ரஷ்ய தேர்தல்கள் கோவிட் -19 அலையால் மறைக்கப்பட்டுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம் நடைபெற்றதான ரஷ்ய பாராளுமன்றத்திற்கான (State Duma) தேர்தல்கள் கோவிட்-19 இன் அதிவேக எழுச்சி மற்றும் ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியால் மறைக்கப்பட்டது. தொற்றுநோயின் காரணமாக, தேர்தல் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்டது, மேலும் இணையவழி வாக்களிப்புக்கும் சாத்தியம் இருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜூன் 30, 2021, புதன்கிழமை அன்று, ரஷ்யாவின் மாஸ்கோவில் அவரது வருடாந்திர நேரடி அழைப்பு நிகழ்ச்சியில் தோன்றுகிறார் (Sergei Savostyanov, Sputnik, Kremlin Pool Photo via AP)

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நெருங்கிய தொடர்புடைய ஆளும் ஐக்கிய ரஷ்யக் கட்சி (United Russia Party) (2016 இல் 54 சதவிகிதத்திலிருந்து) 50 சதவீதத்திற்கு நெருக்கமான வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இது இக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கும். ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of the Russian Federation-KPRF) அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை ஓரளவு பயன்படுத்த முடிந்தது என்பதுடன், பதிவான வாக்குகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றது.

வாக்கு மோசடி பற்றி பரவலான அறிக்கைகள் இருந்ததுடன், பல தொழில்துறை தொழிலாளர்கள் உட்பட, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்கள் வாக்களிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். எவ்வாறாயினும், இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மொத்தத்தில் வெறும் 52 சதவீத வாக்குகளே பதிவாகின, இது அனைத்து அரசியல் ஸ்தாபக கட்சிகளின் மீது வளர்ந்து வரும் மக்கள் விரோதத்திற்கான அறிகுறியாகவே உள்ளது.

இணைய வழி வாக்கெடுப்பின் முடிவை அங்கீகரிக்க முடியாது என KPRF ஏற்கனவே அறிவித்துள்ளது. இணைய வழி வாக்குகள் திங்களன்று மட்டுமே எண்ணப்பட்டன, அவற்றில் கணிசமான வாக்குகள் ஐக்கிய ரஷ்யக் கட்சிக்கு ஆதரவாக இருந்தன.

தேர்தலுக்கு முன்னதாக, சிறையில் உள்ள அலெக்ஸி நவால்னியை சுற்றி திரண்டிருந்த தாராளவாத எதிர்ப்பை கிரெம்ளின் கடுமையாக தாக்கியது. அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆதரவுபெற்ற நவால்னி, இந்த ஆண்டு தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், “தேர்தல் குறுக்கீடு” செய்ததாக குற்றம்சாட்டி அமெரிக்க தூதருக்கு ரஷ்யா நீதிமன்ற அழைப்பு விடுத்தது. குற்றச்சாட்டுக்கள் அல்லது ஆதாரங்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், தேர்தல் நடைபெறவிருந்த நேரத்தில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்ய சட்டங்களை மீறியதற்கான “மறுக்கமுடியாத ஆதாரங்கள்” தன்னிடம் இருப்பதாக கிரெம்ளின் குறிப்பிட்டது.

“நேர்த்தியான வாக்கெடுப்பு” உத்தி என்றழைக்கப்படுவதன் அடிப்படையில், நவால்னியும் அவரது ஊழியர்களும், ஐக்கிய ரஷ்யக் கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய எந்தவொரு வேட்பாளருக்கும் அவர்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்தனர்.

இதன் பொருள் நவால்னி குழு பல இடங்களில் ஸ்ராலினிச KPRF கட்சியின் வேட்பாளர்களை பரிந்துரைத்தது. KPRF அதன் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் பெரும் ரஷ்ய பேரினவாதம் குறித்து இழிபுகழ் பெற்றது என்பதுடன், இன்றுவரை, ஜோசப் ஸ்ராலினின் கேடுகெட்ட குற்றங்களை உறுதியாக பாதுகாத்து பாராட்டுகிறது. நவால்னியை பின்பற்றி, ரஷ்ய சோசலிச இயக்கத்தின் பப்லோவாதிகளும் KPRF வேட்பாளர்களை ஆதரித்தனர்.

