ஈரானிய விஞ்ஞானி தொலைதூர கட்டுப்பாட்டு கருவியால் படுகொலை செய்யப்பட்டதில் நியூ யோர்க் டைம்ஸ் மகிழ்ச்சியடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நியூ யோர்க் டைம்ஸ் அதன் ஞாயிறு பதிப்பின் முதல் பக்கத்தில் கடந்த நவம்பர் 27 அன்று ஈரானின் உயர்மட்ட அணு இயற்பியலாளர் மொஹ்சன் பக்ரிசாடேயின் (Mohsen Fakhrizadeh) படுகொலை குறித்த ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை எவ்வாறு அரச கொலை நடந்தது என்பதை மிக விரிவாக விவரிப்பதுடன் மற்றும் இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதை நிறுவிக்காட்டுகிறது.

ஈரானிய விஞ்ஞானி மொஹ்சன் பக்ரிசாடே படுகொலை செய்யப்பட்ட காட்சி[Credit: Fars News Agency via AP]

உயர் மட்ட அரச ஆதாரங்கள் மற்றும் 'திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் விவரங்களை அறிந்த இரண்டு உளவுத்துறை அதிகாரிகளின்' தகவல்களின் அடிப்படையிலான டைம்ஸ் கட்டுரை ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது.

இந்த அறிக்கை படுகொலையை ஒரு வழமையான அரச கொள்கையாக்குவதற்கான மற்றொரு ஆதாரமாகும். இத்தகைய கொலைகளைச் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் நீண்டகாலமாக CIA மற்றும் இஸ்ரேல் மொசாட்டை பயன்படுத்தினாலும், கடந்த காலங்களில் இவை தொடர்புடைய நிறுவனங்கள் அவற்றை 'உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ' மறுத்தன. இப்போது அவை பகிரங்கமாக பெருமை பேசும் பொருளாகியுள்ளன.

டைம்ஸ் தலைமை வகிக்கும் பெருநிறுவன ஊடகங்கள் இந்த மாற்றத்தில் முழு பங்காளியாக இருப்பதை பக்ரிசாடேயின் படுகொலை குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 'சட்டபூர்வமான' அல்லது 'சட்டவிரோதமான', 'அரச பயங்கரவாதம்' போன்ற சொற்களை ஒருவர் இக்கட்டுரையில் வீணாக தேடலாம். அது விவரிக்கும் கொடூரமான குற்றச் செயலின் மேலெழுந்தவாரியான விமர்சனத்தைக் கூட பரிந்துரைக்கும் ஒரு பத்தியும் இல்லை.

அதற்குப் பதிலாக, 'பயங்கரவாத கொலைகளை செய்வதில் தந்திரோபாய சவால்களை அனுதாபத்துடன் விவரிக்கும் அதே வேளையில்,' ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நிபுணர்களை முறையாகத் தேர்ந்தெடுக்கும் 'இஸ்ரேலின் நீண்ட சாதனையை அது கொண்டாடுகிறது.

2007 முதல், அதன் முகவர்கள் ஐந்து ஈரானிய அணு விஞ்ஞானிகளை படுகொலை செய்து மற்றொருவரை காயப்படுத்தியுள்ளனர். ... இஸ்ரேலிய ஏஜெண்டுகள் ஏவுகணை மேம்பாட்டிற்கு பொறுப்பான ஈரானிய ஜெனரலையும் அவரது அணியின் 16 உறுப்பினர்களையும் கொன்றனர்” என்று டைம்ஸ் தெரிவிக்கிறது.

பக்ரிசாடேயை கொல்லப் பயன்படுத்தப்பட்ட வழிமுறையை பார்க்கையில் 1,000 மைல்களுக்கு அப்பால் இருந்து ஒரு இஸ்ரேலியரால் இயக்கப்படும் தொலைதூரத்திலிருந்து இயக்கும் இயந்திர துப்பாக்கியால் பல முறை சுடப்பட்டது. இக்கட்டுரை ஒரு ஆயுத தயாரிப்பாளர் நடாத்தும் விற்பனை அதிகரிக்க செய்யும் உரையாடலாக தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு மோசமான தொனியை எடுத்துக்கொள்கிறது.

இந்த செயல்பாடு, 'செயற்கை நுண்ணறிவு மற்றும் பல கேமரா கண்கள் கொண்ட ஒரு உயர் தொழில்நுட்ப, கணினிமயமாக்கப்பட்ட தொலைவிலிருந்து சுடுகருவியின் முதல் பரிசோதனை ஆகும். இது செயற்கைக்கோள் வழியாக இயக்கப்பட்டு ஒரு நிமிடத்திற்கு 600 சுற்றுகளை சுடும் திறன் கொண்டது.

