புக்கான தயாரிப்புகளில் நேரடியாக ஈடுபட்டார். ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள தீவிர வலதுசாரி இயக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக ட்ரம்பின் முன்னாள் தலைமை மூலோபாய நிபுணர் ஸ்டீவ் பானனால் நிறுவப்பட்ட இயக்கம் (The Movement) எனப்படும் அமைப்பின் இலத்தீன் அமெரிக்க பிரதிநிதியும் ஆவார்.

பெயாட்ரிக்ஸ் வான் ஸ்டோர்ச் எடுவார்டோ போல்சனாரோ உடன் (Instagram)

இன்ஸ்டாகிராமில், ஸ்ரோர்ச் ஜனாதிபதியின் மகனுடனான தனது சந்திப்பை மிக உயர்ந்த முறையில் பின்வருமாறு பாராட்டினார்:

'எனது பிரேசில் பயணத்தின் முக்கியமான சந்திப்பு: எடுவார்டோ போல்சனாரோவுடன் ஒரு அற்புதமான சந்திப்பு. பகிரப்பட்ட மதிப்புகள் நல்ல, சர்வதேச ஒத்துழைப்புக்கான அடிப்படையாகும். பாராளுமன்றத்தில், பாராளுமன்றத் தலைவரின் இருக்கைக்கு அடுத்ததாக: பைபிளுடன்.

ஜெயர் போல்சனாரோ 1964 முதல் 1985 வரை இலத்தீன் அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொடூரமான பயங்கரவாத ஆட்சியை நடத்திய இராணுவ சர்வாதிகாரத்தை ஒரு முன்மாதிரியாகக் கருதுகிறார் என்பது நீண்ட காலமாக அறியப்பட்ட ஒன்றாகும். மேலும் அவரே சர்வாதிகார வழிகளில் தனது ஆட்சியைப் பாதுகாக்க முயற்சிக்கிறார். இருப்பினும், செப்டம்பர் 7 அன்று, இந்த முயற்சிகள் ஒரு புதிய உச்சத்தை அடைந்தன.

போல்சனாரோ பல வாரங்களாக பிரேசிலின் சுதந்திர தினத்தன்று தீவிர வலதுசாரி கும்பலை ஒன்று திரட்ட முயன்றார். ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட முயற்சியைப் போல போல்சனாரோவுக்கு கணிசமான ஆதரவு உள்ள பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தை தாக்கலாம் அல்லது இராணுவத்தால் கையகப்படுத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் எச்சரித்தன. அவர் தனது அரசாங்கத்தில் பத்து உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை சேர்த்துள்ளார் மற்றும் 6,100 மற்றவர்களை அமைச்சு மற்றும் நிறுவனங்களில் நியமித்துள்ளார்.

பின்னர், சுதந்திர தினத்தன்று, ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கினர். போல்சனாரோ இரண்டு பாரிய கூட்டங்களில் பேசினார். அரசாங்க அரண்மனையிலிருந்து கடவுளால் மட்டுமே அவரை அகற்ற முடியும் என்று அவர் ஒரு சர்வாதிகாரியின் பாணியில் சபதம் செய்து, உச்ச நீதிமன்றத்தை மீறுமாறு அழைத்து மற்றும் வன்முறையால் அச்சுறுத்தினார். வன்முறையைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதற்காக உச்ச நீதிமன்றம் தற்போது போல்சனாரோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது.

போல்சனாரோவின் ஆட்சிக்கவிழ்ப்பு தயாரிப்புகள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கான பிரதிபலிப்பாகும். வைரஸுக்கு எதிரான எந்தவொரு பாதுகாப்பையும் நிராகரிக்கும் அவரது கொலைகார கொரோனா கொள்கை இதுவரை 586,000 உயிர்களைக் கொன்றுள்ளதுடன் ஒவ்வொரு நாளும் 600 பேர் இறக்கின்றனர். மேலும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியின் பிடியில் உள்ளது. மக்கள்தொகையில் 14 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் உள்ளதுடன், வறுமை மற்றும் வீடற்ற நிலையில் கணிசமான அதிகரிப்பும் மற்றும் உயரும் பணவீக்கமும் காணப்படுகின்றது.