ஐக்கிய ரஷ்யக் கட்சி மற்றும் KPRF தவிர, ஏனைய மூன்று கட்சிகளும் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதித்துவம் செய்யப்படவுள்ளன. யூத-எதிர்ப்புவாதி மற்றும் பேரினவாதியான விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி (Vladimir Zhirinovsky) தலைமையிலான தீவிர வலதுசாரி ரஷ்யாவின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (Liberal Democratic Party of Russia), மற்றும் Just Russia கட்சி இரண்டும் சுமார் 7.5 சதவீத வாக்குகளைப் பெற்றன. அழகுசாதன நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அலெக்ஸி நெச்சேவ் (Alexei Nechaev) சமீபத்தில் ஸ்தாபித்ததான புதிய மக்கள் (Novye Liudi) கட்சி 5 சதவீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றது. LDPR, அத்துடன் Just Russia மற்றும் KPRF ஆகிய கட்சிகள், சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை வலதுசாரி திசைக்கு திருப்ப வேலை செய்யும் புட்டின் ஆட்சிக்கு இரண்டு தசாப்தங்களாக “விசுவாசமான எதிர்க் கட்சியாக” செயல்பட்டு வருகின்றன.

நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் கடுமையாக அதிகரித்து வந்தாலும், பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியில் மூழ்கியிருந்தாலும் கூட, தேர்தல்கள் தொடங்கியவுடன் ரஷ்யாவின் பங்குச்சந்தை புள்ளிகள் வெள்ளியன்று உச்சத்தை எட்டின.

இந்த தேர்தல், தொழிலாள வர்க்கத்தை பாதிக்கக்கூடிய எரிந்து கொண்டிருக்கும் சமூக பிரச்சினைகளை, அனைத்திற்கும் மேலாக கோவிட்-19 தொற்றுநோய் கிட்டத்தட்ட முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்படுவதை குறித்தது. ஐக்கிய ரஷ்யக் கட்சி உட்பட பல கட்சிகள், தொற்றுநோய் குறித்து எந்தவித அறிக்கையும் வெளியிடாமல் இருக்க தங்கள் வேட்பாளர்களை கட்டாயப்படுத்த ஒத்துக்கொண்டு கிரெம்ளினுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தேர்தல் வார இறுதியில் நோய்தொற்றுக்கள் அதிவேகமாக அதிகரித்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாளாந்த நோய்தொற்றுக்கள் 20,000 க்கு அதிகமாக பதிவாகின. நாட்டிலேயே அதிக அளவு தடுப்பூசி வழங்கல் வீதத்தைக் கொண்ட மாஸ்கோவில் கூட நாளாந்த நோய்தொற்றுக்கள் 2,000 க்கு அதிகமாக அதிகரித்தன. கோடையில் ரஷ்ய மக்களை கொடூரமாகத் தாக்கிய நான்காவது அலை முடிந்து போன நிலையில், அங்கு தொற்றுநோயின் மறுஎழுச்சி தோன்றுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் நாளொன்றுக்கு 820 இறப்புக்கள் ஏற்பட்டன, நடப்பு வாரங்களில் நாளொன்றுக்கு குறைந்தது 790 இறப்புக்கள் பதிவாகின்றன. ரஷ்யாவிற்கு தொற்றுநோயின் மிகக் கொடிய மாதமாக இருந்த ஜூலை மாதத்தில் மட்டும் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரவலாக நிலவும் தடுப்பூசி தயக்கத்திற்கு மத்தியில், 140 மில்லியன் மக்கள் தொகையில் வெறும் 27 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் வெறும் 30 சதவீதம் மக்கள் குறைந்தது முதல் அளவு தடுப்புமருந்தை பெற்றுள்ளனர். கூட்டாட்சி மட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் கைவிடப்பட்டன. பிராந்தியங்கள் உள்ளூர் மற்றும் தற்காலிக அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தக் கூறி கிரெம்ளின் பொறுப்பை கைவிட்டது.

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளும் கல்லூரிகளும் மீளத்திறக்கப்பட்டமை புதிய நோய்தொற்று எழுச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது. அப்போதிருந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவியதால் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வகுப்புகளும் பள்ளிகளும் மூடப்பட்டன.