'மேம்படுத்தப்பட்ட, தொலைவிலிருந்து இயக்கப்படும் இயந்திரத் துப்பாக்கி இப்போது தொலைதூர இலக்கு கொலைக்கான உயர் தொழில்நுட்ப ஆயுதங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் போர் ட்ரோனுடன் இணைகிறது. ஆனால் ஒரு ட்ரோனைப் போலல்லாமல், ஆளற்ற இயந்திர துப்பாக்கி வானில் எந்த கவனத்தையும் ஈர்க்காது. அங்கு ஒரு ட்ரோன் இருக்குமானால் அது சுட்டு வீழ்த்தப்படலாம். மேலும் எங்கும் வைக்க கூடியதாகவும், பாதுகாப்பு மற்றும் உளவு உலகங்களை மாற்றியமைக்கும் தகமைகளை கொண்டிருக்கும்.

'பாதுகாப்பு மற்றும் உளவு உலகங்கள்' என்பது அரச பயங்கரவாத கொலைக்கு ஒரு கோழைத்தனமான சொற்பொழிவு ஆகும். ஈரானின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவரான பக்ரிசாடே, ஒரு பல்கலைக்கழக வகுப்பிற்கு கற்பிக்க தெஹ்ரானுக்குச் சென்றபோது, அவரது மனைவியுடன் அவரது காரை ஓட்டிச் சென்றார். அவர் ஈரானிய வெடிகுண்டின் மூளையாக செயல்பட்டவர் என்று அணு ஆயுதங்களை கொண்ட இஸ்ரேலின் கூற்றுக்களை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இரண்டும் ஈரான் அணு ஆயுத மேம்பாட்டுக்கு ஆதரவான எந்தவொரு திட்டத்தையும் குறைந்தது 2003 ஆம் ஆண்டிலேயே கைவிட்டுவிட்டதாக முடிவு செய்துள்ளன.

பக்ரிசாடேயின் உயிரைப் பாதுகாப்பதற்கான ஈரானியப் பாதுகாப்பு முயற்சிகளை ஆத்திரமூட்டும் வகையில் கிண்டல் செய்யும் இந்தக் கட்டுரை, தெஹ்ரானுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது: “இதைத்தான் நாங்கள் முன்பு செய்தோம், இதைத்தான் நாங்கள் மீண்டும் செய்வோம். அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” எனக் குறிப்பிட்டது.

இந்த கொலைக்கு இஸ்ரேலிய அரசாங்கமும் அதன் மொசாட் உளவு அமைப்பும் 'ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் சி.ஐ.ஏ. இயக்குனர் ஜினா ஹாஸ்பெல் உட்பட அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் இணைந்து திட்டமிட்டதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

'ஜனவரி 2020 இல் இஸ்ரேலிய உளவுத்துறையின் உதவியுடன் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரானின் ஒப்பீட்டளவில் தெளிவான பிரதிபலிப்பால் இரு நாடுகளும் ஊக்குவிக்கப்பட்டன.' வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு குற்றவியல் படுகொலை அடுத்த கொலைக்கு களம் அமைக்கிறது.

எவ்வாறாயினும், வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் இரண்டும் இந்த படுகொலை இஸ்ரேல் அமெரிக்க இராணுவ ஆதரவை நம்பியிருக்கும் ஒரு போரைத் தூண்டும் என்பதை அங்கீகரித்தன.

ஜனாதிபதி பெஞ்சமின் நெதனியாகுவின் இஸ்ரேலிய அரசாங்கம், 2015 ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தை நிரந்தரமாக இரத்து செய்வதிலும், பைடென் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா ஒப்பந்தத்தை நோக்கி திரும்புவதைத் தடுக்கவும் போருக்கான சாத்தியப்பாட்டை வரவேற்றது.

தனது மத்திய கிழக்கு கொள்கைகளை அமெரிக்க வரலாற்றில் இஸ்ரேலின் கொள்கைகளுடன் மிக நெருக்கமாக இணைந்திருந்த ட்ரம்ப், 2018 இல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தார் மற்றும் இராணுவ மோதலை எதிர்கொள்வதற்கு தனது சொந்த காரணங்களைக் கொண்டிருந்தார்.

நவம்பர் 2020 இறுதியில், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடெனிடம் தோற்ற பின்னர், ட்ரம்ப் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை முறியடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். கொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு அமைச்சரவையை சந்தித்து நடான்ஸில் உள்ள முக்கிய ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீது விமானத் தாக்குதலை முன்மொழிந்தார். எந்த சர்வதேச சட்டத்தையும் மீறாததுடன் மற்றும் ஒரு வெடிகுண்டை தயாரிக்கின்றது என்பதற்கான எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்காது ஈரான் அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகரிக்கின்றது என்பதை காட்டி இத்தாக்குதலுக்கான ஒரு சாக்குப்போக்காக அதனை பயன்படுத்தினார்.

