ஜேர்மனியில் ஒரு சிவப்பு-பச்சை கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து எதனை எதிர்பார்க்கலாம்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் சான்சலர் வேட்பாளர்களுக்கான மூன்று பேருக்கிடையிலான கடைசி விவாதத்தில், ஓலாஃப் ஷொல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி) மற்றும் அன்னலேனா பேயர்பொக் (பசுமைக் கட்சி) ஆகியோர் முற்போக்கான மாற்றீடாக சமூக ஜனநாயகக் கட்சிக்கும் பசுமைக் கட்சிக்குமிடையிலான கூட்டணி அரசாங்கத்தை ஊக்குவிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். இரண்டு அரசியல்வாதிகளும் அத்தகைய கூட்டணிக்கு ஆதரவாக பேசியதுடன் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது மற்றும் வரி அதிகரிப்பு குறித்து ஒருவருடன் ஒருவர் நட்புடனான கருத்தை பரிமாறிக்கொண்டனர்.

ஷொல்ஸ் மற்றும் பேயர்பொக் கடைசி மூன்று வழி விவாதத்தில் (screenshot)

ஆனால் சிவப்பு-பச்சை அரசாங்கம் என்று அழைக்கப்படும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் பசுமை கட்சிக்கும் இடையிலான ஒரு கூட்டணி அவ்வாறான ஒன்றாக இருக்காது. இது சமூக செலவின வெட்டுக்கள், கோவிட்-19 வெகுஜன நோய்த்தொற்று மற்றும் இராணுவவாதம் ஆகியவை தொடர்பான வெறுக்கப்பட்ட கொள்கைகளை தொடரும் மற்றும் மோசமாக்கும். இதை ஏற்கனவே அவர்களின் அபத்தமான தேர்தல் வாக்குறுதிகளில் காணலாம். அனைத்து நாடாளுமன்ற கட்சிகளும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில் பெரும் பணக்காரர்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வழங்கிய பின்னர், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி உயர்மட்ட வரி விகிதத்தில் வெறும் 3 சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. அவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை 2.40 யூரோக்களால் உயர்த்துவதாக உறுதியளிக்கின்றனர்.

1998 இல் கடைசியாக சிவப்பு-பச்சை ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிகப் பெரிய துப்பாக்கிகளை கட்டவிழ்த்து விட்டன. சுகாதாரப் பாதுகாப்பு, சமூக நல திட்டங்களின் பாதுகாப்பு, வேலைகளை உருவாக்குவதற்கான செயற்திட்டம், அதிக ஓய்வூதியம் மற்றும் வறுமைக்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சி பாரியளவில் விளம்பரப்படுத்தியது. பசுமைவாதிகள் 'சர்வதேச அரசியலின் இராணுவமயமாக்கலுக்கு எதிராக' அழைப்பு விடுத்தனர்.

உண்மையில், ஹெர்கார்ட் ஷ்ரோடரின் சிவப்பு-பச்சை அரசாங்கம் ஒவ்வொரு அரசியல் துறையிலும் மேற்கு ஜேர்மன் வரலாற்றில் மிகவும் வன்முறைமிக்க சமூக தாக்குதல்களை நடத்தியது. ஹார்ட்ஸ் IV (Hartz IV) மற்றும் நிகழ்ச்சி நிரல் 2010 (Agenda 2010) சீர்திருத்தங்களுடன், சிவப்பு-பச்சை அரசாங்கம் ஒரு பெரிய குறைந்த ஊதியத் துறையை உருவாக்கியது. றீஸ்டர் ஓய்வூதியம் (Riester pension) என்று அழைக்கப்படுவதன் மூலம் அது ஓய்வூதியங்களை குறைத்து மற்றும் ஒய்வூதியத்தை தனியார்மயமாக்கியது. மேலும் நிதிச் சந்தைகளின் கட்டுப்பாட்டை நீக்குவதன் மூலம் அது பங்குச் சந்தைகளில் செல்வமயமாக்கலின் வெறியை ஏற்பாடு செய்தது.

மேலும், பசுமைக் கட்சியின் முன்னாள் அமைதிவாதிகள் மற்றும் அவர்களின் வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷர் சேர்பியா மீது குண்டுவீச்சுடன் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் ஜேர்மன் ஆக்கிரமிப்புப் போரை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜேர்மன் படையினர் மீண்டும் உலகம் முழுவதும் கொடூரங்களைச் செய்த ஆப்கானிஸ்தானில் காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போர் மற்றும் எண்ணற்ற பிற போர் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