கடந்த வாரம், நோவோசிபிர்ஸ்க் பிராந்தியத்தில் மட்டும் 58 பள்ளிகளில் உள்ள 80 வகுப்புகள் மூடப்பட்டன. பிராந்தியத்தின் துணை சுகாதார அமைச்சர் எலெனா அக்செனோவா (Yelena Aksenova) இன் கூற்றுப்படி, நோய்தொற்றுக்கள் 46.2 சதவீதம் அதிகரித்திருந்தது, இவர்களில் 60 சதவீதம் பேர் குழந்தைகளாவர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பே, கடந்த ஒன்றரை வருட காலத்தில் அரை மில்லியன் குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

ரஷ்ய அதிகாரிகள், B.1.621 என்றும் அறியப்படும் வைரஸின் மு (Mu) மாறுபாடு, தற்போது கூட நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது பற்றி அது எந்தளவிற்கு பரவலாக உள்ளது என்ற புள்ளிவிபரங்கள் எதையும் வழங்காமல் சுட்டிக்காட்டியுள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO), மு மாறுபாட்டை “தீவிர மாறுபாடு,” (“variant of interest”) என சமீபத்தில் முத்திரைகுத்தியது, இது தடுப்பூசிகளை அதிகம் எதிர்க்கும் தன்மையுடையது.

ரஷ்யா தற்போது மொத்தம் 7.214 மில்லியனுக்கு மேற்பட்ட நோய்தொற்றுக்களையும், 195,835 இறப்புக்களையும் பதிவு செய்துள்ளது. இருப்பினும், இறப்பு எண்ணிக்கை ஐந்து மடங்கு வரை அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இது உண்மையான இறப்பு எண்ணிக்கையை 1 மில்லியனுக்கு நெருக்கமாக்கும். ஒட்டுமொத்தமாக போதுமான பொது சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாத, மற்றும் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் உள்ள நிலைமைகளைத் தாண்டி, உச்சபட்ச இறப்பு எண்ணிக்கைக்கான முக்கிய காரணமாக ரஷ்யாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் பேரழிவுகர நிலை உள்ளது. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு மற்றும் முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், நாட்டின் மருத்துவமனைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளதோடு, போதுமான மருத்துவ உபகரணங்களும் பணியாளர்களும் இல்லாமல் இயங்கி வருகின்றன.

கருத்துக்கணிப்புகளின்படி, அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையும், மோசமடைந்து வரும் வாழ்க்கைத் தரங்களும், தேர்தல்களுக்கு முன்னதாக ரஷ்யர்களின் முதன்மை கவலையாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் இருந்து உண்மையான ஊதியத்தில் மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சி (5 சதவீத அளவிற்கு) 2021 முதல் காலாண்டில் அறிவிக்கப்பட்டது உட்பட, ரஷ்யாவில் உண்மையான ஊதியங்கள் பல ஆண்டுகளாக குறைந்து வருகின்றன. Forbes இன் கூற்றுப்படி, தொற்றுநோயும் பொருளாதார நெருக்கடியும் பெரும்பான்மை ரஷ்யர்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ரஷ்ய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020 இல் 99 இல் இருந்து 117 ஆக அதிகரித்திருப்பதுடன், அவர்களது கூட்டு நிகர செல்வ மதிப்பு வியப்பூட்டும் வகையில் 385 பில்லியன் டாலரிலிருந்து 584 பில்லியன் டாலராக உயர்வு கண்டுள்ளது.

கிட்டத்தட்ட தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இந்த உயர் வர்க்க பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் கோடீஸ்வரர்களால் நடத்தப்படுகின்றன. ஐக்கிய ரஷ்ய கட்சியின் முன்னணி வேட்பாளர் ஆண்ட்ரி கோரோக்கோவின் (Andrei Gorokhov) வருமானம் 256.8 மில்லியன் டாலர் என்றும், Just Russia கட்சியின் முக்கிய உறுப்பினர் ஆண்ட்ரே கோவலெவ் (Andrey Kovalev) இன் வருமானம் 91.6 மில்லியன் டாலர் என்றும், புதிய மக்கள் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான அலெக்ஸ் நெச்சேவின் (Alexei Nechaev) வருமானம் 60.1 மில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக, ரஷ்யாவில் மாதாந்திர சராசரி சம்பளம் வெறும் 802 டாலராக உள்ளது, அதாவது மில்லியன் கணக்கானவர்கள் கணிசமாக குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பதே காரணம்.

நாட்டில் நிலவும் மிகப்பெரிய சமூக நெருக்கடியின் அடையாளமாக, திங்களன்று, Perm பல்கலைக்கழகத்தின் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் குறைந்தது ஆறு பேரை கொன்று, மேலும் 28 பேரை காயப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலிசாரால் தாக்கப்பட்டு காயமடைந்து, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில், மே மாதத்தில், 19 வயதான ஒருவர் கசானில் உள்ள தனது பழைய பள்ளியில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றார், அவர்களில் ஏழு பேர் குழந்தைகளாவர்.

Loading