இலங்கையின் வடக்கில் கோவிட்-19 தொற்றுக்களும் மரணங்களும் அதிகரிக்கின்றன

இலங்கையின் வட மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாட்களில் மாத்திரம் 6,667 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 240 பேர் மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னெப்போதையும் விட கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வட மாகாணத்தில் 14,480 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு 228 பேர் மரணித்திருந்தனர்.

இந்த புள்ளி விபரங்கள், ஆகஸ்ட் மாதம் முழுதும் பரவிய தொற்றுக்கள் மற்றும் மரணங்களுக்கு சமாந்தரமானளவு இம்மாதம் 16 நாட்களுக்குள் நடந்துள்ளன. இது செப்டெம்பர் மாதத்தில் தொற்றாளர்களதும் மரணிப்போரதும் எண்ணிக்கை இரண்டு மடங்காவதற்கான ஆபத்தை சுட்டிக் காட்டுகின்றது. செப்டெம்பர் 17 அன்று மட்டும் வட மாகாணத்தில் 159 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 பேர் மரணித்துள்ளனர்.

வடக்கில் வானவில் ஆடைத் தொழிற்சாலையின் உணவகத்தில், தொற்று நோய்க்கு மத்தியில் இடைவெளியின்றி நிரம்பியுள்ள கூட்டம்..

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், தடுப்பூசி வழங்குவதன் மூலமும் அது தற்போது அமுல்படுத்தியுள்ள பெயரளவிலான பயணத் தடை மூலமும் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறைவடைந்துள்ளதாக காட்டுவதற்கு முயற்சிக்கின்ற நிலையிலேயே இந்த அதிகரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

2020 மார்ச் மாதம் முதல், செப்டெம்பர் 17 வரையான காலப் பகுதியில் வட மாகாணத்தில் 33,953 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் 649 பேர் மரணித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் செப்டெம்பர் 20 வரை 16,012 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 366 பேர் மரணித்துள்ளனர்.

வடக்கில் பாதிக்கப்பட்டோரில் முதியோர், கர்ப்பினி தாய்மார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர் யுவதிகளும் மற்றும் சிறைக் கைதிகளும் அடங்குவர். இந்த வாரம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பரிசோதனை செய்யப்பட்ட 39 பேரில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கைத்தடி முதியோர் இல்லத்தில் 115க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், வவுனியா பம்பை மடுவில் உள்ள முதியோர் இல்லத்தில் 40க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கோவிட்-19 பரவியுள்ளதுடன், 6 முதியோர்கள் மரணித்துள்ளனர்.

இரண்டு வாரங்களில் இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த தாயும், ஒரு குழந்தையைப் பிரசவித்த தாயும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றுநோயால் மரணித்துள்ளமை, நாட்டில் கர்ப்பினித் தாய்மார்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுக்கு உதாரணமாகும்.

வடக்கில் அண்மைக் காலமாக கொரோனா மரணங்களின் அதிகரிப்புகள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி, மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் காணப்படும் வசதிக் குறைபாடுகள் காரணமாக பலர் பரிசோதனைகளில் இருந்து தப்பிக்க முனைவதாகவும், தாமதமாக மருத்துவமனைக்கு செல்பவர்களால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். சிலர் வீட்டிலேயே இறந்துவிடுவதாகவும் அவர் கூறினார். இது நாடு முழுவதும் உள்ள நிலைமை ஆகும்.

நாட்டில் வைத்தியசாலைகளும் சிகிச்சை மையங்களும் அவற்றின் கொள்ளவையும் மீறி நிரம்பி வழிகின்றன. இதனால் பெருந்தொகையான தொற்றாளர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். கடந்த மாதம் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளியான 26 வயது பத்திரிகையாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் தனிமைப்படுத்தப்பட்ட மூன்றாவது நாள் மூச்சுத் தினறலால் மரணமடைந்தார். பிரகாஸைப் போல் 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் விளைவாக, முடமாகப் பிறந்த, போரினால் உடற் பாகங்களை இழந்த, காயங்களுக்கு உள்ளாகி சுகயீனமுற்றுள்ள ஆயிரக்கணக்கானோர் அவ்வாறான ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். இதே போல் வவுனியாவில் 25 வயதுடைய இளைஞனும் தொற்றுக்குள்ளாகி வீட்டில் தங்கியிருந்தபோது உயிரிழந்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகள், குறைத்து மதிப்பீடு செய்யப்படுகின்ற மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் ஆகும். உண்மையான எண்ணிக்கை இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். செப்டெம்பர் 12 வெளியான வீரகேசரி பத்திரிகையின் செய்தி, வடக்கில் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வுக் கூடம் இரண்டு வாரங்களுக்கு மேலாக இயங்கவில்லை. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுக் கூடமும் அதன் முழுத் திறனுக்கு ஏற்ப பரிசதனைகளை மேற்கொள்ளவில்லை என அந்த செய்தி கூறியது.