பெயாட்ரிக்ஸ் வான் ஸ்ரோர்ச் மற்றும் அவரது கணவர் சுதந்திர தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு போல்சனாரோவை சந்திக்க சென்றபோது, பாசிச கும்பலைத் திரட்டுவது தீவிரமாக இருந்தது மற்றும் ஜனாதிபதியுடனான அவர்களின் சந்திப்பு அவரது ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்களுக்கான ஆதரவின் தெளிவான பகிரங்க எடுத்துக்காட்டாகும். அதே நேரத்தில், பாசிச சித்தாந்தம் மற்றும் நடைமுறையில், ஜேர்மனிக்கான மாற்றீடு எவ்வளவு அவற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை இந்த இருவரும் உறுதிப்படுத்துகின்றனர்.

அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போல்சொனாரோ அனைத்து அரசாங்க அதிகாரங்களையும் தக்கவைத்துக்கொண்டுள்ள பிரேசில் சர்வதேச வலதுசாரி தீவிரவாதத்தின் மையமாக மாறியுள்ளது. ஜனாதிபதியின் மகன் ட்ரம்ப் குடும்பம் மற்றும் ஸ்டீவ் பானனுடன் இணைந்து பணியாற்றுவது மட்டுமல்லாமல், ஸ்பெயினின் வோக்ஸ் கட்சியின் சாண்டியாகோ அபாஸ்கல் மற்றும் ஹங்கேரிய அரசாங்கத் தலைவர் விக்டர் ஓர்பானுடன் இணைந்து தோன்றினார். வோக்ஸ் பாசிச பிராங்கோ சர்வாதிகாரத்தின் பாரம்பரியத்தில் நிற்கின்றது. அதே நேரத்தில் ஹங்கேரிய நீதித்துறையையும் ஊடகங்களையும் அடிபணிய வைப்பதன் அடிப்படையில் அவர் 'தாராளவாதமற்ற ஜனநாயகம்' என்று அழைப்பதை ஓர்பான் விரும்புகிறார்.

இந்த தீவிர வலதுசாரி இயக்கங்கள் ஒருவரிலிருந்து ஒருவர் கற்றுக் கொள்வதுடன் மற்றும் ஒருவரையொருவர் பின்பற்றுகின்றன. அவர்கள் பொதுவான விடயங்களை உருவாக்கி அகதிகளுக்கு எதிரான கிளர்ச்சி, கருக்கலைப்பு மீதான தடை, காலநிலை மாற்றத்தை மறுத்தல், தடுப்பூசி போட மறுப்பது, ஒருபாலின, பால்மாற்றீடு, பல்பாலின உறவுகளை மறுப்பது மூலம் ஒரு வலதுசாரி கும்பலை அணிதிரட்டுவதற்காக, வன்முறையான தீவிர வலதுசாரி ஆட்சிக்கான தொழில்நுட்பங்களை நகலெடுக்கின்றன.

பெயாட்ரிக்ஸ் வான் ஸ்ரோர்ச் ஜேர்மனிக்கான மாற்றீடுக்குள் ஒரு மூத்த நபராவார். 50 வயதான அவர் தீவிர வலதுசாரி கட்சியின் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து உறுப்பினராக உள்ளார். அவர் ஜேர்மனிக்கான மாற்றீட்டின் துணை செய்தித் தொடர்பாளர் மற்றும் அதன் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் ஆவார். அவரது அரசியல் மற்றும் சுயசரிதை இரண்டையும் பொறுத்தவரையில், அவர் நாஜி ஆட்சியின் தொடர்ச்சியை உள்ளடக்கியுள்ளார்.