அவரது ஆலோசகர்கள் ஒரு பயங்கரமான போர்க்குற்றத்தை செய்யாதிருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறினாலும், போரை நியாயப்படுத்த ட்ரம்ப் ஒரு ஆத்திரமூட்டலை தேடுகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஈரானுடனான ஆத்திரமூட்டப்பட்ட இராணுவ மோதலை தேர்தல் முடிவுகளை இரத்து செய்வதற்கும், இராணுவ சட்டத்தை விதிப்பதையும் நியாயப்படுத்துவதற்கு அவர் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற அச்சுறுத்தல் இருந்தது.

ஏன் டைம்ஸும் அதன் நன்கு நிலைநிறுத்தப்பட்ட அரசு தகவல் அளிப்பவர்களும் இன்று பக்ரிசாடே படுகொலையின் கரியை கிளறுகின்றார்கள்?

வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமடைந்து வருகின்றன. பைடென் நிர்வாகம் 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் என்று ஈரான் ஆரம்பத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், அது இதுவரை அந்தத் திசையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை, அதற்கு பதிலாக அமெரிக்கத் தடைகளைத் தக்கவைத்து, ஒப்பந்தத்தை வாஷிங்டன் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்யும் வகையில் யுரேனியத்தின் செறிவூட்டல் மற்றும் கையிருப்பு அதிகரிப்பை ஈரான் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியது. வாஷிங்டன் தெஹ்ரானை தனது பாரம்பரிய ஏவுகணைத் திட்டத்திற்கு மேலும் சலுகைகளுக்காக வலியுறுத்துவதாகவும், பிராந்திய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலுக்கு தலைவணங்கி பரந்த மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கை கைவிடுமாறு கோருவதாகவும் கூறப்படுகிறது.

அதன் பங்கிற்கு, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக பெருகிய முறையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் யைர் லாபிட், தெஹ்ரான் ஒரு வெடிகுண்டை உருவாக்கியதாக குற்றம் சாட்டினார்: “என்ன விலை கொடுத்தாலும், ஈரான் அணுசக்தி திறனைப் பெறுவதை உலகம் தடுக்க வேண்டும். உலகம் இதைச் செய்யாவிட்டால், அவ்வாறு செயல்படும் உரிமையை இஸ்ரேல் கொண்டுள்ளது” என்றார்.

சீனாவுடனான இராணுவ மோதல் மற்றும் சீனாவிற்கான எரிசக்தி இறக்குமதிகளை வழங்கும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான மூலோபாய அவசியத்தின் படிக்கண்ணாடி மூலம் ஈரானை வாஷிங்டன் பெருகிய முறையில் பார்க்கிறது. கடந்த வாரம் தான், ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சீன நிறுவனங்கள் மீது வாஷிங்டன் புதிய தடைகளை விதித்தது. ஈரானின் பெட்ரோல் இரசாயன ஏற்றுமதிக்கு சீன நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்களாகும். மேலும் பெய்ஜிங் வாஷிங்டனின் ஒருதலைப்பட்சமான தடைகளை நிராகரித்தது.

அதிகரித்துவரும் சர்வதேச பதட்டங்களின் நிலைமைகளின் கீழ், இஸ்ரேலுடன் எவ்வளவு நெருக்கமாக இணைவது மற்றும் ஈரானை எப்படி ஆக்ரோஷமாக எதிர்கொள்வது என்ற அமெரிக்க ஆளும் ஸ்தாபனத்திற்குள் சந்தேகத்திற்கு இடமின்றி கசப்பான தந்திரோபாய பிளவுகள் உள்ளன. டைம்ஸ் கட்டுரை மோதலைத் தூண்டுவது அல்லது ஒரு தற்செயலான நிகழ்வை நடத்துவதற்கான அடித்தளத்தை அமைப்பது போன்ற நோக்கத்துடனும் எழுதப்பட்டிருக்கலாம். பின்னர் அது ஆயுத நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படலாம்.

அவரது முன்னோடியைப் போலவே, ஆப்கானிஸ்தானில் அவமானகரமான அமெரிக்க தோல்வியையும், அதிகரித்துவரும் உள்நாட்டு அரசியல் மற்றும் சமூக நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பைடென், உள்நாட்டு அழுத்தங்களை இராணுவ வன்முறையின் மூலம் வெளிப்புறமாக திசைதிருப்பும் வழிமுறையாக ஈரானுடனான மோதலுக்கான வாய்ப்பையும் வரவேற்கலாம்.

எது எப்படியிருந்தாலும், மொஹ்சன் பக்ரிசாடேயின் படுகொலை பற்றிய டைம்ஸ் கட்டுரை, ஒரு மோசமான, விருப்பமில்லாவிட்டாலும், மனிதகுலத்தை போர் அச்சுறுத்தலுடன் எதிர்கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றவியல் தன்மையை வெளிப்படுத்துகின்றது.

Loading