வேகமாக தொற்றக்கூடிய மரணகரமான டெல்டா மாறுபாடு பரவி வருகின்றமை தொடர்பான மருத்துவ நிபணர்களின் எச்சரிக்கையை நிராகரித்துள்ள ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், மனித உயிர்களைவிட பெரும் வர்த்தகர்களின் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை திறந்து விட்டுள்ளதன் விளைவே இந்த மரணங்களாகும். கடந்த ஆகஸ்ட்டில் நாடு பூராகவும் தொற்று தீவிரமாகப் பரவியதன் பாகமாகவே வடக்கிலும் தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,112 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு 30 பேர் மரணித்துள்ளனர். சுமார் 146,000 பேர் கொண்ட மாவட்டத்தில் இவ் எண்ணிக்கையானது அதிகம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதே போன்று, வவுனியா மாவட்டத்திலும் செப்டெம்பர் 1 முதல் 11 ஆம் திகதிவரை 1,651 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், செப்டெம்பர் 19 அன்று 5 பேர் மரணித்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் இந்த மாவட்டத்தில் 3,328 பேர் தொற்றுக்குள்ளானதோடு 50 பேர் மரணித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மட்டும் 95 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவர்களில் 84 பேர் மடு சுகாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். ஞாயிற்றுக் கிழமையுடன் எல்லாமாக 2035 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 351 பேர் இம்மாதம் அடையாளம் காணப்பட்டவர்களாவர். மன்னார் மாவட்டத்தில் இதுவரை 23 பேர் மரணித்துள்ளனர்.

இவற்றுக்கு மேலாக சனத்தொகை குறைவான முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் 25 பேர் கொரோனாவால் மரணித்துள்ளதுடன், செப்டெம்பர் 19 அன்று மட்டும் மாவட்டத்தில் 58 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 32 பேர் புதுக்குடியிறுப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

செப்டெம்பர் 21 வெளியான செய்தியின் படி, கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 49,708 வரை அதிகரித்து 50 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன், உயிரிழப்புக்கள் 898 ஆகும். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின்படி, திருகோணமலை மாவட்டத்தில் 320, மட்டக்களப்பு மாவட்டத்தில் 305, கல்முனையில் 160 மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 113 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மாத்திரம் கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்து இருந்ததாக அவர் தெரிவித்தார். தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதாக கூறிக்கொண்டாலும் ஞாயிற்றுக் கிழமை மாத்திரம் 161 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த குற்றவியல் கொள்கையின் விளைவாக, நாட்டில் இதுவரை 504,491 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளதுடன், இரண்டு கோடிக்கும் சற்றே அதிகமான ஜனத்தொகையைக் கொண்ட இலங்கை தீவில் 12,125 பேர் இறந்துள்ளனர். உத்தியோபூர்வ தகவல்களின் படி நாளாந்தம் 1,500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாவதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் நாளாந்தம் மரணிக்கின்றனர்.