வான் ஸ்ரோர்ச்சின் தாய்வழி தாத்தா, கவுண்ட் ஸ்வெரின் வான் க்ரோசிக், பன்னிரண்டு ஆண்டுகள் ஹிட்லரின் நிதியமைச்சராக இருந்து மற்றும் 1949 இல் போர்க் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டார். 1918 நவம்பர் புரட்சியில் சிம்மாசனத்தை இழந்த அவரது தந்தைவழி தாத்தா, கிராண்ட் டியூக் நிகோலஸ் வான் ஓல்டன்பேர்க் NSDAP மற்றும் ஹிட்லரின் அதிரடி படைப் பிரிவான SA இனதும் உறுப்பினராவார். தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில், ஏனைய பிரச்சனைகளுடன் இணைத்து இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அபகரிக்கப்பட்ட கிழக்கு ஜேர்மன் ஜங்கர்களின் (நிலப்பிரபுத்துவ நில உடமையாளர்கள்) நிலத்தை மீட்பதற்காக வான் ஸ்ரோர்ச் பிரச்சாரம் செய்தார்.

ஸ்ரோர்ச் எப்போதுமே ஏற்கனவே தீவிர வலதுசாரியான ஜேர்மனிக்கான மாற்றீட்டின் வலதுபுறத்தில் நின்று, பலமுறை மோசமான, மனிதாபிமானமற்ற அறிக்கைகளால் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். உதாரணமாக, 2016 ஆம் ஆண்டில், ஜேர்மன் எல்லையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அகதிகளை விரட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். முஸ்லீம் ஆண்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பு மக்கள் மீதான வெறுப்பை தூண்டியதற்காக சட்டரீதியான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. மிக சமீபத்தில் அவர் 'திருடப்பட்ட' அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பற்றிய ட்ரம்பின் பொய்களை மீண்டும் பரப்பியுள்ளார்.

சில ஜேர்மன் செய்தித்தாள்கள் ஸ்ரோச்ஸின் பிரேசில் பயணத்தைப் பற்றி செய்தி வெளியிட்டனவே தவிர ஊடகங்களினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலோ எந்த எதிர்ப்பும் எழுப்பப்படவில்லை. இது ஆச்சரியமல்ல, ஜேர்மன் அரசாங்கமே போல்சனாரோ ஆட்சியுடன் மிக நெருக்கமான உறவைப் பேணுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD) பிரேசிலுக்கு விஜயம் செய்து, மற்றும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்க கைப்பாவை ஜுவான் கைடோவின் சதி முயற்சிக்கு ஆதரவாக தீவிர வலதுசாரி பிரேசில் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தார். 'இரு தரப்பினரும் வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜுவான் கைடோவை அங்கீகரிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர்' என்று அந்த இருவரும் அந்த நேரத்தில் ஒரு கூட்டு அறிக்கையில் அறிவித்தனர்.

தங்கள் சொந்த பொருளாதார நலன்களை முன்னெடுத்து, தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கும்போது, ஜேர்மன் அரசாங்கமும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட அனைத்து கட்சிகளும் வலதுசாரி, சர்வாதிகார ஆட்சிகளுடன் இணைகின்றன. இது பிரேசில் போல்சனாரோவுடன் மட்டுமல்லாது எகிப்தில் உள்ள அல் சிசி மற்றும் பலருக்கும் பொருந்தும்.

இது ஜேர்மனிக்கான மாற்றீடு மீதான அவர்களின் அணுகுமுறையையும் தீர்மானிக்கிறது. நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற மற்றும் மாநில பாராளுமன்றங்களில் இந்த கட்சி பதவியிலிருக்கின்றது. அதன் உறுப்பினர்களுக்கு முக்கியமான குழுக்களின் தலைமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அகதிகள் கொள்கை மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருவியின் கட்டமைப்பில், அரசாங்கம் நீண்டகாலமாக ஜேர்மனிக்கான மாற்றீட்டின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இரகசிய சேவைகள், காவல்துறை மற்றும் இராணுவம் அனைத்தும் ஜேர்மனிக்கான மாற்றீட்டின் ஆதரவாளர்களால் நிரம்பியுள்ளன.

முதலாளித்துவத்தின் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை எதிர்கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கம் சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி முறைகளுக்கு மாறி வருகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கம் மட்டுமே இந்த ஆபத்தான நிகழ்வுகளை நிறுத்த முடியும்.

Loading