அப்போதிருந்து, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி இன்னும் வலதுபுறமாக திருப்பியது. கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு ஆண்டுகளைத் தவிர, சமூக ஜனநாயகக் கட்சி நாட்டை பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) உடன் இணைந்து ஆட்சி செய்தது. இக் கட்சி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஆக்கியது. மற்றும் பாரிய மறுஆயுதமயமாக்கலை ஏற்பாடு செய்தது, அகதிகள் நாடுகடத்தப்படும் வழிமுறையை வலுப்படுத்தியதுடன் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு 'உயிரைவிட இலாபத்திற்கு முன்னுரிமை' கொடுக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தியது.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு அரசாங்கம் பரிசளித்த பில்லியன் கணக்கானவற்றை பசுமைக் கட்சி ஆதரித்தது மட்டுமல்லாமல், அவர்கள் அரசாங்கத்தில் பங்கெடுக்கும் 11 மாநிலங்களில் நாடுகடத்தல் மற்றும் பெருந்தொற்றுக்குட்படுத்தும் கொள்கையை செயல்படுத்தினர். வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளில், அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தை வலதுபுறமிருந்து விமர்சித்ததுடன் மற்றும் லிபியா மற்றும் சிரியாவுக்கு எதிரான போர்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

சிவப்பு-பச்சை கூட்டணியின் ஒரு புதிய பதிப்பு தற்போதைய கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் முன்னைய ஷ்ரோடரின் சிவப்பு-பச்சை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதையும்விட மோசமான கொள்கைகளை செயல்படுத்தும்.

இடது கட்சியைப் போலவே, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை கீழிருந்து மேல்நோக்கி மறுபகிர்வு செய்வதை உறுதி செய்துள்ளனர். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் ஒப்படைக்கப்பட்டதால், 10 பணக்கார ஜேர்மானியர்கள் மட்டும் 2020 இல் தங்கள் செல்வத்தை 178 பில்லியன் டாலரால் அதிகரிக்க முடிந்தது. அதே நேரத்தில், 40 சதவீத மக்கள் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டனர்.

ஒரு சிவப்பு-பச்சை கூட்டாட்சி அரசாங்கம் பெருநிறுவன பிணையெடுப்புக்கு பணம் செலுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்திடம் பிழிந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மிகச்சிறிய தேர்தல் பிரச்சாரக் கோரிக்கைகளுக்கு கூட அவை எழுதப்பட்ட காகித அளவு மதிப்பும் இல்லை. 5 சதவிகிதம் வரை பயங்கரமான பணவீக்கம் காரணமாக உண்மையான ஊதியங்கள் ஏற்கனவே பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு சிவப்பு-பச்சை அரசாங்கம் சமூக நல செலவினங்களை குறைத்து அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் தாக்கும்.

குறிப்பாக சமூக ஜனநாயகக் கட்சியினதும் மற்றும் பசுமைக் கட்சியினதும் தொற்றுநோய் கொள்கை இதற்கான ஒரு தெளிவான உறுதிப்படுத்தலை வழங்குகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில், பிணங்களை காலால் மிதிக்கும் கொள்கையை பின்பற்றி வருகிறது. உயிரைக் காக்கும் பூட்டுதல்களைச் செய்வதற்குப் பதிலாக, வணிகங்கள் திறந்த நிலையில் வைக்கப்பட்டு, தொற்றுநோயின் அலைகளை ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கப்பட்டன.

அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான மூன்று வழி விவாதங்களில், ஷொல்ஸ் மற்றும் பேயர்பொக் இருவரும் நான்காவது அலை நோய்த்தொற்றுகளை உருவாவதை தடுப்பதற்காக வரையறுக்கப்பட்ட பூட்டுதல்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் பேசினர்.

மரணம் தொடர்பான அரசியல், போரின் அரசியலுடன் இணைந்து செல்கிறது. ஆகஸ்ட் மாதம் RTL தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் போது, ஷொல்ஸ் எதிர்காலத்திலும் ஜேர்மன் இராணுவத்தின் சர்வதேச இராணுவ நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார். அவர் நிதி அமைச்சரான பின்னர், 'இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு நடந்தது' என்று பெருமை பேசினார். 'நாங்கள் இப்போது 50 பில்லியனுக்கு மேல் வழங்குகிறோம். இதை சாத்தியமாக்க நான் மிகவும் கடினமாக உழைத்தேன், இனி வரும் காலங்களிலும் இதைச் செய்வேன்” என்றார். ஒரு சமூக ஜனநாயகக் கட்சியின் நிதி அமைச்சர் இல்லாமல் இவ்வளவு பெரிய அதிகரிப்பு நடந்திருக்காது.

பேயர்பொக் இந்தக் கொள்கையை வலதுபுறமிருந்து தாக்கினார். விடயங்கள் கடினமாகும்போது பெரும் கூட்டணி தொடர்ந்து வழிதவறி வருவதாகவும், வெளியுறவுக் கொள்கை பொறுப்புகளை விட உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 'நான் அதை மாற்றுவேன்' என்று அவர் அறிவித்தார். 'ஜேர்மானியர்களாக, உலகில் எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது.' நேட்டோவின் இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்க போதாது. அவர் தொடர்ந்தார், 'பொருளாதார சக்தி குறைந்துவிட்டால், எங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை, ஆனால் பெயரளவில் நாங்கள் எங்கள் இலக்கை அடைந்துள்ளோம்.'