நாட்டின் வைத்தியசாலைகளின் பிண அறைகள் அவற்றின் கொள்ளவை மீறி நிரம்பி வழிகின்றன. வடக்கிலும் கொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்களை குளிரூட்டிகளில் வைத்து பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 6 சடலங்களை மட்டுமே வைக்க கூடிய பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 11 சடலங்கள் நிரம்பி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கிலும், அதே போல் நாட்டின் ஏனைய பாகங்களிலும் உள்ள தகன சாலைகளின் எண்ணிக்கை, மரண எண்ணிக்கையை சமாளிக்க போதுமானதல்ல. யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு 5 சடலங்களையும் வவுனியாவில் 8 சடலங்களையும் மட்டுமே எரிக்க முடியும். இதனால் மருத்துவமனைகளில் சடலங்கள் தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கின் ஏனைய மாவட்டங்களில் மின் தகனசாலைகள் கிடையாது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மட்டும் தேங்கி இருந்த 36 சடலங்கள் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் கட்சிகள், தொற்று நோய் சம்பந்தமாக அரசாங்கத்தின் கொலைகாரத்தனமான கொள்கையை மௌனமாக அனுமதித்துள்ளன. தொற்றுநோய்க்கு அரசாங்கம் காட்டும் அலட்சியத்துக்கும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதற்கும் எதிராக சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசரியர்கள் உட்பட பல்வேறு அரசாங்க மற்றும் தனியார் துறைகளிலும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டங்களை நசுக்குவதற்காகவே, இராஜபக்ஷ அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தையும் அவசரகால நிலையையும் அமுல்படுத்தி இருக்கின்றார். இந்த அடக்குமுறைச் சட்டங்களை தமிழ் கட்சிகள் அனைத்தும் போலியான விமர்சனங்களுடன் ஆதரிக்கின்றன.

பூகோளத் தொற்றின் காரணமாக தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதை கைவிட்டுள்ளது. வட்டுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வி. கமலதாசனுடன் தொடர்பு கொண்ட போது, தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் கடந்தும் சுகாதார அதிகாரிகள் எவரும் வந்து பார்க்கவில்லை எனத் தெரிவித்தார். “பல தடவை தொடர்புகொண்ட போதும் சுகாதார அதிகாரிகள் வேலைப்பளு காரணமாக வரவில்லை. அதே போல் எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. வீட்டில் ஏற்கனவே இருந்த உணவுப் பொருட்களை வைத்தே சமாளித்தோம். மனைவிக்கு தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட போதும், ஏனையவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனைகளோ நடத்தவில்லை. 14 நாட்கள் முடிந்துள்ள நிலைமையில் வருமானம் தேடி வெளியில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்,” என அவர் கூறினார்.

காரைநகரில் தொற்றுக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு பெண் நோயாளியை தொடர்பு கொண்டபோது, வீட்டில் தனிமைப்படுத்துவதனால் கணவர் பிள்ளைகளுக்கும் தொற்றிவிடக் கூடிய ஆபத்து அதிமாக உள்ளதாக கூறினார். “வீட்டினுள் எவ்வாறு சுகாதார முறைப்படி தனிமைப்படுவது? இது வரையில் எவ்வித மருத்துவ உதவிகளும் கிடைக்கவில்லை. அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது. அயலவர்களும் நோய் காராணமாக உதவிக்கு வர அஞ்சுகின்றனர். இது வரையிலும் தனிமைப்படுத்தல் நிவாரணமோ அல்லது எந்த உதவிகளோ அரசினால் வழங்கப்படவில்லை. வருமானம் இழந்து நாளாந்த வாழ்கையை ஓட்டுவதற்காக தவிக்கின்றோம்,” என அவர் தெரிவித்தார்.

சிகிச்சை மையமொன்றில் தங்கியிருந்த ஒருவர், அனைவரையும் ஒன்றாகவே தங்க வைத்துள்ளதோடு சமூக இடை வெளிகள் பேணப்படுதில்லை, எனத் தெரிவித்தார். நோயளார்களுக்கும் வைத்தியர்களுக்கும் தொலைபேசித் தொடர்புகளே உள்ளன. தனிமைப் படுத்தப்படும் நாட்களில் ஒவ்வொரு நாளும் நோயாளர்களின் உடல் நிலை பரிசோதிக்கப்படுவதில்லை. நோயாளர்கள் நீராவி பிடிக்கவோ, சுடு தண்ணீர் குடிக்கவோ எந்த வசதிகளும் கிடையாது. வீடு வரும்போது கூட எந்த மருத்துவ பரிசோனைகளும் கிடையாது. வைரஸ் .உடம்பில் உண்டா இல்லையா என்பது யாருக்கு தெரியும்?” என அவர் மேலும் கூறினார்.

Loading