இந்த மூர்க்கத்தனமான மறு ஆயுதமயமாக்கும் கொள்கை மூலம், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய சக்திகளின் தோல்வி மற்றும் பெரும் சக்திகளுக்கு இடையே வளர்ந்து வரும் மோதல்களுக்கு எதிர்வினையாற்றுகின்றன. அவர்கள் உலகெங்கிலும் இராணுவரீதியாக ஜேர்மன் பொருளாதார நலன்களை அமுல்படுத்த விரும்புகிறார்கள். இதனால் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் செல்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் போரின் போது கண்டதை விட அதிகமான கொடூரங்களை விளைவிக்கும்.

ஒரு சிவப்பு-பச்சை அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பிற்போக்குத் திட்டத்தை செயல்படுத்தும், எனவே அது அதிகளவில் ஊக்குவிக்கப்படுகிறது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகள் தற்போது முறையே 25 முதல் 26 சதவிகிதம் மற்றும் 15 முதல் 17 சதவிகிதம் வரை ஆதரவை அனுபவிப்பதால், சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, அவர்கள் ஒரு கூட்டணி அரசாங்கத்தை இன்னொரு கூட்டுக் கட்சியை நம்பியே அமைக்க வேண்டியிருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை, தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) தலைவர் கிறிஸ்டியான் லிண்ட்னர் பசுமைக் கட்சிக்கு ஒரு ஆலிவ் கிளையை நீட்டினார். தாராளவாத ஜனநாயகக் கட்சி மாநாட்டில் எந்தவொரு உறுதியான கூட்டணி அறிக்கையையும் தவிர்த்த பிறகு, அவர் “Anne Will” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பசுமைக் கட்சி தலைவர் ரொபேர்ட் ஹாபெக் உடன் நட்புரீதியான பரிமாற்றத்தை செய்தார். நிதியத் தன்னலக்குழுவின் நலன்களை மிகவும் வெளிப்படையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தாராளவாத ஜனநாயகக் கட்சி 10 முதல் 13 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பல வாரங்களாக ஒரு சிவப்பு-பச்சை கூட்டாட்சி அரசாங்கம் ஒன்று பெரும்பான்மை பெற இடது கட்சி தனது சேவைகளை வழங்கி வருகிறது. அவர்கள் பங்கெடுத்தாலும் அது கூட்டணியின் தன்மையை சிறிதும் மாற்றாது. இது ஏற்கனவே பேர்லின், பிரேமன் மற்றும் துரிங்கியாவில் தெளிவாக உள்ளதுபோல், அங்கு இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதுடன் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்காக அதே இரக்கமற்ற கொள்கையை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக, இடது கட்சியின் தலைவர்கள் நேட்டோ, ஜேர்மன் இராணுவாதம் மற்றும் வெளிநாட்டு தலையீடுகளுக்காக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்

அதனால்தான் பிராங்பேர்ட் பங்குச் சந்தையின் சொந்த இதழான, FAZ பத்திரிகை அத்தகைய அரசாங்க கூட்டை கவர்ச்சிகரமானதாகக் கருதுகிறது. 'சினேகிதர்கள் சொல்வது மட்டும் இல்லை: சமூக வெட்டுக்களை இடதுசாரி அரசுகளால் சிறப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படுத்த முடியும் என்பதை குறைகூறுபவர்கள் மட்டும் கூறுவதில்லை. உதாரணமாக 2003 முதல் 2005 வரை பதவியிலிருந்த சிவப்பு-பச்சை நிகழ்ச்சிநிரல் சீர்திருத்தங்களைப் பார்க்கவும்'. சாத்தியமான ஒரு சிவப்பு-பச்சை கூட்டாட்சி அரசாங்கத்தை கருத்தில்கொண்டே செய்தித்தாள் இவ்வாறு கூறியது.

இறுதியில் எந்தக்கூட்டு ஆட்சியை அமைத்தாலும், சமூக நலன்கள் மீதான நீண்டகால தாக்குதல்கள், ஆக்ரோஷமான 'உயிரை விட இலாபங்களுக்கு முன்னுரிமை' கொள்கை மற்றும் இராணுவவாதத்தின் அதிகரிப்பிற்கு எதிராக தொழிலாளர்கள் தயாராக வேண்டும். சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் நிகழ்வுகளில் தொழிலாள வர்க்கம் தலையிட்டால் மட்டுமே இதைத் தடுக்க முடியும். இதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) கூட்டாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்பது மட்டுமே பாரிய நோய்தொற்றுதல், பாசிசம் மற்றும் போருக்கு எதிரான வாக்காக இருக்கும்.

Loading